Thursday, January 10, 2008

27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.
- இயேசு கிறிஸ்து
---------------------------------------------------------------
புத்தகம்: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை
ஆசிரியர்: நளினி ஜமீலா
மொழி: மலையாளத்தில் இருந்து தமிழ்
விலை: ரூ.100
பக்கங்கள்: 183
பதிப்பகம்: காலச்சுவடு
----------------------------------------------------------------

நான் படித்த முதல் இரண்டு சுயசரிதைகளின் தாக்கத்தால், பொதுவாக நான் சுயசரிதைகள் படிப்பதில்லை. முஷாரப்பிற்கு அடுத்ததாக நான் படித்த சுயசரிதை இது; ஐந்தாவது சுயசரிதை இது.

புலிட்சர் பரிசு என்று ஒன்று இருப்பது, சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்தபோது, நான் பார்த்த சில புகைப்படங்களில் இதுவும் ஒன்று: அது எடுக்கப்பட்ட இடம், கொல்கத்தா நகரின் சோனாகன்ச். ஒரு பெண் ஆடை அணிந்து கொண்டிருப்பாள்; ஓர் ஆண் அந்த அறையில் இருந்து வெளியேறுவதற்காக கதவைத் திறப்பான்; இன்னொரு ஆள் உள்ளே வர தயாராக நின்றுகொண்டு இருப்பான்.

புனே நகரின் விலையுயர்ந்த பிள்ளையார் கோவிலுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். திரும்பும்போது அதன் அடுத்த வீதி வழியே சென்றோம். அந்த இடத்தின் பெயர் புதுவார்பேத் (புதன்பேட்டை) - புனே நகரின் சிவப்பு விளக்கு பகுதி. பைக்கில் இருந்து இறங்காமல் சாலையின் இருபுறங்களிலும் பார்த்துக்கொண்டே சென்றோம். வரிசையாக பெண்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களை ஆண்கள் எதிர் கடைகளில் இருந்து நோட்டம்விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒருவழிப்பாதை என்று பைக்கில் இருந்து இறங்கி தள்ளிகொண்டு செல்லும்போது, ஒருகாட்சி கண்ணில் சட்டென பதித்தது: ஒரு பெண் தனது குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டு இருந்தாள். ஓர் ஆளுடன் வந்த தரகர் அவளைச் சுட்டிக்காட்டினான். அவள் சட்டென எழுந்து, குழந்தையை இன்னொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, குறுகிய படிகள் வழியே மாடியேறினாள். தனது ஒருபக்க மார்பை அவள் மறைக்க முயலவில்லை.

இதுபோன்ற சில நிகழ்ச்சிகளை சாமானியனால் கற்பனை செய்யக்கூட முடியாது. மண்ணைத் தன்மீது ஓர் இரவு முழுவதும் போர்த்திக் கொள்ளும், இப்புத்தகத்தில் வரும் நிகழ்ச்சிகூட அவ்வகையே. "எங்களின் இந்நிலைக்குக் காரணம், உங்கள் வீட்டு ஆண்கள்தான்" என சொல்கிறார் ஆசிரியர்.சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும்.

பின்குறிப்பு:
"ஒரு லைங்கிக தொழிலாளியோட ஆத்மகதா" என்ற மலையாளப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இப்புத்தகம். இதே புத்தகத்தை ஆங்கிலத்தில் Westland Books பதிப்பகத்தார் The autobiography of a sex worker என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்கள் (150 INR).

- ஞானசேகர்