Wednesday, February 05, 2014

121. பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்
ஆசிரியர்: பாரதியார்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ்,அம்பத்தூர், சென்னை
முதல் ஈடு: ஜூலை 2010
பக்கங்கள்: 173
விலை: பின்னட்டையில் 75 ரூபாய்; புத்தகத்தினுள் 115 ரூபாய்
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆடுகளம் திரைப்படத்தின் ஆரம்பத்தில் பெயர்கள் போடும் போது, உலக வரலாற்றில் சேவற்சண்டை பற்றிய குறிப்புகள் பின்னணியில் காட்டப்படும். பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்றவொரு குறிப்பும் அவற்றினூடே சில நொடிகளில் வந்து போகும். கவனித்து இருக்கிறீர்களா? நான் முதன்முதலில் அதைப் பார்த்தபின், என்னிடம் இருக்கும் பாரதியாரின் ஒரே புத்தகமான கவிதைத்தொகுப்பின் பொருளடக்கத்தில் தேடிப் பார்த்தேன்; உள்ளேயும் சற்று புரட்டிப் பார்த்தேன். சின்ன சங்கரன் கதை என்று எதுவுமே இல்லை. அவரின் கவிதைகளை நான் கொஞ்சங் கொஞ்சமாக அப்போது படித்துக் கொண்டிருந்ததால், எப்போதுதாவது சின்ன சங்கரன் கதை வரும் என விட்டுவிட்டேன். இச்சித்திரையில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள், சின்ன சங்கரன் கதையை மேற்கோளிட்டுப் பேசினார்; தமிழில் தலைசிறந்த நகைச்சுவைக் கதைகளில் ஒன்றென்றார். அதாவது, சின்ன சங்கரன் கதை என்பது கவிதை அல்ல, கதை என்று ஞானசம்பந்தன் அவர்கள் சொல்லித் தான் இந்த ஞானசேகருக்கு அந்த ஞானபாநு கவிஞனின் பன்முகத் தன்மை தெரியும்.

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் 
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
என்று பாடிய மகாகவி, கவிதைகளில் வசனகவிதை போன்று பல பரிமாணங்களைக் கையாண்டிருப்பது பலருக்குத் தெரியும். கவிதை என்ற பேரொளிக்கு முன், அம்மகாகவியின் மற்ற படைப்புகள் ஒளிகுன்றிப் பலருக்குத் தெரியாமல் போனதே எதார்த்தம். குறள் என்ற பிரம்மாண்டத்தின் முன், வள்ளுவனின் மற்ற சிறந்த படைப்புகள் பிரபலமாகாமல் போனது போல. சின்ன சங்கரன் கதை என்பது கதை என்று தெரிய வந்தபின், மகாகவியின் எட்டையபுரம் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியில் அவர் நினைவு இல்லத்திற்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். திருவல்லிக்கேணியில் பாரதி மெஸ்ஸில் சிலமுறைகள் சாப்பிட்டு இருக்கிறேன். இம்மூவிடங்களிலும் காட்சிக்கு வைத்திருக்கும் புத்தகங்களில் சின்ன சங்கரன் கதை தென்படவேயில்லை. இவ்வருட சென்னைப் புத்தகக் காட்சியில், இப்புத்தகத்தை எடுத்து பொருளட‌க்கம் மட்டும் தான் பார்த்தேன்;  சின்ன சங்கரன் கதை இருந்தது; வாங்கிவிட்டேன்.

பாரதியாரின் வேடிக்கைக் கதைகள். புத்தகத்தின் பெயரே எல்லாவற்றையும் சொல்லி விடுவதால், எனது வேலை எளிது. அந்தரடிச்சான் சாஹிப், செத்தான் சாஹிப், மிளகாய்ப்பழ சாமியார், வாழைப்பழச் சாமியார், திடசித்தன், நெட்டைமாடன் என்பன‌ பாரதியின் கதைமாந்தர்களில் சில பெயர்கள். காக்காய்ப் பார்லிமென்ட், கடற்கரையாண்டி, சும்மா என்பன சில கதைகளின் பெயர்கள். ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது 'ஷோக்கான குட்டி' என்று படித்தவுடன், என்னை அறியாமல் சிரித்து விட்டேன். மொத்த புத்தகத்தையும் சென்னை மின்சார இரயில்களில் தான் படித்து முடித்தேன். நான் நினைத்து நினைத்து நீண்ட நேரம் சிரித்துக் கொண்டு இருந்த ஒரு பகுதியை உங்கள் வாசிப்பிற்கும் தருகிறேன். பேய்கள் கடத்திக் கொண்டு வந்த பாரதியாரைப் பார்த்து, பேய்களின் தலைவன் இப்படி சொல்கிறது:
"வாப்பா, காளிதாஸா, பயப்படாதே, தரையின் மேல் உட்கார்ந்து கொள். மனதைக் கட்டு. மூச்சை நேராக்கு. ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. நீ செய்த நூல்கள் சில நாம் பார்த்திருக்கிறோம்.'கடலெதிர்த்து வந்தால் கலங்க மாட்டோம். தலைமேல் இடி விழுந்தால் தளர மாட்டோம்; எங்கும் அஞ்சோம்; யார்க்குமஞ்சோம்; எதற்குமஞ்சோம்; எப்போதும் அஞ்சோம்' என்று நீ பாடினதை நான் நேற்று ஒரு புஸ்தகத்தில் படித்தேன். நீ உண்மையான அனுபவத்தைச் சொன்னாயா, அல்லது வெறுங் கற்பனைதானா என்பதை அறியும் பொருட்டாக நான் உன்னை இங்கே கொண‌ர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப் கூட பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் சங்கதி தெரியுமா? கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது நவாப் மற்றொரு வாயில் வழியே வெளியேறிவிட்டாராம். உள்ளே போனால் கிளைவ் யாருடன் சண்டை போடுவார்? அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி சகிதமாக இருந்துகொண்டு கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித் தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நவாபிடனமிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ? ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே? மூடா, ஆறுதலடை."

33 பக்கங்களுக்கு நீளும் 'சின்ன சங்கரன் கதை'. உண்மையான இராமயணக் கதையென இராவனணின் வாரிசு ஒருவன் சொல்லும் 'குதிரைக்கொம்பு' . சுடுகாட்டுப் பேய்களின் 'பேய்க் கூட்டம்'. மொத்தமுள்ள 33ல் இம்மூன்றும் என் விருப்பக் கதைகள். குணா திரைப்படத்தின் பாதிப்பில், அபிராமி அந்தாதியைச் சில மாதங்கள் திருச்சி முழுவதும் தேடி அலைந்திருக்கிறேன். அதன்பிறகு சின்ன சங்கரன் கதைதான். ஒரேயொரு பக்கம் வந்துபோகும் சேவற்சண்டைக் குறிப்புகளைச் சில நொடிகள் திரையில் காட்டி பலருக்கும் கொண்டு சேர்த்தமை பாராட்டுக்குரியது. 

பாரதியார் தன் சொந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுத ஆரம்பித்த புனிதம் தான், சின்ன சங்கரன் கதையாம். 33 பக்கங்களில் அடங்கிப் போன சில பகுதிகள் மட்டும்தான் இதுவரை கிடைத்தனவாம். சின்ன சங்கரன் கதை படித்துப் பாருங்கள். ஒரு நகைச்சுவை படைப்பு, அதன் முடிவின்மை நிலையில் ஒரு வாசகனைச் சோகப்படுத்தும் என்றால், அதைப் படைத்தவனின் தாக்கம் இச்சமூகத்தின் மேல் எவ்வளவு மேன்மையானதாக இருக்கக் கூடும்!

- ஞானசேகர்

Saturday, February 01, 2014

120. ஜப்பான்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: ஜப்பான்
ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
முதல் ஈடு: டிசம்பர் 2012
பக்கங்கள்: 188
விலை: ரூபாய் 130
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜப்பான். அறிமுகமே தேவையில்லாத நாடு. ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணுகுண்டுகள் முதல், ஃபுகுஷிமா நகரில் இன்றும் பழுது பார்க்கப்படும் அணுவுலை வரை உலகின் அன்றாட செய்திகளில் இடம் பெற்றிருக்கும் நாடு. புல்லட்ரயில் ரோபோ கார் என தொழில்நுட்பத்தில் மூங்கில் வேகத்தில் வளரும் அதே நேரத்தில், பூகம்பங்கள் ஆழிப்பேரலைகள் எரிமலைகள் என எப்போதும் பலத்த அடிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடு. Panasonic Toyota Sony Honda Suzuki Mitsubishi Nissan என நம் அன்றாட வாழ்க்கையிலும் இடம் பெற்றிருக்கும் நாடு. கட்டுப்பாடு, தியாகம், கடும் உழைப்பு, நாட்டுப்பற்று, நிர்வாகத் திறமை, குறைந்த விலை, நிறைந்த தரம், அறிவுத்தேடல் என்ற பல சித்தாந்தங்களுக்கு அடிக்கடி உதாரணமாகச் சொல்லப்படும் நாடு. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ (Tokyo) உலகின் மிகப்பெரிய நகரமாக அறியப்படுகிறது. அதன் ஆங்கில எழுத்துக்களை மாற்றிப் போட்டால் உண்டாகும் கியோட்டோ நகரம் (Kyoto) பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குத் தெரியும். இப்படி பேரழிவுகளையும், பெரும் வளர்ச்சியையும் ஒருசேரக் கொண்ட நாடாகத் தான் பெரும்பாலானோருக்கு ஜப்பானைத் தெரியும். நம்மூர் கதாநாயககர்களுக்குப் பரம‌ ரசிகர்களைக் கொண்ட நாடாகவும் ஜப்பானை அடிக்கடி செய்தியாக்கும் பெருமை, தமிழ்கூறும் நல்லுலகில் சில பத்திரிக்கைகளுக்கு உண்டு. பெரும்பாலான புனிதர்களுக்குப் பாவியாய் வலம்வந்த ஒரு கடந்த காலம் இருப்பது போல ஜப்பானுக்கும் உண்டு. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே இடத்தில் படிக்கலாம் என்று இப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்.
(http://kizhakku.nhm.in)
கிமுவில் இருந்து மார்ச் 11, 2011 ஆழிப்பேரலை வரை ஜப்பானின் வரலாறு சொல்கிறது இப்புத்தகம். மன்னர்கள் சாமுராய்கள் மக்களாட்சி என, தேவதைகளின் நாடாக வர்ணிக்கப்படும் ஜப்பான் கண்ட ஆட்சி மாற்றங்களைப் பேசுகிறது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் பொருளாதாரத்தில் அது கண்டுகொண்டிருக்கும் வெற்றிக்கான காரணங்களைப் பேசுகிறது. சூரியக் கடவுளின் பரம்பரையாக மன்னர் குடும்பத்தை மதிக்கும் ஒரு புராதன நாடாகவும், சமகாலத் தலைமுறைகளால் அதற்கிருக்கும் வித்தியாசமான பிரச்சனைகளையும் விளக்குகிறது. புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்கள் சொல்லும் ஜப்பான் பற்றிய பொதுவான தகவல்கள் இவை: 
1.மொத்தம் 6852 தீவுகளின் கூட்டமே ஜப்பான். அதில் 426 மட்டுமே மக்கள் வாழத் தகுதியானவை.
2. ஜப்பானின் நிலப்பரப்பு இந்தியாவின் ஒன்பதில் ஒருபங்கு. அதாவது தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் சேர்த்தால் ஜப்பானைவிட கொஞ்சம் பெரிதாகிவிடும்.
3. உலகின் 10% எரிம‌லைகள் ஜப்பானில் தான் உள்ளன. மொத்தம் 107.
4. உதயசூரிய நாடு (Land of the Rising Sun) எனப் பொருள்படும் 'நிப்பான்' என்பதே ஜப்பானின் ஜப்பானிய பெயர். (எங்கள் நிப்பானே, என்று சாலைகளில் சுவரொட்டிகள் பார்த்தால் நீங்கள் குழப்பமடையக் கூடாது)

மற்ற ஆசிய நாடுகளுடன் ஓப்பிடும் போது ஜப்பான் மிகவும் வித்தியாசமாகச் செயல்பட்டு இருப்பதைக் கவனிக்கலாம். அவ்வளவு பெரிய சீனப் பேரரசை வரலாற்றில் அடிக்கடி வம்புக்கிழுத்து வென்றிருக்கிறது. இரஷ்யாவை வென்றிருக்கிறது. ஐரோப்பிய முதலாளிகள் அடித்துக் கொண்ட உலகப் போர்களில், ஆசியாவின் கடைகோடியில் இருந்து கொண்டு சண்டையிட்டு இருக்கிறது. இந்தியாவிற்குப் பக்கத்தில் பர்மாவரை ஜப்பானியப் படை வந்திருக்கிறது. பர்மா மணிலா ஹாங்காங் கோலாலம்பூர் சிங்கப்பூர் என்ற இரண்டே மாதங்களில் தெற்காசியாவையே கைப்பற்றி விட்டு, ஆஸ்ரேலியாவையும் தாக்கும் அளவிற்கு ஜப்பானின் படைவலிமை இருந்திருக்கிறது. (அப்போது சிங்கப்பூரில் ஜப்பான் வீரர்கள் சம்மந்தப்பட்ட ஒரு புதினத்தைப் பற்றி ஏற்கனவெ இத்தளத்தில் நான் எழுதியிருக்கிறேன்) கொரியா இரண்டாக உடைய ஜப்பானும் காரணமாக இருந்திருக்கிறது. முதல் உலகப்போருக்குப் பின் உண்டான வல்லரசுகளில், ஆசியாவில் இருந்து ஜப்பான் மட்டுமே. ஆனால், 'ஜப்பான் எந்த நாட்டின் மீது தானாகவே படையெடுக்காது' என்று இன்று அதன் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு இருக்கிறது!

இந்தியாவின் வரலாற்றில் அடிக்கடி ஜப்பான் வந்துபோன குறிப்புகளும் உண்டு. 1945ல் ஜப்பான் சரணடைந்த நாளின் நினைவு தினத்தில், 1947ல் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க ஆங்கிலேய அரசு தீர்மானித்ததாக ஒரு கதை உண்டு. ஜவஹர்லால் நேரு பிரத‌மராய் இருந்த காலத்தில் ஜப்பானிய இளவரசராக இந்தியாவிற்கு வந்தவர், சென்ற வருடம் ஜப்பானிய மன்னராக வந்து போன செய்தியை நீங்கள் சில நல்ல பத்திரிக்கைகளில் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதே ஜப்பானின் மக்களாட்சி 30 ஆண்டுகளில் 15 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமை ஜப்பானுக்கு உண்டு. ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்ட நாளில் பிறந்த ஒருவரை அந்த ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வைக்கும் அளவிற்கு வரலாறு மறக்காத நாட்டுப்பற்று உள்ள நாடு அது! நம்மூரில்... வேண்டாம் விட்டு விடுங்கள். நாம் ஜப்பானைப் பற்றி மட்டுமே பேசுவோம். மாஃபியா (கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் முதலிய 16 அம்சங்கள்), வேலையில்லாத் திண்டாட்டம், குறையும் மக்கட்தொகை, அதிகரிக்கும் முதியவர்கள், இலஞ்சம் என்று நவீன பிரச்சனைகளிலும் சிக்கித் தவிக்கிறது ஜப்பான். பொருளை விற்று இலாபம் சம்பாதிப்பதைவிட பணத்தை விற்று இலாபம் சம்பாதிப்பதே சுலபம் என 1990க்குப் பின் மக்களின் மனநிலை மாறிப்போய், பங்குச்சந்தை வீட்டுமனை என வங்கிக்கடன்களில் வாங்கித் தள்ளிய கதைகளைக் காரணங்களாகச் சொல்கிறார் ஆசிரியர். 30 வருடங்களில் 150 மடங்கு விலையேற்றம் கண்ட வீட்டுமனைகள், ஒரே வருடத்தில் 3 மடங்கு வீழ்ந்து போன சரித்திரத்தை ஜப்பான் கண்டிருக்கிறது. பொன்னும் மண்ணும் என்றைக்கும் இறங்கவே இறங்காதென... நாம் ஜப்பானைப் பற்றி மட்டுமே பேசுவோம்.

பெரும்பாலான புனிதர்களுக்குப் பாவியாய் வலம்வந்த ஒரு கடந்த காலம் இருப்பது போல ஜப்பானுக்கும் உண்டு, என்று ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா? பியர்ள் துறைமுகம் பற்றி என பெரும்பாலானவர்கள் நினைத்திருப்பீர்கள். நான் அதனால் மட்டும் அப்படி சொல்லவில்லை. ஜப்பான் செய்த அந்த மனிதவுரிமை மீறல்கள் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன், சீன ஆளுகைக்கு உட்பட பகுதியொன்றில் நான் இருந்த போதுதான் என் நண்பன் ஒருவன் அச்சம்பவம் பற்றி என்னிடம் சொன்னான். அச்சம்பவம் பற்றி ஒரு புத்தகம் சொன்னான். பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்ட புத்தகம் என்றான். நான் இருந்த சீன ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னான். ஆமாம், அப்புத்தகம் கிடைத்தது. ஈழப்படுகொலைகளுக்கு முன் என் தூக்கங்களைக் கலைத்த புகைப்படங்கள் அவை! சீனாவின் நான்கிங் நகரில் ஜப்பானியப் படைகளின் செயல்களே அச்சம்பவம். அப்புத்தகத்தின் பெயர் The Rape of Nanking.

சராசரி மனித ஆயுட்காலம் ஜப்பானியர்களுக்குத் தான் அதிகம். ஜப்பானிய மொழியில் நண்பன் என்றால் காட்டுமிராண்டி என்றொரு தகவல் இப்புத்தகத்தில் உண்டு. ஜப்பானிய பாராளுமன்றத்தின் பெயரும் சற்று வித்தியாசமானது - Diet. Diet பற்றி புத்தகம் ஏதும் சொன்னதாக நினைவில்லை. இப்புத்தகத்திற்குச் சம்மந்தமில்லாததால் சொல்லாமல் விடப்பட்ட ஒரு நல்ல தகவல் சொல்கிறேன்; குறித்துக் கொள்ளுங்கள். ஜப்பானின் தேசிய கீதம் தான் உலகிலேயே சிறியது! நான்கே நான்கு வரிகள்!

வழக்கம்போல் நாம் பல செய்திகளையும் தகவல்களையும் துண்டு துண்டுகளாகத் தான் தெரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு அவை அப்படித்தான் சொல்லப்படுகின்றன. ஜப்பான் பற்றிய பல விடயங்கள் அப்படித்தான். தனித்தனியாகத் தெரியும்; கோர்வையாகப் பலவற்றை இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். உதாரணமாக சில: முதல் உலகப்போரில் இங்கிலாந்து அணியில் ஜெர்மனிக்கு எதிராகவும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி அணியில் இங்கிலாந்துக்கு எதிராகவும் ஜப்பான் போரிட்டது. அட ஆமாம், இப்போதுதான் கவனிக்கிறேன்! இந்தக் கட்சித்தாவலுக்கான காரணம் என்ன? ஹாலிவுட் படங்கள் பார்த்து பலருக்குப் பியர்ள் துறைமுகம் (Pearl Harbour) தெரிய வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு தூரம் போய் தனக்குச் சம்மந்தமே இல்லாத அத்துறைமுகத்தை ஏன் ஜப்பான் தாக்கியது? 

Seek knowledge even from China. 'சீனர்களிடம் இருந்து கூட அறிவைத் தேடிப் பெறுங்கள்' என்று சொன்னார் முகமது நபி. சீனாவையும் தாண்டி ஜப்பானுக்கும் போக வேண்டியது நமது காலத்தின் கட்டாயம்!

அனுபந்தம்:
-------------------
1. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேரரழிவில் இருந்து மீண்டெழுந்த ஜப்பானை ஃபீனிக்ஸ் பறவையுடன் ஒப்பிடுகிறார் ஆசிரியர். எரிந்து போன சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பறவையாக அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். கதாநாயகனுக்கான ஆரம்பப் பாடலில் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். கிரேக்கப் புராண ஃபீனிக்ஸ் பறவை, ஒரு சமயத்தில் உலகில் ஒன்றே ஒன்றுதான் வாழுமாம். அதன் இறுதிக்காலம் அதற்கே தெரியுமாம். அப்போது அது தீக்குளிக்க, அடுத்த பறவை அதே தீயில் இருந்து வருமாம். அட பார்டா, இப்புத்தகத்தில் தான் படித்தேன்.
2. தசாவதாரம் திரைப்படத்தில் ஜப்பானியராக ஓர் அவதாரம். இறுதிக் காட்சியில் ஆழிப்பேரரலையைப் பார்த்து எல்லோரும் செய்வதறியாது நிற்க, 'சுனாமி' என்று கத்துவதற்குத்தான் ஜப்பானியர் என்று ஒரு விமர்சனத்தில் படித்திருக்கிறேன். சுனாமி என்பது ஜப்பானியர்கள் செய்த வார்த்தை. பசிபிக் கடலில், ஜப்பானில் ஆழிப்பேரலை என்பது அடிக்கடி நிகழ்வது.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)