பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------------------
புத்தகம் : Japanese Orchid
ஆசிரியர் : Rei Kimura
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Mehta Publishing House
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 249 ரூபாய்
பக்கங்கள் : 244 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------
உலகிலுள்ள மிகச்சிறிய தண்டனைகளிலெல்லாம் மிகச்சிறிய தண்டனை, மிகச்சிறிய
கதையுடைய மர்மப் புதினத்தின் கதை சொல்லாமல் அதைப்பற்றிச் சொல்வது.
டெட்சுயோ அகினிசோ. 2000 தொழிலாளர்கள் கொண்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின்
அதிபர். பிறப்பால் ஜப்பானியரான அமெரிக்க வியாபாரக் காந்தம் (business
magnate). DNA துறையில் கொடிகட்டிப் பறக்கும் இவரின் நிறுவனம் செய்யும்
அனைத்து சோதனைகளுக்கும் தனது தாயின் பெயரிடும் அளவிற்குத் தாய்ப்பாசம்.
ஒருநாள் அவருக்கு வரும் மின்னஞ்சல்தான் கதையின் ஆரம்பம். அவரின் குடும்ப
ரகசியங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி அவரின் நற்பெயரைக்
கெடுக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறது யாரோ அனுப்பிய அம்மின்னஞ்சல்.
தனது வழக்கறிஞர், ஒரு தனியார் துப்பறியும் நிபுணர், அந்நிபுணரின்
ஜப்பானிய உதவிப்பெண். இம்மூன்று பேரின் உதவியுடன், மிரட்டல்காரனைக்
கண்டுபிடிக்க முயலுவதும், மிரட்டல்காரனின் அடுத்தடுத்த மின்னஞ்சல்களும்,
துரத்திவரும் பழங்கதையை வெல்வதற்காக ஓடுவதும்தான் கதையோட்டம். இதுவே
பின்னட்டைக் கதைச்சுருக்கம்.
60 வயதில் புகழின் உச்சியில் இருக்கும் காலத்தில் மிரட்டல்காரனைப் பற்றித்
தனது குடும்பத்திற்குக்கூட சொல்லாமல் மறைத்துத் தத்தளிக்கும் அகினிசோ.
தனது தொழில்நிமித்தம் சில ஆண்களின் நிர்வாணப் படங்களைத் தனது
மடிக்கணினியில் வைத்திருந்து, அதனால் மனைவி என்ற உறவை இழக்கும்
துப்பறியும் தொழில் நிபுணர். ஒவ்வொருவரிலும் சில நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக்
கொள்ளும் அளவிற்குப் புத்தகம் அவர்களின் சொந்த வாழ்க்கையின் சில
பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது.
புத்தகத்தின் மிகப்பெரிய பலம் அதன் மையக்கதை. எனக்கிருக்கும் ஆங்கில
novelophobiaவையும் மீறி, எல்லா வரிகளையும் படிக்கச் செய்ததும் அதே
மையக்கதைதான். புத்தகத்தின் கடைசி 100 பக்கங்களை ஒரே மூச்சில் படித்து
முடித்தேன். இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூரில் நடக்கிறது
புத்தகத்தின் கரு. அக்காலகட்டத்தில் வாழ்ந்த இன்றைய சிங்கப்பூர் மக்கள்
மறக்க நினைக்கும் காலம். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பும் அதன் வடுக்களும்
சிங்கப்பூரின் பழைய மனிதர்களின் நினைவுகளில் ஜப்பானியர்களின்மேல் ஒரு
பயத்தை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அதே காலத்தில்
சிங்கப்பூரில் இருந்த ஒரு ஜப்பானியப் பெண்ணை, அறுபது வருடங்கள் கழித்து
ஒரு நியூயார்க் மனிதனுடன் தொடர்புபடுத்துவதே கதையின் சாரம்.
சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் நான் மிகவும் ரசித்த தலைப்பும்,
பெயர்க்காரணமும் இப்புத்தகம்தான். Japanese Orchid. கேட்பதற்கு
இனிமையாகவும் மலர்களை ஞாபகப்படுத்துவதாகவும் இருக்கும் இச்சொற்கள்,
புத்தகம் படிக்கும்போது மனித சமூகத்தில் பெண்மீதான போர்க்காலக் கொடுமைகளைப்
பதிவுசெய்கின்றன. தன்னைப் பலசாலியாகக் காட்டிக்கொள்ள எப்போதும் பெண்கள்
குழாம்சூழ வலம்வரும் ஆண்மையற்ற ராணுவ மேலதிகாரி; வன்பாலியல்
பலாத்காரத்தால், உள்ளுறுப்புகள் சிதைந்து இறந்து போன பெண்ணைச் சுற்றி
எக்காளமிடும் சில அதிகாரிகள். இதுபோன்ற சில கடினமான விசயங்களும் உண்டு.
நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர். மூன்றே இடங்கள்தான். ஒரு ஹோட்டல்,
ஜப்பானியர்களுக்கான கல்லறை, ஆசியாவின் பணக்கார நாட்டின்
ஒதுக்குப்புறத்தில் இருக்கும் வசதி குறைந்தவர்களின் குடியிருப்பு ஒன்று
என்று சிங்கப்பூரையே சலிக்காமல் சுற்றிக்காட்டும் கதை. விரல்விட்டு
எண்ணிவிடக்கூடிய கதைமாந்தர்கள்தான். சுஜாதா அவர்கள் சொன்னதுபோல் இந்த
நல்ல கதையும், முடிவதற்குச் சற்று முன்தான் ஆரம்பிக்கிறது.
Japanese Orchid - போர்க்காலங்களில் மறைக்கப்பட்ட பெண்களுக்கான ஒரு
பெண்குரல். இத்துடன் எனக்கான சிறுதண்டனையையும் நானே முடித்துக்
கொள்கிறேன்.
அனுபந்தம்:
1. உலகிலேயே புற்களுக்கு அடுத்தபடியாக அதிக சிற்றினங்களைக் (species)
கொண்டது ஆர்கிடுகள்தான். இதை எனக்கு சொன்ன புத்தகத்தை இம்மாத இறுதிக்குள் உங்களுக்கும் சொல்கிறேன்.
- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)