Saturday, November 24, 2012

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்


-------------------------------------------------------------------------
புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்
ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை
முதற்பதிப்பு : நவம்பர் 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்) 
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
நதிகளின் வாழ்வில் பல்வேறு நிலைகள் பற்றி நடுநிலை வகுப்புகளில் புவியியலில் படித்திருப்போம். பிறந்தவுடன் மலை பள்ளத்தாக்கு என்று சமவெளியை அடைவதற்காகப் பயமறியாது குதித்தோடும் இளமை நிலை. மணலும் கனிமங்களும் சேகரித்துக் கொண்டே சமவெளியில் ஒய்யார நடைபோடும் பக்குவநிலை. கடலடைந்த பின் கடலலை எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் தள்ளாடும் முதுமை நிலை. இம்மூன்று நிலைகளில் முதுமை நிலையில் அதிகப்படியான சுமைகளைக் சேர்க்க‌ கடல் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஒரு முகட்டை (காவிரிக்குத் திருச்சி போல‌) மையமாக வைத்து பல தடங்களில் கடலடைந்து டெல்டாவைப் பரப்புகிறது. இளமையில் தான் சேகரித்த வண்டலை எல்லாம் முதுமையில் டெல்டாவில் கொட்டி வளப்படுத்துகிறது.

பிறந்த இடமும் வருடமும், முடியும் இடம், கடந்து வந்த பாதைகள், உடன் வந்தவர்கள், விட்டோடியவர்கள், சந்ததிகள் என நதிகளுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. மனிதனுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கே படாதபாடு படும்போது, நதிகளின் கெதியை எப்படி தெரிந்து கொள்வது? செயற்கைக்கோள்கள். செய‌ற்கைக்கோள் படங்களின் நிறச்செறிவை வைத்து, அவ்விடத்தில் இருப்பது நீரா, காடா, மலையா, நீருக்குள் காடா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் இன்றைக்கு உள்ளன. அதன்பிறகு வயதைக் கண்டுபிடிக்க இருக்கின்றன கார்பன், ப்ளூரின் என்று விதவிதமான முறைகள்.

(http://www.noolulagam.com)
செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல். ஆசிரியர் புவியியல் விஞ்ஞானி. துணை வேந்தர், காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், திண்டுக்கல். தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் தான் கண்டுபிடித்த விசய‌ங்களில் ஒரு சாதாரண‌ வாசகனுக்குப் புரியும் விசயங்களே இக்கட்டுரைகள். காவிரி, வைகை, தாமிரபரணி, புதுக்கோட்டை வெள்ளாறு, தேவக்கோட்டை மணிமுத்தாறு என்ற ஐந்து நதிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர். வாழ்க்கை வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள காவிரியை எடுத்துக் கொள்வோம்.
தலைக்காவிரி கொகேனெக்கல் மேட்டூர் என ஓடி திருச்சியை முகடாகக் கொண்டு டெல்டாவைப் பரப்பி கொள்ளிடம் என்ற பெயரில் ஓடி வங்கக்கடலில் கல‌ப்பதுதான் காவிரியின் தற்போதைய தடம். (பிரதான பாதையில் இருந்து விலகி கடல் கடக்க ஓடும் வழிகளைத் தடம் எனக் கொள்வோம்) புத்தகம் என்ன சொல்கிறது என்றால், இது காவிரியின் 19வது தடம். இதற்கு முன் 18 வித்தியாசமான தடங்களில் காவிரி கடல் அடைந்திருக்கிறது. காவிரி டெல்டாப் பகுதிகளில் ஓடும் குடமுருட்டியாறு பழவனாறு பழம்காவிரி போன்ற தடங்களில் ஒரு காலத்தில் காவிரி கடல் சேர்த்திருக்கிறது. அதே போல் காவிரி விட்டுப் போன ஒரு தடத்தில்தான் இன்று புதுக்கோட்டை வெள்ளாறு ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் காவிரியின் பாதையிலேயே திருச்சி இல்லை என்கிறது புத்தகம்! திருச்சி காவிரிக்கு 3வது பாதை. மேட்டூரில் இருந்து திருக்கோவிலூர் வழியே கடலூர்ப் பகுதிகளில் அமைகிறது 2வது பாதை. அப்போதுதான் அரிக்கமேடு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. ஆச்சரியமே காவிரியின் 1வது பாதையில் தான் இருக்கிறது. கொகேனெக்கல் வாணியம்பாடி ஆம்பூர் வாலாஜாப்பேட்டை அரக்கோணம் வழியாக திருவள்ளூர்ப் பகுதிகளில் அமைகிறது 1வது பாதை. கடல் அடைய காவிரி உபயோகித்த தடங்கள் என்னென்ன தெரியுமா? காவிரி விட்டுப்போன அத்தடங்களில் தான் இன்றைக்கு அடையாறும் கூவம் ஆறும் ஓடிக் கொண்டிருக்கின்றன! கூவம் ஒரு காலத்தில் வளமிக்க நதி. வங்கக்கடலில் 2 கிலோமீட்டருக்குக் கொட்டிக் கிடக்கும் வண்டலும், திருவள்ளூர்ப் பகுதிகளில் காணப்படும் கற்படுகைகளும் சான்றுகள்!

கொகேனெக்கலை அச்சாகக் கொண்டு கடிகாரமுள் திசையில் காவிரி இரண்டு முறைகள் ஏன் பாதை மாறியது? ஒவ்வொரு பாதையிலும் தெற்கிலிருந்து வட‌க்காக‌ பதினெட்டு முறைகள் ஏன் தடம் மாறியது? அடுத்து பாதை அல்லது தடம் மாறுமா? மாறினால் எப்படியெல்லாம் ஓடும்? இதையெல்லாம் தெரிந்து வைத்து என்ன பயன்? கடல்தாக்கம் மற்றும் வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், தமிழகத்தின் பண்டைய கடலின் எல்லைகள், அதிலிருந்த துறைமுக நகரங்கள், புத்தகம் படித்துப் பாருங்கள். இதே போல்தான் மற்ற 4 ஆறுகளின் வாழ்க்கை வரலாற்றையும் விளக்குகிறார். நான் சுருக்கிச் சொல்வதால் ஏதோ புனைவு போல தோன்றும் இவ்விசயங்கள் எல்லாம் அறிவியல் பூர்வமாகவும், அரிக்கமேடு போன்ற பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள் சின்னங்கள் மூலமும், திருக்கோவிலூர் போன்ற கல்வெட்டுகள் மூலமும், பெரிய புராணம் போன்ற‌ தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் விளக்குகிறார் ஆசிரியர். 

(http://www.mapsofindia.com)
சில விசயங்கள்: 
1) 1100 ஆண்டுகளுக்கு முன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கர்களுடன் போருக்குச் செல்லும் போது காஞ்சிபுரத்திற்கு வடக்கே ஒரு பெருநதியைக் கடந்ததாகக் கலிங்கத்துப் பரணி சொல்கிறது. அப்படி ஏதாவது நதி இப்போது இருக்கிறதா? 
2) கடல் மதுரை வரை வந்து தாக்கியதாகவும் மன்னன் சுந்தரபாண்டியன் ஒரு செண்டை எறிந்ததால் கடல் பின்வாங்கியது எனவும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய திருவிளையாடல் புராணம் சொல்கிறது. ப்பூ என்று ஊதினால் நீரோடும் கதையெல்லாம் நாடோடி மன்னன் படத்தில் பாலையா சொன்னால் ரசிக்கலாம். ஆனால் நடைமுறையில் மதுரைக்குப் பக்கத்தில் கடல்?
3) கொள்ளிடத்தில் தண்ணீர் குறைவாக ஓடும் போது வட மருங்கில் ஓடுமாம். கவனித்து இருக்கிறீர்களா?
4) அறந்தாங்கி மற்றும் தேவக்கோட்டையில் இருந்து கடல் நோக்கிச் செல்லச் செல்ல மேற்கு நோக்கி கரை கொண்ட பிறைவடிவ‌ குளங்கள் அதிகமாக இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
5) பொன்னையாறு, திருச்சி தில்லை நகர், தஞ்சாவூர் வல்லம், திருநெல்வேலி வல்லநாடு - பெயர்க்காரணம்?
6) மேற்கிலிருந்து ஒழுங்காக கிழக்காக ஓடும் போது, திருநெல்வேலியில் சற்று நெளிந்து வடக்காக ஓடும் தாமிரபரணியைப் புவியியல் ரீதியில் ஒரு அபூர்வ நதி என்கிறார். டெல்டாவே இல்லாமல் பக்குவநிலை மட்டுமே கொண்ட நதியாம். அதன் வெள்ளப் பாதிப்பு திருநெல்வேலியில் மட்டும் அதிகம் இருப்பதேன் தெரியுமா?

காவிரியைக் குழாய்கள் மூலம் பல கிலோ மீட்டர்கள் இழுந்து வந்து தாகம் தீர்க்கும் எங்கள் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சின்ன காட்டாறு, ஒரு காலத்தில் காவிரியின் 7வது தடம்! நீங்கள் பார்க்கும் ஒரு குளம் கூட ஒரு நதியின் புதையுண்ட பாதையாக இருக்கலாம். இப்புத்தகம் படியுங்கள். நீங்கள் பார்க்கும் தமிழகமும், 6500 கிலோ மீட்டர்கள் வடக்கே நகர்ந்து வந்து இன்னும் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும் இன்னும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் தெரியும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், புவியியல் துறை சார்ந்தவர்களும் கண்டிப்பாகப் படிக்கலாம். இப்புத்தகம் சொல்லும் ஐந்து ஆறுகளுடன் தொடர்புள்ள ஊர்க்காரர்களுக்கும், சென்னை அறந்தாங்கி வேதாரண்யம் நெய்வேலி கடலூர் கம்பம் பட்டுக்கோட்டை மன்னார்குடி ஜெயங்கொண்டம் காரைக்குடி திருக்கோவிலூர் ஊர்க்காரர்களுக்கும் ஆச்சரியங்கள் இப்புத்தகத்தில் நிறைய இருக்கின்றன.

கொகேனெக்கலில் புதையுண்ட காவிரியை வெளிக்கொணர சோழ இளவரசன் ஒருவன், அங்கு போய் காவிரியில் குதித்து உயிர்த் துறக்கிறான். அவனின் தியாகத்தில் மனமுருகி கிழக்கே ஓடிக்கொண்டிருந்த காவிரி தெற்கே திரும்பி திருச்சி வழியாக சோழ நாட்டைச் செழிக்கச் செய்கிறது. காவிரி இரண்டாம் முறை பாதை மாற இப்படி ஒரு புராணக் கதையை ஆசிரியர் சொல்கிறார். நதிகளுக்கும் பல்லுயிர்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்கள் அதிகமான நம் தலைமுறைக்கு இக்கதை ஏதோ சொல்வது போல் தெரிகிறதா, இப்புத்தகத்தைப் போல‌?

- ஞானசேகர்

98. தூங்காமல் தூங்கி


ஐம்புலனைச் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி
சுகம் பெறுவது எக்காலம்
-------------------------------------------------------------------------
புத்தகம் : தூங்காமல் தூங்கி
ஆசிரிய‌ர் : Dr.S.மாணிக்கவாசகம் MBBS.DA.
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
முதற்பதிப்பு : 2008
விலை : 65 ரூபாய்
பக்கங்கள் : 128 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்) 
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். ஆசிரியரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. கடையின் புத்தகக் குவியல்களில் எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கிக் கிடக்கும். ஆனாலும் முதலில் பார்க்கும்போது, அட இப்படியும் ஒரு புத்தகமா என்ற ஆச்சரியத்துடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும் வசீகரம் சில புத்தகங்களுக்கு அமைந்துவிடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் எனக்கு இப்புத்தகம். ஆசிரியர் 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவர். அயல் மனித முகங்கள் மேல் மனிதாபிமானம் காட்டும் தொழில். வாழ்வின் பெரும்பகுதியை அறுவைச் சிகிச்சை அரங்கிற்குள்ளேயே கழித்துவிட்டவர். தொழில் சார்ந்த அவரது அனுபவங்களே இப்புத்தகம்.

தூங்காமல் தூங்கி. Memories of an Anaesthesiologist. ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை.

நோயாளியை மயக்க நிலைக்குக் கொண்டு போய் மீண்டும் கண் விழிக்க‌ வைக்கும் வரை கூடவே இருந்து கண்பாவை, நாடித்துடிப்பு, சுவாசம், உடல்நிறம், இரத்த அழுத்தம், காயத்திலிருந்து வெளியேறும் இரத்தம், அதை ஈடுசெய்ய மருந்துகள் போன்ற விசயங்களைக் கவனித்துக் கொள்ளும் தனது தொழிலில் மறக்க முடியாத மனிதர்கள்-அனுபவங்கள் பற்றியது இப்புத்தகம். தொழில்நுட்பம் முன்னேறிவிட்ட இக்காலத்தில் இவை எல்லாவற்றையும் கணினியே பார்த்துக் கொள்ளும்போது, மருத்துவன் அறுவைச் சிகிச்சை அரங்கிற்கே செல்லத் தேவையில்லை. அறுவைச் சிகிச்சையில் என்ன செய்யப் போகிறோம் என முன்கூட்டியே மருத்துவர் நோயாளிக்கு வீடியோ படம் காண்பிக்கும் காலம் இது. வாசகனை அறுவைச் சிகிச்சை அரங்கு வரை அனும‌தித்து, தூக்கம் உணவு தண்ணீர் குடும்பம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு, அனுபவ அறிவுடனும் மருந்துகளுடனும் போராடிய மருத்துவ உலகை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.

குளோராபார்ம் டாக்டர் என்று தெரிந்தவர்களால் அழைக்கப்படும் ஆசிரியர், தான் தன் தொழிலில் சந்தித்த முதல் மரணம் முதல் சிசேரியன், குடலிறக்கம், குடலடைப்பு, விரைவீக்கம், குடல்வால், கத்திக்குத்து, ஆணுறுப்பு மேல்தோல் நீக்கம், தைராய்டு கட்டி, எலும்புமுறிவு போன்ற‌ அறுவைச் சிகிச்சைகள் கண்ட நோயாளிகள் வரை பலரைச் சிறுகதைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.

- ஞானசேகர்