எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறித்து (விவிலியம்)
------------------------------------------------------------------
புத்தகம் : நிலமெல்லாம் ரத்தம்
ஆசிரியர் : பா.ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2005
விலை : 350 ரூபாய்
பக்கங்கள் : 704 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------------
இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை. மத்தியக் கிழக்கில் உள்ள இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே அன்றாடம் நடக்கும் எல்லை மற்றும் யூத-அரபு இனப் பிரச்சனை. இப்படி நினைத்துக் கொண்டு செய்தித்தாள் பக்கங்களை நீங்கள் அவசர அவசரமாகப் புரட்டினால், நிற்க. பாலஸ்தீனம் (Palestine) என்பது இன்றைய தேதியில் தமிழீழம் போல ஒரு கோரிக்கை மட்டுமே; ஒரு தனிச் சுதந்திர நாடு அல்ல. அரபு மண்ணில் எண்ணெய் வளம் இல்லாத சவலைக் குழந்தை இந்தப் பாலஸ்தீன். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட மண் என்று குடியேறி, கானான் (Canaan) என்று ஆதிமனிதன் அழைத்த அந்த மண்ணில், சக மனிதனை நாகரீக மனிதன் அகதியாக்கி நிலமெல்லாம் ரத்தம் பாயும் புண்ணிய பூமி!
வடக்கே லெபனான். கிழக்கே ஜோர்டான் ஆறு. தெற்கே எகிப்து. மேற்கே மத்தியத் தரைக்கடல். இதற்குள் தான் இன்றைய இஸ்ரேலும் பாலஸ்தீனும் இருக்கின்றன. மத்தியத் தரைக் கடலை ஒட்டிய பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதி காசா கரை (Gaza Strip). ஜோர்டான் (Jordan) ஆற்றின் மேற்குப் பக்கம் இருக்கும் பாலஸ்தீனத்தின் கிழக்குப் பகுதி மேற்குக் கரை (West Bank). நமக்குச் சுதந்திரம் கிடைத்த பின், கிழக்கு மேற்கு பாகிஸ்தான்களுக்கு இடையே இந்தியா இருந்தது போல, இஸ்லாமிய பாலஸ்தீனத்தின் இவ்விரு பகுதிகளுக்கும் இடையே நீண்டு கிடக்கிறது யூத இஸ்ரேல். முப்பெரும் மதங்களும் முப்பெரும் கண்டங்களும் சந்திக்கும் இந்நிலம்தான் மனிதர் வாழும் பூமியின் மையம்.
|
(www.worldatlas.com) |
இரண்டாம் உலகப் போரில் ஆரியக் கிறித்தவரான ஹிட்லரால் கும்பல் கும்பலாகக் கொன்று குவிக்கப்பட்ட இனம் யூதயினம். அவர்கள் பட்ட துயரங்களுக்கு எல்லாம் ஆறுதலாக அவர்களது பூமியில் இஸ்ரேல் (Israel) என்ற தனிநாடு உண்டானது சரியே. அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த பூர்வகுடிகளான அரபு முஸ்லீம்கள் நாடற்ற அகதிகள் ஆனார்கள். ஹிட்லரை இரண்டாம் உலகப் போரில் ஆதரித்த அவர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். யூதர்கள் மேல் அனுதாபம்; இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு. மிஞ்சி மிஞ்சிப் போனால் போன நூற்றாண்டின் வரலாற்றை மட்டும் பாடப் புத்தகங்களில் படித்திருக்கும் நம்மிடையே இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை பற்றிய பெரும்பாலானவர்களின் கருத்து இதுவாகத் தான் இருக்கும். அதாவது Thomas Loren Friedman சொல்வது போல், வல்லரசு நாடுகளின் பத்திரிக்கைகள் சொல்வதையே நாமும் சொல்கிறோம்.
ஹிட்லரால் ஆரம்பிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாட்டின் பிறப்புடன் தொடர்வதில்லை இப்பிரச்சனை. அதற்கும் முன்னால் முகம்மது நபி. அவருக்கும் முன்னால் இயேசு கிறித்து. அவருக்கும் முன்னால் மோசஸ். அவருக்கும் முன்னால் இருந்தே பல நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது இப்பிரச்சனை. கிட்டத்தட்ட 5000 வருட சரித்திரச் சிக்கல். பிரச்சனையின் அடிப்படை புரிய உலகின் முப்பெரும் மதங்களைப் பற்றியும் இன்னும் சில விசயங்களும் தெரிய வேண்டும். துண்டு துண்டாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் விசயங்கள் ஒரு கோர்வையாக, புத்தகத்திற்குள் நுழையும் முன் இதோ எனது அறிமுகம்.
யூதம். கிறித்தவம். இஸ்லாம். தோரா திருவிவிலியம் திருக்குரான் முறையே இறை நூல்கள். யூதர்களுக்கு ஜெஹோவா. முஸ்லீம்களுக்கு அல்லா. கிறித்தவர்களுக்குக் கர்த்தர், இயேசு, தூய ஆவி என்று மூன்று தனித்தனிக் கடவுள்கள் - மூவரும் சேர்ந்து ஒரே கடவுள்; கர்த்தர் தன்னைப் போல் மனிதனைப் படைத்தார்; இயேசு மனித உருவெடுத்தார்; தூய ஆவிக்கு உருவமில்லை. மூன்று மதங்களுக்கும் ஒரே கடவுள் கொள்கை. மூன்று மதங்களுக்கும் ஆதி ஒரே இடம் தான் - ஆதாம் ஏவாளின் ஏதேன் தோட்டம். அது மெசபடோமிய நாகரீகம் தோன்றிய யூப்ரடீஸ் டைகிரீஸ் நதிகளுக்கு அருகில் இருக்கலாம் என கணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். ஆதாம் தான் ஆதிமனிதன் என்று ஆரம்பிக்கின்றன அவற்றின் புனித நூல்கள். ஆதாமைப் படைத்தவருக்கு ஜெஹோவா கர்த்தர் அல்லா என்று பெயர்கள்.
ஆதாமில் இருந்து இயேசு கிறித்து வரையிலான 60 தலைமுறைகளின் வரிசையைக் கிறித்தவர்களின் விவிலியம் இவ்வாறு சொல்கிறது:
ஆதாம் சேத் ஏனோஸ் காயினான் மகலாலெயெல் யாரேத் ஏனோக் மெத்துசலா லாமேக்
நோவா சேம் அற்பக்சாத் சாலே ஏபேர் பாலேக் ரேயூ சாரூக் நாக்கோர் தாரே
ஆபிராம் ஈசாக் யாக்கோபு யூதா பாரேஸ் எஸ்ரோம் ஆரோம் அம்மினதாப் நசசோன் சல்மோன் போவாஸ் ஓபேத் ஈசாய்
தாவீது சாலமோன் ரெகோபெயாம் அபியா ஆசா யோசபாத் யோராம் உசியா யோதாம் ஆகாஸ் எசேக்கியா மனாசே ஆமோன் யோசியா
எகோனியா சலோத்தியேல் சொரோபாபேல் அபியூத் எலியாக்கீம் ஆசோர் சாதோக் ஆகிம் எலியூத் எலேயாசார் மாத்தான் யாக்கோபு சூசை
இயேசு.
ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்தார். மனிதர்கள் செய்யும் பாவங்களில் கோபம் கொண்ட கடவுள், நோவா காலத்தில் 40 நாட்கள் தொடர்மழை பெய்வித்து பெரும் பிரளயம் வரவைத்து, நோவாவின் குடும்பத்தைத் தவிர மற்றவர்களை அழிக்கிறார். சேம் காலத்தில் மனித ஆயுளை 120 ஆகக் குறைக்கிறார். யூப்ரடீஸ் டைகிரீஸ் நதிகளுக்கு இடையே அன்றைய மெசபடோமியாவில் (ஈராக்) வாழ்ந்து வந்த ஆபிராமைக் கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீனப் பகுதியில் போய் வாழச் சொல்கிறார். விவிலியத்தின் முதல் 11 அதிகாரங்களில் வரும் இதுவரையிலான கதையை முந்நூல்களும் சிறுசிறு வித்தியாசங்களுடன் அப்படியே சொல்கின்றன. ஆபிராம் தான் மூன்று மதங்களின் ஆதிப்புள்ளி. விவிலியப்படி ஆதாமிற்கும் ஆபிராமிற்கும் இடையே கால வித்தியாசம் 1056 ஆண்டுகள்.
85 வயதாகியும் குழந்தை இல்லாத ஆபிராமை, அவரின் மனைவி வேலைக்காரப் பெண்ணுடன் கூடச் சொல்கிறாள். ஆபிராமின் 86வது வயதில் அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்த மகனின் பெயர்
இஸ்மேல் (Ismael). அதன்பின் ஆபிராமை ஆசீர்வதித்து
ஆபிரகாம் (Abraham) என்று பெயரை மாற்றுகிறார் கடவுள். ஆபிரகாம் இஸ்மேலுடன் சேர்ந்து இறைவனுக்காகக் கட்டிய புனிதப் பீடம் தான்
கா'அபா (Kaaba). இஸ்லாமியர்களின் இந்த முதல் ஆலயம் சவூதி அரேபியாவில் மெக்காவில் (Mecca) இருக்கிறது. இஸ்லாமியர்களின் முதல் புனிதஸ்தலம்; இரண்டாவது மெதினா (Medina). இஸ்லாத்தின் அடிப்படையான 5 முக்கிய கட்டளைகளில், இரண்டாவது கட்டளைப்படி கா'அபாவை நோக்கி தினம் 5 முறைகள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்கிறார்கள். ஐந்தாவது கட்டளைப்படி ஹஜ் (Hajj) என்ற புனிதப் பயணமாக அங்கு செல்கிறார்கள்.
இஸ்மேல் பிறந்து 12 வருடங்கள் கழித்து மாதவிடாய் நின்ற பிறகும் கடவுளின் கருணையால் ஆபிரகாமின் மனைவி கருத்தரிக்கிறாள். ஆபிரகாமின் 100வது வயதில் பிறந்த அம்மகனின் பெயர்
ஈசாக் (Isaac). ஆபிரகாமின் உண்மையான வாரிசு யாரெனெ பிரச்சனை வர, இஸ்மேல் தாயுடன் வெளியேறுகிறார். இறைத்தூதர் தன் இனத்தை மீட்க வருவார் என்று ஆபிரகாமிற்குக் கடவுள் சொல்லி இருந்ததால், பிரிந்துபோன அவரின் வாரிசுகள் ஆண்டாண்டு காலமாய் எதிர்பார்த்தனர்; இன்னும் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் கதை என்று நினைத்தால் கதை; வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆத்திக நாத்திக சித்தாந்தங்களை எல்லாம் தாண்டி இன்றைய நிகழ்கால எதார்த்தம். முந்நூல்களும் இதே கதையை வெவ்வேறு வார்த்தைகளில் தத்தம் பார்வைகளில் சொல்கின்றன.
இஸ்மேலின் வழிவந்தவர்கள் அராபியர்கள் (Arabs). ஈசாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள் (Jews). முகம்மது நபி இஸ்மேல் வம்சம். இயேசு கிறித்து ஈசாக் வம்சம். அரபு யூதம் என்ற வார்த்தைகள் இனத்தைக் குறிக்கின்றன. யூத மதத்தில் மதமாற்றம் என்பது அறவே கிடையாததால் யூதம் என்பது மதத்தையும் இனத்தையும் சேர்த்தே குறிக்கும். அரபு மொழியில் திருக்குரானில் ஆபிரகாமின் பெயர் இப்ராஹீம்; இஸ்மேல்-இஸ்மாயில், ஜோசப்-யூசூப், யோபு(Job)-அயூப், மோசஸ்(Moses)-மூசா, தாவீது(David)-தாவூத், சாலமோன்(Solomon)-சுலைமான், ஜோனா-யூனூஸ், இயேசு-ஈசா, மேரி-மரியம்.
இஸ்லாம். தனது இனத்திற்கு ஓர் இறைத்தூதர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து, கா'அபாவில் 360 இறை உருவங்களை வைத்து பல தெய்வங்களை வழிபட்டு வந்த அராபியர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரலாறு முழுவதும் பல காலக் கட்டங்களில் சுற்றி நடப்பது என்னவென்று தெரியாமலேயே அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். இஸ்மாயில் வம்சத்தில் 570CEல் முகம்மது நபி தோன்றாது போய் இருந்தால் அரபு மக்களுக்கு என்று ஒரு தனி வரலாறு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இஸ்லாமிய மதத்தை உண்டாக்கிய முகம்மது நபி மற்ற இறைத்தூதர்களில் இருந்து வித்தியாசமானவர். இவர் ஆட்சியாளரும் கூட. மதீனா நகரை மையமாகக் கொண்ட இஸ்லாமிய அரசை உண்டாக்கியவர். பின்னாளில் இவரின் மருமகன் அலி தான் இறுதி இறைத்தூதுவர் என்று சொல்லி, இஸ்லாமியத் தலைமைக்கும் அவர்தான் வாரிசு என்றும் ஷியா (Shia) என்றொரு பிரிவு இஸ்லாத்தில் உண்டானது. அதை மறுத்து, கலீபா (Caliph) எனப்படும் இஸ்லாமியத் தலைவர்கள் மூத்த மதத் தலைவர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்ற சுன்னி (Sunni) பிரிவினர் தான் இன்றளவும் எண்ணிக்கையில் அதிகம். முகம்மது நபி சொர்க்கம் சென்று மீண்டும் திரும்பிய எருசலேமில்
கோவில் மலை (Temple Mount) என்ற இடத்தில்
அல் அக்சா (Al Aqsa) என்ற பள்ளிவாசல் இருக்கிறது. இஸ்லாமியர்களின் மூன்றாவது முக்கிய புண்ணியஸ்தலம் அது.
யூதம். ஈசாக்கிற்கு எசாயூ யாக்கோபு என்ற இரட்டையர்கள் பிறந்தனர். எசாயூவின் வாரிசு உரிமையை யாக்கோபு வஞ்சகமாகப் பறித்து ஆபிரகாமின் ஒட்டுமொத்த ஆசீர்வாதத்தையும் பெற்று விடுகிறார். யாக்கோபின் வம்சத்திற்குக் கடவுள் வைத்த பெயர் இஸ்ரேலயர்கள்; அதாவது யூதர்கள். யாக்கோபின் ஒன்றுவிட்ட தலைமுறையில் பிறந்த
மோசஸ் தான் கடவுளிடம் நேரடியாகப் பேசி யூதர்களுக்கான சட்டத் திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். கிறித்து பிறப்பிற்குச் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்
சாமுவேல் (Samuel) என்ற தீர்க்கத்தரிசியால் அடையாளம் காட்டப்பட்ட
சவுல் (Saul) என்பவர் தான் இஸ்ரேல் என்ற நாட்டை உண்டாக்கி அதன் முதல் அரசர் ஆனார். நமக்கெல்லாம் தெரிந்த
தாவீது (David) தான் அடுத்த அரசர். எருசலேம் தலைநகரம் ஆனது. அவரின் மகன்
சாலமன் (Solomon) மூன்றாவது மன்னர். ஒரே குழந்தையைச் சொந்தம் கொண்டாடும் இரு தாய்களுக்குத் தீர்ப்பு சொல்லி, உலகின் அதிபுத்திசாலி என்று இன்றளவும் பேசப்படும் சாலமன், யூதர்களுக்கான முதல் தேவாலயத்தை எருசலேமில், ஈசாக்கைக் கடவுள் ஆணைப்படி ஆபிரகாம் பலி கொடுக்கப் போன இடமான Temple Mount இல் கட்டினார். யூதர்களின் முதல் புண்ணியஸ்தலம் இக்கோவில். இன்று ஒரு சுவர் (
Wailing Wall) மட்டும் மிச்சம் இருக்கிறது.
சாலமனிற்குப் பின் வடக்கு தெற்கு என இஸ்ரேல் இரண்டாக உடைந்தது. வடக்குப் பகுதி சமாரியா. எருசலேம் இருக்கும் தெற்குப் பகுதி யூதேயா (Judaea). யூதர்கள் எகோனியா காலத்தில் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். சிரியாவுக்குத் தெற்கே உள்ள நிலத்தை, வரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் கிரேக்கரான ஹிரொடோடஸ் (c400 BCE) முதன் முதலில்
பலைஸ்டைன் சிரியா என்று அழைத்தார். தென்சிரியா என்று பொருள்படும் இச்சொல்லாடல் தான் பின்னாளில் பாலஸ்தீன் என்றானது. யூதேயாவை அசிசீரியர்கள் தாக்கினார்கள். பாபிலோனியர்கள் தாக்கியதில் சாலமன் தேவாலயம் முதல்முறை சிதிலமானது. பெர்ஷியர்கள் தாக்கினார்கள். அலெக்ஸாண்டரும் தாக்கினார். யூத குலத்தில் இயேசு கிறித்து பிறந்தபோது யூதேயாவை ரோமானியர்கள் வைத்திருந்தார்கள். ரோமானியர்கள் தாக்கியதில் சாலமன் தேவாலயம் இரண்டாம் முறை சிதிலமானது. இன்னொரு தேவதூதன் இறங்கி வந்து மீண்டும் அதைக் கட்டித் தருவான் என்று யூதகுலம் இன்னும் காத்திருக்கிறது. இடிந்த கோயிலின் ஒரு செங்கல்லைக் கூட அவர்கள் திரும்ப எடுத்து அடுக்க முயற்சி செய்யவில்லை. இன்னும் மிச்சமிருக்கும் கோயிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியைத் தான் அவர்கள் தம் புனிதத்தின் மிச்சமாக வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இயேசு கிறித்து காலத்தில் இருந்து உலகப் போர்கள் வரை 2000 வருடங்களாக தங்களுக்கென்று ஒரு தேசம் இல்லாமல் வீடற்ற அகதிகளாக அலையும் படித்தான் யூதர்களைக் காலம் செய்திருந்தது.
கிறித்தவம். இயேசு கிறித்து பிறந்தது எருசலேமிற்கு அருகில்; போதித்தது யூதேயா முழுவதும். யூத மதத்தின் நம்பிக்கைகளை இயேசு கிறித்து விமர்சித்தது யூத மதக் குருக்களுக்குப் பிடிக்கவில்லை. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் கைக்குக் கை காலுக்குக் கால் சூட்டுக்குச் சூடு காயத்துக்குக் காயம் தழும்புக்குத் தழும்பு என்று சொல்லும் யூத குலத்தில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார். 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட, தங்களின் புண்ணியஸ்தலமான சாலமன் தேவாலயத்தை மூன்றே நாட்களில் இடித்துவிட்டு மீண்டும் கட்டிக் காட்டுவதாகச் சொன்னவுடன் சிலுவையில் அறைந்து கொன்றே போட்டார்கள். உயிர்த்தெழுந்தார். கிறித்தவம் என்ற தனி மதம் தோன்றியது. உலகத்தின் மையம் எருசலேம் (Jerusalem) - எருசலேமுக்கே மையம், இயேசு கிறித்து சிலுவையில் உயிர்விட்ட கல்வாரி மலை என நம்புகிறது கிறித்தவம்.
தங்கள் இறைத்தூதர் உயிர்ப்பதில்லை என்று சொல்லி இயேசு கிறித்துவைக் கண்கட்டி வித்தைக்காரன் என்றார்கள் யூதர்கள். முகம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதராக இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள் இஸ்லாமியர்கள். இயேசு கிறித்துவின் சீடர்கள், பின் போப்பாண்டவர்கள் தலைமை எனத் தொடரும் நெறியைப் பின்பற்றுபவர்களுக்குப் பெயர் ரோமன் கத்தோலிக்கர்கள் (RC). இன்றைய தேதிக்கு மிகப்பெரிய மதம். 1543CE வாக்கில் மார்டின் லூதர் என்ற பாதிரியார், பணநோக்கில் போகும் போப்பின் திருச்சபையில் இருந்து விலகி ஆரம்பித்த நெறிக்குச் சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism) என்று பெயர். சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் இயேசுவின் தாயான மேரிக்குப் புனிதப் பிம்பம் கொடுப்பதில்லை; பாதிரிகளின் திருமணத்தை அனுமதிப்பதுண்டு.
தலைமுறையில் இயேவுசுக்கு முன் இருப்பவர்களைப் புறக்கணித்து கிறித்தவம் உடைந்தது; முகம்மது நபிக்குப் பின் இருப்பவர்களைப் புறக்கணித்து இஸ்லாம் உடைந்தது. கிரீன் ஹவுஸ் முறையில் விவசாயம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானத்தில் அதிநவீனமாகப் போய்க் கொண்டிருந்தாலும் இயேசு கிறித்து இறந்த காலத்தில் இருந்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டு கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்கிறது யூதம். சித்தாந்தங்கள் தோன்றிய காலப்படி வரிசைப் படுத்தினால் இஸ்லாம் யூதம் கிறித்தவம். மதமாக உருவெடுத்த காலப்படி வரிசைப் படுத்தினால் யூதம் கிறித்தவம் இஸ்லாம். ஈசாக்கை விட இஸ்மாயில் 14 வயது மூத்தவர் என்பதால் யூதர்களை விட அராபியர்கள் மூத்தவர்கள். கிறித்தவம் இயேசு கிறித்துவில் இருந்தே ஆரம்பிப்பதால் கி.மு.வுக்குப் போகத் தேவையில்லை. தோராயமாக கா'அபா கட்டப்பட்ட காலம் 2130BCE; சாலமன் தேவாலயம் 1007BCE. தோராயக் கணக்குப்படி பார்த்தால்கூட 1056 + 112 + 2130 + 2012 = 5310 ஆண்டுகள் சரித்திரம்.
யூதர்களுக்கு
ஹீப்ரு (Hebrew) மொழி. மத நம்பிக்கையும் மொழி நம்பிக்கையும் யூத அடிப்படைகள்; அவர்களின் அடையாளங்கள். எழுதுவது போலவே பேசப்படும் மொழி ஹீப்ரு. அதாவது பேச்சுவழக்கு என்று கூடத் தம் மொழியைச் சிதைக்க யூதர்கள் விரும்பவில்லை. உலகின் இரண்டாம் தொன்மொழி ஹீப்ரு; தமிழ் ஆறாவது. செல்லும் இடங்களின் மொழிகளையே கிறித்தவம் பேசினாலும், ஹீப்ருவைத் தாய்மொழியாகக் கொண்ட இயேசு கிறித்து போதித்த மொழி
அர்மைக் (Aramaic). உலகின் மூன்றாம் தொன்மொழி அர்மைக். திருக்குரானைப் படிப்பதற்காகவே இஸ்லாமியர்கள்
அரபி மொழி கற்றுக் கொள்கிறார்கள்.
முப்பெரும் மதங்கள். ஒரே பெருநதியின் மூன்று கிளைநதிகள் அதனதன் போக்கில் அமைதியாகத் தானே போய்க் கொண்டு இருக்கின்றன. என்ன பிரச்சனை? அவற்றிற்கும் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கும் என்ன சம்மந்தம்? மூவரும் தத்தம் அடிப்படை சித்தாந்தங்களில் இருந்து சற்றே விலகிப் போனதால் கிடைத்த அரிதாரம். மதம் வாரிசுரிமை தாண்டி இருபதாம் நூற்றாண்டில் இருந்து இப்பிரச்சனையின் அவதாரங்கள் பல. அணையாத இதில் அணையும் ஒரு பிரச்சனை. கால்வாய் பிரச்சனை. இப்போது புத்தகத்திற்குள் போகலாம்.
|
(www.nhm.in) |
பா.ராகவன் சாரின் நிலமெல்லாம் ரத்தம். இஸ்ரேல்-பாலஸ்தீன் எரியும் பிரச்சனையின் புரியும் வடிவம் என்கிறது முன்னட்டை. முழுத் தகுதியுண்டு. 100+1 அத்தியாயங்களில் மிக எளிமையான மொழியில், மிகத் தைரியமாக இச்சிக்கலான பிரச்சனையைத் தமிழுக்குச் சொல்லும் புத்தகம். ஆபிரகாமில் ஆரம்பிக்கிறது. அடுத்து நேராக இயேசு கிறித்து. முகம்மது நபி. ரோமானிய ஆக்கிரமிப்பு. கலீபாக்களின் ஆட்சி. சிலுவைப் போர்கள். ஒட்டாமன் பேரரசு. யூதர்களின் புலம்பெயர்தல்.
ஜியோனிஸம் (Zionism). தியோடர் ஹெர்ஸில் (Theodor Herzl). யூத நில வங்கிகள். இரண்டு உலகப் போர்கள். ஹிட்லர். 1948ல் இஸ்ரேல் உதயம். இதுவரை பேசுகின்றன புத்தகத்தின் 400 பக்கங்கள்.
மிச்சமுள்ள 300 பக்கங்கள் பேசுவது 2005 வரையிலான நவீன பிரச்சனைகள். நாசர். சூயஸ் கால்வாய் (Suez). ஆறுநாள் யுத்தம். PLO. யாஸர் அராபத். முனிச் ஒலிம்பிக் படுகொலைகள். ஹமாஸ் (Hamas). PA. ஓஸ்லோ மாட்ரிட் கேம்ப் டேவிட் சமாதானங்கள். ஒட்டகத்தின் தாடையெலும்பை ஆயுதமாக எடுத்த அராபியர்கள் துப்பாக்கியேந்தி பின் கல்லெடுக்க வைத்த
இண்டிபதா (Intifada). யாஸர் அராபத்தின் மரணத்துடன் ஆரம்பித்த புத்தகம், அவர் இல்லாத பாலஸ்தீனர்களின் எதிர்காலக் கேள்விக்குறியுடன் முடிகிறது. அதன்பிறகு இரண்டு லெபனான் யுத்தங்கள், துனீசியா எகிப்து லிபியா ஏமன் என போய்க் கொண்டிருக்கும் அரபுக் கிளர்ச்சி (Arab Spring), இந்த வருடம் இந்தியாவில் இஸ்ரேலியத் தூதரகக் குண்டுவெடிப்பு என கண்டம் தாண்டியும் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை இது.
ஆபிரகாமின் வாரிசு யார் என்ற அண்ணன் தம்பிப் பிரச்சனை. எருசலேம் யாருக்குச் சொந்தம் என்ற இருப்பியல் பிரச்சனை. அடிமையின் வாரிசுகள் என்று அராபியர்களை யூதர்கள் மட்டம் தட்டினார்கள். அடைக்கலம் தந்த இஸ்லாமியர்களுக்கு சிலுவைப் போர்களில் உதவாமல் இருந்தது, யூத நில வங்கி மூலம் 19ம் நூற்றாண்டில் அராபியர்களின் நிலங்களை வஞ்சகமாக அபகரித்தது என்று யூதர்கள் தன் சகோதர அராபியர்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் பகைத்துக் கொண்டார்கள். இருவருக்கும் பொதுவான பங்காளிகள் கிறித்தவர்கள். இயேசுவைக் கொன்ற படுபாவிகள் என்று யூதர்கள் மேல் பழி சுமத்தி கிறித்தவம் பரவியது. இஸ்லாமியர்களை எருசலேமில் இருந்து விரட்டத்தான் நூற்றாண்டுகளாக சிலுவைப் போர்கள் நடந்தன. சாலமன் தேவாலயத்தை இடித்து விட்டுத்தான் அல் அக்சா மசூதி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிரச்சனைகளின் வடிவம் வேறு. சரித்திர நியாயங்களை எல்லாம் உதறிவிட்டு, நான் விளையாட்டுக்கு வரவில்லை என்று மேற்கத்திய கிறித்தவ நாடுகள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அராபியர்கள் அவர்களது பூர்வீக பூமியில் இப்போது அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்மாயிலை ஈசாக்கிற்காக துரத்தி அடித்த அதே 5000 வருட முந்தைய கதையின் நவீன வடிவம்.
காலம் ஓர் இரக்கமற்ற மோசமான கதைசொல்லி. ஒரே கதையை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு இடங்களில், சில சமயங்களில் அதே இடங்களில் மறந்து போன தலைமுறைகளுக்கும் சொல்கிறது. இனத்தை அழிக்க பெண்ணின் கருப்பையைச் சிதைப்பது - தனது நம்பிக்கையை அடுத்தவனையும் நம்பச் சொல்லி குரூரமாக ரசிப்பது - இன்னொருவன் ஆலயத்தை உடைத்து தனது நம்பிக்கையை நடுவில் வைத்து கும்பிடச் சொல்வது - இன்னொருவன் கோயிலுக்குள் போய் ஆட்சி பிடிப்பது - அகழ்ந்து சின்னாபின்னமாக்கி ஒன்றுமேயில்லை என்ற பின்னும் தன் நம்பிக்கையைத் திணிப்பது - தன் இனம் இன்னொரு இடத்தில் அழியும் போது கையறு நிலையில் நிற்பது - ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லையென போராளி இயக்கங்களை மக்கள் நம்புவது - போராளி இயக்கங்கள் பெற்றுத் தராத விசயங்களைத் தாங்களே தெருவில் இறங்கி மக்களே பெற்றுக் கொள்வது - எல்லாம் எங்கேயும் எப்போதும்.
என்.சொக்கன் அவர்களின் ஹமாஸ். முகில் அவர்களின் யூதர்கள். Thomas Loren Friedman அவர்களின் From Beirut to Jerusalem. கொஞ்சம் இடைவெளி எடுத்து படிக்கலாம் என்று ஒதுக்கி வைத்த புத்தகம் இது. சூப்பர் புத்தகம் என்று மூன்றாம் அத்தியாயத்தில் ஏரோது (Herod) மன்னனை அறிமுகப்படுத்தும் விதத்திலேயே தெரிந்தது. எத்தனை பக்கங்களில் எழுதி குறிப்பெடுத்தேன், எத்தனை இணைய தளங்களில் உலவினேன் என்று என்னைப் பற்றி ஆச்சரியப்படுவதை விட, ஆசிரியரை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஓர் எளிய வாசகனுக்குப் புரியும் விதத்தில் அவர் சொல்லும் வரிசை அருமை. முதல் முறை படித்துவிட்டு 3 மாதங்கள் இடைவெளிக்குப் பின், சரியாகப் புரிந்து கொண்டேனா என்று சரிபார்க்க இரண்டாம் முறை படித்தேன். கடல் போல பரந்து கிடக்கும் இச்சிக்கலுக்கு வழிகாட்டும் ஒரு பேராறுதான் இப்புத்தகம். பேராற்றின் வேகத்திற்குத் தடை போடாமல் சிற்றோடைகளாக, ஆசிரியர் விட்டு விட்ட தகவல்களே இவ்வளவு நேரம் இப்பதிவில் நீங்கள் படித்தவை. கடலைப் புரிந்து கொள்ள பேராற்றில் நீங்கள் பயணிக்கும் போது இடையில் இளைப்பாற இச்சிற்றோடைகள் உதவும்.
பாலஸ்தீன் வரலாறு பற்றிய எனது சொந்தக் கருத்துகள்:
பிடித்த நபர்கள்:
1. முகம்மது நபி - இஸ்லாமியர்களின் காலம் எருசலேமின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு மத நல்லிணக்கமும் சகோதரத்துவமும் விதைத்தமைக்காக.
2. சுல்தான் சலாவுதீன் - மூன்றாம் சிலுவைப் போரில் கத்தியின்றி இரத்தமின்றி எருசலேமை வென்றதற்கு.
3. இயேசு கிறித்து - பின்பற்றியவர்களுடன் வைத்துப் பார்த்தால் சார்லி சாப்ளின் சொன்னது. தனியாகப் பார்த்தால் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி சொன்னது. அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்களே தேடுங்கள்.
4. யாஸர் அராபத் - ஒரு கையில் ஆலிவ் இலையும் மறு கையில் துப்பாக்கியும் ஏந்தி ஐக்கிய நாடுகள் சபைக்குப் போனதற்காக.
பிடிக்காத நபர்கள்:
1. போப் அர்பன் 2
2. அடால்ப் ஹிட்லர்
3. எனது பட்டியல் பெரிது. அவர்கள் இப்புத்தகத்தில் இல்லை.
இப்படி நடக்காமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கும் விசயங்கள்:
1. சிலுவைப் போர்கள்
2. முதல் யூத அரபு யுத்தத்தில் (1948) போர் நிறுத்தத்திற்குப் பின் பாலஸ்தீனப் பகுதிகளை அரபு நாடுகள் திருப்பித் தராமல் போனது
3. ,,,,
புத்தகம் படித்தபின் நீங்கள் படிக்க, புத்தகத்தில் இடம்பெறாத சில விசயங்கள்:
1. மூன்று இல்லைகள் தீர்மானம் (3 NO's resolution 1967)
2. பச்சை மைக் கோடு (Green line 1948)
3. The prisoner of Zenach street
4. Quartet
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனையைப் பல முறைகளில் சொல்லலாம். எப்படிப் படித்தாலும் ஏதோ புரியாதது போல ஒரு பிரம்மையை உண்டாக்கும் பிரச்சனை இது. ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்களுக்குக் கொஞ்சமெனும் புரியும்படி இப்பதிவு இருக்கும் என நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை எருசலேம் என்ற நகரின் கதையைச் சொல்வதே மிகச்சிறந்த முறை. எருசலேம் எந்தக் காலத்தில் எவரிடம் எதற்காக எப்படி இருந்தது என்று அறிய முயன்றால் எல்லாக் கதையும் அடங்கிவிடும். விரைவில் அப்படியொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன். ஒரு வாசகனின் அறிவுப்பசியைத் தூண்டும் இப்புத்தகத்தைத் தந்த பா.ராகவன் சாருக்கு மீண்டும் நன்றிகளுடன் முடிக்கிறேன்.
சரித்திரத் தேர்ச்சி கொள்வோம்!
அனுபந்தம்:
----------------
1. ஆரம்ப காலத்தில் யூதர்களைச் சம்மந்தப்படுத்த உண்டான, Pogrom Ghetto போன்ற சில வார்த்தைகள் பின்னாளில் பொதுவான வார்த்தைகளாக ஆகிப் போனதைக் கவனித்தேன்.
2. தமிழ்நாட்டின் அவ்விரு நகரங்களுக்கு இடையே பயணித்தபோது விளைநிலங்களில் முளைத்திருந்த வீட்டுமனைகளின் பெயர்களைக் கவனித்தேன். எல்லாம் இஸ்ரேலில் உள்ள இடங்களின் பெயர்கள்! தற்செயலா என்று தெரியவில்லை. ஆனால் யூத நில வங்கிகள் மூலம் அப்பாவி அராபியர்கள் தங்கள் நிலங்களை யூதர்களிடம் பறிகொடுத்து நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
நிலங்களை விட்டுவிடாதீர்கள். அதைத்தான் அரபுச் சரித்திரம் சொல்கிறது. தாய்மொழியை விட்டுவிடாதீர்கள். அதைத்தான் யூதச் சரித்திரம் சொல்கிறது. நாம் வரலாற்றில் இருந்து உருப்படியாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அதைத்தான் வரலாறு சொல்கிறது.
- ஞானசேகர்