Monday, September 06, 2010

67. வெட்டுப்புலி

------------------------------------------
புத்தகம் : வெட்டுப்புலி
ஆசிரியர் : தமிழ்மகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ 220

------------------------------------------

தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கும். சிவன் கோயில் தெருவின் முனையில் எங்கள் வீடு. அப்போது பண்ணைக்காரர்களிடம் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தார் தர்மராஜ். தீவிரமான தி.மு.க காரர். போதையில் இல்லாத தர்மராஜை ஊரில் யாரும் பார்த்ததில்லை. பண்ணைக்காரர்களும் அப்போது தி.மு.கவில் இருந்ததால் அவருக்குக் கொஞ்சம் சலுகையாக இருந்தது. கலைஞரைக் கருணாநிதி என்று அழைப்பதில் அவருக்கு அலாதி ப்ரியம்; கொஞ்சம் கர்வமும் கூட. திருக்குவளையில் கலைஞரைச் சிறுவயதிலேயே பார்த்துப் பழகியவர் என்றும் சொல்லிக் கொண்டார்கள். எந்தப் புள்ளியில் மனிதர் இவ்வளவு தி.மு.க. அபிமானியாக மாறியிருப்பார் என்பது தெரிந்தும் தெரியாமலும் இருந்தது.

மனிதன் நிதானத்தில் இருக்கும் வரை இருக்கும் வேகம், நிதானம் இழந்தபிறகு இன்னும் கூட அதிகமாகிவிடும். அதுவே எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த கோபமாகவும் மாறும். எம்.ஜி.ஆர் என்று அறிமுகமாகியிருந்தவரை, எம்.ஜி.ராமச்சந்திரன் என்று எனக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் கேட்ட முதல் மிமிக்ரி குரல் அவருடையதுதான். கலைஞரின் குரலில் பேசுவதில் வல்லவராக இருந்தார். சிவன் கோயில் பின்புறத்திலிருந்த திடலில் இங்குமங்கும் நடந்தபடி ஏகவசனத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தாக்குவார். பள்ளிக்கூடத்தில் பையன்களிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் அவர் பேச்சில் கேட்க முடிந்தது. போட்டு விளாசிவிடுவார்.

எம்.ஜி.ஆர் இறந்த நாளில் தெருப்பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்த கையோடு, அன்றிரவே அ.தி.மு.க கட்சிக்காரர்களிடம் வகையாக வாங்கியும் கட்டிக்கொண்டார். 1991ல் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது முதல் தடவையாக விஷம் குடித்தார் தர்மராஜ். அவரின் மனைவி கலைஞரின் வம்சத்தைச் சாபமிட்டுப் பழித்தபடி தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடினாள். நான்கு நாட்களில் சக்கையாகத் திரும்பிவந்த மனிதனைத் தெருவிலேயே போட்டு மிதித்தான் அவர் மகன். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பிறகு தர்மராஜின் நடமாட்டம் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அடுத்து வை.கோ வெளியேறிய போது பண்ணைக்காரர்கள் அவரோடு போய்விட, தர்மராஜ் தனியே விடப்பட்டார். வேலையும் பறிபோனது. வீட்டிலும் மரியாதை இல்லை. மகன் வேலை செய்து கொண்டுவரும் பணத்தில் குடிக்கப் பணம் கேட்கத் திண்டாட்டமாகப் போகவே, போதையில்லாமலே கண்ணில் பட்டோரை எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் நினைத்து வசை பாட ஆரம்பித்தார். கலைஞர் தன் துயர் துடைக்க வருவார் என்பது அவரது அசையாத நம்பிக்கையாக இருந்தது. குடும்பத்தலைவன் என்ற பெயருக்காக வீட்டில் சாப்பாடு போட்டுவந்தார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சி வந்தும் அவர் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. மனநிலையில் சின்ன தடுமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

மீண்டும் திமுகவின் ஆட்சி முடிந்து, அ.தி.மு.க வென்ற போது விஷம் என்று நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்து இரண்டாவது முறையாகக் காப்பாற்றப்பட்டார். இந்த முறை மகன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்க்கவில்லை. பிராணனைப் பிடித்து வைத்திருக்கும் ஆசையில் தர்மராஜின் மனைவி மகன் பேச்சுக்கு அடங்கிப்போனாள். தர்மராஜ் ஊருக்குள் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்தார். அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒன்றரை மாதங்களுக்குள் ஒரு நாள் அதிகாலையில் ஊரே பதட்டமடைந்து கிடக்க, தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஒரு காட்சி. கலைஞர் தன் வீட்டிலேயே கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் இழுத்து வரப்பட்டார். பதட்டத்தோடு பதட்டமாக நடந்தேறிய எல்லா அரசியல் நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக்காட்சி. மதியம் 'பராசக்தி' திரைப்படம் போட்டார்கள். தர்மராஜ் எங்கள் வீட்டு வெளித்தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பயிர்களுக்கென்று வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தர்மராஜ் இறந்து போனதாக ஊரே மீண்டும் பரபரப்பானது.

திராவிட இயக்கங்களைப் பற்றிய எந்தக் கடந்தகாலச் செய்தியும் எனக்கு தர்மராஜைத் தவிர்த்ததாக நினைவுக்கு வருவதேயில்லை. எங்கள் ஊரின் பதினைந்தாண்டுகால அரசியல் நிகழ்வுகள் எல்லாமும் எனக்கு அவரைத் தொடர்பு படுத்தியே நினைவில் இருந்தன. மாபெரும் அரசியலின் சிறு படிமமாக வாழ்ந்து மறைந்து போனார் தர்மராஜ் டிரைவர். பெரும் அரசியல் நிகழ்வுகளை, பெரும் வரலாறுகளை, பெரும் சமுதாய மாற்றங்களை நாம் இப்படி நினைவுகொள்வது மிக இயல்பானதுதான் இல்லையா? இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது நான் ஐந்து மாதக் குழந்தை என்று என் அம்மா சொல்லுவார். இதுவும் கூட அரசியல் நிகழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இழையோடிப்போகும் ஒரு தருணம்தான் என்று தோன்றுகிறது. தர்மராஜின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்தால், நமக்கு நம் வாழ்க்கை சார்ந்த ஒரு பேரியக்கத்தின் வரலாறு கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும். அதுபோன்றதொரு பதிவுதான் இந்த வெட்டுப்புலி. புனைவும், வரலாறும் கலந்ததொரு கலவை.



வெட்டுப்புலி தீப்பெட்டி, தமிழகத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள், தமிழ்த்திரையுலகம் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வேரூன்றியவை. இந்த யதேச்சையான ஒற்றுமையை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, இம்மூன்றையும் சுற்றிச் சுற்றிக் கோலமிட்டிருக்கிறார் தமிழ்மகன். தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஊடகத்துறையில் இல்லாத ஒருவர் இதை எழுதியிருப்பதற்குச் சாத்தியம் மிக மிகக் குறைவு என்று தோன்றியது. இத்தனை செய்திகளை ஒரு தனிமனிதன் தொகுப்பது இயலாதது. இந்த உழைப்புக்காகவே தமிழ்மகனைப் பாராட்டலாம். ஓர் எளிய, எழுத்து வசீகரம் இவரிடம் இருக்கிறது. அது நம்மை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பணியை நிறைவாகச் செய்கிறது.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் சிறுத்தையை வெட்டுவது போன்ற படம் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதன் தன் தாத்தாவின் பெரியப்பா என்று அறிந்து, அது பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தன் அமெரிக்க நண்பகளுடன் தேடலைத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். கதை அங்கிருந்து 1940களுக்குப் பயணித்து, பின் 1930, 1940 என்று தொடர்ந்து இரண்டாயிரத்துப் பத்துவரை தொடர்கிறது. கதை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்கிறது.

தாம் பார்த்துப் பழகிய இடங்களின் வரலாறு தெரிந்துகொள்வதில் யாருக்கும் ஆர்வமிருக்கும். எங்கள் ஊரின் வயோதிகர்கள், என் கிராமத்திற்கு முதல் முதலாக இரயில் வந்த கதையையும், ஆற்றுப்பாலம் வந்த வரலாற்றையும் சொல்லும்போது சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் எழும் இன்பம் அலாதியானது. பாலம் இல்லாத, இரயில் இல்லாத என் கிராமத்தின் பிம்பம் என்னுள் விரியும். மக்கள் போக்குவரத்து எப்படி நிகழ்ந்திருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதாக எண்ணவோட்டம் நீளும். வெட்டுப்புலியின் ஒவ்வொரு அத்தியாயமும் என்னுள் அப்படியான ஒரு எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியது. சென்னையின் நிகழ்கால பிம்பத்தைப் பார்த்தவனுக்கு, நூற்றாண்டுகால நகரின் வளர்ச்சி குறித்த செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. சென்னையைச் சுற்றிலும் கதை வலம் வரும் இடங்களிலும் பெரும்பாலானவற்றை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கொசஸ்தலையாறு, பூந்தமல்லி, திருவள்ளூர், அம்பத்தூர் என்று புறநகர்ப்பகுதிகளின் கடந்தகால பிம்பத்தை அழுத்தமாகப் பதியவைக்கிறது இப்புதினம். இவற்றின் அருகிருக்கும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்தாம் கதை மாந்தர்கள்.

மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான பருவம் இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லலாம். அதுவரை நிகழ்ந்திருந்த பல அதிசயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முன் நிரூபணமாகியிருந்த பல கோட்பாடுகளைப் பொய்யாக்கி, அசுர வேகத்தில் தொழில்துறையிலும், அறிவியலிலும் வளர்ச்சி கண்டனர் மனிதர்கள். இவ்வளர்ச்சி உலகெங்கிலும் இருந்த மக்களின் வாழ்க்கையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்தது. வாழ்க்கையைப் பற்றிய பார்வை வெகுவாக மாறிப்போனது. தமிழகத்தைப் பொறுத்தவரை பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வும், திரைப்படங்களின் ஆதிக்கமும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தின. சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கும் மக்களிடம் இவை பிறப்பித்த மாற்றங்களை மிக நுண்மையாக ஆராய்கிறார் தமிழ்மகன்.

வெறும் பாத்திரங்களாக இல்லாமல் அவர்கள் கருத்துகளாக வலம் வருகிறார்கள். திராவிடத்தைப் பற்றியும், திரைப்படத்தைப் பற்றியும் எத்தனை விதமான கருத்துகள் நிலவியிருக்குமோ, அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பாத்திரமாகியிருகின்றன. எது சரி எது தவறென்று நிறுவுவது ஒரு படைப்பாளியின் வேலையன்று. சமகால வரலாற்று நிகழ்வுகள், அது கதையில் வரும் பாத்திரத்தை, ஒரு சூழலை எப்படிப் பாதிக்கிறது, அது குறித்த கதைமாந்தர்களின் நிலைப்பாடு என்ன, என்பதை மட்டுமே கதையின் போக்கில் சொல்லிச்செல்கிறார். பொது நிகழ்வுகளின் எதிரொலி ஒருவனின் அந்தரங்கம் வரை கேட்கக்கூடியதாக இருக்கிறது. பாத்திரங்கள் தங்களுக்கிடையேயான முரண்பாட்டை, தங்கள் கொள்கைகளின் வேறுபாட்டோடு கலந்து அதன்மூலம் தங்கள் வன்மத்துக்கு வடிகால் தேடுகிறார்கள்.

ஒவ்வொரு பத்தாண்டுகளாகப் பிரித்துக் கதை சொன்ன உத்தி இந்தப் புதினத்தின் சிறப்பம்சம். கால மாற்றத்தில் மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய இது உதவியிருக்கிறது. ஒரு பாத்திரம் தன் அடிப்படை இயல்புக்கு முழுவதும் எதிரான, தான் வாழ்ந்துவந்த நெறிக்கு எதிரான, ஒரு கருத்தைத் தன் அடிநாதமாக மாற்றிக்கொள்ள இந்த அவகாசம் போதுமானதாகயிருக்கிறது. தனி மனிதனானாலும், இயக்கமானாலும் இது இயல்பாக நடந்துவிடுகிற விஷயம்தானே!

தன் காதல் சாதிப்பிரிவினையால் அழிக்கப்படும்போது யோசிக்கத் தொடங்கி பெரியாரைப் பின்பற்றத் தொடங்கும் இளைஞன், பெண் சுகத்துக்காகத் திரைப்படம் தயாரிக்க முற்படும் ஒரு பணக்கார இளைஞன், தரிசு நிலங்களைத் தங்கள் உழைப்பால் விளைநிலங்களாக மாற்றி அதைப் பராமரிக்கும் சிந்தனையற்று, பணக்காரர்களிடம் கொடுத்து, வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பதே பெரிய பகுத்தறிவுச் சீர்திருத்தம் எனத் தொடங்கிப் பின் அனுபவத்தால் மனம் மாறும் இளைஞன், என்று விதவிதமான பாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாங்களுடன் கதையோடு பரிணமிக்கிறார்கள்.



ஒவ்வொரு பத்து வருடத்தையும் அறிமுகப்படுத்தும் அத்தியாயங்கள் தமிழ்மகன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவனவாக இருக்கின்றன. குறிப்பாக ஐம்பதுகளின் அறிமுக அத்தியாயத்தைச் சொல்லலாம்.

'காங்கிரஸ் பேரியக்கம் ஓட்டுப்பெட்டியில் ஒடுங்க வேண்டாம் என்ற காந்தியாரின் சிந்தனை புறக்கணிக்கப்பட்டது. காந்தியைக் கொல்லச் சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கர் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டன. முரண்பாடுகள் இயல்பாகின. சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்காத இந்தியச் சுதந்திரம் கறுப்புதினமாக இருந்தது பெரியாருக்கு. தி.மு.க.வினர் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டுமென்றனர். ஒருவனே தேவன் என்ற சுருதி பேதம்'

அத்தியாயங்களின் முடிவையும் அனாயாசமான முத்தாய்ப்புடன் அமைத்திருக்கிறார் தமிழ்மகன். ஒவ்வொரு முடிவும் ஏற்படுத்தும் அதிர்வு சில நிமிடங்களுக்கேனும் நம்மை இயக்கமின்றி கட்டிப்போடும் திறனுடையதாகவிருக்கிறது. அரசியல் சார்ந்த செயல்களால் தன் சொந்த வாழ்க்கையை முற்றிலுமாக இழந்த ஓர் ஆணுக்கும் அவன் மனைவிக்குமான உறவைப் பற்றிப்பேசும் அத்தியாயம் இப்படி முடிகிறது. அவனுக்கும், மனைவிக்கும் நீண்ட காலமாக உறவே இல்லை என்றாகியிருந்தது. 'எப்பவாவது ஒரு தரம் வீட்டுக்குப்போவான். அழுக்கு வேட்டி, சட்டையைத் துவைத்துப் போட்டுவிட்டு வேறு துணி மாற்றிக்கொண்டு வருவான். அவளும் ஏன் வந்தாய் என்று கேட்பதில்லை. அவள் முழுகாமல் இருந்ததால் அவன் அப்படி வந்து போவதை எதிர்பார்க்கவும் செய்தாள்....'

அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் நிறைய காட்டமான அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை கற்பனையான வசனங்கள் என்று எண்ண முடியவில்லை. ஆசிரியர் சிறுவனாக இருந்த பருவத்தில் கேட்டு வளர்ந்த வார்த்தைகளையே இங்கே பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தோற்றம், தி.மு.கவின் மலர்ச்சி, கல்லூரிகளில் மாணவர்கள் மிக விரும்பிப் படித்த திராவிடப் பாடம், தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்து பின் வீழ்ந்தே போனது, தமிழ்நாட்டு அரசியலும் திரைத்துறையும் இரண்டறக் கலந்தது, இல்லாத கடவுள் ஒருவனே தேவனானது, ஒற்றைச் சூரியனை இரட்டை இலைகள் வீழ்த்தியது, இனமானம் காக்க வேண்டி ஒரு தலைவனை உருவாக்கிப் பின் மறந்தே போனது, எனத் தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் நிகழ்வுகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

டெண்டுகள் அமைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், சக்கரவர்த்தித் திருமகளுக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய எம்.ஜி.ஆர், திரைப்படம் எடுப்பதற்காக அரசுப்பணியைத் துறந்த பாலச்சந்தர், உடலை மூலதனமாகக் கொண்டு உழைக்க முன்வந்த நடிகைகள், எம்.ஜி.ஆரின் காலில் விழாமல் கைகொடுத்த ரஜினிகாந்த், பின் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலையிலிருந்து மீட்ட அதே ரஜினிகாந்த், திடீரென தேசிய இயக்குனராகத் தன்னை நிறுவிக்கொண்ட மணிரத்னம், கோட்டைக் கனாக்களுடன் களமிறங்கி கொண்டிருக்கும் இன்றைய நாயகர்கள் என்று தமிழ் சினிமாவின் பரிமாணங்களைக் கதாப்பாத்திரங்களின் கருத்துகளாக முன்வைப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனம்.

எழுத்தின் முக்கிய பணி வாசகனையும் தன்னோடு உள்ளிழுத்துச் சேர்த்துக்கொள்வது. அவனுக்கான கற்பனைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளாதிருப்பதும் கூட. தசரத ரெட்டிக்கு முத்தம்மா மீதிருந்த ஈர்ப்பு, சின்னா ரெட்டி சிறுத்தையை அடித்தது பற்றி வேறு வேறு கதைகள் உலவுவது என்று சில தகவல்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விட்டார்.

காலத்தையும், அது விட்டுச் செல்லும் சுவடுகளையும், சமகால நிகழ்வுகளையும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியை இன்றைய சூழலில் மிகச்சில படைப்புகளே செய்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 'வெட்டுப்புலி' மிக முக்கியமான படைப்பு.

பின் குறிப்பு :

1. இந்தப் புத்ததகத்தை நண்பர் ஞானசேகர் வாசித்துவிட்டு என்னிடம் சிலாகித்ததோடு தன் புத்தகத்தையே எனக்களித்து வாசிக்கவும் செய்தார். அவருக்கு என் நன்றி!

2. சென்னையைப் பிடித்தவர்களுக்கும், சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கும், இப்புத்தகத்தில் ரசித்துச் சுவைக்க நிறைய பகுதிகள் உண்டு

3. நான் வாழும் மைலாப்பூர் பகுதியைக் குறித்தச் செய்திகளை மிகவும் விரும்பி வாசித்தேன்

4. நிறைய எழுத்துப்பிழைகள் கண்ணில் பட்டன. பெரும்பாலும் அவை அச்சுப்பிழைகளே! அவசரமாக எதுவும் தேவைப்படும், அவசரமாக எதுவும் செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களும் அவசரகதியிலேயே தயாராகின்றன போலும்.

5. சிறுத்தையை வெட்டியதைப் பற்றிய தேடலில், தினமணி அலுவலகத்தில் 1934 ஜூன் எட்டாம் தேதி செய்தித்தாளை கேட்பான் இளைஞனின் நண்பன். அதில் அவர்கள் தேடி வந்த செய்தி இருக்கும். அது பற்றிய தகவல்கள் முன்பகுதிகளில் ஏதும் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. வாசித்தவர்கள் எவருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!

6. 'மதராசப்பட்டினம் திரைப்படம் தவறவிட்ட ஒரு வேலையை இப்புத்தகம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. உருவ அமைப்பில் அறுபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையைக் கொண்டுவந்தவர்கள், அக்கால மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்யவில்லை. அது இப்புதினத்தில் நிறைவேறியிருக்கிறது.' என்று நண்பர் ஞானசேகர் சொன்னார். நானும் அதையே உணர்ந்தேன்.

7. வரலாற்று நிகழ்வுகள் எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு பிணைந்திருப்பது இப்புதினத்தின் பலம்.

8. ஆசிரியர் தமிழ்மகனின் வலைத்தளம் : http://www.tamilmagan.in/

-சேரல்
(http://seralathan.blogspot.com/)