Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Saturday, January 11, 2014

117. THE STORY OF A SHIPWRECKED SAILOR

வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள்; தோல்வி ஓர் அநாதை.
‍- மேலை நாட்டுப் பழமொழி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Story of a Shipwrecked Sailor (புதினம்)
ஆசிரியர்: Gabriel Garcia Marquez
ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Randolph Hogan
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 1970
பக்கங்கள்: 106
விலை: 199 ரூபாய்
வாங்கிய இடம்: Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1955 பிப்ரவரியில் கொலம்பிய நாட்டுக் கப்பல் ஒன்றில் பயணம் செய்த 8 மாலுமிகள், கரீபியக் கடலில் புயலில் சிக்கிக் காணாமல் போகிறார்கள். சில நாட்களுக்குப் பின், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகச் சொல்லி தேடுதலை நிறுத்துகிறார்கள். 10 நாட்களுக்குக் பிறகு, கொலம்பியக் கடற்கரைப் பகுதி ஒன்றில், கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலையில் அவர்களில் ஒரு மாலுமி கரை ஒதுங்குகிறார். அந்தப் 10 நாட்கள் கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் பிழைத்து வந்த அம்மாலுமியின் உயிர்ப் போராட்டக் கதைதான் இப்புதினம். 'நீ எத்தனை புயல்களைக் கடந்தாய்? அது பற்றி இவ்வுலகிற்குக் கவலை இல்லை. கப்பலைப் பத்திரமாகக் கரை சேர்த்தாயா?' என்றொரு சொல்லாடல் மேலை நாடுகளில் உண்டு. புயலைக் கடந்து கப்பலை இழந்து தன்னைக் கரை சேர்த்த ஒரு ஹீரோவின் கதையிது. தேசிய ஹீரோவாகப் புகழப்பட்டு, அழகு நங்கையர்களால் முத்தமிடப்பட்டு, பிரபலம் என்ற முத்திரையுடன் பொருள் திரட்டி, அதன்பிறகு அரசால் கைவிடப்பட்டு, எப்போதைக்கும் மறக்கப்பட்ட ஒரு முன்னாள் மாலுமியின் கதையிது.
(http://www.penguin.com.au)
சக மாலுமிகள் 7 பேரும் தன் கண்முன்னேயே காணாமல் போனபின், ஒரு தெப்பத்துடனும் இரு துடுப்புகளுடனும் நடுக்கடலில் அம்மாலுமி. நீர்வழிப் படூவும் தெப்பம் கரை நோக்கி நகர்கிறதா, நடுக்கடலை நோக்கி நகர்கிறதா, செங்குத்துப்பாறை நோக்கி நகரும் நீரோட்டத்தில் பயணிக்கிறதா, இவ்வழி கப்பல்கள் போகும் வழியா என்று திக்குத் தெரியாமல் தன் உயிரைப் பயணப்பட வைக்கிறார். அவர் சட்டையைக் காற்றில் அசைத்துக் காட்டுவது தெரியாமல், தூரத்தில் விமானம் ஒன்று கடந்து போய்விடுகிறது. வெகு தூரத்தில் கப்பல் ஒன்றும் கடந்து போய்விடுகிறது. வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரைத் தொடர்ந்து பயணப்பட வைக்கிறது. அவர் கனவிலும் நனவிலும் சந்திக்கும் ஒவ்வொரு பொருளும் கரைசேரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் ஒரே நேரத்தில் தருகின்றன. நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வாழும் விசித்திர தீவுகள் பற்றி கேள்விப்பட்டிருந்த‌ கதைகள் ஞாபகத்தில் வந்து அச்சமூட்டுகின்றன. சக மாலுமிகளுடன் பிரமையில் பேசுகிறார். மஞ்சளாக 4 மீட்டர் நீளத்தில் தான் பார்த்த இராட்சத ஆமை, உண்மையா பிரமையா என்று அவருக்கே தெரியவில்லை. உப்புத் தன்மையால் காயங்கள் உறுத்தவில்லை.

கைக்கடிகாரம் மட்டும் எந்தப் பிரச்சனை இல்லாமல் சரியான நேரத்திற்கு வேலை செய்கிறது. சட்டைப் பையில் இருந்த ஒன்றிரண்டு காகிதங்களை உண்கிறார். காலணிகளை உண்ண முற்பட்டால் கிழிக்க முடியவில்லை. பத்தையும் பறந்து போகச் செய்யும் பசி, அவ்வழியே பறந்து போகும் நீர்ப்பறவைகளைக் கவரச் செய்கிறது. கரையில் இருந்து கப்பல்களைத் துரத்திக் கொண்டே வரும் பழக்கமுடைய நீர்ப்பறவைகள், கரைகள் பக்கம் என்று அர்த்தம் சொல்வதால் எந்த மாலுமியும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை. பக்கத்தில் கரை என்ற மகிழ்ச்சியிலும், பசியாலும் மாலுமிகளின் தர்மம் மீறுகிறார். கரை வரவில்லை. நீர்ப்பறவைகள் மட்டும் வந்து போகின்றன. கரை காட்ட கப்பல்களைத் தேடும் வழிதவறிய பறவைகளோ, நீண்ட தூரம் வந்துவிட்ட இளஞ்சிட்டுகளோ என்ற சந்தேகம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த கதையாய், நீர்ப்பறவைகளின் இரத்த வாடைக்குச் சுறாக்கள் சுற்றிவிடுகின்றன!

பெரும் பிரளயக் காலத்தில், கப்பலில் இருந்து பக்கத்தில் நிலம் இருக்கிறாதவென அறிய நோவா தனது புறாவை அனுப்பினார். ஆலிவ் இலையுடன் திரும்பி வந்து அருகில் நிலம் இருப்பதைச் சொன்னது அப்புறா. அதே போல் காலில் மாட்டிய ஏதோவொரு செடியின் வேரைப் பார்த்து, பக்கத்தில் கரை என்ற சந்தோசப் படுகிறார், உடைந்து போன கப்பலின் மாலுமி. நீல நிறத்தில் இருக்கும் கடலில் இருந்து பச்சை நிறத்தில் இருக்கும் கடலுக்குள் நுழைகிறார். கரை பக்கம் என ஆறுதல் படுத்திக் கொள்கிறார். 10 நாட்கள் கடல் வாழ்வுக்குப் பிறகு ஏதோவொரு கரையொதுங்கும் அவருக்கு மருத்துவரின் மேற்பார்வை இல்லாமல் உணவு தர மறுக்கிறார்கள். 600 மனிதர்கள் புடைசூழ‌ அவரை மருத்துவரிடம் தூக்கிச் செல்கிறார்கள்.

10 நாட்கள் உணவும் குடிநீரும் இல்லாமல் உயிருடன் இருந்த அவரைத் தன் தேசத்தின் நாயகனாக கொலம்பியா கொண்டாடுகிறது. சர்வாதிகார ஆட்சியில் இருந்த கொலம்பிய அரசு, அவர் என்ன பேச வேண்டுமென நிர்ணயிக்கிறது. அவரைப் பேட்டி கண்ட ஆசிரியர், 15 ஆண்டுகளுக்குப் பின் புத்தகமாக்கியதே இப்புதினம். புயலிலும் சரியான நேரத்தைக் காட்டிய கைக்காடிகாரக் கம்பெனிக்காரர்கள், அவரை மாடலாக வைத்து விளம்பரப் படுத்தினார்கள். 10 நாட்கள் கடலில் ஊறிக்கிடந்தும் கிழிபடாத காலணியின் கம்பெனிக்காரர்களும் கூட. அலங்கரிக்கப்பட்டு வானொலியில் வீர உரையாற்றுகிறார். வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக தொலைக்காட்சிகளில் காட்டப்படுகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். ஆட்டோகிராப்கள். முத்தங்கள். எல்லாம் கரை சேர்ந்த 14 நாட்கள் வரைதான். அதன்பிறகு தான் உண்மைகள் வெளிவருகின்றன. 

பக்கத்து ஊரில் ஒருவன் முதலமைச்சரிடம் வீரதீர செயல்களுக்காக பணப்பரிசு பெற்றதைப் பார்த்து, குடிநீர்க் கிணற்றில் தானே விசம் கலந்துவிட்டு, விசம் இருப்பதாக ஊருக்குச் சொல்லி, பலபேர் உயிரைக் காப்பாற்றியமைக்குச் சமீபத்தில் முதலமைச்சரிடம் பணப்பரிசு வாங்கிய ஒருவன் கதையைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். 1955 பிப்ரவரியில் அவர்கள் பயணித்த நாளில் கரீபியன் கடலில் புயல் வரவேயில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் அடித்துச் சொல்கிறது. அதுமட்டுமில்லாமல் அக்கப்பலில் விதிமுறைகளை மீறி அதிக எடையுள்ள அனுமதியில்லாத பொருட்கள் ஏற்றப்பட்டு இருக்கின்றன. கொலம்பிய கதாநாயகனாகப் போற்றப்பட்ட அவரின் கருத்துகளை அரசு மறுக்கிறது. அதன்பிறகு அவர் என்னவானார் என்றே தெரியவில்லை.

ஆசிரியர் எழுதிய One Hundred Years of Solitude, Love in the time of cholera, Of love and other demons போன்ற புத்தகங்கள் பற்றி ஏற்கனெவே இதே தளத்தில் எழுதி இருக்கிறேன். மற்ற புதினங்கள் போலவே இதற்கும், இக்கதை தோன்றிய கதையைத் தன் முன்னுரையிலேயே ஆசிரியர் சொல்லிவிடுகிறார். அதனால் தான் நானும் முழுதாகச் சொன்னேன். அம்மாலுமி சொன்னவை உண்மையா பொய்யா என்பதையும் தாண்டி, அந்தப் 10 நாட்கள் அவர் கடலில் தனியாக என்னதான் செய்தார் என்பதற்காகவேனும் இப்புதினம் படிக்கலாம்.

அனுபந்தம்:
------------------
1. சுறாவின் வாயை உடலுக்குக் கீழ் ஏன் இயற்கை செய்திருக்கிறது?
2. நுரையீரலைப் பாதுகாக்க வேண்டுமென முதுகுப்புறத்தைச் சூரியனுக்குக் காட்டாமலே அலைகிறார். நுரையீரல்-முதுகு தொடர்பு எனக்குப் புரியவில்லை? தெரிந்தால் சொல்லுங்கள்.

- ஞானசேகர்

Sunday, April 07, 2013

104. ஆழி சூழ் உலகு


பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்களுக்காக‌)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : ஆழி சூழ் உலகு (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜோ டி குருஸ்
வெளியீடு : தமிழினி
முதற்பதிப்பு : டிசம்பர் 2004
விலை : 430 ரூபாய்
பக்கங்கள் : 551 (தோராயமாக 40 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் சொன்னது போல், சென்னை வந்தபின் சென்ற வருடம் ஜூலையில் நான் முதன்முதலில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா. மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, லயோலா கல்லூரியில் இரண்டாவது பொது நிகழ்ச்சி. பூவுலகின் நண்பர்கள் நடத்திய ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழா. நம்மாழ்வார் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பசுமைப் புரட்சியின் வன்முறை, மணல் கோட்டைகள் போன்ற சுற்றுச்சூழல் பற்றிய சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இரண்டு நாட்கள் நடந்த விழாவில், நான் சென்ற நாளில் பாலையும் நெய்தலும் விவாதத் திணைகள். அதுவரை புத்தகங்களில் மட்டுமே நான் படித்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்கள் பாலைத்திணை பற்றி பேசினார். நெய்தற்திணை பற்றி பேசிய பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் மற்றும் ஜோ டி குருஸ் இருவரும் எனக்கு அன்றுதான் அறிமுகம். அவர்களிடம் இருந்து இரு புத்தகங்கள் குறித்துக் கொண்டேன். வறீதையா அவர்களின் 'என்னைத் தீண்டிய கடல்' தம்பி சேரல் தந்தார். ஜோ டி குருஸ் அவர்களின் 'ஆழி சூழ் உலகு' கேட்கப்பட்ட கடைகளில் எல்லாம் அச்சில் தற்போது வருவதில்லை என்றார்கள். 4 மாதங்களுக்குப் பின் கிடைத்தது.
(https://www.nhm.in)
ஆழி சூழ் உலகு. ஆழி என்றால் கடல் என்று என்னைப் போல் பலர் தவறாகப் புரிந்திருக்க வாய்ப்புண்டு; முழுக் கடல் அல்ல; கடலின் ஒரு பகுதி. கடலில் நுரை பொங்கும் பகுதிக்கு ஆழி என்று பெயர். மன்னார் வ‌ளைகுடாவில் மண‌ப்பாடு மற்றும் கூடங்குளத்திற்கு இடையே இருக்கும் ஆமந்துறை என்ற பரதவர்களின் துறைதான் கதைக்களம். ஆமைகள் கடலில் இருந்து கரைக்கு வந்து கூட்டங்கூட்டமாக முட்டையிடும் பகுதி என்பதால் ஆம‌ந்துறை என்ற பெயர். இருட்டில் கடலில் இருந்து கரை தெரிவதற்காக மின்சாரம் இல்லாத காலத்தில் ஆமை ஓட்டில் ஆமை நெய்யை உருக்கி திரி போட்டு எரிப்பதாலும் ஆமந்துறை என்ற பெயர். கடற்கரையில் இருந்து பார்த்தால் கிழக்கே மணப்பாடு துறையும் தென்மேற்கே கூத்தன்துறையும் கடலுக்குள் தெரியும். இவ்விரு ஊர்களுக்கும் இடையே கடற்கரை உள்நோக்கி வளைந்து இருப்பதால் புயல் காலங்களில் அதிக சேதம் ஏற்படாத பகுதி. இப்பகுதியில் ஒரு மைல் தூரம் வரை பாறைகளால் அலைகள் ஆர்ப்பரிக்கும் ஆழியாக இருப்பதால் இயந்திரப் படகுகள் இயக்க முடியாது; கட்டுமரம் மட்டும்தான். ஆமந்துறை பரதவர்களின் வாழ்க்கையைக் கடலிலும் கரையிலும் பேசுகிறது புதினம்; 1933 முதல் 1985 வரை 6 அத்தியாயங்களில் வருடாவாரியாக‌ கிட்டத்தட்ட 4 தலைமுறைகளின் கதை.

கவுரு துளவை மாசா தாமான் மறுக்கு கோடா பருமல் அணியம் மையாவடி போன்ற நெய்தல் வார்த்தைகளால் ஆரம்பப் பக்கங்களை மெதுவாகப் படிக்க நேர்ந்தாலும், அவை பரிட்சய‌மான பின், ஆமந்துறையின் மக்கள் அறிமுகமான பின், வாசிப்பின் வேகத்திற்கு எவ்வித தடையும் கொடுக்காத கதைக்களம். இதுதான் ஆரம்பம், இதுதான் இலக்கு, இதுதான் கதை என்று சுருக்கிச் சொல்ல எதுவுமில்லை. புதினத்தின் ஓட்டத்தில் சிறுகதைகளை வெட்டி எடுத்து கோர்த்துக் கொள்ளும் பொறுப்பை வாசகனுக்கே விட்டுவிட்டார் ஆசிரியர். புதினத்தின் சுவாரசிய‌த்திற்கு அதுவும் ஒரு காரணம். முழுக்க முழுக்க பரதவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் புதினம் என்பதால், கடல், அரசு, சாதி, மதம், மூட நம்பிக்கைகள், பக்கத்துத் துறைகள் என்று பல தளங்களில் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறது. சர்வதேசக் கடல் எல்லை என்று மாயக் கோடு போட்டுக் கொண்டு, ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களை அனுமதித்து கடல்வளம் சுரண்டப் படுவதையும் சொல்கிறது.

மண‌ப்பாடு தூத்துக்குடி திருவைகுண்டம் சோதிக்காவிளை தச்சன்விளை காவல்கிணறு இடிந்தகரை கூடங்குளம் இடையன்குடி குலசேகரப்பட்டணம் மற்றும் நாரோயில் (நாகர்கோயில்) போன்ற ஊர்களுக்கும், கச்சத்தீவுக்கும், கன்னியாக்குமரியில் இருந்து 15கிமீ தொலைவில் ஆழ்கடலில் தனியே உயர்ந்து நிற்கும் சுறாப்பாறைக்கும் கதை கூட்டிச் செல்கிறது. நம்ம வள்ளியூர் கோழிச்சண்டை முதல் இலங்கை இனக்கலவரம் வரை பேசுகிறது புதினம். நாடார் பரதவர் சாதிச்சன்டைகள், பரதவத் துறைகளுக்கு இடையேயான சண்டைகள் பற்றியும் பேசுகிறது. சணல்வலை, பருத்தி நூல் வலை, டிஸ்கோ வலை என்று காலத்தால் மாறிப்போன பொருட்களையும், காலத்திற்கு ஏற்றாற் போல் கிடைக்கும் மீன்களையும் சொல்கிறது.

கடலிலும் காற்றிலும் போராட்டமே வாழ்க்கை என்று கொண்டு இயல்பிலேயே அசாத்திய துணிச்சலுடன் இருக்கும் பரதவர்களுடன், நம்மையும் கடலுக்குள் கூட்டிச் செல்கிறது புதினம். சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெரிய மீன்கள், தலைப் பகுதியில் ஒரு பகுதியில் ஒளி வீசும் மின்சார மீன்கள், இலட்சக்கணக்கில் சாளை மீன்கள், ஆயிரக்கணக்கில் கடற்குதிரைகள், ஒரு பூந்தோட்டமே மலர்ந்தது போல பல வண்ணங்களில் பல வடிவங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அழகில் பற்பல மீன்கள், கிரீச்சிட்டுப் பறக்கும் இனம் புரியாத பறவைகளின் விநோத ஒலிகள் என அடுத்தடுத்து காட்டுகிறது புதினம், பக்கத்திலேயே மரணத்தையும் வைத்துக் கொண்டு!
(http://www.uyirmmai.com)
'முத்துக் குளித்துறைப் பரதவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிநடத்திய புனித பிரான்சிஸ் சவேரியாருக்கும் அவர் வழிவந்த சேசு சபைக் குருக்களுக்கும் இந்நூல் காணிக்கை' என்கிறது ஆரம்பப் பக்கம். மொத்த புதினத்திலும் ஒரே ஒரு நல்ல பாதிரியார் தான் இருக்கிறார். எதார்த்தம் அதுதான். மீதி பாதிரியார்களுக்கு இடையே இருக்கும் கள்ளக்காதல்களையும் பொருள்வெறியையும் அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். சேற்றுக்குள் முளைக்கும் இதுபோல செந்தாமரைப் பாதிரியார்களை மட்டுமே நம்பி தங்கள் ஆன்மீகத்தைத் தொடரும் மக்களின் எண்ணத்தை அற்புதமாகச் சித்தரித்து இருக்கிறார். ஐந்திணைச் சுற்றுச்சூழல் விழாவில் நெய்தலில் பேசிய மூன்றாமவர் கூட, கத்தோலிக்க லயோலா கல்லூரியில் தைரியமாக பரதவக் கிறித்தவர்கள் பாதிரியார்களால் ஏமாற்றப் படுவதைப் பற்றி பேசினார்.

பல வித்தியாசமான உயிரினங்களும், அவற்றின் வித்தியாசமான பண்புகளும் புதினத்தில் நிறைய உள்ளன. உதாரணமாக, நமக்கெல்லாம் தெரிந்த டால்ஃபின் என்ற ஓங்கல். ஓங்கல்கள் (Dolphin) காந்தி போல மிகவும் சாதுவானவை. கடலில் யாராவது தவறி விழுந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓங்கல்கள் பாய்ந்து வருமாம். இந்த ஓங்கல்கள் எல்லாம் முற்பிறவியில் மனிதர்களாய் இருந்தவை என்று கதைகதையாகச் சொல்வார்கள். இதனால்தானே என்னவோ பரதவர்கள் ஓங்கல்களைச் சாப்பிடுவதில்லை. அவற்றைப் பிடிப்பதும் இல்லை. சில நேரங்களில் இவை வலைகளைக் கிழிப்பதுண்டு. இருந்தாலும் பரதவர்களுக்கு இந்த மீன்கள் மேல் பாசம்தான். கடலில் ஆள் விழுங்கி சுறாக்களை எதிர்க்கும் வலுவுள்ளவை இந்த ஓங்கல்கள் மட்டும்தான். எனது உப தகவல் ஒன்று; ஓங்கலுக்கும் மனிதனுக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை உண்டு. உடலுறவு என்ற விசயத்தை ரசித்து இன்பத்திற்காக செய்யும் இரண்டே உயிரினங்கள்! ஓங்கல்களை அழகான துள்ளலுடன் மழலைத் தனத்துடன் பார்த்திருப்பீர்கள். இறந்த  ஓங்கல் ஒன்றின் அழுகிய உடலை, நான் சென்னை மீனவக் கிராமம் ஒன்றில் இருந்து ஒரு பின்னிரவில் நான் எடுத்த புகைப்படம் இது:

பஞ்சாமையின் இறைச்சி பஞ்சுபோல் மென்மையாய் இருக்கும். கடலில் மாட்டிக் கொண்டவர்கள் பசி போக்க‌ அதன் கழுத்தைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதாக‌வும், இறைச்சியைத் தின்பதாகவும் புதினத்தில் வருகிறது. கல்லூரி மாணவர்களுடனும் சில வெளிநாட்டவர்களுடனும் கலந்துரையாட கிடைத்த ஒரு வாய்ப்பில், ஆமை பற்றிய பேச்சு வந்த போது, நான் இரண்டு தகவல்கள் சொன்னேன். அதில் ஒரு தகவல், புதினத்தில் படித்த‌ பஞ்சாமை பற்றியது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் அந்த வாழ்வியல் எதார்த்தத்தை யாருமே நம்பவில்லை. கொலம்பஸ் தன் கடற்பயணத்தில் ஆமைகளை எடுத்துப் போய் சமைத்துச் சாப்பிட்டதாக இன்னொருவர் சொன்ன தகவலுக்கு அனைவரும் கைத்தட்டினார்கள். பெனிசிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் தீவிர சைவ உணவுக்காரராக இருந்து அசைவ உணவிற்கு மாறிய சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி வாதத்திற்கு வலு சேர்க்கலாம் என நினைத்தேன்; செய்யவில்லை. குஜராத், ஈழப் படுகொலைப் படங்களைப் பார்த்து விட்டு, இக்காலத்தில் இதுமாதிரி யாராவது செய்வார்களா என்று விலகிப் போகும் சாராரும் உள்ள சமூகம் இது!

1964ம் ஆண்டு வரும்போது யார் சாகப் போகிறார்களோ என பயந்து கொண்டே படித்தேன். தனுஷ்கோடியில் 1964 புயலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலருடன் நேரடியாகப் பேசி இருக்கிறோம். நீச்சல் காளி என்ற முதியவர் தான் அதிக தகவல்கள் தந்தார். அவ்விபத்து நடந்த பகுதிகளை நானும் நண்பர் பிரேம்குமாரும் நடந்தே பார்த்திருக்கிறோம். அந்நிகழ்வுகளை அற்புதமாக விளக்குகிறது இப்புதினம்.

பின்னிணைப்பாக இருக்கும் வட்டார வழக்குச் சொல் அகராதியும், பெயர் மரூஉக்களும் அருமை. ஒஸ்தி என்ற வார்த்தைக்குக் கிறித்தவ மதத்தில் பொருள் இருக்கிறது! ஆனால் அகராதி போதாது. உதாரணமாக, கெபி மேற்றாசனம் போன்ற கிறித்தவ வார்த்தைகளின் பொருள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதினத்தில் உள்ள தேரி ஆராளி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.

எனக்கு 3 விசயங்கள் புதினத்தில் புரியவில்லை. படித்தவர்கள் யாராவது சொல்லவும். 1) பேச்சிக்கு மணிமேகலை எனப் பெயர் மாற்றம் செய்வதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா? 2) வசந்தா எதற்காக சிறைக்குப் போகிறாள்? அவனின் பிளந்திருந்த நெஞ்சில் மண்ணள்ளிப் போட்டு வெறியோடு அதே நெஞ்சில் அவள் மிதித்ததாகத் தான் புதினம் சொல்கிறது. அவள் கொன்றதுபோல் படித்ததாக ஞாபகம் இல்லை. 3) சிவகாசி கொள்ளை என்று சொல்லப்படும் வரலாற்றுச் சம்பவம் என்ன?

நான் ரசித்தவை:
பாத்திரங்கள் ‍-> 1) தொம்மந்திரை 2) காகு சாமியார் 3) முதல் பக்கத்தில் அறிமுகமாகி இரண்டாம் பக்கத்தில் செத்துப் போய் மூன்றாம் பக்கத்தில் தாயையும் எடுத்துக் கொண்டு ஒரு சிறுகவிதை போல் வந்து போகும் பரதேசி என்ற குழந்தை 4) சோடி வரிப்புலியன் சுறாக்களில் ஒன்று மட்டும் தூண்டிலில் மாட்டி கட்டுமரத்தோடு இழுத்துச் செல்லப்பட கூடவே இரவு முழுக்க நீந்திப் போகும் இன்னொரு மீன் 5) சூசையார், சிலுவை, கோத்ராப் பிள்ளை, செலஸ்டின்
உரையாடல்கள் -> நிறைய இருக்கின்றன. நான் ரசித்து சிரித்த ஒன்று இது: கண்டாரஓளி கலிஸ்டா ஒரு பொண்ணப் பெத்திருக்கா. அடடடடா... அவளுக்கு குஞ்சி மட்டுந்தாம் இல்ல‌
ப‌குதிகள் ‍-> 1) சூசையாருக்கும் சிலுவைக்கும் உள்ள உறவு 2) 1975ல் நாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 300கிமீ தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த புயல் தென்மேற்காக நகர ஆரம்பிக்கும்போது, ஊரைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குப் போகச் சொல்லி மீன்துறை அதிகாரிகள் பரதவத் துறைகளில் ஜீப்பில் ஒலிபெருக்கியில் அறிவித்து செல்லும் போது, அரசு மீனவர்கள் உயிரை எந்த அளவிற்கு மதிக்கிறது எனப் புரிய வைக்கும் அதிகாரிகளுக்கு இடையேயான‌ பேச்சு. 3) பேருந்திற்குப் பணம் இல்லாமல் மணப்பாடு கடற்கரையில் சேகர் சுற்றித் திரியும் பகுதி. 4) காகு சாமியார் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் சம்பவம் 5) புதினத்தின் கதையோடு சேராத கடைசி இரண்டு பக்கங்கள். கெழுகடல் செல்வி கரை நின்றாங்கு....

அனுபந்தம்:
‍‍‍‍----------------
1) சென்ற வருடம் நாங்கள் பார்த்த சிறந்த திரைப்படமாக நானும் என் நண்பன் ஒருவனும் தேர்ந்தெடுத்தது, நீர்ப்பறவை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் சீனு ராமசாமியின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்புதினத்தில் நபர்களையும் இடங்களையும் என்னால் எளிதாகக் கற்பனை செய்து கொள்ள நீர்ப்பறவைதான் காரணம்.
2) இப்புதினத்தில் சுந்தரி டீச்சர், மலையாள ஆபாசத் திரைப்பட நாயகி போல சித்தரிக்கப்பட்டு இருந்ததாக திட்டிய விமர்சனம் ஒன்று படித்தேன். எனக்கு எதிர்க் கருத்து ஏதுமில்லை. ஏனென்றால், அம்மாதிரி படங்களை நான் சத்தம் வைக்காமல் பார்ப்பதால் கதை தெரியாது. ஆனால் சுந்தரி டீச்சர் என்ற பாத்திரம் நிறைவு பெறும் விதம் புதினத்தில் உள்ள பல நல்ல கதையாடல்களில் ஒன்று.

மனிதன், மனிதவுருவம் எடுக்கும் முன் குரங்காக இருந்தான் என்கிறது அறிவியல். அதற்கும் முன் கடலில் நீந்தும் பாலூட்டி விலங்காகவும் இருந்தான் என்கிறது. மயிர்கள் அற்ற உடலை ஆதரமாகவும் சொல்கிறது. கடலில் இருந்து வெளிவந்த அப்பாலூட்டி குரங்காகி மனிதனான‌து என்றால், நெய்தல் தான் நமக்கெல்லாம் ஆதித்திணை. தேசங்களின் வரைபடங்களில் விளிம்புகளில் இருக்கும் ஆதித்திணைவாசிகளான மீனவ இனமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது. அப்படியொரு நிலையிலேயே அவர்கள் நீடிப்பது பலருக்குச் சவுகரியம் என்பது நான் சொல்லித் தமிழ் பேசும் நல்லுலகிற்குச் சொல்லத் தேவையில்லை. இப்புதினம் சொல்லும் சில கருத்துக்களுடன் நான் முடிக்கிறேன்; நாம் ஆரம்பிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன‌ !

கடற்கரையில் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டப்படி பணயக் கைதிகளாகப் பிடித்து வரப்படுபவர்களைக் கடலில் வைத்துத்தான் அடிக்க முடியும். அவர்களைக் கரை கொண்டுவந்து நிலத்தில் அவர்கள் கால் வைத்துவிட்டால் அடிப்பதற்கு அந்தச் சட்டம் இடம் கொடுப்பதில்லை. கரையில் இறங்கி நடந்தவுடன் அந்தப் பணயக் கைதிகள் விருந்தினராகக் கருதப்படுவர். ஊர்ச் செலவில் அவர்களுக்குப் புதுத்துணிகள் கொடுப்பார்கள். வழக்கு முடியும் வரை அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் ஊரில் இருப்பதாகத் தகவல் அனுப்புவார்கள்.

பரதவர்களுக்கிடையே மட்டுமல்ல; பிற சமூகத்தினருடன் மோதல்கள் வரும்போது காலங்காலமாக சில நியதிகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். எந்த அளவு உக்கிரமான சண்டையானாலும் இவர்கள் முதியவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் ஒருபோதும் தொட்டதில்லை. மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அடைக்கலம் என்று வந்துவிட்டாலும் தொடுவதில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)
 

Saturday, November 24, 2012

99. செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்


-------------------------------------------------------------------------
புத்தகம் : செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்
ஆசிரிய‌ர் : சோம‌.இராமசாமி
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை
முதற்பதிப்பு : நவம்பர் 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 140 (படங்களுடன் தோராயமாக 30 வரிகள் / பக்கம்) 
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------
நதிகளின் வாழ்வில் பல்வேறு நிலைகள் பற்றி நடுநிலை வகுப்புகளில் புவியியலில் படித்திருப்போம். பிறந்தவுடன் மலை பள்ளத்தாக்கு என்று சமவெளியை அடைவதற்காகப் பயமறியாது குதித்தோடும் இளமை நிலை. மணலும் கனிமங்களும் சேகரித்துக் கொண்டே சமவெளியில் ஒய்யார நடைபோடும் பக்குவநிலை. கடலடைந்த பின் கடலலை எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் தள்ளாடும் முதுமை நிலை. இம்மூன்று நிலைகளில் முதுமை நிலையில் அதிகப்படியான சுமைகளைக் சேர்க்க‌ கடல் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஒரு முகட்டை (காவிரிக்குத் திருச்சி போல‌) மையமாக வைத்து பல தடங்களில் கடலடைந்து டெல்டாவைப் பரப்புகிறது. இளமையில் தான் சேகரித்த வண்டலை எல்லாம் முதுமையில் டெல்டாவில் கொட்டி வளப்படுத்துகிறது.

பிறந்த இடமும் வருடமும், முடியும் இடம், கடந்து வந்த பாதைகள், உடன் வந்தவர்கள், விட்டோடியவர்கள், சந்ததிகள் என நதிகளுக்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. மனிதனுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கே படாதபாடு படும்போது, நதிகளின் கெதியை எப்படி தெரிந்து கொள்வது? செயற்கைக்கோள்கள். செய‌ற்கைக்கோள் படங்களின் நிறச்செறிவை வைத்து, அவ்விடத்தில் இருப்பது நீரா, காடா, மலையா, நீருக்குள் காடா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் இன்றைக்கு உள்ளன. அதன்பிறகு வயதைக் கண்டுபிடிக்க இருக்கின்றன கார்பன், ப்ளூரின் என்று விதவிதமான முறைகள்.

(http://www.noolulagam.com)
செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல். ஆசிரியர் புவியியல் விஞ்ஞானி. துணை வேந்தர், காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம், திண்டுக்கல். தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் தான் கண்டுபிடித்த விசய‌ங்களில் ஒரு சாதாரண‌ வாசகனுக்குப் புரியும் விசயங்களே இக்கட்டுரைகள். காவிரி, வைகை, தாமிரபரணி, புதுக்கோட்டை வெள்ளாறு, தேவக்கோட்டை மணிமுத்தாறு என்ற ஐந்து நதிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர். வாழ்க்கை வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள காவிரியை எடுத்துக் கொள்வோம்.
தலைக்காவிரி கொகேனெக்கல் மேட்டூர் என ஓடி திருச்சியை முகடாகக் கொண்டு டெல்டாவைப் பரப்பி கொள்ளிடம் என்ற பெயரில் ஓடி வங்கக்கடலில் கல‌ப்பதுதான் காவிரியின் தற்போதைய தடம். (பிரதான பாதையில் இருந்து விலகி கடல் கடக்க ஓடும் வழிகளைத் தடம் எனக் கொள்வோம்) புத்தகம் என்ன சொல்கிறது என்றால், இது காவிரியின் 19வது தடம். இதற்கு முன் 18 வித்தியாசமான தடங்களில் காவிரி கடல் அடைந்திருக்கிறது. காவிரி டெல்டாப் பகுதிகளில் ஓடும் குடமுருட்டியாறு பழவனாறு பழம்காவிரி போன்ற தடங்களில் ஒரு காலத்தில் காவிரி கடல் சேர்த்திருக்கிறது. அதே போல் காவிரி விட்டுப் போன ஒரு தடத்தில்தான் இன்று புதுக்கோட்டை வெள்ளாறு ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் காவிரியின் பாதையிலேயே திருச்சி இல்லை என்கிறது புத்தகம்! திருச்சி காவிரிக்கு 3வது பாதை. மேட்டூரில் இருந்து திருக்கோவிலூர் வழியே கடலூர்ப் பகுதிகளில் அமைகிறது 2வது பாதை. அப்போதுதான் அரிக்கமேடு துறைமுக நகரமாக இருந்திருக்கிறது. ஆச்சரியமே காவிரியின் 1வது பாதையில் தான் இருக்கிறது. கொகேனெக்கல் வாணியம்பாடி ஆம்பூர் வாலாஜாப்பேட்டை அரக்கோணம் வழியாக திருவள்ளூர்ப் பகுதிகளில் அமைகிறது 1வது பாதை. கடல் அடைய காவிரி உபயோகித்த தடங்கள் என்னென்ன தெரியுமா? காவிரி விட்டுப்போன அத்தடங்களில் தான் இன்றைக்கு அடையாறும் கூவம் ஆறும் ஓடிக் கொண்டிருக்கின்றன! கூவம் ஒரு காலத்தில் வளமிக்க நதி. வங்கக்கடலில் 2 கிலோமீட்டருக்குக் கொட்டிக் கிடக்கும் வண்டலும், திருவள்ளூர்ப் பகுதிகளில் காணப்படும் கற்படுகைகளும் சான்றுகள்!

கொகேனெக்கலை அச்சாகக் கொண்டு கடிகாரமுள் திசையில் காவிரி இரண்டு முறைகள் ஏன் பாதை மாறியது? ஒவ்வொரு பாதையிலும் தெற்கிலிருந்து வட‌க்காக‌ பதினெட்டு முறைகள் ஏன் தடம் மாறியது? அடுத்து பாதை அல்லது தடம் மாறுமா? மாறினால் எப்படியெல்லாம் ஓடும்? இதையெல்லாம் தெரிந்து வைத்து என்ன பயன்? கடல்தாக்கம் மற்றும் வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், தமிழகத்தின் பண்டைய கடலின் எல்லைகள், அதிலிருந்த துறைமுக நகரங்கள், புத்தகம் படித்துப் பாருங்கள். இதே போல்தான் மற்ற 4 ஆறுகளின் வாழ்க்கை வரலாற்றையும் விளக்குகிறார். நான் சுருக்கிச் சொல்வதால் ஏதோ புனைவு போல தோன்றும் இவ்விசயங்கள் எல்லாம் அறிவியல் பூர்வமாகவும், அரிக்கமேடு போன்ற பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள் சின்னங்கள் மூலமும், திருக்கோவிலூர் போன்ற கல்வெட்டுகள் மூலமும், பெரிய புராணம் போன்ற‌ தமிழ் இலக்கியங்கள் மூலமாகவும் விளக்குகிறார் ஆசிரியர். 

(http://www.mapsofindia.com)
சில விசயங்கள்: 
1) 1100 ஆண்டுகளுக்கு முன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கர்களுடன் போருக்குச் செல்லும் போது காஞ்சிபுரத்திற்கு வடக்கே ஒரு பெருநதியைக் கடந்ததாகக் கலிங்கத்துப் பரணி சொல்கிறது. அப்படி ஏதாவது நதி இப்போது இருக்கிறதா? 
2) கடல் மதுரை வரை வந்து தாக்கியதாகவும் மன்னன் சுந்தரபாண்டியன் ஒரு செண்டை எறிந்ததால் கடல் பின்வாங்கியது எனவும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய திருவிளையாடல் புராணம் சொல்கிறது. ப்பூ என்று ஊதினால் நீரோடும் கதையெல்லாம் நாடோடி மன்னன் படத்தில் பாலையா சொன்னால் ரசிக்கலாம். ஆனால் நடைமுறையில் மதுரைக்குப் பக்கத்தில் கடல்?
3) கொள்ளிடத்தில் தண்ணீர் குறைவாக ஓடும் போது வட மருங்கில் ஓடுமாம். கவனித்து இருக்கிறீர்களா?
4) அறந்தாங்கி மற்றும் தேவக்கோட்டையில் இருந்து கடல் நோக்கிச் செல்லச் செல்ல மேற்கு நோக்கி கரை கொண்ட பிறைவடிவ‌ குளங்கள் அதிகமாக இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
5) பொன்னையாறு, திருச்சி தில்லை நகர், தஞ்சாவூர் வல்லம், திருநெல்வேலி வல்லநாடு - பெயர்க்காரணம்?
6) மேற்கிலிருந்து ஒழுங்காக கிழக்காக ஓடும் போது, திருநெல்வேலியில் சற்று நெளிந்து வடக்காக ஓடும் தாமிரபரணியைப் புவியியல் ரீதியில் ஒரு அபூர்வ நதி என்கிறார். டெல்டாவே இல்லாமல் பக்குவநிலை மட்டுமே கொண்ட நதியாம். அதன் வெள்ளப் பாதிப்பு திருநெல்வேலியில் மட்டும் அதிகம் இருப்பதேன் தெரியுமா?

காவிரியைக் குழாய்கள் மூலம் பல கிலோ மீட்டர்கள் இழுந்து வந்து தாகம் தீர்க்கும் எங்கள் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சின்ன காட்டாறு, ஒரு காலத்தில் காவிரியின் 7வது தடம்! நீங்கள் பார்க்கும் ஒரு குளம் கூட ஒரு நதியின் புதையுண்ட பாதையாக இருக்கலாம். இப்புத்தகம் படியுங்கள். நீங்கள் பார்க்கும் தமிழகமும், 6500 கிலோ மீட்டர்கள் வடக்கே நகர்ந்து வந்து இன்னும் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவும் இன்னும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் தெரியும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், புவியியல் துறை சார்ந்தவர்களும் கண்டிப்பாகப் படிக்கலாம். இப்புத்தகம் சொல்லும் ஐந்து ஆறுகளுடன் தொடர்புள்ள ஊர்க்காரர்களுக்கும், சென்னை அறந்தாங்கி வேதாரண்யம் நெய்வேலி கடலூர் கம்பம் பட்டுக்கோட்டை மன்னார்குடி ஜெயங்கொண்டம் காரைக்குடி திருக்கோவிலூர் ஊர்க்காரர்களுக்கும் ஆச்சரியங்கள் இப்புத்தகத்தில் நிறைய இருக்கின்றன.

கொகேனெக்கலில் புதையுண்ட காவிரியை வெளிக்கொணர சோழ இளவரசன் ஒருவன், அங்கு போய் காவிரியில் குதித்து உயிர்த் துறக்கிறான். அவனின் தியாகத்தில் மனமுருகி கிழக்கே ஓடிக்கொண்டிருந்த காவிரி தெற்கே திரும்பி திருச்சி வழியாக சோழ நாட்டைச் செழிக்கச் செய்கிறது. காவிரி இரண்டாம் முறை பாதை மாற இப்படி ஒரு புராணக் கதையை ஆசிரியர் சொல்கிறார். நதிகளுக்கும் பல்லுயிர்களுக்கும் இழைக்கப்படும் துரோகங்கள் அதிகமான நம் தலைமுறைக்கு இக்கதை ஏதோ சொல்வது போல் தெரிகிறதா, இப்புத்தகத்தைப் போல‌?

- ஞானசேகர்

Monday, October 22, 2012

97. S M S எம்டன் 22-09-1914


'இதோ பார் கண்ணா... இதுதான் சமுத்திரமாம்... இங்குதான் எம்டன் வந்தானாம்... பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்... செல்லம்...'
- சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)
ஆசிரிய‌ர் : திவாகர்
வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : 2008
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 374 (தோராயமாக 37 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை 'சூரியன் மறையாத நாடு' என்று பெருமை பிரிட்டனுக்கு உண்டு. அந்த அளவிற்கு அது தனது காலனிகளை உலகம் முழுவதும் பரப்பி வைத்திருந்தது. இன்றைக்கு இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பைத் தங்கள் காலனிகளின் ராணி என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள். பிரிட்டிஷாரின் ஏரி என்று சொல்லப்படும் அளவிற்கு இந்தியப் பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. அந்த அளவிற்குக் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது இரண்டாம் உலக‌ப் போர் காலத்தில் ஜப்பான் குண்டு வீசப் போவதாக மக்களிடையே வதந்தி பரவியதை மதராசபட்டணம் அந்தநாள் போன்ற திரைப்படங்களில் பார்த்திருப்பீங்கள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே அப்படி ஒன்று மெட்ராஸ் மாநகரில் நடந்திருந்தது. முதல் உலகப் போர் ஆரம்பித்து சில நாட்களில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்று குண்டுமழை பொழிந்தது. சூரியன் மறையாத நாட்டின் ஏரியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் கண்ணாமூச்சி காட்டிய அக்கப்பலின் பெயர் எம்டன்; SMS எம்டன்.

SMS என்றால் ஜெர்மானிய மொழியில் Seiner Majestat Schiff என்றும் ஆங்கிலத்தில் His Majestic Ship என்றும் பொருள். கிழக்கின் அன்னம் என்ற புனைப்பெயரும் உண்டு. கிழக்குக் கடலில் அறுபதிற்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் வேவுக் கப்பல்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிவிட்டு, 1914ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி இரவு 9:20 மணி முதல் 9:30 வரை, பத்தே நிமிடங்கள், கடற்கரையில் இருந்து ஒண்ணரை மைல் தொலைவில் இருந்து மெட்ராஸ் நோக்கிக் குண்டுகளை வீசியது எம்டன். 130 குண்டுகள். 5 பேர் பலி. மெட்ராஸ் துறைமுகமும் இன்றைய தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையும் இலக்குகள். சென்னை உயர்நீதிமன்ற வ‌ளாகத்தினுள் ஒரு குண்டு விழுந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருந்த செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன் படித்தபோதுதான் எம்டன் எனக்கு அறிமுகம் ஆனது. அந்த நினைவுத்தூணைக் காணவில்லை என்ற செய்தியை இந்த ஆண்டு படித்தேன்.

இரவில் பொதுமக்கள் வீதியில் நடமாட வேண்டாம். வீட்டுக்குள்ளே எரியும் விளக்கின் ஒளி வெளியே தெரியக் கூடாது. எம்டனுக்குப் பயப்பட வேண்டாம். இப்படி அரசாங்கம் ஒலிப்பெருக்கியில் மெட்ராஸ் தெருக்களில் கத்தியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மெட்ராஸை விட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். விதவிதமான வதந்திகள். புதுச்சேரி அருகே எம்டனைப் பார்த்து டாட்டா சொன்னதாக சிலர் கூறினர். கல்கத்தா கிளப் ஒன்று பிரிட்டிஷாரைத் திணற வைத்த எம்டனின் வீரதீர செயல்களைப் பாராட்டி அதன் கேப்டனுக்குக் கௌரவ உறுப்பினர் பட்டம் கொடுக்க முன்வந்தது. அன்று எம்டனால் மெட்ராஸைச் சுலபமாக அழித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பின்வாங்கிப் போய்விட்டது. அதற்குச் சரியான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. அக்கப்பலில் ச‌ண்பகராமன் என்ற ஒரு டாக்டர் பணிபுரிந்ததாகவும் பின்னாளில் ஒரு வதந்தி பரவியிருக்கிறது. அதை ஜெர்மன் மறுத்துவிட்டது. இந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு திவாகர் அவர்கள் எழுதி இருக்கும் வரலாற்றுப் புதினம்தான் S M S எம்டன் 22-09-1914.



சண்பகராமனுக்கு ஆசிரியர் தனது புதினத்தில் வைத்திருக்கும் பெயர் சிதம்பரம். மெட்ராஸ் மாநகர டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அருகில் மயிலாபுரியில் (மயிலாப்பூர்) சிதம்பரம் வீடு. எம்டனுக்குள் மிக்க மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட வெளியாள் என்ற பெருமையுடன் எம்டனில் மாட்டிக் கொள்ள, மெட்ராஸ் மீது குண்டு போடாமல் புதினத்தின் 51வது பக்கத்திலேயே தடுத்து விடுகிறார். எந்த ஒரு மர்மத்தைப் புதினத்தின் பின்னட்டை சொன்னதோ, அந்த மர்மம் அத்தோடு முடிகிறது. இனிமேல் படிக்க என்ன இருக்கிறது என மூடி வைக்க நினைக்கும் வாசக‌னுக்கு அடுத்தடுத்து பல மர்மங்களைக் கொடுத்து திறந்தே வைத்திருக்கப் பணிக்கும் புதினம் இது.

புதினத்தின் கதைகளை மூன்றாகப் பிரிக்கலாம். கடலோடும் எம்டனுக்குள் நடக்கும் கதை ஒன்று. அதில் மாட்டிக் கொண்ட சிதம்பரத்தைக் காப்பாற்ற போராடும் குடும்பம், மாட்டிவிட போராடும் சிலபேர் என கரையில் நடக்கும் கதை இரண்டு. கதை மாந்தர்கள் டைரியில் இருந்தும் ஓலைச் சுவடிகளில் இருந்து வாசிக்கும் இராஜராஜ சோழன் பற்றிய கதை மூன்று. மெட்ராஸ் குண்டு வீச்சு முதல் 50 நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியக் கப்பலொன்றால் மூழ்கடிக்கப்படுவது வரை பயணிக்கிறது, எம்டன் சம்மந்தப்பட்ட முதல் கதை. பிரிட்டனின் பெருங்கடற்படையை உலக மக்களிடையே கேலி பேச வைத்த‌ எம்டன் சென்ற பாதையில் நம்மையும் கூட்டிப் போகிறது புதினம். எம்டனின் கேப்டன், துணைக் கேப்டன், சீன உதவியாள், அடிபட்டுக் கிடக்கும் டாக்டர் என்ற உண்மைப் பாத்திரங்களுக்கு இடையே நுழைந்து, எம்டனின் திசையைத் தன் புத்திசாலித்தனத்தால் தனக்குச் சாதகமாகத் தீர்மானிக்கும்படி சிதம்பரம் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

இந்திய நிலக்கரியின் தரம் குறைவு. எம்டனில் 3 புகைப்போக்கிகள். செப்டம்பர் 20ம் தேதி புரட்டாசி (மகாளய) அமாவாசை; 22ம் தேதி மெட்ராஸ் டி ஐ சி லாங்டன் பிறந்தநாள். வைசிராயின் வளர்ப்பு மகள் உயரம் தாண்டுதல் வீராங்கனை. இவை போன்ற சின்னச் சின்ன தகவல்களைக் கதையை நகர்த்தப் பயன்படுத்தி இருப்பது அருமை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் எம்டன் மூழ்கடிக்கப்பட்ட பின் மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் சிறப்பு விருந்து முடியும் வரை புத்தகத்துடனேயே வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு எம்டனைச் சுற்றி பல முடிச்சுகளைப் பின்னியிருப்பதும் அருமை. அதற்காக பல சரித்திர விசயங்களைத் தேடிப் போய் திரட்டி இருக்கும் ஆசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நான் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததில்லை. எம்டன் புதினத்தில் இராஜராஜ சோழன் பற்றிய மூன்றாம் கதை ஆரம்பிக்கும் போது அவர் எப்படி இறந்திருப்பார் என்ற மர்மத்தை நோக்கியே புதினம் நகரும். எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தால், அவர் அரியணை ஏறியவுடன் கல்கி முடித்து விட்டதாக‌ சொன்னார்கள். பொன்னியின் செல்வன் புத்தகத்தை இராஜராஜ சோழனோடு முழுக்க சம்மந்தப் படுத்துவது போல் என் புத்தியில் எப்படி பதிந்தது என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன், அவரின் மகன் இராஜேந்திரச் சோழன், பேத்தி அங்கம்மா என்று ஒவ்வொரு தலைமுறையாக மர்மங்களுடன் பயணிக்கிறது புதினம்.

புத்தகம் முடித்தபின் எனக்குச் சில சந்தேகங்கள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
1. எம்டனில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நோபிள் என்ற பெண், உண்மையிலேயே வைசிராய் ஹார்டிங்கின் வளர்ப்பு மகளா, இல்லை ஆசிரியரின் புனைவுப் பாத்திரமா?
2. ஒரு சண்டையில் எந்திரத் துப்பாக்கி உபயோகப் படுத்துவார்கள். AK47? அது முதல் உலகப் போர் சமயத்தில் உபயோகத்தில் இருந்ததா?
3. சண்பகராமன் என்றொருவர் எம்டனில் இருந்திருக்கவில்லை என்கிறது புத்தக முன்னுரை. சென்னை கிண்டியில் காந்தி மண்டப வாளகத்தில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சண்பகராமனுக்குச் சிலை இருப்பதாகப் படித்தேன். வேறெந்த தகவலும் இப்போது என்னிடம் இல்லை.

இந்தியா எதுவென்றே ஒரு தெளிவான புரிதல் இருந்திராத‌ காலத்தில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் என்ற சக்தியால் தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது போல சித்தரிக்கும் பகுதிகளும், சிவபெருமான் யோகா அரசக்குடும்பம் போன்ற விசயங்களை அளவுக்கதிகமாகக் கொண்டாடும் பகுதிகளும் எனக்குப் பிடிக்கவில்லை. எம்டனை எடுத்துவிட்டால் ஓர் ஆன்மீகப் புத்தகம் போன்ற பிரம்மை இருந்தது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படிக்கும் போது இப்படி தோன்றாமல் இருக்கும்படி, புத்தகம் சுவாரசியமாக இருந்ததில் மகிழ்ச்சி.

ஒரு நல்ல காரியத்தைச் செய்த ஒரு நல்ல நாளில் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என முடிவு செய்து வாங்கிய புத்தகமிது. நான் சென்னை வந்து 4 மாதங்கள் தான் ஆகின்றன. அடிக்கடி மெரீனா போய் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது மிதந்து போகும் கப்பல்கள் எல்லாம் எம்டன் போலவே தெரிகின்றன. திடீரென வானத்தில் இருந்து மினிக்கிக் கொண்டு கலங்கரை விளக்கம் மேல் பறந்து போகும் விமானங்கள் எல்லாம் குண்டுகள் போல் தெரிகின்றன. இரகசியங்களை எனக்குச் சொல்லாமல் அலைகள் கேலியாகச் சிரிக்கின்றன.

சென்னை கடற்கரை மேல் எனக்கிருக்கும் பிடிப்பு இன்னும் அதிகமாகும்படி ஒரு நல்ல வரலாற்றுப் புதினத்தைத் தந்தமைக்கு ஆசிரியருக்கு டோய்ச் மொழியில் 'டங்கே'.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Wednesday, February 08, 2012

86. 20,000 LEAGUES UNDER THE SEA

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 

------------------------------------------------------------------------
புத்தகம் : 20,000 Leagues Under the Sea
ஆசிரியர் : Jules Verne (ஜூல் வேர்ண்)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Collins Classics
முதற்பதிப்பு : 1870
விலை :  125 ரூபாய்
பக்கங்கள் : 340 (தோராயமாக 41 வரிகள் / பக்கம்)
------------------------------------------------------------------------
விக்கிபீடியா உதவியுடன் ஆசிரியரைப் பற்றிய‌ அறிமுகம் த‌ருவது நல்லதென நினைக்கிறேன்.
1. அறிபுனை இலக்கியத்தின் (Science fiction) தந்தையர் என்று கருதப்படும் மும்மூர்த்திகளில் ஒருவர்.
2. விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
3. அகதா கிறிஸ்டிக்கு (Agatha Christie) அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.
4. இன்று இவரின் பிறந்தநாள்.



1866ம் ஆண்டு. ஆப்ரகாம் லிங்கன் இறந்த அடுத்த வருடம். முந்தைய புத்தகப் பதிவில் சொன்னது போல், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அட்லாண்டிக் பெருங்கடலினூடே தட்டுத் தடுமாறி தந்திவழித் தொடர்புகளைப் புதைத்துக் கொண்டிருந்த காலம். இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அச்சத்துடன் விவாதித்துக் கொள்ள அக்காலத்தில் ஒரு மர்மமான விசயமும் நடந்து கொண்டிருந்தது. கடற்பயணம் போனவர்கள் சிலர் பார்த்ததாக சொன்ன, பிரம்மாண்ட உருவத்துடன் நகரும் ஏதோவொன்றுதான் அது. மைல் கணக்கில் அவனவன் நீள அகலங்களைக் கதைகதையாய்ச் சொல்ல, 200 அடிக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை எனவும், 8 அங்குலம் இரும்பின் வலிமை உடையது என்றும் வல்லுனர் குழு முடிவுக்கு வருகிறது. ஆனால் உயிரா உயிரிலியா என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

வெறும் திண்ணைப் பேச்சு சமாச்சாரமாக இருந்த அந்தப் பிரம்மாண்டம், சில கப்பல்களைக் கவிழ்த்துவிட்ட பிறகு, தீர்த்துக்கட்டப் படவேண்டிய விசயமாக மாறுகிறது. இம்மாதிரி பிரச்சனைகளில் இருந்து, உலகத்தைக் காப்பாற்ற வழக்கம் போல் அமெரிக்கக் கப்பற்படை களத்தில் குதிக்கிறது. (இதுவே இக்காலத்தில் நடந்தால் பக்கத்தில் இருக்கும் ஒரு கம்யூனிச / இஸ்லாமிய / பெட்ரோலிய தேசம் காலி) புத்தகத்தின் மொத்தக் கதையையும் தன்னிலையில் சொல்லும் ஒரு பிரெஞ்சுப் பேராசிரியர், அவரின் உதவியாளர், கனடா நாட்டுத் திமிங்கல வேட்டைக்காரன் ஒருவன், இன்னும் சிலருடன் ஆபிரகாம் லிங்கன் என்ற கப்பல் அப்பிரம்மாண்டத்தைத் தேடி கடலோடுகிறது. ஆபிரகாம் லிங்கனைக் கவிழ்த்து விட்டு, அம்மூவரையும் சிறைப்பிடிக்கிறார் கேப்டன் நெமோ (Nemo).

கடலடியிலேயே அவர்களைத் தான் போகும் இடமெல்லாம் கூட்டிப் போகிறார், யாரென்றே தெரியாத‌ கேப்டன். மனித குலத்தின் மேல் வெறுப்பையும், நிகழ்காலத்தை மிஞ்சிய தொழில் நுட்பங்களையும், உலகக் கடல்களைப் பற்றி அதிகப்படியான‌ அறிவையும், கடல் கொண்ட சில பொக்கிஷங்களையும், மனித குலம் ஆவணப்படுத்தாத‌ சில கடலுயிரினங்களையும் சுமந்து கடல்வலம் செல்லும் கேப்டனிடம் இருந்து முடிந்த அளவு விசயங்களைக் கறந்துவிட வேண்டுமென அறிவுப்பசியுடன் பொறுமை காக்கிறார் பேராசிரியர். தென்படும் உயிரினங்களை எல்லாம் புசிக்கவே யோசிக்கும் வேட்டைக்காரன். கார்ல் லின்னேயஸ் மாதிரி அவற்றை எல்லாம் உயிரியல் ரீதியில் வகைப்படுத்தும் பேராசிரியரின் உதவியாள். இந்த இருவருக்கும் புரியாத கடல் ஆச்சரியங்களை விளக்கும் பேராசிரியர். பேராசிரியருடன் எப்போதும் கடல் மற்றும் வரலாற்று விவாதங்களில் ஈடுபடும் கேப்டன். 10 மாதங்களில் 20000 லீக்குகள் (1 league = 4 km) நீடிக்கும் இப்பயணத்தில், இடையில் சந்திக்கும் இயற்கையின் ஆச்சரியங்களும் சவால்களும் மர்மங்களும், பணயத்தில் இருந்து தப்ப முயற்சிக்கும் செயல்களுமே கதைச்சுருக்கம்.

இந்த நான்கு பேரைத் தவிர மையக்கதையில் வேறு யாருமே கிடையாது. அட்லாண்டிக் புத்தகம் மூலம் கடல் பற்றிய புரிதல் கொஞ்சம் அதிகமாகி இருப்பதால், எனக்கு இப்புத்தகம் அடுத்தக்கட்ட புரிதல் என்றே நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நான் இப்புத்தகத்தை முதலில் படித்திருந்தால், முதல் பக்கமே விளங்கி இருக்காது. அட்லாண்டிக் தந்திக் கம்பியை வெட்டிவிட்ட சுயநலப் புத்திசாலியைப் பற்றியது அது! நான்கூட‌ முதலில் புத்தகத்தின் பெயரில் இருக்கும் லீக்கை, under என்ற வார்த்தையால் ஆழம் என்று புரிந்து கொண்டுதான் படித்தேன். கொஞ்ச தூரம் பயணித்த பிறகுதான் அது நீளம் என்றே உறைத்தது. 20000 லீக் = 80000 கிமீ; பூமியின் விட்டத்தைவிட 6 மடங்கு அதிகம்; பூமியையே கிட்டத்தட்ட‌ இரண்டு சுற்றுகள் சுற்றும் தூரம். Under என்றால் மூளை ஏன் செங்குத்தாக புரிந்து கொள்கிறது எனத் தெரியவில்லை!

கடல் மட்டத்தில் இருந்து ஆழம் (fathom), தரையில் இருந்து உயரம் (feet / yard), அழுத்தம் (mercury / atmosphere), வெப்பநிலை (Celcius), மிதக்கத் தேவையான விசை, மூழ்கத் தேவையான எடை (lbs), பிராண வாயு, நீருக்கு மேலே புயல், நீருக்குள் சலன நீரோட்டங்கள், கலத்தின் எரிபொருள், கண்ணாடி முன்னால் வாய் திறக்கும் திமிங்கலம், Objects in the mirror are closer than they  appear என்று பாய்ந்து வரும் சுறா, என்று கடலடிப் பயணம் மூலம் ஆசிரியர் சொல்லும் சவால்களும், அறிவியல் வார்த்தைகளும் ஏராளம்.

கடலில் மூழ்கும் எல்லாப் பொருட்களுமே தரை தொடுவது போல் காட்டப்படும் சினிமாக் காட்சிகள் போல் அல்லாமல், புத்தகத்தில் சொல்லப்படும் விசயங்களில் புனைவையும் உண்மையையும் சுயதேடல் மூலம் வாசகனே பிரித்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். விரிவான வாசிப்பை வெளிமூலங்களில் தேடச் சொல்லும் கட்டாயத்தை உண்டாக்குவதே நல்ல புனைவு! உதாரணமாக, யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போன அட்லாண்டிக் தந்திக்கம்பி அறுந்துபோன இடத்தை எதேச்சையாகக் காண்பதும், தெரிந்த‌ விபத்துகளில் / போர்களில் கடலில் புதைந்து போன புதையல்களைக் காண்பதும் தற்குறிப்பேற்றணி. பல ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிப் போன கப்பல் ஒன்றை வட பசிபிக்கில் பார்ப்பார்கள்; Suderland என்ற அக்கப்பல் இல்பொருள் உவமையணி. உணர்கொம்புகள் மூலம் நீந்தும் நத்தை போன்ற ஓர் உயிரினத்தை இந்தியப் பெருங்கடலில் பார்ப்பார்கள்; அவ்வுயிரினம் உண்மை; ஆனால் அது உணர்கொம்புகள் மூலம் நீந்துவது பிறிதுமொழிதலணி. கப்பலையே இழுத்துக் கடலடியில் கொண்டு போகும் ஓர் உயிரினத்தை அட்லாண்டிக்கில் பார்ப்பார்கள்; நம்மூர்ப் புராணக் கதைகளின் தழுவலோ என்று நான் முதலில் நம்பவில்லை; ஆனால் அவ்வுயிரினம் இயற்பு நவிற்சியணி. அணி பிரிக்கப் பழகிவிட்டால், பல அடிகள் மூழ்கும் இக்கடற்புத்தகச் செய்யுள் திகட்டாது.

பொருளடக்கத்தில் உள்ள 47 அத்தியாயங்களின் தலைப்பிலேயே பயணத்தின் பாதையைக் கிட்டத்தட்ட கணிக்க முடியும். வட பசிபிக் - தென் பசிபிக் - டொரெஸ் நீரிணை (Torres strait) - மலேசியத் தீவுக் கூட்டங்கள் - வங்காள விரிகுடா - மன்னார் வளைகுடா - Mozambique channal - Bab el Madeb - செங்கடல் - Nea Kameni - மத்தியத் தரைக்கடல் - Pillars of Hercules - Gibraltar - Vigo bay - Sargasso - அன்டார்டிகா - தென் துருவம் - Cape Horn - Strait of Magellan - அமேசான் முகத்துவாரம் - போதும்! போகும் இடம் தெரிந்தால் முடிவை யூகிக்க மூளை யோசிக்கும். ஆங்கிலத்தில் சொன்ன இடங்களை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிராவிடில், நான் பரிந்துரைக்கிறேன்.

காஞ்சிப் பட்டு, திண்டுக்கல் பூட்டு, பத்தமடை பாய், மணப்பாறை அரிசி முறுக்கு, சென்னைக் கொசு மாதிரி கடலுக்குள்ளும் இடம்பொறுத்து பிரத்யேக விசய‌ங்கள் உண்டு. கடலடிக் காடுகள் (Submarine forests) - பவளப் பாறைகள் (Coral reefs) - நம்மூரில் முத்தும் சுறாவும் - Dugong - நிலக்கரிச் சுரங்கங்கள் - ஐஸ் - திமிங்கலம் - Poulps. புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்த திருப்தி.

நான் ரசித்தவை:
பாத்திரம் :
1) நான்கு பேருமே ஒவ்வொரு விதத்தில் மனதில் நின்றாலும், பிராண வாயு தீர்ந்து கொண்டிருக்கும் தருவாயில் மூச்சடக்கி பேராசிரியருக்கு ஆக்ஸிஜன் தரும் உதவியாள்.

2) இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக வங்காள விரிகுடா வாசலில், ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பாற்கடல் போல் வெள்ளை வெளேரென்று சில சமயங்களில் பரந்து கிடக்கும் Infusoria என்ற உயிரினம். வெள்ளிவீதியார்!

வரி :
1) கேப்டன் நெமோ சொன்னது: The sea is everything. Its breath is pure and healthy. It is an immense desert where man is never alone, for he feels life quivering around him on every side. The sea does not belong to despots. On its surface iniquitous rights can still be exercised, men can fight there, devour each other there, and transport all terrestrial horrors there. But at thirty feet below its level their power ceases, their influence dies out, their might disappears. Live in the bosom of the waters! There alone is independence! There I recognize no masters! There I am free!

2) ஐந்து மைல்களுக்குள் ஒரு மனிதனைப் பார்த்துவிடலாம் என்று இந்திய தேசத்தின் மக்களடர்த்தியை ஆச்சரியப்பட்டுக் கொண்டே வங்காள விரிகுடாவில் வரும் கேப்டன், பின்னங்கால் பிடரியில் அடிக்க‌ திரும்பிப் போன கதையைப் புத்தகம் இப்படி சொல்கிறது. ...at the entrance of the vast bay of Bengal, we frequently met with a horrible spectacle  - dead bodies floated on the surface of the water! These were the dead of the Indian villages, drifted by the Ganges to the open sea, and which the vultures, the only undertakers of the country, had not yet been able to devour. But the sharks did not fail to help them in their horrible task.

3) கல்லைக் காலில் கட்டிக் கொண்டு மன்னார் வளைகுடாவில் முத்துக் குளிக்கும் எலும்பும் தோலுமான நம்மவர் ஒருவனைப் பார்த்துவிட்டு, 60000 பவுண்ட் மதிப்புள்ள முத்தைப் பானமாகக் குடித்த கிளியோபட்ரா பேச்சில் வர, இப்படியொரு வசனம்: ...to the poet the pearl is a tear of the ocean; to the Orientals it is a drop of solidified dew; to the ladies it is a jewel of an oblong form,...; to the chemist it is a mixture of phosphate and carbonate of lime, with a little gelatine; and lastly to naturalists it is simply an unhealthy secretion of the organ which produces mother-of-pearl in certain bivalves.

பகுதி :
1) முத்துக் குளிக்கும் முறையை விளக்கி, உலகத்தில் முத்து வணிகம் பற்றிச் சொல்லி, மன்னார் வளைகுடாவில் முத்துக் குளிக்கும் ஒருவனைச் சுறாவிடம் இருந்து காப்பாற்றும் நிகழ்ச்சி.

2) சம இரவு நாளான மார்ச் 21க்குப் பிறகு அடுத்த 6 மாதங்கள் தென் துருவம் முழுதும் இரவாக இருக்கும். 21-03-1868 அன்றைய சூரியன் மறைவதற்குள் பேராசிரியரும் கேப்டனும் தென் துருவத்தில் செய்யும் செயல்கள். வந்த தூக்கம் ஓடியே போச்சு!!

3) ஒரு வைரஸைத் தூக்கிக் கொண்டு 10 கதாப்பாத்திரங்க‌ளைச் சந்தித்து, ஆழிப்பேரலை என்ற ஓர் இயற்கை நிகழ்வை வைத்து கதையை முடித்த‌ கமலஹாசனின் தசாவதாரத் திரைக்கதை போல், இப்புதினத்தின் கதையையும் முடித்து வைக்க சும்மா சுற்றிச் சுற்றி வரும், நான் கேள்விப்பட்டிராத‌, இயற்கையின் இன்னோர் அற்புதம்!

புத்தகத்தில் உள்ள‌ கடல் ப‌ற்றி சில விசயங்கள் நீங்களே படித்துக் கொள்ள:
1. அமெரிக்காவையும் ஆப்பிரிக்காவையும் இணைத்து வைத்திருந்து, ஓர் இரவு ஒரு பகலில் அழிந்து போன அட்லாண்டிஸ் (Atlantis) என்ற நிலப்பரப்பை, தமிழகத்தை ஆஸ்திரேலியாவுடன் இணைத்திருந்த குமரிக்கண்டம் (Lemuria) இழந்த என் இனம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.
2. முந்தைய புத்தகத்தில் பெஞ்சமின் பிராங்ளின் கண்டுபிடித்ததாகச் சொன்னேனே; Gulf Stream பற்றி படித்துப் பாருங்கள். தலையே சுற்றும்.

புத்தகத்தில் விவாதிக்கப்பட்ட கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
1. கடல் உப்பை எல்லாம் 4.5 மில்லியன் சதுர மைல்கள் பரப்பில் 30 அடி ஆழத்திற்குப் பூமி முழுவதும் தூவலாம்! கடலில் யார் அவ்வளவு உப்பைக் கொட்டியது என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். உப்பிருப்பதால் என்ன பயன்? கன்னியாகுமரி கட்டணக் கழிவறையில் சிறுநீர் கழிக்க 5 ரூபாய் வீணாக்கத் தேவையில்லை / உப்புப் போட்டு சாப்பிடலாம் / காதலில் தோற்ற ஆண்களின் கண்ணீர்‌ போன்ற‌ காரசார பதில்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டா!
2. Freezing can never take place except on the surface - ஏன்?
3. (ஒரு) சிப்பிக்குள் முத்துக்'கள்' என்பது பொருட்பிழையா?

நிதானமாகத் தேடுவதற்காக எனக்கு சில‌ வீட்டுப் பாடங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
1. உண்மையிலேயே மத்தியத் தரைக்கடலுக்கும் செங்கடலுக்கும் சூயஸ் கால்வாய் அல்லாத ஒரு கள்ளத் தொடர்பு இருக்கிறதா?
2. அன்டார்டிகாவில் நிலமுண்டா?
3. செங்கடலில் சிவப்பு நீருடைய சில பகுதிகளும் உண்டா?

பேராசிரியரும் கேப்டனும் அதிபுத்திசாலிகளாக இருப்பதால், அவர்க‌ள் பேசிக் கொள்வதைப் புரிந்து கொள்ள, வெட்டி ஒட்ட‌, அறிவியலின் அடிப்படை அறிவும் பூகோளம் பற்றிய புரிதல்களும் புத்தகத்தைப் புரிந்துகொள்ள அவசியம். உதாரணமாக, பேராசிரியர் போடும் சில‌ கணக்குகள்: 1) கடல் நீர் தரும் அழுத்தம், ஆழத்தைப் பொருத்து கடல் நீரின் வெப்பநிலை, இப்படி பல விசயங்களை வைத்து அந்த மர்மப் பிரம்மாண்டத்தின் தோல் மட்டும் 8 அங்குல இரும்புத் தகடிற்குச் சமமென யூகிப்பார். 2) தங்களைப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக எத்தனை பேர் இருக்கலாம் என்பதைக் கலத்தின் கொள்ளளவையும் பிராண வாயு நிரப்பப்படும் இடைவெளியையும் வைத்துக் கணக்கிடுவார். 3) அட்ச - தீர்க்க ரேகைகளும் கதை சொல்ல உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. 4) பனிப்பாறைகளின் உயர ஆழங்களையும், நகரும் புவியீர்ப்பு மையங்களையும் (COG - Centre of gravity) கணக்குப் போட்டு ஒரு பனிமலையையே பிளப்பார்கள்.

உட‌ன் இருக்கும் இரண்டு பேருக்கும் அடிக்கடி பேராசிரியர் சொல்லும் அறிவுரைதான் இப்புத்தகம் படிக்க நினைப்பவர்களுக்கு நான் கொடுக்கும் அடுத்த அறிவுரை: 'பொறுமை இல்லாதவனுக்குக் கடலுடன் தொடர்பில்லை'. அந்தப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்; யாதும் ஊரேன்னு சொல்லும் கடல் இனிக்கும்!

அனுபந்தம்:
1. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் தன் வீட்டில் இருந்து துளை போட்டுக் கொண்டே பூமியின் மறுபக்கம் செல்ல வேண்டுமென ஆசைப்படுவார். இங்கிலாந்தில் இருந்து பூமியின் மையக்கரு வழியாக துளை போட்டுக் கொண்டே அடுத்த பக்கம் வந்தால் நியூசிலாந்து அடையலாம். இப்படி நேரெதிரே இருக்கும் இரண்டு இடங்களும் பண்புகளிலும் நேரெதிராக இருக்கும். ஒன்றில் இன்று கோடைகாலம் ஆரம்பித்தால், இன்னொன்றில் நேற்று கோடைகாலம் முடிந்திருக்கும். ஒன்றில் நள்ளிரவு என்றால், இன்னொன்றில் நண்பகல். ஒரே கடிகாரத்தில் ஒன்றில் am என்றால், இன்னொன்றில் pm. இவற்றிற்கு ஆங்கிலத்தில் Antipode என்று பெயர். வித்தியாசமாய் இருப்பதால் நினைவில் வைத்திருந்த இவ்வார்த்தையை இப்புத்தகம் வாக்கியத்தில் பயன்படுத்தி இருக்கிறது. நீங்களும் உங்களுக்குப் பிடித்த இடங்களைத் துளை போடுங்கள். ஜாலியாக இருக்கும்!

2. Said என்றால் என்ன? Say என்பதன் இறந்தகாலம் என முதலில் சொல்லுங்கள். ஓர் எகிப்திய துறைமுகம் என்று அடுத்ததாகச் சொல்லுங்கள். ஏனென்றால் இப்பதிவை நீங்கள் படித்திருக்கிறீர்கள்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Monday, January 09, 2012

85. ATLANTIC - A VAST OCEAN OF A MILLION STORIES

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!

Men might as well project a voyage to the Moon, as attempt to employ steam navigation against the stormy North Atlantic Ocean.
- Dionysius Lardner (1838 AD)
------------------------------------------------------------------------------
புத்தகம் : Atlantic - A vast ocean of a Million stories
ஆசிரியர் : Simon Winchester
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Harper Press
முதற்பதிப்பு : 2010
விலை : 399 ரூபாய்
பக்கங்கள் : 498 (தோராயமாக  33 வரிகள் / பக்கம்)

------------------------------------------------------------------------------

நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் விடுமுறை தினங்களில் மாமா வீட்டிற்குச் செல்லும்போது அவர் வைத்திருக்கும் பாக்யா இதழைப் படிக்கும் பழக்கம் இருந்தது. 'மயிர்க் கூச்செரியும் விசயங்கள்' என்று அப்போது வெளிவந்து கொண்டிருந்த தொடர் ஒன்றில்தான் கடல் என்ற பிரம்மாண்டத்தின் அபாயம் புரிந்தது. நினைவில் கொஞ்சம் தங்கியிருக்கிறது அக்கதை. ஏதோவொரு கடலில் காணாமல் போன உல்லாசப் பயணிகள் கப்பல் ஒன்றைத் தேடுவதைப் பற்றியதுதான் அத்தொடர். தன்னந்தனியாக நடுக்கடலில் தத்தளிக்கும் அக்கப்பலைக் கண்டெடுக்கிறார்கள். பயணிகளுடன் சென்ற செல்லப் பிராணிகள் உட்பட யாருமே அதனுள் இல்லை. ஆராய்ச்சிக் குழுக்கள் களத்தில் குதிக்கின்றன.

இராட்சசக் கடல் பாம்புகள் எல்லாரையும் கொன்றிருக்கலாம் - வெறிநாய்க்கடி நோய் (Rabies) தாக்கப்பட்ட செல்லப் பிராணிகள் மூலம் எல்லாருக்கும் நோய் பரவி, கொலைகளும் தற்கொலைகளும் நடந்திருக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். சாப்பாட்டு மேசையில் சிந்தப்படாமல் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருந்த தட்டுகள், இவ்விரண்டு சந்தேகங்களையும் நிராகரித்தன. 'அப்படியென்றால் இருந்தவர்களைக் கொன்றுவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவி வைக்காமல் போயிருப்பார்கள் கடற்கொள்ளையர்கள்' என்றார் இன்னொருவர். எரிபொருள் ஒருசொட்டுகூட பீப்பாய்களில் மிச்சமில்லை என்பது சாதகமாய் இருந்தாலும், மற்ற பொருளேதும் களவாடப்படவில்லை என்று அதையும் நிராகரிக்கிறார்கள். இப்படியே மர்மாய் நகர்ந்தது அத்தொடர்.

அத்தொடர் அத்தோடு இருக்கட்டும்; நான் தொடரும் என் சொந்தக்கதை சொல்கிறேன். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவில் முதன்முதலில் கடல் பார்த்தபோது, ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் செருப்புக் காலுடன் எம்ஜிஆர் சமாதியில் அடியெடுத்து வைத்து அப்பாவிடம் அடிவாங்கியது. அம்மாவைக் காப்பாற்றியது மாதா இல்லை, இராம‌நாதன் டாக்டர் என்று வேளாங்கன்னி கோயிலுக்குள் போகாமல் கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டது. எனக்குப் பிரியமான வங்கக்கடலை இந்தியப் பெருங்கடலின் சிறுகுழந்தை என்று சொன்னதற்காக, 'தண்ணீர் தேசம்' புத்தகத்தில் வரிக்கு வரி காதலையும் கடலையும் ரசிக்க வைத்த வைரமுத்துவை மனதுக்குள் குழந்தைத்தனமாகத் திட்டியது. அதே வைரமுத்துவின் 'வங்காள விரிகுடா' கவிதையைத் திரும்பத் திரும்ப படிப்பது. மண்வாசனை போல கடல்வாசனை அறிய நடுக்கடல் பயணம் போனது. இந்த நவம்பரில் கோனார்க் - பூரி சாலையில் எல்லாரும் கடல் பார்க்க இடையில் இறங்கியபோது, மடியில் படுத்திருந்த யாரோவொரு கர்ப்பிணிக்காக நான் கடல் தொடாமல் போனது.

கடல் பற்றிய‌ பேச்சு வந்தாலே இப்படித்தான் சம்மந்தமே இல்லாமல், 'மந்திரப் புன்னகை' கதாநாயகன் போல மனதில் தோன்றுவதை எல்லாம் பேசத் தோன்றும். இதுவரை நான்கு கடல்களை மட்டுமே தரிசித்திருக்கும் எனக்குச் சம்மந்தமே இல்லாத இன்னொரு பிரம்மாண்டம் - அட்லாண்டிக். புத்தகத்தைப் பார்த்த உடனேயே நான் வாங்கிவிடவில்லை. விலையும் தடிமனும் உறுத்தின‌. சொத்தைப் பல்லுக்காக சொத்தையா இழப்பது சொத்தைப் பயலேயென்று வாங்கிவிட்டேன். புதினங்களில் கதையே சொல்லாத நான், உங்களுக்கு எளிதில் புரிவதற்காக இப்புத்தகத்தைக் கதையாகச் சொல்கிறேன்.

சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தரைப்பகுதிகள் எல்லாம் சேர்ந்து ஒரே நிலப்பரப்பாகவும் (Pangaea), அதைச் சுற்றி ஒரேயொரு கடற்பரப்பும் (Panthalassa) இருந்திருக்கின்றன\. நிலவோடுகள் நகர்ந்து கண்டங்கள் உருவாக ஆரம்பித்தபின், சுமார் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்ததுதான் அட்லாண்டிக் பெருங்கடல். பாதி ஆயுளைக் கடந்துவிட்டு இன்னும் சுமார் 180 மில்லியன் ஆண்டுகளில் இல்லாமல் போகப்போகும் இப்பெருங்கடல் தின்று செரித்து நின்று சிரித்து சொல்லும் மில்லியன் கதைகள்தான் இப்புத்தகம்.

15ம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டினோபிளை (இஸ்தான்புல்) ஒட்டாமன் பேரரசு கைப்பற்றி, பாதையை அடைத்தவுடன், ஆசியாவுடனான தனது வர்த்தகத்தைத் தொடர புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் அதுவரை நம்பிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் தங்களது மேற்குப்பக்க நீர்ப்பரப்பில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

தனது ஐந்து பயணங்களிலும் தரையிறங்கும் இடங்கள் எல்லாம் இந்தியா என்று பூர்வீக மக்களைக் கொன்று குவித்த‌ கிறிஸ்டோபர் கொலம்பஸ், கரிபியன் பகுதியில் உள்ள ஹிஸ்பேனியோலா (Hispaniola) தீவில் முட்டிக் கொண்டதை நாடு திரும்பியவுடன் பரிதாபமாகச் சொல்கிறார்: "My intention in this navigation was to reach Cathay and the extreme east of Asia, not expecting to find such an obstacle of new land as I found". Cathay என்பது சீனாவிற்கான ஆங்கிலச் சொல். Cathay Pacific விமானம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா போல கொலம்பஸ் கண்டுபிடித்ததும் இன்னொரு பெரிய கண்டம் என்று 16ம் நூற்றாண்டைத் தொடக்கத்திலேயே திகைக்க வைக்கிறார் அமெரிக்கொ வெஸ்புகி. அதற்கு முன் அட்லாண்டிக் என்பது ஒரு தனிக்கடல் என்ற அறிவோ அல்லது அப்படிப்பட்ட‌ சந்தேகமோ இருந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அந்த நான்காம் கண்டத்திற்குத் தனது பெயரின் பெண்பால் நிகரான‌ அமெரிக்கா என்ற பெயர் தந்த‌ அவர், வாழ்க்கையின் பிற்பகுதியை விபச்சாரத் தரகராகக் கழித்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வழக்கம்போல கண்டுபிடித்த கண்டத்தை வட-தென் என இரு துண்டாக்கி காலனிகளில் போட்டிப்போட்டு காலணி பதித்தன‌ ஐரோப்பிய நாடுகள். ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாகக் கண்டம் கடத்துவது, புதிய கண்டத்தின் நிறக் கொடுமைகளையும் காலனி ஆதிக்கத்தையும் எதிர்த்து புரட்சிகள் உண்டானதெல்லாம் பெருங்கதைகள். அமெரிக்கா என்ற தனிநாடு வடக்கே தோன்றியவுடன் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து, இடிதாங்கி மற்றும் இரட்டையாடி மூக்குக்கண்ணாடி (Bifocals) கண்டுபிடித்துப் பிரபலமான பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது. குறிப்பிட்ட ஓர் இங்கிலாந்து நகரத்தில் இருந்து ஓர் அமெரிக்க நகரத்திற்குச் செல்லும் தபால்கள், அதே தொலைவில் இருக்கும் இருவேறு நகரங்களுக்குச் செல்லும் தபால்களைவிட ஒருநாள் தாமதமாகச் செல்வதைக் கவனிக்கிறார். அரசியல் அறிவியல் என்று சகலகலா வல்லவனாக இருந்த அவர், தானே காரணத்தையும் கண்டுபிடிக்கிறார். கடல் நீரோட்டம் (stream) என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது அட்லாண்டிக்.

அட்லாண்டிக் கடலில், மிகச்சரியாக பாதிவழியில், ஒரு பள்ளத்தை நிரப்புவது போல் இருபக்கங்களில் இருந்தும் குறுக்குவாக்கில் நீர்த்திரள் கூடுவதை (Dolphin Rise) மாலுமிகள் கவனிக்கின்றனர். அமெரிக்க நிலவோடுகளை ஆசிய-ஐரோப்பிய-ஆப்பிரிக்க தகடுகளில் இருந்து பிரிக்கும் அந்த இடத்தில், கடலுக்கடியில் உலகின் மிக நீண்ட மலைத்தொடர் (Mid-Atlantic ridge) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டின் பிற்பாதியில். எவெரெஸ்ட்டைப் பசிபிக் கடலுக்குள் மறைத்து வைத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும், வாலிப மனித உடம்பொன்றின் நரம்புகளைக் கயிறாய்த் திரித்து பூமியை ஆறு சுற்றுகளுக்கு மேல் சுற்றலாம் என்றும் சின்ன வயதில் படித்த ஆச்சரியமே இன்னும் குறையவில்லை!

இன்னொரு புறம் பரிணாமம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தனது மாணவர்களை மனிதக் காலடிபடாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார் சார்லஸ் டார்வின். அப்படி அவர்கள் கொண்டுவந்த ஓர் ஆதிவாசி நிர்வாண மனிதனை, இரண்டு வருடங்கள் இலண்டன் நகரில் பழக்கி, நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, கோட்டு சூட்டெல்லாம் போட்டு, திரும்பவும் அவனை அவனது பூர்வீகத் தீவிலேயே இறக்கி விடுகிறார். அவன் காட்டிய எதிர்வினைதான், ஆதாம் ஏவாள் என்று மனிதயினம் படைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரை நாத்திகம் சொல்ல வைத்தது.

இதுவரை 150 பக்கக் கதை சொல்லி இருக்கிறேன். அட்லாண்டிக் கடலை ஓவியம், இலக்கியம் என்று கலைகள் எவ்வாறு அழகுபடுத்திக் காட்டின எனபதுதான் அடுத்த 50 பக்கங்கள். பெருங்காற்று (Tempest) எழுதின வில்லியம் ஷேக்ஸ்பியர் முதல், 2012ல் மிகப்பரவலாகப் பேசப்படப் போகும் மாயா இனமக்கள் வரை பல உதாரணங்கள். அடிமைமுறை, கடல் வணிகம், கள்ளக்கடத்தல், கடற்போர்கள், கடற்கொள்ளை, பிடிபட்டவர்கள் மேல் செய்யப்படும் வதைகள், கடல் விபத்துகள், கடல் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் தோற்றம் மற்றும் ஒப்பந்தங்கள் என்று படங்களுடன் பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள்.

இப்போதுதான் புத்தகத்திலேயே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய பகுதிக்கு வந்திருக்கிறேன். 1760ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் இறந்த செய்தி, அவரின் அமெரிக்கக் காலனியை அடைய 6 வாரங்கள் ஆனது. ஆபிரகாம் லிங்கன் 1865ல் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைய, இலண்டன் மக்களுக்குப் 12 நாட்கள் தேவைப்பட்டன. அப்போது பிரபலமாகி வந்த சாமுவேல் மோர்ஸின் (Samuel Morse) தந்திமுறை மூலம், இந்த இருபெரும் நிலப்பரப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மனிதன் என்ன செய்தான் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் தேடுதலுக்கு விட்டுவிடுகிறேன். அதை ஒருமுறை டிஸ்கவரி சேனலில் விளக்கியதாக என் நண்பன் ஒருவன் சொன்னான்.

முதல் தந்திவழித் தொடர்பு வெற்றி பெற்றவுடன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி: "...the Atlantic is dried up and we become in reality as well as in wish... one country...". 15 நாட்களே நீடித்த அச்சந்தோசத்தின் முடிவில், தந்தி செயலிழக்கிறது; கடல் வெல்கிறது; மீண்டும் இருவேறு கண்டங்கள். இயற்கையை வெல்ல முடியாதென மனிதன் உணர்கிறான். (நதிநீர் இணைப்பு ஆதரவாளர்கள் கவனிக்க) தேவையும் ஆசையும் மனிதனை விடவில்லை. அடுத்த தந்திக் கம்பியை 4 வாரங்களுக்குப் பின் புதைத்தான். 1900ல் 15 தந்திக் கம்பிகள் அட்லாண்டிக் கடலினூடே ஓடின. இக்காலத்தில் கம்பியில்லாத் தொடர்பு மூலம் வானொலி கண்டுபிடித்த குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) அறிமுகமாவதும், இரு கண்டங்களுக்கு இடையே ஆன்டெனாக்களை வைத்து அவர் நடத்தும் சோதனைகளும், வெற்றி பெற்றபின் அவருக்கு வரும் மிரட்டல்களும், ஆல்வா தாமஸ் எடிசன் தோள் கொடுப்பதும்... இரண்டே தாள்கள் தான். அருமை. அதன்பிறகு விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களும் வருகிறார்கள். எல்லா அறிவியல் சோதனைகளுக்குப் பின்னும் அட்லாண்டிக் எளிதில் தாண்ட முடியா பெரும் சோதனையாகவே இருந்திருக்கிறது.

ஒரு காலத்தில் எவெரெஸ்ட்டை அண்ணாந்து பார்த்து பிரமித்த மனிதன், ஏறி முடித்த பின் கெட்ட வார்த்தையில் திட்டியது மட்டுமில்லாமல், அடியைக் குப்பைக் கூடமாகவும், வழியைப் பிணக் கூடமாகவும், உச்சியைப் பல‌ தேசக் கொடிக‌ள் கட்டும் கொட்டகையாகவும் தான் மாற்றியிருக்கிறான். அதே நிலைமைதான், உலகின் தட்பவெப்பத்தில் பெரும்பங்கு வகிக்கும் அட்லாண்டிக் பெருங்கட‌லுக்கும் என பேசுகின்றன மிச்சமுள்ள கட்டுரைகள். டைட்டானிக், லூசிடானியா (Lusitania), பெர்முடா முக்கோணம் (Bermuda triangle) போன்றவை அதிகம் விவாதிக்கப்பட்டு பரிச்சயமான‌ விசய‌ங்கள் என்பதால் இப்பதிவின் நீளம் கருதி விட்டுவிடுகிறேன். பனாமா கால்வாய் வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இப்படியே கடல் பற்றி மனதில் தோன்றுவதை எல்லாம், முதிர‌னுபவமுள்ள ஒரு கடல் மாலுமிக்குக் கடல் தரும் பிரமிப்பு போல சலித்துப் போகும்வரை, பேசிக்கொண்டே இருக்க ஆசைதான்!

அட்லாண்டிக் பற்றி சில தகவல்கள்:
1. அமேசான் என்ற ஓர் ஆறு மட்டும் அட்லாண்டிக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரும் மண‌லும் சகதியும், உலகின் அடுத்த எட்டு பெரும் ஆறுகள் தத்தம் கடல்களில் சேர்ப்பதைவிட அதிகம்.
2. அட்லாண்டிக் கடலடியில் கிடக்கும் தெரிந்த‌ பிணங்களின் தோராய எண்ணிக்கை 60,000.
3. வருடத்திற்கு 4,00,000 வர்த்தக விமானங்கள் அட்லாண்டிக் தாண்டுகின்றன.
4. பெருங்கடல்களிலேயே அதிக பனிக்கட்டி கொண்டிருப்பது அட்லாண்டிக். எனவே உலக வெப்பமயமாதலில் முதலில் கவனிக்கப்பட வேண்டியதும் பாதிக்கப்படப் போவதும் அதுதான்.
5. பெரும்பாலும் அட்லாண்டிக்கின் நிறம் சாம்பல்; பசிபிக்கும் இந்தியப் பெருங்கடலும் நீலம்.
6. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடி எது? நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்றால் தவறு. அகுல்ஹஸ் முனை (Cape Agulhas). உலக வரைபடத்தில் அவ்விடத்தில் அகலவாக்கில் ஒரு கோடுபோட்டு, அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் போகக் கூடாது இவனும் வரமாட்டான் என்று அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிடம் சொல்கிறது IHO (International Hydrographic Organization). இந்தியாவின் தென்முனை எதுன்னா, டக்குன்னு குமரி என்று சொல்லிவிடாதீர்கள்; அது தீபகற்ப இந்தியாவின் தென்முனை மட்டுமே. இந்திரா முனை என்று ஒன்று தீவாக இருக்கிறது!
7. அமலாவைக் கண்டுபிடித்தது டி.ராஜேந்தர். அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்? கிறிஸ்டோபர் கொலம்பஸின் கைக்கெட்டியது ஆனால் கால் படவில்லை; அமெரிக்கொ வெஸ்புகியின் வாய்க்கெட்டியது. அவர்களுக்கெல்லாம் 500 வருடங்களுக்கு முன், சரியாக 1001ம் ஆண்டு, கால்பதித்தவர் Leif Ericson. வரலாற்றில் மறைக்கப்படும் பல‌ மனிதர்களில் இவரும் ஒருவர்.
8. இப்பதிவின் ஆரம்பத்தில் பாக்யாவில் படித்ததாக நான் சொன்ன கப்பல் Mary celesteஆக இருக்கலாம்.

நீங்களே படித்துக் கொள்ள அட்லாண்டிக் சுற்றி சில விசயங்கள்:
1. பசிபிக் கடக்கும் சிரமம் இல்லாமல் மனிதயினத்தை ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் பரவ வைத்த பேரிங் நீரிணை (Bering strait).
2. Cape Bojador - நெருங்கும் கப்பல்களைக் கடலுக்குள் இழுத்துப்போய் 600 மைலுக்கு அப்பால்விடும் கடல்நீரோட்டம் உள்ள இடம். சகாரா பாலைவனத்து மணலை அட்லாண்டிக் தாண்டி பிரேசிலில் தூவி சோயாபீன்ஸ் மகசூலை ஓகோவெனவாக்கும் காற்று வீசுமிடம்.
3. Tristan da Cunha - தென்னாப்பிரிக்காவில் இருந்து 1800 மைல்கள் தொலைவில் உள்ள தீவு; மக்கள் வசிக்கும், உலகின் மிகத் தனிமையான தீவு.

கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
1. வளைகுடா - Gulf, விரிகுடா - Bay, கடல் - Sea, பெருங்கடல் - Ocean. என்ன வித்தியாசம்? (நீங்கள் யோசிக்கும் போது மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா, அரபிக்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்றவற்றை நினைத்துக் கொள்ளுங்கள்)
2. புயல் என்ற வார்த்தையை ஆங்கில ஊடக‌ங்களில் Hurricane, Cyclone, Typhoon என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். என்ன வித்தியாசம்? (கற்றதும் பெற்றதும் அல்லது ஏன் எதற்கு எப்படி, புத்தகத்தில் சுஜாதா சார் பதில் சொன்னதாக ஞாபகம்)
3. ஸ்ரீ ஹரிகோட்டா மாதிரி ராக்கெட் ஏவுதளங்கள் இந்தியாவில் வங்கக் கடற்கரையில் மட்டுமே அமைந்துள்ளன. அரபிக்கடலுக்கு ஏன் ஓர வஞ்சனை? (The Hinduவில் 7 ஆண்டுகளுக்கு முன் படித்தது)

அட்லாண்டிக் பற்றிய அறிவு, உலகைப் பற்றிய அறிவு என்கிறது புத்தகத்தின் ஒருவரி. 33% பூமியையும் 46% நீரையும் வைத்துக் கொண்டு நிலவுக்கே நிலம் கொடுத்த பசிபிக் பெருங்கடல் இருக்கும்போது, 20% பூமியையும் 26% நீரையும் வைத்திருக்கும் அட்லாண்டிக் பற்றி அவ்வரி மிகவுரை போலத் தோன்றியது. புத்தகத்தின் பாதியைக் கடக்கும் முன்னே, அவ்வரிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டேன். புத்தகம் நான் கடந்துவிட்டாலும், அட்லாண்டிக் என்ற S வடிவ பிரம்மாண்டத்தில் நான் இன்னும் தத்தளிப்பது நின்றபாடில்லை.

நாம் உள்ளிழுக்கும் 5 மூச்சுகளில் ஒன்றிற்கான ஆக்ஸிஜன் கடலில் இருந்துதான் கிடைக்கிறது. கடல் கற்போம்; கசடறக் காப்போம்!

அனுபந்தம்:

1. நீங்கள் தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தால், வெறிநாய்க் கடி'நாய்' என்று எழுதி மாட்டி இருக்கிறீர்களா? இல்லை, சும்மா துணைக்கு யாராவது இருக்கீங்களா என்று தெரிந்து கொள்ள கேட்டேன்.

2. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புதினத்தில், 19ம் நூற்றாண்டின் கடைசியில், நல்ல எதிர்காலம் இருப்பதாக கதாநாயகனைத் தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேரச் சொல்கிறார்கள். அவனோடு படுக்கை பகிரும் ஒருத்தி, நல்ல எதிர்காலம் இருப்பதாகத் தட்டச்சு கற்கிறாள். நீராவி இயந்திரத்தில் ஆரம்பித்த நல்ல எதிர்காலம், தந்தி தட்டச்சு என்று தாவிக் கொண்டே இருக்கிறது. அப்புத்தகத்தைப் பற்றியும் இதே தளத்தில் எதிர் காலத்தில் பார்க்கலாம்.

- ஞானசேகர்

(http://jssekar.blogspot.com/)

Saturday, October 30, 2010

69. FOLLOWING FISH

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

கடல்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
- வைரமுத்து (தண்ணீர் தேசம்)


-----------------------------------------------------------------------
புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)
ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin books
முதற்பதிப்பு : 2010
விலை : 250 ரூபாய்
பக்கங்கள் : 167 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------------

சுயமாக சமையல் செய்யவேண்டிய காட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது மீன்குழம்பும் மிளகுரசமும் மட்டும் வைக்கக் கற்றுக்கொண்டவன்; வருடத்திற்கு ஒருமுறை இரவெல்லாம் பயணித்து வங்கக்கடல்போய் மீனும் இறாலும் மட்டுமே சாப்பிட்டுவிட்டுத் திரும்புபவன்; கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு - முட்டம், தனுஷ்கோடி, கேரளாவில் வாஸ்கோடகாமா முதலில் கால்பதித்த கப்பாடு போன்ற கிராமங்களைத் தனியாகவே சுற்றித் திரிந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை முதலில் பார்க்கும்போது புரட்டிப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. சின்ன மீனிலிருந்து பெரிய படகுவரை பட்டியலிடப்பட்டிருந்த பொருளடக்கத்திலும் உள்படங்களிலும் ஈர்க்கப்பட்டு வாங்கிவிட்டேன்.

மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், கூர்ச்சரம் (Gujarat) என இந்தியக் கடற்கரையோரங்களில் ஆசிரியர் மேற்கொண்ட பயணங்களை ஒன்பது கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார். இவரின் முதல் புத்தகம்.



ஹில்சா என்ற மீனைத்தேடி கொல்கத்தாவில் அலையும் முதல் அனுபவத்தைப் படிக்கும்போது, புத்தகம் முழுவதும் சாப்பாட்டு விசயமாகவே இருக்குமோவென்று பயந்துபோனேன். இரண்டாம் கட்டுரையில் இருந்துதான் பயம்போனது. பச்சையாக மீனைச் சாப்பிடும் மருத்துவச் சிகிச்சை பற்றியது அது. இந்த ஒரு கட்டுரை மட்டும் கடல் சம்மந்தப்பட்ட இடத்தில் இல்லாமல், உள்நாட்டில் - ஹைதராபாத்தில் ஆஸ்துமாவிற்குச் சிகிச்சையாக மீனின் வாய்க்குள் மருந்தை வைத்துத் தரும் பரம்பரை வைத்தியர்களைப் பற்றிப் பேசுகிறது. சுத்த சைவ உணவுக்காரர்கள் உட்பட 35000 பேர் முன்பதிவு செய்து வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் இவ்வைத்தியத்தின் ரகசியத்தை அறிய முயன்று அவ்வைத்தியர்களை ஆசிரியர் நெருங்கி பேச்சு கொடுக்கும் இக்கட்டுரை மர்மம் கலந்த நம்பிக்கை.

மூன்றாவது கட்டுரையில் தமிழகம். இயற்கை திரைப்படம் வெளியான அன்று திருநெல்வேலியில் பம்பாய் திரையரங்கில் பார்த்தேன். 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' வைரமுத்துவின் வசீகர வரிகள் என்னை முதல்நாள் முதல்காட்சி டிக்கட் வரிசையில் நிற்க வைத்தன. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கொத்துக்கொத்தாக இருபது முப்பது என்று டிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். தனது மண்ணைத் - தனது கடலைத் திரையில் பார்த்துக் கொண்டு அவர்கள் காட்டிய அப்பாவித்தனமான பிரமிப்பை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மணப்பாடு பற்றிய எனது நினைவுகளைப் புதுப்பித்துப் போனது இக்கட்டுரை. புனித சவேரியார் இவ்வூரில் இருந்துதான் கிழக்குக் கடற்கரையில் பிரசங்கிக்க ஆரம்பித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு துண்டு இவ்வூரில் இருப்பதாகவும் படித்தேன். ஓரூர் எதற்காக பெயர்பெற்றிருக்கிறதோ, அதல்லாமல் வேறொன்றில் அதை ரசிக்கும் பக்குவம் கிடைக்கப்பெறுவது கொஞ்சம் கடினம். சில ஊர்களை அப்படிக் கடினப்பட்டு சிலபேர் புரிந்து வைத்திருப்பார்கள். அது ஒரு தவம்!

கேரள அரசின் சுற்றுலா கையேட்டில்கூட இடம்பெற்றிருக்கும் கள்ளுக்கடைகளைப் பற்றியும், அதில் பரிமாறப்படும் மீன்கறி பற்றியும் ஒரு கட்டுரை. ஆழ்கடலில் வேகமாக நீந்தும் ஒரு மீனைத் தேடித் போகிறது இன்னொரு கட்டுரை. மங்களூர் புகழ் மீன்குழம்பைக் கடைகடையாகத் தேடி அலைகிறது ஒரு கட்டுரை. கடலையும் மண்ணால்மூடி கடற்கரைகளையும் ஆக்கிரமித்திருக்கும் மும்பை, ஆதிகலைகளுள் ஒன்றான கப்பல் கட்டுதல் செய்யும் கூர்ச்சர நகரமொன்று இப்படி பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது புத்தகம். ஒரிசா மீன்குழம்பு ருசிகண்ட எனக்கு, அந்நிலப்பரப்பு இப்புத்தகத்தில் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.

நெய்தலும் நெய்தல் நிமித்தமுமே புத்தகத்தின் கருவாக இருந்தாலும், மக்களை மிக நெருங்கி அவர்களின் வாழ்வோட்டத்தை விவாதித்திருப்பது புத்தகத்தின் பெரிய பலம். தங்கள் தெய்வம் மும்பாதேவியை மும்பைக்குப் பெயராகக் கொடுத்து அந்நகரின் விளிம்புகளில் அடையாளம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மீனவர்களின் இன்றைய நிலை, கேரளாவில் கள்ளுக்கடைகளுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்று நிறைய விசயங்கள். என்னை மிகவும் கவர்ந்தது கோவா பற்றியது. சுற்றுலா என்ற பெயரில் கடற்கரைகளை இழந்துவரும் பரிதாப நிலை; பாரம்பரிய மீன்பிடித்தொழிலைச் சுற்றுலா மாயையில் இழந்து கொண்டிருக்கும் அபாயம். நான் தனியாக கோவா சென்றிருந்தபோது, பனாஜி (Panaji) பேருந்து நிலையத்தில் ஒருவன் என்னைக் கேட்டான். "Kashmir to Kanyakumari Andhra Tamil Nadu Kerala Karnataka Hindi English all states all languages beach view sir which one you want sir?". முறைத்தேன். "Girls boys both are available sir".

இந்தியாவின் கடலோர மக்களின் வாழ்க்கை முறைகளை, ஒரு பகுதியினரை இன்னொருவருடன் ஒப்பிட்டிருப்பதும் அருமை. தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஆதிமனித இனம் மெல்ல மெல்ல நிலம் நோக்கிப் பெயர்ந்ததில், இன்னும் ஆதித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகள் கண்டிப்பாக ஆவணப்படுத்தப் படவேண்டியவை.

"இந்த அம்புக்குறி காட்டும் கடற்கரைக்கும் அண்டார்க்டிகாவின் விளிம்பிற்கும் இடையே நிலமேதும் இல்லை" - இப்படியொரு செய்திப்பலகையை, சோம்நாத் (Somnath) நகரின் கடற்கரைக் கோயில் ஒன்றில் கண்டதாக ஆசிரியர் இப்புத்தகத்தை முடிக்கிறார். புத்தகத்தில் படிக்கும்போதே பரவசப்பட வைக்கும் இவ்வாசகம். இதேபோல் நேரடியாகப் பார்த்தபோது கிடைத்த சிலிர்ப்பைப் பக்குவமாக வாசகனுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.

தன்னை நாடுபவர்களையும் சார்ந்திருப்பவர்களையும் சம்மந்தமே இல்லாமல் எங்கோ இருப்பவர்களையும் தன்மட்டில் ஓர் ஒழுங்கிற்குள் கட்டாயப்படுத்தும் கடல்படிப்போம்!

அனுபந்தம்:

1. அந்தப் பழம்பெரும் தமிழ்ப்பதம் மறக்கடிக்கப்பட வேண்டிய அனைத்துச் சூழ்நிலைகளும் எல்லா மூலைகளில் இருந்தும் உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த ஆங்கிலப் புத்தகம் மூலம்தான் அப்பதத்தின் அர்த்தம் தெரிந்தது. அப்பதம் 'ஈழம்'.

2. பதினைந்து வயதுக்குட்பட்டவனாக நான் இருந்தபோது தாத்தாவுடன் குளத்திற்குச் சென்று வேட்டியைவைத்து அயிரை மீன் பிடித்து வந்து அட்டகாசமாகச் சமைத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் கொடுத்து, குறைந்தது நான்கு வேளைகளாவது அயிரையை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு இருக்கிறோம். பதினேழோடு தாத்தா நிரந்தரமாகப் பிரிந்து போனார். எப்போதாவது எட்டி எட்டிப் பார்த்து மொத்தமாக மூழ்கிப் போனது குளமும். அயிரையைப் பார்த்தே ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட எனக்குள்ள கவலையெல்லாம், குளம் என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்கத் தெரியாமல் திணறப்போகிறமோ என்பதுதான்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)