Saturday, September 05, 2009

45. பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

--------------------------------------------------------------------------
புத்தகம்: பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைகள்)
ஆசிரியர்: பலர்
தமிழில் மொழி பெயர்த்தவர் : யுவன் சந்திரசேகர்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 110 ரூபாய்
பக்கங்கள்: 215
கிடைத்த இடம்: http://www.udumalai.com

--------------------------------------------------------------------------

மணற்கேணி புத்தகம் மூலம் ஆசிரியரைத் தெரிந்து கொள்வதற்குமுன், தலைப்பின் பெயரால் ஈர்க்கப்பட்டு வாங்கிய புத்தகம் இது. அடையாளம் தெரியாத எந்த ஒரு மனிதனும், நமக்குப் பெயரற்ற யாத்ரீகன் தானே!



ஜப்பான், அமெரிக்கா, வியட்நாம், சீனா, கொரியா என்று பல்வேறு இடங்களில், கி.மு.வில் இருந்து சென்ற நூற்றாண்டுவரை எனப் பல்வேறு காலகட்டங்களில், ஆண் பெண் வேறுபாடில்லாமல் எழுதப்பட்ட சில ஜென் கவிதைகளின் தமிழாக்கம் இப்புத்தகம். எல்லாக் கவிதைகளும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஆசிரியர் பெயர் இல்லாத கவிதைகளும் உண்டு.

ஜென் என்றால் என்னவென்று தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு, புத்த மதத்தின் ஒரு பிரிவான மஹாயான மரபின் நீட்சிதான் ஜென் மார்க்கம் என விளக்கம் தருகிறார் ஆசிரியர். எதிர்பாராத விசித்திரமான தருணங்களில் ஒரு தனிமனம் எய்தும் ஞானக் கிளர்ச்சியின் மூலமே ஜென் என்ற வித்தியாசமான மனத்தளம் உருவாகிறதாம். குறுங்கதைகள், புதிர்கூற்றுகள், கவிதைகள் வடிவில் வெளிப்படுகிற ஜென் எழுத்திலயக்கியத்தில், கவிதாம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து ஐந்து பெருந்தலைப்புகளில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.



இக்கவிதைகளின் மூலவடிவம் சித்திரமொழியில் எழுதப்பட்டது. ஆங்கிலம் வழியாக மூன்றாம் கையாகத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார். மொழிபெயர்ப்பாளரின் வரையறைகளையும், மொழி ஆளுமை பலவீனங்களையும் ஈடுகட்டுவதற்காக இக்கவிதைகளின் ஆங்கில வடிவத்தையும் ஒவ்வொன்றின் கீழேயும் கொடுத்திருக்கிறார்.

கவிஞர்களின் பெயர் தெரியாத பட்சத்தில் கவிதையின் கீழே நட்சத்திரக் குறி மட்டும் கொடுத்திருக்கிறார். பல்லாயிரம் மைகள், நூற்றாண்டுகள் தாண்டி இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கத் தகுதியான கவிதைகளைத் தந்தவர்களை 'யாரோ' என்று குறிப்பிடுவது சரியில்லை என்கிறார். சரிதான்!

என்னைக் கவர்ந்த சில கவிதைகள் இதோ:

வாழ்வு பறிபோனதற்குத்
துக்கித்திருப்பேன்.
ஏற்கனவே
நான் இறந்துவிட்டேனென
அறியாமலிருந்தால்.

அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக் கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.

பண்ணை வீட்டின்
கூரை எரிந்துவிட்டது.
இனி, என்னால்
பார்க்க முடியும்
நிலவை.

(தண்ணீர் தேசம் புத்தகத்தில் வைரமுத்து இக்கவிதையை மேற்கோள் காட்டியதாக ஞாபகம்)

நான் இறந்த பின்
ஏதேனுமொரு விடுதியில்
ஒயின் பீப்பாய்க்கு அடியில்
புதையுங்கள் என்னை.
ஒருவேளை அதிர்ஷ்டவசமாய்
மதுப் பீப்பாய் லேசாகக்
கசியக் கூடும்.

ஜென் மற்றும் கவிதைப் பிரியர்களுக்கு.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: