Wednesday, October 21, 2009

49. குருதிப்புனல்

----------------------------------------------------------
புத்தகம் : குருதிப்புனல்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
விலை : ரூ 90
பக்கங்கள் : 237

----------------------------------------------------------

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகளை நான் இதற்கு முன் வாசித்ததில்லை. இந்த ஒரு புதினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவரைப் பற்றிய கருத்தைச் சொல்வது எத்தனை சரியாக இருக்குமெனத் தெரியவில்லை. அனாயாசமான எழுத்தோட்டம் இப்புதினத்தில் இருக்கிறது. இ.பா.ஒரு தேர்ந்த கம்யூனிச வாதி என்ற எண்ணம் மேலெழுகிறது. இந்தப் புதினம் கம்யூனிசப் பின்புலத்தில் அமைந்ததால் கூட அப்படி இருக்கலாம். யதார்த்த நிகழ்வுகளை வைத்து, தர்க்க வாதங்களை நிகழ்த்தி, பல தத்துவார்த்தங்களையும் பேசுகிறது இப்புதினம்.முதலில் புதினத்தின் பின்புலத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1968ஆம் வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அப்பொழுதைய தஞ்சை மாவட்டத்தில் (இப்போது நாகப்பட்டினம் மாவட்டம்) கீழ்வேளூர் வட்டத்தில் கீழ வெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களின் மீது அடக்குமுறையை கையாண்ட நிலக்கிழார்கள், அதன் ஒரு படியாக குடிசைக்குள் தஞ்சம் புகுந்திருந்த பெண்களையும், குழந்தைகளையும் எரித்துக் கொன்றனர்.

இச்சம்பவம் சர்வதேச அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது. கம்யூனிச நாடுகள் இதைக் கண்டித்து அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்து, அண்ணா முதல்வராக இருந்த காலமது. விசாரணைக் கமிஷன், வழக்கு, போராட்டம் எனத்தொடர்ந்த இச்சம்பவத்தின் விளைவுகள் இன்னும் சில உயிர்களைப் பலிவாங்கிப் பின் ஒன்றுமில்லாமல் போயின.

இச்சம்பவத்தின் பாதிப்பில் இ.பா. எழுதிய இப்புதினம், கணையாழி இதழில் தொடராக வெளிவந்தது. வேறெந்த பத்திரிகையும் இதை வெளியிடத் தயங்கின என்பது இங்கு கவனிக்கத்தக்கது. புத்தகம் முழுவதுமே திராவிட இயக்கங்களின் அரசியல் மீதான தாக்குதல் நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நடவடிக்கைகளும் சில இடங்களில் விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில், இப்புத்தகம் வெளியான போது, இது கம்யூனிச இயக்கத்தவர்களால் எதிர்க்கப்பட்டதென்றும், சமீப காலகட்டத்தில்தான் இது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றும் இ.பா.அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்குள்ளெழுந்த ஆச்சரியம், இ.பா.வின் எழுத்துத் தைரியம் மீதானதே! எப்படி இவரால் இத்தனை உணர்ச்சி பூர்வமான விஷயத்தைப் பற்றி, எதிர்ப்பு குறித்த, அச்சுறுத்தல் குறித்த எந்தப் பயமும் இல்லாமல் எழுத முடிந்தது? இவர் டெல்லியில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்றாலும், அந்த ஆச்சரியத்தை என்னால் கைவிடமுடியவில்லை.

கதை பற்றிக் கொஞ்சம் ஆராய்வோம். சமூகப் பொருளாதார, சாதி அடிப்படையிலான கோர சம்பவமாக நடந்த இந்நிகழ்வை, பாலியல் சார்ந்து, ஃப்ராய்டியன் போக்கில் நடந்தேறியதாகக் கொண்டு இப்புதினத்தைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். இதற்கான பொறி, இந்நிகழ்வின் மூலகர்த்தாவாக இயங்கிய மிராசுதாரின் ஆண்மைத்தன்மையைப் பற்றி மக்களிடையே நிலவிய செய்தி, வதந்தி, விஷயம் என்கிற ஏதோ ஒன்றுதான் என்கிறார் இ.பா. இது அவரது கற்பனை என்றோ, இதுவே உண்மை என்றோ நாம் கொள்ளத்தேவையில்லை; அதை நிரூபிப்பதற்கான எந்தக் கட்டாயமும் நமக்கில்லை. சமூகத்தில் நடக்கிற கொடுமைகளை, மனித இனத்துக்குச் சவாலான நிகழ்வுகளைப் பதிவு செய்வது படைப்பாளியின் கடமை. அதை எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் ஆசிரியர். ஃப்ராய்டியன் சிந்தனைகளுடன் இவர் இதை அணுகியதே கம்யூனிச இயக்கத்தின் எதிர்ப்புக்குக் காரணம் என்பதாக நானறிகிறேன்.

ஆண்மைத்தன்மை இழந்த ஒருவனின் மன உளைச்சலுக்கு, ஒரு கிராமமே பலியான கதை இந்தக்குருதிப்புனல். ஊர் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார். இது வரலாற்றைப் பதிவு செய்கிற ஒரு முயற்சி என்கிற வகையில் முக்கியமடைகிறது.

இக்கீழ்வெண்மணிக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பதினெட்டு வயது வரையில் இந்த வரலாறு எதுவும் எனக்குத் தெரியாது. பின் செவிவழியாகவும், புத்தகங்கள் வழியாகவும் கொஞ்சம் அறிந்த எனக்கு, இன்னும் பல தகவல்களைத் தருவதாக இருக்கிறது இப்புதினம்.

டெல்லியில் வாழ்ந்து கீழவெண்மணியில் வாழும் முடிவுடன் வந்துவிட்ட தன் நண்பனைக் காண வரும் இன்னொரு நண்பன்; இவர்களிருவரும் சந்தர்ப்ப வசத்தால், ஆதிக்க வர்க்கத்துக்கெதிரான ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் ஈடுபட நேர்கிறது. இந்தச் சம்பவங்களைச் சுற்றிச் சுழல்கிற கதை, பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தன் உச்சகட்டமாகக் கொண்டிருக்கிறது.

மெத்தப்படித்த, அறிவு, ஞானம், சமுதாயப்போக்கு, இவற்றைக்குறித்து சிந்திக்கிற இவ்விரு நண்பர்களுக்கிடையே நடக்கும் விவாதங்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை. இருவரின் மனநிலையையும் எந்தத் தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். நண்பர்களுக்கிடையே தோன்றக்கூடிய பொறாமை, இயல்பாக மனிதனுக்கேற்படும் காமம், அடிமைப்படுத்தியவனின் மீதான வன்மம், இயற்கை தனக்கேற்படுத்திய குறைக்காக மற்றவர்களைக் கொடுமைப்படுத்தும் ஒரு மனிதனின் குரூரம் என்று பலவிதமான உளவியல் சமாச்சாரங்களை இயல்பாகச் சொல்லிவிட முடிகிறது இவரால்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தின் நிலையும் கதையின் போக்கில் சொல்லப்பட்டுவிடுகிறது. பேருந்துப் பயணக்காட்சியொன்றில் நிகழும் உரையாடல்களை வைத்து இவர் சொல்லும் ஒரு செய்தி என்னைப் புன்னகைக்க வைத்தது. 'நம் மனிதர்கள் பேசுகின்ற விஷயங்களை மூன்றே வகைக்குள் அடக்கிவிடலாம்; ஒன்று பக்தி பற்றி பேசுவார்கள்; அல்லது அரசியல் பேசுவார்கள்; அல்லது சினிமா பற்றிப் பேசுவார்கள்; பக்தி அறமாகவும், அரசியல் பொருளாகவும், சினிமா காமமாகவும் தான் இப்போது புலப்படுகிறது. எப்படியும் தமிழர்கள் திருக்குறளைக் கைவிடுவதில்லை' என்பதாகச் சொல்லி இருப்பார். இப்போது இவர் சொன்ன எல்லாவற்றிலும், பொருளும், காமமும் மட்டுமே இருப்பதாக எனக்குப்படுகிறது.

எந்தப் படைப்பும் உன்னதமாவது, அது எழுதப்பட்ட நோக்கத்தைப் பொறுத்ததே! ஒடுக்கப்பட்ட ஓரினத்தின் வரலாற்றில் சோக அத்தியாயமாக இடம்பெற்றுவிட்ட இக்கொடூர சம்பவத்தை இனிவரும் சந்ததிக்குச் சொல்லிச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டதால் இப்புதினமும் ஓர் உன்னதப் படைப்பாகிறது.

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Wednesday, October 14, 2009

48. அகல் விளக்கு

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

------------------------------------------------------
புத்தகம் : அகல் விளக்கு
ஆசிரியர் : மு.வரதராசன்
விற்பனை : பாரி நிலையம்
விலை : ரூ100
பக்கங்கள் : 412
கிடைத்த இடம் : தஞ்சை இரயில் நிலையம்

--------------------------------------------------------

இது சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.

ஆரம்ப காலத்தில் புதினம் என்ற எழுத்து வடிவம் சங்க காப்பியங்களின் நீட்சி என்று கருதப்பட்டதாலோ என்னவோ, புதினம் என்றாலே கண்டிப்பாய் நீதிபோதனைகள் இருக்கும். ஓரிரு வரிகள் அல்ல பக்கம் பக்கமாய் கூட சில இடங்களில் இருக்கும். மக்களுக்கு நீதி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதே புதினங்களின் கதிமோட்சமாக கருதப்பட்டது. தமிழில் முதல் புதினம் வெளிவந்து 100 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருந்தாலும், இந்த புத்தகமும் அத்தகைய கருத்திலிருந்து அதிகம் மீண்டுவிடவில்லை.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இருவர். பால்ய நண்பர்கள். எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாய் கதைசொல்லியின் வாழ்வு அமைக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வாழக்கூடாததற்கு இன்னொருவனின் வாழ்வு. இந்த இருவர் வாயிலாக தன் கருத்துக்களையும் வெளிப்படுத்தியவாறே கதைசொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

தெளிந்த நீரோடை மாதிரி கதை. திடுக்கிடும் திருப்பங்களோ அதிரடி காட்சியமைப்புகளோ இல்லாமல் சென்றாலும் சுவையாகவே செல்கிறது.

கதைக்காக என்பதை விட, சமூக நிலைக்காக என்பதுதான் மிகப்பொருத்தம். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது? மக்களின் மனநிலை, நம்பிக்கைகள், கல்வி, காதல், நட்பு, கைம்பெண் குறித்த பார்வை எப்படி இருந்தது? திருவிழாக்கள் நடந்த விதம்? கல்லூரிகள் எப்படி இருந்தன? என்று சுவாரஸ்யமாய் பல கேள்விக்குறிகளுக்கு விடையளிக்கும் காலக்கண்ணாடி இந்த விளக்கு.

உதாரணத்திற்கு ஒன்று..

பள்ளிக்காலத்தில் நமக்கு அனாமத்தாக சில அஞ்சல் அட்டைகள் வரும். நமக்கெல்லாம் கூட தபால் வருதான்னு ஒரு குதூகலம் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும்.

"இது அருள்மிகு __ __ __ சாமியின் அருள்பெற்றது. நீங்கள் பரீட்சையில் பாஸாகனுமா? நினைத்தது நடக்கனுமா? இன்னும் 10 பேருக்கு இந்த அஞ்சலட்டை எழுதி அனுப்பவும். இல்லையேல் ரத்தம் கக்கி சாவாய்" என்கிற ரேன்ஞ்-சில் எழுதியிருக்கும். என் நண்பர்கள் பலரும் கர்ம சிரத்தையாக அதனை 10 பேருக்கு அனுப்புவதைப் ப ார்த்திருக்கிறேன். ரத்தம் கக்குவதைப் பற்றிய பயம் உள்ளுர வந்திருந்தாலும் நான் இதுவரை எழுதியதில்லை :)

இது இன்னைக்கு நேத்துதான் நடக்குதுன்னு நினைத்திருந்தேன். மு.வ சொல்லித்தான் தெரியுது நம்ம மக்கள் 50 வருசம் முன்னாடி கூட இப்படித்தான் இருந்திருக்காங்க. ஒரு பழக்கம், தவறானதுன்னு தெரிந்தாலும் கூட மக்கள் மனங்களை விட்டு அகல இவ்வளவு காலம் ஆகுமா? மக்களின் இறைபக்தியை சில்லறை வணிகமாக்கும் இந்த மாதிரி உத்திகள் எல்லா காலத்திலும் எப்படி வெற்றி பெறுகின்றன? இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள். உண்மையில் கதையைவிட இந்த மாதிரி கிளைகளில் நம்மை யோசிக்க வைக்கும் கேள்விகளுக்காக நிச்சயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

வாழ்க்கைப் பயணத்தில் தினம் தினம் ஆயிரம் பயணிகள் நம்மோடு பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரையுமே நாம் தெரிந்துகொள்வதில்லை. ஆயினும், ஒருசிலர் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகின்றனர். யோசித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் ஒரு பால்ய சினேகிதன் இருந்திருப்பான். கொடுக்காப்பள்ளி அடிப்பதிலிருந்து கணக்கு வாத்தியாரிடம் அடிவாங்குவது வரையிலும் உங்களுடனேயே இருந்திருப்பான். அவனுடன் ஊர் சுற்றி அலைந்திருப்பீர்கள். பொல்லாத கதைகள் பேசி திரிந்திருப்பீர்கள். பள்ளிக்குப் பின்பு அவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துப் பார்க்க உங்களுக்கு சந்தர்ப்பம் அமைந்ததுண்டா? கண்டிப்பாய் அவனைப்பற்றிய நினைவுகளை கிளறிச்செல்லும் இப்புத்தகம்.

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Monday, October 05, 2009

47. கன்னா பின்னா கதைகள்

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்..பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்

- சுஜாதா

------------------------------------------------------------
புத்தகம்: கன்னா பின்னா கதைகள்
ஆசிரியர்: ரா.கி.ரங்கராஜன்
வெளியீடு: அல்லயன்ஸ்
ஆண்டு: 2007
விலை: ரூ. 60
பக்கங்கள்: 180
கிடைத்த இடம்: தஞ்சை ரயில் நிலையம்

-------------------------------------------------------------
இவை நிஜமாகவே கொஞ்சம் கன்னா பின்னாவான கதைகள்தான்.

நான் படிக்கும் ரா.கி.ரங்கராஜனின் முதல் படைப்பு இது. பெரிய அளவு எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாமல்தான் நேற்றிரவு ரயில் பயணத்தில் வாங்கினேன். தொடங்கிய பிறகு என்னால் கீழே வைக்கமுடியாத அளவுக்கு துள்ளலான நடை இந்த இளைஞருக்கு.

முழுக்க முழுக்க கடிதங்கள்தான். கடிதங்களினூடாக காதல் மொக்கவி்ழ்கிறது. படிக்கச் சலிக்காத நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது. காலத்தைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகள் ஏதுமில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் என்று கொண்டால் ஒத்துவருகிறது. பழைய கருப்பு வெள்ளை சினிமா படக்காதல் மாதிரி கற்பனை செய்து கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

இதனைச் சிறுகதைகள் என்று சொல்லலாமா? ம்ம். சரி.. சிறுகதைகள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு சிறுகதையும் பொதுவில் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஒரு யுவதி பழக்கமில்லாத ஒரு இளைஞனுக்கு எழுதும் கோபமான ஒரு கடிதத்துடன் தொடங்கி அதற்கு பதில், பதில் பதில் கடிதங்களால் சில சமயங்களில் ஒருசில அவசரத் தந்திகளோடு சுபம் போட்டு முடிவடைகிறது. படிக்கும் போது நம்மையுமறியாமல் ஒரு புன்னகை படர்வதை தவிர்க்கமுடியாது. நான் சில இடங்களில் வாய் விட்டு சிரித்து ரயிலில் வினோதப் பார்வை சம்பாதித்த சம்பவங்களும் நடந்தேறின.

சுவையான காதல், சுவாரஸ்யமான காதல், குறும்பான காதல் என்று விதவிதமாய் காதல் கடிதங்கள். உடனே இது காதல் புத்தகம் என்று முடிவுகட்டி மற்றவர்கள் ஓடிவிடத்தேவையில்லை. அத்தனை குறும்புடன், அங்கதச்சுவை மிளிர அனைவரும் ரசிக்கலாம் இந்தக் கடிதங்களை. காதல் அல்லாத குறும்புக் கடிதங்களும் தட்டுப்படுகின்றன.

மொத்தம் 18 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதைக்கும் இவர் பெயர் சூட்டும் அழகே அலாதியானது. 'காதல் பைனாகுலரில் தெரியும்', 'சிவகாமியின் சப்தம்', 'பூனை பிடித்தவள் பாக்கியம்', 'மீரா கே பிரபு' என்று நீளுகிறது இந்தப் பட்டியல். படித்து முடித்தபின் தலைப்பை மீண்டும் யோசிக்க வைக்கிறது.

ஒரு சில கடிதங்கள் ரொம்பவும் நாடகத்தனத்துடன் சலிப்பைத்தருபவை போலிருந்தாலும், மற்ற கடிதங்கள் அதனை ஈடு செய்துவிடுவதால் படிக்கச்சலிக்கவில்லை. ஒரு சில உத்திகள் திரும்பத்திரும்ப பல கடிதங்களில் பயன்படுத்தப்பட்டு கொஞ்சம் பழகிய தன்மையை தந்துவிடுவதால் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை. இத்தனை கடிதங்கள் எழுதுகையில் இதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

நீங்கள் எந்தவொரு மனநிலையில் இருந்தாலும், இந்த புத்தகத்தைப் படிக்கலாம் என்று தாராளமாய் சிபாரிசு செய்கிறேன் :) நிச்சயம் சில சந்தோஷ கணங்கள் உங்களுக்குண்டு.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து ஆசிரியரைப்பற்றி:

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வாரஇதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறுது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன.

ரங்கராஜன் 'சூர்யா', ' ஹம்சா', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்யெர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்- என பலதரப்பட்ட எழுத்துக்களைத் தந்தவர். ஒவ்வொரு புனைப்பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர் போல் எழுதிய மேதாவி. இந்த பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்
- கல்கி


-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)