Monday, November 21, 2011

79. INDIGO

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------------
புத்தகம் : Indigo
வங்காள மூலம் : சத்யசித் ரே (Satyajit Ray)
ஆங்கில மொழியாக்கம்: சத்யசித் ரே, கோபா மஜூம்தர் (Gopa Majumdar)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 2001
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 264 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

---------------------------------------------------------

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'ப‌தேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்' புத்தகத்தில் எனது பெயரை வங்காள மொழியில் எழுதித்தந்த நண்பன் சொல்லித்தான் தெரியும், சத்யசித் ரே ஒரு நல்ல‌ எழுத்தாளர் என்று. ஆச்சரியப்பட்ட விசயம் என்னவென்றால், பெரும்பாலான வங்காள மக்களின் மத்தியில் திரைத்துறையைவிட எழுத்துத்துறையில்தான் பிரபலமாக அறியப்படுகிறார். தனது தாய் சத்யசித் ரே கதைகளின் பரம ரசிகை என்றும் தான் ஒருகதை கூட படித்ததில்லை என்றும் தாய் சொல்ல சில கதைகள் கேட்டிருப்பதாகவும் வங்காளத் தோழி ஒருத்தி சொன்னாள். இரு தேசங்களின் நாட்டுப்பண் எழுதப்பட்ட பெருமைக்குரிய தனது தாய்மொழியில் எழுத்தறிவு இல்லாத அத்தோழியைப் பார்த்து வருத்தப்படுவது தவிர வேறென்ன முடியும்?

Feluda, Professor Shonku என்ற புத்தகங்களைச் சிலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். அவையிரண்டும் துப்பறியும் கதைகள் என்பதாலும் அளவில் பெரியவை என்பதாலும், நான் தேர்ந்தெடுத்த புத்தகம் இன்டிகோ (Indigo). வங்காள மொழியில் சத்யசித் ரே எழுதிய கதைகளில் வாசகர்கள் மத்தியில் சிறந்ததாகக் கருதப்படும் 21 கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பதே இப்புத்தகம்.



சத்யசித் ரேயின் முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali - சாலையின் பாடல்) வெளியான ஆண்டு 1955; கடைசி திரைப்படம் அஹன்டுக் (Agantuk - அந்நியன்) வெளியான ஆண்டு 1991. வறுமையின் பிடி தாங்க முடியாமல் புலம்பெயரும் ஓர் ஏழைக்குடும்பத்தின் கதைதான் முதல் திரைப்படம்; கிட்டத்தட்ட வசனங்களே இல்லாத படம். பல வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு ஓடிப்போன மாமா என்று சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழையும் ஓர் ஆசாமியை ஒரு நடுத்தரக் குடும்பம் சந்தேகிப்பதுதான் கடைசி திரைப்படம்; தான் பார்த்த வித்தியாசமான பூமியின் அனுபவங்களாக அந்த ஆசாமி பேசிக்கொண்டே இருக்கும் படம். இவ்விரு படங்கள் மட்டும் நான் பார்த்திருக்கிறேன். இன்டிகோ புத்தகம் இரண்டாம் வகை.

21 கதைகளின் களமும் மிகவும் எளிமையானவை. சொற்பக் கதாபத்திரங்கள். வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டே வரும் எளிய நகைச்சுவை. எங்கும் பரவிக்கிடக்கும் புத்திசாலித்தனம். ஆபாசம் என்பதே கிடையாது. பாதிக்கதைகள் காட்டுக்குள்தான் நடக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம், நமக்கெல்லாம் தகவலாகத் தெரிந்த விசயங்களை சில நேரங்களில் கதாப்பாத்திரமாகவே ஆக்கியிருப்பது; நம்ம சுஜாதா சார் மாதிரி.

மாமிசமுண்ணும் தாவரத்தை வீட்டில் வளர்க்கும் ஒருவன், சிரிக்கும் நாய், எல்லோரும் மற‌ந்துபோன ஓர் ஆங்கிலேயனின் நூறாவது நினைவுதினத்தில் அவன் ஆவியைப் பார்க்கும் ஒருவன், காட்டில் கிடைத்த‌ அசைவப் பறவையொன்றின் முட்டையை வீட்டுற்குக் கொண்டுவந்து அடைகாத்து குஞ்சுபொறித்து அதுசெய்யும் ராட்சச தொல்லைகள், பாம்பாகும் மனிதன். இப்படி பல வித்தியாசமான கதைக்களங்கள். முழுக்கற்பனைக் கதைகள், எல்லைதாண்டாமல் இருப்பது அருமை.

மேசை எறும்பு முதல் பறக்கும் தட்டு வரை பெரிய பெரிய விசயங்கள் 20 கதைகளில் பேசும் ஆசிரியர், கடைசி ஒரு கதையில் தன்னை நன்கு வித்தியாசப்படுத்திக் காட்டி ஆச்சரியப்படுத்திவிட்டார். பிக்கோவின் நாட்குறிப்பு (Pikoo's diary) என்ற அச்சிறுகதை ஒரு சிறுகுழந்தையின் நாட்குறிப்புகள் மட்டுமே. 'வெள்ளை மலரைக் கருப்பு மையில் வரையலாமா?' என்று கேட்கும் அப்பாவித்தனமான மழலைநடை. இக்கதையின் சிறப்பு என்னவென்றால் இதை அப்படியே மொழிப்பெயர்க்க முடியாது. மொத்தத் தொகுப்பில் இந்த ஒரு கதைமட்டும்தான் கொஞ்சம் A சர்டிபிகேட் என்று இணையத்தில் படித்தேன். நான் ரசித்த விமர்சனம் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். இக்கதை குறும்படமாக எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பு பெற்றதாம்.

எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட ஒரு கதை இப்புத்தகத்தில் உண்டு. 'ரட்டன் பாபுவும் அந்த மனிதனும்' என்ற அக்கதையைப் பின்புலமாக வைத்து நானும் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். தெரிந்திராதவர்களுக்கு இப்பதிவு ஒரு நல்ல கதைசொல்லியை அறிமுகப்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையில்...


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, November 17, 2011

78. பண்பாட்டு அசைவுகள்

-----------------------------------------------
புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
ஆசிரிய‌ர் : தொ.பரமசிவன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2001
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 197

-----------------------------------------------

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாகத்தை மட்டுமே தணிக்கும் அளவுக்கான தண்ணீர் உங்களிடம் இருக்கிறது. இரவு நேர வெக்கை தாகத்தை அதிகப் படுத்திக் கொண்டே போகிறது. அருகிலிருக்கும் அறிமுகமற்ற வயோதிகர் நீங்கள் வைத்திருக்கும் தண்ணீரை அருந்தக் கேட்கிறார். கொடுக்கவும் தோன்றாமல் மறுக்கவும் முடியாமல் நீங்கள தவிக்கிறீர்கள். வேண்டா வெறுப்பாகவே பின் கொடுத்த நீரைப் பருகும் அந்நபரை ஜென்ம விரோதியாக சில நொடிகள் பாவிக்கிறீர்கள். உங்கள் மீதும் பிழையில்லை. அந்நீருக்காக நீங்கள் செலவு செய்த பதினேழு ரூபாய் உங்களை அப்படி எண்ணச்செய்யலாம். அதைவிட அதிகமாக எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படவும் கூடும். உணவு வேளையில் பேருந்து நிற்கும் சில நிமிடங்களில் அதே வயோதிகர் ஒரு தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கி வந்து உங்கள் கையில் திணிக்கும் பொழுது வருந்தமாட்டீர்களா என்ன? அதையும் மீறி ஒரு அவமான உணர்வும் உங்கள் மனத்தில் எழக்கூடும். இது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் அச்சூழ்நிலையில் ஏற்படக்கூடிய, ஏற்படவேண்டிய ஓர் உணர்வுதான். 'சோறும் நீரும் விற்பனைக்குரியதல்ல' என்ற பண்பாடு கொண்டிருந்த ஒரு சமூகத்தின் தொடர்ச்சி தான் நாமெல்லாம். நீரை விற்றும் வாங்கியும் பிழைக்க வேண்டி வந்த நிலைக்கு வருந்தாமல் இருப்பதெப்படி?

அன்னச்சத்திரம் என்ற பெயரில் வறியவருக்கும், வழிசெல்வோருக்கும் உணவு கொடுப்பதைப் பழங்காலத்தில் அரசுகள் ஒரு அடிப்படை சேவையாகச் செய்து வந்திருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உணவை விற்கும் பழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவை விற்பது பாவமென்றிருந்த அதே சமூகத்தின் எச்சமாக இன்றிருக்கும் நமக்கு உணவை விற்பதொன்றும் அத்தனை பெரிய இழிசெயலாகத் தெரிவதில்லை. அதுவும் ஒரு வியாபாரம் என்று ஏற்றுக்கொண்டதோடு வாங்கும் பணத்துக்கு தரமான உணவைத் தரும் உணவகங்களைப் பாராட்டவும் பழகிவிட்டோம். அடிப்படையில் அது அவர்களின் கடமை என்பதை அவர்கள் உணரவில்லை; நாமும்தான்.

இப்படியே பேரெண்னிக்கையிலான நம் மூதாதையரின் பண்பாட்டுக் கூறுகளை விட்டு வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். அதிலும் குறிப்பாகக் கடந்த ஐம்பதாண்டுகளில் நம் வாழ்முறையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் நாம் கடந்து வந்த தொலைவைக் கண் கூடாக்குகின்றன. 'அரிசி எங்கிருந்து வருகிறது?' என்கிற கேள்விக்கு, 'கடையிலிருந்து' என்று பதிலளிக்கிற அடுத்த தலைமுறைக்கு நம்மிடம் மீதமிருக்கும் சிற்சில பண்பாட்டு எச்சங்களைக் கடத்துவதும் எளிதன்று.

பல தலைமுறைகளில் செவி வழியாகவும், அனுபவ வழியாகவும் பயின்று வந்த பழக்க வழக்கங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்துக்குள்ளாகி இருக்கின்றன. இல்லையெனில் இன்னும் சில வருடங்களில் நாம் கடந்து போகப்போகிற தூரம், கடந்து வந்த பாதையின் சுவடுகளை வாழ்வின் வேகத்திலேயே மறக்கச் செய்து விடும் அபாயம் நிச்சயம். தொ.பரமசிவனின் இந்நூல் நான் மேற்சொன்ன ஒரு சிறந்த ஆவணம்.

ஒரு பழங்கதையுண்டு. ஒரு காலத்தில் ஒரு குரு இருந்தாராம். தன் சீடர்களுடன் ஊர் ஊராகப் போய் பூசைகள், சடங்குகள், செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் அவர். அப்படி ஓரூரில் தங்கியிருந்து பூசைகள் செய்த போது பூனையொன்று வந்து பூசையினிடையே இடைஞ்சல் செய்தபடியே இருந்தது. பொறுத்துப் பார்த்த குரு, பூனையின் அட்டகாசம் தாங்காமல், அதைப் பிடித்துக் கட்டிவைக்கச் சொன்னார். பூனையின் அட்டகாசமும் ஓய்ந்தது; பூசையும் தொடர்ந்தது. அவ்வூரிலிருந்த பிற வீடுகளிலும் பூசையின்போது பூனையின் தொந்தரவு தொடரவே, பூனையைக் கட்டிவைத்த பின்னரே பூசை செய்யவேண்டிய நிலையாகிப்போனது. ஒரு நாள் குரு இறந்து போனார். குருவின் பணியைத் தொடர்ந்து செய்ய வந்த சீடர்கள் பூசைக்கு முன் முதல் வேலையாக பூனையைக் கட்டி வைப்பதைக் கொண்டனர். பூனையே இல்லாவிட்டாலும், அதைத் தேடிப்பிடித்துக் கட்டிவைக்கவும் செய்தனர். அடுத்தடுத்த தலைமுறையில் பூனையைக் கட்டிவைப்பது முக்கியமான சடங்கானது என முடிகிறது அக்கதை.

நாமும் எத்தனையோ பூனைகளைப் பிடித்து இன்னும் கட்டிவைத்துக் கொண்டுதானிருக்கிறோம். ஏன் கட்டி வைக்கிறோம் என்பதற்கான சில காரணங்களைப் பேசுகிறது இந்நூல். மூட நம்பிக்கைகளை விட்டு விலகிய நாம், அவற்றோடு சேர்த்து பல நல்ல வழக்கங்களையும் தொலைக்க நேர்ந்தது துரதிர்ஷ்டமே! பொருளற்ற வெறும் சடங்குகளாக அவை மாறிய நிலையே அதற்கான பெருங்காரணமும் கூட. அது போலான சடங்குகளைப் பற்றியும் இந்நூல் ஆராய்கிறது.



வழக்கிலிருக்கும் பல சொல்லாடல்கள், மற்றும் பழமொழிகளின் மூலங்களை சில இடங்களில் ஆதாரத்துடனும், சில இடங்களில் அனுமானத்துடனும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இவற்றின் மீதான நம் புரிதல்களைத் தகர்த்தெறியும் வேறொரு பரிமாணத்தை அறியச்செய்து திகைக்க வைக்கிறார். இந்நூலைப் பற்றி என் நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் தவறாமல் பகிர்ந்து கொண்ட செய்தி குளித்தல் பற்றியது. வெப்பப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டில், உடல் மேல் நீரூற்றிக் குளிர்விக்கும் பழக்கம் ஆதி முதலே இருந்திருக்கிறது. இக்குளிர்த்தலே இப்பொழுது நாம் செய்யும் குளித்தலாகிப் போனது எனும் ஆசிரியரின் கூற்றை மறுப்பதற்கில்லை.

பதினைந்தாம் நூற்றாண்டில் சிலி நாட்டில் இருந்து இறக்குமதியான மிளகாய் தமிழரின் உணவுக்கு காரம் கொடுத்துக் கொண்டிருந்த மிளகை இடம் பெயர்த்தது. உப்பு என்ற சொல்லுக்கு 'சுவை' என்பதே முதற்பொருள். இசுலாமிய சமூகத்தில் தந்தையைக் குறிக்கும் 'அத்தா' எனும் சொல்லுக்கு மூலம் 'அத்தன்' என்கிற தமிழ்ச்சொல். பிறப்பு, இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே இந்துத் திருவிழா 'தைப்பூசம்'. போதிமரம் என்பது அரசமரத்தைக் குறிக்கும். என்பன போன்ற செய்திகள் எனக்கு மிகவும் புதியனவாகவிருந்தன.

இந்நூலின் பெயரிலேயே உள்ள ஒரு கட்டுரையில், கிராமமொன்றில் தனக்கேற்பட்ட அனுபவத்தை ஆசிரியர் பகிர்ந்துகொள்கிறார். ஓர் ஆண் இறந்த வீட்டில் குவிந்திருக்கும் மனிதர்களிடையே, வீட்டுனுள்ளிருந்து அமைதியாக வெளிவரும் கிழவியொருத்தி, நீர் நிறைந்த செம்பினுள் மூன்று முல்லைப் பூக்களைப் போடுகிறார். புரியாமல் இருந்த ஆசிரியருக்கு, 'இறந்து போனவரின் மனைவி மூன்று மாதங்கள் கருவுற்றிருப்பதாகவும், அக்கருவுக்குக் காரணகர்த்தா இறந்தவர்தான் என்பதை ஊரறியச் செய்வதற்காக இச்சடங்கு என்பதாகவும்' தெரிவிக்கிறார்கள். ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன ஆசிரியரின் வார்த்தைகள் அவர் மொழியிலேயே... 'ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது!'.

பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் உணவு, உடை, கலை, வாழ்முறை, மொழி, நம்பிக்கை, வாழிடம், விழா, விளையாட்டு, இலக்கியம், சடங்கு எனும் பல கூறுகளின் தொகுப்பு என்ற அடிப்படையில், தமிழரின் வாழ்வில் இவை அனைத்தும் இருந்த நிலை மற்றும் சமகால நடைமுறைகளை இந்நூல் முன்வைக்கிறது. நிறைய தகவல்களின் தொகுப்பாக இருப்பதால் வாசிப்பவரைக் கொஞ்சம் ஆயாசப்படுத்தலாம். ஆயினும், நல்ல தகவல்களைத் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு அது பெரிய தடையில்லை.

பின்குறிப்பு :


1. இந்நூல், ஆசிரியரின் 'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' எனும் இரு நூல்களின் தொகுப்பு. (இந்த உண்மை தெரியாமலேயே 'அறியப்படாத தமிழகம்' நூலையும், இந்நூலையும் ஒரே நாளில் வாங்கி வைத்த புத்திசாலி நான். அதை விட பெரிய வருத்தம் என்னவென்றால் ஒரே பதிப்பகத்திலிருந்து வெளிவந்த இவ்விரு புத்தகங்களின் விலையும் கூட ஒன்று என்பதே!)

2. இப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் இருக்கும் ஓவியம்தான் என்னை இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியது.

3. என் இன்னொரு வலைப்பூவான 'கருப்பு வெள்ளையை' 'கறுப்பு வெள்ளை'யாக மாற்றியது இந்நூல்தான்.

-பா.சேரலாதன்
(http://seralathan.blogspot.com/)

Wednesday, November 02, 2011

77. ஏழாம் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இம்மைக்குச் செய்வது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வாணிகன் ஆய் அல்லன்
- மோசிகீரனார்


No tips taken here; just because a man has to make his living waiting on table is no reason to insult him by offering him a tip.
- ஓர் உணவக வாயில் செய்திப்பலகை (Ten days that shook the world - John Reed)

-------------------------------------------------------------
புத்தகம் : ஏழாம் உலகம் (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜெயமோகன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : ஏப்ரல் 2010
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 274 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------------

'இப்பத்தான் ஏழாம் உலகமே படிக்கிறியா?' என்று உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. எங்கள் தலைமுறைக்கு இலக்கியம் என்று படிப்பிக்கப்படுபவை அப்படி. நான் கடவுள் என்று பாலா சார் படம் எடுத்திராவிட்டால் இப்படியொரு புதினம் எனக்கு அறிமுகமாகியிருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் புதினத்தைத் தழுவித்தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது பலருக்குப் பரிச்சயம் என்றாலும் புத்தகத்தைப் பற்றி முதலில் பேசிவிட்டு பிறகு திரைப்படத்திற்கும் போவோம்.



பிச்சைக்காரர்களை வாங்கும் - விற்கும் - உற்பத்தியாக்கும் தொழில் நடத்தும் ஒருவனின் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் நடக்கும் சம்பவங்களே இப்புதினம். மலையாளம் கலந்த தமிழ்பேசும் கதைமாந்தர்கள். நமது கருணை - இரக்க குணங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவும், சுகமான மறுபிறப்பிற்குச் சேர்த்துவைக்கும் புண்ணியமாகவும், சபிக்கப்பட்ட பிறப்புகளாகவும் மட்டுமே நமக்குத் தெரியும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை மிக அருகில்போய் புதினப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். பிறவியிலேயே ஊனமாகவும் விகாரமாகவும் பிறந்தவர்கள் அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்தான் கதையின் முக்கிய மாந்தர்கள். அவர்களை வைத்துக் காசுபண்ணும் முதலாளியைச் சுற்றித்தான் மொத்த புதினமும் பின்னப்பட்டிருக்கிறது. முதலாளியின் குடும்பமும் பிச்சைக்காரர்களை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் சிலரும்கூட கதைமாந்தர்கள்.

தொழிலாளி என்று நம்பவைத்து ஓர் அடிமையைக் கட்டுப்படுத்தலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால் பிச்சைக்காரர்களுக்கு அவர்களின் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர்கூட‌ உருப்படி. உருப்படிகளைத் தன் விருப்பப்படி வாங்கி விற்று ஊனப்படுத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளையும் தரகர்களையும் அறிமுகப்படுத்தி மனத்தைக் கனப்படுத்துகிறது புத்தகம். திக்கற்ற உருப்படிகள் தங்கள் இயலாமையைத் தங்களுக்குள் நக்கலாகப் பேசிக்கொள்ளும் உரையாடல்களில் மறைத்துக் கொள்வதும், உருப்படிகள் தங்களுக்குள் ஒருகுடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்வதும், சிலர் விற்கப்படும்போது மற்றவர்கள் கலங்குவதும், இலைச்சோறு சாப்பிட முதலாளியின் வீட்டு விசேசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உருப்படிகளும், முதலாளி தன் தொழிலைக் கடவுளிடம் நியாயப்படுத்துவதும், தன் தொழில் மறைத்து வாழும் முதலாளியின் சொந்தக் குடும்ப வாழ்க்கையும் நாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திராத எதார்த்தங்கள்.

ஆட்சியாளர்களை உருப்படிகள் நேரடியாகவே கெட்டவார்த்தைகளில் திட்டுவதும், ஹாலிவுட் அர்னால்ட் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல நல்ல உதாரணங்கள் உருப்படிகளின் உரையாடல்களில் இயல்பாக‌ வருவதும், கம்யூனிசம் முதல் சாதிச்சங்கங்கள்வரை உருப்படிகள் பேசும் அரசியலும், கருவறைக்குள்ளேயே மூத்திரம்போகும் பூசாரிகள் அதை நியாயப்படுத்துவதும் போன்று பல இடங்களில் தனது உரையாடல் நடையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர். அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரின் பெயர் போடப்படும்போது வரும் அதே நக்கல்.

கதை நடக்கும் காலம் எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படாமல், மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை. பாதிப்புத்தகம் தாண்டிய பிறகுதான் என்னால் காலம் கண்டுபிடிக்க முடிந்தது. ஒன்பது வருடங்களாக கோயில் வாசலில் பிச்சையெடுத்துவரும் ஒருத்தியை, அக்கோயில் பூசாரி வெற்றுடம்பாக பார்க்க கோரிக்கை விடுப்பதற்குச் சற்றுமுன் தனது புத்தகத்தின் பெயர்க்காரணத்தைப் பூசாரி மூலமே சொல்லியிருப்பது ஜெயமோகன் அவர்களுக்கு நானே சொல்லிக்கொண்ட பல 'சூப்பர்'களில் ஒன்று. போத்திவேலுப் பண்டாரமும், பெற்ற பிள்ளைகளின் கணக்கு தெரியாத முத்தம்மையும், கைகால்கள் இல்லாத மாங்காண்டி சாமியும், அகமதுகுட்டியும் மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள்.

சில நச் வசனங்கள் உங்களின் ரசிப்பிற்கும்:

"அவனுக்கு அண்ணன், பெண்ணு கெட்டல்ல இல்லியா? ஒரு ஆறுமாசம் அவன் சோலி பாக்கட்டுன்னு இங்க வந்திருப்பான். இங்க பிடிச்சு சாமியாக்கிபிட்டானுக..."

"ஓட்டு உள்ளவன் செத்தாத்தான் அது கொலக் கேசு. மத்ததெல்லாம் முனிசிப்பாலிட்டி கேசு. அதுதான் இந்தியன் பீனல்கோடு சட்டம்"

"மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?"

புத்தகத்தின் கடைசி மூன்று பக்கங்களுக்கு இருக்கும் வட்டார வழக்கு அகரமுதலி இல்லாவிட்டால், எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. வெப்ராளம் எரப்பாளி கச்சவடம் என்று பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து புத்தியில் ஏறிவிட்டன. தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களின் ஒருபுதினம் உட்பட பல புத்தகங்களுக்கு இந்த அகரமுதலி பயனுள்ளதாக உள்ளது.

பாலாவின் திரைப்படம் புதினத்தைவிட வீரியம் குறைவென்று பெரும்பாலான இணையப்பதிவுகள் சொல்வதால் அதை நான் மறுப்பதற்கான காரணங்கள்:
1. பாலாவின் படத்தின் பெயர் 'நான் கடவுள்'. ஓர் அகோரிதான் கதைநாயகன். ஏழாம் உலகப் பாத்திரங்கள் பாலாவின் க‌தைக்க‌ள‌ம் ம‌ட்டுமே.
2. இந்த வீரியத்திற்கே பலபேர் இப்படத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
3. காகிதமும் திரையும் வெவ்வேறு தளங்கள். அகமதுகுட்டி மீனாட்சியம்மை போன்ற பாத்திரங்கள் திரையில் காட்ட அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!
4. முத்தம்மை முடிவில்லாமல் ஏழாம் உலகம் முழுமையடைவதில்லை என்பது படித்தவர்களுக்குத் தெரியும். அக்காட்சியை நம்மூர் திரையில் வைக்கமுடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சமகாலத்தையும் ஒதுக்கப்படும் சக மனிதனையும் ஆவணப்படுத்துவதுதான் புதினங்களின் மிகப்பெரிய பணி என்று நம்புபவன் நான். 'நுனியளவு செல்' என்ற மகாகவியின் வார்த்தைகளை இப்புத்தகத்தில் செயலாகப் பார்த்தேன். அரசியல் ஆன்மீகம் கருணை இரக்கம் என்ற நமது சித்தாந்தங்களுக்குள் அடைபடாம‌ல் ஆசிரியர் சொல்வதுபோல் Being and nothingness என்றொரு சமூகம் நம்முடனேயே இருந்து பாதாளலோக‌க் கொடுமைகளில் அமுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களையும் கவனிப்போம்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)