Wednesday, June 10, 2009

37. குறுஞ்சாமிகளின் கதைகள்

என் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள்

-------------------------------------------
புத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்
ஆசிரியர் : கழனியூரன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2007
விலை : ரூ 80

-------------------------------------------






















கழனியூரன்:

கழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். துவக்கப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறவியல் சார்ந்த 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணனோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர். அவரோடு இணைந்து பல நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியங்கள் குறித்தான களப்பணியிலும், எழுத்துப்பணியிலும் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருப்பவர்.

குறுஞ்சாமிகளின் கதை:

குல சாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இதழில் இக்கதைகள் 'சனங்களின் சாமி' என்ற பெயரில் தொடராக வந்திருக்கின்றன. திருநெல்வேலியைச் சுற்றியிருக்கிற கிராமங்களில் வணங்கப்படுகிற குறுஞ்சாமிகளின் கதைகள் நம்மை மீண்டும் கிராமங்களை நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்தச் சாமிகள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்களாகவே இருக்கிறார்கள். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களுக்கான தெய்வங்களாக, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற கடவுள்களாகவே இந்தக் குறுஞ்சாமிகள் இருக்கிறார்கள்.


















தன்னைப் போன்ற மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மாண்டு போன வீரன், அதர்மத்துக்குப் பலியான பெண், தவறுதலாக கொல்லப்பட்ட ஒரு மனிதன் இவர்களைப் போன்றோரே பின்னாளில் கடவுள்களாக மாறி, ஒரு பகுதி மக்களால் குல தெய்வமாக வரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்கள். கழனியூரன் தொகுத்திருக்கும் இந்தக்கதைகள், ஆன்மீகம் குறித்தான பல சர்ச்சைகளை நம்முள் தூண்டிவிடுகின்றன. இன்று இது போன்ற குறுஞ்சாமிகளின் வழிபாடு என்பது வெகுவாகக் குறைந்து போய், ஒரு சாரார் மட்டுமே செய்கின்ற செயலாக மாறிவிட்டிருக்கிறது. அதுவும் நகரத்து மக்களுக்கு இது போன்ற ஒரு மரபோ, தங்கள் வேர்கள் குறித்த ஒரு ஞானமோ பெரும்பாலும் இருப்பதில்லை. வரலாற்றின் பின் பகுதியில் வந்து சேர்ந்துவிட்ட பெருங்கடவுள்களை வழிபடுவதே இப்போது எங்கும் காணக்கிடைக்கிறது.

மூதாதையரை வணங்கும் பண்பாடு, உலகின் மூத்த நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இருந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது இன்று படிப்படியாக அழிந்து போய்விட்டது என்றே சொல்லலாம். தென் தமிழகத்தில் வழங்கப்படுவது போல இந்தக் குறுஞ்சாமிகளின் வழிபாடு மற்ற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்பது என் கருத்து.

கதைளைச் சொல்வதோடு, அதில் பின்னிப்பிணைந்திருக்கும் அக்காலத்து மக்களின் வாழ்வு முறை, நம்பிக்கைகள், கலாச்சாரம், அவர்களின் கோபம், ஆசைகள், வீரம், காதல் என்று பல செய்திகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பட்டினி கிடந்தவனின் சாமியும் மழையிலேயே நனைந்தது; வெயிலிலேயே காய்ந்தது; பட்டினியும் கிடந்தது. சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள், இம்மக்களின் அன்றாடப் பசி தீர்க்கும் பொருட்களாகவே இருந்திருக்கின்றன. சாமிகளின் உருவங்கள், பெரிய கலை வேலைப்பாடுகள் இன்றி கைக்குக் கிடைத்த பொருளகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாட்டுச்சாணத்தின் மேல் நான்கைந்து அருகம்புல்லை வைத்து உருவாக்கப்பட்டு விடுகிறது ஒரு தற்காலிக சாமி. இந்த வழக்கம் தமிழகக் கிராமங்களில் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அதிசயங்கள், பிற்காலச் சேர்க்கைகளாகக் கொள்ளப்படலாம். கதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டும் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பிற்சேர்க்கையாக தான் மெற்கொண்ட களப்பணிகள் குறித்தும், குறுஞ்சாமிகளின் கதைகள் தேடியலைந்த கதையையும் எழுதி இருக்கிறார் கழனியூரன். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடக்கூடிய ஒரு கதையை தெரிந்து கொள்ள இவர் பட்டிருக்கும் வேதனைகள், இவர் கொடுத்திருக்கும் உழைப்பு, இவர் செலவிட்டிருக்கும் நேரம், நிச்சயமாக பெரும் மரியாதைக்கு உரியவை. கற்பனையில் உதித்துவிடக்கூடிய கதைகளைக் காட்டிலும் உயிரோட்டமும், வாழ்க்கையும் கலந்திருக்கும் இக்கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு நம் வேர்கள் குறித்தான ஒரு அறிமுகப் பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-சேரல்

Saturday, June 06, 2009

36. யூதர்கள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!


எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறிஸ்து (விவிலியம்)

Israel was probably the most confusing place in the world to do so. It is the place to lost yourself as a Jew.
- Thomas Loren Friedman (From Beirut to Jerusalem)


-------------------------------------------------------------
புத்தகம் : யூதர்கள்
ஆசிரியர் : முகில்
பக்கங்கள் : 260
விலை : 100 ரூபாய்
பதிப்பகம் : கிழக்கு

-------------------------------------------------------------

ஒரு பிரபல கண் மருத்துவமனை. நண்பனின் தந்தைக்குக் கண்ணில் லேசர் சிகிச்சை. 4 மணி நேரங்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலைமை. என் வயதொத்த வசீகரமான ஒருத்தி, அதே வராண்டாவில் அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட எங்களின் நிலைமைதான் அவளுக்கும். அப்படிப்பட்ட நிலையிலும் வைத்தகண் திருப்பாமல், வசீகரமான என்னைப் போன்றவர்களைக் கூட பார்க்காமல், கருப்பு அட்டைக்குள் இருந்த வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தாள். இப்படித்தான் என்னை முதல் பார்வையிலேயே வசீகரித்தது முகில் அவர்களின் இப்புத்தகம்.












இரண்டே இரவுகளில் படித்து முடித்துவிட்டேன். இப்புத்தகத்தை என் வீட்டில் பார்த்த பக்கத்து வீட்டுப்பெண் சொன்னாள், அவளது கல்லூரியில் ஒரு சுற்றுசுற்றிய புத்தகம் என்று; குறிப்பாக கிறிஸ்த மாணவர்கள். உண்மைதான். உலகம் நமக்கு எத்தனையோ விசயங்களைச் சொன்னாலும், நாம் எல்லாவற்றிலும் சுவாரசியம் காட்டுவதில்லை. நமக்குள் இருக்கும் அந்த மிக நுண்ணிய வடிகட்டியைத்தான் Super Stories என்று எனது முந்தைய புத்தக அறிமுகத்தில் சொல்லி இருந்தேன்.

அப்படி ஒரு வடிகட்டிதான் என்னையும் இழுத்தது.
5000 வருட யூதர்களின் சரித்திரத்தை நுட்பமாக கால வரிசையில் விளக்கும் புத்தகம். முதலில் யூதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சகோதரர்களுக்கும் என்னதான் பிரச்சனை? முப்பெரும் கண்டங்களும் சந்திக்கும்
- மனிதர் வாழும் பூமியின் மையமாகக கருதப்படும் - முப்பெரும் மதங்கள் தோன்றிய - மனித இனத்தின் மிகப் பெரிய போர் (சுமார் 150 ஆண்டுகள்) நடக்க காரணமான - எங்கேயோ இருக்கும் இந்த சேகர் ஆண்சிசுக்கொலை என்று கவிதை படைக்க காரணமான எருசலேம் எப்ப எப்ப மற்றும் இப்ப யாருக்குச் சொந்தம்? படித்துப் பாருங்கள்.

யூதேயா, எரிக்கோ என்ற இடங்கள் பொதுவான விவிலிய வார்த்தைகள். இதுபோன்ற விவிலிய இடங்கள் பற்றிய வரைபடம் தேடி நான் 10 வருடங்களுக்கு முன்பு அலைந்தேன். 50 ஆண்டுகள் முந்திய விவிலியம் ஒன்று கிடைத்தது. அதில் இருந்த வரைபடங்களும், மக்களின் புகைப்படங்களும் இப்புத்தகம் படித்து முடித்ததும் கொஞ்சம் வித்தியாசமாகவும், தெளிவாகவும் தெரிந்தன.

அரபு நாடுகளுக்கு இடையே சம்மந்தமில்லாமல் ஒட்டிகொண்டிருக்கும் உலகின் ஒரே யூத நாடான இஸ்ரேல் தோன்றிய விதம் பரிட்சயமில்லாதவர்கள் கண்டிப்பாக இப்புத்தகம் படியுங்கள். தேசம் பிறந்த முதல் நாளே யுத்தம். இன்றைய உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவுத்துறை. ஆணுறை அசிங்கம். இன்றுவரை ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை. 2000 வருடங்களாக இடிந்துபோன கோவிலின் ஒற்றைச் சுவருடன் அழுதுவரும் மக்கள்.

Green House Effet வைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்த புத்திசாலித்தனம். என்றோ ஒருநாள் இறைத்தூதர் வருவார் என எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் மக்கள். இஸ்ரேல் நாடு, யூத மதம், யூத மக்கள், ஹீப்ரு மொழி என்று பிரித்துப் பார்க்கமுடியாத ஒரு நிலப்பரப்பு.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலின் ஆட்சியாளர்களின் வரிசையும், நிகழ்வுகளும் இப்ப எனக்கு அத்துப்பிடி. கொஞ்சம் அமெரிக்காவும்.

ஒலிம்பிக் படுகொலைகள் பற்றி இந்தப் புத்தகமும் சொல்லாததில் ஒரு சிறுவருத்தம். Lorry Collins இன்னொருவருடன் எழுதிய O Jerusalem புத்தகம் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லவும்.
ஒரு தமிழ் திரைப்படத்கின் பாடல்வரி இப்படி: "ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை கொல்லாதே". ஓரினத்தின் வலியைத் வள்ளுவனின் தமிழன் கூடவா உதாசீனப்படுத்துகிறான்?

- ஞானசேகர்