Monday, October 22, 2012

97. S M S எம்டன் 22-09-1914


'இதோ பார் கண்ணா... இதுதான் சமுத்திரமாம்... இங்குதான் எம்டன் வந்தானாம்... பிரிட்டிஷ்காரன் மேல குண்டு போட்டானாம். அவன் மறுபடி வரதுக்குள்ள சோறு சாப்பிட்டுடுவியாம்... செல்லம்...'
- சுத‌ந்திர‌ப் போராட்ட‌க் கால‌ க‌ருத்துச் சித்திர‌ம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : S M S எம்டன் 22-09-1914 (வரலாற்றுப் புதினம்)
ஆசிரிய‌ர் : திவாகர்
வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : 2008
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 374 (தோராயமாக 37 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை 'சூரியன் மறையாத நாடு' என்று பெருமை பிரிட்டனுக்கு உண்டு. அந்த அளவிற்கு அது தனது காலனிகளை உலகம் முழுவதும் பரப்பி வைத்திருந்தது. இன்றைக்கு இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பைத் தங்கள் காலனிகளின் ராணி என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள். பிரிட்டிஷாரின் ஏரி என்று சொல்லப்படும் அளவிற்கு இந்தியப் பெருங்கடலில் அவர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. அந்த அளவிற்குக் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது இரண்டாம் உலக‌ப் போர் காலத்தில் ஜப்பான் குண்டு வீசப் போவதாக மக்களிடையே வதந்தி பரவியதை மதராசபட்டணம் அந்தநாள் போன்ற திரைப்படங்களில் பார்த்திருப்பீங்கள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே அப்படி ஒன்று மெட்ராஸ் மாநகரில் நடந்திருந்தது. முதல் உலகப் போர் ஆரம்பித்து சில நாட்களில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த மெட்ராஸ் மாநகரின் மீது ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்று குண்டுமழை பொழிந்தது. சூரியன் மறையாத நாட்டின் ஏரியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் கண்ணாமூச்சி காட்டிய அக்கப்பலின் பெயர் எம்டன்; SMS எம்டன்.

SMS என்றால் ஜெர்மானிய மொழியில் Seiner Majestat Schiff என்றும் ஆங்கிலத்தில் His Majestic Ship என்றும் பொருள். கிழக்கின் அன்னம் என்ற புனைப்பெயரும் உண்டு. கிழக்குக் கடலில் அறுபதிற்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் வேவுக் கப்பல்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிவிட்டு, 1914ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி இரவு 9:20 மணி முதல் 9:30 வரை, பத்தே நிமிடங்கள், கடற்கரையில் இருந்து ஒண்ணரை மைல் தொலைவில் இருந்து மெட்ராஸ் நோக்கிக் குண்டுகளை வீசியது எம்டன். 130 குண்டுகள். 5 பேர் பலி. மெட்ராஸ் துறைமுகமும் இன்றைய தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையும் இலக்குகள். சென்னை உயர்நீதிமன்ற வ‌ளாகத்தினுள் ஒரு குண்டு விழுந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருந்த செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன் படித்தபோதுதான் எம்டன் எனக்கு அறிமுகம் ஆனது. அந்த நினைவுத்தூணைக் காணவில்லை என்ற செய்தியை இந்த ஆண்டு படித்தேன்.

இரவில் பொதுமக்கள் வீதியில் நடமாட வேண்டாம். வீட்டுக்குள்ளே எரியும் விளக்கின் ஒளி வெளியே தெரியக் கூடாது. எம்டனுக்குப் பயப்பட வேண்டாம். இப்படி அரசாங்கம் ஒலிப்பெருக்கியில் மெட்ராஸ் தெருக்களில் கத்தியது. மக்கள் கூட்டம் கூட்டமாக மெட்ராஸை விட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். விதவிதமான வதந்திகள். புதுச்சேரி அருகே எம்டனைப் பார்த்து டாட்டா சொன்னதாக சிலர் கூறினர். கல்கத்தா கிளப் ஒன்று பிரிட்டிஷாரைத் திணற வைத்த எம்டனின் வீரதீர செயல்களைப் பாராட்டி அதன் கேப்டனுக்குக் கௌரவ உறுப்பினர் பட்டம் கொடுக்க முன்வந்தது. அன்று எம்டனால் மெட்ராஸைச் சுலபமாக அழித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பின்வாங்கிப் போய்விட்டது. அதற்குச் சரியான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. அக்கப்பலில் ச‌ண்பகராமன் என்ற ஒரு டாக்டர் பணிபுரிந்ததாகவும் பின்னாளில் ஒரு வதந்தி பரவியிருக்கிறது. அதை ஜெர்மன் மறுத்துவிட்டது. இந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு திவாகர் அவர்கள் எழுதி இருக்கும் வரலாற்றுப் புதினம்தான் S M S எம்டன் 22-09-1914.சண்பகராமனுக்கு ஆசிரியர் தனது புதினத்தில் வைத்திருக்கும் பெயர் சிதம்பரம். மெட்ராஸ் மாநகர டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அருகில் மயிலாபுரியில் (மயிலாப்பூர்) சிதம்பரம் வீடு. எம்டனுக்குள் மிக்க மரியாதையுடன் அழைத்து வரப்பட்ட வெளியாள் என்ற பெருமையுடன் எம்டனில் மாட்டிக் கொள்ள, மெட்ராஸ் மீது குண்டு போடாமல் புதினத்தின் 51வது பக்கத்திலேயே தடுத்து விடுகிறார். எந்த ஒரு மர்மத்தைப் புதினத்தின் பின்னட்டை சொன்னதோ, அந்த மர்மம் அத்தோடு முடிகிறது. இனிமேல் படிக்க என்ன இருக்கிறது என மூடி வைக்க நினைக்கும் வாசக‌னுக்கு அடுத்தடுத்து பல மர்மங்களைக் கொடுத்து திறந்தே வைத்திருக்கப் பணிக்கும் புதினம் இது.

புதினத்தின் கதைகளை மூன்றாகப் பிரிக்கலாம். கடலோடும் எம்டனுக்குள் நடக்கும் கதை ஒன்று. அதில் மாட்டிக் கொண்ட சிதம்பரத்தைக் காப்பாற்ற போராடும் குடும்பம், மாட்டிவிட போராடும் சிலபேர் என கரையில் நடக்கும் கதை இரண்டு. கதை மாந்தர்கள் டைரியில் இருந்தும் ஓலைச் சுவடிகளில் இருந்து வாசிக்கும் இராஜராஜ சோழன் பற்றிய கதை மூன்று. மெட்ராஸ் குண்டு வீச்சு முதல் 50 நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியக் கப்பலொன்றால் மூழ்கடிக்கப்படுவது வரை பயணிக்கிறது, எம்டன் சம்மந்தப்பட்ட முதல் கதை. பிரிட்டனின் பெருங்கடற்படையை உலக மக்களிடையே கேலி பேச வைத்த‌ எம்டன் சென்ற பாதையில் நம்மையும் கூட்டிப் போகிறது புதினம். எம்டனின் கேப்டன், துணைக் கேப்டன், சீன உதவியாள், அடிபட்டுக் கிடக்கும் டாக்டர் என்ற உண்மைப் பாத்திரங்களுக்கு இடையே நுழைந்து, எம்டனின் திசையைத் தன் புத்திசாலித்தனத்தால் தனக்குச் சாதகமாகத் தீர்மானிக்கும்படி சிதம்பரம் பாத்திரத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

இந்திய நிலக்கரியின் தரம் குறைவு. எம்டனில் 3 புகைப்போக்கிகள். செப்டம்பர் 20ம் தேதி புரட்டாசி (மகாளய) அமாவாசை; 22ம் தேதி மெட்ராஸ் டி ஐ சி லாங்டன் பிறந்தநாள். வைசிராயின் வளர்ப்பு மகள் உயரம் தாண்டுதல் வீராங்கனை. இவை போன்ற சின்னச் சின்ன தகவல்களைக் கதையை நகர்த்தப் பயன்படுத்தி இருப்பது அருமை. புத்தகத்தின் ஆரம்பம் முதல் எம்டன் மூழ்கடிக்கப்பட்ட பின் மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் சிறப்பு விருந்து முடியும் வரை புத்தகத்துடனேயே வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு எம்டனைச் சுற்றி பல முடிச்சுகளைப் பின்னியிருப்பதும் அருமை. அதற்காக பல சரித்திர விசயங்களைத் தேடிப் போய் திரட்டி இருக்கும் ஆசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நான் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததில்லை. எம்டன் புதினத்தில் இராஜராஜ சோழன் பற்றிய மூன்றாம் கதை ஆரம்பிக்கும் போது அவர் எப்படி இறந்திருப்பார் என்ற மர்மத்தை நோக்கியே புதினம் நகரும். எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தால், அவர் அரியணை ஏறியவுடன் கல்கி முடித்து விட்டதாக‌ சொன்னார்கள். பொன்னியின் செல்வன் புத்தகத்தை இராஜராஜ சோழனோடு முழுக்க சம்மந்தப் படுத்துவது போல் என் புத்தியில் எப்படி பதிந்தது என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன், அவரின் மகன் இராஜேந்திரச் சோழன், பேத்தி அங்கம்மா என்று ஒவ்வொரு தலைமுறையாக மர்மங்களுடன் பயணிக்கிறது புதினம்.

புத்தகம் முடித்தபின் எனக்குச் சில சந்தேகங்கள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
1. எம்டனில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நோபிள் என்ற பெண், உண்மையிலேயே வைசிராய் ஹார்டிங்கின் வளர்ப்பு மகளா, இல்லை ஆசிரியரின் புனைவுப் பாத்திரமா?
2. ஒரு சண்டையில் எந்திரத் துப்பாக்கி உபயோகப் படுத்துவார்கள். AK47? அது முதல் உலகப் போர் சமயத்தில் உபயோகத்தில் இருந்ததா?
3. சண்பகராமன் என்றொருவர் எம்டனில் இருந்திருக்கவில்லை என்கிறது புத்தக முன்னுரை. சென்னை கிண்டியில் காந்தி மண்டப வாளகத்தில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சண்பகராமனுக்குச் சிலை இருப்பதாகப் படித்தேன். வேறெந்த தகவலும் இப்போது என்னிடம் இல்லை.

இந்தியா எதுவென்றே ஒரு தெளிவான புரிதல் இருந்திராத‌ காலத்தில் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் என்ற சக்தியால் தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது போல சித்தரிக்கும் பகுதிகளும், சிவபெருமான் யோகா அரசக்குடும்பம் போன்ற விசயங்களை அளவுக்கதிகமாகக் கொண்டாடும் பகுதிகளும் எனக்குப் பிடிக்கவில்லை. எம்டனை எடுத்துவிட்டால் ஓர் ஆன்மீகப் புத்தகம் போன்ற பிரம்மை இருந்தது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் படிக்கும் போது இப்படி தோன்றாமல் இருக்கும்படி, புத்தகம் சுவாரசியமாக இருந்ததில் மகிழ்ச்சி.

ஒரு நல்ல காரியத்தைச் செய்த ஒரு நல்ல நாளில் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என முடிவு செய்து வாங்கிய புத்தகமிது. நான் சென்னை வந்து 4 மாதங்கள் தான் ஆகின்றன. அடிக்கடி மெரீனா போய் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்போது மிதந்து போகும் கப்பல்கள் எல்லாம் எம்டன் போலவே தெரிகின்றன. திடீரென வானத்தில் இருந்து மினிக்கிக் கொண்டு கலங்கரை விளக்கம் மேல் பறந்து போகும் விமானங்கள் எல்லாம் குண்டுகள் போல் தெரிகின்றன. இரகசியங்களை எனக்குச் சொல்லாமல் அலைகள் கேலியாகச் சிரிக்கின்றன.

சென்னை கடற்கரை மேல் எனக்கிருக்கும் பிடிப்பு இன்னும் அதிகமாகும்படி ஒரு நல்ல வரலாற்றுப் புதினத்தைத் தந்தமைக்கு ஆசிரியருக்கு டோய்ச் மொழியில் 'டங்கே'.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

96. சோளகர் தொட்டி

Power tends to corrupt and absolute power corrupts absolutely.
- Lord Acton

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சோளகர் தொட்டி
ஆசிரிய‌ர் : ச‌.பாலமுருகன்
வெளியீடு : எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/)
முதற்பதிப்பு : டிசம்பர் 2010 (முதல் 5 பதிப்புகள் வனம் வெளியீடு (2004-2006); 6ம் பதிப்பு விடியல்)
விலை :  120 ரூபாய்
பக்கங்கள் : 240 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------

சோளகர் என்றும் சோளவர் என்றும் அழைக்கப்படும் மலையின மக்கள் தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் உள்ள கர்நாடக எல்லை ஓரத்தில் அதிகம் வாழ்கின்றனர். வேட்டையாடுவதற்கு ஏற்ற அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் இவர்தம் கூரைக் குடிசைக் குடியிருப்புகள் உள்ளன. காட்டு இலாகாவினரின் கட்டுப்பாடுகள் இவர்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலுக்கு இப்போது வாய்ப்பளிக்கவில்லை. காட்டு மரங்களை வெட்டுவதற்கும் தேன் எடுப்பதற்கும் வனத்திற்குள் வழி காட்டுவதற்கும் காட்டு இலாகாவினர் சோளகர்களை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றனர். சோளகர்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் லிங்காயத்தார் எனச் சொல்லும் ஒருவகை மலையின மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகின்றன. இவர்களின் தொழில்களுக்கு லிங்காயத்தார்களே வாய்ப்பளிக்கும் வசதி உள்ளவர்களாக இருப்பதால் பெரும்பாலும் சோளகர்களின் குடியிருப்புகள் இவ்வாறு அமைகின்றன. சொந்தமாக விளைநிலங்களோ உழவு மாடுகளோ இல்லாத சோளகர்கள் கூலி விவசாயிகளாக லிங்காயத்தாரிடம் வேலை செய்கின்றனர்.

பெங்களூர் பகுதிகளில் இருந்து ஒரு காலத்தில் போருக்குப் பயந்து ஓடி வந்தவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் லிங்காயத்தார்கள், வேறு இனத்தாரைத் தங்கள் வீடுகளில் அனுமதிப்பதில்லை; வெளியிடங்களுக்குப் போகும்போது வேறெங்கும் தண்ணீர்கூட வாங்கிக் குடிப்பதில்லை. சைவ உணவு உண்ணும் லிங்காயத்தார்கள், அசைவ உணவு உண்ணும் சோளகர்களைத் தீண்டத் தகாதவர்களாகவே நடத்துகின்றனர். லிங்காயத்தார்களின் கால்நடைகள் நோய்வாய்ப் ப‌ட்டாலோ, இறந்து பட்டாலோ அவற்றைச் சோளகர்கள் எடுத்துச் செல்கிறார்கள். 1994ல் நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடான டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்ட 'தமிழ‌க மலையின மக்கள்' என்ற புத்தகம் சோளகர்களைப் பற்றி சொல்லும் சில குறிப்புகள் இவை.
 

ச.பாலமுருகன் அவர்களின் சோளகர் தொட்டி. சோளகர்களின் வசிப்பிடத்திற்குத் தொட்டி என்று பொருள். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் வன எல்லையில் இருக்கும் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட குடிசைகளைக் கொண்ட ஒரு சோளகர் தொட்டிதான் பாலமுருகன் அவர்களின் களம். மொத்த புதினத்தைச் சரிபாதியாக பிரித்து இரண்டு பாக‌ங்களில் கதை சொல்கிறார். அறுவடைக்குப் பின் காய வைத்து எடுக்கப்பட்ட ராகி தானியக் கதிர்கள் வாசனையை நுகர்ந்து தொட்டிக்குள் நுழையும் பெரிய கொம்பன் யானையை விரட்டுவதற்காக அந்த இரவில் தூக்கம் தொலைக்கும் சோளகர்களை அறிமுகப்படுத்தி ஆரம்பமாகிறது புதினம். தலைவனை விட்டுக் கொடுக்காத கூட்டு வாழ்க்கை, திருமண முறை, வழிபாட்டு முறைகள் என விரிகின்றது புதினம். பூர்வீகத் தொழிலான வேட்டையைச் சுதந்திர நாட்டின் சட்டங்கள் தடுப்பதையும், தப்பித் தவறி மாட்டிக் கொள்பவர்கள் காவல் துறையிடமும் உயர் சாதியிடமும் அப்பாவித்தனமாக ஏமாற்றப் படுவதையும், ஒரு குடும்பம் பட்ட கடனை மொத்த தொட்டியும் ஏற்றுக் கொண்டு உழைப்பதையும் பதிவு செய்கிறார்.

பீனாச்சியின் நாதம், தப்பையின் தாளம், பாட்டுப் பாடிக் கொண்டே இரவு முழுதும் கண் விழித்து விலங்குகளை விரட்டுகிறார்கள். கொத்தல்லி கோல்காரன் பட்டக்காரன் என்ற தொட்டியின் முக்கியஸ்தர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். மணிராசன் கோவிலில் மூதாதையர்களின் ஆவிகளுட‌ன் பேசுகிறார்கள். சோளகர் - லிங்காயத்தார் உறவை ஒரு புராணக் கதை மூலம் விளக்குகிறார். தேனெடுத்தல் வேட்டையாடல் என்ற தங்கள் பூர்வீகத் தொழிலைத் தடை செய்யும் அரசு, அதே வேலைகளுக்காக அரசால் சோளகர்கள் பயன்படுத்தப் படுவதையும் பதிவு செய்கிறார். சோளகர் தொட்டிக்குள் நம்மையும் ஒருவராக‌ உணர வைக்கும் புதினத்தின் ஆரம்பப் பகுதிகளை வைகை எக்ஸ்ப்ரஸில் படித்தேன். அட்டைப் படத்தைப் பார்த்து முகம் சுழித்த சகபயணிகளுடன் திருச்சியில் இருந்து எழும்பூர் வருவதற்குள் 70 பக்கங்களுக்கு மேல் படித்திருந்தேன். ஆனால் புதினம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தவுடன் அவ்வளவு எளிதாகப் பக்கங்களைக் கடக்க முடியவில்லை. கடைசி 40 பக்கங்களைத் தனிமையில் படித்து முடித்த இரவில் கனத்த மனத்துடனும் தலைவலியுடனும் நான் தூங்கத் தாமதமானது.

சந்தனக்கட்டை வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக கர்நாடக அதிரடிப் படைகளும் வனத்துறைகளும் காவல்துறைகளும் பழங்குடியின மக்கள் மேல் நடத்திய வன்கொடுமைகளே ச.பாலமுருகனின் புதினக்கரு. வனத்துக்கு வெளியே மக்களைத் தலை குனிந்து வணங்கச் செய்யும் வெள்ளைக்காரத் துரைகள், வனத்திற்குள் வந்தால் சோளகனின் தோளில் சமமாகக் கை போட்டு வேட்டைக்குப் போகும் காலமும் இருந்தது. அப்படிப்பட்ட சோளகர்கள் தங்களுக்குச் சம்மந்தமே இல்லாத வீரப்பன் என்ற மனிதனுக்காக‌ வனத்துடனான தங்கள் பாரம்பரிய தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப் படுகிறார்கள். சோளகர்கள் வீரப்பனுக்கு உதவி செய்பவர்கள் என அதிரடிப் படை கேம்ப்களில் அடைக்கப்பட்டு மாதக்கணக்கில் சித்ரவதைகளுக்குப் பிறகு, ஆண்கள் பெரும்பாலும் புதுத்துணி அணிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். உடல் பசி எடுக்கும் போதெல்லாம் சோளகத்திகள் குதறப்படுகிறார்கள். பழங்குடியினருக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் வீரப்பனுக்குப் பிறந்தவை எனவும், பெண்கள் எல்லாரும் வேசிகள் எனவும் வசைக்கப் படுகிறார்கள். கணவனே தன் சொந்த மனைவியைத் தொடாமல் பயபக்தியுடன் இருக்கும் மாதேஸ்வரன் மலையில்,.....

ஒரு குடும்பம் எப்படிப்பட்டது என்பது அது தம் பெண்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது. ஒரு சமூகம் எப்படிப்பட்டது என்பது அது தம் சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில் இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் எல்லா அரசுகளும் எல்லா இடங்களிலும் சிலருக்குச் சில சமயங்களில் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கொடுக்கின்றன. அவ்வதிகார வர்க்கம் சிறுபான்மை மக்கள் மேல், குறிப்பாக பெண்கள் மேல் வன்முறை செலுத்தி அவர்கள் வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிட்டு பதக்கங்களுடனும் பரிசுகளுடனும் வாழப் போய்விடும் கொடுமையை ஆவணப்படுத்தியதில் ச.பாலமுருகன் தனித்து நிற்கிறார்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு வாச்சாத்தி வன்கொடுமைகளுக்குத் தீர்ப்பு வந்ததால் ஏதோ வாச்சாத்தி மட்டும்தான் என நினைக்க வேண்டாமென சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். கடல் தாண்டி நம் காலடியில் நடப்பதாக நாம் சொல்லும் கொடுமைகள் எல்லாம், நம் தலைக்கு மேலேயே நடப்பதைச் சான்று சொல்லும் இந்தச் சோளகர் தொட்டி கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய புதினம். முழுக்க முழுக்க பழங்குடியினர் பற்றிய புதினம் வேறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பைபிள் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும், சுத்தத் தமிழில் இருக்கும் உரையாடல்களைத் தவிர வேறேதும் குறைகளில்லை.

அனுபந்தம்:
----------
இந்த ஜீலையில் சென்னையில் நடந்த 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் (தலைவர் என நினைக்கிறேன்) அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில துளிகள்:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் அடிப்படை உரிமையான பேச்சுரிமை கூட மலைவாழ் மக்களுக்கு நிராகரிக்கப் படுகிறது. ஒரு ஃபாரெஸ்ட் ஆபிஸர் முன் அவர்கள் பேசினால், 'எங்க முன்னாடி பேசுற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சா?' என்ற பதில் கிடைக்கும்.

2. இன்று மலையில் பூர்வ குடிகள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டு, மலை மொட்டையடிக்கப் படிகிறது. அவர்கள் இருந்த இடத்தில் ரிசார்ட்டுகளும் சுற்றுலா மாளிகைளும் பணப்பயிர்த் தோட்டங்களும் இருக்கின்றன. உதகமண்டலம் குன்னூர் கொடைக்கானல் போன்ற இடங்களில் மலைவாழ் மக்களிடம் இப்போது துளி நிலம் கூட இல்லை. எல்லாம் பிடுங்கப்பட்டுவிட்டன. நீலகிரி ஏலகிரி ஏற்காடு போன்ற மலைகள் இப்போது திராவிடக் கட்சிக்காரர்களுக்குச் சொந்தம்.

3. உப்பு உடை இந்த இரண்டிற்காக மட்டுமே மலை இறங்கித் தரைக்கு வந்து கொண்டிருந்த‌ மலைவாழ் மக்கள், எல்லாவற்றிற்கும் தரையைச் சார்ந்திருக்கச் செய்யும் ஓர் அடிமை நிலையை உண்டாக்கியதுதான் சுதந்திரம் மற்றும் அறிவியலின் எச்சம்..

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)