Tuesday, June 03, 2014

Sunday, May 25, 2014

130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்
ஆசிரியர்: டி. ஞானையா
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 175
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்குத் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:
1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி. 
2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.
4. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டு வைத்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 'சென்னை சென்ட்ரலில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க கேப்டன் விஜயகாந்தால் மட்டுமே முடியும்' என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் பரவியது. அதைச் சில ஊடங்களும் வெளியிட்டு வாசகர்களைச் சிரிப்பூட்டின. 

நான் இந்திய வரலாறு படிக்க ஆரம்பித்த காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் கதராடை தரித்திருக்க, ஜின்னா மட்டும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, பெரும்பாலும் சிகரெட் பிடித்துக் கொண்டு புகைப்படங்களில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.  சுதந்திரப் போராட்டம் பற்றிய தமிழ் - இந்தி - ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாம் ஒரேமாதிரி, முறைத்துக் கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்யும் மனிதராகவே ஜின்னாவைச் சித்தரித்தன. இப்படி இந்திய இஸ்லாமியர்களின் வரலாறு பற்றிய அறியாமையில் வளரும் ஒரு சாதாரண இந்தியனுக்கு, ஜின்னா தரப்பு நியாயங்களைத் தேடியறியும் ஆவல் ஏற்படுவது அபூர்வமே. சமீபகாலமாக இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்ற குழப்பத்தில், இந்தியா எதிலிருந்து வந்தது என்று படிக்கலானேன். சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டு இருக்கும் வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள். எனது தேடலில் முகமது அலி ஜின்னாவும் இடம்பெற்றார். புத்தக வாசிப்பில் எனக்கு சில புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்திய‌, டி.ஞானையா அவர்கள் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பது அறிந்து, புரட்டிக்கூட பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியருக்கு வயது 93!
(http://discoverybookpalace.com/)
காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. 'காயிதே ஆஸம்' என்றால் மகத்தான தலைவர் என்று பொருள் கொள்ளலாம். ஜின்னாவின் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையின் பல சம்பவங்களின் தொகுப்பான 12 கட்டுரைகளே இப்புத்தகம். தேசியவாதியாக இருந்த ஜின்னா மதவாதியாக மாறி, தனிநாடு கோரியமைக்குக் காரணமான வரலாற்று நிகழ்வுகளைப் படிப்படியாக காலவாரியாக விளக்குகின்றன இக்கட்டுரைகள். கீழ்க்காணும் நூல்களில் இருந்தே பெரும்பாலான தகவல்களைச் சேகரித்திருக்கிறார் ஆசிரியர்:
1. ஜஸ்வந்த் சிங்கின் Jinnah: India, Partition, Independence
2. காந்தி மற்றும் இராஜாஜியின் பேரனான‌ இராஜ்மோகன் காந்தியின் Understanding muslim mind
3. இலக்கியவாதியான‌ தின்கர் ஜோஷியின் From facts to truth

ஜின்னாவைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மதவாதி பிமபத்தை உடைத்தெறிகின்றன ஆரம்பப் பக்கங்கள். ஜின்னா ஒரு தேசியவாதியாக, முஸ்லீம் லீக்கில் கூட இணையாமல், காந்திக்கு முன்பிருந்தே காங்கிரஸின் சுதந்திரப் போராட்டங்களில் இந்து - இஸ்லாம் மதவொற்றுமையைக் காத்தமையைப் பதிவு செய்கின்றார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியரான தாதாபாய் நௌரோஜியின் தனிச் செயலராகத் தான் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜின்னா. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியதற்காக திலகர் கைது செய்யப்பட்டபோது, அப்பிராமணனுக்காக வாதாட முன்வந்தார் ஜின்னா, என்ற இராஜ்மோகன் காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இருநாடு கோரிக்கை இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும், பல்வேறு நிகழ்வுகளில் மதவொற்றுமைக்காக‌ ஜின்னா பாடுபட்டதையும் விளக்குகின்றார். இந்து - இஸ்லாம் நல்லிணக்கத்தை உண்டாக்கும் இலக்னோ உடன்பாட்டை 1916ல் உருவாக்கினார் ஜின்னா. 1930ல் முதன்முதலில் கவிஞர் இக்பால், பாகிஸ்தான் என்ற சித்தாந்தத்தை முன்வைத்தபோது ஜின்னா எதிர்த்திருக்கிறார். இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைக் காந்தி ஆதரித்தும், ஜின்னா எதிர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் பிறந்த நாளில், அது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என அறிவித்தார்! ஹதீஸ், ஷரியத் பற்றி ஏதுமறியாத ஜோகேந்திர நாத் மண்டல் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துவைச் சட்ட அமைச்சராக நியமித்தார்!

1906ல் இருந்தே காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார் ஜின்னா. அநேகமாக 1916-17களில் ஜின்னாவிற்குக் கிடைத்திருந்த இடத்தைக் காந்தி கைப்பற்றிக் கொண்டார் என‌வும், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இடம் பெற்றார் எனவும் காந்தியின் பேரனான் இராஜ்மோகன் காந்தியே எழுதி இருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ஜின்னாவைப் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
ஜின்னா ஆங்கிலமய வாழ்வியலை மேற்கொண்டவர். பிறரிடம் விலகியே இருந்தவர். எந்த இந்திய மொழியிலும் உரையாற்ற இயலாதவர். ஜின்னாவிற்கு உருது தெரியாது. ஜின்னா இஸ்லாமுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை; அந்த மதத்தில் பிறந்தது ஒன்றைத் தவிர! ஷரியத் சட்டத்தைக் கற்றறிவதற்காகவே குரானையும் ஹதீதையும் படித்தார். இது முஸ்லீம்களின் வழக்குகளை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. மசூதிகளிடம் நெருங்காதவர். ஒருநாளில் ஒருமுறைகூட நமாஸ் செய்ததில்லை. மதுவும் பன்றி இறைச்சியும் இல்லாமல் அவரால் இருக்க இயலாது. 1937 வரை தனது நடை உடை பாவனையில் இஸ்லாமிய தாக்கம் இல்லாதவர்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உடன்படிக்கைபடி பாகிஸ்தானிற்குச் சில கோடி ரூபாய்கள் இந்தியா தரவில்லை. அதைக் காந்தி எதிர்த்தார். காந்தி கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் புதிய நாடானபோது சந்தித்த சில பிரச்சனைகள் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
பாகிஸ்தானை ஒரு நாடாக அமைக்கும் பணி மிகக் கடுமையானது. இந்தியாவில் அனைத்துமே இதுவரை இயங்கி வந்த அரசு இலாக்காக்கள். இராணுவம், காவல்துறை, அமைச்சரவைப் பணி அனைத்துமே ஒரு தொடர்ச்சிதான். புதிதாக எதுவுமே உருவாக்கப்படத் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டும். ஒரு அமைப்பு ரீதியான தலைமை, பிரிவுகள், பிரிவுகளுக்குத் தலைமை, புதிய தலைமையகம் எல்லாமே குழப்பம்.

தான் விரைவில் இறக்கப் போவதை வெளியுலகிற்கு மறைத்து, உறுதியான மனத்துடன் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தமையைப் பதிவுசெய்கின்றார் ஆசிரியர். காஷ்மீர் ஜீனகாத் ஹைதராபாத் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய சிக்கல்கள் பூதாகரமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி காஷ்மீரில் ஓய்வெடுக்க மன்னரிடம் அனுமதி கேட்கிறார் ஜின்னா. காஷ்மீரின் இந்து மன்னர் அனுமதி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் இராணுவத்தை அனுப்பி ஜினகாத்தைக் கைப்பற்றிக் கொண்டது இந்தியா. அதேபோல் பாகிஸ்தானும் தனது இராணுவத்தை அனுப்பி காஷ்மீரைக் அப்போதே கைப்பற்றி இருந்தால், ஜீனகாத் ஹைதராபாத் போன்று காஷ்மீர் பிரச்சனையும் அன்றே தீர்ந்து போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆழமான உண்மை! நாம் ஏதொன்றும் அறிந்திராத ஜின்னாவின் சொந்த வாழ்க்கை துன்பியல் நிறைந்த ஒன்று. அதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

இந்து - முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் மெத்தனம் காட்டியமை, இந்தியாவை ஒரு பெண் தெய்வமாகச் சித்தரித்து இஸ்லாமியர்களின் தோல்வியைக் கொண்டாடும் 'வந்தே மாதரம்' பாடலை ஊக்குவித்தமை, காங்கிரஸ் தலைவர்களின் இந்துமதச் சார்பு கொள்கைகள், கிரிப்ஸ் திட்டம் என்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கைக்குப் பின்னுள்ள வரலாற்று நியாயங்களைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். நம்காலத்தைச் சொல்லும் சில வரிகள் புத்தகத்தில் இருந்து:
மகாத்மா காந்தி. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. இருவரும் குஜராத்திகள். இருவருக்கும் கத்தியவார் பூர்வீகம். இருவரும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இருவரும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவ்விரு குஜராத்திகளும் அவரவர் வழிகளில் உறுதியான மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்த குஜராத் இன்று ....

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒவ்வொரு மாகாணமும் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அமைச்சர் கிரிப்ஸ் 1942ல் முன்வைத்தார். இப்படி வங்காளம் பஞ்சாப் என்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து போக எதிர்த்தவர்கள் அனைவரும், இந்து வங்காளம் - முஸ்லீம் வங்காளம் - இந்து பஞ்சாப் - முஸ்லீம் பஞ்சாப் எனப் பிரிக்கக்கோரி உறுதியுடன் நின்று பிரித்துவிடவும் செய்ததன் காரணங்கள் எவை? பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன? வரலாற்றின் சில நியாயங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் அந்தந்தக் காலங்களுக்கே சென்று படிக்க வேண்டும். அப்படிப்பட்ட‌ புரிதல் இருக்கும் பட்சத்தில், இன்னொருவரின் கைத்தட்டல்களும் புகழ்ப்பேச்சுகளும் நமக்கு ஓவ்வாமையை உண்டாக்கப் போவதில்லை.

அனுபந்தம்:
-------------------
1. மும்பையில் உள்ள ஜின்னா ஹால் பற்றி இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மும்பை செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
2. IPL கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி, ஜின்னாவின் கொள்ளுப் பேரனுடையது. பாம்பே டையிங் நிறுவனத்தைத் தோற்றுவித்ததும் இவர்கள் குடும்பம்தான்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Saturday, May 17, 2014

129. WHY WEREN'T WE TOLD?

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : Why Weren't We Told
ஆசிரியர் : Henry Reynolds
வெளியீடு : Penguin Books
பக்கங்கள் : 257 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Townsvilleல் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றிய Henry Reynolds ஒரு வரலாற்று அறிஞர். இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் வரலாற்றை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். சிறந்த வரலாற்றுப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் Ernes Scott Prize இவருடைய The other side of the Frontier என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் இவருடைய மனைவி Margaret Reynoldsம் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் உரிமைக்காக களப்பணியாற்றியவர்கள். 

ஆசிரியரின் பள்ளிக் காலங்களில் ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் பழங்குடியினர் பற்றிய வரலாறுகளோ தகவல்களோ பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை அவர்களைப் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் வெகு விரைவில் அழிந்துவிடுவார்கள் என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் Truganini என்ற பெண்ணோடு அந்த இனமே அழிந்துவிட்டதாகவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற ஆசிரியர், அதுவும் வரலாறு பயின்ற ஆசிரியர் தன் நாட்டின் மறைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.
(http://www.westprint.com.au)
மேலைநாடுகளில் வாழ்வது தன் பிறவிப்பயனாக கருதாதவராக இருந்தால் இந்த நாடுகள் எல்லோருக்கும் சொர்க்கபுரியாக இருப்பதில்லை என்பது புரியும். தங்குவதற்கு இடமில்லாமல் பாலத்திற்கு அடியில் தூங்கும் மனிதர்கள், குடும்ப வன்முறையில் சிக்கி வெளியேற முடியாமல் அடிவாங்கிக்கொண்டு வீட்டிலே இருக்கும் பெண்கள் என பலர் இருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இதையெல்லாம் மீறி ஆஸ்திரேலியாவில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிருக்கிறது. அது ஆஸ்திரேலியா ஒரு இனத்தின் மொழி கலாசாரம் மற்றும் வரலாற்றை வெற்றிகரமாக அழித்த நாடுகளில் ஒன்று.

Henry Reynolds அத்தகைய மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்பதற்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் பெறும் பங்காற்றியிருக்கிறார். 1965ல் விரிவுரையாளர் பணிக்காக Townsville வரும் ஆசிரியர் முதன்முதலாக ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வறுமை நிலையையும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் அறிய நேர்கிறார். 1890களில் பழங்குடியினர் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஊருக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிறுவனங்கள் பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதன் மூலம் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லாமல் தடுப்பதிலும் அப்பிள்ளைகளுக்கு தம் இனம் மொழி குறித்து ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்கு வகித்தன. 1960களில் இவர்கள் தனி குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஊர்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். Townsville போன்ற ஊர்களுக்குப் பழங்குடியினர் குழுவாக வந்து சேர்ந்ததும் அதேநேரத்தில் அரசாங்கம் பழங்குடியினர் வேலைக்கு அமர்த்தப்பட்டால் சம்பளம் கொடுக்கவேண்டுமென்று அறிவுறுத்தியதால் பலர் பண்ணைகளில் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். இவை அனைத்தும் ஒரு இறுக்கமான காலகட்டத்தை உருவாக்கின.

Margaret Reynolds ஆசிரியரின் மனைவியே முதன் முதலில் பழங்குடியினரின் நலனுக்காக களப்பணியாற்றுகிறார். பழங்குடியினப் பெண்களை நேர்காணலுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிறு உதவிகளைச் செய்துவரும் ஆசிரியர் பிற்பாடு தனது வரலாற்று ஆராய்ச்சிகளின் மூலம் பல உண்மைகளை வெளிக்கொணர்கிறார். ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்ட முறையில் பழங்குடியினரின்  எதிர்ப்புகளை மறைத்து ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பை ஒரு அமைதியான குடியேற்றமாக வரலாற்றைத் திரித்து எழுதுகிறார்கள். 1968ம் ஆண்டு வரலாற்று அறிஞர் W.E.H Stanner "The Great Australian Silence" என்ற உரையில் முதன் முதலாக மறுக்கப்படும் பழங்குடியினர் வரலாறுகள் குறித்து தன் கவலைகளைத் தெரிவிக்கிறார். Henry Reynolds பிற்பாடு காலனி அரசின் வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து இது ஒரு ஆக்கிரமிப்பு போர் என்பதைத் தன் வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் settlers என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒரு அமைதியான குடியேற்றம் என்ற பிம்பத்தை உருவாக்குவது குறித்தும் இன்னும் சிலர் ஒரு சில குற்றப் பின்ன‌ணி உள்ளவர்கள் செய்த செயல் என்று ஒரு இனப்படுகொலையை மறைக்க முயல்வது குறித்தும் தன் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கிறார்.

1994ம் ஆண்டு New South Wales கல்வி அமைச்சராக இருந்த Virginia Anne Chadwick ஆக்கிரமிப்பு போர் (invasion) என்ற பதத்தைப் பயன்படுத்த தனது ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தன் கட்சித்தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிறார். ஆசிரியர்களின் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு போர் என்ற பதத்தைப் பயன்படுத்தாத எந்த ஒரு பாடத்திட்டத்தையும் கற்பிக்க முடியாதென்றும் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு அளிப்பதே தமது கடமை என்று போர்க்கொடி உயர்த்தியது. இப்படி பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் தான் கடந்து வந்த பாதைகளையும் பழங்குடியினரின் நிலவுரிமைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் போராடி பெற்ற Eddie Maboவுடனான தனது நட்பைப் பற்றியும் பல நேரங்களில் பழங்குடியினர் வாழ்க்கைமுறை பற்றிய தன் அறியாமை குறித்தும் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

February 13,2008 அன்று ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமர் Kevin Rudd வரலாற்று முக்கியம்வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். அது உங்களின் பார்வைக்கு: 
http://australia.gov.au/sites/default/files/global_site/library/videos/national_apology.wmv

- பிரேம்குமார்
(http://premkumarkrishnakumar.wordpress.com)

Thursday, May 01, 2014

128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் (கட்டுரைகள்)
ஆசிரியர்: இரா.முருகவேள்
வெளியீடு: பிப்ரவரி 2012ல் பாரதி புத்தகாலயம் 
                   டிசம்பர் 2013ல் பொன்னுலகம் பதிப்பகம்
பக்கங்கள்: 67
விலை: ரூபாய் 50
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
'புலி வருது புலி வருது' என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி நடிகர்களும் அவ்விளம்பரங்களில் வதனம்காட்டி கவனம் ஈர்த்தனர். எனக்குப் புரியவில்லை. புனே நகரில் காத்ரேஜில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இருமுறை சென்றும் அங்குள்ள புலி/கள் எனக்கு முழு தரிசனம் காட்டும் கரிசனமற்று இருந்தன. சமீபத்தில் நரேந்திர மோடிக்கு முன் சென்னை வண்டலூரை மக்கள் வெள்ளத்தில் நிரப்பியவர் ஜெயலலிதா. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வெள்ளைப் புலிகளுக்கு அவரே பெயரிட்டதைத் தமிழ் ஊடகங்கள் எட்டுத் திக்கும் பரப்பின. அவைதான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த புலிகள். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்கள் போல வெண்புலிகளும். அவை புல்லைத் தின்றாலும் ஆச்சரியம் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இவ்வெண்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுண்டு. இன்று இந்து நாளிதழில் (The Hindu) வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை கூட, புலிகளுக்கு இடையே நாடு கடந்த, கண்டங்கள் கடந்த கலப்பின இனப்பெருக்கத்தையே ஊக்குவிக்கிறது. மதம் கடந்த, சாதி கலந்த கலப்பினம் மனிதர்களுக்கே எட்டாத கனவாக இருக்க, நான் மீண்டும் முதலில் ஆரம்பித்த விடயத்திற்கே வருகிறேன். சாம்பாருக்குப் பின் புளிக்குழம்பைத் தவிர்த்து விட்டு நேரடியாக இரசம் சாப்பிடும் என்னைப் போன்ற சாமானியனால் எப்படி புலிகளைக் காப்பாற்ற முடியும் என்று புரியவில்லை. புலியும் நானும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டால், நான் புலியைக் காப்பாற்றுவேனா? இல்லை நாலுகால் பாய்ச்சலில் ஓடி மரத்தில் ஏறிக் கொள்வேனா? கரப்பான் பூச்சியைக் காப்பாற்றுங்கள், கொசுவைக் காப்பாற்றுங்கள், கோழியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஏன் புலி? தேசிய விலங்கு என்பதாலா? எனக்குப் புரியவில்லை.

அரசியல் அமைப்புச் சாசனத்தின் மாதிரியை அமைக்க காங்கிரஸ் கட்சியின் காரிய குழு கூடியது. இந்தியைத் தேசிய மொழி ஆக்கலாமா என்று ஓட்டெடுப்பு. 78 ஆதரவு. 78 எதிர்ப்பு. மேட்ச் ட்ரா! நீண்ட விவாதம், நீண்ட மவுனங்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டெடுப்பு. 78 பேர் ஆதரவு. 77 பேர் எதிர்ப்பு. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டாரா, இல்லை NOTA போட்டாரா, இல்லை தேர்தலைப் புறக்கணித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்தியாவிற்குச் சட்டரீதியாக இந்தி தேசிய மொழி ஆகவில்லை என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்களும் நர்சரிப் பள்ளிகளில் இன்று இந்தி படிக்க அந்த ஓர் ஓட்டுதான் காரணம்! அதே போல தேசியப் ப‌றவை மயிலா, இல்லை இன்னொரு பறவையா என்று கடும் விவாதம். கிட்டத்தட்ட இன்னொரு பறவை தேர்வு செய்யப்பட்ட போது, அப்பறவையின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் ஒரு கெட்ட வார்த்தை வருகிறதென ஓர் உறுப்பினர் எதிர்க்க மயில் பாஸானது. இப்படி புலிக்கும் கூட ஒரு கதை இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி ஏதோ தனியாகப் பேசுவது போல, யாருக்கும் புரியாத ஓர் ஒளிக்காட்சியைச் சமூக வலைத்தளங்கள் ஆவலுடன் பார்த்து Like / Forward / Comment செய்துவிட்டு மறந்து போயின. அந்தமான் காடுகளில் பேசப்பட்ட ஏதோ ஒரு மொழியின் கடைசி ஆள் அவள். சமீபத்தில் அவளுடன் அம்மொழியும் புதைந்து போனது. சுதந்திர இந்தியாவில் சில நூற்றுக்கணக்கான மொழிகள் இதே முடிவைச் சந்தித்திருகின்றன. தேசியம் என்ற அடையாளத்துடன் ஒற்றை மொழிக்கு நிறுவனங்கள் அமைத்து, பிராந்திய மொழிகளைக் கைவிட்டது தான் முக்கிய காரணம். அந்த இன்னொரு பறவையையும் சில ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் பார்த்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன். ஏற்கனவே Tiger Cheetah Leopard என்ற வார்த்தைகளை இரும்புத்தோல் போர்த்திய வாகன‌ங்களாக மட்டுமே புரிந்து கொள்ளும் அடுத்த‌ தலைமுறையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படி என்றால் புலியை முன்னிலைப்படுத்தி மற்ற உயிரினங்களைக் கொன்றுகொண்டு இருக்கிறோமா? எனக்குப் புரியவில்லை.

புலிகளைக் காப்பாற்றச் சொன்ன அவ்வூடகங்கள் ஒரு வரைபடத்தையும் (graph) வெளியிட்டன. X அச்சில் புலிகளின் எண்ணிக்கை. Y அச்சில் ஆண்டு. முதல்வர் முன்னால் அதிகாரிகள் போல வளைந்து நெளிந்த கோடு, எம்.எல்.ஏ.க்கள் போல திடீரென கீழே விழுந்துவிட்டது. அதாவது புலிகளின் எண்ணிக்கை பாதாளத்துக்குக் குறைந்துவிட்டதாம். ஏன் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என அவ்விளம்பரங்களே ஒரு விளக்கம் கொடுத்தன. தாவரங்களைத் தாவர உண்ணிகள் தின்கின்றன. அவற்றை ஊன் உண்ணிகள் தின்கின்றன. எனவே ஓரிடத்தில் புலி ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அவ்விடத்தில் தாவர உண்ணிகளுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். மேலும் ஓரிடத்தில் தாவர உண்ணிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் அவ்விடத்தில் தாவரங்களுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். அதாவது உணவுச் சங்கிலியில் உச்சியில் இருக்கும் புலி நலமாய் இருந்தால், கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும் நலமாய் இருக்கின்றன என்று அர்த்தம். அதாவது ஒட்டுமொத்த வனமும் / காடும் நலமாய் இருக்கிறது என்று அர்த்தம். இதே விளக்கம் மற்ற ஊன் உண்ணிகளுக்கும் பொருந்தும் போது, அவற்றை ஏன் காப்பாற்ற முனையவில்லை? மன்னன் நலமானால் குடிமக்களும் நலம்தான் என்பது போல் அல்லவா இவ்விளக்கம் உள்ளது? ஏற்கனவே இப்பதிவு பெரிதாகப் போய்க் கொண்டு இருப்பதாலும், இன்னும் சில முக்கிய கேள்விகள் இருப்பதாலும் இவ்விரு கேள்விகளையும் தாண்டிச் செல்கின்றேன்.

அவ்வூடகங்களின் விளம்பரங்களில் இந்திப்பட நடிகர்கள் தோன்ற ஆரம்பித்தனர். அதில் ஒருவர் ஏற்கனவே ஒரு விடைதெரியாத பிரம்மாண்ட‌ ஊழலில் மாட்டியவர். இன்னொருவரின் மனைவி இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டில் இருந்ததாக வருமான வரி காட்டாமல் மாட்டியவர். அந்த இன்னொருவர் தனது பாக்கெட்டில் இருந்து சில இலட்சங்கள் கொடுத்ததாக அவ்விளம்பரத்தில் சொன்னார். Donate Now என்று விளம்பரம் முடிந்தது. புலியை நான் எப்படி காப்பது என்றே எனக்குப் புரியாத போது, எனது பணம் எப்படிக் காக்கும்? அவ்விளம்பரம் செய்பவர்கள் பற்றி பிறகுதான் கவனித்தேன். மிகப்பெரிய உலகு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விநியோகஸ்த உரிமை. இதுமாதிரி பொன்முட்டையிடும் வாத்துகளுக்கு இந்தி நடிகர்களோடு, இந்தக் கிரிக்கெட் வீரங்களும் வருவார்கள். அப்புலி விளம்பரங்களில் அவர்களைக் காண முடியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் வெளிநாடுகளில் ஆட்டம் போட்டாலும் அவர்களை வைத்துத்தானே தேசபக்தி அளக்கப்படுகிறது! மானைக் கொன்ற வழக்கில் இன்றும் கூட மாட்டிக் கொள்ளாமால் துள்ளி ஒடிக் கொண்டே இருக்கும் சில பிரபல இந்தி நடிகர்கள் இன்னும் உள்ளனர். அவர்கள் அப்புலி விளம்பரத்தில் வந்தார்களா என்று தெரியவில்லை.

தேசத்தின் மலைகளில் பெரும் பகுதிகளைப் பெரும் நிறுவனங்களும், டீ காபி ரப்பர் தேக்கு யூக்கலிப்டஸ் தோட்டங்களும், அணைகளும், சுரங்கங்களும் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தான் புலி உட்பட வனவிலங்குகள் வாழ்கின்றன. உண்மை இப்படி இருக்கும் போது, சமீபத்தில் புலிகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் அப்புறப்படுத்தப்பட உத்தரவிடப்பட்டதை அறிவீர்கள். புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல்? சுற்றுச்சூழல்வாதிகளும் அரசும் முன் வைக்கும் திட்டங்கள் ஏன் பழங்குடி ஏழை மக்களையே குறிவைக்கின்றன? மனிதனும் விலங்குகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று அவர்கள் சொல்வதில் உண்மை உண்டா? என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்? உங்களுக்கு அநேகமாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குப் புரிந்துவிட்டது. அதைச் செய்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசலாம்.
(http://udumalai.com/)
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும். ஆசிரியர் இரா.முருகவேள். பரதேசி திரைப்படத்தின் மூலக்கதையை 'எரியும் பனிக்காடு' என்று தமிழில் மொழிப் பெயர்த்தவர். 'சோளகர் தொட்டி'யின் ஆசிரியர் ச.பாலமுருகன் சிறந்த முன்னுரை கொடுத்திருக்கிறார். புத்தகத்தைப் பற்றி இனிமேலும் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு தான். சின்னப் புத்தகம். காடுகளைப் பற்றி பல விசயங்களைப் பேசுகின்றன. கியோட்டொ ஒப்பந்தம் (Kyoto Protocol) பற்றி எனக்கு முன்பே தெரியும். அதைப் புரியவைத்தது இப்புத்தகம்தான். காட்டில் ஒரு மரத்தை வெட்டிவிட்டு, நம் வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் 10 மரங்கள் நட்டு ஈடு செய்ய முடியாது என்று காட்டுமரங்களின் மதிப்பைப் புரியும்படி எழுதி இருக்கிறார். பழங்குடிகள் சுள்ளி பொறுக்குவதும் நெல்லிக்காய் பறிப்பதும் வனத்தின் உணவுச் சங்கிலியைப் பாதிப்பதாக கதைகள் சொல்லி, பழங்குடி மக்களை வெளியேற்றி தனியார்மயமாக காடுகள் மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கார்பன் வணிகம் பற்றியும், அதன்மூலம் வளர்ந்த நாடுகள் மற்றவர்களை விஞ்ஞான ரீதியாகச் சுரண்டுவதையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. அமெரிக்காவுக்குக் காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்குக் கொரில்லா, இந்தியாவுக்குப் புலி என்ற வரிகளை மறக்கவே முடியாது. இந்தியாவில் எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன தெரியுமா? அடேயப்பா! நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள். 

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1960ல் WWF (Worldwide Fund for Nature) க்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் ராபர்ட் மெக்னமாரா, டேனியல் லூட்விக் என்ற இருவர் முக்கியமானவர்கள். வியட்நாம் போரில் ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகறிந்தது. அப்போரில் அமெரிக்கா காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களின் இலைகளை உதிர்க்கச் செய்யும் அளவுக்கு ரசாயனங்களைப் பொழிந்தது. இதே போன்று டேனியல் லூட்விக்கின் நிறுவனங்கள்தான் அமேசான் காடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தின. வனங்களைப் பாதுகாக்க சரியான நபர்கள் இவர்கள்தானா!
2. புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியில் மக்கள் சீமாற்றுப்புல் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீமாற்றுப்புல் என்பது எந்த விலங்கும் உண்ணாத புல் ஆகும். இதனை மக்கள் கூரை அமைக்கவும், விளக்குமாறுகள் செய்யவும் பயன்படுத்துவார்கள். இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். எனவே வேனில் காலங்களில் இதை அறுக்க முடியாவிட்டால் மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். இப்போது இப்புல் அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டு உள்ளதால், புல்லில் அடிக்கடி காட்டுத்தீ பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொரு தீ பரவும் சம்பவத்திலும் 50, 60 ஏக்கர் காடுகள் அழிகின்றன.
3. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறைவைகள் சரணாலத்தில் நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதிமேதாவிக்கு இது உறுத்தியது. கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி பறவைகளுக்குக் கீழே நீர்நிலைகள் இருப்பது தெரியவில்லை. எனவே அவை வரவில்லை என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்குப் பரத்பூர்தான் சரியான உதாரணம்.
4. சுதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டையாட தனிப் பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இப்பகுதிகள் வனவிலங்கு சரணாலங்களாக மாற்றப்பட்டன. இப்போது அவர்களே எகோ டூரிஸ்டுகளாக திரும்பி வருகிறார்கள். இப்போதும் கூட வனவிலங்கு சரணாலங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.

வன உயிர்களைச் சுற்றுலா என்ற பெயரில் அதன் வாழிடம் வரை அணுகுவதைத் தவிர்ப்போம். அதற்காக என்னால் எப்படி புலியைக் காப்பாற்ற முடியும் என்று ஒட்டுமொத்தமாக விலகிப் போவதும் தவிர்ப்போம். இப்பிரபஞ்சத்தில் உணவுச் சங்கிலியில் ஓவ்வோர் உயிரும் இன்னொன்றுடன் கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளால் கட்டித்தான் வைத்திருக்கிறது இயற்கை. 'புலி வருது புலி வருது' என்று உங்களைப் பய‌ங்காட்ட ஒரு சமீபத்திய கதையை உதாரணமாகச் சொல்லி முடிக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்து பூமியின் மையம் வழியே துளையிட்டுக் கொண்டே போனால் இங்கிலாந்து வரும். அதாவது இவ்விரு தேசங்களும் புவியியல்படி இருவேறு துருவங்கள். இங்கு நள்ளிரவு என்றால், அங்கு நண்பகல். அங்கு கோடை ஆரம்பித்தால், இங்கு கோடை முடியும். ஆஸ்திரேலியா கண்டத்தைக் கால்நடைகளின் கண்டம் என்பார்கள். அந்த அளவிற்கு அங்கு மனிதர்களை விட கால்நடைகள் அதிகம். பெரும்பாலான கண்டம் வறண்ட பாலைநிலத்தால் ஆனது. ஆண்டாண்டு காலமாக அங்கு மனிதர்களுடன் கால்நடைகளும் உணவுப்பஞ்சம் இல்லாமல் வாழ்ந்துதான் வந்தனர். அங்கு காலனி பதித்த இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்குத் திடீரென ஒரு யோசனை வருகிறது. இங்கிலாந்து கால்நடைகள் விரும்பி உண்ணும் ஒரு தாவரத்தை ஆஸ்திரேலியாவுக்குக் கொணர்ந்து பயிரிட்டனர். கால்நடைகளும் அத்தாவரத்தை உண்ண ஆரம்பித்தன. பற்பல ஆண்டுகள் கழித்து, திடீரென பெண் கால்நடைகள் கர்ப்பம் தரிப்பது அரிதாகிக் கொண்டே வந்தது. அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும் அளவிற்குக் குட்டிகள் குறைந்து போனதும், விலங்கியல் வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். பெண் கால்நடைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. விஞ்ஞான உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஓட்டுமொத்த ஆண் கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை பரவலாக இருந்தது. அவை உண்ணும் தாவரங்களும் பல ஆண்டுகளாக உண்ணப்படுபவை தான். விஞ்ஞானம் தலையைப் பிய்த்துக் கொண்டது. ஒருவர் பதில் சொன்னார். சுற்றுச்சூழல் பற்றிய எனது அடுத்த பதிவில் அப்பதிலைச் சொல்கிறேன்.

அரசன் அன்றே கொல்வான், இயற்கை நின்று கொல்லும்! பணத்தால் அல்லால், புலி மட்டுமல்லால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Saturday, April 26, 2014

127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்
ஆசிரியர்: அ.மார்க்ஸ்
வெளியீடு: முரண் பதிப்பகம் (http://muranpublication.blogspot.in/)
முதல் ஈடு: செப்டம்பர் 2010
பக்கங்கள்: 71
விலை: ரூபாய் 45
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக சாலைகள், மெட்ரோ இரயில்கள் என நகரங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பளபளப்பு பெறுவது ஒருபுறம். அவற்றிற்கு இடையூறாகவும் களங்கமாகவும் இருப்பதாகவும், நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகவும், தொற்றுநோய் பரப்புபவர்களாகவும் குடிசைவாழ் மக்களும், வீடற்ற அனாதைகளும் விரட்டப்படுவது இன்னொருபுறம். காம‌ன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லியை இப்படி நவீனப்படுத்தப் போய், பாலம் நொறுங்கி விழும் அளவிற்கு நடந்த ஊழலில் சர்வதேச அளவில் நம்தேசத்துப் பெருமை பேசப்பட்டதையும் அறிவீர்.  ஊழலில் பிரபலமானபின் சென்னையில் ஆ.ராசா அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு போல, புனே நகரில் சுரேஷ் கல்மாடிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பில் உண்டான போக்குவரத்து நெருக்கடியில் பிதுங்கிப் போன சாமானியர்களில் நானும் ஒருவன். சிங்கப்பூர், துபாய், ஒலிம்பிற்குப் பிந்தைய பீஜிங் போன்ற உலகத்தரமான நகரங்களாக உருவெடுக்க நவி மும்பை, டெல்லி என்ற இந்திய நகரங்களின் பட்டியலில் நமது சென்னையும் உண்டு. கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை, ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை.

சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும். சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், குடிசைகள் ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, இடப்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்திய அரசின் நிலப்பறிப்பு, மறுவாழ்வு, மறுகுடியிருப்புச் சட்டங்கள் பற்றிய விமர்சனமாக மொத்த புத்தகமும் அமைகிறது. பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு என நீர்நிலைகளை ஒட்டியோ அல்லது அவற்றின் மீதோ பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் அமைவதால், வறுமையே ஒரு குற்றமாய் அக்கரைகளில் வாழ்ந்துவரும் மக்கள் வெளியேற்றப்படுவதைப் பேசுகிறது. புதிய குடியிருப்புப் பகுதிகளில் மனநோய், குற்றச் செயல்கள், தற்கொலைகள், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தல் போன்ற பிரச்சனைகளையும் பேசுகிறது. சென்னைக் குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப் பட்டவர்களின் வாழ்நிலை பற்றிய, ஆசிரியரும் பங்குபெற்ற உண்மையறியும் குழு ஒன்றின் அறிக்கைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் முயற்சியின் உண்மையறியும் குழு அறிக்கை ஒன்றும் பின்னிணைப்பாக உள்ளது.

சென்னைத் துறைமுகம் அருகிலுள்ள‌ போர் நினைவுச் சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் நதி வழியே அதிவேகச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு 1500 கோடி. (அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திமுகவால் வழக்குத் தொடரப்பட்டு.... தற்போதைய நிலவரம் தெரியவில்லை. கோயம்பேடு - பெருங்களத்தூர் புறவழிச்சாலையில் வரிசையாக நிற்கும் காங்கிரீட் தூண்களில் பல நாட்களாக எம்மாற்றமும் இல்லை) அதற்காக 30,000 குடும்பங்களை மறுகுடியமர்த்த 345 கோடி. இதற்காக 2009 நவம்பர் இறுதியில் சேத்துப்பட்டு, ஸ்பர்டாங் சாலை, அப்பாசாமி தெரு, இரட்டைமலை சீனிவாசன் நகர் போன்ற இடங்களில் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட குடிசைகள் 1144. இவ்வாறு இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் எல்லோரும் சுமார் 30கிமீ தொலைவிலுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, ஒக்கியம் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். எந்த அடிப்படை வசதிகளும் போக்குவரத்தும் இல்லாத மழைநீர் தேங்கும் காட்டுப் பகுதிகள் இவை எனச் சுட்டிக் காட்டுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நிலவங்கிகளை அரசே உருவாக்கி வருவதையும் சொல்கிறார். 'நிலவங்கி' என்ற வார்த்தை, பாலஸ்தீனர்களைக் கடனாளியாக்கி வங்கிகள் மூலம் இஸ்ரேல் என்ற நாடு மிக விரைவாக வடிவமைக்கப்பட்டதை எனக்கு ஞாபகப்படுத்தியது.
(http://muranpublication.blogspot.in/)
புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1947 - 2000 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 6 கோடி பேர். இவர்களில் 40% பழங்குடியினர், 20% தலித்கள், 20% பலமிழந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஆக வளர்ச்சித் திட்டங்களாலும், நிலப்பறிப்பினாலும் பாதிக்கப்படுபவர்கள் பெரிய அளவில் அடித்தள மக்கள்தான்.
2. 'ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்கிற முழக்கத்துடன் 1970 டிசம்பரில் நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் குடிசை மாற்று வாரியத்தைத் திமுக அரசு தொடங்கி வைத்தது. 7 ஆண்டுகளில் சென்னை நகரிலுள்ள குடிசைகளை எல்லாம் ஒழித்துக் கட்டப் போவதாகவும் அன்று கருணாநிதி முழங்கினார். 1971 மக்கள் தொகைக் கணக்குப்படி சென்னைக் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 7.37 இலட்சம். 2001ல் 10.79 இலட்சம்!  சென்னை மக்கள் தொகையில் இவர்கள் 26%. இதுகூடச் சற்றுக் குறைவான கணக்குத்தான். நடைபாதைகளில் குடியிருக்கும் பலர் இதில் விடுபட்டிருக்கலாம். 2005ல் இருந்த குடிசைப் பகுதிகள் 1431.
3. 1980களின் பிற்பகுதியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனை என்கிற காரணத்தைக் காட்டி நகர்ப்புற உச்சவரம்புச் சட்டத்தைத் தளர்த்தி இந்த அனுமதியை அப்போலோ ரெட்டிக்கு வழங்கினார் எம்ஜிஆர்.  கார் பார்க்கிங்கிற்காக கிரீம்ஸ் லேனில் இருந்த வாலஸ் கார்டன் குடிசைகள் அழிக்கப்பட்டன. அருகிலுள்ள வேறொரு இடத்தில் மருத்துவமனையைக் கட்டிய அப்போலோ நிறுவனம் மருத்துவமனைக்கென்று விதிமீறி அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிந்தூர் ஓட்டலைக் கட்டியது. ஓப்பந்தப்படி மருத்துவமனைப் படுக்கைகளில் மொத்த எண்ணிக்கையில் 15%க்கு இலவச மருத்துவம் அளிப்பது என்கிற ஒப்பந்தத்தையும் அது ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை.

பெரும் இயற்கைப் பேரழிவுகளோ போர்களோ இல்லாமல், மெசபடோமியா ரோமன் மாயன் என்ற உலகின் மிகப் பிரம்மாண்ட நாகரீகங்கள் எப்படி முற்றிலும் சிதைந்து போயின என்பதற்கான சாத்தியங்களை விவாதிக்கும் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். இருபெரும் காரணங்களை முன்வைத்தது:
1. இயற்கை வளங்கள் அனைத்தும் முற்றிலும் உபயோகிக்கப்பட்டு வாழத் தகுதியிழத்தல்
2. பொருளாதார ரீதியில் சமூகத்தில் மிகப்பெரிய இடைவெளிகளை உண்டாக்குதல்
இவை இரண்டையும் தானே 'வளர்ச்சி' செய்துகொண்டு இருக்கிறது!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Tuesday, April 22, 2014

126. ஜாதியற்றவளின் குரல்

The communalism of a majority community is apt to be taken for nationalism.
- Jawaharlal Nehru

உன் குழந்தைகளை
மார்பிலே சரித்துக்கொண்டு
புராணக் கதைகளைச் சொல்லிவை அப்படியே
நீயொரு கொலை நிகழ்த்தினாய் என்பதையும்
- சுகிர்தராணி ('காமத்திப்பூ' புத்தகத்தில் 'நீ ஒரு கொலை செய்தாய்' கவிதையிலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்:  ஜாதியற்றவளின் குரல் (கட்டுரைகள்)
ஆசிரியர்: ஜெயராணி
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
முதல் ஈடு: டிசம்பர் 2013
பக்கங்கள்: 357
விலை: ரூபாய் 250 
வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் பிறப்பதற்கு ஓராண்டிற்கு முன் இலங்கையின் முதல் தோட்டா தமிழக மீனவர்களைத் துளைத்து வெள்ளோட்டம் பார்த்தது. நான் பிறந்து தவழும் முன் சீக்கியப் படுகொலைக்கும், போபால் விசவாயுக் கசிவிற்கும் என்தேசம் பல அப்பாவிகளைப் பலிகொடுத்தது. நான் ஆரம்பப் பள்ளியில் இருந்த போது, ஒரு மசூதி இடிக்கப்பட்டது. நான் நடுநிலைப் பள்ளியில் இருந்த போது, மசூதி இடித்தவர்களுக்கு என்தேசம் மத்திய அரசு கொடுத்து அழகு பார்த்தது. பிறகு காந்தி என்ற கொல்லப்பட்டவரின் படத்திற்கு அருகே, அக்கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் படமும் பாராளுமன்றத்தில் சேர்க்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சாதிக் கலவரங்களில் தப்பித்து வந்த சில குடும்பங்கள் உதவி கோரியபோது, நான் ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் மதப் பாடங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். தர்மபுரியில் மூன்று பெண்கள் பேருந்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட‌ போது, வெளியூர் போயிருந்த உறவுகள் திரும்பி வரும்வரை துடித்துக் கொண்டிருந்த பலரில் நானும் ஒருவன். நான் கல்லூரியில் இருந்த போது, குஜராத் படுகொலைகள். 2002ல் திண்ணியத்தில் மலம் தின்னவைத்தது, மூன்று வருடங்கள் கழித்து நண்பன் சொல்லித்தான் பக்கத்தில் திருச்சியில் இருந்த எனக்குத் தெரியும். 

காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் முடிந்து போன ஈழப் படுகொலைகள். 19 ஆண்டுகளுக்குப் பின் 269 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பின்தான் 1992ன் வாச்சாத்தி வன்கொடுமைகள் தெரியும். 2011ல் பரமக்குடி கலவரம். 2012ல் திருவக்கரையில் மலம் தின்ன வைத்ததை ஆங்கில ஊடகங்களில் படித்தேன். பாப்பாப்பட்டி - கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல்கள் பற்றி ந‌ண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இருமுறை திரையரங்கில் பார்த்த சண்டியர் திரைப்படத்தில் ரோகிணி அழுத்தி உச்சரித்தும் தெரியாமல், குருதிப்புனல் புதினம் மூலம் தெரிந்து கொண்ட 1968ன் கீழ்வெண்மணி படுகொலைகள். ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் 'சொல்ல வருவது ...' சிறுகதை மூலம் தெரிந்து கொண்ட 1999ன் தாமிரபரணி படுகொலைகள். 1957ல் பரமக்குடி கலவரங்கள் பற்றியும், 2003ல் ஊரப்பனூரிலும் 2010ல் மெய்க்கோவில்பட்டியிலும் மலம் தின்னவைத்ததும் சில புத்தகங்கள் சொல்லின. கொடியங்குளம் மேலவளவு உஞ்சனை நாலுமூலைக்கிணறு போன்ற ஊர்களைப் பற்றி வெறும் பெயர்களாக மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்; என்ன நடந்தது என்ற விவரங்களை என்னால் கண்டறிய முடியவில்லை.

தர்மபுரி இளவரசன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தான். அது கொலையா, இல்லை தற்கொலையா என்ற ஒற்றைக் கேள்வியுடன், ஒரு மர்மநாவலின் கடைசிப் பக்கம் போல சமூகம் மூடிவைத்தது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட மறுநாள், ஹைதராபாத் நகரின் சார்மினார் அருகில் நின்றுகொண்டு, வெறிச்சோடிக் கிடந்த அவ்வீதிக‌ளில் படபடத்துக் கொண்டிருந்த புறாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதச்சார்பின்மையும் சமூகநீதியும் மறுக்கப்பட்ட இதுபோன்ற பட்டியல் உங்களிடமும் இருக்கலாம். சகமனிதன் மேல் தொடுக்கப்படும் வன்முறைச் சம்பவங்களின் உண்மை நிலையைப் பெரும்பான்மை மக்கள் அறிய முடியாமல் தடுக்கப்படுவதை வரலாற்றில் காலந்தோறும் காணலாம். வரலாற்றைத் திருத்தி தவறாக வாசிக்க வைப்பதன் மூலம் வரலாற்றில் இடம்பெற்றுவிட முயற்சிப்பவர்கள் மூலமாகத் தான் வரலாறு பெரும்பாலும் எழுதப்படுகிறது. அவர்கள் மத்தியில், மக்கள் எளிதில் மறந்துவிடுவதைப் பதிவு செய்து வைக்கும் சிலரும் உண்டு. அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்றுதான் இது.

ஜாதியற்றவளின் குரல். ஆசிரியர் ஜெயராணி. பத்திரிக்கையாளராக வணிக இதழ்களில் பணிபுரிவதால் மீனாமயில் செவ்வந்தி ஜெனிபர் காவ்யா போன்ற பல புனைப்பெயர்களில் அறியப்படுபவர். 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் 'ரௌத்ரம் பழகு' நிகழ்ச்சியில் வரும் ஜெனி என்பவர் இவர்தான் என நினைக்கிறேன்; தெரிந்தவர்கள் சொல்லவும். 37 கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை நேரடியாகச் சேகரித்த புலனாய்வுக் கட்டுரைகள் இவை. மந்திரம் ஓதுகிறவர்கள் கண்டுபிடித்து, மந்திரிமார்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிமமாக உறைந்து, பண்பாடாகப் போற்றப்பட்டு, கடவுளுக்குக் கட்டுப்பட்ட இந்தியர்களால் புனிதமாக‌, காலங்காலமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவரும் சாதிக்கு எதிரான குரலே பெரும்பாலான கட்டுரைகள். சாதி அன்ன இன்னபிறவற்றிற்கும் எதிராகவும் சில கட்டுரைகள். புத்தகத்தின் பெயரில் உள்ள 'ஜாதி' என்பது சாதியை மட்டும் குறிக்கவில்லை; அடிமைத்தனம் ஆதிக்கம் என்ற இரண்டையும் சேர்த்தே குறிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வெள்ளைத்தோல் இல்லாதவர்கள் மீது வன்முறை ஏவுகிறார்கள். ஈழத்தில் நடக்கும் இனவெறிக்கு எதிராகத் தமிழர்கள் எனத் தனியாக‌க் குரல் கொடுக்கிறோம். அத்தமிழர்கள் இங்கிருந்தால் அவர்களை மத மற்றும் சாதியாகப் பிரித்திருப்போம். இன மத சாதி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் பெரும்பாலான ஆண்கள்கூட தம்வீட்டுப் பெண்களைத் தெருவில் தன்னுடன் கொடி பிடிப்பதற்கும், வீட்டில் சமையல் கரண்டி பிடிப்பதற்கும் மட்டுமே பணிக்கிறார்கள். பெண்ணுரிமைக்காகப் போராடும் மகளிர் அமைப்புகள்கூட பெரும்பாலும் பால்பிறழ்வுகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதில்லை. இப்படி நிற‌ம் மொழி இனம் மதம் சாதி பாலினம் அடிப்படையில், அடிமைத்தனத்தை எதிர்ப்பது ஆதிக்கத்தை ஆதரிப்பது அல்லது அடிமைத்தனத்தை ஆதரிப்பது ஆதிக்கத்தை எதிர்ப்பது அல்லது இரண்டையும் ஆதரிப்பது என்ற சமூக நிலையே இங்கு நிலவுகிறது. இரண்டையும் எதிர்ப்பவர்கள் எத்தனைபேர் இங்கே இருக்கிறார்கள்? சமூகநீதி ஒன்றையே இலக்காகக் கொண்ட ஒருத்தியின் குரலே இக்கட்டுரைகள்.
(http://www.vikatan.com)
1. 19.01.2001ல் மதுரையில் எஸ்.கீழப்பட்டி என்ற கிராமமே மதமாறிய சம்பவம்.
2. வள்ளியூர் அருகில் சங்கனாங்குளம் வன்கொடுமைகள்.
3. மாஞ்சோலை எஸ்டேட்டில் அடிமை வாழ்வுக்கெதிரான போராட்டங்கள்.
4. தங்கள் உடல்களை வேட்டையாடி மேய்ந்த ஒரு கொடூரனை நீதிமன்ற அறைக்குள்ளேயே வெட்டிக் கொன்று, தங்களை ஆயுதங்களால் அடையாளம் காட்டிய நாக்பூர் கஸ்தூர்பா நகர் பெண்கள். 
5. உத்தப்புரத்து 15 அடிச் சாதிச்சுவர்.
6. மதுரை - தேவக்கோட்டை வழியில் இருக்கும் கண்டதேவி கிராமத்தில் தேர் வடம் பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டதால் உண்டான கலவரம்.
7. இயேசுவின் தேவாலயத்தில் சாதிவெறியைக் காட்டும் காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர். (இதைப் போன்ற‌ நெல்லை மாவட்டம் டவுசர் சர்ச் பற்றி ஏற்கனவே ஒரு புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன்)
8. சின்னப்பயல்கள் சண்டையில் குண்டாயிருப்பு, தேனி மாவட்டம் வாய்க்காப்பட்டி, ஒரு கோழி செத்துப் போனதால் திருவில்லிப்புத்தூர் அருகில் கூமாப்பட்டி என்று சின்ன விசயங்களை ஆதிக்கச் சாதியினர் கலவரமாக்கிப் பார்க்கும் தந்திரங்கள்.

இப்படியாக அடிமைத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடிய‌ மக்களின் / பெண்களின் குரலாகவே பெரும்பாலான கட்டுரைகள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்டு, சமூகநீதியைக் காப்பதாகச் சொல்லும் கட்சிகள் மற்றும் தலித் தலைவர்களின் சந்தர்ப்பவாதத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. சாதியைச் சாகவிடாமல் அவர்கள் போடும் இரட்டை வேடங்களையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். நிகழ்கால உதாரணங்கள் இரண்டு நான் சொல்கிறேன். ஓர் அமைச்சர் இந்தியாவின் மிகப்பெரிய ஊழலை நிகழ்த்தி இருக்கிறார்; விதிகளை மீறி அலைக்கற்றைகளை ஒதுக்கி 1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். ஓர் வெளியுறவுத் துறை பெண் அதிகாரி அயல் நாட்டில் விசா மோசடி செய்கிறார். அவர்க‌ள் தலித் என்பதால் தான் வீண் குற்றம் சாட்டப்படுவதாக, பெரியாரையும் அம்பேத்கரையும் கையில் எடுத்துக் கொண்ட இதே தலைவர்கள்தான் முழங்குகின்றனர். (காந்தி அம்பேத்கர் பெரியார் காமராசர் போன்றவர்களை நீங்களே படித்தறிவதே உத்தமம்)

2004ல் இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் தவிர, மற்ற கட்டுரைகள் சொல்லும் சம்ப‌வங்கள் பற்றி இப்புத்தகத்தில் தான் முதன்முறை படித்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம், 2007ல் பல்வேறு கிராமங்களில் நடத்திய ஆய்வில் 47 விதமான தீண்டாமையின் வடிவங்களைக் கண்டறிந்தது என்று ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கிறது! தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இப்புத்தகம் சொல்லும் விசயங்களில் முக்கியமான ஒன்று - தீண்டாமைக்குள் தீண்டாமை. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டை. அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், தங்களுக்குள் கடைபிடிக்கும் தீண்டாமை. அருந்ததியர் / தோட்டி / சக்கிலியர் மற்றும் வண்ணார் மேல் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவரும் காட்டும் ஆதிக்கத்தைப் பேசும் கட்டுரைகள். 

'சக்கிலியனைத் தொட்டாலே தீட்டு; புதிரை வண்ணானைப் பார்த்தாலே தீட்டு' என்கிறது ஒரு சொல்வழக்கு. தங்களை எதிர்த்தது மட்டுமின்றி, தங்கள் மீது வழக்குப் பதிவு செய்த அருந்ததியர்களைப் பொது வீதியில் நடக்கக் கூடாது எனவும், பொதுக் குழாயில் குளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தடை விதித்த நிகழ்ச்சிகளையும் சொல்கிறார். 'இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை' என்று அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

'வண்ணான் வராத வீடு வெளங்காது' என்ற சொல்லாடலும், 'வண்ணான் கழுதை பொதி சுமக்கும்' என்று பாடப்புத்தகங்களே சாதியைப் போதிக்கும் அளவிற்குச் சமூகக்கடமையாக‌ பொதுப்புத்தியில் பதிந்து போனதைச் சுட்டிக் காட்டுகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடையே செல்லாது என்பதால் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் மேல் தொடுக்கும் வன்முறைகள் இச்சட்டத்தின் கீழ் வராது. நாடார் தேவர் தலித் என்ற மற்ற சாதியினரின் சாட்சியம் தேவைப்படுவதால், சாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக் கூட வண்ணார் அலைக்கழிக்கப்படும் கொடூரத்தைப் பேசுகின்றன. ஆதி காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையைச் செய்து வந்தவர்களைச் சாதி வந்தபின், அழுக்குத்துணியையும் முட்டுத்துணியையும் துவைக்க வைத்த கொடுமையையும் சொல்கின்றன. தலித் மக்களுக்கு வேலை செய்யும் புதிரை வண்ணார்களே சாதிய அடுக்கில் அடியில் இருப்பவர்கள். புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் நிலையைச் சிவகாசி அருகில் திருத்தங்கல் கிராமத்தில் இருந்து பதிவு செய்கிறார். 

சென்னை நகரைப் பற்றி சில கட்டுரைகள். ஜெயலலிதா ஆட்சியில் எழில்மிகு சென்னை, கருணாநிதி ஆட்சியில் சிங்காரச் சென்னை என்ற திட்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்லி மக்களின் வாழ்வைச் சீரழித்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். வியாசர்பாடி, சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட் நகர், அன்னை சத்யா நகர், கே கே நகர், அம்பேத்கர் காலனி, எண்ணூர், மூலக்கொத்தளம், செம்பியம் சாந்தி நகர், ஜாபர்கான் பேட்டை என்று 2001ல் மட்டும் தீவிபத்து ஏற்பட்ட குடிசைப் பகுதிகளைப் பட்டியலிடுகிறார். 2001ல் மேமாதம் மட்டும் அமைந்தகரை, ஓட்டேரி, சோழவரம் என்று குடிசைப் பகுதிகள் பற்றி எரிந்திருக்கின்றன‌. 10-05-2001ல் ஓட்டளிப்பு நாளில் ஓட்டேரியில். இவற்றைப் பற்றி இன்னொரு புத்தகத்தில் விரிவாகப் பேசலாம். 

சங்கனாங்குளத்தில் எல்லாக் குற்றங்களுக்கும் கிராம அதிகாரிகளே துணைபோனதால், சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எம்ஜியார் ஆட்சியில் தமிழகம் முழுவதும் கிராம அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திராவில்  இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தங்கள் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சாய்பாபா பற்றி நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இப்படி சில வரலாற்றுத் தகவல்களை இப்புத்தகத்தில் தான் முதலில் படிக்கிறேன்.

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. புறத்திலும் அகத்திலும் இந்து மதத்தால் கொல்லப்பட்ட அப்சல் குருவுக்கும், தருமபுரி இளவரசனுக்கும்... (பின்னட்டையில் இருந்து)
2. தலித் மக்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்கள் மதரீதியாக ஒடுக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதில் இந்து மத வெறியர்கள் தெளிவாக இருக்கின்றனர். கோயம்புத்தூரில் அருந்ததியர்கள், சென்னையில் பறையர்கள், நெல்லையில் பள்ளர்கள் என கீழ்சாதி இளைஞர்களை இந்து கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, பொது எதிரியாக இஸ்லாமியர்களைச் சித்தரிக்கும் காரியத்தையே செய்து வருகின்றனர்.
3. எப்பொழுதும் கட்டிக் காக்கப்படும் தீண்டாமை, பாலியல் வல்லுறவின்போது மட்டும் எங்கே போகிறது என்று தெரியவில்லை.
4. ஜெர்மனியில் ஒரேயொரு ஹிட்லர் தான். நியாயப்படி பார்த்தால், இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 3% பேர் ஹிட்லர்கள்! இவர்கள்தான் மூலைக்கு மூலை நின்று இந்தியாவில் சாதியம் வழக்கொழிந்து விடாதபடியும் வெளியே தெரிந்து விடாதபடியும் காத்து நிற்கின்றனர்.
5. இந்துத்துவவாதிகள் தலித் மக்களைக் கலவரத்துக்கு மட்டும்தான் தயார் செய்கிறார்கள். தொடக்கத்தில் காலைப் பிடிக்கும் இந்துத்துவம், நாள் போக்கில் எப்படி கழுத்தைப் பிடிக்கும் என்பதற்குக் கோவை உக்கடம் பகுதி மக்களே வாழும் உதாரணம்.
6. பல்வேறு பண்பாடு, மொழி, வாழ்க்கை முறையைக் கொண்ட  மக்களைத் துப்பாக்கி முனையில் இணைத்து, இந்து சாம்ராஜ்யத்துக்குள் அடைத்ததே இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை! அப்படி இணைய மறுக்கிறவர்களே தீவிரவாதிகளாகவும் நக்சலைட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டு ஆயுதங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
7. சாதிச் சூழ்ச்சியையும் பயங்கரத்தையும் எடுத்துச் சொல்லி, தலித் மக்களை ஒன்று திரட்ட வேண்டிய தலித் தலைவர்கள், மக்களை உட்சாதிப் பிரிவுகள் மூலம் தனித்தனித் தீவுகளாக்கியதோடு பாகுபாட்டை அப்படியே கட்டிக் காக்கிறார்கள்.
8. இனவெறி, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என உலகின் எந்த அடிமைத்தனத்தை விடவும் வலுவானது, கொடுமையானது சாதியப் பாகுபாடு. காரணம், அதில் மேற்குறிப்பிட்ட எல்லா பாகுபாடுகளுமே உள்ளடங்கி விடுகின்றன என்பதே உண்மை.
9. சட்டப்பேரவைகளையும் நாடாளுமன்றத்தையும் வெறுமனே தலித் மக்களைக் கொண்டு நிரப்புவதால் மட்டும் அடிமைத்தனம் அழிந்துவிடாது. மதங்களின் வேர்களும், சாதியின் கிளைகளும் இந்த சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. வெறும் வசனங்கள் பேசி அவற்றை அழித்துவிட முடியாது.
10. இந்தியாவில் காவல்துறை மாதிரிதான் பத்திரிக்கைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்கள் சாதிப்பதைப் போல, 'பிரஸ்' என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிக்கை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது.
11. சாதியை உள்ளடக்கிய தொழில்களில் துப்புரவுத் தொழிலும் ஒன்று என்பதால்தான் வெட்கங்கெட்ட இந்நாட்டிலிருந்து அதை விரட்ட முடியவில்லை. 'தாங்கள் இந்தத் தொழில் செய்யவே படைக்கப்பட்டவர்கள்' என அருந்ததிய‌ரை நம்பவைத்து, இன்றுவரை காரியம் சாதித்து வருகிறது சாதியச் சமூகம்.

புதுக்கோட்டை கத்தகுறிச்சியில் செங்கல் சூளையில் கல்லறுக்கும் குடும்பத்தில் பிறந்து, தடகளப் போட்டிகளில் பல சாதனைகள் படைத்த சாந்தி, பாலினச் சோதனையில் தோல்வியடைந்த போது மவுனம் காத்த மகளிர் அமைப்புகள் பற்றி ஒரு கட்டுரை. சமீபத்தில் இரண்டு நடிகைகளின் முத்தப் பிரச்சனைகளை மாநில மற்றும் தேசியப் பிரச்சனைகளாகத் தொடர்ந்து சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இப்படி சமூகப் பொறுப்பில்லாமல் செயல்படும் சில ஊடகங்களின் பயங்கரவாதம் பற்றி சில கட்டுரைகள். பறிபோகும் பழங்குடியினர் நிலங்கள் பற்றி ஒரு கட்டுரை. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இரு சாதி மாணவர்களுக்கு இடையே 12.11.2008 அன்று நடைபெற்ற மோதல் பற்றியும், சட்டத்தைக் காக்க வேண்டியவர்கள் சாதியைக் காத்து வருவது பற்றியும், 'கற்றது ஜாதி' என்று ஒரு கட்டுரை. 

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொல்வது போல், எல்லாருமே தங்களது முகமூடிகளையும் ஆடைகளையும் கழட்டி வைத்துவிட்டு, மதம் சாதி என‌ தன் புராதன ஆயுதங்களுடன் நிர்வாணமாகத் தெருவுக்கு வர ஆரம்பித்து இருப்பதைச் சமீப காலத்துப் பல சம்பவங்கள் காட்டுகின்றன. குறிப்பாக தேர்தல் கூட்டணிகளும் பிரச்சாரங்களும். நாளை மறுநாள், ஓட்டுரிமை என்ற நமது ஆயுதம் மூலம் சமூகநீதி எதுவென நமக்கு நாமேதான் தீர்மானித்துக் கொள்வோம்!

அனுபந்தம்:
-------------------
1. பன்வாரி தேவி என்ற தலித் பெண் 1992ல் உயர்சாதி ஆண்களால் கூட்டமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒரு தாழ்த்தப்பட்ட ஆளுக்கு, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் சமூகநீதிக்கு அவள் ஒருத்தியே சாட்சி. அவ்வழக்கு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட போது, சொல்லப்பட்ட காரணங்கள்: 1) உயர்சாதி ஆண்கள் ஒரு தலித் பெண்ணைத் தொட்டுப் புணர்ந்திருக்க வாய்ப்பில்லை 2) குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் இருவர் உறவுக்காரர்கள். மகன் போன்ற தன் சகோதரன் மகனுடன் சேர்ந்து ஒரு பெண்ணைக் கூட்டு வன்கொடுமை செய்ய எந்த ஆணிற்கும் தோன்ற வாய்ப்பில்லை.
2. அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் 'மலத்தில் தோய்ந்த மானுடம்' என்ற கட்டுரையைப் படியுங்கள். இரயில் நிலையத்தில் நிற்கும் இரயிலில் கழிவறையை உபயோகப்படுத்தும் ஒவ்வொருவரும், சாதியை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Sunday, March 16, 2014

125. இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்

Religion is opium of masses.
- Karl Marx
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்
ஆங்கிலத்தில்: Crime and Religious Beliefs in India
ஆசிரியர்: அகஸ்டஸ் சோமர்வில்
தமிழில்: மா.வெற்றிவேல்
வெளியீடு: சந்தியா பதிப்பகம் (http://www.sandhyapublications.com/)
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 224
விலை: 170 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
1931ல் Crime and Religious Beliefs in India என்ற ஆங்கில நூல் அகஸ்டஸ் சோமர்வில் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்டது. ஒரு சராசரி இந்தியனின் மனம் சமய நம்பிக்கைகளாலும் மூடப் பழக்க வழக்கங்களாலும் கட்டப்பட்டிருப்பதையும், இந்தியச் சமூகத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியில் உள்ள சமய நம்பிக்கைகளின் உளவியலையும் பதிவு செய்த புத்தகம் அது. அதன் தமிழ் மொழியாக்கமே 'இந்தியாவில் குற்றங்களும் மத நம்பிக்கைகளும்'. இன்று இந்தியா என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வோர் அர்த்தம் சொல்வது போல், ஆசிரியர் காலத்திலும் வேறு அர்த்தம் என்பதால், இப்பதிவு முழுவதும் இந்தியா என்று வரும் இடங்களில் இந்தியத் துணைக்கண்டம் என்று புரிந்து கொள்க. 80 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மாற்றம் ஒன்றும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை என்பதால், கிரிக்கெட்டில் யாருக்குக் கைத்தட்டக் கூடாது என்றும், வாடகை வீடு முதல் நாடாளுமன்றம் வரை யார் குடியேற வேண்டும் என்றும் பெரும்பாலும் மதம் வைத்து தீர்மானிக்கும் இத்தேசத்தின் கடந்தகால நிகழ்கால எதிர்கால குற்றங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும்  உள்ள தொடர்பு  எல்லோருக்கும் வெளிப்படையாகவே தெரியும் என்பதால், நான் சிற்சில உதாரணங்கள் சொல்லி நிரூபிக்க வேண்டிய முயலாமல் நேரடியாக புத்தகத்திற்குள் போகிறேன். மொத்தம் 17 கட்டுரைகள். மத நம்பிக்கைகளின் பின்னணியில் சமூகத்தில் நடக்கும் குற்றங்களாக ஆசிரியர் உதாரணப்படுத்தும் பல குற்றங்களை, இப்பதிவின் எளிய புரிதலுக்காக ஐந்து வகைகளில் அடக்குகிறேன்.

முதலாவது பாலியல் தொழில் என்ற பெயரில் பெண்கள் மேல் திணிக்கப்படும் வன்கொடுமை. கன்னித் துறவிகள், அந்தப்புர கணிகைகள் என்ற பெயரில் காலங்காலமாக இம்மண்ணில் விபச்சாரம் புனிதப்படுத்தப்பட்டு பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். கிமு காலத்தில் ரிக் வேதம், அர்த்தசாத்திரம், மனுஸ்மிருதி போன்ற நன்னெறி நூல்களும், கிபி காலத்தில் காமசூத்திரமும் சமூக அங்கீகாரத்துடன் ஊக்குவித்ததைக் கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக உருவான தேவதாசி முறை; 'தேவதாசி வீட்டுத் தூசு கூட தெய்வீகமானது' என்பது போன்ற அன்றாடச் சொல்லாடல்கள்; பிராமணீயத்தின் மோசமான தலைமையகமான மெட்ராஸ் நகரத்தில் மிகமிக மோசமாக இருந்த தேவதாசிகளின் நிலை; திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் குடும்பத்தில் மூத்த பெண்ணைக் கோயிலுக்கு நேர்ந்து விடும் கொடுமையான வழக்கங்கள் இருந்ததையும் கண்ணுற்ற ஆசிரியர் சொல்கிறார். 

Unhappy India என்ற புத்தகத்தில் இதுபோன்ற கொடூரங்களை லாலா லஜபதி ராய் எழுதியிருப்பதையும், டாக்டர் முத்துலெட்சுமி (பல 'முதல்'களுக்குச் சொந்தக்கார‌ரான இவரும் எங்கள் மாவட்டம்) அவர்கள் மெட்ராஸ் சட்டமன்றத்தில் நேர்ந்து விடுதல் தடைச்சட்டம்  மசோதாவை 1930ல் அறிமுகப்படுத்தியதையும் உதாரணமாகச் சொல்லி இந்தியர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். மாதவிலக்கான பெண்கள் மூன்று நாட்கள் ஒதுங்கியே இருக்க அந்தப்புரத்தில் தனியறை இருக்கும். அப்பாரம்பரியத்தைக் காக்கும் புரட்சியாக, முந்தைய கர்நாடக அரசு கிராமங்களுக்கு வெளியே கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தது. வழக்கம் போல, அத்திட்டத்திற்கும் மஹிலா என்ற வார்த்தையுடன் இந்தி மொழியில் ஒரு பெயர். 

இரண்டாவது போதை மருந்துப் பழக்கம். மது, அபின், கோக்கைன், ஹஷீஷ், இந்தியன் ஹெம்ப் (கஞ்சா) போன்ற போதை மருந்துப் பழக்கங்கள் பற்றியும், அவை சட்ட விரோதமாகக் கடத்தப்படுவது பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. இவற்றிற்கும் மத நம்பிக்கைகளுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம்? கங்கை நதிக்கரையில் ஒரு தெய்வீக மகரிஷியின் மூலம் அபின் பிறந்த கதை, 6 பக்கங்களுக்கு இருக்கிறது. சாராயத்தை விருப்பப் பானமாகக் கொண்ட சில மத நம்பிக்கைகளின் புராணக் கதைகளையும் பட்டியலிடுகிறார். உச்சி முதல் பாதம் வரை கள்ளாபிஷேகம் செய்யப்படும் சில கடவுளர்களைச் சொல்கிறார்.

மூன்றாவது கடவுளைப் பற்றிய‌, கடவுளின் எதிரியான பேய் / பிசாசு / சாத்தான் பற்றிய மூட நம்பிக்கைகள். சாமிகள் மேல் மரியாதை இல்லாமல் மண்ணுருண்டைகள் எரிந்து வழிபடுதல் போன்ற வினோத வழக்கங்கள்; சில ஆபத்தான காலங்க‌ளில் பூர்வீகச் சாமியைச் தற்காலிகமாக கைவிட்டுவிட்டு, வேறு சாமியையோ பேய்களையோ வழிபடுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இன்றும் அம்மை நோய்க்கு மருத்துவமனை போகாமல் நம் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். 'துஷ்ட தேவதைகளை அமைதிப்படுத்த நடத்தப்படும் அனைத்துப் பரிகாரங்களும் தோற்றுப் போனால் மட்டுமே, இந்த வானுயர்ந்த மலைகளை உருவாக்கிய கடவுளை வணங்குவோம்' என்பது நேபாள மக்களின் வாதம். 'பேய் அனைத்து வண்ணங்களையும் ஆடையாக உடுத்திக் கொன்டு ஏதோவொரு மலைச் சுனையிலிருந்து நீர்ப்பருகும் காட்சிதான் சாதாரணமாக மழைக்காலத்தில் காணப்படும் வானவில்' - இப்படி நம்புவது வேறு யாருமில்லை, புத்த மதத்தின் ஒரு பிரிவான நாடோடி லாமாக்கள். புத்த மதத்தின் ஒரு பிரிவினருக்காக மனிதக் கபாலங்கள் இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதை ஏற்கனவே The Red Market புத்தகத்தில் இத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

நான்காவது கடவுளைக் கையில் எடுத்தவர்கள் / கடவுள் விற்பவர்கள் செய்யும் வினோத மற்றும் மூட வழக்கங்கள். பேயோட்டிகள் மற்றும் பாம்பு வைத்தியர்களின் இன்றும் தொடரும் வினோதப் பழக்கங்களையும் சடங்குகளையும் அன்றே பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். ஏதோவொரு மகாமுனிவரின் கண்ணிமைகளை அலங்கரித்த பிங்களன் என்ற நாகப்பாம்பின் மூலம் உண்டாக்கப்பட்ட அரிய நடனமென்ற பெயரில், இன்றும் கல்கத்தாவின் சோனாகச்சி சிவப்பு விளக்குப் பகுதியில் வாடிக்கையாளர்களைக் கவர ஆடப்படும் பிங்கள நடனம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  உயிருடன் புதைக்கச் சொல்லி அடம்பிடிக்கும் சாமியார்களை அடிக்கடி செய்திகளில் இன்றும் காணலாம்.  ஒரு சாமியார் சொன்னதற்காக அரசாங்கமே சமீபத்தில் புதையல் தேடியதல்லவா?

ஐந்தாவது மதத்தின் பெயரால் நடக்கும் உயிர்ப்பலிகள். மகாபாரதப் போரில் வெல்ல அரவானைப் பலி கொடுத்தது போல, இன்றும் தொடரும் கங்காசாகர் திருவிழா பற்றி சொல்கிறார். ஏதோவொரு தெய்வத்தின் கோப‌த்தைத் தணிப்பதற்கோ, மந்திர சக்திகளைப் பெறுவதற்கோ, புதையல் கிடைக்கவோ, பாலமோ கட்டடமோ வெற்றிகரமாகக் கட்டப்படவோ குழந்தைகள் இன்றும் நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. 3000 ஆண்டுகளாக இந்தியாவில் வழக்கில் இருந்த‌, கைம்பெண்களைக் கணவனுடன் உயிருடன் எரித்த சதி என்னும் உடன்கட்டை ஏறும் கொடூரத்தையும் சொல்கிறது இப்புத்தகம். இப்படி உடன்கட்டை ஏறப்போன ஓர் இளம்விதவையைக் காப்பாற்றி திருமணம் செய்து கொண்ட, ஓரு ஆங்கிலேயர் கல்கத்தாவில் பிரபலம். ஜாப் சார்னாக் (Job Charnock) என்ற அவர்தான் கல்கத்தா என்ற நகரை நிறுவியவர்.

இந்தியா என்பது இந்தி பேசும் இந்துக்களின் நாடு என்ற பொதுவான கருத்து வெளிநாட்டவர்களுக்கு உண்டு. ஆனால் எந்த நம்பிக்கைகள் எந்த மதத்திற்குச் சொந்தமானவை என ஆசிரியர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இந்து இஸ்லாம் புத்தம் போன்ற மதங்கள் இவற்றில் அடக்கம். கிறித்தவ மதம் காலனியாதிக்கத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்குள் வந்துவிட்டாலும், ஆசிரியர் ஆங்கிலேயர் என்பதால் கிறித்தவ மத நம்பிக்கைகள் மூலம் நிலவும் குற்றங்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலை நாட்டவர் என்ற முறையில் கீழை நாட்டு நம்பிக்கைகள் அனைத்தையும் கீழ்த்தரமாகப் பார்க்கும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. நாம் பெருமையாகச் சொல்லும் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியைக் கூட கிண்டல் செய்திருக்கிறார். இவை நீங்கலாக, நல்ல புத்தகம் இது.

என்ன தம்பி, சதிக்குற்றம் வரை சொன்ன நீங்கள் சாதிக்குற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? இவ்வாறு மத நம்பிக்கைகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கீழ்சாதிக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் ஆங்காங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடுத்த புத்தகத்தில் நிறைய பேசலாம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Saturday, March 15, 2014

124. வெயில் மற்றும் மழை

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: வெயில் மற்றும் மழை (சிறுகதைகள்)
ஆசிரியர்: மீரான் மைதீன்
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை
முதல் ஈடு: திசம்பர் 2007
பக்கங்கள்: 196
விலை: 90 ரூபாய் 
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய மக்க‌ள் பற்றி படித்தறிய சென்ற வருடம் சில புதினங்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வாங்கினேன். அவற்றில் சிலவற்றைப் பற்றி இதே தளத்தில் எழுதியும் இருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் 'ஓதி எறியப்படாத முட்டைகள்' புதினம் பற்றி மட்டும் எழுதவில்லை. அப்புதினம் பற்றி நான் எழுதிய பதிவு எனக்கு திருப்தியாக இல்லை என்பதாலும், வேலைப்பளுவினாலும் எழுதவில்லை. இதே காரணங்களால் நான் எழுதாமல் விட்டுவிட்ட இன்னொரு புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி. இஸ்லாமிய மக்களின் அன்றாட உரையாடல்களில் இடம்பெறும் பல வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்திய புதினம் 'ஓதி எறியப்படாத முட்டைகள்'. ஒரே ஊருக்குள் இருக்கும் இரு இஸ்லாமிய குடும்பங்கள் மூலம், அரபு நாடுகளில் வேலை பார்க்கும் கனவுடன் வலம் வரும் ஏழைகளின் மனவோட்டத்தை அற்புதமாக விளக்கும் புத்தகம். நடிகைகள் ராதாவும் அம்பிகாவும் வந்து போகும் பகுதிகளைச் சில நண்பர்களிடம் சொல்லிச் சிரித்திருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் மற்ற புத்தகங்கள் ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆவலில் தேர்ந்தெடுத்த புத்தகம் தான் இது.

வெயில் மற்றும் மழை. 18 சிறுகதைகளின் தொகுப்பு. 4 அல்லது 5 கதைகள் தவிர மற்றவை அனைத்தும் இஸ்லாமிய மக்களைப் பற்றிய கதைகள். 13 கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. 'ஓதி எறியப்படாத முட்டைகள்' மூலம் எனக்கு ஏற்கனவே நாகர்கோவில் வட்டார இஸ்லாமிய வழக்குச் சொற்கள் பரிட்சயம் என்பதால், இந்தமுறை பதிவாக எழுதும் அளவிற்கு எளிதாகிவிட்டது. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் மூட நம்பிக்கைகள் போல, இஸ்லாமிய சமூகத்தினரிடையே இருக்கும் சில மூட நம்பிக்கைகள் பற்றி 'தங்கக்கால்' 'வல்லினம்' போன்ற கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு மதத்தினரும் தத்தம் மதம் சொல்லும் கட்டளைகளை ஏதாவதொரு சந்தப்பத்தில் தெரிந்தே மீறுவதைக் 'குனிவு' என்ற கதை சொல்கிறது. எல்லாச் சமூகமும் பெண்ணை ஓர் அடிமையாகவே வைத்திருக்க விரும்புவதையும், அதை எதிர்க்கும் சில பெண்கள் இருப்பதையும் 'வல்லினம்' என்ற கதை சொல்கிறது. 'படிப்பு வராத பயலுவளெல்லாம் யானை விட்டயச் சமுட்டுனா படிப்பு வரும்' என்று யானை விட்டைக்கு அடித்துக் கொள்ளும் 'நன்றி மீண்டும் வருக' என்ற கதை.

கவர்னர் என்ற பதவியைக் கடுமையாக விமர்சிக்கும் சொற்ப இந்தியர்களில் நானும் ஒருவன். கவர்னர்கள் பற்றி இந்தியர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், நான் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த‌ காலத்தில் தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ஒருவரைப் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம் தருகிறேன். எம். பாத்திமா பீவி. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை உடையவர். 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, தங்கள் ஊரின் தர்ஹாவிற்கு வரப்போகும் நாளை எதிர்நோக்கி இருக்கும் ஓர் ஊரின் பரபரப்பைச் சொல்லும் 'கவர்னர் பெத்தா' கதை அருமை.

ஒரு பள்ளித் தலைமையாசிரியைக்கும், வாசலில் கடை வைத்திருக்கும் பாட்டிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் பற்றி ஒரு கதை. தலையணை இல்லாமல் சென்னை வாழ்க்கையின் நெருக்கடியைச் சித்தரிக்கும் ஓர் உதவி இயக்குனரின் கதை. கல்லூரி சார்பாக நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்டம் ஒன்றில் ஓர் இஸ்லாமிய மாணவனுக்கும், ஒரு பெந்தெகொஸ்து கிறித்தவ மாணவிக்கும் இடையே வந்து போகும் காதல் போன்ற ஏதோவொன்றைச் சொல்லும் ஒரு கதை. சவங்களைக் கிடத்தி வைக்கும் ஒரு பெஞ்சி, ஒரு சைக்கிள், ஓர் ஆட்டுக்குட்டி போன்றவைகள் மேல் சாதாரண மனிதர்கள் காட்டும் அன்பைப் பற்றி சில கதைகள். 'மஜ்னூன்' என்ற கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நான் மிகவும் ரசித்த கதைகள்: பெஞ்சி, கொழும்புக் குதிரை, கவர்னர் பெத்தா, குனிவு, முகாம்

- ஞானசேகர்

Sunday, March 02, 2014

123. DEBT - The first 5000 years

(இப்பதிவிற்குப் பொருத்தமான மேற்கோளும் ஆரம்பப் பத்தியும் தந்தமைக்கும், ஆங்காங்கே சில தகவல்கள் சேர்த்து இப்பதிவிற்கு இவ்வடிவம் தந்தமைக்கும் நண்பர் ஞானசேகருக்கு நன்றிகள்)

தனது தந்தையின் கடனைத் தீர்க்காத ஆண்மகன், மறுபிறவியில் நாயாகவோ அடிமையாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறான். 
- மனு தர்ம சாத்திரம்
If a man does not pay his father's debt, in his next life he is born as a dog, a slave or a woman.
- Manusmrti
(நன்றி: Struggle for Gender Justice புத்தகம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : DEBT - The first 5000 years 
ஆசிரியர் : டேவிட் கிரேபர் (David Graeber)
வெளியீடு : மெல்வீல்லெ ஹவுஸ் (Melville House)
பக்கங்கள் : 534
விலை : ரூபாய் 500
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதகுலம் தனது பரிணாமப் படிகளில் ஏறும்போது, சில‌ காலங்க‌ளில் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது. சில காலங்களில் குழம்பிப் போய் அப்படியே நிற்கிறது. இரண்டையும் ஒரு சேர சந்தித்துக் கொண்டிருக்கும் விசித்திரமான காலம் இந்த 21ம் நூற்றாண்டு. எழுத்தாளர் பெருமாள் முருகன் சொல்வது போல, நம் முன்னோர்கள் யாரும் குறியை மூடிப் புணர்ந்ததில்லை. கவிஞர் மகுடேசுவரன் சொல்வது போல, ஒரு கட்டடத்தில் இருந்து வெளியேறி இன்னொரு கட்டடத்தில் நுழைவதையே ஆயுள் செயலாகக் கொண்டு யாரும் இருந்ததில்லை. ஆனால் ஒரு கிழவன் கேட்டதற்காக, உபரி நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்த ஆச்சரியத்தை இதே தேசம் கண்டு 65 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்தப் பரிணாமம் என்ற மாயநிலையைத் தாண்டிப்போய், நின்று திரும்பிப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதால், மனிதகுலம் முழுவதும் ஆங்காங்கே விதைக்கப்பட்டு இன்று பரவிக் கிடக்கும் மாய‌ சித்தாந்தங்கள் பல. இந்த 21ம் நூற்றாண்டு தனது சித்தாந்தங்களை மனிதகுலத்தின் பொதுப் புத்திக்குள் திணித்து வைக்கப் பயன்படுத்தும் ஊடக‌ங்களில், இப்பதிவிற்குச் சம்மந்தப்பட்ட சில சித்தாந்தங்கள் எப்படி திரிக்கப்பட்டு நியதிகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று இரு உதாரணங்கள் பார்க்கலாம்.

1. ஒரு பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில், மக்கள் நேரடியாகப் பங்கேற்று விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் பேசினார். ரொம்ப காலமாக நம் சமுகத்தில் இருந்த ஒரு methodologyக்குப் பேரு பண்டமாற்று. நாம ஒரு பொருள் கொடுப்போம். அதுக்கு இணையா ஒரு பொருளக் கொடுப்பாங்க. அப்படித்தான் ரொம்ப காலம் வரைக்கும் இருந்திச்சு. அதுக்கடுத்து என்னாச்சின்னு கேட்டா, எல்லா நேரத்திலேயும் பொருள கொடுத்தே பொருள் வாங்கிக்கிட்டு இருக்க முடியாதுன்னு எல்லாத்தையும் தூக்கிட்டு இங்கிருந்து அங்க அங்கிருந்து இங்க போக முடியாதுன்னு சொல்லிட்டு, ஒரு பொருள் கண்டுபிடிச்சாங்க அதுக்கு பேரு காசு.
2. நூறுநாள் வேலைத்திட்டம், ரேஷன் அல்லது மானியம் போன்றவற்றால் மக்கள் சோம்பேறிகள் ஆவதாகவும் ஊழல் பெருகுவதாகவும், தடையற்ற சந்தை (free market) பாதிக்கப்படுவதாகவும் முகநூலில் நண்பர் ஒருவர் கூறினார். அதனால் பொருளாதாரம் 10ம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென‌ அறிவுறுத்தினார். 

முதல் உதாரணம் காசு பற்றியது; அடுத்த உதாரணம் தடையற்ற சந்தை பற்றியது. பள்ளிக்கூடங்களில் பக்கத்து எண்ணில் இருந்து கடன் வாங்கிக் கழிக்க ஆரம்பித்த‌தில் இருந்து தொன்று தொட்டு கற்றுத் தொடர்ந்து வரும் கருத்து என்பதால், முதல் உதாரணத்தைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வதுண்டு. விலையில்லா அல்லது இலவசம் என்ற வார்த்தைகளால் கீழ்த்தரமாகப் பார்க்கப்படும், பொது விநியோகத் திட்டம் (PDS = Public Distribution System) பற்றிய சமூக அடிப்படைத் தேவை அறியாத சிறுபிள்ளை யாரோ சொன்னதென்று இரண்டாம் உதாரணத்தைத் தூர‌ விலக்கும் என்னைப் போன்றவர்கள் சிலரும் உண்டு. அம்பானிகளுக்கும் டாட்டாக்களுக்கு கொடுக்கும் மானியங்கள் பற்றியோ, 'சன்டேன்னா ரெண்டு' என்று ஏழை இந்தியனை வெறும் கவர்ச்சியின் வாடிக்கையாளானாகவே வைத்திருக்கும் அவர்களின் தொழில் தர்மம் பற்றியோ கேள்விகள் கேட்காமல், தனது வன்மத்தையெல்லாம் ஏழைகளின் மீதே அச்சிற்றறிவாளர்கள் காட்டுகிறார்கள் என நான் மேலும் கூறுவேன்.

மக்களோடு இன்று நன்கு கலந்துவிட்ட தீபாவளி வெள்ளைக்காரனுக்குச் சற்று முன்னால் வந்த ஒரு சித்தாந்தம் என்றோ, கம்பர் முதல் கபீர்தாசர் வரை கண்டிராத‌ ஓர் இடத்திற்கு யாரோ சிலர் ரசீது வைத்திருப்பதாக விதைக்கப்பட்ட சித்தாந்தம் சமீபத்தியது என்றோ ஆராய்ச்சியாளர்கள் சொன்னால் பலரும் நம்பத் தயாரில்லை. தமிழ்ப் புத்தாண்டையே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் மாற்றிக் கொண்டாடுகிறோம். அப்படியானால் கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தும், பணத்தின் மீது கட்டப்பட்ட இவ்வுலகத்தின் கதை?  Cash என்ற வார்த்தை சீன மான்டரின் மொழியில் இருந்து வந்தது. Cash காசு பணம் துட்டு Money எல்லாவற்றிற்கும் மூலமாகப் பண்டமாற்று முறையைச் சொல்கிறோம். சந்தை வந்தது என்கிறோம். பின்னாளில் கடன் வட்டி வரி கிஸ்தி Tax வந்தது என்கிறோம். பணம் பரவலாக்கப்படும்போது தடையற்ற சந்தை தடையுறுகிறது என்கிறோம். நான் ஏற்கனவே சொன்னது போல், பரிணாமப் படிகளில் கொஞ்சம் திரும்பிப் பார்த்து, இச்சித்தாந்தங்கள் மனிதகுலத்தில் பல்வேறு காலங்களில் எப்படி பரிணாமம் பெற்றன என ஆராய்ந்தால்? பண்டமாற்று, தடையற்ற சந்தை போன்ற சித்தாந்தங்கள் மனிதகுலத்தின் பொதுப் புத்தியில் மிக மிகச் சமீபத்தில் திணிக்கப்பட்ட சித்தாந்தங்களாக இருந்தால்? புத்தகத்திற்குள் போகலாம்.

Anthropology. தமிழில் மானிடவியல் என்பது மனித இனம் பற்றிய கல்வித்துறை. மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும் உயிரியல் நிலையிலும் கடந்த கால மக்களையும் சமகால மக்களையும், அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும் ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக ஒன்றாக விக்கிபீடியா விளக்குகிறது. மானிடவியல் ஆய்வாளரான ஆசிரியர் டேவிட் கிரேபர்  இடதுசாரி சிந்தனையுள்ள கலகக்காராகவும் களப்பணியாளராகவும், நம் காலத்தில் வாழும் மிகச்சிறந்த அறிவுஜீவிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். Occupy Wallstreet போராட்டங்களைப் பற்றி வலைத்தளங்களில் வாசித்துக் கொண்டிருந்த வேளையில் போராட்டத்தில் பங்குபெற்றவ‌ர்களில் முக்கியமானவராகவும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை மக்கள் மன்றத்தின் மூலம் ஒருங்கிணைத்ததில் பெறும் பங்காற்றியவராகவும் ஆசிரியரைப் பற்றி அறிய நேர்ந்தது. இவருடைய இப்புத்தகம் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
(http://www.wikipedia.org)
ஆம். பண்டமாற்று, தடையற்ற சந்தை என்ற இரு சித்தாந்தங்களும் தவறு என்று மானிடவியல் ஆய்வின் மூலம் விளக்குவதே இப்புத்தகம் என்று எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுவதற்குக் காரணம், இப்புத்தகம் இவ்விரண்டையும் தாண்டி மனித வரலாற்றின் பல்வேறு காலங்களின் பல விசயங்களை உள்ளடக்கியது. மீண்டும் இவ்விரு விசயங்களையே எடுத்துக் கொள்வோம். இவை ஒன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மக்கள் விவாதங்களின் விளம்பர இடைவேளைகளில் கண்டிபிடிக்கப்பட்டு, முகநூலில் Like செய்து பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை வைத்து உண்மையாகிப் போன சித்தாந்தங்கள் அல்ல. நம் பாடப் புத்தகங்களிலும், பொருளாதாரத்திலும் அடிக்கடி சொல்லப்படும் உதாரணங்கள் தான் இவை. இவை பொய் என்றால் பல கேள்விகள் எழுகின்றன.
Free Market என்று ஒன்று கிடையாதென்றால் Market? 
Market என்று ஒன்று கிடையாதென்றால் பணம்? 
பணம் என்று ஒன்று கிடையாதென்றால் பண்டமாற்று? 
பண்டமாற்று என்று ஒன்று இல்லாமல் எப்படி தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன? 
இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமில்லாது அதற்கான விடைகளையும் பணம் உருவாவதற்குக் காரணமாக இருந்த கடனின் வரலாற்றையும் மானிடவியல் ஆய்வின் மூலம் விளக்குவதே இப்புத்தகம். DEBT - The first 5000 years. முதல் 5000 ஆண்டுகளில் கடன்.

மொத்தத்தில் முதலாளித்துவ‌ சிந்தனைகளின் அடித்தளத்தைக் கருத்தியல் ரீதியாக மானிடவியல் ஆய்வின் மூலம் தகர்க்கிறது இப்புத்தகம். முதலாளித்துவத்தின் மீதான ஒரு வன்மாக இல்லாமல் ஒரு அறிவார்ந்த விவாத‌த்தை (intellectual discourse) முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலும், பணம் கடன் இவற்றின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் நோக்கிலும் எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. இப்புத்தகத்தைப் பற்றி எழுதும் போது 5000 வருட வரலாற்றில் ஒரு வாசகருக்கு எப்பகுதிகளை எடுத்துக் கூறுவது, அதை எப்படி கோர்வையாகச் சொல்வது என்ற சிக்கல். அதைத் தவிர்ப்பதற்காக கோர்வையாக இல்லாமல் போனாலும் ஒரு சில பகுதிகளை மட்டும் கூறிவிட்டு மிச்சத்தை வாசகரின் வாசிப்பிற்கே விட்டு விடுகிறேன். பண்டமாற்றிலிருந்து பணம், பணத்திலிருந்து கடன் உருவாகியதாக பொருளாதாரப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன‌. மானிடவியல் ஆய்வின்படி பண்டமாற்று நிகழவில்லை; மாறாக கடன் சொல்லி வாங்கிக் கொள்வதே நடந்திருக்கிறது. உதாரணமாக, பிரேம் என்பவ‌ருக்குப் பானை தேவைப்பட்டால், பானைகள் தயாரிக்கும் சேகரிடம் பேச்சுவாக்கில் தன் தேவையைக் கூறுவார். அன்றோ மறுநாளோ சேகர் பானையைப் பரிசாக வழங்குவார். பிறகு என்றைக்காவது சேகருக்குத் தேவையேற்படும் போது பிரேம் பரிசாக வழங்குவார். அது ஒரு மாதம் கடந்தோ, ஒரு வருடம் கடந்தோ கூட இருக்கலாம். அதேபோல் வாங்கிய பொருளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்க வேண்டும். அதே அளவு திருப்பிப் கொடுக்கப்பட்டால் உறவு முறிந்ததாகப் பொருள்படும். ஆக ஒரு சமுகத்தில் ஒருவருக்கொருவர் எப்போதும் கடன்பட்டவராகவே இருக்க வேண்டும். 

அதே காலகட்டத்தில் பணமாக செம்பு கம்பிகள், வாசனை திரவியங்களுக்குப் பயன்படும் மரக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை வைத்து நீங்கள் சந்தையில் பொருள் வாங்க முடியாது. மாறாக அவை தீர்க்க முடியாத கடனைக் குறிக்கவே பயன்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஓரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவளுடைய பெற்றோருக்கு 40 செம்பு கம்பிகளையோ அல்லது ஆடு மாடுகளையோ கொடுக்க வேண்டும். இது வரதட்சணை போல் அல்லாமல் அவர்களுடைய‌ பெண்ணுக்கு இணையாக தன்னால் எதையும் கொடுக்க இயலாது; நான் தீர்க்க முடியாத கடன்பட்டிருக்கிறேன்; அதன் அடையாளமாக இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பதே ஆகும். அதேபோல் குழந்தை பெற்றாலும் பெண்ணுக்குத் தீர்க்க முடியாத கடனை உணர்த்துவதற்காக ஏதாவது கொடுக்க வேண்டும்.
(http://www.wikipedia.org)

விஞ்ஞான அறிவியல் பெண்ணின் குரோமசோமில் இருந்து தான் ஆண் உருவானாதாகச் சொல்கிறது. குழுக்களாக ஓரிடத்தில் தங்கி வாழ மனிதயினம் ஆரம்பித்த போது, ஆண் வேட்டையாடப் போயிருக்கிறான்; பெண் குழுத் தலைவியாக இருந்திருக்கிறாள் என்று வரலாற்று அறிவியல் சொல்கிறது. தாய்வழிச் சமூகங்களாகத் தான் மனிதயினம் நாகரீகப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாக மானிடவியலும் சொல்கிறது. இன்றும் தாய்வழி சமூகத்தைப் பின்பற்றும் பழங்குடியினரிடையே வரதட்சணையும், பணமீட்டும் வெறியும், பெண்விரோதக் குற்றங்களும் இல்லாததைக் காணலாம். சந்தையும் பணமும் உருவான பின்பு, தாய்வழி சமுகமாக இருந்தது தந்தைவழி சமுகமானது. எது ஒரு பெண்ணுக்கு இணையாக எதையுமே த‌ன்னால் கொடுக்கமுடியாது என்று உணர்த்தியதோ, அது ஒரு பெண்ணின் விலையாகிப் போனது. இந்த இடத்தில் விவிலியத்தில் வரும் நெகேமியா கதையில், கடன் வாங்கிய தகப்பனை விட்டுவிட்டு மகளைத் தூக்கிச் செல்வதின் காரணத்தைச் சிந்திப்பது அவசியம் என்கிறார் ஆசிரியர். பல்வேறு புராணங்களில் இது போன்ற கதைகள் இருந்தாலும்,  இதைச் சாதாரணமாக ஆதிகாலம் முதல் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகமுடியாது. ஏனென்றால் இந்தப் பழக்கம் இடையில் வந்துசேர்ந்ததுதான். கடனிற்காகப் பெண்ணை அல்லது பிள்ளைகளை விற்பதென்பது சந்தையும் பணமும் வந்த பிறகு தான் நடந்தேரியது. அதாவது, 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பராமாயணம் சொன்னாலும், கடன் என்ற சொல்லுக்கு இலங்கை வேந்தன் காலத்தில் இருந்த அதே அர்த்தம், கம்பர் காலத்தில் கண்டிப்பாக இல்லை. நம் காலத்து மீட்டர் வட்டியும், EMIம் கம்பர் காலத்தில் இல்லை.

சந்தை எப்படி உருவாகியது என்பதற்கு நாம் ஏன் வரி செலுத்த ஆரம்பித்தோம் என்பதை உணர்ந்து கொள்வது அவசியமானது. பெரும் படைகளைப் பராமரிப்பதின் சிக்கலை உணர்ந்த மன்னர்கள், படை வீரர்களுக்குத் தங்கத்தையோ வெள்ளியையோ காசாகக் கொடுத்துவிட்டு மக்களிடம் அதை வரியாக செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தனர். விளைவு, சந்தை உருவாக்கம். வரி செலுத்துவதற்கான காசைப் படைவீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தான் பெறமுடியுமென்ற நிலை உருவானது. எங்கெல்லாம் மாநிலங்கள் / மாகாணங்கள் உருவானதோ அங்கெல்லாம் சந்தையும் பணமும் உருவானது. மாநிலங்கள் / மாகாணங்களுக்குக் கீழ் வராத தேசங்கள் அனைத்தும் தாய்வழி சமுகமாகவும், சந்தையும் பணமும் இல்லாத சமுகமாகவும் இருந்திருக்கின்றன‌. இந்த இடத்தில் ஆடம் ஸ்மித்தின் தடையற்ற சந்தைக்கு அடிப்படையாக இருக்கும் நியுட்டனின் சிந்தனை பற்றியும் தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன். இறுதியாக சில அரசியல் நிகழ்வுகளைச் சுருக்கமாக பார்த்துவிடலாம்.

மூன்றாம் உலக நாடுகள் எப்படி கடனில் தள்ளப்பட்டன என்பதற்கு, மடகாஸ்கரையும் கெய்ட்டியையும் உதாரணங்களாகச் சொல்லலாம். மடகாஸ்கரின் மீது படையெடுத்து வெற்றிபெற்ற பிரான்ஸ், தன் படையெடுப்பிற்கான செலவுகளுக்கு மடகாஸ்கர் கடன்பட்டிருப்பதாக அறிவித்தது. இந்த இடத்தில் வெற்றிபெற்ற நாடுகள் எப்போதும் செய்கிற செயல்தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கெய்ட்டி பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்ததற்காக கடனில் தள்ளப்பட்டது. மடகாஸ்கர் கடனைக் கட்டமுடியாமல் தவித்தபோது சமூக நலத்திட்டங்களைக் கைவிடக்கோரி உலக நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியதால், கொசு ஒழிப்புத் திட்டத்தைக் கைவிட்டு பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களைப் பலிகொடுக்க நேர்ந்தது. அதே நேரத்தில், ரிச்சர்ட் நிக்ஸன் காலத்தில் அமெரிக்கா, தங்க நியமத்திலிருந்து விலகி வெளிநாடுகளில் இருக்கும் டாலருக்கு இணையாகத் தங்கத்தைப் பெறமுடியாது என்று அறிவித்தது. தன் படைபலத்தின் மூலம் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளை மதிப்பில்லா டாலரைப் பயன்படுத்துபடி அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் கடனைத் திருப்பி செலுத்தும்போது டாலரை ஏற்றுக் கொள்ள மறுத்து, தங்கத்தில் செலுத்த வற்புறுத்தியது. இதனால் டாலரிலிருந்து யூரோவில் வர்த்தகம் செய்ய முயற்சிகள் மேற்கொண்ட சதாம் ஹுசைனுக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்கே தெரியும்.

பணம் கடன் பற்றிய புத்தகம் என்பதால் நிறைய‌ அரசியல் நிகழ்வுகள் இதில் பின்னிப் பிணைந்திருக்கின்றன‌. உதாரணமாக, அர்த்தசாஸ்திரத்தில் குடியாட்சியை எப்படி நயவஞ்சகமாக ஓழிப்பது என்பது பற்றியும், குடிமக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யாமல் வைத்திருந்தால் தான் தன் தேவைகளுக்கு உடனடியாக அவைகளைத் திரட்ட முடியும் என்று இருப்பதாகவும், ஹர்சா கோவில்களைக் கொள்ளையடிப்பதற்குத் தனி அமைச்சகத்தை வைத்திருந்தார் என்றும், முஸ்லிம் மன்னர்களின் நோக்கம் கோவில்களில் இருக்கும் தங்கமே தவிர மதத்துவேசம் இல்லை என்றும், கூலிப்படையாக கிரேக்கப் போர்வீரர்கள் படையெடுப்புகளில் பங்கு பெற்றதாகவும், அவர்களுக்குப் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டதில் பங்கு வழங்கப்பட்டதாகவும், முதலில் புத்த மதமே கோவில்களை அமைத்ததாகவும் பிற்பாடு அவை இந்து கோவில்கள் ஆனதாகவும் இந்தியா பற்றிய சில உதாரணங்களைச் சொல்கிறது இப்புத்தகம். (1930ல் இந்திய ஆட்சிப் பணியில் ஒபியத்திற்கென்று (Opium) ஒரு தனித் துறையே இருந்தது)

மத்திய கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா என அனைத்துப் பகுதிகளும் இப்புத்தகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுபடுகின்றன‌. உதாரணமாக கிறித்துவம் சொல்லும் 10 கட்டளைகளில் 7 மற்றும் 10 ஒன்றுபோல் தெரிந்தாலும் தனித்தனியாகச் சொல்வதன் காரணம், கிறித்துவத்தில் பலவற்றிற்கு விளக்கம்கூற முற்பட்ட போது ஏற்பட்ட சித்தாந்த குழப்பங்கள், இந்து கிறித்த‌வம் இஸ்லாம் யூதம் போன்ற மதங்களில் கடன் குறித்த பார்வைகள், அவை காலப்போக்கில் எப்படி மாற்றமடைந்தன‌, தாய்வழி சமுகம் எப்படி தந்தைவழி சமூகமாக மாறியிருக்கக்கூடும், பெண்கள் முகத்திரை அணிந்து கொள்ளும் பழக்கம் எப்படி உருவானது, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது எத்தகைய அரசியல் மாற்றம் நிகழ்ந்தது, இப்படி பல அரசியல் நிகழ்வுகள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்றன‌.

கணித‌ம் போலவே, நோபல் பரிசுகளுக்கான துறைகளில் பொருளாதாரம் கிடையவே கிடையாது. ஆனால் பொருளாதாரமும் ஓர் அறிவியல் என்ற சிந்தனையைப் பரவலாக்கி, நோபல் பரிசுகளில் அதுவும் ஒன்று என்ற பிம்பத்தைச் சாமானியன் வரை கொண்டு சேர்த்திருப்பதும் சமீபத்திய சித்தாந்த இடைச்செருகல் தான். அதுவும் கூட இதுவரை பெண்களுக்குத் தரப்பட்டதில்லை. கடவுள் போல பொருளாதாரம். வசதியான பொய்கள் காலந்தோறும் திணிக்கப்படுகின்றன. ஏதோவொரு மாயை நோக்கி நடத்திச் செல்லும் அப்பொய்கள், பெரும்பாலும் பெண்விரோத செயல்களையே செய்கின்றன.

- பிரேம்குமார்
(http://premkumarkrishnakumar.wordpress.com)