Sunday, November 04, 2007

26. MY NAME IS RED

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------
புத்தகம்: My name is Red
ஆசிரியர்: Orhan Pamuk (நோபல் பரிசு பெற்ற ஒரே துருக்கியர்)
மொழி: துருக்கியில் இருந்து ஆங்கிலம்
நடை: நாவல்

விலை: 195 INR
பக்கங்கள்: 417
பதிப்பகம்: Vintage International
-----------------------------------------------------------
இப்புத்தகத்தை Crosswordல் பார்த்தேன். பொருளடக்கத்தில் 59 அத்தியாயங்கள் இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் I am Orhan, I am Esther, I am Shekure, I am a woman, ... என தலைப்பிடப்பட்டு இருந்தன. முதல் மூன்று அத்தியாயங்கள் படித்துப் பார்க்கலாம் என எடுத்தேன். I am a corpse என ஆரம்பித்தது. சற்று நேரத்திற்குமுன் கொல்லப்பட்ட ஒருவன், தனது கொலையாளியைப் பற்றியும், இறப்புக்குப்பின் தான் பார்ப்பவை - நினைப்பவை பற்றியும் விவரிக்கப்பட்டு இருந்தது. செத்த உடம்பு வலிக்குமா? இறப்புக்குப் பின் என்ன? சொர்க்கம் - நரகம் உண்மையா? இதுபோன்ற பல கேள்விகள் அவனுக்குள். I am called Black என்பது அடுத்த அத்தியாயம். 12 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பும் ஒருவன், தனது பழைய தெருக்களையும், காதலையும் தேடி அலைவது விவரிக்கப்பட்டு இருந்தது. I am a Dog என்பது அடுத்த தலைப்பு. நாயெல்லாம் பேசவும், புத்தகத்தை வைத்துவிடலாமா எனத் தோன்றியது. ஆனால், முதல் இரு அத்தியாயங்களில் இருந்த எழுத்துநடையால், மூன்றாம் அத்தியாயத்திற்கும் தொடர்ந்து நடைபோட்டேன். "நாயெல்லாம் பேசுவதில்லை என்று நீங்கள் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வது தெரிகிறது. பிணம் பேசும் கதையெல்லாம் கேட்கும் நீங்கள், நாய் பேசுவதைக் கேட்வதில்லை. எப்படி கவனிக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே நாய்கள் பேசுகின்றன" என்று இருந்தது. புத்தகத்தை அப்படியே மூடிவிட்டு, வாங்கிவந்துவிட்டேன்.

கதையின் காலம் - துருக்கியில் ஒட்டாமன் பேரரசு - இந்தியாவில அக்பர். இஸ்லாமிய மதத்தின் (Hagira) ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு ஒட்டாமன் பேரரசின் பெருமைகளைப் படங்களாக வரைந்து வைக்க, சுல்தான் ரகசியக் குழுவை அமைக்கிறார். அதில் இரண்டு பேர் மர்மமான முறையில் கொல்லப்படுவதும், கொலையாளியைக் கண்டுபிடிப்பதும்தான் கதை. ஏற்கனவே நான் சொன்னதுபோல், கதையின் போக்கு 59 அத்தியாயங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருவர் கதை சொல்லுவார். அவர்களில் ஒரு பிணம், மரம், நாய், தங்கக்காசு, சிவப்பு, மரணம், குதிரை, சாத்தான், பெண் இவர்களும் அடக்கம். விருமாண்டி படம்போல, முதல் ஆள் கதை சொல்லும்போது, அவர் நல்லவனுக்கு நல்லவனாகத் தெரிவதும். அடுத்த ஆள் கதை சொல்லும்போது, முதல் ஆள் பொல்லாதவனாகத் தோன்றுவது ஆசிரியரின் எழுத்துநடைக்குக் கிடைத்த வெற்றி.

ஓவியங்களும், காவியங்களும் சொல்ல முயல்வது, ஒவ்வொரு மனிதனும் மற்றவனில் இருந்து எப்படி வித்தியாசப்படுகிறான் என்பதையே - மனித ஒற்றுமைகளை அல்ல; சிறந்த ஓவியங்களை உண்டாக்குவது சிறந்த ஓவியர்கள் அல்ல - காலம்; தவறுகளே ஸ்டைலின் ஆரம்பம்; சிறந்த புகைப்படத்தில் வரைந்தவரின் கையெழுத்து தேவையில்லை; ஸ்டைலும், கையெழுத்தும் தன் தவறை மறைக்க முயலும் சுயதம்பட்டங்கள். இப்படி புத்தகம் முழுவதும் ஓவியக்கலை பரவிக்கிடக்கிறது.

கணவனைத் தொலைத்துவிட்டு வாழும் தனது சித்தப்பாவின் மகளுடனான தனது பழைய காதலைப் புதுப்பித்து, மறுமணம் செய்யத்துடிக்கும் ஒரு காதல்; மறுமணத்தால் அவளின் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை; காதலர்களுக்கு இடையே கடிதங்கள் பரிமாறும் தூது; அடிமைபெண்ணுடன் உறவு வைத்திருக்கும் தந்தையைக் கொண்ட மகள். இதுபோன்ற பல உபகதைகள்.

தனது மகனின் மூக்கும், கண்களும் தன்னைபோல் இருப்பதைப் பார்த்து, தனது கணவனின் அகன்ற நெற்றியைத் தன்னால் தன் மகனுக்குக் கடத்தமுடியாமல் போய்விட்டதே என்று ஒரு தாய் வருந்துவது போன்ற சிந்தனைகள் மிக அருமை. "சொர்க்கத்தில் உடம்பில்லா உயிரையும், பூமியில் உயிரில்லா உடம்பையும் இறைவனிடம் கேட்பேன்" என்று தனது இறுதி ஊர்வலத்தில், உயிரில்லா உடம்பு ஒன்று பேசுவது போன்ற சிந்தனைகளும் அருமை.

இடையிடையே சில அத்தியாயங்களில் கொலையாளி வந்து பேசுவதும், "என்னை மறந்துவிட்டீர்களா?" என்பதும், "நான் என்ன சொல்லப்போகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்" என்பதும் புன்முறுவலுக்கான வரிகள். கடைசி சில பக்கங்களில்தான் கொலைகாரன் வாசகனுக்குச் சொல்லப்படுகிறான். அதன்பிறகு அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளும், அவன் கதையில் இருந்து விடை பெறும் விதமும் மிக அருமை. "ஓர் உயிரைக் கொல்வது எவ்வளவு சுலமான காரியம். இறைவா, ஓவ்வோருவருக்கும் அந்த அதீத சக்தியைக் கொடுத்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்த பயத்தை வைத்தாயே" என்று கொலையாளி பேசும் வசனங்கள் அருமை.

'வில்லோடு வா நிலவே' புத்தகம் படித்தபோது, புத்தகம் முழுவதும் பெயர்க்காரணம் எதிர்பார்த்து இருந்தேன். அது கடைசி அரை பக்கத்தில் வந்தது. அதேபோல் இப்புத்தகத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முதலில் படித்தபோது, மூளையின் மூலையில் ஒரு சின்ன சந்தேகம் வந்தது. கதையின் போக்கில் அச்சந்தேகம் மறந்து போனாலும், புத்தகத்தின் கடைசி அரை பக்கம் ஆசிரியரின் கதை சொல்லும் உத்திக்குச் சபாஷ்போட வைத்தது.

மின்சாரம், கணினி இதுபோன்ற இன்றைய வார்த்தைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட 600 ஆண்டுகளுக்கு முந்தைய கதை விரும்பிகளும், ஒரு குதிரையின் படத்தில் மூக்கை மட்டுமே வைத்து சில பக்கங்கள் பரபரப்பை உண்டாக்குவது போன்ற எழுத்துநடை ரசிகர்களுக்கும் ஏற்ற புத்தகம். ஒன்றுமே இல்லாத ஒரு கதையை எழுத்துவடிவில் ஜெயித்துக்காட்ட முடியம் என்பதற்கு இப்புத்தகம் நல்ல உதாரணம்.

-ஞானசேகர்

25. எப்போதும் பெண்

----------------------------------------------------------
புத்தகம் : எப்போதும் பெண்
எழுதியவர் : சுஜாதா
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1984
விலை : 90
----------------------------------------------------------
'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்' - சுஜாதா.

இப்படி ஒரு சுயவிளக்கத்தை சுஜாதாவிடமிருந்து எதிர்பார்த்திராத எனக்கு, அதுவே இப்புத்தகத்தை வாங்கத் தூண்டுதலாய் அமைந்தது. இக்கதை மங்கையர் மலரில் தொடராக வெளிவந்திருக்கிறது. புத்தகத்துக்கான அறிமுக வரிகள் சுஜாதாவின் வார்த்தைகளில், "இந்தத் தொடரை நீங்கள் எளிதில் வகைப்படுத்த முடியாது. இதை ஒரு விதத்தில் பார்த்தால் கட்டுரை போல் இருக்கும். அதே சமயம் ஒரு கதையும் தென்படும். Philosophy கொஞ்சம் தெரியும். கொஞ்சம் கவிதை கூடத் தப்பித் தவறி வரும்."......"பாசாங்கு வெறுப்பு, குறும்பு எதுவும் இல்லாமல் எழுதியிருக்கிறேன்".

"இதை என் சிறந்த நாவல் என்று சொல்பவர்கள் உண்டு. ஆணாகிய நான் எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க விஷயங்களை அறிய முடிந்தது என்று ஆச்சரியப்பட்டவர்கள் உண்டு. இதற்கு பதில் எளிமையானது. Simon De Beauvoirன் The Second Sex என்கிற புத்தகம் எனக்கு மிகவும் பயன்பட்டது. மற்றபடி நான் பாத்ரூம்களிலும், படுக்கையறைகளிலும் எட்டிப்பார்க்கவோ, எந்தவித வாயரிஸமோ பழகவில்லை".

முதல் பதிப்பு வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ல் இரண்டாம் பதிப்பு வெளியாகி இருக்கிறது. வழக்கமான சுஜாதாவின் நடையில் அமைந்த நாவல். ஒரு பெண்கரு, ஒரு நடுவர்க்க, நடுவயது பிராமணப் பெண்ணின் வயிற்றில் தோன்றி, பிறந்து, வளர்ந்து, தானும் கரு சுமந்து இறந்து போவது வரையிலான பயணத்தை 190 பக்கங்களில் தீட்டியிருக்கிறார் ஆசிரியர்.

கதையை விட இப்புத்தகத்தில் பெறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கருவினுள்ளே இடப்பட்ட முட்டை உயிராக வளர்ந்து, குழந்தையாக வெளிவருவது வரை அழகாக விளக்கி இருக்கிறார்.
ஒரு பெண்ணின் மீதான உலகின் பார்வை, உலகின் மீதான ஒரு தனிப்பெண்ணின் பார்வை, ஆணைப் பற்றிய பெண்ணின் அபிப்ராயம், தன் மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான அவளின் சந்தேகங்கள் மற்றும் பயங்கள், புறப் பொருட்களால் அவள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், பாலியல் பற்றிய அவளின் முதல் அறிவு, படிப்படியாக அவள் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்று பெண்ணுலகத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.

அடிப்படையில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படும் விதம் எப்படி ஆணுக்குள் ஓர் ஆதிக்க மனப்பான்மையையும், பெண்ணுக்குள் ஒரு சார்புத்தன்மையும், அச்சமும் கொண்ட மனப்பான்மையையும் வளர்க்கிறது என்று சொல்கிறார் சுஜாதா. திருமணத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, ஓர் ஆணைப் பொறுத்தவரையில் தன்னால் அடக்கி ஆளப்பட ஒரு பொருள் கிடைக்கப்போகிறது என்பதாகவும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் தன்னை அடக்கி ஆள ஒரு தலைவன் கிடைக்கப்போகிறான் என்பதாகவும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்கிறார்.

பெண்ணின் பார்வையில் ஆண் என்பவன் சகல விதமான சுதந்திரங்களோடு உலவுபவன்; தன்னை விடப் பல விதங்களில் உயர்ந்தவனாக மதிக்கப்படுபவன்; தவறுகள் செய்ய சுலபமாக அனுமதிக்கப்படுபவன்; எனவே பெண்ணுக்கு ஆணிடம் இருப்பது பயம், அன்பு, மரியாதை என்பதை விட ஒருவிதமான பொறாமை என்று சொல்லலாம் என்கிறார்.

மனித மனதின் பல வினோதமான எண்ணங்களை எழுதியிருக்கிறார். உதாரணமாக, பிறந்த குழந்தை ஆணாக இருப்பின் தன் தந்தையை அதிகம் நேசிப்பதையும், அவரின் நகலாக நடந்து கொள்வதையும், சில வயதுக்குப் பின் அதே தந்தையை அளவுக்கு மீறி வெறுப்பதையும் சொல்கிறார். இதேபோல்தான் பெண்ணுக்குத் தாய் மீதான ஈடுபாடும். இக்கதையின் நாயகி தன் பதின்வயதில் தன் ஆசிரியை ஒருத்தியின் மேல் அதிக ஈடுபாடு கொண்டு அவளுக்குக் கடிதம் கூட எழுதி இரகசியமாக வைத்திருக்கிறாள். இப்படி இன்னும் பல.

சுஜாதாவிடமிருந்து இன்னுமொரு வித்தியாசமான நாவல். சுஜாதாவின் வாசகர்கள் என்றில்லாமல் எழுத்தில் யதார்த்தத்தை விரும்பும் யாரும் படிக்கக்கூடிய ஒரு புத்தகம்.

பின்குறிப்பு : இதற்கு முன் நான் கேள்விப்பட்டிராத, மற்றப் புத்தகக் கடைகளில் என் கண்களில் இருந்து ஒளிந்துகொண்ட இப்புத்தகம், ஒரு மழை நாளில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் 'தி புக்பாய்ண்ட்'ல் கண்ணில்பட்டது. இது தவிர இப்போது நான் வரிசையாக படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள் சுஜாதாவினுடையவையே! சுஜாதாவின் வாசகர்களுக்கு அப்புத்தகங்கள் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் என்பதால் அவற்றின் பெயர்களை சிறு குறிப்புடன் தரும் எண்ணம் உண்டு.

- சேரல்