Wednesday, July 29, 2009

41. சாயாவனம்

---------------------------------------------------------------
புத்தகம் : சாயாவனம்
ஆசிரியர் : சா.கந்தசாமி
பக்கங்கள் : 199
வெளியிட்டோர் : காலச்சுவடு
நூல் வெளியான ஆண்டு : 1969
காலச்சுவட்டில் வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ 150

---------------------------------------------------------------

சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றுகிற போது அவை தேடக்கிடைப்பதில்லை. அதே புத்தகங்களை வேறு மனநிலையில் பார்க்கும் போது வாங்கும் விருப்பம் இல்லாமலும் போவதுண்டு. இப்படியே பல காலமாக என்னிடம் இருந்து விலகியிருந்த, அல்லது நான் விலக்கி வைத்த ஒரு நூல் சாயாவனம். சில தினங்களுக்கு முன்பு என் ஆர்வமும், புத்தகத்தின் இருப்பும் ஒன்று சேர்ந்து கொள்ள, வாங்கி வந்துவிட்டேன்.

ஞாயிறு அதிகாலை ஐந்தரை மணிக்கு மெரீனா கடற்கரையில் இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அந்த அதிகாலையைப் போலவே இந்தப் புதினமும் என்னோடு மிகவும் அணுக்கமானது; நட்பு பாராட்டக் கூடியது; பறந்து பட்ட வெளியை எனதாக்கக்கூடியது; எல்லையற்ற சுகானுபவங்களை வழங்க வல்லது.

மாற்றத்தின் ஊற்றுக்கண் பெருக்கெடுத்தோடி அடித்து வந்து சேர்க்கும் நிகழ்வுகளைப் படியவைக்கிறது சாயாவனம். தன் ஓட்டத்தின் பல புள்ளிகளில் நிகழ்ந்துவிட்ட பெரும் மாற்றங்கள் வாழ்க்கை முறையின் திசையை வேறாக்கிச் சென்றதைக் கண்ணுற்றுக்கொண்டே
ஓடிக்கொண்டிருக்கிறது காலம். அரசியல், பொருளாதாரம், மதம், தார்மீகக்கோட்பாடுகள், அறிவியல் இவற்றில் ஏற்படுகிற மாற்றங்கள் தனி மனித வாழ்விலும், ஒரு சமூகத்தின் பண்பாட்டிலும் தோற்றுவிக்கிற மாற்றங்கள் ஆச்சரியத்துக்குரியவை.

மேலை நாடுகளில் தோன்றிய தொழிற்புரட்சியிலிருந்து, இப்போது உலகெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை வரை இவ்வாறான ஒரு தாக்கத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன். இதுபோன்றதொரு நிகழ்வை உடனிருந்து விளக்குவதாயிருக்கிறது சா.கந்தசாமியின் சாயாவனம்.

புலம் பெயர்ந்து, மீண்டும் தன் மண்ணையும் மனிதர்களையும் வந்தடையும் ஒருவனின் ஆசையால் அந்த மண்ணும், மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும், இலை தழை செடி கொடி மரங்களும் அடைகிற மாற்றங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது இந்தப் புதினம். சாயாவனம், காவிரி மண்ணில் வாழும் ஒரு கிராமம். அந்த ஊருக்கு, வெகு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வரும் அவன், அங்கிருக்கும் காடு போன்றதொரு தோட்டத்தை வாங்கி, அதை அழித்து, அங்கொரு சர்க்கரை ஆலை கட்ட முனைகிறான். இதையும், இதைச் சார்ந்தும் நடக்கும் இயக்கங்களைப் பதிவு செய்கிறது இக்கதை.

முதலில் புதினத்தில் நான் ரசித்த முக்கியாம்சம், வாசகனுக்குத் தரப்படுகிற சுதந்திரம். எந்த விஷயமும் இது இப்படித்தான் என்ற போக்கில்லாமல், நம் கற்பனைக்கு எல்லையற்ற வெளியை வழங்கிபோகிறது புதினம்.

சிதம்பரம், சிவனாண்டித்தேவர், குஞ்சம்மாள் இன்னும் சில முக்கியப் பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்கள் பெயரளவில் அல்லாமல், சித்திரமாக மனதில் பதிகிறார்கள். இது ஒரு வகையில் பலமும், பலவீனமும் கூட.

பல புதிய தளங்களை அறிமுகம் செய்கிற இந்நூலில் பல செய்திகள் படிமமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் எதுவுமற்றதாகத் தோன்றும் பகுதிகள், ஆழ்ந்து படிக்க, புதுப்புது வடிவம் கொண்டு வளைய வருகின்றன.

ஏறக்குறைய 150 பக்கங்களுக்கு, தோட்டம் அழிக்கப்படும் நிகழ்வுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இது எந்தவிதமான சலிப்பையும் நம்முள் ஏற்படுத்த இயலாததாகவே இருக்கிறது.

ஆழ்மன உணர்ச்சிகளை அதிகம் வார்த்தைப்படுத்தாமல், பாத்திரங்கள் பேசும் வசனங்களிலேயே அவர்களின் உணர்வுகளை மிகச்சாதுர்யமாகக் கூறி இருக்கிறார்.

ஒரு தோட்டம் அணுவணுவாக அழிவதை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது புதினம். இதை மூன்றாவது மனிதன் ஒருவனின் பார்வையில் அல்லாமல், ஆலை வைக்க முனையும் சிதம்பரத்தின் பார்வையிலும் செலுத்தி இருப்பது அற்புதம்.

கதையின் காலகட்டம் கூட சம கால நிகழ்வுகளின் மூலமாக, மறைமுகமாகவே உணர்த்தப்படுகிறது. நுண்மையான மனித உணர்வுகள், உறவுகள், பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம் வியப்பிலாழ்த்துகிறது. சரியென்றும் தவறென்றும் தீர்மானிக்கப்படுபவை செயல்பாடுகளேயன்றி மனிதர்களல்லர்; தீர்மானிப்பவையும் சூழ்நிலைகளே என்றும் விளங்கவைக்கின்றது சாயாவனத்து மக்களின் வாழ்க்கை.

கூலி அதிகம் கொடுத்தாலும் வழக்கமாக வேலை செய்யும் இடத்தை விட்டு நீங்கி வராத மனிதர்கள், காசினை அதிகம் பயன்படுத்தாமல் நெல்லையே பிரதானமான வணிக ஆதாரமாகக் கொண்டிருக்கும் தன்மை, கொடுத்த வாக்குக்கு மதிப்பு தரும் மேன்மை என்று வாழும் சாயாவனத்துக்காரர்கள் நம்மோடு நிச்சயம் அன்பு கொண்டுவிடுவார்கள். ஆனால், இதே நிலைகள் புதினத்தின் முடிவில் ஒரு தனி மனிதனின் மூளைக்கு முன் இயங்கவியலாமல் மாறிவிடுகிற தன்மை நம்மையும் சங்கடப்படுத்துகிறது

ஒவ்வொரு மரத்துப்புளி ஒவ்வொரு வீட்டுக்கு என்றிருந்த கிராமத்தில், மற்ற ஊர்களிலிருந்து புளி வாங்கி வந்து கலந்துகட்டி விற்கிற நிலைமை வந்து சேர்வது சாயாவனம் என்றில்லாமல், மூலத்தை இழந்துவிட்ட நம் எல்லா ஊர்களையும் நினைவுறுத்துவதாக இருக்கிறது.

வெயில் ஊர்ந்தோடும் சாயாவனத்தின் தோட்டத்தை எரித்துத் தணியும் அனல் நம்மோடு கதையாடுவது நிச்சயம். அழிவின் விளிம்பில் இருக்கும் மூங்கில் புதர்களும், புன்னை மரங்களும், புளிய மரங்களும், காரைச்செடிகளும், எரிந்து சாம்பலாகும் ஜீவராசிகளும் நமக்கு உணர்த்தும் உண்மைகளும் ஏராளம்.

ஒரு சமூகத்தின் வாழ்வோட்டத்தையும், அதில் பின்னிப்பிணைந்திருக்கும் சுக துக்கங்களையும், அபரிமிதமான அன்பையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர்.

மறந்துபோன சடங்குகளை, பழக்கவழக்கங்களை, பூர்வீகமான பண்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்கு இட்டுச்செல்லும் முயற்சியும் இங்கே காணக்கிடைக்கிறது. தாவரங்கள், மனிதர்கள், விவசாயம், மற்ற அடிப்படை பணிகள் குறித்தான பல நுண் தகவல்கள் நூலெங்கும் விரிந்து கிடக்கின்றன.

எழுத்து எதைச் சாதிக்க வேண்டுமோ, எழுத்தாளன் எதை நிறைவேற்ற வேண்டுமோ அதை மிகச் செம்மையாக செய்து முடித்திருக்கிறது இப்புதினம்.

ஆசிரியரைப்பற்றி:
பிறந்த ஆண்டு 1940. பிறந்த ஊர், மயிலாடுதுறை(முன்பு மாயூரம் அல்லது மாயவரம்). இருபத்தைந்து வயதில் இந்தப் புதினத்தை எழுதி இருக்கிறார். இருபத்தொன்பது வயதில் வெளியாகி இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் இது. இவரது 'விசாரணை கமிஷன்' என்ற இன்னொரு நூலும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 11 புதினங்களையும் இவர் எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கிய வட்டத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்.

பின் குறிப்புகள்:

1. நான் படிக்கும் சா.கந்தசாமியின் முதல் நூல் இது. எங்கள் ஊர்ப்புறத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணமே இவர் மீது அதிகப்படியான ஒட்டுதலை ஏற்படுத்துகிறது. இவர் எழுத்து முழுவதும் எங்கள் ஊர்ப்புற வட்டார வழக்கையும், பழக்க வழக்கங்களையும் காணும்போது மகிழ்வெய்துகிறது மனம்.

2. 25 வயதில் சமூக அக்கறையுடனான ஒரு புதினத்தைப் படைத்து, அதில் விருது வாங்கும் தன்மையும் கொண்டிருந்திருக்கிறவரைப் பார்க்கும்போது, அதே வயதில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எண்ணத் தோன்றுகிறது.

3. ஆண்டுகள் பல கடந்து இன்னும் தமிழ் இலக்கிய வட்டத்தில் பெரும்பெயர் பெற்றிருக்கும் இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் 'கிளாசிக் வரிசை' என்ற பெயரில் வெளியாகும் படைப்புகளுள் ஒன்றாக வெளியிட்டிருக்கிறது. இந்த வெளியீட்டுக்காகப் பாவண்ணன் எழுதி இருக்கும் முகவுரை மிகவும் அருமையானது. நூல் குறித்தான தன் பார்வையை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார்.

4. இப்புதினம் ஆங்கிலம், பிரென்ச் முதலான பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

புதினத்திலிருந்து ஒரு பகுதி...
சிதம்பரத்தின் கட்டிலில், குருட்டாம்போக்காய் சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு காக்கை விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் துள்ளிக்குதித்தான். காக்கையைப் பார்த்ததும் புன்சிரிப்பு வெளிப்பட்டது. காக்கையின் காலைப் பிடித்துத் தீயை நோக்கி வீசியெறிந்தான். ஒரு ஓசையின்றி, சடசடப்பின்றிக் காகம் தீயில் போய் விழுந்தது. இறகு பொசுங்கிக் கருகிச் சாம்பலாகும் காட்சியைக் காணவேண்டும் என்று மனதுக்குள் ஓர் ஆவல். அலக்கை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான், அனல் வீச்சையும் பொருட்படுத்தாமல்.

காக்கை தீயில் பொசுங்கிக்கொண்டிருந்தது. அலக்கால் குத்தி, எரியும் காக்கையை மேலே தூக்கினான். ஒரு நெடி, வாடை குப்பென்று அடித்தது. முகத்தைச் சுளித்துக்கொண்டு காக்கையை அலக்கோடு தீயில் செருகினான். அலக்கு வேகமாக உள்ளே சென்றது.

அலக்கை வெளியே உருவிப்பார்த்தபோது, நிதானமாக எரிந்து கொண்டிருந்தது. இது இரண்டாவது அலக்கு-கருக்கரிவாள் கட்டியது. தீ பற்றிய வேகத்தில் அரிவாள் வரையில் உள்ள பகுதி சாம்பலாகிவிட்டது. அரிவாள் இன்றி எரியும் அலக்கைத் தீர்க்கமாக நோக்கினான். அவன் மனத்தில் நெறிமுறையைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் ஓர் உணர்வு தோன்றியது. அவன் புளகாங்கிதமுற்றான். உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. நிற்க முடியவில்லை. வெறியுற்ற நிலையில், எரியும் அலக்கைத் தீயில் வீசியெறிந்து விட்டுக் கட்டிலில் போய் அமர்ந்தான்.

தீ சடசடவென்ற இரைச்சலோடு மேலுக்குத் தாவிப் புன்னை மரத்தைச் சாடியது. இலைகளிலிருந்து கிளைகளுக்கும், கிளைகளிலிருந்து அடி மரத்திற்கும் ஒரு தாவல். உயர்ந்து அலையலையாய்ப் படர்ந்து அடங்கும் தீயின் போக்கையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தரத்தில் தீ அற்புதம் நிகழ்த்துகிறது. ஓரோர் சமயம் தீயின் உக்கிரம் அவனை நிலைகுலைய வைத்தது. இப்படியே போனால் என்ன ஆகும்?

-சேரல்

Monday, July 27, 2009

40. மெளனியின் கதைகள்

என் வேண்டுகோளை ஏற்று இந்த வலைப்பூவில் புத்தகங்கள் குறித்தான தன் பார்வைகளை எழுதத் தொடங்கி இருக்கும் அன்புத்தம்பி Bee'morganகு நன்றிகள் பல. ஒத்த சிந்தனையும், நோக்கமும் கொண்டவர்கள் சேர்ந்து செயலாற்றுவது மிக அற்புதமான விஷயம். ஒரு கல் வைக்க முடிகிற நேரத்தில், இரண்டு கற்களைச் செம்மையாக வைக்க முடிந்தால் கட்டிடம் விரைவில் எழும் தானே!

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. (குறள் எண் : 1159)

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காதல்நோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.


-----------------------------------------
நூல்: மெளனியின் கதைகள்
ஆசிரியர்: மெளனி
பக்கங்கள்: 328
விலை: ரூ.185
பதிப்பகம்: பீகாக் பதிப்பகம்

-----------------------------------------

என்றோ ஒருநாள் நீங்கள் கதறி அழவேண்டும் போல் உணர்ந்த ஒரு கணத்தில் உங்கள் மனதில் எழுந்த எண்ண்ங்கள் நினைவிருக்கிறதா? காரணமற்ற விரக்தியில் வெற்றுச்சுவரைப் பார்த்தபடியே ஒரு நாள் முழுவதும் அமர்ந்திருக்கிறீர்களா? பூவை விட மெல்லிய காதல் பூக்கும் கணங்களின் ஸ்பரிசங்களை உணர்ந்திருக்கிறீர்களா? தூக்கம் தொலைத்த பின்னிரவொன்றில் எங்கிருந்தோ கசியும் சங்கீதமொன்று உங்களை அமைதியில்லாமல் அலைக்கழித்திருக்கிறதா?

இவையனைத்தும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன மெளனியின் கதைகளில். பிரிவையும் வலியையும் உயிரென மதித்த உறவின் மரணத்தையும் இவ்வளவு அழகாகச் சொல்லமுடியுமா? ஆழ்ந்த துக்கத்தைக் கூட இப்படி அனுபவிக்க முடியுமா? மெளனியால் முடிந்திருக்கிறது.

மொத்தம் 24 கதைகள்தான். அனைத்திற்கும் அடிநாதமாக ஒரே ஒரு உணர்ச்சிதான். களங்களும், பாத்திரங்களும் அவை ஏற்படுத்தும் எண்ண அலைகளும் மட்டுமே மாறுபடுகின்றன.

சொல்லப்போனால், அனைத்து கதைகளையும் ஒருவித வாய்ப்பாட்டுக்குள் அடைத்துவிடலாம். ஆனால் இது எந்தவொரு கதையையும் கொஞ்சமும் பாதிப்பதில்லை. மாறாக, முடிவைத் தெரிந்துகொண்டே முடிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு அனுபவத்தைத் தருகிறது.

ஏறக்குறைய எல்லாக் கதைகளுமே பாலை (அ) பாலையை நினைவுபடுத்தும் ஒரு குறிப்புடனேயே தொடங்கி அவ்வாறே முடிவடைகின்றன. அனைத்திலும் அழுத்தமானதொரு காதல் இழையோடுகிறது.

இக்கதைகள் நிகழ்ச்சிகளைப் பின்தொடராமல், குளத்தில் விழும் சிறு கல்லென ஒரு நிகழ்வைச் சொல்லிவிட்டு அதன் பின்பாக பாத்திரங்களின் மனதில் எழும் எண்ண அலைகளையே பின்தொடர்கின்றன. தன்னிலையில் கதை சொல்லும் உத்தியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெளனிக்கு நட்சத்திரங்களை மிகவும் பிடிக்கும் போல. நட்சத்திரங்களைப் பற்றிய சிலாகிப்பும் தவறாமல் எல்லா கதைகளிலும் இடம்பெறுகிறது.

இந்தக் கதைகள் ஏறக்குறைய 50 லிருந்து 70 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை. அந்த மொழிநடைதான் கொஞ்சம் அசெளகரியப்படுத்துகிறது. அதே போன்று எல்லா வரிகளுக்கும் அர்த்தம் காணமுயல்வதும் தலைச்சுற்றலையே கொடுக்கும். ஒரு சில பத்திகள், உண்மையிலேயே மனம் பிறழ்ந்த நிலையில் எழுதப்பட்டவையோ என்ற மயக்கம் தருகின்றன. ஆனால் உண்மையில், கடைசியில் அவை ஏற்படுத்தும் பிம்பமே அந்தப் பாத்திரத்திற்கு உயிரளிக்கிறது. இந்த வகையில், சில கதைகளைப் படித்து முடிப்பதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.

அழியாச்சுடர், பிரபஞ்சகானம் போன்ற கதைகளைப் படித்து முடிக்கையில் சொல்லவொணாத வெறுமை வந்து அப்பிக்கொள்கிறது மனதில். படித்து முடித்த சிலமணி நேரங்களுக்கு யாருடனும் பேசப் பிடிக்காத வெறுமை அது.

மிக அவசியப்பட்டாலொழிய நாயகனுக்கோ, நாயகிக்கோ பெயர்கள் இடப்படவில்லை. எல்லா கதைகளிலும் 'நானு'ம் 'அவளு'ம் உண்டு. சிலவற்றில் 'அவனு'ம் உண்டு. அவ்வளவுதான். இந்த மூன்று திசைகளில் எத்தனை சாத்தியங்களென்று இக்கதைகளில் பாருங்கள்.

காதலை ஏன் இந்த மனிதர் இப்படிக் கொண்டாடுகிறார் என்று சிற்சில இடங்களில் சலிப்பைத் தரலாம். ஆனாலும் தவறவிடக்கூடாத வாசிப்பனுபவம் தருபவை இந்தக் கதைகள். சில கதைகளுக்கு நிச்சயம் ஒருமுறை போதாது. குறைந்தபட்சம் இருமுறையாவது அவசியமாகிறது. திரும்ப திரும்ப மீள் வாசிப்பில், புதியதொரு பிம்பம் கொண்டு நம்மை வியப்பிலாழ்த்துகின்றன இந்தக் கதைகள்.

பெரும்பாலும் 'மணிக்கொடி' இதழிலும் சிலவை, 'சிவாஜி','கிராம ஊழியன்', 'தினமணி தீபாவளி மலர்-1937' போன்றவற்றிலும் வெளியானவை. மெளனி தனக்கென ஒரு மாய உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு அதற்குண்டான கதைகளாகவே அனைத்தையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருட கால இடைவெளியில் இவர் எழுதிய இரு கதைகளுக்கிடையே கூட அந்த ஒற்றுமையை தெளிவாக உணரமுடியும்.

எனக்குத் தெரிந்த வரையில் 'அத்துவான வெளி' மட்டும் இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.
http://dystocia.weblogs.us/archives/84

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்கத்தொடங்குங்கள். ஏமாற்றத்தின் அழகியல் காட்டும் மாயக்கண்ணாடி உங்களுக்காக காத்திருக்கிறது மெளனியின் கதைகளில்.

மெளனியும் நானும்
-----------------------------
நான் முதன்முதலில் மெளனியைப் பற்றி அறிந்து கொண்டது கல்லூரி காலத்தில் ஆ.வி யில் வந்த எஸ்ராவின் ஒரு கட்டுரை மூலம்தான். பெயர் நினைவிலில்லை. ஆனால், மெளனியைப் பற்றி அவர் கொடுத்திரு்ந்த அறிமுகமே ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. 24 கதைகள் மட்டுமே எழுதிய ஒருவர் 'சிறுகதைகளின் திருமூலர்' என்று போற்றப்படுகிறார் என்றால் அவர் கதைகள் எப்படி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அதன் பின் மெளனியைப் பற்றித் தேடித் தேடி வாசிக்கத்தொடங்கினேன். மேலும் மேலும் மெளனியைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததே தவிர அவரின் தொகுப்பைப் பற்றியோ கிடைக்குமிடம் பற்றியோ எங்கும் தகவலில்லை.

ஏறக்குறைய 3 வருட காலம் இப்புத்தகத்தைத் தேடி அலைந்திருக்கிறேன்(றோம்). அந்த 'றோம்' க்கு சொந்தக்காரன் நண்பன் ரெஜோ. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர் என்று கடைகடையாக அலைந்திருக்கிறோம். கட்டக்கடைசியாக ரெஜோவிடமிருந்து கலர் காகிதத்தில் சுற்றப்பட்ட இன்ப அதிர்ச்சியாக என்னை வந்தடைந்தது இப்புத்தகம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். மெளனியின் பிறந்த ஊரான தஞ்சையில் எந்தவொரு புத்தகக்கடையிலும் அப்படி ஒருத்தர் இருந்தார் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

முரசு புத்தக நிலையத்தில் மட்டும்,
"மெளனி கதையெல்லாம் இப்போ யார் சார் வாங்கறாங்க.. எல்லாம் பதிப்பிலிருந்தே போயிடுச்சு சார்.. வேணும்னா, ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போனீங்கனா, பழைய புத்தக கடையில் தேடிப்பாருங்க" என்றார்.

என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்?

ஒரு தலைமுறையின் அடையாளமாக சொல்லப்பட்ட, சொல்லப்படும் ஒரு எழுத்தாளரைப்பற்றி அடிப்படை அறிமுகம் கூட அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லையோ?

தவறு யாருடையது?

-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

Friday, July 24, 2009

புத்தகத்துக்கு விருதுசுவாரசியமான வலைப்பூ என்ற விருதினை இந்த வலைப்பூவுக்கு வழங்கியிருக்கிறார் நண்பர் கிருஷ்ணபிரபு. அவருக்கு எங்கள் நன்றிகள்! பொதுவாகவே இந்தப் புத்தகம் வலைப்பூவுக்கு வரும் நபர்கள் குறைவு; அதுவும் பின்னூட்டமிடுபவர்கள் மிகக்குறைவு. இதைப் படித்து, அதற்கு இப்படி ஒரு விருதும் வழங்கி இருக்கும் நண்பருக்கு நன்றி தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

அன்புத்தம்பிகள் பாலா(http://beemorgan.blogspot.com/) மற்றும் ரெஜோ(http://www.rejovasan.com/) இவர்களும் என் வேண்டுகோளை ஏற்று, இந்த வலைப்பூவில் பங்களிக்க இசைந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றியைச் சொல்லிக்கொள்கிறோம். இனி, தொடர்ந்து சில நல்ல புத்தகங்களைப் பற்றிய, நல்ல அறிமுகமும், நூல்நயமும் இங்கே அரங்கேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நண்பர் கிருஷ்ணபிரபு. எங்களால் இயன்றவரை அதை நிறைவேற்றுகிறோம்.

-சேரல், ஞானசேகர்

பின்குறிப்பு : ஏற்கனவே கருப்புவெள்ளையில் விருப்பப் பட்டியலை வெளியிட்டிருப்பதால் இங்கே வெளியிடவில்லை.

Friday, July 17, 2009

39. MUD CITY

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

If you don't know how to count, you won't know if your boss is cheating you.

--------------------------------------------------------------
புத்தகம் : Mud City
மொழி : ஆங்கிலம்
ஆசிரியர் : Deborah Ellis, Toronto
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 100
பதிப்பகம் : Mehta Publishing House, Pune

--------------------------------------------------------------

'வீட்டைவிட்டுத் தொலைவில் போய் அலைந்து தொலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம்'. இப்புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தூண்டிய வரிகள். வாங்கிவந்து நான்கு மணிநேரங்களில் படித்து முடித்துவிட்டேன்.

தாலிபான் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது, பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கருகில் இருக்கும் ஓர் அகதிகள் முகாம்.

பெண்கல்வியையும், பெண் வேலைகளையும் தாலிபான் தடைசெய்து இருந்தபோது, வேலையிழந்த ஒரு மருத்துவ செவிலியால் ரகசியமாக நடத்தப்படுகிறது. அதில் பணி செய்கிறாள் ஓர் இளம்பெண். இவளுடன் எப்போதும் கூடவே இருக்கும் ஒரு நாய். அவள் வயது, ஏறக்குறைய 90வது பக்கத்தில் தான் சொல்லப்படுகிறது. அகதிகளுக்கு இடையே வாழும் வாழ்க்கை பிடிக்காமல், நிறைய பணம் சம்பாதித்துவிட்டு கடல் வழியாக பாரிஸ் செல்லத் திட்டமிடுகிறாள் அவள். ஆப்கானில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த இவள், பணம் வேண்டி பெஷாவர் நகருக்குள் நுழைவதும், அங்கு அவளுக்கு நடக்கும் அனுபவங்களும் இப்புத்தகம்.

ஏதோவொரு பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட பாரிஸ் புல்வெளிகளின் ஒரு படத்துடன் இவள் எப்போதும் அலைவதும், இவளின் கேள்விகளுக்கு நாய் காட்டும் அசைவுகளும், தன்னைப் ஒரு பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத அவளின் சிறுபிள்ளைத்தனமும் கதைக்கு அழகு. ஒரு நல்ல வேலை கிடைக்க அவள் படும் அவஸ்தைகளும், எறும்பு சேரும் அளவிற்கு உணவு சேர்த்துவைக்கும் நிகழ்வுகளும் அருமையான விவரிப்புகள்.

எளிமை. ஆழம். தரம். படிக்கலாம்.

கொசுறு:

1. கராச்சி (Karachi) என்றால், தள்ளுவண்டிக்கடை என்று அர்த்தமுண்டாம்.

2. சோவியத்துடன் நடந்த போரில் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகள்; ஆப்கானுக்கு வெளியே பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.தாலிபானுக்கு, இப்படியும் ஒரு விளக்கம் தருகிறார் ஆசிரியர்.

3. ஆன்லைனில் வாங்க http://www.mehtapublishinghouse.com/

4. இப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு தளம் http://www.streetkids.org/

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/

Sunday, July 12, 2009

38. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

-------------------------------------------------------------
புத்தகம் : பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ180

-------------------------------------------------------------
நம் பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு நாள் அலுவல்களை ஓய்வான ஒரு நாளில் அவதானித்திருப்போமா? பெருங்கோபம் கொண்டு பின் அடங்கிப்போய்விடுகிற மனைவி அல்லது அம்மாவின் எண்ணங்களின் வீச்சுகளை எப்போதேனும் அளந்திருப்போமா? தெருவில் கடந்துபோய்விடுகிற யாரோ ஒருவரின் மனதில் எழும் நம்மைப் பற்றிய கேள்விகளை அனுமானித்திருப்போமா? பதில்கள் தீர்ந்துபோன தேர்வறையில் பால்யத்தில் சண்டையிட்ட நண்பனின் நினைவு ஏன் வருகிறதென்று யோசித்திருப்போமா? கால்களை இடுக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தில் படுத்துறங்கும் பிச்சைக்காரனின் சொந்த ஊருக்குப் போகும் பேருந்து எத்தனை மணிக்குப் புறப்படும் என்று அறிந்திருப்போமா?

இந்தக் கேள்விகள் எதையும் எஸ்ரா இந்தப் புத்தகத்தில் எழுப்பவில்லை. ஆனால், படித்துக்கொண்டிருக்கும்போது நம் மனதில் இவை எழும். இவைகளையொத்த பல கேள்விகளை அடுக்கி வைத்திருக்கிறார் கதைகளெங்கும்.

'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'

கதைகளைப் பற்றிய எஸ்ராவின் வார்த்தைகள் இவை. எஸ்ரா ஆடுகிற புதிர் விளையாட்டுகளும், அவர் பின் தொடர்ந்து செல்லும் பாத்திரங்களும் நம்மை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்த வல்லனவாக இருக்கின்றன. நகரத்தில் கரையொதுங்கிப் பிழைக்கும் மனிதர்களையும், புலம்பெயரும் திராணியற்று கிராமங்களில் உழலும் மனிதர்களையும் நுண்ணிய கண்கள் கொண்டு பின்தொடர்கின்றன இவரின் எழுத்துகள்.மிகச்சாதாரணமாக கடந்து போய், மறந்து போகக்கூடிய கணங்களை வருஷங்களென வாழ்ந்து பார்க்கிறார் இவர். நிகழ்வுகள் நாட்குறிப்புகளை நிரப்பும் வெறும் செய்திகள் என்றில்லாமல் அதில் இருக்கும் அழகியலையும், அற்புதங்களையும், துன்பியலையும் அருமையாக சிலாகிக்கிறார்.

ஆழ்மனத்தின் வக்கிரங்களை, சுயபச்சாதாபங்களை, ஒருவித கிண்டலுடன் சொல்லும் பாணி இந்தக் கதைகளெங்கும் விரவியிருக்கிறது.

இந்தக் கதைகள், வெக்கை படிந்த வீதிகளில் நம்மை வழிநடத்திச் செல்கின்றன. வீடுகளின் உள் புகுந்து, வாசல் கடந்து, படுக்கையறை நுழைந்து, சமையலறை பார்த்து வெளியேறுகின்றன. சிரிக்கும் குழந்தைகளைக் கை பிடித்து நடை பழகுகின்றன. இருட்டறைகளில் விளக்கடித்து ஒளிபரப்புகின்றன. அலுவலக நேரத்தில் பேருந்து பிடித்து ஊர் சுற்றுகின்றன. இரவுகளில் தொலைத்த கனவுகளைத் தேட நம்மைத் துணைக்கழைத்துப் போகின்றன.

இச்சிறுகதைகள் அனைத்தும் சமீப காலங்களில் எஸ்ரா எழுதியிருப்பவை. எஸ்ராவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது இன்னுமொரு வித்தியாசமான வாசிப்பானுபவமாக இருக்கும். நாம் அதிகம் அறிந்த, அறிந்திராத பல்வேறு தளங்களில் இயங்குகின்றன இந்தக் கதைகள்.

'சௌந்தரவல்லியின் மீசை' என்றொரு சிறுகதை. ஏழாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு மீசை முளைக்கிறது. அவளின் மன ஓட்டங்களையும், அது சார்ந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது இச்சிறுகதை. ஒரு விடலைப்பெண்ணின் உடலளவிலும், மனதளவிலும் நிகழும் மாற்றங்களைச் சொல்கிறது.

ஒரு தாய்க்கும், மகளுக்குமான அந்தரங்கத்தை ஆராய்கிறது 'ஆண்கள் தெருவில் ஒரு வீடு' சிறுகதை. தன்னைத்தானே விற்றுக்கொள்ள விளம்பரம் செய்யும் ஒரு மனிதனைப் பின் தொடர்கிறது 'நம்மில் ஒருவன்'. இன்னும் சில சிறுகதைகளின் தலைப்புகளே நம்மைக் கட்டிபோட்டுவிடுகின்றன. என்னை மிகக்கவர்ந்த சிறுகதைகளின் பெயர்களை மட்டும் இங்கே தருகிறேன். அதை மீறிய எந்த ஒரு செய்தியும் படிப்பதின் மீதொரு சலிப்பை உங்களுக்கு ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, எல்லா நாட்களையும் போல, புத்தன் இறங்காத குளம், இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன, அப்பா புகைக்கிறார், விசித்ரி, ஆகிய சிறுகதைகள் நான் சொன்ன அந்தப் பட்டியலில் அடங்குகின்றன. சொல்லாதவையும் சிறந்தவையே.

இச்சிறுகதைத் தொகுப்பில் பெண்ணியம் பேசும் கதைகள் அதிகமாய் இருப்பதை உணர முடிகிறது. மழைக்காலத்தில் நமக்கும் தெரியாமல் நம் வீடுகளில் அடைக்கலமாகும் பூச்சிகளைப் போல எல்லாக் கதைகளிலும் தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன பெண்ணியச்சிந்தனைகள். ஒதுக்கப்பட்டவர்கள், தவிர்க்கப்பட்டவர்களின் மன ஓலத்தை மொழிபெயர்ப்பதாகவும் சில கதைகள் அமைந்திருக்கின்றன.

'சௌந்தரவல்லியின் மீசை' சிறுகதையைப் படித்துவிட்டு, ஒரு பகல் முழுவதும் அமைதி கொள்ளாமல் திரிந்தேன். நான்கு நண்பர்களிடம் அலைபேசியிலும், நேரிலும் இக்கதையைப் பற்றிச் சிலாகித்த பிறகே கொஞ்சம் அமைதி கிடைத்தது. படித்து முடித்து வெகு நாட்களுக்குப் பிறகும் நம்மை அமைதியிழக்கச்செய்யும் வலு கொண்ட இன்னுமொரு சிறுகதை இது.

எஸ்ராவின் கதைகள் எந்த மாய உலகுக்குள்ளும் நம்மை இட்டுச் செல்வதில்லை. நாம் வாழும் உலகின் மாயங்களையும், மாயைகளையும் சொல்கின்றன. கவனமின்றித் தொலைந்துபோகும் விஷயங்களை ஊடறுத்து கண் முன் வைக்கின்றன. வாழ்க்கை மீதான பார்வையையும், சிறுகதைகள் குறித்தான பார்வையையும் இன்னும் தெளிவு படுத்துவதாக அமைந்திருக்கின்றன இச்சிறுகதைகள்.

-சேரல்