Wednesday, May 26, 2010

62. ஊர்க்கதைகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

------------------------------------------------------------------------------
புத்தகம் : ஊர்க்கதைகள்
ஆசிரியர் : வெ.நீலகண்டன் (குங்குமம் இதழில் உதவி ஆசிரியர்)
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2009
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 199 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

------------------------------------------------------------------------------

சில சமயங்களில் சில ஊர்கள் மர்மங்களைச் சுமந்துகொண்டோ, கலாச்சாரத்தில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, இயற்கையின் கோலங்களில் மாட்டிக்கொண்டு பரிதாபமாகவோ மற்ற ஊர்களால் அறியப்படுகின்றன. அப்படியொரு ஊரைப்பற்றி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். கேரளமாநிலத்தில் ஒரு கிராமம். ஊர் முழுக்க முந்நூறுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு சோடி; ஆணும் ஆணும்; பெண்ணும் பெண்ணும்; ஆணும் பெண்ணும் கூட. வாக்கப்பட்டுப் வெளியூர் போகிற பெண்களுக்கெல்லாம் இரட்டையர்கள் பிறப்பதில்லை; வாக்கப்பட்டு இவ்வூருக்கு வருகிற பெண்களில் பலர் இரட்டையர்களைப் பெறுகிறார்கள்.விஞ்ஞானிகளின் மண்டையைக் குழப்பும் அக்கிராமம் மனிதனின் அறிவெல்லைக்கே சவால்விட்டுக் கொண்டிருக்கிறது.

இராமநாதபுரம் - சிவகங்கை மாவட்டங்களில் சென்ற மாதம் நான் சுற்றித் திரிந்தபோது 'நெற்குப்பை' என்றொரு ஊரின் பெயரைப் பார்த்தேன். அதன் பெயர்க்காரணம் பற்றி அதிகம் யோசித்ததாலோ என்னவோ, திருச்சி ஒடிசியில் இப்படியொரு புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். பொருளடக்கத்தில் மிலிட்டரியூர், தீர்க்கசுமங்கலியூர், தத்தங்கியூர் என ஊர்களின் பெயர்கள் இருந்தன. சரி இதுமாதிரி வித்தியாசமான பெயர்கொண்ட 35 ஊர்களின் பெயர்க்காரணம் சொல்லும் புத்தகம் என நம்பி வாங்கினேன். ரொட்டி தின்ன வந்தவனுக்குப் பெனிசிலினின் அறிமுகம் கிடைத்ததுபோல், நான் ஒன்றை எதிர்பார்க்க நான் தேடும் அரிய வேறொன்றைத் தந்துபோனது இப்புத்தகம்.

கிராமம் / நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். கிராமம் என்ற மிஞ்சியிருக்கும் ஒரு பொருளில் எஞ்சியிருக்கும் வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் - சடங்குகளையும், சில நகரங்களின் பழமைச் சிறப்புகளையும் தளமாகக்கொண்டு எழுதியிருக்கிறார் ஆசிரியர். எல்லா ஊர்களிலும் ஆசிரியர் தங்கி வாழ்வியல் சூழலை உள்வாங்கி எழுதியிருப்பதும், ஊர்களை வாசகனுக்குப் படைத்திருக்கும் விதமும் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.

பெண்களை ஒடுக்கும் சடங்குகளை இன்னும் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் வாழும் ஊர்களைப் பற்றி பேசுகிறது முதல் கட்டுரை. அந்நிய மனிதர்களை அனுமதிக்காத அக்கிராமங்கள் ஒன்றினுள் ஆசிரியர், ஓர் அரசதிகாரியெனப் பொய்சொல்லி அவர்களைப் பேட்டிகண்டதும், உண்மை தெரிந்த பிறகு கிராமத்தில் இருந்து வெளிவர பெரும்பாடுபட்டதையும் கூறுகிறார்.

கதாநாயகர்கள் பெயரையே காவியத்திற்குப் பெயராக வைப்பதுபோல் இல்லாமல், ஒவ்வோர் ஊருக்கும் / கட்டுரைக்கும் தலைப்பாக ஆசிரியரே பெயர் வைத்துள்ளார். இசையூர் என்ற தலைப்பில் நாதஸ்வரம் செய்யும் ஊர்; சுயபிரசவமூர் என்ற தலைப்பில் உயிரிழப்பில்லாமல் சுயபிரசவங்கள் நடக்கும் ஓர் ஊர். இப்படித்தான் 35 ஊர்களுக்கான தலைப்புகளும். ஒவ்வொரு தலைப்பையும் பார்த்துவிட்டு எதுமாதிரியான ஊராயிருக்கும் என்று கற்பனை செய்துசெய்து படித்தேன்.

மொய்விருந்து விழா எடுத்து மொய் வசூலிக்கும் ஓரூர்; மனிதர்களே இல்லாத ஓரூர்; தீபாவளிக்குப் பட்டாசுகளைத் தவிர்க்கும் ஓரூர்; ஏழு ரூபாய்க்குச் சாப்பாடு தரும் ஓரூர்; மின்சாரம் இல்லாத பணக்கார ஊர். இதுபோன்ற தகவல்களில் ஆச்சரியப்படவைக்கும் ஊர்கள் பல இருந்தாலும், மனதைப் பதறவைக்கும் சில ஊர்களும் உண்டு. புற்றுநோயாளிகளை உண்டாக்கும் ஓரூர்; வாய்பேச முடியாதவர்களும், காதுகேளாதவர்களும் பிறக்கும் ஓரூர்.

இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் குறிப்பிடப்படாமல் இருப்பது சிறுகுறையாகப்படுகிறது. மின்சாரம் இல்லாத ஊரைப் பற்றி விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் மின்னிணைப்பு பெற்றதாக அறிந்தேன். தெருக்களில் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்படுவதில்லை என்ற தகவலும் கிடைத்தது. குடிசை வீடுகள் மட்டுமே புத்தகம் சொல்லும் இடங்களில் இன்னும் கான்கிரீட் கூரைகளும் இருப்பதாக அறிந்தேன்.

தமிழ்நாட்டிலுள்ள அந்த 35 ஊர்களில் சென்னைக்குட்பட்டவை 6. சிற்பியூரையும் பட்டுச்சேலையூரையும் தவிர, எனக்குப் பரிச்சயமானவை 11; ஆனால் ஆசிரியர் சொல்லும் விசயங்களில் நான் அந்த ஊர்களை அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. 35ல் 3 ஊர்களை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறேன், நேரடியாகச் சென்றுபார்க்க.

பெரும்பாலும் ஆசிரியர் பணிநிமித்தம் இருந்த இடங்களுக்கு அருகிலுள்ள ஊர்களையே ஆவணப்படுத்தியிருக்கும் இப்புத்தகம் ஒரு நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் இப்புத்தகம் தொடாத பகுதிகள் ஏராளம். ஒரு நல்ல வாசகனின் தேடுதலுக்கு ஒரு தூண்டுகோலாக கண்டிப்பாக இப்புத்தகம் அமையும். கழுவூர், செம்மண்ணூர், ஜல்லிக்கட்டூர் என நான் கூட சில தலைப்புகள் தயார்ப்படுத்திவிட்டேன்.

குடுகுடுப்பை குமரியில் பிடிப்பவனை S.T.(Scheduled Tribes) பிரிவிலும், ஆரணியில் பிடிப்பவனை S.T. அல்லாத பிரிவிலும் வைத்திருக்கும் இந்த வித்தியாசமான இந்தியாவின் உண்மை முகம், கிராமங்களில் உள்ள உணர்வு பூர்வமான மனிதர்களிடம்தான் உள்ளது. காந்தி சொன்னதுபோல் அதைத் தேடிப்பாருங்கள்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)