Thursday, September 10, 2009

46. பெய்தலும் ஓய்தலும்

எனக்கு வண்ணதாசன் கதைகளில் அவர் கதாபாத்திரங்களுக்கு இடும் பெயர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பெயர்கள் முன் கேட்டு அறியாதவை, அல்லது அந்தப் பெயர்களைக் கேட்டமாத்திரத்தில் மனதில் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகிவிடுகின்றது. இந்தப் பெயர்கள் உருவாக்கும் கிளர்ச்சிகளே கதையின் வாசிப்பை நெருக்கமாக்கி விடுகின்றன

-எஸ்.ராமகிருஷ்ணன்


------------------------------------------
புத்தகம்:பெய்தலும் ஓய்தலும்
ஆசிரியர்:வண்ணதாசன்
வெளியீடு:சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு:2007
விலை:ரூ 60
பக்கங்கள்:136

------------------------------------------

தமிழ்ச்சிறுகதை வட்டத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு புள்ளி வண்ணதாசன். வண்ணதாசன் எனும் பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி எனும் பெயரில் கவிதைகளும் எழுதி வரும் திரு.கல்யாணசுந்தரம் திருநெல்வேலியில் வாழ்கிறார். இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான திரு.தி.க.சி இவரது தந்தை என்பது குறிக்கத்தகுந்தது.சுமார் 40 ஆண்டுகாலமாக தமிழ் எழுத்துலகில் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக இருந்து வரும் வண்ணதாசன் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் பெய்தலும் ஓய்தலும். வெகு நாட்களாக நான் தேடியலைந்த வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்பு நண்பர் பிரவின்ஸ்காவிடமிருந்து கிடைத்தது. அது வேறு புத்தகம். அதைப் படித்து முடிக்குமுன்னர் சென்ற வாரம் லேண்ட் மார்க்கில் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருந்தபோது இத்தொகுப்பு கிடைத்தது.

'எழுதிக்கொண்டே வருவார்; கை வலித்தால் கதையை முடித்துவிடுவார்' என்று வண்ணதாசனின் எழுத்தைப் பற்றி ஒரு விமர்சனம் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மையோ என்று கூடத்தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்துபடிக்கையில் சிறுகதையின் இன்னொரு பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. உச்சகட்டத்தில் மட்டும் செய்தியை வைத்துவிட்டு, முந்தைய பக்கங்களை வெறும் வார்த்தைகளை இட்டு நிரப்பும் வேலை இவர் கதைகளில் இல்லை. ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு விவரணையிலும் அழகும், யதார்த்தமும் பெருகிக் கிடக்கின்றன.

'வண்ணதாசன் எழுத்தில் ஓடும் ஆறு' என்று எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இத்தொகுப்பைப் படிக்கையில் எனக்கு இந்த நான்கு வார்த்தைகளின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத்தொடங்கியது. அப்படி ஓர் அசாத்திய ஓட்டம். எங்கும் தேங்காமல், எப்போதும் இப்போது பிறந்ததுபோன்ற புத்துணர்வோடு ஓடுகின்றன எழுத்துகள். ஆற்றின் பிரவாகம் கதைகளெங்கும் காணக்கிடைக்கிறது. ஆற்றுக்குத் தொடக்கம் ஏது? முடிவு ஏது? ஆறு என்றதும் கரையும், காற்றும், கரையோர மரமும், பாலமும், நீர்ச்சுழியும் மனதில் வந்து போகின்றன. ஆறு என்பது ஆறற்றதும் சேர்ந்ததுதானே!

இத்தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கதைகள் மனிதர்களின் பழைய நினைவுகளைக் கிளறுபவையாக இருக்கின்றன. பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்து சந்தோஷிக்கும், அல்லது துக்கப்படும் இயல்பு நம் எல்லோரிடமும் தானாகவே வந்தமைந்து விடுகிறது. மீண்டும் நினைத்துப் பார்த்துச் சிரிக்க அல்லது அழுவதற்கான நிகழ்வுகள் என்று எல்லோரிடமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தக் கதைகளின் அமைப்பு நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வோடு தொடங்குகிறது; நினைவுகளினூடே பயணித்து கொஞ்சம் பழைய நாட்களைத் தேடிப் பார்த்து விட்டு மீண்டும் இன்றைய நாளில் வந்து உச்சமடைகிறது. இந்தப்பாணியை பல கதைகளில் என்னால் பார்க்க முடிந்தது. சிறுகதைக்கான உத்தியில் இது ஒரு நல்ல முறை.

எல்லாக்கதைகளிலும் 'நான்' தான் பிரதானப் பாத்திரமாக இருந்து கதையை வழிநடத்துகிறது. இந்த 'நான்' ஒருவேளை வண்ணதாசனே தானோ என்ற சந்தேகம் பல இடங்களில் கிளர்ந்தெழுகிறது. பாத்திரத்தின் வயது, சூழ்நிலை இவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது இந்த உணர்வு மேலிடுகிறது. ஆசிரியரும் நான் என்ற பாத்திரத்தின் மீது தன் எண்ணங்களைத் திணிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எல்லாப்பாத்திரங்களின் மீதும் கூட ஆசிரியரின் ஆதிக்கம் இருக்கும் அல்லவா?

இந்தக் கதைகளின் பொதுவான இன்னொரு அம்சம், மிகச்சாதாரணமாக நாம் தினசரி பார்க்கக்கூடிய மனிதர்களின் கதைகள் இவை. எப்படி எல்லோருக்கும் புரட்டிப் பார்க்க சில நினைவுகள் உண்டோ, அதே போல எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளவென்று சில கதைகளும் இருக்கும். உணர்ச்சிகள் கொட்டிக்கிடக்கும் கதைகள். அந்தக் கதைகளைத்தான் தான் அறிந்து கொண்ட, தான் உணர்ந்துகொண்ட வழியில் எழுதியிருக்கிறார் வண்ணதாசன்.

கதையின் முதல் வரியே கதைக்குள் நம்மை இட்டுச்சென்றுவிடும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

'சுந்தரம் எப்போதும் இப்படித்தான். எப்போது அழுவான் என்று சொல்ல முடியாது....'

'இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை....'

'இந்தத் தடவையும் மாரிச்சாமியைப் பார்க்க முடியவில்லை...'

'என்ன பேசப்போகிறேன் என்பதை இன்னும் தீர்மானிக்கமுடியவில்லை. அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது...'

'இப்போதெல்லாம் ஒருத்தரைப் பார்த்தால் இன்ன்னொருத்தர் ஞாபகம் வந்து விடுகிறது...'

'அழைப்பு மணியை அழுத்தியாகி விட்டது. யார் திறப்பார்கள் என்று தெரியவில்லை...'

'உங்களை யாரோ கூப்பிடுகிறார்கள் - அனுஷா என்னிடம் சொல்லும்போது நான் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன்...'


இந்த வரிகளைக் கொஞ்சம் ஆழ்ந்து படித்துப் பாருங்கள். இவற்றுக்குள்ளேயே எத்தனையோ கதைகள் இருப்பதாகத் தோன்றவில்லை? இப்படித்தான் வரிக்கு வரி கதைகளை வைத்து ஆச்சரியப்படுத்துகிறார் ஆசிரியர்.

பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் எஸ்ராவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே அல்லவே! பெயர் ஒரு குறியீடு; ஒரு நினைவு; ஒரு நிஜத்தின் படி; இந்தக் கதைகளில் வரும் பெயர்களும் என்னோடு தொற்றிக்கொண்டுவிட்டன. சிவஞானம், பி.ஷரோன் சிறுமலர், மீரா, லீலாக்கா, குணசீலன் சார், இசக்கி, நாச்சியார், கிருஷ்ணம்மா இந்தப் பெயர்களையும் மனிதர்களையும் பிட்டத்தில் ஒட்டிக்கொள்ளும் ஆற்றுமணல் போல தட்டி உதிர்த்துவிட முடியுமா என்ன?

நான் மேற்சொன்ன விஷயங்கள் வண்ணதாசனின் ஒட்டுமொத்தக் கதைகளுக்கும் கூடப் பொருந்தலாம். அந்தத் தெளிவு இன்னும் எனக்கு வரவில்லை. இன்னும் இவர் எழுத்தை நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.

தொகுப்பின் முன்னுரையை மட்டும் பத்து முறைகளுக்கு மேல் படித்திருப்பேன். அத்தனை ஆழமான வரிகள். ஒரே ஒரு உதாரணம், இன்றைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் போக்கில் வருகிறது இந்த வரி "நசுங்கிய காலியாக்கப்பட்ட பற்பசைக் குழாய்களைப் போலாகிவிட்டன வயதானவர்களின் முகங்கள்"

இந்தப் பதிவினை முடிக்க, எஸ்ராவின் விரல்களைக் கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்கிறேன்...

"
'யானையைக்கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து'


என்று வண்ணதாசன் எழுதியிருக்கிறார். இதுதான் அவர் படைப்புகளை ஏன் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று கேட்கும் வாசகனுக்கான நிரந்தர பதில். கண்ணில் படும் பருண்மைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். மண்புழுக்களைப் பற்றி அக்கறை கொள்ள ஈரமான மனதும், ஆழ்ந்த கவனமும், சக உயிர்களின் மீதான அன்பும் வேண்டும். அது வண்ணதாசனிடம் நிறையவே இருக்கிறது"


-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Saturday, September 05, 2009

45. பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

--------------------------------------------------------------------------
புத்தகம்: பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)
ஆசிரியர்: பலர்
தமிழில் மொழி பெயர்த்தவர் : யுவன் சந்திரசேகர்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 110 ரூபாய்
பக்கங்கள்: 215
கிடைத்த இடம்: http://www.udumalai.com

--------------------------------------------------------------------------

மணற்கேணி புத்தகம் மூலம் ஆசிரியரைத் தெரிந்து கொள்வதற்குமுன், தலைப்பின் பெயரால் ஈர்க்கப்பட்டு வாங்கிய புத்தகம் இது. அடையாளம் தெரியாத எந்த ஒரு மனிதனும், நமக்குப் பெயரற்ற யாத்ரீகன் தானே!ஜப்பான், அமெரிக்கா, வியட்நாம், சீனா, கொரியா என்று பல்வேறு இடங்களில், கி.மு.வில் இருந்து சென்ற நூற்றாண்டுவரை எனப் பல்வேறு காலகட்டங்களில், ஆண் பெண் வேறுபாடில்லாமல் எழுதப்பட்ட சில ஜென் கவிதைகளின் தமிழாக்கம் இப்புத்தகம். எல்லாக் கவிதைகளும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஆசிரியர் பெயர் இல்லாத கவிதைகளும் உண்டு.

ஜென் என்றால் என்னவென்று தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு, புத்த மதத்தின் ஒரு பிரிவான மஹாயான மரபின் நீட்சிதான் ஜென் மார்க்கம் என விளக்கம் தருகிறார் ஆசிரியர். எதிர்பாராத விசித்திரமான தருணங்களில் ஒரு தனிமனம் எய்தும் ஞானக் கிளர்ச்சியின் மூலமே ஜென் என்ற வித்தியாசமான மனத்தளம் உருவாகிறதாம். குறுங்கதைகள், புதிர்கூற்றுகள், கவிதைகள் வடிவில் வெளிப்படுகிற ஜென் எழுத்திலயக்கியத்தில், கவிதாம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து ஐந்து பெருந்தலைப்புகளில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.இக்கவிதைகளின் மூலவடிவம் சித்திரமொழியில் எழுதப்பட்டது. ஆங்கிலம் வழியாக மூன்றாம் கையாகத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மொழிபெயர்ப்பாளரின் வரையறைகளையும், மொழி ஆளுமை பலவீனங்களையும் ஈடுகட்டுவதற்காக இக்கவிதைகளின் ஆங்கில வடிவத்தையும் ஒவ்வொன்றின் கீழேயும் கொடுத்திருக்கிறார்.

கவிஞர்களின் பெயர் தெரியாத பட்சத்தில் கவிதையின் கீழே நட்சத்திரக் குறி மட்டும் கொடுத்திருக்கிறார். பல்லாயிரம் மைகள், நூற்றாண்டுகள் தாண்டி இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கத் தகுதியான கவிதைகளைத் தந்தவர்களை 'யாரோ' என்று குறிப்பிடுவது சரியில்லை என்கிறார். சரிதான்!

என்னைக் கவர்ந்த சில கவிதைகள் இதோ:

வாழ்வு பறிபோனதற்குத்
துக்கித்திருப்பேன்.
ஏற்கனவே
நான் இறந்துவிட்டேனென
அறியாமலிருந்தால்.

அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக் கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.

பண்ணை வீட்டின்
கூரை எரிந்துவிட்டது.
இனி, என்னால்
பார்க்க முடியும்
நிலவை.

(தண்ணீர் தேசம் புத்தகத்தில் வைரமுத்து இக்கவிதையை மேற்கோள் காட்டியதாக ஞாபகம்)

நான் இறந்த பின்
ஏதேனுமொரு விடுதியில்
ஒயின் பீப்பாய்க்கு அடியில்
புதையுங்கள் என்னை.
ஒருவேளை அதிர்ஷ்டவசமாய்
மதுப் பீப்பாய் லேசாகக்
கசியக் கூடும்.

ஜென் மற்றும் கவிதைப் பிரியர்களுக்கு.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Wednesday, September 02, 2009

44. தமிழகத் தடங்கள்

பதிவிடுகிறவர்கள் சேகரும், சேரலும்

Know the past to divine the future

--------------------------------------------------------------
புத்தகம்: தமிழகத் தடங்கள் (முதல் தொகுதி)
ஆசிரியர்: மணா
பதிப்பகம்: உயிர்மை
விலை: 90 ரூபாய்
பக்கங்கள்: 144

--------------------------------------------------------------"அலைச்சலில் ருசியிருந்தால் அது லேசில் அலுப்பதில்லை". தூரத்தை வகுத்து, களைப்பைக் கழித்து, தீவிரத்தைப் பெருக்கி, இன்னோர் அலைச்சலைக் கூட்டித் தந்து போகிறது ஒவ்வொரு அலைச்சலும். அழகும், தொன்மையும், முதுமையின் சாயலும் படர்த்திருக்கும் தமிழக இடங்களை அலைந்து தேடிப்போய் எழுதி, புத்தகப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மொத்தம் 40 இடங்கள். மேற்கோளாகச் சிற்சில இடங்களும் கூட.

1300 வருடங்களுக்கு முன் மதத்தின் பெயரால், திருஞானசம்பந்தர் முன்னிலையில், 'பெரிய புராண'க் கணக்கின்படி 8000 பேர் கழுவேற்றிக் கொல்லப்பட்ட சாமநத்தம் என்ற ஊர்தான் இந்நூலின் முதல் அறிமுகம். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்விடம், சாம்பல்நத்தம் என்பதில் இருந்து மருவி சாமநத்தமானதாக ஆசிரியர் கூறுகிறார். நானும் அவ்வூர் சென்று பார்த்தேன். கழுவேற்றப்பட்டதாக் சொல்லப்பட்ட இடத்தில் திருஞானசம்பந்தருக்கு ஒரு கோவில் உள்ளது. சமணநத்தம் என்பதுதான் மருவி இப்போதைய பெயர் பெற்றதாக ஊர்மக்களில் சிலர் கூறினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சமணர்கள் கழுவேற்றப்பட்ட காட்சி; ஆசிரியர் சொன்னபடி 'சைவக் கோவிலில் அசைவம்'.

சாமநத்தத்திற்குச் சமயம் என்றால், குமரி மாவட்ட தாலியறுத்தான் சந்தை, நெல்லை கிளாரிந்தா சர்ச், நாகையில் கீழ்வெம்மணி என்று சாதியால் புறக்கணிப்பட்ட வரலாற்று இடங்களையும் சொல்கிறார். சென்னை யுத்தக்கல்லறை, நெல்லையில் ஆஷ்துரையின் கல்லறை, வா.உ.சி. இழுத்த செக்கு, மதுரை காந்தி மியூஸியம் போன்ற சுதந்திரப் போராட்ட சம்மந்தப்பட்ட இடங்களும் உண்டு. 'தமிழ் நாடு' என்று சொல்லப்படும் நிலப்பரப்பில் வாழும் நம்மில் பலருக்கு விருதுநகர் தேசபந்து மைதானம் தெரியாமல் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியபோது, கொஞ்சம் குத்தியது.

மத ஒற்றுமையை வலியுறுத்தும், மதுரை சம்மட்டிபுரம் மருதநாயம் தர்ஹா, காதலைப் பறைசாற்றும் எம்.ஆர்.ராதாவின் காதல் சின்னம் இன்னும் பல இடங்களைப் புத்தகம் முழுவதும் தூவியிருக்கிறார் ஆசிரியர். அலைந்து, அவற்றைப் பொறுக்கி, அடுக்கி, தத்தம் அணிகலன்களில் சேர்த்து அழகுபடுத்திக் கொள்வது அவரவரின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் பொருத்தது. இப்புத்தகம் சம்மந்தமான எனது அலைச்சல்கள் உங்களுக்காக:

அ) படிப்பதற்கு முன்

1) தஞ்சை சரஸ்வதி மஹால்
2) வீரபாண்டிய கட்டபொம்மன் இறந்த கயத்தாறு
3) நெல்லை சுல்லோச்சனா முதலியார் பாலம்

ஆ) படித்தபின் இதுவரை

1) சாமநத்தம்
2) மதுரை காந்தி மியூஸியம் (இது குறித்த பதிவு இங்கே..)இ) இனிமேல்

1) ஆவுடையார் கோவில் - பலருக்குப் பரிட்சயமில்லாத இவ்வூர், என் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இரால் வாங்கவும், அலைவராத கடல் பார்க்கவும், கோயிலுக்குப் போகும்போது பஸ் மாறும் இடமாகவும் இதுவரை உபயோகப்படுத்தி இருந்தேன். ஆவுடையார் கோவிலின் சைவக்கோயிலின் மூலைமுடுக்கெல்லாம் இருட்டுக்குள் அலைந்திருக்கிறேன். அப்போது பயப்பட வைக்காத இருட்டு, இப்போது உலுக்கிவிட்டது. மதுரையின் கழுவேற்றத்தின் சாட்சிகள் இக்கோவிலும் இருக்கிறதென்கிறார் ஆசிரியர்.ஓர் ஆட்டோகிராப் பதிவில் விரிவாக என்னுடைய தளத்தில் சந்திக்கிறேன்.

2) சென்னை யுத்தக் கல்லறை - ஏர்போர்ட், சென்ட்ரல், கோயம்பேடு, தாம்பரம், மெரீனா பீச், அப்பல்லோ மருத்துவமனை. சென்னையைப் பற்றிய என்னுடைய அதிகபட்ச பொது அறிவு இதுதான் என்றாலும், நினைக்கும் இடங்களுக்குப் பைக்கில் கூட்டிச்செல்ல ஒரு வெள்ளைக்காரனை அடிமையாக வைத்திருக்கிறேன். அதனால் வெகுசீக்கிரம் பார்த்துவிடுவேன்.

3) வ.உ.சி. இழுத்த செக்கு - கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து, மத்திய சிறையை நாங்கள் விசாரித்தோம். அவர்கள் பார்த்த பார்வையும், எங்களின் இறுக்கமான பயணத்திட்டத்தில் கையைக்கடித்த நேரமின்மையும் எங்களை அதிவிரைவுப் பேருத்தில் ஏற்றிவிட்டு, ஈரோட்டிற்குப் போகச் சொன்னது. பெரியாரின் வீட்டைப் பார்க்க வேண்டி, வ.உ.சி,யின் செக்கைத் தவிர்த்தோம். அடுத்த முறை கோவை வரும்போது முதலில் பார்க்கப் போகும் இடம்.

4) கீழ்வெம்மணி - எனது நண்பன் கல்வெட்டு பிரேம்குமார் அறிமுகப்படுத்திய இடம். சம்பவம் நடந்த தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று 2005ம் ஆண்டு முடிவெடுத்தது. இதுவரை முடியவில்லை. ஜெயா அல்லது விஜய் டிவி செய்திகளில் அன்று பார்ப்பதோடு சரி. வரப்போகும் சமீபத்திய வருடங்களிலும் காலம் என்னை அனுமதிக்காதென்று எனக்கு நிச்சமாகத் தெரியும். கண்டிப்பாக பார்ப்பேன், மனித வாழ்க்கையின் நீளம் அதிகம்!

புத்தகத்தின் பெயரிலேயே இதை முதல் தொகுதி என்றுதான் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். நாங்கள் பார்த்த சில இடங்கள், முதல் தொகுதியில் இல்லை. அதுபோன்ற இடங்களை அடுத்தடுத்த தொகுதிகளுக்காக ஆசிரியருக்குப் பரித்துரைக்கலாம் என்று இருக்கிறோம். உங்கள் கருத்துகளை / இடங்களை எங்களுக்கு நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

-சேகர்
(http://jssekar.blogspot.com/)


பயணங்கள் அலாதியானவை. இலக்கற்று அலையவேண்டும் என்று துவங்குகிற பயணங்களும், சொல்லி வைத்தது போல் சில இலக்குகளைச் சென்றடைவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இலக்குகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும் அளவில் மகிழ்ச்சியே. மணாவின் இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் இடங்கள் தமிழகத்தில் பார்க்கவேண்டிய இடங்களாக யாருடைய பட்டியலிலும் இல்லாத இடங்களாகவே தோன்றுகின்றன. இந்த இடங்களைச் சுற்றுவதில் பெரிதாக என்ன கிடைத்துவிடப்போகிறது என்ற கேள்விக்கான பதிலை கேள்வி கேட்பவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம். கேள்வி கேட்பவர்களுக்கு, பதில் சொல்லியும் விளங்கப்போவதில்லை என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது. பாரதியின் கவிதை படித்த போது, 'கஞ்சா குடிப்பவனின் எழுத்தையா படிக்கிறீர்கள்?' என்று கேட்ட ஒரு தமிழனைப் பற்றி நண்பன் சேகர் என்னிடம் சொன்னபோது, சத்தியமாய் நான் நொந்துபோனேன். இந்த வியாக்கியானத்தைக் கொஞ்சம் ஓரமாக வைப்போம்.

ஓர் இனம் எப்படி இருந்தது என்பதை உணர்ந்தவர்களே, அது எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஆற்றல் படைத்தவர்களாகிறார்கள். தமிழினத்தின் நேற்றுகள் எப்படி இருந்தன என்பதற்கான சிற்சில ஆதாரங்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் இடங்களைக் குறித்த கட்டுரைகளாக இப்புத்தகத்தை வடித்திருக்கிறார் மணா. இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தியதோடு எனக்கு வாங்கியும் கொடுத்தவன் நண்பன் சேகர். புத்தகம் கைக்கு வந்ததும் நான் செய்த முதல் செயல், இதில் இருக்கும் இடங்களில் எத்தனை இடங்களை நான் ஏற்கனவே கண்டிருக்கிறேன், எத்தனை இடங்களைப் பற்றி கேள்வியேனும் பட்டிருக்கிறேன் என்பதுதான். முதல் கேள்விக்கு ஏதோ ஓர் ஒற்றை இலக்க எண்ணும், இரண்டாவது கேள்விக்கு இருபதுக்குள்ளான ஏதோ ஒரு எண்ணும் கிடைத்ததாக இப்போது நினைவு.

சுலோச்சனா முதலியார் பாலமும், தஞ்சையிலிருந்து ஒரு வெள்ளைக்காரரால் உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றப்ப்ட்டு பின் கிறித்தவ மதத்தில் சேர்ந்த ஒரு பெண் கட்டிய கிளாரிந்தா சர்ச்சும் உருவான கதைகளை இன்னும் நான் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கூடச் சொல்வேன்.

கயத்தாறு கண்ட பயணம் குறித்த பதிவு இங்கே....

ஊமைத்துரை அடைத்துவைக்கப்பட்ட சிறைச்சாலையை வெளியிலிருந்து மட்டும் பார்க்கும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. அடுத்த மாதத்தில் திட்டமிட்டிருக்கும் திருநெல்வேலி வட்டாரப் பயணத்தில் இந்த இடத்தைச் சென்று பார்த்துவிடவேண்டும்.

சரஸ்வதி மஹாலை எந்த விதத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை. அக வாழ்வில் நெறியற்ற வாழ்வு வாழ்ந்த ஒரு மன்னனின் புற அறிவுக்களஞ்சியமாக இன்றும் இருக்கிறது இந்நூலகம். பல மொழிகளில் பல துறைகள் பற்றிய புத்தகங்களைப் பத்திரப்படுத்தியிருக்கிறார்கள்.

கீழவெண்மணி, சாதீய வன்முறையின் வெளிப்பாடாக மட்டுமில்லாமல், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களின் அவலத்துக்கு இன்னும் ஒரு உதாரணமாக இன்னுமிருகிறது. நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த ஊரின் சரித்திரத்தை நான் தெரிந்துகொள்ள 18 வருடங்கள் ஆனது. 'வெண்மணி தியாகிகள் நினைவு வளைவு' என்கிற நினைவுச்சின்னத்தைப் பார்த்த பிறகுதான் இது குறித்த ஆர்வம் மேலிட, கொஞ்சம் செவி வழியிலும், புத்தகங்கள் மூலமும் சரித்திரம் படிக்கத் தொடங்கினேன். கூலி உயர்த்திக்கேட்டதற்காக சுமார் 42 மனிதர்களை ஒரே ராத்திரியில் ஒரு வீட்டில் வைத்து எரித்த கொடூரம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. இன்றும் இந்த ஊரின் வழி கடந்து செல்லும்போது, வயிற்றைப் பிசையும் உணர்வு ஏற்படும். இதை நேரில் பார்த்த, அந்த நாளை வாழ்ந்த மனிதர்கள் இன்னும் கூட உயிரோடிருப்பார்கள். அவர்களின் நினைவுகளில் அந்த இரவின் கருமை இன்னும் படர்ந்து கிடக்கக்கூடும்.

பின்குறிப்பு :

கீழ வெண்மணி சம்பவத்தை அடிப்படியாக வைத்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதி, சாகித்ய அகாடமி விருது பெற்ற 'குருதிப்புனல்' நாவல் இன்று காலை நண்பன் ஒருவனிடமிருந்து தற்செயலாகக் கிடைத்தது (என்ன மாதிரி design இது?). இன்னும் சில தினங்களில் அதை வாசித்து அது பற்றிய பதிவோடு வருகிறேன்.

-சேரல்
(http://seralathan.blogspot.com/)