-----------------------------------------------------------------------
புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியிட்டோர் : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2004
விலை : 140ரூ
பக்கங்கள் : 254 ----------------------------------------------------------------------
ஒரு கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது ஒரு சிறுகதை, புதினம், குறுங்கதை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாசிப்பினூடே அதில் வரும் பாத்திரங்களுடன் பயணிக்கத் தொடங்குகிறீர்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உங்கள் மனதில் ஓர் உருவம் உண்டாகிறது. நீங்கள் பார்த்துப் பழகிய, கேள்வி ஞானத்தில் அறிந்த, வேறெங்கோ வாசித்த யாரோ ஒருவர் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமானவராக உங்களுக்குப் படுகிறார். ஏன்? உங்களையே கூட பாத்திரங்களில் ஒன்றாக பாவித்துக் கொள்கிறீர்கள். அப்பாத்திரத்தின் சூழ்நிலையோ, உடலமைப்போ, மனோநிலையோ ஏதோவொன்று உங்களுடன் அதிகமாக ஒத்துப்போகிறது. அது போலவே மற்றப் பாத்திரங்களுக்கும் நீங்கள் அறிந்திருந்த மனிதர்களின் உருவத்தையே பொருத்திப் பார்க்கிறீர்கள். இது கதையுடனான உங்கள் நெருக்கத்தைக் கூட்டி உங்களை மேலானதொரு அனுபவத்துக்கு ஆட்படுத்துகிறது.
வாழ்வின் ஒரு நாளில் நடக்கும் பலப்பல நிகழ்வுகள் உங்கள் நினைவுச் சங்கிலியை எப்போதோ நீங்கள் வாசித்திருக்கக்கூடிய ஒரு கதையுடன் பிணைக்க வல்லனவாகவிருக்கின்றன. வியாபார நிமித்தமாக நீங்கள் சந்திக்கும் நபர் தெனாலி ராமனை நினைவுறுத்துகிறார். முகவரி கேட்கும் யாரோ ஒரு பெண், குந்தி தேவிக்கு நீங்கள் கற்பனை செய்திருந்த உருவத்துக்குள் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறாள். பெரும்பாலான வாழ்வியல் சிக்கல்களுக்கு வாசித்த ஏதோ கதையின் யாரோ ஒரு பாத்திரம் உங்களுக்குத் தீர்வளிக்கிறது. விதவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள புனைவுச் சூழ்நிலைகள் உங்களைப் பயிற்றுவிக்கின்றன.
வாசிப்பின் பெரும்பாலான தருணங்களில் நிஜ வாழ்வில் எங்கோ சந்தித்த, பார்த்த, கேட்ட, உணர்ந்த, அனுபவித்த எதுவோ ஒன்று பற்றிய நினைவு எழுவது தடுக்க இயலாததாகி விடுகிறது. அது போலவே வாழ்வின் பல கட்டங்களில், எங்கோ எப்போதோ வாசித்த ஏதோவொன்று நினைவுக்கு வருவதும் இயல்பானதே! வாசிப்பும் வாழ்க்கையும் இணையும் இந்த இரு புள்ளிகள் வாழ்க்கை, வாசிப்பு இரண்டையுமே அர்த்தமுள்ளதாக்குகின்றன. இரண்டு விதமான அனுபவங்களில் நாம் முன்னேறிச் செல்கிறோம் என்பதும் உண்மைதான்.
இது மாதிரியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நூல்தான் இந்த ஆழத்தை அறியும் பயணம். ஆற்றுப்படை என்றொரு சிற்றிலக்கிய வகை தமிழில் உண்டு. புரவலனிடம் பரிசில் பெற்று வரும் புலவன், பாணன், கூத்தன் போன்றோர் தன் போன்ற மற்றவருக்கு புரவலனின் பெருமைகளைக் கூறி, செல்லும் வழி சொல்லி அனுப்புவதே ஆற்றுப்படை. இந்த நூலும் ஒரு வகையில் ஆற்றுப்படைதான். எழுத்தாளர் பாவண்ணன் தான் வாசித்த சிறுகதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்து மற்ற வாசகர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார். இப்புத்தகத்தில் 25 தமிழகச் சிறுகதைகளும், 8 அயல் தமிழ்ச் சிறுகதைகளும், 10 பிற மொழிச் சிறுகதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இப்புத்தகத்தைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' புத்தகத்துடனான இதன் ஒப்பீட்டையும் பதியும் கட்டாயம் நேர்கிறது. கதாவிலாசமும் இதேபோன்றதொரு முயற்சிதான் என்றாலும், இரு முக்கியமான அம்சங்களில் இது கதாவிலாசத்தினிடமிருந்து மாறுபடுகிறது. ஒன்று. கதாவிலாசம் சொல்லும் அனுபவங்கள் ஒரு முழுமையான புனைவாகி விடக்கூடிய நிறைய வாய்ப்புகளுடன் இருக்கின்றன. ஆனால் ஆழத்தை அறியும் பயணம் வெறும் அனுபவமாக மட்டுமே அனுபவத்தை முன்வைக்கிறது. எந்தக் கணத்தில், குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியரின் நினைவடுக்கில் வந்து போனதோ அந்தக் கணத்தில் அனுபவக் குறிப்பு நின்று விடுகிறது. இதை பலம், பலவீனம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கதையுடன் வாழ்க்கை சந்திக்கும் புள்ளியில் அனுபவம் நின்றுபோய், கதை மீதான இடம்பெயர்தல் நிகழ்கிறது. இரண்டு. கதாவிலாசத்தில் தொகுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளும், எழுத்தாளர்களும் முந்திய மூன்று தலைமுறைகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இப்புத்தகம் 1930களில் எழுதப்பட்ட கதைகளைக் குறித்தும் கூடப் பேசுகிறது. இன்றைய பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகமற்ற எழுத்தாளர்களைப் பரிட்சயப்படுத்துகிறது. இரு நூல்களுமே தீவிர வாசகத் தன்மையுடன் அமைந்திருப்பது பொதுவான அம்சம்!
ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் எழுத்தாளர் குறித்த குறிப்பும், இச்சிறுகதை எந்தத் தொகுப்பிலிருக்கிறது என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களை அடுத்து, எல்லாக் கட்டுரைகளும் ஓர் அனுபவத்தை விளக்கி, ஒரு புள்ளியில் நிறுத்தி, 'இந்தப் புள்ளியில் இன்ன கதை நினைவுக்கு வருகிறது' என்றபடி கதையைச் சொல்லி, பின் கதையின் மீதான மதிப்பீட்டைச் சொல்லி நிறைவு பெறுகின்றன. பின்பற்றப்பட்டிருக்கிற இந்த ஒரே மாதிரியான கட்டமைப்பு கொஞ்சம் சலிப்பேற்படுத்தத்தான் செய்கிறது.
என்றாலும் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களிடம், நல்ல இலக்கியத்தைத் தேடும் இன்றைய வாசகர்களை ஆற்றுப்படுத்தும் பாவண்ணனின் இந்நூல் கவனிக்கத்தக்க, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!
இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களும், சிறுகதைகளும்:தமிழகச் சிறுகதைகள்அ.மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்'
பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'
த.நா.குமாரசாமியின் 'சீமைப்பூ'
கல்கியின் 'கேதாரியின் தாயார்'
ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'சசாங்கனின் ஆவி'
து.ராமமூர்த்தியின் 'அஞ்ஞானம்'
கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு'
நா.பார்த்தசாரதியின் 'வேப்பம்பழம்'
ஆர்.சூடாமணியின் 'ரயில்'
விந்தனின் 'மாடும் மனிதனும்'
தி.சா.ராஜுவின் 'பட்டாளக்காரன்'
ந.முத்துசாமியின் 'இழப்பு'
கரிச்சான் குஞ்சுவின் 'நூறுகள்'
பிரபஞ்சனின் 'பிரும்மம்'
இந்திரா பார்த்தசாரதியின் 'நாசகாரக் கும்பல்'
ஜே.வி.நாதனின் 'விருந்து'
ஆர்.ராஜேந்திரசோழனின் 'கோணல் வடிவங்கள்'
நாஞ்சில் நாடனின் 'ஒரு இந்நாட்டு மன்னர்'
திலீப்குமாரின் 'மூங்கில் குருத்து'
மா.அரங்கநாதனின் 'சித்தி'
சிவசங்கரியின் 'வைராக்கியம்'
சி.ஆர்.ரவீந்திரனின் 'சராசரிகள்'
மலர்மன்னனின் 'அற்பஜீவிகள்'
ஜெயந்தனின் 'அவள்'
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்'
அயல் தமிழ்ச் சிறுகதைகள்என்.எஸ்.எம்.ராமையாவின் 'ஒரு கூடைக் கொழுந்து'
என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்'
வ.அ.இராசரத்தினத்தின் 'தோணி'
அ.முத்துலிங்கத்தின் 'அக்கா'
எஸ்.பொன்னுத்துரையின் 'அணி'
சாந்தனின் 'முளைகள்'
மாத்தளை சோமுவின் 'தேனீக்கள்'
தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள்'
பிறமொழிச் சிறுகதைகள்தாகூரின் 'காபூல்காரன்'
ஜயதேவனின் 'தில்லி'
கே.ஏ.அப்பாஸின் 'அதிசயம்'
சரத்சந்திரரின் 'ஞானதா'
காளிந்திசரண் பாணிக்கிரஹியின் 'நாய்தான் என்றாலும்'
தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'
எட்கர் ஆலன் போவின் 'இதயக்குரல்'
துர்கனேவின் 'முமூ'
வில்லியம் பாக்னரின் 'இரு சிப்பாய்கள்'
ஐல்ஸ் ஐக்கிங்கரின் 'ரகசியக் கடிதம்'
பின்குறிப்பு:இப்புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்த நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கு நன்றி!
-சேரல்
(http://seralathan.blogspot.com/)