விமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
----------------------------------------------------------
புத்தகம்: In the line of fire
ஆசிரியர்: Pervez Musharraf
விலை: ரூ.950/-
வெளியிட்டோர்: Free Press
வெளியிட்டவர்: Kofi Annan
----------------------------------------------------------
நான் 'Company of women' படித்தபோதுகூட அட்டையை மறைத்துப் படித்ததில்லை. ஆனால், இப்புத்தகத்தை..... புத்தகம் வாங்கினது முதலே, என்னைச் சிலபேர் ஒருமாதிரி பார்த்தார்கள். எனவே, இப்பதிவை இட்டதற்காக சேரலாதனிடம் முகம் சுழிக்காதவர்களும், வரலாறு - இலக்கியம் - அரசியல் போன்ற வார்த்தைகளுக்கு முகம் சுழிக்காதவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.
பொதுவாகவே நான் சுயசரிதங்கள் படிப்பதில்லை. ஒரு மூத்த தமிழ் அரசியல்வாதி சொன்னதுபோல், என்னைப் பொருத்தவரை, "சுயசரிதம் என்பது தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு". இதற்கு எந்தச் சுயசரிதமும் விதிவிலக்கில்லை. இருந்தாலும் நான் படித்த நான்காவது சரிதம் இது. நான் படித்த சரிதங்களில் தற்புகழ்ச்சி கொஞ்சம் குறைவாக இருந்த புத்தகமும் இதுதான்.
ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. டெல்லியில் பிறந்து, Train to Pakistan வழியாக கராச்சியில் குடியேறி, நாட்டின் தலைமகனாக உயர்ந்த ஒரு சாதாரண மனிதன். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்சியாளர். ஆசிரியர், இராணுவத்தில் பணிபுரிந்து இருந்ததினாலும், ஒன்பது முறை கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து இருத்ததினாலும்தான், இப்புத்தகத்திற்கு இப்பெயர் என நான் நினைக்கிறேன்.
சுயசரிதங்கள், வம்சாவழியின் பெருமைகளுடன் ஆரம்பிக்கும் என்பதற்கு இப்புத்தகம் விதிவிலக்கு. தனது நான்கு வயதில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயரும் குடும்பங்களில் ஒருவனாக ஆரம்பிக்கிறது புத்தகம், Train to Pakistan என்று. "அப்பயணம் மேற்கொண்ட எவனும் உயிரோடு இருந்தால், அவனுக்கு என்று சொல்ல ஒரு கதை வைத்திருப்பான்" என்கிறார் ஆசிரியர். அந்நாளில் அந்த Trainல் இருந்து உயிர் தப்பித்ததாலும், பின்னாளில் ஒரு Planeல் இருந்து உயிர் தப்பித்தாலும், அவர் சொல்வதற்காக வைத்திருக்கும் ஒரு (தொடர்)கதைதான் இப்புத்தகம்.
ஆறு பகுதிகள் கொண்ட இப்புத்தகத்தில், முதல் பகுதி இளமைப் பருவம்; Train to Pakistan முதல் இராணுவத்தில் சேருவதுவரை. தன் பாட்டியின் பர்தா வழியாக, தனது முதல் காதலிக்குத் தூது அனுப்பியது; ஜனாதிபதி ஆன பின்பு, தன்னைச் சிறு வயதில் அடித்த பாதிரியாரிடம், "ஜனாதிபதி seatல அடிகிறோம்னு அப்போதைக்கு ஒங்களுக்குத் தெரியலையா Father?" என ஒரு பழைய நண்பன் கேட்டது; இதுபோன்று சீராகப் போகிறது இப்பாகம். ஆனால், இவருடைய மாமா, சிறந்த நகைச்சுவையாளர் என்பதற்காக, அவர் செய்த ஒரு காரியத்தைச் சொன்னார். அது வேறு ஒன்றுமில்லை, பொல்லாதவன் படத்தில், ரஜினியிடம் முதல் சந்திப்பில் ப்ரியா செய்யும் காமெடி. யாரு யாருகிட்ட சுட்டாங்கன்னு யாருக்குத்தான் தெரியும்?
கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே பனிசரிவு நிகழும் மலைபிரதேசத்தில் இராணுவப் பயிற்சி, இரணுவத்தில் வகித்த பதவிகள், கார்கில் யுத்தம் - இவையெல்லாம் இரண்டாம் பாகம். ஆசிரியர் சொல்கிறார்: "இந்தியாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புதான், கார்கில் யுத்தத்திற்குக் காரணம்".
புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது, இந்த மூன்றாம் பாகம்தான். Plane to Pakistan என்று தனது இலங்கையில் இருந்து திரும்பும் பயணத்தில் ஆரம்பித்து, அது தரை இறங்க அனுமதிக்கப்படாதபோது, இந்தியாவில் (மும்பை) தரை இறங்குவதைவிட சாவதே மேல் என கடைசியில் பாகிஸ்தானில் தரையிறங்கி, நவாப் செரீபை விரட்டிவிட்டு ஆட்சிபிடித்த முக்கிய நிகழ்ச்சிகள் இப்பாகத்தில்தான் வருகின்றன. ஆசிரியரே சொல்கிறார்: "இராணுவத்தில் அதிஉயர் பதவியில் இருக்கிறேன். இனிமேல் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என நினைத்து இருந்தேன். ஆனால், இனிமேல்தான் வாழ்க்கையே..".
Never democratic, often autocratic, usually plutocratic and lately kleptocratic ஆய் இருந்த பாகிஸ்தானைத் தனது ஆட்சிக்காலத்தில் எப்படி மாற்றிவருகிறார் என்பதே நான்காம் பாகம். பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை இப்பாகத்தில் விளக்கி இருக்கிறார். இப்பாகத்தின் பாதியில் இழந்த சுவாரஸ்யம் கடைசி பாகம்வரை தொடர்கிறது. ஐந்தாம் பாகத்தில் பயங்கரவாதம் பற்றி விளக்குகிறார். செப்டம்பர் 11, ஒசாமா பின் லேடன், முல்லா ஓமர், Daniel Pearl, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வைத்த எழுதப்படாத 7 கோரிக்கைகள் என பல கதைகள். கடைசி பாகத்தில் பாகிஸ்தானைப் பற்றிப் பொதுவான கருத்துகளைக் கூறியுள்ளார். 2005 நிலநடுக்கம் இதில்தான் விளக்கப்பட்டு இருக்கிறது. புத்தகத்தின் ஆரம்பத்தில், அவர் மீது நடத்தப்பட்ட 9 கொலை முயற்சிகளையும் விளக்கியுள்ளார்.
புத்தகம் முழுவதும் தன்னைவிட, தனது நாட்டை அதிகம் புகழ்ந்திருக்கும் ஆசிரியரைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும். பாகிஸ்தான் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் தவறான கருத்துகளுக்கு என்றே, தனியாக ஒரு பெரிய விளக்கமும் கொடுத்திருக்கிறார். தனது பக்கத்து எதிரியான இந்தியாவையும் அவர் கிண்டல் செய்யத் தவறவில்லை. சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமருக்குக் கைகுலுக்கியது ஓர் உதாரணம்.
புத்தகத்தின் இரண்டாம் பாதி முழுவதும் தற்புகழ்ச்சி அதிகம் இருந்தாலும், அவர் ஆட்சியில் அமரும்வரை உள்ள முதல் பாதி கண்டிப்பாக வரலாறுவிரும்பிகள் படிக்கலாம்.
கொசுறு 1: அமெரிக்க அதிபரைக் கொலை செய்ய நடக்கும் முயற்சிகளைப் பற்றி, In the line of fire என்ற ஓர் ஆங்கிலப் படம் உள்ளது.
கொசுறு 2: இப்புத்தகத்தின் முதல் பதிப்பில் சிலபல எழுத்துப் பிழைகள். (eg: Manmoham Singh). உடனடியாக அவை திருத்தப்பட்டு, மறுபதிவு வெளிவந்தது.
கொசுறு 3: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும், அதற்காக பாகிஸ்தான், CIA விடம் இருந்து கணிசமான தொகையைப் பெற்றது எனவும் ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார். இதைச் சொல்லும் பத்திதான், புத்தகத்தின் பின்புற அட்டையை அலங்கரிக்கிறது. ஆனால், இது தவறான கருத்து என்று ஆசிரியர் பின்னர் வருத்தம் தெரிவித்தார்.
Pervez Musharraf says, "History judges leaders by results". History says, "Judge by results is injustice".
-ஞானசேகர்