Monday, February 27, 2012

87. LOVE IN THE TIME OF CHOLERA

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  

வயது ஏற ஏற காதலும் உட‌லின் மையத்தில் இருந்து தலைக்கு ஏறுகிறது.

-----------------------------------------------------------------------
புத்தகம் : LOVE IN THE TIME OF CHOLERA (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1985
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 348 (தோராயமாக 37 வரிகள் / பக்கம்)
-----------------------------------------------------------------------

அழகி. சினிமாவை உள்ளது உள்ளபடியே உள்வாங்கும் பக்குவமும் வயதும் நேரமும் கிடைத்தபோது என்னை முதன்முதலில் பாதித்த படம், தங்கர் பச்சானின் அழகி. திரையரங்குகளில் மட்டும் நான்கு முறை பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில் அதன் மூலமான கல்வெட்டு சிறுகதையையும் படித்தேன். காதல் என்பது காமத்தின் இரட்டையாகக் கட்டாயம் இருக்க வேண்டியதில்லை என, இன்னும்கூட தனலெட்சுமி கண்டிப்பாகத் திரும்பி வருவாள் என சண்முகத்தைப் போல என் போன்றவர்களையும் நம்ப வைத்திருப்பது தங்கரின் வெற்றி.

மோகமுள். ஜானகிராமனின் மோகமுள் புத்தகத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் நான் படிக்க ஆரம்பித்தபோது, புத்தகத்தின் பெயரில் முன்பாதி மோகத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். யமுனா கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் பதிய ஆரம்பித்தாள். பாபுவைத் தவிர வேறு யாருடனாவது யமுனாவிற்குத் திருமணம் ஆக வேண்டுமென மனம் எதிர்பார்க்கவும் செய்தது. மோகம் என்ற வார்த்தைக்கு நம்மூரில் காதல் என்ற அர்த்தமும் உண்டு என உணர வைத்தது ஜானகிராமனின் வெற்றியும் கூட.
Midnight's Childrenக்குப் பிறகு என்னைப் பிரமிக்க வைத்த ஆங்கிலப் புதினம் One Hundred Years of Solitude. சூட்டோடு சூடாக கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்களை மீண்டும் படிக்க நான் தேர்ந்தெடுத்த புத்தகம், Love in the Time of Cholera. கொஞ்சம் அழகியும் கொஞ்சம் மோகமுள்ளும் சேர்ந்த தென்னமெரிக்கக் கதைதான், காலரா காலத்தில் காதல். Love என்றால் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு, மனிதர் பேசும் மொழி மறந்து பறவைகளோடு பேசத் தோன்றும் மாய அனுபவம் கிடைக்குமென்று எதிர்பார்த்தேன். காதல் என்ற வார்த்தையில் காமமும் ஒளிந்திருக்கிறது என கால்புத்தகம் வரை நான் சந்தேகிக்கவில்லை. ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலிக்கிறார்கள். ஒருவன் வென்று மண‌முடிக்கிறான். அவன் சாகும்வரை காத்திருந்து 51 ஆண்டுகள் 9 மாதங்கள் 4 நாட்கள் கழித்து இன்னொருவன் 70+ வயதில் தன் காதலைப் புதுப்பிக்க முயல்வதே கதைச்சுருக்கம்.

படகுத் துடுப்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண்-பெண் சோடியைப் பற்றி, நீண்ட காலத்திற்கு முன் மெக்சிகோ பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியொன்றை ஆசிரியர் படித்திருக்கிறார். அந்த இருவரும் 40 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஒரே தேதியில் ஒரே இடத்தில் சந்தித்து, ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுற்றித் திரிந்து, தேனிலவை வருடா வருடம் ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது போல் சந்தோசமாகச் சுற்றித் திரிந்திருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் உல்லாசப் படகில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க, படகோட்டி துடுப்பால் அடித்து அவர்களைக் கொன்றிருக்கிறான். அவர்கள் இறந்தபிறகு விசாரணையில் தான் தெரிகிறது, அவர்கள் இருவரும் தனித்தனியே திருமணமாகி, சந்தோசமான மிகப்பெரிய குடும்பங்கள் தனித்தனியே இருக்கின்றன என்பது. இச்சம்பவத்தைத் தனது பெற்றோரின் காதல் கதையுடன் இணைத்து, கொஞ்சம் மசாலாவும் காலராவும் சேர்த்து ஆசிரியர் எழுதிய புதினம்தான் இது.

பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் கதாநாயகிக்குக் கடிதங்கள் மூலமும் கவிதைகள் மூலமும் காதல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறான் ஒருவன். நம்மூர் அக இலக்கியங்களில் தோழி மற்றும் செவிலித்தாயின் பங்கு எப்படி இன்றியமையாததோ அதேபோல, அவளின் அத்தைமகளும் அத்தையும் காதலுக்கு உதவுகின்றனர். பள்ளிக்கூட கன்னியாஸ்திரிகளுக்கு விசயம் தெரியவர, தாயில்லாப் பிள்ளையென ரொம்ப செல்லமாக வளர்த்த தகப்பனுக்கும் தகவல் போகிறது. திருத்தவே முடியாதென உணர்ந்த பிறகு, மகளைக் கூட்டிக் கொண்டு ஆற்றில் மாதக்கணக்கில் படகுப்பயணம் போகிறார். திரும்பி வந்த நாயகி, காத்துக் கொண்டிருந்த காதல் கவிஞனுக்கு, இத்தனை நாள் அவர்கள் செய்தது கவர்ச்சியே தவிர காதலில்லை என அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறாள்; ஒரு டாக்டர் மேல் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கிறாள்.

டாக்டருக்குத் தொழில் பக்தி அதிகம். தான் பார்த்த ஐரோப்பிய நாடுகள் போல் தன் ஊரையும் மாற்றிவிட வேண்டும் என சின்ன வயதிலேயே அவர் எடுத்த சுகாதார நடவடிக்கைகள் மூலம் அவருக்கு ஊரில் நல்லபெயர். அறுவைச் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்ட கத்தி, மருத்துவத்தின் தோல்விக்கான அடையாளமென கருதும் டாக்டர், காலரா பரிசோதனை செய்யப்போன இடத்தில் நாயகியின் மேல் காதல் வருகிறது. திருமணத்தில் ஏதேதோ எதிர்பார்த்து ஒன்றுசேர்ந்த அவர்களுக்கு, சில நாட்களிலே ஏமாற்றமே கிடைக்க, இரு பிள்ளைகளும் பெற்று, தாம்பத்திய வாழ்வின் வெற்றி சந்தோசத்தில் இல்லை ஒன்றாகவே இருப்பதில் இருக்கிறதென உணர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

காதலிக்கும் போது தந்தி அலுவலகத்தில் வேலை செய்துவந்த கவிஞன், தோற்றபிறகு காலப்போக்கில் குடும்பத் தொழிலான படகுப் போக்குவரத்தைக் கவனிக்கிறான். விபச்சார விடுதிக்கு நடுவே தனது அலுவலகத்தை வைத்திருந்த அவன், காதல் தோற்கும் வரை கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறான். அதன்பின் பல பெண்களுடன் உறவுகொள்ள ஆரம்பிக்கிறான். அரை நூற்றாண்டு கால‌த்தில் 622 பேர்! ஆனால் மற்ற காதல‌ர்களுக்காக‌ கவிதைகளும் தொடர்ந்து எழுதுகிறான். என்றாவது ஒருநாள் தன் காதல் வெல்லும் எனக் காத்திருக்கிறான்.

இந்த மூன்று பேரைத் தவிர மற்ற யாரையும் அளவுக்கு அதிகமாக‌ கதைக்குள் ஆசிரியர் அனுமதிக்கவில்லை. காதலும் முதுமையும் புதினம் முழுக்க வெவ்வேறு அர்த்தங்களில் வருகின்றன. உதாரணமாக, ஒருத்தியுடன் படுக்கையில் இருக்கும்போது கவிஞ‌னுக்குக் காதல் என்றால் என்ன என்று சந்தேகம் வருகிறது. இரவுப் படுக்கையின் களியாட்டமா அல்லது ஞாயிறு மதியப் பேரமைதியா, எது காதல் எனக் கேட்கிறான். ஆடையில்லாமல் அவர்கள் செய்யும் அத்தனையும் காதல் என்கிறாள் அவள். அகநிலை (spiritual) புறநிலை (physical) எனக் காதலில் இருவகைகளையும் விளக்குகிறாள். இடுப்புக்கு மேலே அகநிலை; கீழே புறநிலை. ஒருத்திக்காக எவளையுமே தொடாமல் இருந்து, அவள் இல்லை என்றானபின் 622 பேருடன் தொடர்பு வைத்து, மீண்டும் அவளைத் தேடிப் போகும் இக்கவிஞன் மூலம் கற்பு என்ற சித்தாந்தம் பல அர்த்தம் கொடுக்கிறது. ஒரு படகிற்கு New Fidelity என்று பெயரிட்டு அவர்கள் உறவைக் குறிப்பாலும் உணர்த்துகிறார்.

யாருடனும் இலவசமாக படுக்கை பகிராத கவிஞன், ஒருத்திக்கு மட்டும் காசு கொடுக்க விரும்புகிறான். கணவனிடம் கூட காசு வாங்கியே படுக்கை பகிரும் அவள், கவிஞனிடம் மட்டும் காசு வாங்க மறுக்கிறாள். இதுபோன்ற சின்னச்சின்ன நக்கல்கள் கதையில் அதிகம். அப்போது பதவியில் இருக்கும் போப்பின் பெயரை எண்களுடனேயே (பன்னிரெண்டாம் லியோ) பிள்ளைகளுக்கு வைக்கும் ஒரு குடும்பம் என இப்புத்தகத்திலும் வித்தியாசமாகத் தான் பெயர் சூட்டி இருக்கிறார்.

நூறாண்டுகளின் தனிமை புத்தகம் வரிக்கு வரி கதையுடன் இருந்ததால், அப்போது நல்ல வரிகள் எதையும் பதிவில் நான் சொல்லவில்லை. இப்புத்தகத்தில் இருந்து சில:

டாக்டர் அகாலமடைந்தபின் கவிஞன் சொல்கிறான்: Nothing resembles a person as much as the way he dies, and no death could resemble the man he was thinking about less than this one.

The problem with marriage is that it ends every night after making love, and it must be rebuilt every morning before breakfast.

The problem in public life is learning to overcome terror; the problem in married life is learning to overcome boredom.

Old age began with one’s first minor fall and that death came with the second.

He was like those Swedish matches that light only with their own box.

நான் ரசித்தவை:
பாத்திரம் -> கவிஞனின் 622வது உறவுக்காரி America Vicuna.
வரி -> மோகமுள்ளிற்கு "எல்லாம் இதற்குத்தானா?" என்பது போல், இப்புதினத்திற்கு "I've remained a virgin for you"
ப‌குதிக‌ள் -> 1) கதாநாய‌கிக்கு இரண்டாவதாகவும், டாக்டருக்கு முதலாவதாகவும் காதல் தோன்றும் நிகழ்ச்சி 2) அவர்களின் முதலிரவு (இரண்டு முறை படித்தேன்) 3) கதையில் எப்போதாவது தலைகாட்டும் காலரா, புத்தகத்தின் பெயரானதற்கான சம்பவம்
குறியீடு -> நான் அரைகுறையாகப் புரிந்து கொண்ட காதலுக்கும் காலராவுக்குமான அறிகுறிகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுக்காதல் புத்தகம் ஒன்றைப் படித்துவிட்டேன். அடுத்து படிக்கப் போவதும் இவருடையதே. ஆசிரியரின் பெரும்பாலான புத்தகங்கள், நூறாண்டுகளின் தனிமை புத்தகம் தவிர‌, முரண்பட்ட காதல்களை கருவாகக் கொண்ட‌வை என சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். நமது சமூகமும் அப்படியே. ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் வலை விரித்துக் கொண்டும், வலையில் சிக்கிக் கொண்டும் வயது வித்தியாசம் இல்லாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தவறு எதுவென்று தெரியாமல் எதையும் செய்யும் இளமைப் பருவம் ஒருவகை. தவறுகள் எல்லாம் மரணத்தில் மறைத்துக் கொள்ளலாம் என்று தெரிந்தே செய்யும் முதுமைப் பருவம் இன்னொரு வகை. முதுமைக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவருடன் புதினம் ஆரம்பமாகிறது. முதுமை ஒன்று தன்னை வைத்து தவறுகள் செய்து கொண்டிருக்கும் உண்மை தெரிந்தவுடன் தற்கொலை செய்து கொள்ளும் இளமையுடன் புதினம் முடிகிறது.

காதல் முகப்பரு போல; இளமையில் வந்தால் அழகு; முதுமையில் அசிங்கம். இளமையில் வயது போதாதென்றும், முதுமை வயதில் கூடாதென்றும் சமூகம் மறுக்கும் காதலைக் காலராவின் உதவியுடன் நீட்டித்துக் கொள்ளும் முதுமைக் காதலை அசிங்கப்படுத்தாமல் சொல்லியிருக்கும் ஒரு நல்ல புத்தகம் இது.
- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Wednesday, February 08, 2012

86. 20,000 LEAGUES UNDER THE SEA

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 

------------------------------------------------------------------------
புத்தகம் : 20,000 Leagues Under the Sea
ஆசிரியர் : Jules Verne (ஜூல் வேர்ண்)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Collins Classics
முதற்பதிப்பு : 1870
விலை :  125 ரூபாய்
பக்கங்கள் : 340 (தோராயமாக 41 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------------------
விக்கிபீடியா உதவியுடன் ஆசிரியரைப் பற்றிய‌ அறிமுகம் த‌ருவது நல்லதென நினைக்கிறேன்.
1. அறிபுனை இலக்கியத்தின் (Science fiction) தந்தையர் என்று கருதப்படும் மும்மூர்த்திகளில் ஒருவர்.
2. விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
3. அகதா கிறிஸ்டிக்கு (Agatha Christie) அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.
4. இன்று இவரின் பிறந்தநாள்.1866ம் ஆண்டு. ஆப்ரகாம் லிங்கன் இறந்த அடுத்த வருடம். முந்தைய புத்தகப் பதிவில் சொன்னது போல், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அட்லாண்டிக் பெருங்கடலினூடே தட்டுத் தடுமாறி தந்திவழித் தொடர்புகளைப் புதைத்துக் கொண்டிருந்த காலம். இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அச்சத்துடன் விவாதித்துக் கொள்ள அக்காலத்தில் ஒரு மர்மமான விசயமும் நடந்து கொண்டிருந்தது. கடற்பயணம் போனவர்கள் சிலர் பார்த்ததாக சொன்ன, பிரம்மாண்ட உருவத்துடன் நகரும் ஏதோவொன்றுதான் அது. மைல் கணக்கில் அவனவன் நீள அகலங்களைக் கதைகதையாய்ச் சொல்ல, 200 அடிக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை எனவும், 8 அங்குலம் இரும்பின் வலிமை உடையது என்றும் வல்லுனர் குழு முடிவுக்கு வருகிறது. ஆனால் உயிரா உயிரிலியா என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

வெறும் திண்ணைப் பேச்சு சமாச்சாரமாக இருந்த அந்தப் பிரம்மாண்டம், சில கப்பல்களைக் கவிழ்த்துவிட்ட பிறகு, தீர்த்துக்கட்டப் படவேண்டிய விசயமாக மாறுகிறது. இம்மாதிரி பிரச்சனைகளில் இருந்து, உலகத்தைக் காப்பாற்ற வழக்கம் போல் அமெரிக்கக் கப்பற்படை களத்தில் குதிக்கிறது. (இதுவே இக்காலத்தில் நடந்தால் பக்கத்தில் இருக்கும் ஒரு கம்யூனிச / இஸ்லாமிய / பெட்ரோலிய தேசம் காலி) புத்தகத்தின் மொத்தக் கதையையும் தன்னிலையில் சொல்லும் ஒரு பிரெஞ்சுப் பேராசிரியர், அவரின் உதவியாளர், கனடா நாட்டுத் திமிங்கல வேட்டைக்காரன் ஒருவன், இன்னும் சிலருடன் ஆபிரகாம் லிங்கன் என்ற கப்பல் அப்பிரம்மாண்டத்தைத் தேடி கடலோடுகிறது. ஆபிரகாம் லிங்கனைக் கவிழ்த்து விட்டு, அம்மூவரையும் சிறைப்பிடிக்கிறார் கேப்டன் நெமோ (Nemo).

கடலடியிலேயே அவர்களைத் தான் போகும் இடமெல்லாம் கூட்டிப் போகிறார், யாரென்றே தெரியாத‌ கேப்டன். மனித குலத்தின் மேல் வெறுப்பையும், நிகழ்காலத்தை மிஞ்சிய தொழில் நுட்பங்களையும், உலகக் கடல்களைப் பற்றி அதிகப்படியான‌ அறிவையும், கடல் கொண்ட சில பொக்கிஷங்களையும், மனித குலம் ஆவணப்படுத்தாத‌ சில கடலுயிரினங்களையும் சுமந்து கடல்வலம் செல்லும் கேப்டனிடம் இருந்து முடிந்த அளவு விசயங்களைக் கறந்துவிட வேண்டுமென அறிவுப்பசியுடன் பொறுமை காக்கிறார் பேராசிரியர். தென்படும் உயிரினங்களை எல்லாம் புசிக்கவே யோசிக்கும் வேட்டைக்காரன். கார்ல் லின்னேயஸ் மாதிரி அவற்றை எல்லாம் உயிரியல் ரீதியில் வகைப்படுத்தும் பேராசிரியரின் உதவியாள். இந்த இருவருக்கும் புரியாத கடல் ஆச்சரியங்களை விளக்கும் பேராசிரியர். பேராசிரியருடன் எப்போதும் கடல் மற்றும் வரலாற்று விவாதங்களில் ஈடுபடும் கேப்டன். 10 மாதங்களில் 20000 லீக்குகள் (1 league = 4 km) நீடிக்கும் இப்பயணத்தில், இடையில் சந்திக்கும் இயற்கையின் ஆச்சரியங்களும் சவால்களும் மர்மங்களும், பணயத்தில் இருந்து தப்ப முயற்சிக்கும் செயல்களுமே கதைச்சுருக்கம்.

இந்த நான்கு பேரைத் தவிர மையக்கதையில் வேறு யாருமே கிடையாது. அட்லாண்டிக் புத்தகம் மூலம் கடல் பற்றிய புரிதல் கொஞ்சம் அதிகமாகி இருப்பதால், எனக்கு இப்புத்தகம் அடுத்தக்கட்ட புரிதல் என்றே நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நான் இப்புத்தகத்தை முதலில் படித்திருந்தால், முதல் பக்கமே விளங்கி இருக்காது. அட்லாண்டிக் தந்திக் கம்பியை வெட்டிவிட்ட சுயநலப் புத்திசாலியைப் பற்றியது அது! நான்கூட‌ முதலில் புத்தகத்தின் பெயரில் இருக்கும் லீக்கை, under என்ற வார்த்தையால் ஆழம் என்று புரிந்து கொண்டுதான் படித்தேன். கொஞ்ச தூரம் பயணித்த பிறகுதான் அது நீளம் என்றே உறைத்தது. 20000 லீக் = 80000 கிமீ; பூமியின் விட்டத்தைவிட 6 மடங்கு அதிகம்; பூமியையே கிட்டத்தட்ட‌ இரண்டு சுற்றுகள் சுற்றும் தூரம். Under என்றால் மூளை ஏன் செங்குத்தாக புரிந்து கொள்கிறது எனத் தெரியவில்லை!

கடல் மட்டத்தில் இருந்து ஆழம் (fathom), தரையில் இருந்து உயரம் (feet / yard), அழுத்தம் (mercury / atmosphere), வெப்பநிலை (Celcius), மிதக்கத் தேவையான விசை, மூழ்கத் தேவையான எடை (lbs), பிராண வாயு, நீருக்கு மேலே புயல், நீருக்குள் சலன நீரோட்டங்கள், கலத்தின் எரிபொருள், கண்ணாடி முன்னால் வாய் திறக்கும் திமிங்கலம், Objects in the mirror are closer than they  appear என்று பாய்ந்து வரும் சுறா, என்று கடலடிப் பயணம் மூலம் ஆசிரியர் சொல்லும் சவால்களும், அறிவியல் வார்த்தைகளும் ஏராளம்.

கடலில் மூழ்கும் எல்லாப் பொருட்களுமே தரை தொடுவது போல் காட்டப்படும் சினிமாக் காட்சிகள் போல் அல்லாமல், புத்தகத்தில் சொல்லப்படும் விசயங்களில் புனைவையும் உண்மையையும் சுயதேடல் மூலம் வாசகனே பிரித்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். விரிவான வாசிப்பை வெளிமூலங்களில் தேடச் சொல்லும் கட்டாயத்தை உண்டாக்குவதே நல்ல புனைவு! உதாரணமாக, யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போன அட்லாண்டிக் தந்திக்கம்பி அறுந்துபோன இடத்தை எதேச்சையாகக் காண்பதும், தெரிந்த‌ விபத்துகளில் / போர்களில் கடலில் புதைந்து போன புதையல்களைக் காண்பதும் தற்குறிப்பேற்றணி. பல ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிப் போன கப்பல் ஒன்றை வட பசிபிக்கில் பார்ப்பார்கள்; Suderland என்ற அக்கப்பல் இல்பொருள் உவமையணி. உணர்கொம்புகள் மூலம் நீந்தும் நத்தை போன்ற ஓர் உயிரினத்தை இந்தியப் பெருங்கடலில் பார்ப்பார்கள்; அவ்வுயிரினம் உண்மை; ஆனால் அது உணர்கொம்புகள் மூலம் நீந்துவது பிறிதுமொழிதலணி. கப்பலையே இழுத்துக் கடலடியில் கொண்டு போகும் ஓர் உயிரினத்தை அட்லாண்டிக்கில் பார்ப்பார்கள்; நம்மூர்ப் புராணக் கதைகளின் தழுவலோ என்று நான் முதலில் நம்பவில்லை; ஆனால் அவ்வுயிரினம் இயற்பு நவிற்சியணி. அணி பிரிக்கப் பழகிவிட்டால், பல அடிகள் மூழ்கும் இக்கடற்புத்தகச் செய்யுள் திகட்டாது.

பொருளடக்கத்தில் உள்ள 47 அத்தியாயங்களின் தலைப்பிலேயே பயணத்தின் பாதையைக் கிட்டத்தட்ட கணிக்க முடியும். வட பசிபிக் - தென் பசிபிக் - டொரெஸ் நீரிணை (Torres strait) - மலேசியத் தீவுக் கூட்டங்கள் - வங்காள விரிகுடா - மன்னார் வளைகுடா - Mozambique channal - Bab el Madeb - செங்கடல் - Nea Kameni - மத்தியத் தரைக்கடல் - Pillars of Hercules - Gibraltar - Vigo bay - Sargasso - அன்டார்டிகா - தென் துருவம் - Cape Horn - Strait of Magellan - அமேசான் முகத்துவாரம் - போதும்! போகும் இடம் தெரிந்தால் முடிவை யூகிக்க மூளை யோசிக்கும். ஆங்கிலத்தில் சொன்ன இடங்களை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிராவிடில், நான் பரிந்துரைக்கிறேன்.

காஞ்சிப் பட்டு, திண்டுக்கல் பூட்டு, பத்தமடை பாய், மணப்பாறை அரிசி முறுக்கு, சென்னைக் கொசு மாதிரி கடலுக்குள்ளும் இடம்பொறுத்து பிரத்யேக விசய‌ங்கள் உண்டு. கடலடிக் காடுகள் (Submarine forests) - பவளப் பாறைகள் (Coral reefs) - நம்மூரில் முத்தும் சுறாவும் - Dugong - நிலக்கரிச் சுரங்கங்கள் - ஐஸ் - திமிங்கலம் - Poulps. புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்த திருப்தி.

நான் ரசித்தவை:
பாத்திரம் :
1) நான்கு பேருமே ஒவ்வொரு விதத்தில் மனதில் நின்றாலும், பிராண வாயு தீர்ந்து கொண்டிருக்கும் தருவாயில் மூச்சடக்கி பேராசிரியருக்கு ஆக்ஸிஜன் தரும் உதவியாள்.

2) இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக வங்காள விரிகுடா வாசலில், ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பாற்கடல் போல் வெள்ளை வெளேரென்று சில சமயங்களில் பரந்து கிடக்கும் Infusoria என்ற உயிரினம். வெள்ளிவீதியார்!

வரி :
1) கேப்டன் நெமோ சொன்னது: The sea is everything. Its breath is pure and healthy. It is an immense desert where man is never alone, for he feels life quivering around him on every side. The sea does not belong to despots. On its surface iniquitous rights can still be exercised, men can fight there, devour each other there, and transport all terrestrial horrors there. But at thirty feet below its level their power ceases, their influence dies out, their might disappears. Live in the bosom of the waters! There alone is independence! There I recognize no masters! There I am free!

2) ஐந்து மைல்களுக்குள் ஒரு மனிதனைப் பார்த்துவிடலாம் என்று இந்திய தேசத்தின் மக்களடர்த்தியை ஆச்சரியப்பட்டுக் கொண்டே வங்காள விரிகுடாவில் வரும் கேப்டன், பின்னங்கால் பிடரியில் அடிக்க‌ திரும்பிப் போன கதையைப் புத்தகம் இப்படி சொல்கிறது. ...at the entrance of the vast bay of Bengal, we frequently met with a horrible spectacle  - dead bodies floated on the surface of the water! These were the dead of the Indian villages, drifted by the Ganges to the open sea, and which the vultures, the only undertakers of the country, had not yet been able to devour. But the sharks did not fail to help them in their horrible task.

3) கல்லைக் காலில் கட்டிக் கொண்டு மன்னார் வளைகுடாவில் முத்துக் குளிக்கும் எலும்பும் தோலுமான நம்மவர் ஒருவனைப் பார்த்துவிட்டு, 60000 பவுண்ட் மதிப்புள்ள முத்தைப் பானமாகக் குடித்த கிளியோபட்ரா பேச்சில் வர, இப்படியொரு வசனம்: ...to the poet the pearl is a tear of the ocean; to the Orientals it is a drop of solidified dew; to the ladies it is a jewel of an oblong form,...; to the chemist it is a mixture of phosphate and carbonate of lime, with a little gelatine; and lastly to naturalists it is simply an unhealthy secretion of the organ which produces mother-of-pearl in certain bivalves.

பகுதி :
1) முத்துக் குளிக்கும் முறையை விளக்கி, உலகத்தில் முத்து வணிகம் பற்றிச் சொல்லி, மன்னார் வளைகுடாவில் முத்துக் குளிக்கும் ஒருவனைச் சுறாவிடம் இருந்து காப்பாற்றும் நிகழ்ச்சி.

2) சம இரவு நாளான மார்ச் 21க்குப் பிறகு அடுத்த 6 மாதங்கள் தென் துருவம் முழுதும் இரவாக இருக்கும். 21-03-1868 அன்றைய சூரியன் மறைவதற்குள் பேராசிரியரும் கேப்டனும் தென் துருவத்தில் செய்யும் செயல்கள். வந்த தூக்கம் ஓடியே போச்சு!!

3) ஒரு வைரஸைத் தூக்கிக் கொண்டு 10 கதாப்பாத்திரங்க‌ளைச் சந்தித்து, ஆழிப்பேரலை என்ற ஓர் இயற்கை நிகழ்வை வைத்து கதையை முடித்த‌ கமலஹாசனின் தசாவதாரத் திரைக்கதை போல், இப்புதினத்தின் கதையையும் முடித்து வைக்க சும்மா சுற்றிச் சுற்றி வரும், நான் கேள்விப்பட்டிராத‌, இயற்கையின் இன்னோர் அற்புதம்!

புத்தகத்தில் உள்ள‌ கடல் ப‌ற்றி சில விசயங்கள் நீங்களே படித்துக் கொள்ள:
1. அமெரிக்காவையும் ஆப்பிரிக்காவையும் இணைத்து வைத்திருந்து, ஓர் இரவு ஒரு பகலில் அழிந்து போன அட்லாண்டிஸ் (Atlantis) என்ற நிலப்பரப்பை, தமிழகத்தை ஆஸ்திரேலியாவுடன் இணைத்திருந்த குமரிக்கண்டம் (Lemuria) இழந்த என் இனம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.
2. முந்தைய புத்தகத்தில் பெஞ்சமின் பிராங்ளின் கண்டுபிடித்ததாகச் சொன்னேனே; Gulf Stream பற்றி படித்துப் பாருங்கள். தலையே சுற்றும்.

புத்தகத்தில் விவாதிக்கப்பட்ட கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
1. கடல் உப்பை எல்லாம் 4.5 மில்லியன் சதுர மைல்கள் பரப்பில் 30 அடி ஆழத்திற்குப் பூமி முழுவதும் தூவலாம்! கடலில் யார் அவ்வளவு உப்பைக் கொட்டியது என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். உப்பிருப்பதால் என்ன பயன்? கன்னியாகுமரி கட்டணக் கழிவறையில் சிறுநீர் கழிக்க 5 ரூபாய் வீணாக்கத் தேவையில்லை / உப்புப் போட்டு சாப்பிடலாம் / காதலில் தோற்ற ஆண்களின் கண்ணீர்‌ போன்ற‌ காரசார பதில்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டா!
2. Freezing can never take place except on the surface - ஏன்?
3. (ஒரு) சிப்பிக்குள் முத்துக்'கள்' என்பது பொருட்பிழையா?

நிதானமாகத் தேடுவதற்காக எனக்கு சில‌ வீட்டுப் பாடங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
1. உண்மையிலேயே மத்தியத் தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் சூயஸ் கால்வாய் அல்லாத ஒரு கள்ளத் தொடர்பு இருக்கிறதா?
2. அன்டார்டிகாவில் நிலமுண்டா?
3. செங்கடலில் சிவப்பு நீருடைய சில பகுதிகளும் உண்டா?

பேராசிரியரும் கேப்டனும் அதிபுத்திசாலிகளாக இருப்பதால், அவர்க‌ள் பேசிக் கொள்வதைப் புரிந்து கொள்ள, வெட்டி ஒட்ட‌, அறிவியலின் அடிப்படை அறிவும் பூகோளம் பற்றிய புரிதல்களும் புத்தகத்தைப் புரிந்துகொள்ள அவசியம். உதாரணமாக, பேராசிரியர் போடும் சில‌ கணக்குகள்: 1) கடல் நீர் தரும் அழுத்தம், ஆழத்தைப் பொருத்து கடல் நீரின் வெப்பநிலை, இப்படி பல விசயங்களை வைத்து அந்த மர்மப் பிரம்மாண்டத்தின் தோல் மட்டும் 8 அங்குல இரும்புத் தகடிற்குச் சமமென யூகிப்பார். 2) தங்களைப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக எத்தனை பேர் இருக்கலாம் என்பதைக் கலத்தின் கொள்ளளவையும் பிராண வாயு நிரப்பப்படும் இடைவெளியையும் வைத்துக் கணக்கிடுவார். 3) அட்ச - தீர்க்க ரேகைகளும் கதை சொல்ல உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. 4) பனிப்பாறைகளின் உயர ஆழங்களையும், நகரும் புவியீர்ப்பு மையங்களையும் (COG - Centre of gravity) கணக்குப் போட்டு ஒரு பனிமலையையே பிளப்பார்கள்.

உட‌ன் இருக்கும் இரண்டு பேருக்கும் அடிக்கடி பேராசிரியர் சொல்லும் அறிவுரைதான் இப்புத்தகம் படிக்க நினைப்பவர்களுக்கு நான் கொடுக்கும் அடுத்த அறிவுரை: 'பொறுமை இல்லாதவனுக்குக் கடலுடன் தொடர்பில்லை'. அந்தப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்; யாதும் ஊரேன்னு சொல்லும் கடல் இனிக்கும்!

அனுபந்தம்:
1. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் தன் வீட்டில் இருந்து துளை போட்டுக் கொண்டே பூமியின் மறுபக்கம் செல்ல வேண்டுமென ஆசைப்படுவார். இங்கிலாந்தில் இருந்து பூமியின் மையக்கரு வழியாக துளை போட்டுக் கொண்டே அடுத்த பக்கம் வந்தால் நியூசிலாந்து அடையலாம். இப்படி நேரெதிரே இருக்கும் இரண்டு இடங்களும் பண்புகளிலும் நேரெதிராக இருக்கும். ஒன்றில் இன்று கோடைகாலம் ஆரம்பித்தால், இன்னொன்றில் நேற்று கோடைகாலம் முடிந்திருக்கும். ஒன்றில் நள்ளிரவு என்றால், இன்னொன்றில் நண்பகல். ஒரே கடிகாரத்தில் ஒன்றில் am என்றால், இன்னொன்றில் pm. இவற்றிற்கு ஆங்கிலத்தில் Antipode என்று பெயர். வித்தியாசமாய் இருப்பதால் நினைவில் வைத்திருந்த இவ்வார்த்தையை இப்புத்தகம் வாக்கியத்தில் பயன்படுத்தி இருக்கிறது. நீங்களும் உங்களுக்குப் பிடித்த இடங்களைத் துளை போடுங்கள். ஜாலியாக இருக்கும்!

2. Said என்றால் என்ன? Say என்பதன் இறந்தகாலம் என முதலில் சொல்லுங்கள். ஓர் எகிப்திய துறைமுகம் என்று அடுத்ததாகச் சொல்லுங்கள். ஏனென்றால் இப்பதிவை நீங்கள் படித்திருக்கிறீர்கள்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)