Saturday, April 26, 2014

127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
வெளியீடு: முரண் பதிப்பகம் (http://muranpublication.blogspot.in/)
முதல் ஈடு: செப்டம்பர் 2010
பக்கங்கள்: 71
விலை: ரூபாய் 45
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக சாலைகள், மெட்ரோ இரயில்கள் என நகரங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பளபளப்பு பெறுவது ஒருபுறம். அவற்றிற்கு இடையூறாகவும் களங்கமாகவும் இருப்பதாகவும், நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகவும், தொற்றுநோய் பரப்புபவர்களாகவும் குடிசைவாழ் மக்களும், வீடற்ற அனாதைகளும் விரட்டப்படுவது இன்னொருபுறம். காம‌ன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லியை இப்படி நவீனப்படுத்தப் போய், பாலம் நொறுங்கி விழும் அளவிற்கு நடந்த ஊழலில் சர்வதேச அளவில் நம்தேசத்துப் பெருமை பேசப்பட்டதையும் அறிவீர்.  ஊழலில் பிரபலமானபின் சென்னையில் ஆ.ராசா அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு போல, புனே நகரில் சுரேஷ் கல்மாடிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பில் உண்டான போக்குவரத்து நெருக்கடியில் பிதுங்கிப் போன சாமானியர்களில் நானும் ஒருவன். சிங்கப்பூர், துபாய், ஒலிம்பிற்குப் பிந்தைய பீஜிங் போன்ற உலகத்தரமான நகரங்களாக உருவெடுக்க நவி மும்பை, டெல்லி என்ற இந்திய நகரங்களின் பட்டியலில் நமது சென்னையும் உண்டு. கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை, ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை.

சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும். சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், குடிசைகள் ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, இடப்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்திய அரசின் நிலப்பறிப்பு, மறுவாழ்வு, மறுகுடியிருப்புச் சட்டங்கள் பற்றிய விமர்சனமாக மொத்த புத்தகமும் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு என நீர்நிலைகளை ஒட்டியோ அல்லது அவற்றின் மீதோ பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் அமைவதால், வறுமையே ஒரு குற்றமாய் அக்கரைகளில் வாழ்ந்துவரும் மக்கள் வெளியேற்றப்படுவதைப் பேசுகிறது. புதிய குடியிருப்புப் பகுதிகளில் மனநோய், குற்றச் செயல்கள், தற்கொலைகள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தல் போன்ற பிரச்சனைகளையும் பேசுகிறது. சென்னைக் குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப் பட்டவர்களின் வாழ்நிலை பற்றிய, ஆசிரியரும் பங்குபெற்ற உண்மையறியும் குழு ஒன்றின் அறிக்கைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சியின் உண்மையறியும் குழு அறிக்கை ஒன்றும் பின்னிணைப்பாக உள்ளது.

சென்னைத் துறைமுகம் அருகிலுள்ள‌ போர் நினைவுச் சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் நதி வழியே அதிவேகச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு 1500 கோடி. (அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திமுகவால் வழக்குத் தொடரப்பட்டு.... தற்போதைய நிலவரம் தெரியவில்லை. கோயம்பேடு - பெருங்களத்தூர் புறவழிச்சாலையில் வரிசையாக நிற்கும் காங்கிரீட் தூண்களில் பல நாட்களாக எம்மாற்றமும் இல்லை) அதற்காக 30,000 குடும்பங்களை மறுகுடியமர்த்த 345 கோடி. இதற்காக 2009 நவம்பர் இறுதியில் சேத்துப்பட்டு, ஸ்பர்டாங் சாலை, அப்பாசாமி தெரு, இரட்டைமலை சீனிவாசன் நகர் போன்ற இடங்களில் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட குடிசைகள் 1144. இவ்வாறு இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் எல்லோரும் சுமார் 30கிமீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, ஒக்கியம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். எந்த அடிப்படை வசதிகளும் போக்குவரத்தும் இல்லாத மழைநீர் தேங்கும் காட்டுப் பகுதிகள் இவை எனச் சுட்டிக் காட்டுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நிலவங்கிகளை அரசே உருவாக்கி வருவதையும் சொல்கிறார். 'நிலவங்கி' என்ற வார்த்தை, பாலஸ்தீனர்களைக் கடனாளியாக்கி வங்கிகள் மூலம் இஸ்ரேல் என்ற நாடு மிக விரைவாக வடிவமைக்கப்பட்டதை எனக்கு ஞாபகப்படுத்தியது.
(http://muranpublication.blogspot.in/)
புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1947 - 2000 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 6 கோடி பேர். இவர்களில் 40% பழங்குடியினர், 20% தலித்கள், 20% பலமிழந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஆக வளர்ச்சித் திட்டங்களாலும், நிலப்பறிப்பினாலும் பாதிக்கப்படுபவர்கள் பெரிய அளவில் அடித்தள மக்கள்தான்.
2. 'ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்கிற முழக்கத்துடன் 1970 டிசம்பரில் நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் குடிசை மாற்று வாரியத்தைத் திமுக அரசு தொடங்கி வைத்தது. 7 ஆண்டுகளில் சென்னை நகரிலுள்ள குடிசைகளை எல்லாம் ஒழித்துக் கட்டப் போவதாகவும் அன்று கருணாநிதி முழங்கினார். 1971 மக்கள் தொகைக் கணக்குப்படி சென்னைக் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 7.37 இலட்சம். 2001ல் 10.79 இலட்சம்!  சென்னை மக்கள் தொகையில் இவர்கள் 26%. இதுகூடச் சற்றுக் குறைவான கணக்குத்தான். நடைபாதைகளில் குடியிருக்கும் பலர் இதில் விடுபட்டிருக்கலாம். 2005ல் இருந்த குடிசைப் பகுதிகள் 1431.
3. 1980களின் பிற்பகுதியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனை என்கிற காரணத்தைக் காட்டி நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தைத் தளர்த்தி இந்த அனுமதியை அப்போலோ ரெட்டிக்கு வழங்கினார் எம்ஜிஆர்.  கார் பார்க்கிங்கிற்காக கிரீம்ஸ் லேனில் இருந்த வாலஸ் கார்டன் குடிசைகள் அழிக்கப்பட்டன. அருகிலுள்ள வேறொரு இடத்தில் மருத்துவமனையைக் கட்டிய அப்போலோ நிறுவனம் மருத்துவமனைக்கென்று விதிமீறி அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிந்தூர் ஓட்டலைக் கட்டியது. ஓப்பந்தப்படி மருத்துவமனைப் படுக்கைகளில் மொத்த எண்ணிக்கையில் 15%க்கு இலவச மருத்துவம் அளிப்பது என்கிற ஒப்பந்தத்தையும் அது ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை.

பெரும் இயற்கைப் பேரழிவுகளோ போர்களோ இல்லாமல், மெசபடோமியா ரோமன் மாயன் என்ற உலகின் மிகப் பிரம்மாண்ட நாகரீகங்கள் எப்படி முற்றிலும் சிதைந்து போயின என்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். இருபெரும் காரணங்களை முன்வைத்தது:
1. இயற்கை வளங்கள் அனைத்தும் முற்றிலும் உபயோகிக்கப்பட்டு வாழத் தகுதியிழத்தல்
2. பொருளாதார ரீதியில் சமூகத்தில் மிகப்பெரிய இடைவெளிகளை உண்டாக்குதல்
இவை இரண்டையும் தானே 'வளர்ச்சி' செய்துகொண்டு இருக்கிறது!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Tuesday, April 22, 2014

126. ஜாதியற்றவளின் குரல்

The communalism of a majority community is apt to be taken for nationalism.
- Jawaharlal Nehru

உன் குழந்தைகளை
மார்பிலே சரித்துக்கொண்டு
புராணக் கதைகளைச் சொல்லிவை அப்படியே
நீயொரு கொலை நிகழ்த்தினாய் என்பதையும்
- சுகிர்தராணி ('காமத்திப்பூ' புத்தகத்தில் 'நீ ஒரு கொலை செய்தாய்' கவிதையிலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்:  ஜாதியற்றவளின் குரல் (கட்டுரைகள்)
ஆசிரியர்: ஜெயராணி
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
முதல் ஈடு: டிசம்பர் 2013
பக்கங்கள்: 357
விலை: ரூபாய் 250 
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் பிறப்பதற்கு ஓராண்டிற்கு முன் இலங்கையின் முதல் தோட்டா தமிழக மீனவர்களைத் துளைத்து வெள்ளோட்டம் பார்த்தது. நான் பிறந்து தவழும் முன் சீக்கியப் படுகொலைக்கும், போபால் விசவாயுக் கசிவிற்கும் என்தேசம் பல அப்பாவிகளைப் பலிகொடுத்தது. நான் ஆரம்பப் பள்ளியில் இருந்த போது, ஒரு மசூதி இடிக்கப்பட்டது. நான் நடுநிலைப் பள்ளியில் இருந்த போது, மசூதி இடித்தவர்களுக்கு என்தேசம் மத்திய அரசு கொடுத்து அழகு பார்த்தது. பிறகு காந்தி என்ற கொல்லப்பட்டவரின் படத்திற்கு அருகே, அக்கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் படமும் பாராளுமன்றத்தில் சேர்க்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சாதிக் கலவரங்களில் தப்பித்து வந்த சில குடும்பங்கள் உதவி கோரியபோது, நான் ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் மதப் பாடங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். தர்மபுரியில் மூன்று பெண்கள் பேருந்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட‌ போது, வெளியூர் போயிருந்த உறவுகள் திரும்பி வரும்வரை துடித்துக் கொண்டிருந்த பலரில் நானும் ஒருவன். நான் கல்லூரியில் இருந்த போது, குஜராத் படுகொலைகள். 2002ல் திண்ணியத்தில் மலம் தின்னவைத்தது, மூன்று வருடங்கள் கழித்து நண்பன் சொல்லித்தான் பக்கத்தில் திருச்சியில் இருந்த எனக்குத் தெரியும். 

காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் முடிந்து போன ஈழப் படுகொலைகள். 19 ஆண்டுகளுக்குப் பின் 269 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பின்தான் 1992ன் வாச்சாத்தி வன்கொடுமைகள் தெரியும். 2011ல் பரமக்குடி கலவரம். 2012ல் திருவக்கரையில் மலம் தின்ன வைத்ததை ஆங்கில ஊடகங்களில் படித்தேன். பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல்கள் பற்றி ந‌ண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருமுறை திரையரங்கில் பார்த்த சண்டியர் திரைப்படத்தில் ரோகிணி அழுத்தி உச்சரித்தும் தெரியாமல், குருதிப்புனல் புதினம் மூலம் தெரிந்து கொண்ட 1968ன் கீழ்வெண்மணி படுகொலைகள். ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் 'சொல்ல வருவது ...' சிறுகதை மூலம் தெரிந்து கொண்ட 1999ன் தாமிரபரணி படுகொலைகள். 1957ல் பரமக்குடி கலவரங்கள் பற்றியும், 2003ல் ஊரப்பனூரிலும் 2010ல் மெய்க்கோவில்பட்டியிலும் மலம் தின்னவைத்ததும் சில புத்தகங்கள் சொல்லின. கொடியங்குளம் மேலவளவு உஞ்சனை நாலுமூலைக்கிணறு போன்ற ஊர்களைப் பற்றி வெறும் பெயர்களாக மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்; என்ன நடந்தது என்ற விவரங்களை என்னால் கண்டறிய முடியவில்லை.

தர்மபுரி இளவரசன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தான். அது கொலையா, இல்லை தற்கொலையா என்ற ஒற்றைக் கேள்வியுடன், ஒரு மர்மநாவலின் கடைசிப் பக்கம் போல சமூகம் மூடிவைத்தது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட மறுநாள், ஹைதராபாத் நகரின் சார்மினார் அருகில் நின்றுகொண்டு, வெறிச்சோடிக் கிடந்த அவ்வீதிக‌ளில் படபடத்துக் கொண்டிருந்த புறாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதச்சார்பின்மையும் சமூகநீதியும் மறுக்கப்பட்ட இதுபோன்ற பட்டியல் உங்களிடமும் இருக்கலாம். சகமனிதன் மேல் தொடுக்கப்படும் வன்முறைச் சம்பவங்களின் உண்மை நிலையைப் பெரும்பான்மை மக்கள் அறிய முடியாமல் தடுக்கப்படுவதை வரலாற்றில் காலந்தோறும் காணலாம். வரலாற்றைத் திருத்தி தவறாக வாசிக்க வைப்பதன் மூலம் வரலாற்றில் இடம்பெற்றுவிட முயற்சிப்பவர்கள் மூலமாகத் தான் வரலாறு பெரும்பாலும் எழுதப்படுகிறது. அவர்கள் மத்தியில், மக்கள் எளிதில் மறந்துவிடுவதைப் பதிவு செய்து வைக்கும் சிலரும் உண்டு. அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்றுதான் இது.

ஜாதியற்றவளின் குரல். ஆசிரியர் ஜெயராணி. பத்திரிக்கையாளராக வணிக இதழ்களில் பணிபுரிவதால் மீனாமயில் செவ்வந்தி ஜெனிபர் காவ்யா போன்ற பல புனைப்பெயர்களில் அறியப்படுபவர். 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் 'ரௌத்ரம் பழகு' நிகழ்ச்சியில் வரும் ஜெனி என்பவர் இவர்தான் என நினைக்கிறேன்; தெரிந்தவர்கள் சொல்லவும். 37 கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை நேரடியாகச் சேகரித்த புலனாய்வுக் கட்டுரைகள் இவை. மந்திரம் ஓதுகிறவர்கள் கண்டுபிடித்து, மந்திரிமார்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிமமாக உறைந்து, பண்பாடாகப் போற்றப்பட்டு, கடவுளுக்குக் கட்டுப்பட்ட இந்தியர்களால் புனிதமாக‌, காலங்காலமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் சாதிக்கு எதிரான குரலே பெரும்பாலான கட்டுரைகள். சாதி அன்ன இன்னபிறவற்றிற்கும் எதிராகவும் சில கட்டுரைகள். புத்தகத்தின் பெயரில் உள்ள 'ஜாதி' என்பது சாதியை மட்டும் குறிக்கவில்லை; அடிமைத்தனம் ஆதிக்கம் என்ற இரண்டையும் சேர்த்தே குறிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வெள்ளைத்தோல் இல்லாதவர்கள் மீது வன்முறை ஏவுகிறார்கள். ஈழத்தில் நடக்கும் இனவெறிக்கு எதிராகத் தமிழர்கள் எனத் தனியாக‌க் குரல் கொடுக்கிறோம். அத்தமிழர்கள் இங்கிருந்தால் அவர்களை மத மற்றும் சாதியாகப் பிரித்திருப்போம். இன மத சாதி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் பெரும்பாலான ஆண்கள்கூட தம்வீட்டுப் பெண்களைத் தெருவில் தன்னுடன் கொடி பிடிப்பதற்கும், வீட்டில் சமையல் கரண்டி பிடிப்பதற்கும் மட்டுமே பணிக்கிறார்கள். பெண்ணுரிமைக்காகப் போராடும் மகளிர் அமைப்புகள்கூட பெரும்பாலும் பால்பிறழ்வுகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதில்லை. இப்படி நிற‌ம் மொழி இனம் மதம் சாதி பாலினம் அடிப்படையில், அடிமைத்தனத்தை எதிர்ப்பது ஆதிக்கத்தை ஆதரிப்பது அல்லது அடிமைத்தனத்தை ஆதரிப்பது ஆதிக்கத்தை எதிர்ப்பது அல்லது இரண்டையும் ஆதரிப்பது என்ற சமூக நிலையே இங்கு நிலவுகிறது. இரண்டையும் எதிர்ப்பவர்கள் எத்தனைபேர் இங்கே இருக்கிறார்கள்? சமூகநீதி ஒன்றையே இலக்காகக் கொண்ட ஒருத்தியின் குரலே இக்கட்டுரைகள்.
(http://www.vikatan.com)
1. 19.01.2001ல் மதுரையில் எஸ்.கீழப்பட்டி என்ற கிராமமே மதமாறிய சம்பவம்.
2. வள்ளியூர் அருகில் சங்கனாங்குளம் வன்கொடுமைகள்.
3. மாஞ்சோலை எஸ்டேட்டில் அடிமை வாழ்வுக்கெதிரான போராட்டங்கள்.
4. தங்கள் உடல்களை வேட்டையாடி மேய்ந்த ஒரு கொடூரனை நீதிமன்ற அறைக்குள்ளேயே வெட்டிக் கொன்று, தங்களை ஆயுதங்களால் அடையாளம் காட்டிய நாக்பூர் கஸ்தூர்பா நகர் பெண்கள். 
5. உத்தப்புரத்து 15 அடிச் சாதிச்சுவர்.
6. மதுரை - தேவக்கோட்டை வழியில் இருக்கும் கண்டதேவி கிராமத்தில் தேர் வடம் பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டதால் உண்டான கலவரம்.
7. இயேசுவின் தேவாலயத்தில் சாதிவெறியைக் காட்டும் காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர். (இதைப் போன்ற‌ நெல்லை மாவட்டம் டவுசர் சர்ச் பற்றி ஏற்கனவே ஒரு புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன்)
8. சின்னப்பயல்கள் சண்டையில் குண்டாயிருப்பு, தேனி மாவட்டம் வாய்க்காப்பட்டி, ஒரு கோழி செத்துப் போனதால் திருவில்லிப்புத்தூர் அருகில் கூமாப்பட்டி என்று சின்ன விசயங்களை ஆதிக்கச் சாதியினர் கலவரமாக்கிப் பார்க்கும் தந்திரங்கள்.

இப்படியாக அடிமைத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடிய‌ மக்களின் / பெண்களின் குரலாகவே பெரும்பாலான கட்டுரைகள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்டு, சமூகநீதியைக் காப்பதாகச் சொல்லும் கட்சிகள் மற்றும் தலித் தலைவர்களின் சந்தர்ப்பவாதத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. சாதியைச் சாகவிடாமல் அவர்கள் போடும் இரட்டை வேடங்களையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். நிகழ்கால உதாரணங்கள் இரண்டு நான் சொல்கிறேன். ஓர் அமைச்சர் இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை நிகழ்த்தி இருக்கிறார்; விதிகளை மீறி அலைக்கற்றைகளை ஒதுக்கி 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். ஓர் வெளியுறவுத் துறை பெண் அதிகாரி அயல் நாட்டில் விசா மோசடி செய்கிறார். அவர்க‌ள் தலித் என்பதால் தான் வீண் குற்றம் சாட்டப்படுவதாக, பெரியாரையும் அம்பேத்கரையும் கையில் எடுத்துக் கொண்ட இதே தலைவர்கள்தான் முழங்குகின்றனர். (காந்தி அம்பேத்கர் பெரியார் காமராசர் போன்றவர்களை நீங்களே படித்தறிவதே உத்தமம்)

2004ல் இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் தவிர, மற்ற கட்டுரைகள் சொல்லும் சம்ப‌வங்கள் பற்றி இப்புத்தகத்தில் தான் முதன்முறை படித்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், 2007ல் பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது என்று ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கிறது! தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இப்புத்தகம் சொல்லும் விசயங்களில் முக்கியமான ஒன்று - தீண்டாமைக்குள் தீண்டாமை. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டை. அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், தங்களுக்குள் கடைபிடிக்கும் தீண்டாமை. அருந்ததியர் / தோட்டி / சக்கிலியர் மற்றும் வண்ணார் மேல் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவரும் காட்டும் ஆதிக்கத்தைப் பேசும் கட்டுரைகள். 

'சக்கிலியனைத் தொட்டாலே தீட்டு; புதிரை வண்ணானைப் பார்த்தாலே தீட்டு' என்கிறது ஒரு சொல்வழக்கு. தங்களை எதிர்த்தது மட்டுமின்றி, தங்கள் மீது வழக்குப் பதிவு செய்த அருந்ததியர்களைப் பொது வீதியில் நடக்கக் கூடாது எனவும், பொதுக் குழாயில் குளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தடை விதித்த நிகழ்ச்சிகளையும் சொல்கிறார். 'இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை' என்று அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

'வண்ணான் வராத வீடு வெளங்காது' என்ற சொல்லாடலும், 'வண்ணான் கழுதை பொதி சுமக்கும்' என்று பாடப்புத்தகங்களே சாதியைப் போதிக்கும் அளவிற்குச் சமூகக்கடமையாக‌ பொதுப்புத்தியில் பதிந்து போனதைச் சுட்டிக் காட்டுகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையே செல்லாது என்பதால் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் மேல் தொடுக்கும் வன்முறைகள் இச்சட்டத்தின் கீழ் வராது. நாடார் தேவர் தலித் என்ற மற்ற சாதியினரின் சாட்சியம் தேவைப்படுவதால், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக் கூட வண்ணார் அலைக்கழிக்கப்படும் கொடூரத்தைப் பேசுகின்றன. ஆதி காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையைச் செய்து வந்தவர்களைச் சாதி வந்தபின், அழுக்குத்துணியையும் முட்டுத்துணியையும் துவைக்க வைத்த கொடுமையையும் சொல்கின்றன. தலித் மக்களுக்கு வேலை செய்யும் புதிரை வண்ணார்களே சாதிய அடுக்கில் அடியில் இருப்பவர்கள். புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் நிலையைச் சிவகாசி அருகில் திருத்தங்கல் கிராமத்தில் இருந்து பதிவு செய்கிறார். 

சென்னை நகரைப் பற்றி சில கட்டுரைகள். ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை, கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை என்ற திட்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்லி மக்களின் வாழ்வைச் சீரழித்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். வியாசர்பாடி, சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட் நகர், அன்னை சத்யா நகர், கே கே நகர், அம்பேத்கர் காலனி, எண்ணூர், மூலக்கொத்தளம், செம்பியம் சாந்தி நகர், ஜாபர்கான் பேட்டை என்று 2001ல் மட்டும் தீவிபத்து ஏற்பட்ட குடிசைப் பகுதிகளைப் பட்டியலிடுகிறார். 2001ல் மேமாதம் மட்டும் அமைந்தகரை, ஓட்டேரி, சோழவரம் என்று குடிசைப் பகுதிகள் பற்றி எரிந்திருக்கின்றன‌. 10-05-2001ல் ஓட்டளிப்பு நாளில் ஓட்டேரியில். இவற்றைப் பற்றி இன்னொரு புத்தகத்தில் விரிவாகப் பேசலாம். 

சங்கனாங்குளத்தில் எல்லாக் குற்றங்களுக்கும் கிராம அதிகாரிகளே துணைபோனதால், சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எம்ஜியார் ஆட்சியில் தமிழகம் முழுவதும் கிராம அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திராவில்  இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தங்கள் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சாய்பாபா பற்றி நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இப்படி சில வரலாற்றுத் தகவல்களை இப்புத்தகத்தில் தான் முதலில் படிக்கிறேன்.

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. புறத்திலும் அகத்திலும் இந்து மதத்தால் கொல்லப்பட்ட அப்சல் குருவுக்கும், தருமபுரி இளவரசனுக்கும்... (பின்னட்டையில் இருந்து)
2. தலித் மக்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்கள் மதரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதில் இந்து மத வெறியர்கள் தெளிவாக இருக்கின்றனர். கோயம்புத்தூரில் அருந்ததியர்கள், சென்னையில் பறையர்கள், நெல்லையில் பள்ளர்கள் என கீழ்சாதி இளைஞர்களை இந்து கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, பொது எதிரியாக இஸ்லாமியர்களைச் சித்தரிக்கும் காரியத்தையே செய்து வருகின்றனர்.
3. எப்பொழுதும் கட்டிக் காக்கப்படும் தீண்டாமை, பாலியல் வல்லுறவின்போது மட்டும் எங்கே போகிறது என்று தெரியவில்லை.
4. ஜெர்மனியில் ஒரேயொரு ஹிட்லர் தான். நியாயப்படி பார்த்தால், இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 3% பேர் ஹிட்லர்கள்! இவர்கள்தான் மூலைக்கு மூலை நின்று இந்தியாவில் சாதியம் வழக்கொழிந்து விடாதபடியும் வெளியே தெரிந்து விடாதபடியும் காத்து நிற்கின்றனர்.
5. இந்துத்துவவாதிகள் தலித் மக்களைக் கலவரத்துக்கு மட்டும்தான் தயார் செய்கிறார்கள். தொடக்கத்தில் காலைப் பிடிக்கும் இந்துத்துவம், நாள் போக்கில் எப்படி கழுத்தைப் பிடிக்கும் என்பதற்குக் கோவை உக்கடம் பகுதி மக்களே வாழும் உதாரணம்.
6. பல்வேறு பண்பாடு, மொழி, வாழ்க்கை முறையைக் கொண்ட  மக்களைத் துப்பாக்கி முனையில் இணைத்து, இந்து சாம்ராஜ்யத்துக்குள் அடைத்ததே இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை! அப்படி இணைய மறுக்கிறவர்களே தீவிரவாதிகளாகவும் நக்சலைட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டு ஆயுதங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
7. சாதிச் சூழ்ச்சியையும் பயங்கரத்தையும் எடுத்துச் சொல்லி, தலித் மக்களை ஒன்று திரட்ட வேண்டிய தலித் தலைவர்கள், மக்களை உட்சாதிப் பிரிவுகள் மூலம் தனித்தனித் தீவுகளாக்கியதோடு பாகுபாட்டை அப்படியே கட்டிக் காக்கிறார்கள்.
8. இனவெறி, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என உலகின் எந்த அடிமைத்தனத்தை விடவும் வலுவானது, கொடுமையானது சாதியப் பாகுபாடு. காரணம், அதில் மேற்குறிப்பிட்ட எல்லா பாகுபாடுகளுமே உள்ளடங்கி விடுகின்றன என்பதே உண்மை.
9. சட்டப்பேரவைகளையும் நாடாளுமன்றத்தையும் வெறுமனே தலித் மக்களைக் கொண்டு நிரப்புவதால் மட்டும் அடிமைத்தனம் அழிந்துவிடாது. மதங்களின் வேர்களும், சாதியின் கிளைகளும் இந்த சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. வெறும் வசனங்கள் பேசி அவற்றை அழித்துவிட முடியாது.
10. இந்தியாவில் காவல்துறை மாதிரிதான் பத்திரிக்கைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்கள் சாதிப்பதைப் போல, 'பிரஸ்' என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிக்கை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது.
11. சாதியை உள்ளடக்கிய தொழில்களில் துப்புரவுத் தொழிலும் ஒன்று என்பதால்தான் வெட்கங்கெட்ட இந்நாட்டிலிருந்து அதை விரட்ட முடியவில்லை. 'தாங்கள் இந்தத் தொழில் செய்யவே படைக்கப்பட்டவர்கள்' என அருந்ததிய‌ரை நம்பவைத்து, இன்றுவரை காரியம் சாதித்து வருகிறது சாதியச் சமூகம்.

புதுக்கோட்டை கத்தகுறிச்சியில் செங்கல் சூளையில் கல்லறுக்கும் குடும்பத்தில் பிறந்து, தடகளப் போட்டிகளில் பல சாதனைகள் படைத்த சாந்தி, பாலினச் சோதனையில் தோல்வியடைந்த போது மவுனம் காத்த மகளிர் அமைப்புகள் பற்றி ஒரு கட்டுரை. சமீபத்தில் இரண்டு நடிகைகளின் முத்தப் பிரச்சனைகளை மாநில மற்றும் தேசியப் பிரச்சனைகளாகத் தொடர்ந்து சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இப்படி சமூகப் பொறுப்பில்லாமல் செயல்படும் சில ஊடகங்களின் பயங்கரவாதம் பற்றி சில கட்டுரைகள். பறிபோகும் பழங்குடியினர் நிலங்கள் பற்றி ஒரு கட்டுரை. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு சாதி மாணவர்களுக்கு இடையே 12.11.2008 அன்று நடைபெற்ற மோதல் பற்றியும், சட்டத்தைக் காக்க வேண்டியவர்கள் சாதியைக் காத்து வருவது பற்றியும், 'கற்றது ஜாதி' என்று ஒரு கட்டுரை. 

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொல்வது போல், எல்லாருமே தங்களது முகமூடிகளையும் ஆடைகளையும் கழட்டி வைத்துவிட்டு, மதம் சாதி என‌ தன் புராதன ஆயுதங்களுடன் நிர்வாணமாகத் தெருவுக்கு வர ஆரம்பித்து இருப்பதைச் சமீப காலத்துப் பல சம்பவங்கள் காட்டுகின்றன. குறிப்பாக தேர்தல் கூட்டணிகளும் பிரச்சாரங்களும். நாளை மறுநாள், ஓட்டுரிமை என்ற நமது ஆயுதம் மூலம் சமூகநீதி எதுவென நமக்கு நாமேதான் தீர்மானித்துக் கொள்வோம்!

அனுபந்தம்:
-------------------
1. பன்வாரி தேவி என்ற தலித் பெண் 1992ல் உயர்சாதி ஆண்களால் கூட்டமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒரு தாழ்த்தப்பட்ட ஆளுக்கு, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் சமூகநீதிக்கு அவள் ஒருத்தியே சாட்சி. அவ்வழக்கு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட போது, சொல்லப்பட்ட காரணங்கள்: 1) உயர்சாதி ஆண்கள் ஒரு தலித் பெண்ணைத் தொட்டுப் புணர்ந்திருக்க வாய்ப்பில்லை 2) குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் இருவர் உறவுக்காரர்கள். மகன் போன்ற தன் சகோதரன் மகனுடன் சேர்ந்து ஒரு பெண்ணைக் கூட்டு வன்கொடுமை செய்ய எந்த ஆணிற்கும் தோன்ற வாய்ப்பில்லை.
2. அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 'மலத்தில் தோய்ந்த மானுடம்' என்ற கட்டுரையைப் படியுங்கள். இரயில் நிலையத்தில் நிற்கும் இரயிலில் கழிவறையை உபயோகப்படுத்தும் ஒவ்வொருவரும், சாதியை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)