இங்கிலாந்தில் நான் படித்தபோது என்னை ஒருவன் கேட்டான்: "Who are you?". நான் சொன்னேன்: "Khushwant". அவன் மீண்டும் கேட்டான்: "What are you?". நான் சொன்னேன்: "Khushwant, an Indian". இந்தியா வந்தபோது என்னை ஒருவன் கேட்டான்: "Tum kaun ho?". நான் சொன்னேன்: "குஷ்வந்த்". அவன் மீண்டும் கேட்டான்: "Thu kya ha?". நான் சொன்னேன்: "குஷ்வந்த் சிங்".
- குஷ்வந்த் சிங்
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : கருப்பாயி என்கிற நூர்ஜஹான் (புதினம்)
ஆசிரியர் : அன்வர் பாலசிங்கம்
வெளியீடு : கொற்றவை பதிப்பகம், காரைக்குடி
முதற்பதிப்பு : 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 98 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளை பனியன் அணிந்த சிம்ரன் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டைப் படத்தை ஒரு தமிழ் வார இதழ் வெளியிட்டதாக
வினவு தளத்தில் படித்தேன். அதன் பிறகு இலியானா இடை வெளியிடப்பட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. இப்படி இடையில் சொருகி இல்லாத இடை போல தீண்டாமையைக் காட்டும் ஊடகங்களுக்கு இடையே, இல்லாமல் இல்லை என்கிறது எதார்த்தம்.
சாதிப் பிரிவினைகளில் இருந்து, தீண்டாமையில் இருந்து தப்பிக்க இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது இந்தியாவில் ஒன்றும் அரிதான நிகழ்ச்சியல்ல. ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சியையே மாற்றி அமைக்கும் சக்தியாக மதமாற்றம் இருந்திருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன அளவில் பணம் காதல் அரசியல் காரணங்களுக்காகக் கூட நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய மதமாற்றம் ஒன்றும் நிகழ்ந்தது. 1956ல் நாக்பூர் நகரில் தனது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேருடன் புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர். நான் மராட்டிய மாநிலத்தில் பார்த்தவரை, ஊடகங்களில் கேள்விப்பட்ட வரை அவர்களின் சமூக நிலையை அந்த மதமாற்றம் கண்டிப்பாக உயர்த்தி இருக்கிறது.
இந்நிகழ்ச்சி நடந்து பல வருடங்களுக்குப் பின் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு எந்தப் பாடப் புத்தகமும் சொல்லவில்லை. ஊடகங்கள் அறிமுகப்படுத்தவும் இல்லை; ஞாபகப்படுத்தவும் இல்லை. இதே போல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இன்னொரு மதமாற்றம் நான் பிறந்ததற்குச் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில். போன வருடம்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். கிழக்குப் பதிப்பக வெளியீடான, பா.ராகவன் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தின் ஒன்பதாவது கட்டுரையில் சொல்லப்பட்ட சில விசயங்கள்:
பிப்ரவரி 19, 1981. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் மீனாட்சிபுரம். 300 தலித் குடும்பங்கள். அதில் 210 குடும்பங்கள், சுமார் 1000 பேருக்கு மேல் சட்டென்று இஸ்லாத்துக்கு மாறினார்கள். இனி நாங்கள் ஹிந்துக்கள் இல்லை. எனவே தலித்துமில்லை. முஸ்லீம்கள். மீனாட்சிபுரம் ரஹ்மத் நகர் ஆகியது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் அது. இந்த மதமாற்றச் சம்பவத்தில் வளைகுடா பணத்தின் பெரும்பங்கு இருக்கிறதென விஷ்வ ஹிந்து பரிஷத்தும், இந்து முன்னணியும் குற்றம் சாட்டின. மதம் மாறியவர்களைத் திரும்ப மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ். மீனாட்சிபுரம் புறப்பட்டது. மதம் மாறியவர்களை நேரில் சந்திக்க திராவிடர் கழகமும் போனது. பல மடங்களின் ஆதீனங்களும், அப்போதைய பாரதீய ஜனதா தலைவர் வாஜ்பாயும் கூட போனார்கள். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இந்த மதமாற்றத்தைக் கண்டித்தார். இதனால் அதிருப்தி கொண்ட சில அதிமுக உறுப்பினர்கள் கட்சியைவிட்டு விலகினர். மீனாட்சிபுரம் போல முதுகுளத்தூரும் மதம் மாறத் திட்டமிட்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தெரிந்தவுடன் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த எனது நண்பர்களிடம் விசாரித்தேன். யாருக்குமே மீனாட்சிபுரம் தெரியவில்லை. ஒருமுறை புனேயில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது திருநெல்வேலி பக்கம் போகும் வயதானவர்களிடம் மீனாட்சிபுரம் பற்றி விசாரித்தேன். உடனே என் சாதி மதம் விசாரித்தார்கள். மேற்கொண்டு பேசவில்லை.
மீனாட்சிபுரத்தில் 1960களிலேயே ஒரு முறை மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களின் சமூக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 'தாழ்த்தப்பட்டவன் கிறித்தவன் ஆனால், இன்னொரு தாழ்த்தப்பட்ட கிறித்தவர் தான் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார். ஒரு நாடார் கிறித்தவர், தாழ்த்தப்பட்ட கிறித்தவர் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் இம்முறை நாங்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தோம். தீண்டத்தகாதவன் என்ற வித்தியாசம் இல்லை பாருங்கள்' என்றார்கள்.
உண்மைதான். சாதியிடம் கிறித்தவ மதம் தோற்றுத்தான் போனது. நாட்டின் பிரதமரைக் கூட கைம்பெண் என்பதற்காக இடையில் திரை கட்டி
முகத்தைப் பார்க்காமல் பேசியது இந்து மதம். பாதிரியார் தாழ்த்தப்பட்டவர்
என்பதற்காக கடவுளைக் கூட பார்க்காமல் கோவிலில் முதுகு திரும்பி
உட்கார்ந்தது கிறித்தவ மதம்.
மினாட்சிபுரம் ரஹ்மத் நகராகி 32 ஆண்டுகள் கடந்துவிட்டன. அம்மக்களின் சமூக நிலையைக் காலம் என்ன செய்திருக்கிறது? புத்தகத்திற்குள் போகலாம்.
|
(http://www.kalachuvadu.com) |
'பாபர் மசூதியும்
முதிர்கன்னியும் ஒன்றுதான்
இடிப்பதற்குப்
பலர் இருக்கிறார்கள்
கட்டுவதற்கு யாருமேயில்லை'
என்றொரு புதுக்கவிதை உண்டு. மசூதிக்குப் போகும் ஒரு கிராமத்து முதிர்கன்னிகளின் கதையிது.
கருப்பாயி என்கிற நூர்ஜஹான். மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் என ஆரம்பிக்கிறது புதினம். திருநெல்வேலி மாவட்டத்தில் காமாட்சிபுரமாய் இருந்த பிலால் நகர் தான் புதினத்தின் கதைக்களம். 30 ஆண்டுகளுக்கு முன் காமாட்சிபுரம் என்ற கிராமம் தீண்டாமைக்கு எதிராக பிலால் நகராக மாறுகிறது. வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்குப் பதிலாக தாடி. தலையில் கட்ட முடியாத
துண்டுக்குப் பதிலாக குல்லா. மாராப்பே போட முடியாத தாழ்த்தப்பட்ட
நிலைக்குப் பதிலாக தலைமூடி முக்காடு. கருப்பசாமி காதர் பாயானார்.
கருப்பாயி நூர்ஜஹானானாள்.
பிலால் நகர் பிறந்தபோது சிறுமியாய் இருந்த நூர்ஜஹானின் தற்கொலையில் ஆரம்பித்து அவளின் தகனத்துடன் முடிகிறது புதினம். அந்த ஒரு நாளில் அம்மக்கள் இன்னும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். காமாட்சிபுரம் பிலால் நகர் மூலம்
மீனாட்சிபுரம் ரஹ்மத் நகரைச் சொல்கிறாரா ஆசிரியர்? அல்லது அவை உண்மை
ஊர்களின் பெயர்களா? ஆசிரியருக்கும் இவ்வூர்களுக்கும் சம்மந்தம் உண்டா? இது
போன்ற பல கேள்விகளுக்கு என்னால் புத்தகத்தில் விடை காண
முடியவில்லை.
எல்லா விசயங்களையும் சொல்லிவிட வேண்டிய அவசரத்தில் ஒரு புதினமாக உருப்பெறுவதில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும், புதினத்தின் சில விசயங்கள் எனக்குப் பரிட்சயம் இல்லாமல் போனாலும், காந்தி பற்றிய சில கருத்துகளில் சுத்தமாக எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எந்த ஒரு மதத்திற்கும் எதிராகவும் ஆதரவாகவும் இல்லாமல், உடனடியாகக் கவனிக்கப் படவேண்டிய ஒரு சமூகப் பிரச்சனையை ஆவணப்படுத்தும் குறிக்கோளோடு புதினத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். இப்பதிவின் குறிக்கோளும் அதுவே.
- ஞானசேகர்
(
http://jssekar.blogspot.in/)