Tuesday, May 15, 2012

89. கெட்ட வார்த்தை பேசுவோம் - பகுதி 1

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 
--------------------------------------------------------------------
புத்தகம் : கெட்ட வார்த்தை பேசுவோம் - பகுதி 1 (இலக்கியக் கட்டுரைகள்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்
வெளியீடு : கலப்பை (http://kalappai.in/)
முதற்பதிப்பு : 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 136 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------------------

கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழையும் போது, அந்நகரில் அவன் கொல்லப்படுவான் என்று அறிந்திருந்த மதுரையின் மாடத்து மலர்கள் எல்லாம் அசைந்து, அவர்களை வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தன. பத்தாம் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் தற்குறிப்பேற்றணிக்கு உதாரணமாகச் சொன்னவை இவ்வரிகள். இளங்கோவடிகள் என்றாலே ஒரு சாமியார் என்ற பிம்பத்தை நமது பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு விதைப்பதாக மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் தமிழாசிரியர் வகுப்புக்கு வெளியே மிகவும் இயல்பாகப் பேசக் கூடியவர். அவரிடம் இருந்து சிலப்பதிகாரம் பற்றி விசாரித்தோம். கோவலனும் கண்ணகியும் திருமணமாகித் தழுவிக் கொள்ளும்போது, அவர்கள் கழுத்தில் உள்ள மாலைகள் பேசிக் கொள்ளும் பகுதி ஒன்று சொன்னார். அடடடடா. அன்றில் இருந்து இளங்கோவடிகளை இளங்கோ என்றுதான் சொல்கிறேன். அதன் பின், காமத்துப் பாலை முழுதும் படித்து, திருவள்ளுவர் மேல் உள்ள சாமியார் பிம்பத்தை நானே உடைத்துப் போட்டேன். புத்தகத்திலேயே வராமல் பல விசயங்கள் இதுபோல மறைக்கப்படுவது ஒருபுறம். பெண் இனப்பெருக்க மண்டலமும் மாதவிடாய் சுழற்சியும் வகுப்பில் நடத்தப்படப் போகும் ஆர்வத்தில் நாங்கள் எல்லாம் அமர்ந்திருக்க, அப்பக்கங்களை மின்னல் வேகத்தில் ஆசிரியர் கடந்து போனார். புத்தக‌த்தின் பல விசயங்கள் இதுபோல மறைக்கப்படுவது இன்னொருபுறம்.

ஐஸ்கிரீம் போன்ற அன்னியங்களைப் போதிக்கும் ஆங்கிலம். அதற்குக் கடன் வாங்கச் சொல்லும் கணக்கு. தூரத்தில் காட்டும் தமிழ். பார்க்க வைத்து சாப்பிடும் அறிவியல். அதையும் பறித்து ஓடும் சமூகவியல். நமது பாடத்திட்டங்கள் அப்படித்தான். இதை உணர்ந்தவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் பெருமாள்முருகன் அவர்களின் 'கெட்ட வார்த்தை பேசுவோம்'.

மணல்வீடு இதழில் பா. மணி என்ற பெயரில் ஆசிரியர் எழுதிக் கொண்டிருக்கும் தொடர்களின் முதல் தொகுப்பு இப்புத்தகம். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியத்தைத் தாள்களில் அச்சேற்றிய தமிழ் அறிஞர்கள், அவையல்கிளவி இடக்கரடக்கல் குஃறொடரன்மொழி என்று சில பகுதிகளை நீக்கி இருக்கிறார்கள் அல்லது மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி பதிப்பேறியவைகளைப் படித்து, பெண் பிள்ளைகள் கெட்டுப் போகக் கூடாதென, உரை நூல்களிலும் வகுப்பறைகளிலும் வேறுவிதமாக பொருள் சொல்லப்படுகின்றன. இது போன்ற இலக்கிய‌ ஓரவஞ்சனைகளின் தொகுப்பே இக்கட்டுரைகள்.

புத்தமதத் துறவியான மணிமேகலையைப் பாம்புப் ப‌டம் போன்ற அல்குலை உடையவள் என்கிறார் சீத்தலைச் சாத்தனார். இப்படிப் பெண்குறிக்கு அல்குல் என்ற ஆதிகாலத் தமிழ்ச் சொல்லை இலக்கியங்கள் தயக்கமின்றி தாராளமாகப் ப‌யன்படுத்தி இருக்கும்போது, இன்றைய எழுத்துலகம் யோனி என்ற சமஸ்கிருத சொல்லுடன் சமரசம் செய்து கொண்டிருப்பதையும், அச்சேற்றியவர்களும் உரையாசிரியர்களும் அல்குலுக்கு மூக்கு, முலை, இடை, ஆடை, தோள் என்று சம்மந்தமில்லாத பொருள் சொல்லி இருப்பதையும் குறுந்தொகை, தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி, பழமொழிநானூறு என்று பல உதாரணங்களுடன் சொல்கிறார்.

கம்பருக்கு என்று ஒரு தனிக் கட்டுரை ஒதுக்கி அண்ணாத்துரை அவர்கள் எழுதிய கம்பரசம் பற்றிச் சொல்கிறார். மலப்புழை தவிர பெண்ணுடம்பை வரிவரியாக வருணிக்கும் இலக்கியங்களுக்கு இடையில் ஆணுறுப்புக்கென தனிச் சொல்லாடல்களைப் பயன்படுத்தி, புணர்ச்சிக்கென தனி வழக்குச் சொல்களை உண்டாக்கிய‌ காளமேகப் புலவரைப் பற்றி மட்டுமே பாதிப் புத்தகத்திற்கு மேல் கட்டுரைகள் பேசுகின்றன.

நான் ரசித்த சில செய்யுள்கள்:

சீதையின் அல்குலைப் படாதபாடு படுத்தியிருக்கும் கம்பரசத்தில் ஒரு துளி:
வாம மேகலையிற வளர்ந்தது அல்குலே

கோமளவல்லிகளின் ஆடைக்குள்ளிருக்கும் அங்கங்க‌ளைக் கண்டு ஆராயக் கோதண்டபாணி, பிரம்மச்சாரி அனுமனிடம் கூறுகிறார்:
செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன்

சந்திரனைக் சேவலாகக் காவலுக்கு வைத்துவிட்டு பிறன்மனை விழைந்து அகலிகையை ஏமாற்றிய‌ பின் இந்திரன் ஆயிரம் கண்கள் பெறுவதைச் சொல்லும் பிர‌போத சந்திரோதயம் பாடல்:
அந்தா பதன் சொற்ற சாபத்தி னால்நொந் தகங் குன்றியே
முந்தா யிரம் கோச நெடுமா மரம்தூங்கும் முதுவா வல்போல்
நந்தா துடம்பெங்கும் நாலப் பழிப்பெய்தி நாகா திபன்
மந்தார நிழலூ டிருந்தாலும் வெந்தாப மாரா தரோ

சீரும் த‌ளையும் சிதையாம‌ல் 'மென்முலையார்' என்ப‌து 'பென்ம‌யில்நேர்' என்று ந‌ம‌து பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளில் சொல்லித் த‌ர‌ப்ப‌ட்ட‌ காள‌மேக‌ப் புல‌வ‌ர் பாட‌ல்:
காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வ‌ந்த‌த‌ற்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

பூட்டுவில் பொருள் கொள்ள‌ச் சொல்லும் காள‌மேகப் புல‌வ‌ரின் இன்னொரு பாட‌ல்:
மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி
இரும்படிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடவை தப்பும் பறை

நாத்திகர்கள் பெரும்பான்மையுடன் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில், 'பட்சி சாதி நீங்க, இந்தப் பகுத்தறிவாளரெ பாக்காதீங்க' என்ற வரிகளுக்கு எதிர்ப்பு வந்தபோது பெருந்தன்மையுடன் நீக்காமல் வெளியிட்டார்கள். பகவதி திரைப்படத்தில் 'போடாங்ங்கோ' என்ற பாடலுக்குக் கடும் எதிர்ப்பு வந்தபோது, கதாநாயகன் சொன்னார்: 'கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவரும் இப்படித்தான் பாடல் எழுதியிருப்பார்'. இன்றைய திரைப்பாடல்களின் நிலைமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. Who the F பாடலுக்குக் குழந்தைகள் ஆடிப் பரிசு பெறுவது சாதாரணமாகி விட்ட காலம். காதல் என்ற பண்டைய கெட்ட வார்த்தை இன்று அன்றாட‌ப் பேச்சுகளில் நல்ல வார்த்தையாகிப் போன‌து. முலை சயனி என்று சமய‌ நூல்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை ஆத்திகர்கள் கூட‌ சொல்வதில்லை. எச்சொல் யார்யார்க்கு எந்தெந்த நேரங்களில் கெட்ட சொல் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

வைரமுத்து அழகாகச் சொல்வார்: 'முத்தம் என்ற வார்த்தைக்குக் கட்டிலில் வேறு பொருள், தொட்டிலில் வேறு பொருள், பாடையில் வேறு பொருள். சொல்லின் பொருளைத் தீர்மானிப்பது சொல்லல்ல, காலமும் இடமுமே'. காலங்காலமாகச் செல்லுமிடமெல்லாம் நீச பாஷை என்று ஒதுக்கப்படும் தமிழ்மொழியின் சொல்வளங்களைக் காக்கச் சொல்லும் இதுபோன்ற புத்தகங்களை வெறும் தலைப்பை மட்டும் பார்த்து வெறுத்து ஒதுக்காமல் ஆதரவு தருவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்.
1. நண்பர் மு. ஹரிகிருஷ்ணன் http://manalveedu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
2. தம்பி சேரலாதன் http://seralathan.blogspot.in/2010/10/blog-post_28.html

அனுபந்தம்:
இப்பதிவிடுபவ‌ரும் இத்தளத்திற்குச் சொந்தக்காரரும் முன்பொரு காலத்தில் கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்துவதாக ஒரு விபரீத முடிவெடுத்து தளத்துக்காரர் மட்டும் அதைக் கச்சிதமாகப் பின்பற்றி வந்தார். அவருக்கும் ஒரு கதை சொல்லி, கெட்ட வார்த்தை பேச வைக்கும் சக்தியை மீட்டெடுத்த‌ பெருமை பதிவுக்காரரையே சாரும்.

இரண்டாம் பகுதி புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து,


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)