Sunday, November 04, 2007

26. MY NAME IS RED

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------
புத்தகம்: My name is Red
ஆசிரியர்: Orhan Pamuk (நோபல் பரிசு பெற்ற ஒரே துருக்கியர்)
மொழி: துருக்கியில் இருந்து ஆங்கிலம்
நடை: நாவல்

விலை: 195 INR
பக்கங்கள்: 417
பதிப்பகம்: Vintage International
-----------------------------------------------------------
இப்புத்தகத்தை Crosswordல் பார்த்தேன். பொருளடக்கத்தில் 59 அத்தியாயங்கள் இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் I am Orhan, I am Esther, I am Shekure, I am a woman, ... என தலைப்பிடப்பட்டு இருந்தன. முதல் மூன்று அத்தியாயங்கள் படித்துப் பார்க்கலாம் என எடுத்தேன். I am a corpse என ஆரம்பித்தது. சற்று நேரத்திற்குமுன் கொல்லப்பட்ட ஒருவன், தனது கொலையாளியைப் பற்றியும், இறப்புக்குப்பின் தான் பார்ப்பவை - நினைப்பவை பற்றியும் விவரிக்கப்பட்டு இருந்தது. செத்த உடம்பு வலிக்குமா? இறப்புக்குப் பின் என்ன? சொர்க்கம் - நரகம் உண்மையா? இதுபோன்ற பல கேள்விகள் அவனுக்குள். I am called Black என்பது அடுத்த அத்தியாயம். 12 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பும் ஒருவன், தனது பழைய தெருக்களையும், காதலையும் தேடி அலைவது விவரிக்கப்பட்டு இருந்தது. I am a Dog என்பது அடுத்த தலைப்பு. நாயெல்லாம் பேசவும், புத்தகத்தை வைத்துவிடலாமா எனத் தோன்றியது. ஆனால், முதல் இரு அத்தியாயங்களில் இருந்த எழுத்துநடையால், மூன்றாம் அத்தியாயத்திற்கும் தொடர்ந்து நடைபோட்டேன். "நாயெல்லாம் பேசுவதில்லை என்று நீங்கள் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வது தெரிகிறது. பிணம் பேசும் கதையெல்லாம் கேட்கும் நீங்கள், நாய் பேசுவதைக் கேட்வதில்லை. எப்படி கவனிக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே நாய்கள் பேசுகின்றன" என்று இருந்தது. புத்தகத்தை அப்படியே மூடிவிட்டு, வாங்கிவந்துவிட்டேன்.

கதையின் காலம் - துருக்கியில் ஒட்டாமன் பேரரசு - இந்தியாவில அக்பர். இஸ்லாமிய மதத்தின் (Hagira) ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு ஒட்டாமன் பேரரசின் பெருமைகளைப் படங்களாக வரைந்து வைக்க, சுல்தான் ரகசியக் குழுவை அமைக்கிறார். அதில் இரண்டு பேர் மர்மமான முறையில் கொல்லப்படுவதும், கொலையாளியைக் கண்டுபிடிப்பதும்தான் கதை. ஏற்கனவே நான் சொன்னதுபோல், கதையின் போக்கு 59 அத்தியாயங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருவர் கதை சொல்லுவார். அவர்களில் ஒரு பிணம், மரம், நாய், தங்கக்காசு, சிவப்பு, மரணம், குதிரை, சாத்தான், பெண் இவர்களும் அடக்கம். விருமாண்டி படம்போல, முதல் ஆள் கதை சொல்லும்போது, அவர் நல்லவனுக்கு நல்லவனாகத் தெரிவதும். அடுத்த ஆள் கதை சொல்லும்போது, முதல் ஆள் பொல்லாதவனாகத் தோன்றுவது ஆசிரியரின் எழுத்துநடைக்குக் கிடைத்த வெற்றி.

ஓவியங்களும், காவியங்களும் சொல்ல முயல்வது, ஒவ்வொரு மனிதனும் மற்றவனில் இருந்து எப்படி வித்தியாசப்படுகிறான் என்பதையே - மனித ஒற்றுமைகளை அல்ல; சிறந்த ஓவியங்களை உண்டாக்குவது சிறந்த ஓவியர்கள் அல்ல - காலம்; தவறுகளே ஸ்டைலின் ஆரம்பம்; சிறந்த புகைப்படத்தில் வரைந்தவரின் கையெழுத்து தேவையில்லை; ஸ்டைலும், கையெழுத்தும் தன் தவறை மறைக்க முயலும் சுயதம்பட்டங்கள். இப்படி புத்தகம் முழுவதும் ஓவியக்கலை பரவிக்கிடக்கிறது.

கணவனைத் தொலைத்துவிட்டு வாழும் தனது சித்தப்பாவின் மகளுடனான தனது பழைய காதலைப் புதுப்பித்து, மறுமணம் செய்யத்துடிக்கும் ஒரு காதல்; மறுமணத்தால் அவளின் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை; காதலர்களுக்கு இடையே கடிதங்கள் பரிமாறும் தூது; அடிமைபெண்ணுடன் உறவு வைத்திருக்கும் தந்தையைக் கொண்ட மகள். இதுபோன்ற பல உபகதைகள்.

தனது மகனின் மூக்கும், கண்களும் தன்னைபோல் இருப்பதைப் பார்த்து, தனது கணவனின் அகன்ற நெற்றியைத் தன்னால் தன் மகனுக்குக் கடத்தமுடியாமல் போய்விட்டதே என்று ஒரு தாய் வருந்துவது போன்ற சிந்தனைகள் மிக அருமை. "சொர்க்கத்தில் உடம்பில்லா உயிரையும், பூமியில் உயிரில்லா உடம்பையும் இறைவனிடம் கேட்பேன்" என்று தனது இறுதி ஊர்வலத்தில், உயிரில்லா உடம்பு ஒன்று பேசுவது போன்ற சிந்தனைகளும் அருமை.

இடையிடையே சில அத்தியாயங்களில் கொலையாளி வந்து பேசுவதும், "என்னை மறந்துவிட்டீர்களா?" என்பதும், "நான் என்ன சொல்லப்போகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்" என்பதும் புன்முறுவலுக்கான வரிகள். கடைசி சில பக்கங்களில்தான் கொலைகாரன் வாசகனுக்குச் சொல்லப்படுகிறான். அதன்பிறகு அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளும், அவன் கதையில் இருந்து விடை பெறும் விதமும் மிக அருமை. "ஓர் உயிரைக் கொல்வது எவ்வளவு சுலமான காரியம். இறைவா, ஓவ்வோருவருக்கும் அந்த அதீத சக்தியைக் கொடுத்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்த பயத்தை வைத்தாயே" என்று கொலையாளி பேசும் வசனங்கள் அருமை.

'வில்லோடு வா நிலவே' புத்தகம் படித்தபோது, புத்தகம் முழுவதும் பெயர்க்காரணம் எதிர்பார்த்து இருந்தேன். அது கடைசி அரை பக்கத்தில் வந்தது. அதேபோல் இப்புத்தகத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முதலில் படித்தபோது, மூளையின் மூலையில் ஒரு சின்ன சந்தேகம் வந்தது. கதையின் போக்கில் அச்சந்தேகம் மறந்து போனாலும், புத்தகத்தின் கடைசி அரை பக்கம் ஆசிரியரின் கதை சொல்லும் உத்திக்குச் சபாஷ்போட வைத்தது.

மின்சாரம், கணினி இதுபோன்ற இன்றைய வார்த்தைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட 600 ஆண்டுகளுக்கு முந்தைய கதை விரும்பிகளும், ஒரு குதிரையின் படத்தில் மூக்கை மட்டுமே வைத்து சில பக்கங்கள் பரபரப்பை உண்டாக்குவது போன்ற எழுத்துநடை ரசிகர்களுக்கும் ஏற்ற புத்தகம். ஒன்றுமே இல்லாத ஒரு கதையை எழுத்துவடிவில் ஜெயித்துக்காட்ட முடியம் என்பதற்கு இப்புத்தகம் நல்ல உதாரணம்.

-ஞானசேகர்

25. எப்போதும் பெண்

----------------------------------------------------------
புத்தகம் : எப்போதும் பெண்
எழுதியவர் : சுஜாதா
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1984
விலை : 90
----------------------------------------------------------
'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்' - சுஜாதா.

இப்படி ஒரு சுயவிளக்கத்தை சுஜாதாவிடமிருந்து எதிர்பார்த்திராத எனக்கு, அதுவே இப்புத்தகத்தை வாங்கத் தூண்டுதலாய் அமைந்தது. இக்கதை மங்கையர் மலரில் தொடராக வெளிவந்திருக்கிறது. புத்தகத்துக்கான அறிமுக வரிகள் சுஜாதாவின் வார்த்தைகளில், "இந்தத் தொடரை நீங்கள் எளிதில் வகைப்படுத்த முடியாது. இதை ஒரு விதத்தில் பார்த்தால் கட்டுரை போல் இருக்கும். அதே சமயம் ஒரு கதையும் தென்படும். Philosophy கொஞ்சம் தெரியும். கொஞ்சம் கவிதை கூடத் தப்பித் தவறி வரும்."......"பாசாங்கு வெறுப்பு, குறும்பு எதுவும் இல்லாமல் எழுதியிருக்கிறேன்".

"இதை என் சிறந்த நாவல் என்று சொல்பவர்கள் உண்டு. ஆணாகிய நான் எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க விஷயங்களை அறிய முடிந்தது என்று ஆச்சரியப்பட்டவர்கள் உண்டு. இதற்கு பதில் எளிமையானது. Simon De Beauvoirன் The Second Sex என்கிற புத்தகம் எனக்கு மிகவும் பயன்பட்டது. மற்றபடி நான் பாத்ரூம்களிலும், படுக்கையறைகளிலும் எட்டிப்பார்க்கவோ, எந்தவித வாயரிஸமோ பழகவில்லை".

முதல் பதிப்பு வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ல் இரண்டாம் பதிப்பு வெளியாகி இருக்கிறது. வழக்கமான சுஜாதாவின் நடையில் அமைந்த நாவல். ஒரு பெண்கரு, ஒரு நடுவர்க்க, நடுவயது பிராமணப் பெண்ணின் வயிற்றில் தோன்றி, பிறந்து, வளர்ந்து, தானும் கரு சுமந்து இறந்து போவது வரையிலான பயணத்தை 190 பக்கங்களில் தீட்டியிருக்கிறார் ஆசிரியர்.

கதையை விட இப்புத்தகத்தில் பெறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கருவினுள்ளே இடப்பட்ட முட்டை உயிராக வளர்ந்து, குழந்தையாக வெளிவருவது வரை அழகாக விளக்கி இருக்கிறார்.
ஒரு பெண்ணின் மீதான உலகின் பார்வை, உலகின் மீதான ஒரு தனிப்பெண்ணின் பார்வை, ஆணைப் பற்றிய பெண்ணின் அபிப்ராயம், தன் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான அவளின் சந்தேகங்கள் மற்றும் பயங்கள், புறப் பொருட்களால் அவள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், பாலியல் பற்றிய அவளின் முதல் அறிவு, படிப்படியாக அவள் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்று பெண்ணுலகத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.

அடிப்படையில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படும் விதம் எப்படி ஆணுக்குள் ஓர் ஆதிக்க மனப்பான்மையையும், பெண்ணுக்குள் ஒரு சார்புத்தன்மையும், அச்சமும் கொண்ட மனப்பான்மையையும் வளர்க்கிறது என்று சொல்கிறார் சுஜாதா. திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, ஓர் ஆணைப் பொறுத்தவரையில் தன்னால் அடக்கி ஆளப்பட ஒரு பொருள் கிடைக்கப்போகிறது என்பதாகவும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் தன்னை அடக்கி ஆள ஒரு தலைவன் கிடைக்கப்போகிறான் என்பதாகவும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்கிறார்.

பெண்ணின் பார்வையில் ஆண் என்பவன் சகல விதமான சுதந்திரங்களோடு உலவுபவன்; தன்னை விடப் பல விதங்களில் உயர்ந்தவனாக மதிக்கப்படுபவன்; தவறுகள் செய்ய சுலபமாக அனுமதிக்கப்படுபவன்; எனவே பெண்ணுக்கு ஆணிடம் இருப்பது பயம், அன்பு, மரியாதை என்பதை விட ஒருவிதமான பொறாமை என்று சொல்லலாம் என்கிறார்.

மனித மனதின் பல வினோதமான எண்ணங்களை எழுதியிருக்கிறார். உதாரணமாக, பிறந்த குழந்தை ஆணாக இருப்பின் தன் தந்தையை அதிகம் நேசிப்பதையும், அவரின் நகலாக நடந்து கொள்வதையும், சில வயதுக்குப் பின் அதே தந்தையை அளவுக்கு மீறி வெறுப்பதையும் சொல்கிறார். இதேபோல்தான் பெண்ணுக்குத் தாய் மீதான ஈடுபாடும். இக்கதையின் நாயகி தன் பதின்வயதில் தன் ஆசிரியை ஒருத்தியின் மேல் அதிக ஈடுபாடு கொண்டு அவளுக்குக் கடிதம் கூட எழுதி இரகசியமாக வைத்திருக்கிறாள். இப்படி இன்னும் பல.

சுஜாதாவிடமிருந்து இன்னுமொரு வித்தியாசமான நாவல். சுஜாதாவின் வாசகர்கள் என்றில்லாமல் எழுத்தில் யதார்த்தத்தை விரும்பும் யாரும் படிக்கக்கூடிய ஒரு புத்தகம்.

பின்குறிப்பு : இதற்கு முன் நான் கேள்விப்பட்டிராத, மற்றப் புத்தகக் கடைகளில் என் கண்களில் இருந்து ஒளிந்துகொண்ட இப்புத்தகம், ஒரு மழை நாளில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் 'தி புக்பாய்ண்ட்'ல் கண்ணில்பட்டது. இது தவிர இப்போது நான் வரிசையாக படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் சுஜாதாவினுடையவையே! சுஜாதாவின் வாசகர்களுக்கு அப்புத்தகங்கள் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் என்பதால் அவற்றின் பெயர்களை சிறு குறிப்புடன் தரும் எண்ணம் உண்டு.

- சேரல்

Wednesday, August 08, 2007

24. ROGUE STATE

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------
புத்தகம் : Rogue State (A guide to the World's only Superpower)
ஆசிரியர் : William Blum
மொழி : ஆங்கிலம்
விலை : 475 INR
பக்கங்கள் : 394
சிறப்பு : பின் லேடன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம். Amazon தளத்தின் விற்பனையில் 2,09,000வது இடத்தில் இருந்து, ஒரே நாளில் 12வது இடத்திற்கு வந்த புத்தகம்.
-----------------------------------------------
ஆசிரியர், அமெரிக்க அரசின் வியட்நாம் போக்கைக் கண்டித்து, அரசின் பதவியை ஏற்க மறுத்தவர்; அரசுக்கு எதிரான ஒரு பத்திரிக்கையைத் தலைநகரில் தொடங்கிய முதல் நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு; இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்க ராணுவத்தின் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் போக்கைப் பற்றியது Killing Hope என்ற இவரது முதல் புத்தகம்.

ஞாநி என்ற ஒருவர் ஒரு அருமையான பத்தி எழுதி இருப்பதாக ஆனந்த விகடன் புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான் என் நண்பன். "இந்தியா என்ற ஜனநாயக நாடு தஸ்லிமா நஸ்ரின் எழுதிய Lajja என்ற புத்தகத்தைத் தடைவிதித்தது. தீவிரவாதி என்று அழைக்கப்படும் பின் லேடன் என்ற மனிதர், Rogue State என்ற புத்தகத்தைப் படிக்கச் சொல்கிறார். படிக்க வேண்டாம் என்கிறது ஜனநாயகம்". (Lajja தான் இத்தளத்தில் எனது முதல் புத்தக விமர்சனம். சைக்கிள் கேப்புல ரெண்டு புக்கையும் படிச்சாச்சு)

புத்தகத்தைப் பற்றி ஒரளவு அனுமானித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். US, CIA, NSA, Pentagon, etc போன்ற வார்த்தைகளின் இன்னொரு பக்கத்தைப் புரட்டிக் கண்பிப்பதே இப்புத்தகம்.

"பார்க்கும் குழந்தைகளை எல்லாம் கொல்பவர்களும், அவர்களின் காதலிகளும்" என இப்புத்தகத்தைப் பெயரிட்டுக் கொள்ளலாமென அதிரடியாக ஆரம்பிக்கிறது இப்புத்தகத்தின் முன்னுரை. அரசு செய்யும் குற்றங்களைச் சுட்டிக்காட்டும் Truth Commission என்ற அமைப்பு தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் உண்டு. அதுபோன்ற ஓரமைப்பு USல் இல்லாததால் இப்புத்தகம், என முடிகிறது புத்தகத்தின் முன்னுரை.

மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இப்புத்தகத்தின் முதல் பாகம், மனித உரிமைகளை மீறுபவர்களுடன் அமெரிக்க உறவு-பகைகளை விவாதிக்கிறது. Rogue State என்ற வார்த்தைக்கு 'அமெரிக்காவிற்கு எதிராக எல்லாவற்றிலும் நிற்பவர்கள்' என்கிறார் Condoleeza Rice. என்ன, உண்மையான அர்த்தம் பாத்தாச்சா? தீவிரவாதிகளின் குறிக்கோளாக அமெரிக்கா ஏன் இருக்கிறது என விவாதிக்கும் பகுதியில், "எங்கள் கொலைகள் அப்பாவிமக்கள் மீதென்றும், உங்கள் கொலைகள் தேவையில்லாதவர்கள் மீதென்றும் எந்த மதமும் சொல்லவில்லை" என்கிறார் பின் லேடன்.

வெளிநாட்டுப் பிரபலங்களின் மீதான கொலை முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கைப் பற்றிய ஒரு பட்டியல்; 50 தேறும், 1955ல் நேரு மீது உட்பட. இராக்கின் உளவுத்துறை கட்டிடத்தின்மீது குண்டெறிந்துவிட்டு, தன் தலைவர் ஒருவர்மீது சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சொன்னது. அப்படிப் பார்த்தால், பிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக CIA மீது குண்டுபோட கியூபாவிற்கு உரிமை உண்டு. இதுபோன்ற மனிதாபிமானமிக்க வாக்குவாதங்கள், இரும்புத்திரைக்குப் பின்னால் இருக்கும் அமெரிக்காவிடம் எடுபடாது என்கிறார் ஆசிரியர்.

அமெரிக்க ராணுவம் மற்றும் CIAன் பயிற்சி பாடத்திட்டங்களில் இருந்து சில பகுதிகளை ஆசிரியர் மேற்கோள் காட்டி இருந்தார். Edge weapons (இதயம் பயங்கரப் பாதுகாப்பாக நெஞ்சாங்கூட்டிற்குப் பின்னிருப்பதால், தண்டுவடத் தாக்குதல்), Conference room technique (கூட்டத்தினுள் புகுந்து ஒருவர் கவனத்தைச் சிதறடிக்க, மற்றவர் வேண்டப்பட்டவரைக் கொல்லல்), Contrived accidents (மூணாவது மாடியில் இருந்து கணமான பொருளைத் தலைமேல் போடுதல்).... இன்னும் பல. இவைதவிர, கழிவறைகளைப் பஞ்சை வைத்து அடைப்பது, அஞ்சல் பெட்டியில் தபால்களைத் திருடுவது, Morphine உபயோகப்படுத்துவது, தவறான பேர்களில் ஹோட்டல்களில் அறைகள் பதிவுசெய்வது, வதந்திகளைப் பரப்புவது இவை போன்ற பல எளிய முறைகளும் கற்பிக்கப்படுகின்றன.

அமெரிக்க ராணுவம் செய்யும் சித்ரவதை முறைகளையும் ஆசிரியர் சொல்லத் தவறவில்லை. ஆணின் விதைப்பையில் turpentine- ஆணுக்குப் பெண்களின் உள்ளாடை - ...மனித உடலில் 35 சிறந்த இடங்கள், மின்சார அதிர்ச்சி கொடுப்பதற்காக CIAவால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்க ஆயுதங்களைப் பற்றி இரண்டாம் பாகம். தனது சொந்த நாட்டிலும், மற்ற நாடுகளிலும் வேதியிய மற்றும் உயிரிய ஆயுதங்களை அமெரிக்கா உபயோகப்படுத்தியதைப் பற்றி முறையே இரண்டு கட்டுரைகள். அமெரிக்க நடிகர் Dick Gregory கிண்டலாக சொல்கிறார்: "சிவப்பு மனிதர்களிடம் இருந்து வெள்ளை மனிதர்கள் பிடுங்கிய நிலத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கருப்பு மனிதர்களை வைத்து மஞ்சள் மனிதர்களை வியட்நாமில் கொன்றுகொண்டு இருக்கிறோம்".

மற்ற நாடுகளுடன் அமெரிக்க உறவைப் பற்றியதே கடைசி மூன்றாம் பாகம். அடுத்த நாட்டின் பிரச்சினைகளில் அமெரிக்கத் தலையீடுகள், மற்ற நாடுகளின் தேர்தல்களில் அமெரிக்கத் தலையீடுகள், பற்றி கட்டுரைகள். இக்கட்டுரைகளில் நாடுவாரியாக விளக்கி இருக்கிறார். உலகில் பிரபலமாகாமல் எத்தனை நாடுகள் இருக்கின்றன? ஆச்சரியப்பட்டு போனேன். படிக்கவே சலித்துப் போகும் அளவிற்குப் பட்டியல் பெரிது. ஆப்கானிஸ்தானில் Kamid Harzai வென்ற பிறகு புஷ் சொல்கிறார்: "காஸ்ட்ரோ, முடிந்தால் இன்னும் ஒருமுறை உங்களுக்குத் தேர்தல்பற்றி பயம் கிடையாது என நிரூபித்துக் காட்டுங்கள்". சிரிப்புதான் வந்தது.

பல நல்ல திட்டங்களை எதிர்த்து அமெரிக்கா எத்தனைமுறை, UNOல் ஓட்டுப் போட்டு இருக்கிறது என்ற ஒரு பட்டியல். பக்கத்திற்குச் சுமார் 8வீதம், 19 பக்கங்களில் எதிர்க்கப்பட்ட திட்டங்கள். பாலஸ்தீன மக்களுக்கு உதவி - அணு ஆயுதம் இல்லாத நாடுகள்மீது அணு ஆயுதம் உபயோகிக்கத் தடை போன்றவை அமெரிக்கா UNOல் எதிர்த்தவைகளில் குறிப்பிடத்தக்கவை. 1981, 1982, 1983 ஆகிய மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா மட்டும் UNOல் ஒரு திட்டத்திற்கு எதிர்ப்பு வாக்கு அளித்தது. "கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை மனிதனின் அடிப்படை உரிமைகள்" என்ற அறிவிப்புக்குத்தான் அது.

இவைதவிர புத்தகம் முழுவதும் ஆங்காங்கே பல தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. "1. மைக்ரோசாப்டில் பல உளவு பார்க்கும் சாப்ட்வேர்கள் இருக்கலாம் 2. மைக்ரோசாப்டின் மிகப்பெரிய client பென்டகான் தான்", பிரான்ஸின் உளவுத்துறை சந்தேகிக்கிறது, என்கிறார் ஆசிரியர். மேலும், 1991ல் இராக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 18டன் எடையுள்ள அரசு ஆவணங்கள் கொலொரடொ பல்கலைகழகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நெல்சன் மண்டேலாவின் 28 ஆண்டுகால சிறைவாசத்திற்கும் அமெரிக்க உளவுத்துறைதான் காரணம். நாம் 12ம் வகுப்பில் கட்டாயமாகப் படிக்கும் Oliver Twist, அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்ட புத்தகம்.

புத்தகம் முழுவதும் தகவல்கள் மட்டுமே. ஆசிரியரின் சொந்தக் கருத்துகளைவிட நடந்த நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளே அதிகம். அந்த அளவுக்கு நிகழ்வுகள் ஏராளம். ஆசிரியர் அந்நிகழ்வுகளைக் குழப்பாமல் கோர்த்ததற்காகப் பாராட்டியே ஆகவேண்டும். மொத்தத்தில், பின் லேடன் சொன்னதுபோல், "பயனுள்ள புத்தகம்".

- ஞானசேகர்

Thursday, August 02, 2007

23. ANANDAMATH

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------
புத்தகம் : Anandamath (ஆனந்தமடம்)
ஆசிரியர் : பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterji)
மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கிலம்
விலை : 140 INR
பக்கங்கள் : 135
சிறப்பு : தேசிய பாடலான "வந்தே மாதரம்", இப்புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது. அப்பாடல் பி.பி.சி.யின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக ஆனதும், 'ராக்கம்மா கையத்தட்டு' முதலாவதாக வந்ததும் எல்லோருக்கும் பரிட்சயம்.
-----------------------------------------------------

126 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம். சென்ற வருடம், "வந்தே மாதரம்" பாடலின் 125வது ஆண்டை முன்னிட்டு, அப்பாடலைப் பள்ளிகளில் கட்டாயமாகப் பாடுவது பற்றிப் பிரச்சினைகள் எழுந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். முடிவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல், விருப்பப்பட்ட பள்ளிகள் மட்டும் பாடி, மரியாதை செய்தன. "ஜன கன மண" கீதத்தில் சிந்து என்ற வார்த்தை இருக்க வேண்டுமா என்ற பிரச்சனை எழுந்தபோது, பராசக்தியின் காக்கா பாடலுக்கு இன்றைய முதலமைச்சர் கருணாநிதி சொன்னதுபோல், 'எழுதியது எழுதியதுதான்; மாற்றமுடியாது' என்றது உச்சநீதிமன்றம். ஆனால், 'வந்தே மாதரம்' பிரச்சினையில் நீதியும், நிர்வாகமும் அமைதி காத்ததன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. அதனால், புத்தகத்தைப் பார்த்தவுடனேயே வாங்கிவிட்டேன்.

இரவீந்திரநாத் தாகூர், எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவருடன் இப்புத்தகத்தைப் பற்றி பேசுவதே முன்னுரை. இது ஒரு புதினம்(நாவல்).

கதை நடந்த காலம் - இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹாஸ்டிங்ஸ் (Warren Hastings) இருந்த காலம் - வங்காளப் பஞ்சத்தின் (Great Bengal Femine) காலம். இந்தியாவைத் துர்கா அன்னையாக (Mother) உருவகித்து, அவளை ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்ற, ஒரு பகுதியினர் எல்லா சுகங்களையும் துறந்து சந்நியாசிகளாகக் காட்டுக்குள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களை இந்திய அன்னையின் குழந்தைகளாக (Children) நினைத்துக் கொள்கின்றனர். இவர்களின் தலைவருக்கு மகாத்மா என்று பெயர். இவர்கள் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து, வட வங்காளத்தில் காலூன்றுவதே கதைச்சுருக்கம்.

பஞ்சத்தில் தவிக்கும் வங்காளத்து மக்களுக்கு, ஆங்கிலேய அரசின் கருவூலத்தில் இருந்து கொள்ளையடித்து வழங்குவதும், பார்க்கும் ஆங்கிலேயர்களை எல்லாம் கொன்று தள்ளுவதும்தான் இவர்களின் பணி. 'ஆங்கிலேயர்கள் நல்லவர்கள், இந்தியாவில் இருப்பவர்களைத் தவிர' என்பதுதான் இவர்களின் கருத்து.

வங்கத்தின் பஞ்சத்தின் கொடுமை விளக்கி இருக்கும் புத்தகம், ஆங்காங்கே Children களின் குடும்ப உறவுகளைப் பற்றியும் தொட்டுச் செல்கிறது. தன் சொந்த ஊரை Children களின் கோட்டையாக மாற்றும் ஒருவர்; கல்யாணம் செய்து இளமையை அனுபவிக்காத ஒருவர்; ஆண்வேடமிட்டு Children களுக்கு உதவிசெய்யும் ஒருத்தி என பலவிதங்களில் Children உணர்த்தப்படுகிறார்கள்.

ஆசிரியர் சில இடங்களில் மெல்லிய நகைச்சுவையையும் கையாண்டிருக்கிறார். உதாரணமாக, ஆண்வேடமிட்டு தன் அண்ணியைக் கிண்டல் செய்யும் ஒருத்தி, திடீரென கட்டிப்பிடித்தவுடன் அண்ணி கேட்கிறாள்: "நீங்க பெண் என்று ஏன் முதலிலேயே சொல்லவில்லை?". அதே பெண் இன்னொரு ஆணிடம் சிக்கிகொள்ளும்போது, மார்பில் இருக்கும் புலித்தோலை உருவிவிட்டு, "நீ பெண்ணா?" என்கிறான்; அவள் "இக்கேள்விக்கு இனிமேல் நான் இல்லை என்று பதில்சொல்ல முடியாது" என்கிறாள்.

சரி 'வந்தே மாதரம்' பாடலுக்கு வருவோம். இப்பாடல்தான் Children களின் தாரக மந்திரம். சந்தோஷம் - துக்கம் - மரணத்தை நெருங்கும் நேரம் இப்படி எல்லா தருணங்களிலும் அவர்கள் பாடும் பாடல் இது. இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்பதால், பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருந்தன - "வந்தே மாதரம் என்று சொல்வது தடைவிதிக்கபட்டிருந்த காலத்தில் பெயர் தெரியாத ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டது" என்ற குறிப்புடன்.

சரி 'வந்தே மாதரம்' பாடலில் என்னதான் பிரச்சினை? அப்பாடல் இப்புத்தகம் மூலமே பிரபலமானது. ஆனால், புத்தகத்தை விட, பாடல் பழையது. அப்பாடல் விடுதலைப் போராட்டக் காலத்தில் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்து இருந்தாலும், அது சித்தரிக்கப்பட்டவிதம் ஒரு மதத்தைச் சார்ந்தாகவே இருக்கிறது. கதாபாத்திரங்கள் எல்லாரும் நாட்டிற்குப் பணிசெய்வதை மதக்கடமையாகவே செய்கின்றனர். புத்தகத்தின் முடிவுகூட அப்படியே! திருமணச் சட்டங்களைக்கூட மதங்களுக்காகத் தனித்தனியாக வைத்திருக்கும் இந்தியா என்ற மதச்சார்பற்ற நாட்டில், இன்னொரு மதத்தின் பெண்தெய்வத்தை அன்னையாகப் பாடுவது சர்ச்சைக்குரிய விசயம். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் வகுத்தவர்கள், மூன்று ஆண்டுகள் நிதானமாக யோசித்து தலைமுறைகள் காக்கும் நல்வழிகளைத் தந்துள்ளார்கள்.

தலைமுறைகளுக்காக அரசியல் மேதைகள் மூன்றாண்டுகளில் வகுத்தவைகளைச் சிலமணித்துளிகள் படித்துவிட்டுக் குறைசொல்லுவதே தலைமுறைகள். அதுதான் காலம். எனது இப்புத்தக விமர்சனம்கூட அப்படி இருக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க 'Mr.காலம்'?

-ஞானசேகர்

Tuesday, July 10, 2007

22. A VIEW FROM THE OUTSIDE

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------
புத்தகம் : A view from the outside (Why good ecomonics works for everyone)
ஆசிரியர் : ப. சிதம்பரம் (மத்திய நிதி அமைச்சர்)
மொழி : ஆங்கிலம்
பக்கங்கள் : 372
விலை : 495 INR
பதிப்பகம் : Penguin Portfolio
--------------------------------------------------
ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. 2002ல் இருந்து 2004 தேர்தல்வரை, Indian Express மற்றும் Financial Expressல் ஆசிரியர் எழுதிய columnகளின் தொகுப்பே இப்புத்தகம். வரி, தேர்தல், பட்ஜெட், விவசாயம், அந்நிய முதலீடு என பல பகுதிகளாக தனது கட்டுரைகளைத் தொகுத்து இருக்கிறார் ஆசிரியர். கட்டுரைபாணி புத்தகம் என்பதால், என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் இங்கு பதிக்கிறேன்.




















முதல் பக்கம் படிக்க ஆரம்பித்தவுடனே எனக்கு ஒன்று புரிந்துவிட்டது. புத்தகம் முடியும்வரை மூன்று விஷயங்கள் தேவைப்படும் என புரிந்தது. 1) அடிக்கோடிட பென்சில் 2) குறிப்பெழுத ஒரு காகிதம் 3) http://www.google.com/. ஏனெனில் ஆசிரியர் சொல்லும் சில உலக மற்றும் இந்திய, அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை.

மினரல் வாட்டருக்கு 12 ரூபாய் கொடுக்கும் நாம், அரிசிக்கு 1 ரூபாய் அதிகம் கொடுக்கத் தயங்குகிறோம். இந்த மனநிலை மாறவேண்டும். பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இருக்கும் விவசாய விழிப்புணர்வு இந்தியாவுக்கும் வரவேண்டும் என அட்டகாசமாக ஆரம்பிக்கிறது புத்தகம். ஆசிரியரின் இக்கருத்தை விமர்சித்த ஒரு பத்திரிக்கையாளரை, "பஞ்சாப், ஹரியானா எனச் சுற்றியது போதும். தமிழ்நாடு, ஆந்திரா எனச் சுற்றிப் பாருங்கள். உண்மையான விவசாய நிலைமை புரியும்" என்கிறார்.

அந்நிய முதலீடுகளுக்கு இந்திய சட்டங்கள் அதிகம் கெடுபிடியாக இருப்பதாகவும் - சிவாஜியில் உபயோகப்படுத்தப்படும் பெரா (FERA) உட்பட, அப்போதைய அரசின் மெத்தனத்தால் 'தபோல்' போன்ற பல நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறுகிறார். தாஜ்மகால் ஒன்றை மட்டும் வைத்தே சுற்றுலாத்துறையில் வருடத்திற்கு 20 பில்லியன் டாலர் ஈட்டலாம் எனத் திட்டம் வைத்திருக்கிறார் நாராயணமூர்த்தி. இங்கிலாந்தில் அரண்மனைக் காவலாளி மாறுவதைப் பார்க்கவே ஆயிரம் பேர் வருகிறார்கள். நாம் தாஜ்மகாலை போன்ற பல நல்ல வளங்களை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்கிறார்.

CII-WEFன் வருடாந்திர கூட்டத்தில் பங்குபெறாமல் போலோ விளையாடப்போன நிதி அமைச்சரை எல்லாம் இந்தியா கண்டிருக்கிறது எனவும், நிதியமைச்சர் என்ற பதவி தனி இசைக்கலைஞனைப் போலல்லாமல், வர்த்தகம்-பெட்ரோலியம் போன்ற துறைகளையும் நெறிப்படுத்தும் இசை இயக்குனர் என்கிறார். அப்படி அவர் தரும் பட்ஜெட்டை, நிதியாண்டு முடியும்வரை விமர்சிப்பது சரியல்ல என்கிறார். பொருளாதார அறிவுள்ள சட்டத்துறை, சட்ட அறிவுள்ள நிதித்துறையும் இந்தியாவிற்கு மிக அவசியம் என்கிறார்.

ஆசிரியர் காட்டும் சில மேற்கோள்கள் அருமையாக இருக்கின்றன. உதாரணமாக, ஜெயலலிதா வழக்கிற்கு நீதிபதி பிரஜேஷ் குமார் சொன்னது: "எழுதப்பட்ட ஓர் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொன்றும் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது கடினம். பழக்கத்திலும், நடைமுறயிலும்தான் சில விஷயங்களை விளக்கமுடியும். இப்படித்தான் ஜனநாயகம் நடைமுறைக்கு வருகிறது".

அரிசிக்கு ஒரு ரூபாய் அதிகம் கொடுங்கள், காமராஜர் காலம் அப்பாவித்தனமான காலம், பங்குச்சந்தைக்கும் தஞ்சை விவசாயின் அடுப்புக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லும் இடங்களிலும், அவற்றை விளக்கிய விதங்களிலும் ஆசிரியர் பளிச்சிடுகிறார்.

இதே வலைத்தளத்தில் மதன் அவர்களின் கிமு.கிபி. என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தோம். மெசபடோமியாவில் இருந்த 'ஊர்' (Ur) என்ற ஊர்தான், நாகரீக மனிதனின் முதல் ஊர், அதாவது முதல் நிரந்தர உறைவிடம் என்கிறார் மதன். முதல் ஊரின் பெயரும் தமிழில் ஊராக அமைந்திருப்பது ஆச்சரியமே என்று மதன் சொன்னபோது நானும் லேசாகச் சிரித்தேன். ஆனால், இப்புத்தகத்தில் ஈராக் விஷயத்தில் அமெரிக்காவின் அத்துமீறலை இரண்டு கட்டுரைகளில் ஆசிரியர் விளக்கி இருக்கிறார். ஈராக்கில் சேதப்படுத்தப்பட்ட சில இடங்களின் பட்டியலையும், அவற்றின் பெருமையையும் விளக்கி இருந்தார். அப்பட்டியலில் முதன்மையாக ஊரைப் (Ur) பார்த்தபோது, நாம் வாழும் காலத்தில் இது நடக்கிறது என்பதால் என்னால் கேவலப்படாமல் இருக்கமுடியவில்லை.


மாயாவதியும்-ராப்ரிதேவியும் பதவிக்கு வருமுன் ஜம்மு-காஷ்மீர் அரசுதான் கடைநிலையில் இருந்தது, தனது ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகள் என்று LTTE சொன்னபோது NorthEast என்பதற்கு இடையில் '-' இல்லை. இதுபோன்ற சில இடங்களில் ஆசிரியர் வார்த்தைகளில் விளையாடுகிறார்.

புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியே இப்புத்தகம் பெரும்பாலும் அலசினாலும், WEF-WSF போன்ற பொதுவான கட்டுரைகள் மிக நன்றாக இருக்கின்றன.

ஒருமுறை ஆசிரியர், பதவியில் இல்லாதபோது, எங்கள் கல்லூரியில் பேசினார். அவர் பேச்சில் இருந்த தெளிவும், நிதானமும், உண்மையும், கேட்பவர்களின் அமைதியும் என்னை ஆச்சரியப்படுத்தின. அதனால்தான் பொருளாதாரம் என்ற துறையைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவுடன் இப்புத்தகம் வாங்கினேன். அரசியல் கலந்த பொருளாதாரம் நாடுபவர்களுக்கு இது ஏற்ற புத்தகம்.

-ஞானசேகர்

Friday, April 27, 2007

21. கருவாச்சி காவியம்

புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்
- வைரமுத்து

------------------------------------------
புத்தகம் : கருவாச்சி காவியம்
ஆசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 2006
வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ350

------------------------------------------












மேற்கண்ட பச்சை நிறத்திலான வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை இது. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்குப் பிடித்த தொடர் எதையும், ஒவ்வொரு பகுதியாக காத்திருந்து படிக்காமல், முழு தொகுதியாகத்தான் படிப்பேன். இந்த முறை எனக்குப் பிடித்திருக்கிறது.

கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.



















கருவாச்சியின் கணவன், திருமணமான ஆறே நாட்களில் அவளை விலக்கி வைக்க வேண்டி கூட்டியிருக்கிற பஞ்சாயத்துக் கூட்டத்தில் தொடங்குகிறது கதை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு முன்னேறி...மன்னிக்கவும், இந்த அதிசயம் மட்டும் இந்தக் கதையில் நிகழவில்லை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு, உயிர் வாழ உதவுகிறாள் என்பதுதான் கதை. அனுபவம் ஒரு பெண்ணை(மனிதனை) எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் வைரமுத்து.

கதையின் களம் தேனி மாவட்டத்தில் ஏதோ ஓர் கிராமம். கதையின் காலம் இந்தியச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம். வார்த்தைகளைக் கிராமத்துப் புழுதியில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். இயல்பான எழுத்து, தெளிந்த நீரோடை போல ஓடுகிறது. மிகச்சிறந்த எழுத்தாளுமை கொண்டவர் என்பதை கவிஞர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அம்மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் காதல், வைராக்கியம், பழிவாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, வக்கிரம், உக்கிரம், அறியாமை, வீட்டு வைத்தியம் என்று பல செய்திகளை மிக லாவகமாகச் சொல்ல முடிகிறது வைரமுத்துவால். மருத்துவம் பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டேயாக வேண்டும். இந்தக் கதையில் மூலிகை மருத்துவம், கை மருத்துவம் பற்றிய குறிப்புகள் அங்கங்கே நிறைய சொல்லப்படுகின்றன. அந்த வகையிலும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்தான்.

கருவாச்சி, கட்டையன், சடையத்தேவர், பெரிய மூக்கி, கொண்ணவாயன், அழகு சிங்கம், சுப்பஞ்செட்டியார், பவளம், கனகம், பூலித்தேவன் என்று பாத்திரங்களை நம் மனதிலேயே அடுக்கி வைத்துவிட்டார் ஆசிரியர். இவர்களுக்கிடையேயான உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகு மட்டுமில்லை, அதில் உண்மையும் இருக்கிறது. ஒவ்வொரு கதபாத்திரத்துக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு பெண், பேன் பார்ப்பதில் பெயர் பெற்றவள். யாருக்கும் பேன் பார்ப்பதென்றால் அவளைத்தான் கூப்பிடுகிறார்கள். கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும், இது நிகழ்வதுதான்.

கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் பல பழைய விஷயங்களை, புதிதாகச் சொல்கிறார் கவிஞர். கருக்கலைப்பு பற்றி வருகிற ஒரு பகுதி... கொஞ்ச நேரம் என்னை உறைய வைத்துவிட்டது. இப்படித்தானே என் பாட்டியோ, முப்பாட்டியோ செய்திருப்பாள் என்று நினைக்கும்போது, மனதைப் பிசைகிறது. முன்னுரையில் கவிஞர் நன்றி கூறும்போது சொல்லும் சில வார்த்தைகள் 'தனியொருத்தியாய் அவள் எப்படி பிள்ளை பெற்றாள் என்று மண்டியிட்டுக் காட்டினாளே அந்த மாதரசி - எனக்கு அழுகையே வந்து விட்டது'. கருவாச்சி தனியே பிள்ளை பெறும்போது, எனக்கும் இதே உணர்ச்சி மேலிட்டது. உண்மையிலேயே அழுதுவிட்டேன். மனிதன் உணர்ச்சிகளின் கலவைதானே?

'பண்படுத்துவது துறவறம் மட்டுமல்ல; சாதாரண வாழ்க்கையில் ஈடுபடுபவனும் பக்குவப்படுகிறான், அனுபவங்களால்' என்று புரிய வைக்கிறார் ஆசிரியர். கள்ளிக்காட்டு இதிகாசத்துக்குப் பிறகு மீண்டும் தன் ஊர்ப்புறங்களைப் பதிவு செய்திருக்கிறார். கருவாச்சி காவியத்துக்கான தூண்டுகோலாக இவர் எடுத்துக்கொண்டவை, இவர் குடும்பப் பெண்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும், இவர் கேள்விப்பட்ட கிராமத்துப் பெண்களின் கதைகளுமே!

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரின் பதிலும்:

உங்கள் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்’ இரண்டில் பெரிதும் வெற்றி பெற்ற படைப்பு எது?


படைப்பாக்கத்தில் வெற்றி பெற்றது எது என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். விற்பனையில் வெற்றி பெற்றது கருவாச்சி காவியம்தான் என்று கணக்கு சொல்கிறது. 58 நாட்களில் மூன்றாம் பதிப்பு. எல்லாம் வாசகர் கொடுத்த வரம்.

தனக்குக் கிடைத்திருக்கும் புகழைக்கொண்டு, தன் மக்களின் வாழ்வைப் பதிவு செய்யவும், தமிழ் செய்யவும் முனைந்திருக்கும் வைரமுத்து கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர். இவரைத்தவிர வேறு யாரேனும் எழுதி இருந்தால் இந்தப் புத்தகம் இத்தனை பெரிய வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே!

புத்தகத்தின் பின்னட்டையில் நான் கண்ட வைரமுத்துவின் வாசகம் "தமிழில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது".

கொஞ்சம் கர்வம் வெளிப்படும் வார்த்தைகள்தான் என்று நினைத்த நான், கர்வப்படத் தகுதியுள்ளவர்தான் இவர் என்பதைப் புத்தகத்தைப் படித்தபின் மீண்டும் ஒருமுறை புரிந்துகொண்டேன்.

- சேரல்

Tuesday, April 24, 2007

20. நிழல் வெளிக் கதைகள்

பேய்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம் இலக்கியங்களின் சில ஆயிரம் பக்கங்கள் காலியாகவே இருந்திருக்கும்
- யாரோ
----------------------------------------
புத்தகம் : நிழல் வெளிக் கதைகள்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2005
விலை : பின் அட்டையில் ரூ 60 என்றும், உள்ளே ரூ70 என்றும் அச்சிடப்பட்டிருந்த இப்புத்தகத்தை ரூ70க்கு வாங்கினேன்.
----------------------------------------





கடவுள், காதலைப் போலவே அதிக சர்ச்சைகளுக்குள்ளாகிற ஒரு விஷயம் பேய். இருக்கிறதா? இல்லையா? கொடூரமானதா? சாந்தமானதா? மனிதனுக்கு உதவி செய்கிற பேய்கள் கூட உண்டாமே? என்று எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டு இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன பேய் பற்றிய பயங்களும், அவை குறித்தான கதைகளும்.

மன அழுத்தத்திற்கு ஆட்படுகிற மனிதர்களின் மனத்தில் உருவாகும் கற்பனைக் கதாப்பத்திரங்களே பேய்கள் என்கிறது அறிவியல். பேயைப் புகைப்படத்தில் பதித்து வருபவர்களுக்கு, அவை மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் கதிர்களால் உருவாகும் பிம்பங்கள் என்று மறுப்பு சொல்கிறது அறிவியல்.

பேய்கள் என்பன மனிதனின் வக்கிர எண்ணங்களும், மாசு படிந்த மனமும்தான் என்பதாக நீதி சொல்கின்றன சில பழந்தமிழ் இலக்கியங்கள். மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக, கடவுளைப் போன்றே படைக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம்தான் பேய் என்கின்றனர் நாத்திகவாதிகள்.

எது எப்படியோ! மனிதனின் அதீதக் கற்பனைக்கு ஒரு வடிகாலாக பேய்க் கதைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுவயதில் நான் கேட்டு வளர்ந்த கதைகளில் பெரும்பாலும் ஒரு பேயாவது வந்துவிடும். மனம் முழுக்க ஆக்கிரமித்து பயமுறுத்திக் கொண்டிருந்த பேய்கள் பற்றிய நினைவு இன்று வரை அகலவிலை. எல்லோருக்கும் பொதுவான அனுபவங்களைப் பட்டியலிட்டால் அதில் பேய்களோடான அனுபவம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

நம்மைப் போலவே பல பேய்க்கதைகளை மனதில் உள்வாங்கிக்கொண்டிருக்கிற ஜெயமோகன், தன் கற்பனையில் தோன்றிய சில பேய்க்கதைகளை வழங்கியிருக்கிறார். ஜெயமோகன், தமிழ் எழுத்துலகில் பரவலாகப் பேசப்படுகிற ஓர் எழுத்தாளர். நாஞ்சில் மண்ணில் பிறந்த இவரது எழுத்தில் மண்ணின் மணம் வீசுவது உண்மை. 'கஸ்தூரி மான்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் இவர்.

பத்து பேய்க்கதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத்தொகுப்பு, இந்நூல். இக்கதைகளைப் படிக்கும்போது ஜெயமோகன் ஆழ்ந்த விஷய ஞானமும், லாவகமான வார்த்தைப் பிரயோகமும் கைவரப்பெற்றவர் என்பது தெரிகிறது. கொஞ்சம் அறிவியல் உண்மைகளையும் கையாண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு கதையும் பேய் இருப்பதை உறுதி செய்வதாகவே முடிகிறது.

உதாரணத்திற்கு, இப்புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை 'தம்பி'. சிறு வயதில் மங்கலாய்டு(மூளை வளர்ச்சி குறைந்த) நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன தன் அண்ணனின் ஆவி தன்னைப் பின் தொடர்வதாக மனவியல் மருத்துவரைக் காண வருகிறான் ஓர் இளைஞன். அவனுக்கு வந்திருப்பது SCHIZOPHRENIA என்னும் மனப்பிளவு நோய் என்று முடிவுசெய்கிறார் மருத்துவர். தன் அண்ணன் தன் மீது பிரியமாக இருந்தானென்றும், ஆனால் அவனைத் தனக்குப் பிடிக்காது எனவும், சிறுவயதில் தன்னைப்போலவே இருந்த அவன் மீது வீட்டில் இருப்பவர்கள் அதிக அக்கறையோடு நடந்து கொள்வது இவனுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஒருநாள் அவன் கிணற்றில் விழுந்து இறந்து போனதாகவும் தெரிவிக்கிறான்.

அண்ணனின் ஆவி இவனைத்தொடரும்போது ஒரு குரலும் கேட்கிறது, இவன் அண்ணன் பேசியது போலவே. அது இவன் உள்மனத்தில் பதிந்த இவன் அண்ணனது குரல் இவனை அறியாமல், இவன் குரல் நாணிலிருந்து வெளிப்படுவதாக(VENTRILOQUISM) விளக்குகிறார் மருத்துவர்.

இனி, அவன் அண்ணனின் ஆவி அவனைத் தொடரும்போது அதன் மீது பாசத்துடன் நடந்து கொள்ளும்படியும், அன்பாகப் பேசும்படியும் சொல்கிறார் மருத்துவர். முதலில் மறுக்கும் இளைஞன் கடைசியாக ஒத்துக் கொள்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலையில் முன்னேற்றம் காணும் இவன் ஒருநாள் மருத்துவரிடம் தன் அண்ணன் தானாக சாகவில்லை, தானே அவனைக் கிணற்றில் தள்ளிக் கொன்றதாகச் சொல்கிறான். மேலும் இனிமேல் தன்னால் அவன் மீது பாசம் உள்ளவனாக நடிக்க முடியாது என்று கத்துகிறான்.

அன்று இரவு, உயிருக்குப் போராடுகிறான் இவன். யாரோ அவன் கழுத்தை நெரிப்பதாக உணர்கிறான். யாராலும் காப்பாற்ற முடியாமல் இறந்து போகிறான். அவன் இறந்த பிறகு மருத்துவரின் காதில் விழுகிறது ' கெட்ட ம்பீ...நீ கெட்ட ம்பீ' என்ற அவன் அண்ணனின் குரல். என்பதாக முடிகிறது இந்தக் கதை. இங்கே இவனைக் கொன்றது குற்ற உணர்ச்சியா? இல்லை அண்ணனின் ஆவியா?

குதிரைப் பந்தயத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதையில், குதிரைகள் சம்மந்தப்பட்ட எத்தனையோ விஷயங்களை விளக்குகிறார். மேன்ஷன்களில் வாழும் வயதான பிரம்மச்சாரிகளின் அந்தரங்கத்தை அலசி ஆராய்கிறது ஒரு கதை; ஒவ்வொரு ஊரிலும் நடமாடக்கூடாத இடமாக அறிவிக்கப்பட்ட ஓரிடம் இருக்கும். அங்கே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்று பல கதைகளும் பழக்கத்திலிருக்கும். அப்படிப்பட்ட இடத்திற்குப் போய் வந்தவனின் அனுபவத்தை விளக்குகிறது ஒரு கதை; இப்படி ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இயங்குகிறது.

இப்புத்தகத்தைப் படிக்கும்போது கொஞ்சம் பயம் உள்ளே இருந்தாலும், பேய்கள் நியாயமாகவே நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது. ஜெயமோகன் எழுத்தின் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வத்தைத் தோற்றுவிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பல களங்களையும் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்கலாம்.

- சேரல்

Monday, March 26, 2007

19. காமக்கடும்புனல்

உலகின் ஒவ்வொரு உயிரின் அடிப்படை நோக்கமும் இனப்பெருக்கம்தான்
- சிக்மண்ட் ஃப்ராய்ட்
------------------------------------------------------
புத்தகம் : காமக்கடும்புனல்
ஆசிரியர் : மகுடேசுவரன்
வெளியிட்டோர் : யுனைடெட் ரைட்டர்ஸ்
வெளியான ஆண்டு : 2004
விலை : 100ரூ
------------------------------------------------------
காமக்கடும்புனல், பாலியல் பற்றிய 400 கவிதைகள் கொண்ட ஒரு கவிதைத்தொகுப்பு.

மகுடேசுவரன் திருப்பூரில் பின்னலாடைத்தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணிபுரியும் ஓர் இளைஞர். 'பூக்கள் சொல்லும் தகவல்கள்', 'அண்மை', 'யாரோ ஒருத்தியின் நடனம்' ஆகியவற்றிற்குப் பிறகு இவர் வெளியிட்டிருக்கும் மூன்றாவது கவிதைத்தொகுப்பு இது.

பாலியலைப் பல்வேறு கோணங்களில் இருந்து சிந்தித்து எழுதி இருக்கிறார். எந்தவொரு கவிதையும் எண்ணிக்கைக்காகத் திணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஓர் ஆணின் பார்வையிலிருந்து மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் பார்வையிலும் பாலியலையும், காமத்தையும் அணுகியிருக்கிறார்.

இன்னும் முறையல்லாத உணர்ச்சியாக நிருபிக்கப்படும் காமத்தையும், அதன் புனைப்பெயரான, சினிமாக்களில் புனிதமாகக் காட்டப்படும் காதலையும் பற்றிய கவிதைகள், பெண்ணின் உணர்வுகள் மற்றும் இயற்கை பெண்ணுக்கு அளித்த அசவுகரியங்கள் பற்றிய கவிதைகள், சுய இன்பத்தைப் பற்றிய சில கவிதைகள், நிதர்சனம் சொல்லும் சில கவிதைகள் கொண்டு இப்புத்தகத்தை நிரப்பியிருக்கிறார் ஆசிரியர்.

என்ன எழுதி என்ன? சில உண்மைகள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

எனக்கு இந்தக் களத்தில் 95% நேரடி அனுபவம் இல்லை என்பது 100% உண்மையாதலால், இப்புத்தகத்தை விமர்சிக்காமல் இதில் எனக்குப்பிடித்திருக்கிற சில கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன்.
-----------------------------
சொற்கள் பிறழ்ந்தன
கலைந்தன
மருவின
திரிபுற்றன

பிறந்தது புது மொழி
-----------------------------
முதுமை மீது
அனைவர்க்கும் உண்டு
ரகசிய பயம்

பழைய ஆட்டத்தை ஆட
ஆளற்ற தனிமை
தொய்ந்த நரம்புகள்
சுண்டிய ரத்தம்
போகத்திற்கு ஒத்துழைக்காத வெற்றுடல்
-----------------------------
உலகத்தை அழகுபடுத்த
மிச்சமிருப்பவை
இன்னும் பிறவாக் குழந்தைகள்

இன்பமாக
மிச்சமிருப்பவை
அவை
ஜனிப்பதற்கு நிகழா உறவுகள்
-----------------------------
பெண்களுக்கு
ஆண்களிடமிருந்து
என்னென்னவோ உரிமைகள்
கிடைத்தென்ன?

அழைத்தால் வருகிறார்களா
மறுத்தால் விடுகிறார்களா
கணவர்கள்
-----------------------------
ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி

தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லா
தமகளல்லாத
பர ஸ்திரீ
-----------------------------
ஓடிப்போவோர்
முதலில் செய்கிற காரியம்

உள்ளம் திகட்ட
உயிர் அதிரப் புணர்வதுதான்
-----------------------------
'உன்னைப்புணர விரும்புகிறேன்' என்று
நேரடியாகக் கூற இயலவில்லை
நூதனமாக ஆரம்பிக்கிறேன்
'உன்னை விரும்புகிறேன்'
-----------------------------
சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய

எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்
-----------------------------
ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது
-----------------------------
நம் காதலும்
உன்னதமாகத்தான் இருந்தது
நாம் புணரும் வரை
-----------------------------
வீடு துறந்து செல்பவர்கள்
திரும்புவதில்லை
வெளியில் ஒருத்தி
அமைந்துவிட்டால்
-----------------------------
சாதுவாகத் திரிந்தவனின்
குரூர முகத்தைச்
சந்திக்க விருப்பமா?

படுக்கையில் அவன் முகம்
ஓநாயின் வேட்டை முகம்
-----------------------------
என்னை நீங்கள் எங்கும் காணலாம்

பாங்காக்கில் புகையூதியபடி
சோனாகஞ்சில் நகம் பூசியபடி
உடைந்த ரஷ்யாவில் நெட்டைக்கால் தெரியும்படி
கென்யாவில் கிருமி தாங்கியபடி
லாஸ்வேகாஸில் காரோட்டியபடி

உன் வீட்டில்
சுமங்கலி பூஜையில் பாடியபடி
-----------------------------
கணவனால் கைவிடப்பட்டவள்
ஓர் இளைஞனை
வைத்துக்கொள்கிறாள்
புறம்பேசித் திரிகிறது
அவளால் கதவடைபட்டக் கூட்டம்
-----------------------------
அடங்காத காமத்துடன்
தவித்துக்கொண்டிருக்கிறேன்

உனக்கோ
ஆழ்ந்த அயர்ந்த உறக்கம்

விடிந்ததும்
எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்
-----------------------------
நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-----------------------------
'முறையல்லாதன செய்கிறாய்
சொன்னால் கேள் அண்ணா'
கண்ணீர் மல்கப் பேசு தோழி

உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்
-----------------------------
தாய்மையை மதிப்பார்
பெண்மைக்குக் குரல் கொடுப்பார்

மங்கையராய்ப் பிறந்திட
மாதவம் செய்திட வேண்டுமென்பார்

வீட்டம்மா
நிறைமாத கர்ப்பிணி என்பதற்காக
ஒருநாள் விட்டுவைக்க மாட்டார்
-----------------------------
உன் இசைவில்லாமல்
ஏதாவது செய்திருக்கிறேனா?
புணர்ந்தது தவிர
-----------------------------
வேற்றூரில்
யுவதியும் ஓர் இளைஞனும்
அறை எடுத்து
ஒன்றாகத் தங்கினர்
அவர்கள் மொழியாராய்ச்சி செய்துகொண்டிருந்தனர்

என்கிறேன்

நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்
-----------------------------
மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களில் ஒன்று
ஒரு வேசியினுடையதாகவும்
இருக்கலாம்
-----------------------------

- சேரல்

Friday, March 23, 2007

18. கிமு.கிபி

விமர்சனம் செய்கிறவர் சேரல்!

'இளைய தலைமுறைக்கு இரண்டு விதமான அறிவு தேவை. ஒன்று எதிர்காலம் குறித்த முன்னோக்கும் அறிவு; இன்னொன்று வரலாறு குறித்த பின்னோக்கும் அறிவு'

- வைரமுத்து
-----------------------------------------------
புத்தகம் : கிமு.கிபி
ஆசிரியர் : மதன்
வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2006
விலை : 75 ரூ
-----------------------------------------------
குமுதத்தில் வெளியான வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு. மதனுக்கு அறிமுகமே தேவை இல்லை.

'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தின் மூலம், தான் வரலாறு சொல்லும் பாணியே தனி என்று நிரூபித்திருந்த மதன், இந்தப் புத்தகத்திலும் நம்மை ஏமாற்றவில்லை. தன் இயல்பான நடையில் நன்றாக எழுதி இருக்கிறார்.

இதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஏற்கனவே நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயங்களாகவே இருக்கின்றன. எனவே, வித்தியாசமான செய்திகளாக எனக்குத்தோன்றிய சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

450 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியதிலிருந்து புத்தகம் தொடங்குகிறது.

உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்று வரலாற்று ஆதாரங்களோடு சொல்கிறார் ஆசிரியர். ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றிய மனித இனம் 3 லட்சம் ஆண்டுகளில் நடை பயணமாக உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றது.

நாடோடியாகவே வாழ்ந்த மனிதர்கள் கிமு 8000ல் தான் பாலஸ்தீனில் ஜெரீகோ என்ற இடத்தில் முதன்முதலில் ஒரு குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாகரிகத்தின் தோற்றத்தையும், அதன் பல்வேறு படிநிலைகளையும் விவாதித்துவிட்டு, பூசாரிகள், மன்னர்கள் தோன்றிய வரலாற்றையும் சொல்கிறார். கிமு 2334ல் மெசொபடேமியாவில் ஆட்சிக்கு வந்த 'ஸார்கான்' தான் உலகின் முதல் மன்னன் என்று சொல்லப்படுகிறான். 1764ல் பாபிலோனியாவில் மன்னனான 'ஹமுராபி' உலகின் முதல்பெரும் சக்கரவர்த்தி.

ஹமுராபியைப் பற்றி விளக்க ஆசிரியருக்குச் சில அத்தியாங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. உண்மைதான்! உலகின் முதல் பேரரசனின் அரசு அப்படிப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய மன்னன் ஹமுராபி தான்.

'கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபியின் சட்டங்களின் ஆதாரமாக இருந்தது. அடித்தவனுக்கு அடியே தண்டனை! கலப்படம் செய்தால் தண்டனை! கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மரண தண்டனை!

திருட்டுப்போன பொருளைக் காவல்துறை கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பொருளின் இழப்பை அரசே ஈடு செய்தது. மேலும், குறிப்பிட்ட காவல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரை வேறெந்த அரசிலும் இப்படி ஒரு சட்டம் இருந்ததே இல்லை.

ஹமுராபியை தொடர்ந்து ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி சொல்லிவிட்டு இலக்கியத்தில் நுழைகிறார் ஆசிரியர். கிமு 2100ல் எழுதப்பட்ட கில்கெமெஷ் காப்பியம் இலியத், ராமாயண மகாபாரதங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

பாபிலோனியர்களின் மத நம்பிக்கை பற்றி பேசும்போது நம் மனதைக் கவரும் ஒரு பாத்திரம் 'லிலித்'. இவள் பாதி பெண்ணாகவும் பாதி பறவையாகவும் நிர்வாணமாக அலையும் ஒரு செக்ஸ் தேவதை. கலவியின் போது தெறித்து விழும் ஆணின் உயிரணுக்களைக் கொண்டு சாத்தான்களை உருவாக்குவது அவள் வேலை என்று நம்பப்பட்டது.

நம்மைக் கவரும் இன்னொரு பாத்திரம் 'ஆமன் ஹோடப்' எனப்படும் 'ஆக்நெடான்' என்னும் மன்னன். ஓவியத்தில் உண்மயைச் சொல்லுங்கள் என்று கலைஞர்களுக்குக் கட்டளை இட்டவன் இவன். மதங்களில் நம்பிக்கை இல்லாமல் சூரிய வழிபாட்டை மேற்கொண்டவன்.

எகிப்தின் வரலாறு சொல்லும்போது, மன்னர்கள் தங்கள் இனத்தில் கலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தங்கள் மகள்களையே மணந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

சற்று ஹரப்பா, மொஹஞ்சதாரோவைப் பார்வை இட்டுவிட்டு ஏதென்ஸின் வரலாறு சொல்லத்தொடங்குகிறார் ஆசிரியர். இதில் தெரிந்த பல விஷயங்களையே குறிப்பிட்டுள்ளார். புது விஷயங்கள் என்றால், நல்ல நாகரிகம் பெற்றிருந்த கிரேக்கத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டனர். 'ஹோமோ செக்ஸில்' ஈடுபட்டவர்கள் அதிகம். சொல்லப்போனால் 'ஹோமோ செக்ஸில்' ஈடுபடாதவர்களுக்கு மதிப்பு இல்லை. 'மகிழ்ச்சிக்கு விலைமாதர்கள்; குழந்தைக்கு மனைவி; காதலுக்கு நண்பன்' என்று குறிப்பிடுகிறார் டெமஸ்தனிஸ்.

வரலாற்றின் தந்தை ஹெரோடோடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேடஸ், நையாண்டி நாடகங்கள் எழுதிய அரிஸ்டோஃபனீஸ், தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்ஸாந்தர் பற்றியெல்லாம் பேசிவிட்டு இந்திய வரலாற்றில் நுழைகிறார் மதன்.

இந்தியாவின் முதல் பேரரசர் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், சந்திரகுப்தரின் மகன் பிந்து சாரர், அவரின் மகன் அசோகர் என்று வரலாறு சொல்லி மௌரிய வம்சம் கிமு 188ல் வீழ்ச்சி அடைவதோடு முடிக்கிறார்.

வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். 'வந்தார்கள்; வென்றார்கள்' முன்னுரையில் சுஜாதா சொல்வது போல, மதன் வரலாற்றுப்பாடங்களை எழுதினால் யார் வேண்டுமானாலும் நூற்றுக்கு நூறு வாங்கலாம்.

புத்தகத்தின் குறை, அங்கங்கே தெரியும் சில எழுத்துப் பிழைகள். உதாரணமாக, ஆரியருக்கு ஆசிரியர், ஐந்நூறுக்கு ஐந்தாறு, இப்படிச் சில பிழைகள். ஓரிடத்தில் அலெக்ஸாந்தரின் ஆசிரியர் பிளாட்டோ என்று அச்சாகியுள்ளது. கண்டிப்பாக இது அச்சுப்பிழைதான். அடுத்தப் பதிப்பில் இந்தப் பிழைகள் நீக்கப்படும் என்று நம்புவோமாக!

- சேரல்

Thursday, March 22, 2007

17. CONFESSIONS OF A SECULAR FUNDAMENTALIST

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-------------------------------------------------------------
புத்தகம்: Confessions of a secular fundamentalist
ஆசிரியர்: மணி சங்கர் அய்யர் (பஞ்சாயத்து ராஜ்ஜிய மத்திய அமைச்சர்)
மொழி : ஆங்கிலம்
விலை: 295 ரூபாய்
பதிப்பகம்: பென்குவின் (Penguin)
பக்கங்கள்: 271

-------------------------------------------------------------

















லாகூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக டெல்லி சென்றிருக்கும் ஆசிரியரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அந்தமான் செல்லுலார் சிறை பற்றிய இவரது அணுகுமுறையால் இவர்மேல் எனக்கொரு தனிமதிப்பு உண்டு. இப்புத்தகம் படிக்கவும் அவ்வணுகுமுறையே காரணம்.















தலைப்பின் நேரடி மொழிபெயர்ப்பு சொல்வதுபோல், மணி சங்கர் என்ற ஒரு மதசார்பற்ற தத்துவவாதியின் மதசார்புள்ள நம்பிக்கைகளைப் பற்றி கூறுவதே இப்புத்தகம்.
மதசார்பின்மை என்ற கொள்கையைச் சில மற்ற கொள்கைகளுடனும், வரலாற்றுடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துடனும், இன்றைய மதச்சார்புடனும் விளக்கி கடைசியாக இந்தியாவில் மதத்தால் சிறுபான்மையினரின் நிலைகளையும், மதங்களால் அல்லல்படும் மற்ற நாடுகளையும் அலசிவிட்டு, தான் ஏன் நாத்திகன் என முடிக்கிறார். கட்டுரை பாணி புத்தகம் என்பதால், நான் புதிதாக அறிந்துகொண்ட தகவல்களை மட்டும் இங்கு பகிர்்கிறேன்.

இப்புத்தகத்தின் முன்னுரையே வித்தியாசமானது. 1995ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரியுடன் இவர் கொண்ட ஒரு விவாதம்தான் முன்னுரை.

1986ல் பாபர் மசூதியின் எல்லைக்குள் இருந்்த ராம்லாலா கோவிலின் கதவுகளைத் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் இருந்து, இந்தியர்களை மதவிவாதம் பிடித்துக் கொண்டது என்று ஆரம்பிக்கிறார். அதற்கெல்லாம் முன்னரே மதத்தின் பெயரால் இந்தியா பிரிக்கப்பட்டதும், இந்துக்களுக்கு Tushtikaran சொன்ன காந்தி முஸ்லீம்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை என்றும் பல இடங்களில் மதம் தலைதூக்கியதைச் சொல்கிறார்.

விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையில் இந்தியர்கள் என்பவர்கள் யார் என்று விளக்கியதைப் பல அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லி, சில கேள்விகள் வைக்கிறார். அதுபோன்ற அமைப்புகள் மதத்தின் அடிப்படையில் எல்லைகளைப் பிரிக்கப் போராடுவதாகவும், ' Statehood based on religion will not work' என்று இந்தியா வந்த ஒரு யாத்திரீகர் சொன்ன உண்மையை மேற்கோள் காட்டுகிறார்.

புத்தகத்தின் பெரும்பகுதி இந்து - முஸ்லீம் மதங்களைப் பற்றி மட்டுமே விதாதிக்கிறார். கடைசியில் ஒருபகுதி மற்ற மதங்களுக்காக. 1857 முதல் 1947 வரை இந்திய யூனியனில் இவ்விரு மதங்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினகளைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமானது, மீரட் இந்து சிப்பாய்கள் புரட்சி செய்தது ஒரு இந்துவை ஆட்சியில் அமரச்செய்ய அல்ல; பகதூர்ஷா என்ற முஸ்லீமை. நெத்தியடி கருத்து. இன்னொரு கருத்து, இந்திய யூனியன் மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிந்ததற்குச் சர்ச்சில் சொன்ன கருத்து. முகத்தில் அடித்த கருத்து அது.

இப்புத்தகத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்தது, மதங்களைப் பற்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்ற பகுதிதான். இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954 இந்து மற்றும் முஸ்லீம்களை எப்படி பாதிக்கிறது, ஏன் இவ்விரு மதங்களுக்கும் தனித்தனி திருமணச் சட்டங்கள் உள்ளன, ஏன் இந்தியா முழுவதும் பொதுவான சட்டங்களைச் ( eg. Article 370) சில நேரங்களில் கொண்டுவர முடிவதில்லை இதுபோன்ற பல கேள்விகள் எனக்குக் கிடைத்தன; பதில்களுடன். ஆசிரியர், இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதமாற்றங்கள் பற்றிய சட்டங்கள், பசுவதைத் தடுப்பு சட்டம், Shah Bano பிரச்சனை, பாதிரியார் Graham Staines ஒரிஸாவில் எரிக்கப்பட்ட பிரச்சினை, மாநில அரசின் உதவிபெறும் மதச் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பற்றிய கட்டுப்பாடுகள், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, வந்தே மாதரம் பிரச்சினை, ஜம்மு - காஷ்மீர்க்கான சிறப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 370 இவை போன்ற பல விஷயங்களைப் பற்றி தெளிவான விளக்கங்களை இப்பகுதியில் பெறமுடியும்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இரு நாடுகளும் மிகப்பெரிய மதவன்முறைகளை எதிர்கொண்டன. அந்நேரத்தில் 1949ல் இங்கிலாந்து கரன்ஸியின் மதிப்பு சரிந்தது. அதற்குக் கீழ் இருந்த இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானுடன் வைத்திருந்த பொருளாதார உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்படாதவாறு நேரு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, அவருக்கு நான் ஒரு சல்யூட். முகமது கஜினி ஆரம்பித்துவைத்த சோம்நாத் கோவில் பிரச்சனை மீண்டும் தலைதூக்கியபோது, அக்கோவிலைப் புதுப்பிக்க ஒரு பைசாகூட கொடுக்காமல் இருந்த நேருவுக்கு மீண்டும் ஒரு சல்யூட். ஆனால் 1989ல் ரூபையா சயீத் கடத்தப்பட்டபோது, இந்திய அரசின் அவசர முடிவால் காஷ்மீர் பிரச்சினை மீண்டும் உயிர்பெற்றதையும், அதன்பிறகு கோத்ரா, ஹீப்ளி போன்ற சப்பை பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்ததையும், உலகமயமாக்கலை அறிமுகப்படுத்திய குஜராத் வன்முறை பூமியாகப் போனதையும் விலாவரியாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.

இந்தியாவின் சிறுபான்மை மதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் முக்கிய பிரச்சனைகளையும், தீர்வுகளையும் அற்புதமாக விளக்கி உள்ளார். இப்பகுதியில் நிறைய விசயங்களைப் புரிந்து கொண்டேன். இஸ்ரேல், பாலஸ்தீன், யுகோஸ்லேவேகியா, பங்களாதேஷ் என்று மதப்பிரச்சனைகள் உள்ள நாடுகளின் என்ன நடந்தது - நடக்கிறது எனக்கூறி, நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்.

புத்தகத்தின் கடைசியில், 2000ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அரசியல் பயிற்சி துறையின் சார்பில் நடத்தப்பட்ட மதச்சார்பின்மை பற்றிய கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்விகளையும், அவை பெற்ற பதில்களையும் பகிர்ந்துள்ளார்.

ஆசிரியர் நிறைவு செய்தபடியே நானும் முடிக்கிறேன். "Secularism is not about giving primacy to my beliefs. It is about respecting the right of others to hold beliefs that I do not hold".
சில பின் குறிப்புகள்.

1) The argumentative Indian என்ற புத்தகத்தில் அமர்தியா சென் சொல்கிறார்: 'மதவேற்றுமைகளைப் போக்க தீ இலாஹி என்ற மதத்தைத் தோற்றுவித்த அக்பர், கடைசிவரை தனது சொந்த மதத்திலேயே இருந்தார்'.

2) 1993 மும்பை கலவரங்களைப் பற்றி சமீபத்தில் Black Friday என்ற படம் வந்தது. அருமையான படம்.

3) பகத்சிங் சிறையில் இருக்கும்போது எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர், 'நான் நாத்திகன் - ஏன்?'.

4) Confession of என ஆரம்பிக்கும் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் Confessions of Nat Turner என்ற புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் படிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.

- ஞானசேகர்

Tuesday, March 06, 2007

16. மேல்மாடி (All about Brain)

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

மூளையின் மகத்துவம் அறிய பியானோ வாசித்துப் பாருங்கள்.
-யாரோ

டினோஸர்களில் சில இனங்கள் அழிந்ததற்குக் காரணம் மூளையின் உயரமே.- அறிவியல் ஆராய்ச்சி
-----------------------------------------------------------
புத்தகம்: மேல்மாடி (All about Brain)
ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்
விலை: 60 ரூபாய் (!!!)
மொழி: தமிழ்
வெளியிட்டோர்: நலம் (கிழக்கு பதிப்பகம்)
-----------------------------------------------------------
வழக்கம்போல் ஆசிரியரைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எனக்கும் இவரைத் தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

"மனமும் இதுதான். மனச்சாட்சியும் இதுதான். மனிதனைப் பொறுத்தவரை எல்லாமுமாக இருப்பது மூளை" என்று இப்புத்தகத்தின் பின் அட்டையில் எழுதி இருந்தது; வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியர் தெளிவாய் இருக்கிறார்; புத்தகமும் தெளிவாய் இருக்கும் என்ற நம்பிக்கையில். என் நம்பிக்கை வீண்போகவில்லை; தெளிவாகக் குழம்பிப் போனேன். "இதயத்தைச் சமாதானப் படுத்துவதைவிட மூளைக்கு அடிமையாவதே உத்தமம்" என்று எனது சிறுகதை ஒன்றில் நான் குழப்பி இருந்த இந்த விசயத்தை, இந்தியன் திரைப்பட வசனத்தில்மூலம் விளக்கி இருந்தார் ஆசிரியர். "காட்டிகொடுன்னு மூளை சொல்லுது. ஆனா வேணாம்னு இந்தப் பாழாப்போன மனசு தடுக்குதே""எனக்கு மனசு, மூளை ரெண்டுமே ஒண்ணுதான்".

புத்தகத்தின் தலைப்பைப் போல, மூளையைப் பற்றி பெரும்பாலும் எல்லா விசயங்களையும் தமிழில் பல உதாரணங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். டிவி பார்ப்பது, நீதிமன்றத்தில் சாட்சி சொல்வது, தூக்கத்தில் நடப்பது, ஞாபகமறதி, கோமா, டவுன் சின்ட்ரோம் என்று ஏன் எதற்கு எப்படி எது எங்கே என்று பல கேள்விகளுக்கு விடை செல்ல முயலும் புத்தகம் என்பதால், எனக்கு எப்படி விமர்சனம் எழுதுவது என்று தெரியவில்லை. தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் வரவேற்கப்பட வேண்டும் என்பதற்காக என் (எங்கள்) வழியே ஒரு எளிய அறிமுகம் இது.

அரைகுறை அறிவியல் எனக் கிண்டல் செய்யப்படும் Phrenology பற்றி, இப்புத்தகம் மூலம்தான் நான் தெரிந்து கொண்டேன். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைப்பவர்கள் Left - Right Brain Theory படித்துப் பாருங்கள்; பலம் - பலவீனம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

ஞாபகமறதி அதிகம் என்று அடிக்கடி வருத்தப்பட்ட எனக்கு இப்புத்தகம் ஒரு நல்ல புத்துணர்வு கொடுத்தது. அறியாமை அவிழ்ந்தபோது நம்பிக்கை விடுபட்டது. ஆளவந்தான், குடைக்குள் மழை தவிர மற்ற சில தமிழ் சினிமாக்களில் சீரழிக்கப்பட்ட Schizophrenia பற்றி ஆசிரியர் ஒன்றும் எழுதாமல் போனதில் ஒரு சிறு வருத்தம். மற்றபடி தமிழில் ஒரு நல்ல அறிவியல் புத்தகம்.

Euphoria பற்றி குறிப்பிடும்போது ஆசிரியர் சொல்கிறார், "அர்த்தமே இல்லாமல் எல்லாவற்றிற்கும் மயிர்கூச்செரிந்து பரவசப்படும் ஒருவரை யாரும் நோயாளியாகக் கருதுவதில்லை".

-ஞானசேகர்

Monday, February 19, 2007

15. மறைவாய் சொன்ன கதைகள்

வெகு நாட்களுக்குப் பிறகு, விமர்சனம் செய்கிறவர் சேரல்.
-------------------------------------------------------
புத்தகம் : மறைவாய் சொன்ன கதைகள்
ஆசிரியர்கள் : கி.ராஜநாராயணன், கழனியூரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2005
விலை : ரூ230

-------------------------------------------------------
திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசிக்கு அருகில் இருக்கும் கழுநீர்க்குளம் என்னும் ஊரில் பிறந்தவர் கழனியூரன். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கி.ரா வைப் பற்றி பெரும்பாலான தமிழ்வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.






இனி புத்தகத்தைப்பற்றி,

100 நாட்டுப்புறப் பாலியல் கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு இது! இதில் இடம்பெற்றுள்ள கதைகள், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'(1992, நீலக்குயில் பதிப்பகம், கி.ரா), 'நாட்டுப்புறப் பாலியல் கதைகள்' (1994, நீலக்குயில் பதிப்பகம், கழனியூரன்) ஆகிய புத்தகங்களிலிருந்தும், 'இறக்கை' மற்றும் 'வாசுகி' இதழ்களில் கழனியூரன் எழுதிய பாலியல் கதைகளில் இருந்தும் தொகுக்கப்பட்டவை.

இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

சில கதைகள் நாம் ஏற்கனவே அறிந்தவையாகவும் இருக்கின்றன. இன்றும் கூட பாலியல் விஷயங்களை நமக்கு முதன்முதலில் அறிமுகம் செய்பவை இது போன்ற பாலியல் கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற கதைகளும், கதை சொல்லிகளும் எல்லா கிராமங்களிலும் பரவிக்கிடக்கின்றனர்.('அர்' விகுதி இந்த இடத்திற்குச் சரியானதா?)

இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். 'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்' என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.

அடிமனக்கூறுகளில் ஆக்ரமித்திருக்கும் அதீதமான பாலியல் கற்பனைகள், சில கதைகளாக உருவெடுத்திருக்கின்றன. மனித உறவுமுறைகள் ஒழுங்கு படுத்தப்படாத காலத்தில் புனையப்பட்ட கதைகள் சிலவும் இடம்பெற்றிருக்கின்றன. 'அபூர்வ ராகங்களை' நினைவுபடுத்தும் ஒரு கதை, வெற்றிலை வந்த கதை, கடல் தொன்றியதற்கான கதை, ஆணுக்குப் பிரசவ வலி வேண்டிய பெண்கள் கதை என சில கதைகள் வேறு வடிவத்தில் நம்மை ஏற்கனவே வந்தடைந்தவையாக இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் சிலவற்றில், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மேல் சேலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இருந்திருக்கிறது. அன்று நிகழ்ந்த ஓர் உண்மைச்சம்பவமும் இங்கே கதையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்கள் பகுதியை ஆளும் ராஜாவை வரவேற்கும் கூட்டத்தில், ஒரு பெண் தன் பிறப்புறுப்பைக் காட்டி வரவேற்கிறாள். அதற்கு அவள் தரும் விளக்கம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜாவும் மனம் மாறி அவர்கள் விருப்பப்பட்டால் மேலாடை அணியலாம் எனச் சலுகை அளிக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே அந்தப் பகுதிகள் முழுவதும் 'தோள் சீலைப் போராட்டம்' நடத்தப்பட்டிருக்கலாம்.

மொத்தத்தில் இது பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட புத்தகம் இல்லை. கொஞ்சம் தெளிவு, பழையன தேடும் ஓர் ஆர்வம், கதை சொல்வதின், கேட்பதின் சுகம், கிராமத்து பழக்கங்கள் இவற்றைப் பெறுவது என்கிற அடிப்படியிலேயே இக்கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள் கி.ராவும் கழனியூரனும். தொகுக்கும்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும், ஏற்பட்ட சங்கடங்களையும், எதிர்ப்புகளயும் பின் இணைப்பில் விளக்கி இருக்கிறார் கழனியூரன்.

சில பின் குறிப்புகள்:

1. அழகான கிராமிய நடை, புத்தகம் முழுவதும் கையாளப்பட்டிருக்கிறது
2. இந்தப் புத்தகத்தின் எந்தவொரு இடத்திலும், வழக்கத்தில் இருக்கும் 'கெட்ட' வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.
3. தமிழின் கெட்ட வார்த்தைகளையும், அவற்றின் ஆதி, வழங்குமுறை இவற்றைத் தொகுத்து வெளியிடுவதே தன் அடுத்தத் திட்டம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் கி.ரா.

Monday, January 29, 2007

14. THE LEXUS AND THE OLIVE TREE

விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------------
புத்தகம ்: The Lexus and the Olive Tree (Understanding Globalization)
ஆசிரியர் : Thomas Loren Friedman
பக்கங்கள் : 512
சிறப்பு : ஆசிரியர், மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர்; இப்புத்தகம் தயாராக அவர் எடுத்துக் கொண்ட காலம் 4 ஆண்டுகள்.
விலை: 7.99 USD
---------------------------------------------------------












தடித்த எழுத்துகளில் சொல்லப்பட்டவை எல்லாம், இப்புத்தகத்தோடு தொடர்புடைய எனது கருத்துகள். சாய்ந்த எழுத்துகளில் சொல்லப்பட்டவை எல்லாம், புத்தகத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட கருத்துகள்.















Globalization (தாராளமயமாக்கல், உலகமயமாக்கல்) பற்றி ஒரு நல்ல புத்தகம் தேடி அலைந்து, கடைசியாக நான் படித்த உருப்படியான புத்தகம் இது. ஆசிரியர், ஏறக்குறைய எல்லா உலக நாடுகளுக்கும் பயணம் செய்து இருப்பதால், Globalization ன் தாக்கம் பற்றி சில நாடுகளையும், சில நிகழ்ச்சிகளையும், சில கற்பனை கதைகளையும் சொல்லி விளக்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய கண்டத்தைப் பற்றி எதுவும் ஆசிரியர் கூறியதாக ஞாபகம் இல்லை. மற்ற கண்டங்கள் எல்லாம் முடிந்த அளவு இப்புத்தகத்தில் அடக்கப்பட்டுள்ளன.

"இவ்வுலகத்திற்குப் பத்து வயதுதான் ஆகிறது. பெர்லின் சுவர் இடிந்தது; உலகம் பிறந்தது" என புத்தகம் ஆரம்பிக்கிறது. கம்யூனிஸத்தின் வீழ்ச்சியால், உலகநாடுகள் தாரளமயமாக ஆரம்பித்தன; எந்த நாடு வேண்டுமானாலும், எந்த நாட்டிலும் வியாபாரம் செய்யலாம்; இனி நாடுகள் தனித்தனி இல்லை; எல்லாம் உலகமயம் என்ற நிலை உருவாகிக்கொண்டு இருக்கிறது. தனது சொந்த வீட்டின் தொலைபேசி எண்கூட யாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை; எல்லோரும் லேப்டாப்பை அண்டி வாழ்கிறோம். அமெரிக்காவில் ஒருவனுக்குக் குழந்தை அழுகிறது என்றால், அவனுக்கு நேரெதிரான காலமண்டலத்தில் உள்ள இந்தியாவின் ஒரு கால் சென்டருக்குத் தொடர்பு கொண்டு, ஆலோசனை கேட்கிறான். இதுதான் Globalization நம்மை வழிநடத்தும் பாதை. இது நீடித்தால், தான் யார் என்பதே ஒரு கேள்வி எழும் ஒருநிலை உருவாகக்கூடும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது புத்தகம். ( என்னைப் பொறுத்தவரை, 1951ல் Paris ஒப்பந்தத்தில் 6 நாடுகள் கையெழுத்திட்ட பொழுதே, Globalization பிறந்துவிட்டது)

சரி இப்போது புத்தகத்தின் பெயருக்கு வருவோம். புத்தகத்தின் பெயரில் இருந்து, ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பு (eg: DOScapital) வைத்தது, ஒரு விஷயத்தை விளக்கும்விதம் எல்லாம் அருமை. புத்தகத்தின் பெயர்காரணம் புரிந்து கொள்ளவே 40 பக்கங்கள் படிக்க வேண்டும். சுருக்கமாக Lexus என்றால், தொழில்நுட்ப வளர்ச்சி (மறைமுகமாக Globalization ), Olive Tree என்றால் பாரம்பரியம் (தனக்கென ஒரு அடையாளம்). Globalization - பாரம்பரியம் இரண்டிற்கும் நடக்கும் போட்டியே இப்புத்தகம்.

உலகம் பிறந்தது முதலே, தனது அடையாளம் தொலையாமல் இருக்க மனிதன், என்ன வேண்டுமானாலும் செய்வான். ஆதாமின் மூத்தமகன் (Cain), இளையமகனைக் (Abel) கொன்றதில் இருந்து இன்று நடக்கும் பல யுத்தங்கள் வரை எல்லோருக்கும் பாரம்பரியம்தான் முக்கியம். ஆனால் Globalization ஐ ஆதரித்தால் சில நேரங்களில் தனிமனித அடையாளமே இல்லாமல் போகும் . (In this Cyber world, your identity is less important than the data that is stored about you)

Globalization க்கு சிறந்த உதாரணம் ஐரோப்பிய யூனியன். ஆனால், அதில் இணைந்துவிட்டால், நார்வே என்ற தனது பெயர், தனித்தன்மை, கரன்ஸி எல்லாம் போய்விடும் என நார்வே சேரவில்லை. இங்கு Lexus ஐ Olive Tree வென்றுவிட்டது. (இந்தியாவில், ஹர்பஜன் சிங் விளம்பரத்திற்காக தனது தலைப்பாகையைக் கழற்றி, பின் மன்னிப்பு கேட்டது ஓர் உதாரணம்; கர்நாடாகாவில் அந்நிய மொழித் திரைப்படங்கள் தடைவிதிக்கப்பட்டது ஓர் உதாரணம்)

இஸ்ரேலியர்களால் படுகொலை செய்யப்பட்ட, யாஸர் அராபத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகன், இன்று WTC, Gaza ல் MD ஆக இருக்கிறார். இங்கு Olive Tree ஐ Lexus வென்றுவிட்டது. (இந்தியாவில், தமிழப்பேராசிரியரின் மகனுக்குத் தமிழ் தெரியாமல் இருப்பது ஓர் உதாரணம். ஹிந்தி எதிர்ப்பாளரின் மகன், ஹிந்தியால் மத்தி அரசுக்குள் இருப்பது ஓர் உதாரணம்)

ஒரு ரஷ்ய நிருபர், Coke இயந்திரத்திற்கு அருகில், CNN திரைக்குக் கீழே நின்றுகொண்டு, Cellphoneல் ரஷ்ய மொழியில் பேசிக்கொண்டு, NATO தலைமையகத்தில் நின்றுகொண்டு, ரஷ்யபடைகள் Kosovo ல் அத்துமீறி நுழைவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருகாட்சி. இங்கு Lexus ஆ, Olive Tree ஆ? எது முக்கியம் என்ற போராட்டம். (இந்தியாவில் இட ஒதுக்கீடு பிரச்சனை முதல் இன்றைய சிங்கூர் - நந்திகிராம் பிரச்சனை வரை பல நிகழ்ச்சிகள் உதாரணம்; இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சொந்த மண்ணில் நடப்பதுகூட)

Lexus மட்டுமே இருந்தால், நீ யார் என்று யாருக்கும் தெரியாது. Olive Tree மட்டும் இருந்தால், உன்னை உனக்கு மட்டும்தான் தெரியும். இரண்டும் வேண்டுமா வேண்டாமா என்ற போராட்டம் வளர்ச்சிக்குத் தடை. இதுபோன்ற மேற்கூறிய மூன்று நிகழ்ச்சிகளும், முட்டுக்கட்டைகள். இரண்டையும் சமப்படுத்தத் தெரிந்த ஒரு சமூகமே வெற்றி பெறுகிறது. உதாரணமாக, Gulf நாடு ஒன்றில் இருந்து, லண்டன் செல்லும் விமானம் ஒன்றில், பயணிகள் தொழுகை செய்ய வசதியாக, மெக்காவின் திசைகாட்ட GPS உண்டு. இந்தியாவில், பொக்ரான் சோதனையும், அந்நிய நிறுவனங்களை அனுமதித்ததும் இன்னொரு உதாரணம்.

எது எடுத்தாலும் Internet என்ற இக்காலத்தில், E or Be Eaten என்னும் இக்காலத்தில், ரஷ்ய போன்ற நாட்டுமக்களை மனரீதியாக உலகமயமாக்கலுக்குத் தயார் செய்வது கஷ்டமான காரியம் என்கிறார் ஆசிரியர்.

Globalization க்குப் பெயர் போன அமெரிக்காவின் Secretary of State ஒருவரும், பாரம்பரியத்தைவிட்டு வெளிவராத சிரியா (Fax machine அறிமுகப்படுத்த 4 ஆண்டுகள் ஆனதாம்) போன்ற நாட்டின் அதிபர் ஒருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை உரையாடலை அற்புதமாகச் சித்தரித்து இருந்தார் ஆசிரியர்.

McDonald's உள்ள எந்த ஒரு நாடும் சண்டை போட்டுக் கொள்வதில்லை என்று ஒரு புதிய கருத்தை முன்வைத்து, அதற்கு The Golden Arches Theory of Conflict Prevention என்று பெயரும் வைக்கிறார் ஆசிரியர். உதாரணங்களுடன் அதை விளக்கியும் உள்ளார். ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வியாபார ரீதியில் தொடர்பு வைத்துக்கொண்டு, ஒன்றையொன்று சார்ந்து இருக்கும்போது அவை அடித்துக் கொள்வதில்லை என்பதே அதன் சாரம்.

பாரம்பரியத்தை இழக்காமல், உலக நாடுகள் சந்தையைத் திறந்து வைக்க வேண்டும் என்பதே ஆசிரியர் சொல்ல வரும் மையக் கருத்து. அப்படி மற்ற நாடுகளைத் தன்னுள் அனுமதிக்கும்போது, பல filter கள் கண்டிப்பாக வேண்டும் என்கிறார் ஆசிரியர். இல்லையேல் பாங்காங்கிற்கு நேர்ந்ததுபோல், போக்குவரத்து நெரிசல் முதல் பல தொல்லைகள் வரும்.

உலகமயமாக்கலால் சமாளிக்க முடியாத பல கேள்விகள்:

Is God in Cyberspace? கடவுளும் ஓரினத்தை அடையாளம் காட்டும் பாரம்பரிய சின்னமே. ஆனால், உலகமயமானால், தன்னையே அடையாளம் தெரியாத மனிதன் கடவுளை நினைக்க நேரம்? வேகமான உலகத்தில் கடவுளை என்ன செய்வது?

No Editor, No Publisher, No Censor for Internet. 1999ல் அமெரிக்காவில் ஒரு மாணவன் ஒரு பள்ளிக்கூடத்தில் நுழைந்து, தாறுமாறாகச் சுட்டு பல பேரைக் கொன்றது நினைவிருக்கலாம். அவன் சுடுவதற்கு சில யோசனைகளை AOL (America Online) இருந்தே பெற்றானாம். உலகமயமாக்கல், குழந்தைகளைக் கெடுக்கிறதே?

புதிய தொழிற்சாலைகள் என்ற பெயரில் விவசாயிகளை விரட்டுவது; காடுகளைக் குடைந்து குழாய் போடுவது. இயற்கையை என்ன செய்யப் போகிறோம்? God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .

இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலாக சில வழிமுறைகள் சொல்கிறார் ஆசிரியர். இதுபோல உலக நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறி புத்தகத்தை அருமையாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். நான் சிலசில பத்திகளை விட்டுவிட்டுதான் படித்தேன். குறிப்புகள் எடுத்த காகிதங்களில் ஒன்று தொலைந்து போய்விட்டது வேறு. சொல்வதற்குப் பல நல்ல விஷயங்களும் (eg. உலகத்திற்கே தெரியாமல், உலகமயமான ஒரு கிராமம்), பல அற்புதமான கருத்துகளும் (eg. Globalization is not global), நிகழ்ச்சிகளும் இப்புத்தகத்தில் உள்ளன.

எல்லாமே அருமையாக சொன்ன ஆசிரியர், கடைசி ஒரு பக்கத்தில் சொதப்பிவிட்டார். வேறு ஒன்றுமில்லை, தாய்நாட்டுப் பற்றுதான். "தொழில்நுட்ப வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் சமன்செய்வதில் உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் உதாரணமாக விளங்குகிறது - அமெரிக்கா". உதாரணமாக, ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சி. புத்தகம் முழுவதும், தான் அழுததாக எந்த இடத்திலும் ஆசிரியர் சொல்லவில்லை, கடைசிபக்கம் தவிர. நான் சிரித்துவிட்டேன்.

சரி முடிவுக்கு வருகிறேன். காயீன் - ஆபேலில் ஆரம்பித்த புத்தகத்தை பாபேல் கோபுரத்தில் (Tower of Babel) முடிக்கிறார் ஆசிரியர். சொர்க்கத்தை அடைவதற்காக, பாபேல் கோபுரம் பாபிலோனில் (பாக்தாத் : ஈராக்) கட்டப்பட்டபோது, அதில் வேலை செய்த மனிதர்கள் எல்லோரும் நீண்ட நாட்கள் பழகியதால், ஒரே மொழியில் பேசப் பழகி தனது சொந்த மொழிகளை மறந்து போயினர். கோபுரம் முழுவீச்சில் கட்டப்பட்டபோது, மனிதசக்தி தனக்குச் சவால்விட வருவதைக் கண்ட கடவுள், மனித சக்தியை உடைக்க ஒரு திட்டம் போட்டார். அவர் போர் மூட்டவில்லை; பூமியை அதிரச் செய்யவில்லை; தொற்றுநோய் பரப்பவில்லை; கோபுரத்தை இடிக்கவில்லை. அவர் செய்த எளிய காரியம், அம்மனிதர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு மொழிகளில் பேச வைத்தார். அவ்வளவுதான், பாபேல் கோபுரம் தகர்ந்து போனது.

இப்போது ஆசிரியர் நம்முன் வைக்கும் கேள்வி: Internet என்பது பாபேல் கோபுரத்தின் இன்னொரு அவதாரமா? Internet ல் எல்லோரும் யாரென்றெ தெரியாமல், ஒரே மொழியில் பேசுகிறோம். ஆசிரியரைப் பார்க்காமலேயே பாடம் படிக்கிறோம். ஒருநாள் அந்தக் கடவுள், பாபேல் கோபுரத்திற்குச் செய்ததுபோல், Internet crash ஆனால்?

அதனால்தான் ஆசிரியர் சொல்கிறார்: "Lexus யையும், Olive Tree யையும் சமப்படுத்த பழக வேண்டும்". ஏனெனில், (குஜ்ரால் அவர்களை உதாரணமாக வைத்து) தாத்தாவுக்கு இங்க்லீஷ் தெரியாதா என்று கேட்கும் பேரப்பிள்ளைகளைத் தாத்தாக்கள் விரும்புவதில்லை; தன் நிழலில் தன் வம்சம் இருக்க வேண்டும்; பரம்பரை கவுரவம் காக்கப்பட வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் விரும்ப வேண்டும். (ஷாங்காய் நகர் தொழில் அதிபர் ஒருவரை உதாரணமாக வைத்து) Internet ல் இருந்து, எவ்வளவுதான் உன்னதமான கருத்தாக இருந்தாலும், மகன் புத்தி சொல்வது எந்த தந்தைக்கும் பிடிப்பதில்லை (அதுக்கெல்லாம் கடவுளா இருக்கணும்).

என்னை மிகவும் கவர்ந்த ஒரு வாசகத்துடன் முடித்துக் கொள்கிறேன்: "There are two ways to make a person feel homeless; one is to destroy his home and the other is to make his home look and feel like everybody else's home ". இதைப் படித்தவுடன், "சந்தோசமா இருக்குறப்ப மனுஷனுக்கு அது தெரியுறது இல்ல" என்ற விருமாண்டி வசனம் ஞாபகத்திற்கு வந்தது. (உலகமயம் சந்தோஷமாய்த் தெரிகிறது. அப்ப....?)

கொசுறு 1: இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை பற்றி From Beirut to Jerusalem என்ற இவரின் முதல் புத்தகத்தைப் படிப்பதற்காகத் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
கொசுறு 2: இவரின் இரண்டாவது புத்தகமான Longitudes and Attitudes என்பது The New York Times பத்திரிக்கையில் பல்வேறு காலக்கட்டங்களில், தீவிரவாதத்தைப் பற்றி இவர் எழுதிய Column களின் தொகுப்பு. அமெரிக்க துதிபாடல், ரஷ்யா, இந்தியா, இஸ்லாமிய நாடுகளைக் கிண்டல் செய்வது அதிகம் இருந்ததால், பாதிக்குமேல் பிடிக்கவில்லை; படிக்கவில்லை.
கொசுறு 3: இவருடைய சமீபத்திய புத்தகம் The World is Flat. இதுவும் உலகமயமாக்கல் பற்றியது. முதல் 50 பக்கங்கள் கண்டிப்பாகப் படிக்கலாம். அதற்குப் பிறகு, அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

- ஞானசேகர்