Thursday, September 08, 2011

76. TEA - THE DRINK THAT CHANGED THE WORLD

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

The greatest service which can be rendered to any country is to add a useful plant to its custom.
- Thomas Jefferson

------------------------------------------------
புத்தகம் : Tea - The drink that changed the world
ஆசிரியர் : John Griffiths
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : André Deutsch
முதற்பதிப்பு : 2007
விலை : 395 ரூபாய்
பக்கங்கள் : 373 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------

டீ என்றால் நமக்கு என்னென்ன நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும்? சாதிக் கொடுமைகளுக்கு அடையாளமாக பள்ளிப்பாடங்களில் வரும் இரட்டைத் தம்ளர் முறை. பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party). தேநீர் வாங்கித்தந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவதாகச் சிலர் சொல்லும் வீரவசனங்கள். தேயிலை அறிமுகமான காலத்தில் வடிகட்டியபின் சக்கையைச் சாப்பிட்ட ஏதோவொரு நாட்டுமக்கள், என்று சிறுவயதில் எங்கோபடித்த விசயம். வாழ்நாளில் டீயே குடிக்காமல் இருந்த‌ ஒரு பிரதமர். இன்னும் கொஞ்சநேரம் யோசித்தால் அதிகபட்சமாக என்னால் இன்னும் இரண்டு விச‌யங்கள்தான் சொல்லியிருக்க முடியும். ஆனால் உலகத்தையே மாற்றியமைத்த பானமென்று கம்பீரமாக தேநீரை அடையாளப்படுத்தி நின்றுகொண்டிருந்தது இப்புத்தகம். உப்பைப்பற்றிய ஒரு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். 19 கட்டுரைகளின் தொகுப்பு. அட்டைப்படத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து.

தேயிலை என்ற கண்டுபிடிப்பிற்குச் சொந்தமானவர்கள் யார் எனவும் அதைத் தனது காலனிகளில் விளைவிக்க பிரிட்டிஷார்கள் மேற்கொண்ட முயற்சிகளும்தான் முதலிரண்டு கட்டுரைக‌ள். தேயிலையை இங்கிலாந்தில் பயிர்செய்ய வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) 20 முறை முயற்சித்து தோற்றுப்போகிறார். மின்சார பல்புக்குள் வைப்பதற்குத் தகுந்த இழையைத் தேடி உலகின் பல இடங்களுக்கு ஆட்களை அனுப்பிய ஆல்வா தாமஸ் எடிசன் போல், தேயிலைச் செடியை உயிருடன் கொண்டுவர தனது ஆட்களை அனுப்புகிறார் கார்ல் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஒருகரையில் சேகரிக்கப்பட்ட தேயிலை மறுகரை சேரவில்லை. கப்பல் புறப்பட்டபோது வழியனுப்புதலுக்காக வெடிக்கப்பட்ட குண்டில் தேயிலை பொசுங்கிப்போகிறது. இல்லை, வழியில் கப்பலில் எலி தின்றுவிடுகிறது. நம்பிக்கையுடன் அவ்வளவுதூரம் வந்துவிட்டு, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கடந்தவுடன் எதிர்பாராத புய‌ற்காற்றில் பறந்துபோகிறது. தனது தோட்டத்தில் பயிரிடும் ஆசை நிறைவேறாமலேயே இறந்துபோகிறார் கார்ல் லின்னேயஸ்.தப்பித்தவறி தனக்குக் கிடைத்த செடிகளில் எது உண்மையான‌ தேயிலை எனத் தெரியாமல் குழம்பிப்போகிறார் கார்ல் லின்னேயஸ். தேயிலை என்பது ஒரு தனிப்பட்ட தாவரம்தானா என்ற கேள்விக்கு விடை 180 ஆண்டுகள் கழித்துத்தான் தாவரவியலாளர்களுக்குக் கிடைக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதிவரை அயல்மண்ணில் விளைவிக்கப்பட முடியாமல் சீனாவிலேயே தங்கிவிடுகிறது தேயிலை. நமெக்கெல்லாம் மிகவும் பரிச்சயப்பட்ட டீ (tea), சாயா / சாய் / சா (cha) என்ற வார்த்தைகளின் பெயர்க்காரணமும், கிரீன் டீ (green tea) மற்றும் பிளாக் டீ (black tea)க்களுக்கான வித்தியாசங்களையும் அருமையான தகவல்களாகத் தந்துபோகின்றன இவ்விரண்டு கட்டுரைகள்.

மூன்றாம் கட்டுரையில் இருந்து சீரியஸாகிறது புத்தகம். தேநீரின் தீமைகளாகவும் அக்காலத்தில் அதைப்பற்றிய நிலவிய அறியாமையையும் அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது அக்கட்டுரை. ஒருகாலக்கட்டத்தில் தேநீரின் மருத்துவக் குணங்களை ஆய்வுசெய்ய பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி (Louis XIV) உத்தரவிடும் அளவிற்குத் தேயிலை பயங்காட்டியிருக்கிறது. காஃபிக்கும் தேநீருக்கும் இடையில் இருக்கும் நன்மை தீமைகளை அறிவியல் ரீதியாகப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.

அடுத்த இரண்டு கட்டுரைகளும் எனக்கும் மிகவும் பிடித்த வரலாற்றுச் சம்பவங்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே அமெரிக்காவில் அழித்து, அமெரிக்கர்களின் தேநீர் பழக்கத்தையே கிட்டத்தட்ட மறக்கடித்துப்போன பாஸ்டன் தேநீர் விருந்தை இருமுறை படித்தேன். உலகின் தலைசிறந்த போராட்டங்களாக டைம் (Time) இதழ் தேர்ந்தெடுத்திருந்த நிகழ்வுகளில் 10வது இடம் பாஸ்டன் தேநீர் விருந்து. தண்டியில் உப்புக்காய்ச்சியபின் தனது உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை மோகன்தாஸ் காந்தி இந்நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டதாக வரலாற்றுச் செய்திகள் உண்டு. தண்டிப்போராட்டம் அதே டைம் பட்டியலில் பத்துக்குள் இருக்கிறது.

வீட்டைக் குத்தகைக்குவிடலாம், காட்டைக் குத்தகைக்கு விடலாம், ஒரு நாட்டையே குத்தகைக்கு விடலாமா? விடலாம் என்கிறது விநோத வரலாறு. அபினிப்போரில் (Opium war) பிரிட்டிஷாரிடம் தோற்றுப்போன சீனா, தனது நாட்டின் ஒருபகுதியான ஹாங்காங்கை 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுகிறது. இந்த விநோதத்தின் மூலத்தைத் தேடினால், அபினி வெள்ளி என்று இதுவும் தேயிலையில்தான் போய்முடிகிறது. அபினிக்கென்று தனித்துறை இந்திய ஆட்சிப்பணியில் 1930ல் இருந்திருக்கிறது.

தேயிலைத் தோட்ட முதலாளிகள், கூலிகள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். முதலாளிகள் கூலிகளை நாடுவிட்டுநாடு கொண்டுவருவதில் பட்ட இன்னல்கள், கூலிகளை நிர்வகிக்கும் கங்கானிகள், கூலிகள் தங்கள் உரிமைகளுக்காகத் தோற்றுவித்த தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். 1920களில் தமிழகத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுத்து, சுதந்திரத்திற்குப்பின் வாழ்வுரிமையையும் மறுத்த இலங்கையின் மாபெரும் வரலாற்றுக் குற்றங்களையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.

1600ன் கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகாதிபத்தியத்தின் பின்னாலும், இரண்டு வருடங்களுக்குப் பின் போட்டிக்காக‌ தோன்றிய டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பின்னாலும் தேயிலை இருந்திருக்கிறது. தேயிலையைப் பானமாக உபயோகிக்காமல் ஊறுகாயாக உபயோகித்திருக்கிறார்கள் பர்மியர்க‌ளும் சில தென்கிழக்கு ஆசியர்களும். மற்றபடி தேயிலைத்தூள் தயாரிப்பு முறைகள் பற்றியும், நிறம் சுவை திடம் பற்றியும், அதன்மேல் வரலாறு விதித்திருந்த வரிகள் பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. லிப்டன், டைபோ (Typhoo), புரூக் பான்ட் (Brooke Bond) என்ற‌ பிரபல டீ பிராண்டுகளின் ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் தொட்டுச் செல்கிறது புத்தகம். தனது முதல் டீக்கடையின் விளம்பரத்திற்காக பன்றி ஒன்றுடன் வீதியில் ஊர்வலம் போயிருக்கிறார் டாம்மி லிப்டன் (Tommy Lipton). குரங்கைவிட்டு அறுவடை செய்ததென்று கவர்ச்சி விளம்பரமெல்லாம் சிலபேர் செய்திருக்கிறார்கள்.

ஆசிரியரின் தந்தை பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்தாக யூகிக்கமுடிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த‌ ஆங்கில அதிகாரிகளாலும், தேயிலை சம்மந்த‌ப்பட்ட பிரிட்டிஷ்-சீன-டச்சுக்காரர்களாலும் எழுதப்பட்ட நேரடிக் குறிப்புகளே பெரும்பாலான இடங்களில் மேற்கோளாகப் புத்தகத்தில் வருகின்றன. இவை செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகக்கூடச் சொல்லலாம்.

டீயைப் பற்றி எல்லா விசயங்களையும் இங்கேயே சொல்லிவிட முடியாது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பல நூற்றாண்டுகளை ஒரே நிமிடத்தில் உறிஞ்சிவிட்டதாக ஒருதிருப்தி. 'கொஞ்சம் தேநீர் நிறைய‌ வானம்' புத்தகத்தில் 'ஆளுக்கொரு கோப்பை' கவிதையில் வைரமுத்து சொல்வதுபோல், கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வமான இத்தேநீரின் வரலாற்றிலும்கூட நிறம் சுவை திடமுண்டு!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)