Saturday, October 30, 2010

69. FOLLOWING FISH

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

கடல்
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
- வைரமுத்து (தண்ணீர் தேசம்)


-----------------------------------------------------------------------
புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)
ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin books
முதற்பதிப்பு : 2010
விலை : 250 ரூபாய்
பக்கங்கள் : 167 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------------

சுயமாக சமையல் செய்யவேண்டிய காட்டாயத்திற்குத் தள்ளப்பட்டபோது மீன்குழம்பும் மிளகுரசமும் மட்டும் வைக்கக் கற்றுக்கொண்டவன்; வருடத்திற்கு ஒருமுறை இரவெல்லாம் பயணித்து வங்கக்கடல்போய் மீனும் இறாலும் மட்டுமே சாப்பிட்டுவிட்டுத் திரும்புபவன்; கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு - முட்டம், தனுஷ்கோடி, கேரளாவில் வாஸ்கோடகாமா முதலில் கால்பதித்த கப்பாடு போன்ற கிராமங்களைத் தனியாகவே சுற்றித் திரிந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை முதலில் பார்க்கும்போது புரட்டிப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. சின்ன மீனிலிருந்து பெரிய படகுவரை பட்டியலிடப்பட்டிருந்த பொருளடக்கத்திலும் உள்படங்களிலும் ஈர்க்கப்பட்டு வாங்கிவிட்டேன்.

மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், கூர்ச்சரம் (Gujarat) என இந்தியக் கடற்கரையோரங்களில் ஆசிரியர் மேற்கொண்ட பயணங்களை ஒன்பது கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார். இவரின் முதல் புத்தகம்.



ஹில்சா என்ற மீனைத்தேடி கொல்கத்தாவில் அலையும் முதல் அனுபவத்தைப் படிக்கும்போது, புத்தகம் முழுவதும் சாப்பாட்டு விசயமாகவே இருக்குமோவென்று பயந்துபோனேன். இரண்டாம் கட்டுரையில் இருந்துதான் பயம்போனது. பச்சையாக மீனைச் சாப்பிடும் மருத்துவச் சிகிச்சை பற்றியது அது. இந்த ஒரு கட்டுரை மட்டும் கடல் சம்மந்தப்பட்ட இடத்தில் இல்லாமல், உள்நாட்டில் - ஹைதராபாத்தில் ஆஸ்துமாவிற்குச் சிகிச்சையாக மீனின் வாய்க்குள் மருந்தை வைத்துத் தரும் பரம்பரை வைத்தியர்களைப் பற்றிப் பேசுகிறது. சுத்த சைவ உணவுக்காரர்கள் உட்பட 35000 பேர் முன்பதிவு செய்து வரிசையில் காத்திருக்கும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் இவ்வைத்தியத்தின் ரகசியத்தை அறிய முயன்று அவ்வைத்தியர்களை ஆசிரியர் நெருங்கி பேச்சு கொடுக்கும் இக்கட்டுரை மர்மம் கலந்த நம்பிக்கை.

மூன்றாவது கட்டுரையில் தமிழகம். இயற்கை திரைப்படம் வெளியான அன்று திருநெல்வேலியில் பம்பாய் திரையரங்கில் பார்த்தேன். 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' வைரமுத்துவின் வசீகர வரிகள் என்னை முதல்நாள் முதல்காட்சி டிக்கட் வரிசையில் நிற்க வைத்தன. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கொத்துக்கொத்தாக இருபது முப்பது என்று டிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். தனது மண்ணைத் - தனது கடலைத் திரையில் பார்த்துக் கொண்டு அவர்கள் காட்டிய அப்பாவித்தனமான பிரமிப்பை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மணப்பாடு பற்றிய எனது நினைவுகளைப் புதுப்பித்துப் போனது இக்கட்டுரை. புனித சவேரியார் இவ்வூரில் இருந்துதான் கிழக்குக் கடற்கரையில் பிரசங்கிக்க ஆரம்பித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் ஒரு துண்டு இவ்வூரில் இருப்பதாகவும் படித்தேன். ஓரூர் எதற்காக பெயர்பெற்றிருக்கிறதோ, அதல்லாமல் வேறொன்றில் அதை ரசிக்கும் பக்குவம் கிடைக்கப்பெறுவது கொஞ்சம் கடினம். சில ஊர்களை அப்படிக் கடினப்பட்டு சிலபேர் புரிந்து வைத்திருப்பார்கள். அது ஒரு தவம்!

கேரள அரசின் சுற்றுலா கையேட்டில்கூட இடம்பெற்றிருக்கும் கள்ளுக்கடைகளைப் பற்றியும், அதில் பரிமாறப்படும் மீன்கறி பற்றியும் ஒரு கட்டுரை. ஆழ்கடலில் வேகமாக நீந்தும் ஒரு மீனைத் தேடித் போகிறது இன்னொரு கட்டுரை. மங்களூர் புகழ் மீன்குழம்பைக் கடைகடையாகத் தேடி அலைகிறது ஒரு கட்டுரை. கடலையும் மண்ணால்மூடி கடற்கரைகளையும் ஆக்கிரமித்திருக்கும் மும்பை, ஆதிகலைகளுள் ஒன்றான கப்பல் கட்டுதல் செய்யும் கூர்ச்சர நகரமொன்று இப்படி பல தளங்களைத் தொட்டுச் செல்கிறது புத்தகம். ஒரிசா மீன்குழம்பு ருசிகண்ட எனக்கு, அந்நிலப்பரப்பு இப்புத்தகத்தில் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.

நெய்தலும் நெய்தல் நிமித்தமுமே புத்தகத்தின் கருவாக இருந்தாலும், மக்களை மிக நெருங்கி அவர்களின் வாழ்வோட்டத்தை விவாதித்திருப்பது புத்தகத்தின் பெரிய பலம். தங்கள் தெய்வம் மும்பாதேவியை மும்பைக்குப் பெயராகக் கொடுத்து அந்நகரின் விளிம்புகளில் அடையாளம் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மீனவர்களின் இன்றைய நிலை, கேரளாவில் கள்ளுக்கடைகளுக்கும் உள்ளூர் அரசியலுக்கும் உள்ள தொடர்பு என்று நிறைய விசயங்கள். என்னை மிகவும் கவர்ந்தது கோவா பற்றியது. சுற்றுலா என்ற பெயரில் கடற்கரைகளை இழந்துவரும் பரிதாப நிலை; பாரம்பரிய மீன்பிடித்தொழிலைச் சுற்றுலா மாயையில் இழந்து கொண்டிருக்கும் அபாயம். நான் தனியாக கோவா சென்றிருந்தபோது, பனாஜி (Panaji) பேருந்து நிலையத்தில் ஒருவன் என்னைக் கேட்டான். "Kashmir to Kanyakumari Andhra Tamil Nadu Kerala Karnataka Hindi English all states all languages beach view sir which one you want sir?". முறைத்தேன். "Girls boys both are available sir".

இந்தியாவின் கடலோர மக்களின் வாழ்க்கை முறைகளை, ஒரு பகுதியினரை இன்னொருவருடன் ஒப்பிட்டிருப்பதும் அருமை. தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த ஆதிமனித இனம் மெல்ல மெல்ல நிலம் நோக்கிப் பெயர்ந்ததில், இன்னும் ஆதித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகள் கண்டிப்பாக ஆவணப்படுத்தப் படவேண்டியவை.

"இந்த அம்புக்குறி காட்டும் கடற்கரைக்கும் அண்டார்க்டிகாவின் விளிம்பிற்கும் இடையே நிலமேதும் இல்லை" - இப்படியொரு செய்திப்பலகையை, சோம்நாத் (Somnath) நகரின் கடற்கரைக் கோயில் ஒன்றில் கண்டதாக ஆசிரியர் இப்புத்தகத்தை முடிக்கிறார். புத்தகத்தில் படிக்கும்போதே பரவசப்பட வைக்கும் இவ்வாசகம். இதேபோல் நேரடியாகப் பார்த்தபோது கிடைத்த சிலிர்ப்பைப் பக்குவமாக வாசகனுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.

தன்னை நாடுபவர்களையும் சார்ந்திருப்பவர்களையும் சம்மந்தமே இல்லாமல் எங்கோ இருப்பவர்களையும் தன்மட்டில் ஓர் ஒழுங்கிற்குள் கட்டாயப்படுத்தும் கடல்படிப்போம்!

அனுபந்தம்:

1. அந்தப் பழம்பெரும் தமிழ்ப்பதம் மறக்கடிக்கப்பட வேண்டிய அனைத்துச் சூழ்நிலைகளும் எல்லா மூலைகளில் இருந்தும் உண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த ஆங்கிலப் புத்தகம் மூலம்தான் அப்பதத்தின் அர்த்தம் தெரிந்தது. அப்பதம் 'ஈழம்'.

2. பதினைந்து வயதுக்குட்பட்டவனாக நான் இருந்தபோது தாத்தாவுடன் குளத்திற்குச் சென்று வேட்டியைவைத்து அயிரை மீன் பிடித்து வந்து அட்டகாசமாகச் சமைத்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் கொடுத்து, குறைந்தது நான்கு வேளைகளாவது அயிரையை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு இருக்கிறோம். பதினேழோடு தாத்தா நிரந்தரமாகப் பிரிந்து போனார். எப்போதாவது எட்டி எட்டிப் பார்த்து மொத்தமாக மூழ்கிப் போனது குளமும். அயிரையைப் பார்த்தே ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட எனக்குள்ள கவலையெல்லாம், குளம் என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்கத் தெரியாமல் திணறப்போகிறமோ என்பதுதான்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Sunday, October 17, 2010

68. திருநங்கைகள் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- வள்ளுவம்


நாமெல்லாம்.... நாமன்னா.... நான், நீ, இந்தப் பச்சச்சட்ட, மஞ்ச சுடிதார், அந்தப் போலீஸ்காரர் எல்லாம் ஹார்மோன் சமாச்சாரம். வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி.
- ஆய்த எழுத்து திரைப்பட வசனம்


ஆண்மை என்கிற வார்த்தைக்குக் குழந்தைகளைப் பெறும் தகுதியுள்ளவன் என்கிற விதத்தில் எங்கும் அர்த்தம் கொடுக்கப்படவில்லை. எடுத்த காரியத்தில் திடசிந்தனை, கொண்ட நோக்கத்தில் குழப்பமில்லாத தன்மையுடன் உயர்வடைவதற்குத்தான் ஆண்மை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, கிடா மீசை வைப்பதோ, பத்து மனைவிகளைக் கட்டிக் குழந்தைகளைக் கொடுப்பதற்குப் பெயரா ஆண்மை? அந்த மாதிரியான ஆண்மை எனக்கு வேண்டியதில்லை. இதையும் மீறிப் பெண் தன்மையுடன் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
- நர்த்தகி நடராஜ் ('கனவின் பாதை' புத்தகம் - மணா - உயிர்மை பதிப்பகம்)


--------------------------------------------------------
புத்தகம் : திருநங்கைகள் உலகம்
ஆசிரியர் : பால் சுயம்பு (தினத்தந்தியில் துணையாசிரியர்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : அக்டோபர் 2009
விலை : ரூ.150
பக்கங்கள் : 277 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------

இவ்வருட ஆரம்பத்தில் ஞாநி அவர்களின் 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் படிக்கும்போதுதான், இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறுநீரக மண்டலத்திற்கும் பெண்ணுடலில் வெவ்வேறு துவாரங்கள் என்று தெரியும். ஆணுடலைத் தாங்கி ஆண்மனதுடன் சிந்திக்கத் தெரிந்த எனக்கு இது பெரிய ஆச்சரியம்தான். இதேபோல் யாரோவொரு பெண் இவ்விரு மண்டலங்களும் ஆணுடலில் ஒரே இடத்தில் முடிவதை அறிந்து அதிசயிக்கலாம். ஆணோ பெண்ணோ இன்னொரு பாலினரை அறிவு அல்லது உறவு ரீதியாக அறிந்துகொள்ள முற்படும்போது மனிதவுடலில் இயற்கை புதைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்க வைக்கலாம். இந்த இருபாலினருக்கும் பொதுவான ஆச்சரியத்தையும், கேள்விகளையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும் இயற்கையின் இன்னொரு படைப்பு பால்பிறழ்வுகள்.

ஆண் அல்லது பெண் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத Congenital Adrenal Hyperplasia, இருபால் உறுப்புகளையும் கொண்ட Hermaphroditism, குரோமசோம் அடிப்படையில் ஆணாகவும் உடலமைப்பில் பெண்ணாகவும் அமையும் Androgen Sensitive Syndrome என்று பால்பிறழ்வுகளில் பலவகைகள். இவர்களில் குறிப்பிடத்தக்க வகையினரான ஆணுடலையும் பெண்மனத்தையும் பெற்றிருக்கும் மாற்றுப் பாலினத்தவரே திருநங்கைகள் என்று அறியப்படுகிறார்கள். அவர்களைப் பற்றிப் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களில், மற்றவர்களுடன் பகிந்துகொள்ளும் அளவிற்கு நான் புரிந்துகொண்ட புத்தகம் - திருநங்கைகள் உலகம்.



சுருக்கமாகச் சொன்னால், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அல்லது அந்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் திருநங்கைகள் இருபது பேரின் வாழ்க்கைச் சுருக்கம். தங்களைத் திருநங்கையாக உணர்ந்த நாள்முதல் அதனை வெளிக்காட்ட முடியாமல் பட்ட அவஸ்தைகளும், குடும்பத்தின் கட்டுப்பாடுகளும், சமூகம் தந்த அவமானங்களும், தன்னைப் போன்றவர்களை அடையாளம் கண்டு, அங்கீகாரம் கிடைக்கும்படி வாழ்ந்துகாட்டி ஜெயித்தவர்களின் கதைகள்.

முதல் பக்கங்களில் அழகம்மை என்ற திருநங்கையை உதாரணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைமுறையை விளக்குகிறார் ஆசிரியர். ஆணாகப் பிறந்த அழகப்பன், தனக்குள்ள பெண்மனதை உணர ஆரம்பித்து, குடும்பமும் சமூகமும் வெறுத்து ஒதுக்க, மும்பைக்குப்போய் தன்போன்றவர்களுடன் அழகம்மையாக அடைக்கலமாகிறார். அங்கு ரீத் எனும் சடங்குமூலம் மூத்த திருநங்கை ஒருவரால் மகளாகத் தத்தெடுக்கப்படுகிறார். உரோமம் பிடுக்கும் சிம்டா கருவி, தண்டுப்பணம், தந்தா என்ற கடைகேட்டல் என்று திருநங்கைகளின் வித்தியாசமான உலகையும் சொல்லாடல்களையும் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அதில் அதிரவைக்கும் ஒருவிசயம், நிர்வாணம் எனப்படும் தாயம்மா அறுவை சிகிச்சை. ஆண்தன்மையை நீக்குவதற்காக ஆணுறுப்பை வெட்டியெடுக்கும் சிகிச்சை. மயக்க மருந்தே இல்லாமல் இரத்தத்தையும் வலியையும் நேரடியாக உணரவைக்கும் சிகிச்சை. இறந்து போனால் காளிக்குச் சமர்ப்பணம்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 20 திருநங்கைகளின் தனிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சி இப்படிக்கு ரோஸ், திருநங்கைகள் வாக்குரிமைக்குக் குரல்கொடுத்த பிரியாபாபு, கல்கி (sahodari.org), இந்தியாவின் முதல் மாடலிங் திருநங்கை ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். என்னை மிகவும் பாதித்தவர் நூரி. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்ட மூன்றாவது எய்ட்ஸ் நோயாளி அவர். தற்போது சென்னையில் SIP memorial home நடத்திவருகிறார். புத்தகத்தின்படி 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். சு.சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி தொடர்கதையில் சுயம்பு என்ற பாத்திரம் இவரே.

திருநங்கைகளுக்குச் சாதாரணமாக வாடகை வீடு கிடைப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துவதில் கிடைத்த கசப்பான அனுபவத்தில் எம்.ஏ. படிப்பைப் பாதியிலேயே விட்டவரும் உண்டு. இவர்களைப் புதிய அனுபவத்திற்காக நெருங்கி உடல்ரீதியில் தொடர்புகொண்டு ஏமாற்றுபவர்களும் இச்சமுதாயத்தில் உண்டு. மெரீனா கடற்கரையில் நூரி அவர்களின் பாலூற்றும் சடங்கைப் பார்த்து ஆயிரம் ரூபாய் தட்சணை கொடுத்த வில்லன் நடிகர் நம்பியார் போன்றவர்களும் இதே சமுதாயத்தில் உண்டு.

பெரும்பாலும் திருநங்கைகள் விசேசங்களில் சமையல் செய்பவர்களாகவும், ஒப்பாரிக் கலைஞர்களாகவும், கரகாட்டம் - மயிலாட்டம் - ஒயிலாட்டம் - கணியான் கூத்து என்று கிராமியக் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் சமூகப் பிரிவுகளும் மதக்கோட்பாடுகளும் வட-தென் இந்தியப் பகுதிகளில் வித்தியாசப்படுகின்றன. முகலாயர்கள் காலத்தில் ஆரம்பித்த முக்காடு பழக்கம், அரவான் சரித்திரம் என்று பல தகவல்கள் ஆங்காங்கே கட்டங்களில் எட்டிப்பார்க்கின்றன.பாலுறுப்பு மாற்றலுக்குத் தாயம்மா சிகிச்சைக்குப் பதிலாக SRS (Sexual Reassignment Surgery) போன்ற நவீன சிகிச்சைகள் சென்னைக்கே வந்துவிட்டன. சகோதரன், தாய் (TAI - Tamil Nadu AIDS Initiative)ன் மனசு போன்று திருநங்கைகளுக்காகச் செயல்படும் அமைப்புகளும் பலவுள்ளன.

இவர்களின் பிறப்பிற்கு விதி, கர்மவினை, சாபம், சென்மபாவம் என்ற எதுவும் காரணமில்லை. என்றோ இரண்டு Xகளில் ஒன்றை Yயாக்கி பெண்ணிலிருந்து ஆணை உண்டாக்கியதுபோன்ற இயற்கையின் குரோமசோம் விந்தைகள்தான் இவர்களும். பாலியல் திரிபைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான அனுதாபத்தையோ, அடக்குமுறையையோ இல்லாமல் சகமனிதன் என்ற அங்கீகாரம் மட்டுமே இவர்கள் கேட்பது. ஈரலைக் கெடுக்கும் ஹார்மோன் ஊசிகளுடன் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ள, நம்மில் சிலருக்கு இருக்கும் Transphobiaவை உடைத்தெறிய இதுபோன்ற புத்தகங்கள் கண்டிப்பாக உதவும். ஆங்காங்கே பரவிக்கிடக்கும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, திருநங்கையாகப் பிறப்பதற்கான அறிவியல் காரணங்களை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

அனுபந்தம்:

1. அரவானி என்ற குறிப்பிட்ட மதம் சார்ந்த புராண மரபுடன் பெயரிடப்படுவதைத் தவிர்த்து,ஆணும் பெண்ணும் கலந்த திருநங்கை என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார் நர்த்தகி நடராஜ்.

2. பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற புதினம் படித்தேன். படிக்கலாம். சந்தியா பதிப்பகம். 50 ரூபாய்.

3. மராத்தி மொழியில் 'NATARANG' என்றொரு திரைப்படம் உண்டு. பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Monday, September 06, 2010

67. வெட்டுப்புலி

------------------------------------------
புத்தகம் : வெட்டுப்புலி
ஆசிரியர் : தமிழ்மகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2009
விலை : ரூ 220

------------------------------------------

தர்மராஜ் டிரைவரைப் பள்ளி செல்லும் வயதுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சிவன்கோயில் தெருவில்தான் அவர் வீடு இருந்தது. கூரை வீட்டின் மேல் மூன்றடி உயரத்தில் கருப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கும். சிவன் கோயில் தெருவின் முனையில் எங்கள் வீடு. அப்போது பண்ணைக்காரர்களிடம் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்தார் தர்மராஜ். தீவிரமான தி.மு.க காரர். போதையில் இல்லாத தர்மராஜை ஊரில் யாரும் பார்த்ததில்லை. பண்ணைக்காரர்களும் அப்போது தி.மு.கவில் இருந்ததால் அவருக்குக் கொஞ்சம் சலுகையாக இருந்தது. கலைஞரைக் கருணாநிதி என்று அழைப்பதில் அவருக்கு அலாதி ப்ரியம்; கொஞ்சம் கர்வமும் கூட. திருக்குவளையில் கலைஞரைச் சிறுவயதிலேயே பார்த்துப் பழகியவர் என்றும் சொல்லிக் கொண்டார்கள். எந்தப் புள்ளியில் மனிதர் இவ்வளவு தி.மு.க. அபிமானியாக மாறியிருப்பார் என்பது தெரிந்தும் தெரியாமலும் இருந்தது.

மனிதன் நிதானத்தில் இருக்கும் வரை இருக்கும் வேகம், நிதானம் இழந்தபிறகு இன்னும் கூட அதிகமாகிவிடும். அதுவே எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த கோபமாகவும் மாறும். எம்.ஜி.ஆர் என்று அறிமுகமாகியிருந்தவரை, எம்.ஜி.ராமச்சந்திரன் என்று எனக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியவர் அவர்தான். நான் கேட்ட முதல் மிமிக்ரி குரல் அவருடையதுதான். கலைஞரின் குரலில் பேசுவதில் வல்லவராக இருந்தார். சிவன் கோயில் பின்புறத்திலிருந்த திடலில் இங்குமங்கும் நடந்தபடி ஏகவசனத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தாக்குவார். பள்ளிக்கூடத்தில் பையன்களிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் அவர் பேச்சில் கேட்க முடிந்தது. போட்டு விளாசிவிடுவார்.

எம்.ஜி.ஆர் இறந்த நாளில் தெருப்பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்த கையோடு, அன்றிரவே அ.தி.மு.க கட்சிக்காரர்களிடம் வகையாக வாங்கியும் கட்டிக்கொண்டார். 1991ல் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது முதல் தடவையாக விஷம் குடித்தார் தர்மராஜ். அவரின் மனைவி கலைஞரின் வம்சத்தைச் சாபமிட்டுப் பழித்தபடி தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடினாள். நான்கு நாட்களில் சக்கையாகத் திரும்பிவந்த மனிதனைத் தெருவிலேயே போட்டு மிதித்தான் அவர் மகன். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த பிறகு தர்மராஜின் நடமாட்டம் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அடுத்து வை.கோ வெளியேறிய போது பண்ணைக்காரர்கள் அவரோடு போய்விட, தர்மராஜ் தனியே விடப்பட்டார். வேலையும் பறிபோனது. வீட்டிலும் மரியாதை இல்லை. மகன் வேலை செய்து கொண்டுவரும் பணத்தில் குடிக்கப் பணம் கேட்கத் திண்டாட்டமாகப் போகவே, போதையில்லாமலே கண்ணில் பட்டோரை எம்.ஜி.ஆராகவும், ஜெயலலிதாவாகவும் நினைத்து வசை பாட ஆரம்பித்தார். கலைஞர் தன் துயர் துடைக்க வருவார் என்பது அவரது அசையாத நம்பிக்கையாக இருந்தது. குடும்பத்தலைவன் என்ற பெயருக்காக வீட்டில் சாப்பாடு போட்டுவந்தார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சி வந்தும் அவர் நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை. மனநிலையில் சின்ன தடுமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

மீண்டும் திமுகவின் ஆட்சி முடிந்து, அ.தி.மு.க வென்ற போது விஷம் என்று நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்து இரண்டாவது முறையாகக் காப்பாற்றப்பட்டார். இந்த முறை மகன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்க்கவில்லை. பிராணனைப் பிடித்து வைத்திருக்கும் ஆசையில் தர்மராஜின் மனைவி மகன் பேச்சுக்கு அடங்கிப்போனாள். தர்மராஜ் ஊருக்குள் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்தார். அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஒன்றரை மாதங்களுக்குள் ஒரு நாள் அதிகாலையில் ஊரே பதட்டமடைந்து கிடக்க, தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஒரு காட்சி. கலைஞர் தன் வீட்டிலேயே கைது செய்யப்பட்டு, நள்ளிரவில் இழுத்து வரப்பட்டார். பதட்டத்தோடு பதட்டமாக நடந்தேறிய எல்லா அரசியல் நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக்காட்சி. மதியம் 'பராசக்தி' திரைப்படம் போட்டார்கள். தர்மராஜ் எங்கள் வீட்டு வெளித்தரையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பயிர்களுக்கென்று வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தர்மராஜ் இறந்து போனதாக ஊரே மீண்டும் பரபரப்பானது.

திராவிட இயக்கங்களைப் பற்றிய எந்தக் கடந்தகாலச் செய்தியும் எனக்கு தர்மராஜைத் தவிர்த்ததாக நினைவுக்கு வருவதேயில்லை. எங்கள் ஊரின் பதினைந்தாண்டுகால அரசியல் நிகழ்வுகள் எல்லாமும் எனக்கு அவரைத் தொடர்பு படுத்தியே நினைவில் இருந்தன. மாபெரும் அரசியலின் சிறு படிமமாக வாழ்ந்து மறைந்து போனார் தர்மராஜ் டிரைவர். பெரும் அரசியல் நிகழ்வுகளை, பெரும் வரலாறுகளை, பெரும் சமுதாய மாற்றங்களை நாம் இப்படி நினைவுகொள்வது மிக இயல்பானதுதான் இல்லையா? இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது நான் ஐந்து மாதக் குழந்தை என்று என் அம்மா சொல்லுவார். இதுவும் கூட அரசியல் நிகழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையோடு இழையோடிப்போகும் ஒரு தருணம்தான் என்று தோன்றுகிறது. தர்மராஜின் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்தால், நமக்கு நம் வாழ்க்கை சார்ந்த ஒரு பேரியக்கத்தின் வரலாறு கிடைக்கலாம். அது நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கும். அதுபோன்றதொரு பதிவுதான் இந்த வெட்டுப்புலி. புனைவும், வரலாறும் கலந்ததொரு கலவை.



வெட்டுப்புலி தீப்பெட்டி, தமிழகத்தின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள், தமிழ்த்திரையுலகம் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வேரூன்றியவை. இந்த யதேச்சையான ஒற்றுமையை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, இம்மூன்றையும் சுற்றிச் சுற்றிக் கோலமிட்டிருக்கிறார் தமிழ்மகன். தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஊடகத்துறையில் இல்லாத ஒருவர் இதை எழுதியிருப்பதற்குச் சாத்தியம் மிக மிகக் குறைவு என்று தோன்றியது. இத்தனை செய்திகளை ஒரு தனிமனிதன் தொகுப்பது இயலாதது. இந்த உழைப்புக்காகவே தமிழ்மகனைப் பாராட்டலாம். ஓர் எளிய, எழுத்து வசீகரம் இவரிடம் இருக்கிறது. அது நம்மை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் பணியை நிறைவாகச் செய்கிறது.

வெட்டுப்புலி தீப்பெட்டியின் அட்டையில் ஒரு மனிதன் சிறுத்தையை வெட்டுவது போன்ற படம் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த மனிதன் தன் தாத்தாவின் பெரியப்பா என்று அறிந்து, அது பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தன் அமெரிக்க நண்பகளுடன் தேடலைத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். கதை அங்கிருந்து 1940களுக்குப் பயணித்து, பின் 1930, 1940 என்று தொடர்ந்து இரண்டாயிரத்துப் பத்துவரை தொடர்கிறது. கதை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிகழ்கிறது.

தாம் பார்த்துப் பழகிய இடங்களின் வரலாறு தெரிந்துகொள்வதில் யாருக்கும் ஆர்வமிருக்கும். எங்கள் ஊரின் வயோதிகர்கள், என் கிராமத்திற்கு முதல் முதலாக இரயில் வந்த கதையையும், ஆற்றுப்பாலம் வந்த வரலாற்றையும் சொல்லும்போது சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் எழும் இன்பம் அலாதியானது. பாலம் இல்லாத, இரயில் இல்லாத என் கிராமத்தின் பிம்பம் என்னுள் விரியும். மக்கள் போக்குவரத்து எப்படி நிகழ்ந்திருக்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதாக எண்ணவோட்டம் நீளும். வெட்டுப்புலியின் ஒவ்வொரு அத்தியாயமும் என்னுள் அப்படியான ஒரு எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியது. சென்னையின் நிகழ்கால பிம்பத்தைப் பார்த்தவனுக்கு, நூற்றாண்டுகால நகரின் வளர்ச்சி குறித்த செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக இருக்கின்றன. சென்னையைச் சுற்றிலும் கதை வலம் வரும் இடங்களிலும் பெரும்பாலானவற்றை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கொசஸ்தலையாறு, பூந்தமல்லி, திருவள்ளூர், அம்பத்தூர் என்று புறநகர்ப்பகுதிகளின் கடந்தகால பிம்பத்தை அழுத்தமாகப் பதியவைக்கிறது இப்புதினம். இவற்றின் அருகிருக்கும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்தாம் கதை மாந்தர்கள்.

மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான பருவம் இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லலாம். அதுவரை நிகழ்ந்திருந்த பல அதிசயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முன் நிரூபணமாகியிருந்த பல கோட்பாடுகளைப் பொய்யாக்கி, அசுர வேகத்தில் தொழில்துறையிலும், அறிவியலிலும் வளர்ச்சி கண்டனர் மனிதர்கள். இவ்வளர்ச்சி உலகெங்கிலும் இருந்த மக்களின் வாழ்க்கையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்தது. வாழ்க்கையைப் பற்றிய பார்வை வெகுவாக மாறிப்போனது. தமிழகத்தைப் பொறுத்தவரை பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வும், திரைப்படங்களின் ஆதிக்கமும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தின. சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கும் மக்களிடம் இவை பிறப்பித்த மாற்றங்களை மிக நுண்மையாக ஆராய்கிறார் தமிழ்மகன்.

வெறும் பாத்திரங்களாக இல்லாமல் அவர்கள் கருத்துகளாக வலம் வருகிறார்கள். திராவிடத்தைப் பற்றியும், திரைப்படத்தைப் பற்றியும் எத்தனை விதமான கருத்துகள் நிலவியிருக்குமோ, அவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பாத்திரமாகியிருகின்றன. எது சரி எது தவறென்று நிறுவுவது ஒரு படைப்பாளியின் வேலையன்று. சமகால வரலாற்று நிகழ்வுகள், அது கதையில் வரும் பாத்திரத்தை, ஒரு சூழலை எப்படிப் பாதிக்கிறது, அது குறித்த கதைமாந்தர்களின் நிலைப்பாடு என்ன, என்பதை மட்டுமே கதையின் போக்கில் சொல்லிச்செல்கிறார். பொது நிகழ்வுகளின் எதிரொலி ஒருவனின் அந்தரங்கம் வரை கேட்கக்கூடியதாக இருக்கிறது. பாத்திரங்கள் தங்களுக்கிடையேயான முரண்பாட்டை, தங்கள் கொள்கைகளின் வேறுபாட்டோடு கலந்து அதன்மூலம் தங்கள் வன்மத்துக்கு வடிகால் தேடுகிறார்கள்.

ஒவ்வொரு பத்தாண்டுகளாகப் பிரித்துக் கதை சொன்ன உத்தி இந்தப் புதினத்தின் சிறப்பம்சம். கால மாற்றத்தில் மனிதர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்ய இது உதவியிருக்கிறது. ஒரு பாத்திரம் தன் அடிப்படை இயல்புக்கு முழுவதும் எதிரான, தான் வாழ்ந்துவந்த நெறிக்கு எதிரான, ஒரு கருத்தைத் தன் அடிநாதமாக மாற்றிக்கொள்ள இந்த அவகாசம் போதுமானதாகயிருக்கிறது. தனி மனிதனானாலும், இயக்கமானாலும் இது இயல்பாக நடந்துவிடுகிற விஷயம்தானே!

தன் காதல் சாதிப்பிரிவினையால் அழிக்கப்படும்போது யோசிக்கத் தொடங்கி பெரியாரைப் பின்பற்றத் தொடங்கும் இளைஞன், பெண் சுகத்துக்காகத் திரைப்படம் தயாரிக்க முற்படும் ஒரு பணக்கார இளைஞன், தரிசு நிலங்களைத் தங்கள் உழைப்பால் விளைநிலங்களாக மாற்றி அதைப் பராமரிக்கும் சிந்தனையற்று, பணக்காரர்களிடம் கொடுத்து, வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள், பார்ப்பனர்களை எதிர்ப்பதே பெரிய பகுத்தறிவுச் சீர்திருத்தம் எனத் தொடங்கிப் பின் அனுபவத்தால் மனம் மாறும் இளைஞன், என்று விதவிதமான பாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாங்களுடன் கதையோடு பரிணமிக்கிறார்கள்.



ஒவ்வொரு பத்து வருடத்தையும் அறிமுகப்படுத்தும் அத்தியாயங்கள் தமிழ்மகன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவனவாக இருக்கின்றன. குறிப்பாக ஐம்பதுகளின் அறிமுக அத்தியாயத்தைச் சொல்லலாம்.

'காங்கிரஸ் பேரியக்கம் ஓட்டுப்பெட்டியில் ஒடுங்க வேண்டாம் என்ற காந்தியாரின் சிந்தனை புறக்கணிக்கப்பட்டது. காந்தியைக் கொல்லச் சதிசெய்தவராகக் கருதிய சாவர்க்கர் படமும் காந்தியின் படமும் பாராளுமன்றத்தில் பக்கத்தில் பக்கத்தில் மாட்டப்பட்டன. முரண்பாடுகள் இயல்பாகின. சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்காத இந்தியச் சுதந்திரம் கறுப்புதினமாக இருந்தது பெரியாருக்கு. தி.மு.க.வினர் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டுமென்றனர். ஒருவனே தேவன் என்ற சுருதி பேதம்'

அத்தியாயங்களின் முடிவையும் அனாயாசமான முத்தாய்ப்புடன் அமைத்திருக்கிறார் தமிழ்மகன். ஒவ்வொரு முடிவும் ஏற்படுத்தும் அதிர்வு சில நிமிடங்களுக்கேனும் நம்மை இயக்கமின்றி கட்டிப்போடும் திறனுடையதாகவிருக்கிறது. அரசியல் சார்ந்த செயல்களால் தன் சொந்த வாழ்க்கையை முற்றிலுமாக இழந்த ஓர் ஆணுக்கும் அவன் மனைவிக்குமான உறவைப் பற்றிப்பேசும் அத்தியாயம் இப்படி முடிகிறது. அவனுக்கும், மனைவிக்கும் நீண்ட காலமாக உறவே இல்லை என்றாகியிருந்தது. 'எப்பவாவது ஒரு தரம் வீட்டுக்குப்போவான். அழுக்கு வேட்டி, சட்டையைத் துவைத்துப் போட்டுவிட்டு வேறு துணி மாற்றிக்கொண்டு வருவான். அவளும் ஏன் வந்தாய் என்று கேட்பதில்லை. அவள் முழுகாமல் இருந்ததால் அவன் அப்படி வந்து போவதை எதிர்பார்க்கவும் செய்தாள்....'

அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் நிறைய காட்டமான அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை கற்பனையான வசனங்கள் என்று எண்ண முடியவில்லை. ஆசிரியர் சிறுவனாக இருந்த பருவத்தில் கேட்டு வளர்ந்த வார்த்தைகளையே இங்கே பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தோற்றம், தி.மு.கவின் மலர்ச்சி, கல்லூரிகளில் மாணவர்கள் மிக விரும்பிப் படித்த திராவிடப் பாடம், தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்து பின் வீழ்ந்தே போனது, தமிழ்நாட்டு அரசியலும் திரைத்துறையும் இரண்டறக் கலந்தது, இல்லாத கடவுள் ஒருவனே தேவனானது, ஒற்றைச் சூரியனை இரட்டை இலைகள் வீழ்த்தியது, இனமானம் காக்க வேண்டி ஒரு தலைவனை உருவாக்கிப் பின் மறந்தே போனது, எனத் தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் நிகழ்வுகளை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

டெண்டுகள் அமைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், சக்கரவர்த்தித் திருமகளுக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய எம்.ஜி.ஆர், திரைப்படம் எடுப்பதற்காக அரசுப்பணியைத் துறந்த பாலச்சந்தர், உடலை மூலதனமாகக் கொண்டு உழைக்க முன்வந்த நடிகைகள், எம்.ஜி.ஆரின் காலில் விழாமல் கைகொடுத்த ரஜினிகாந்த், பின் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலையிலிருந்து மீட்ட அதே ரஜினிகாந்த், திடீரென தேசிய இயக்குனராகத் தன்னை நிறுவிக்கொண்ட மணிரத்னம், கோட்டைக் கனாக்களுடன் களமிறங்கி கொண்டிருக்கும் இன்றைய நாயகர்கள் என்று தமிழ் சினிமாவின் பரிமாணங்களைக் கதாப்பாத்திரங்களின் கருத்துகளாக முன்வைப்பது ஆசிரியரின் புத்திசாலித்தனம்.

எழுத்தின் முக்கிய பணி வாசகனையும் தன்னோடு உள்ளிழுத்துச் சேர்த்துக்கொள்வது. அவனுக்கான கற்பனைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளாதிருப்பதும் கூட. தசரத ரெட்டிக்கு முத்தம்மா மீதிருந்த ஈர்ப்பு, சின்னா ரெட்டி சிறுத்தையை அடித்தது பற்றி வேறு வேறு கதைகள் உலவுவது என்று சில தகவல்களை வாசகர்களின் கற்பனைக்கே விட்டு விட்டார்.

காலத்தையும், அது விட்டுச் செல்லும் சுவடுகளையும், சமகால நிகழ்வுகளையும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணியை இன்றைய சூழலில் மிகச்சில படைப்புகளே செய்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் 'வெட்டுப்புலி' மிக முக்கியமான படைப்பு.

பின் குறிப்பு :

1. இந்தப் புத்ததகத்தை நண்பர் ஞானசேகர் வாசித்துவிட்டு என்னிடம் சிலாகித்ததோடு தன் புத்தகத்தையே எனக்களித்து வாசிக்கவும் செய்தார். அவருக்கு என் நன்றி!

2. சென்னையைப் பிடித்தவர்களுக்கும், சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கும், இப்புத்தகத்தில் ரசித்துச் சுவைக்க நிறைய பகுதிகள் உண்டு

3. நான் வாழும் மைலாப்பூர் பகுதியைக் குறித்தச் செய்திகளை மிகவும் விரும்பி வாசித்தேன்

4. நிறைய எழுத்துப்பிழைகள் கண்ணில் பட்டன. பெரும்பாலும் அவை அச்சுப்பிழைகளே! அவசரமாக எதுவும் தேவைப்படும், அவசரமாக எதுவும் செய்யப்படும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களும் அவசரகதியிலேயே தயாராகின்றன போலும்.

5. சிறுத்தையை வெட்டியதைப் பற்றிய தேடலில், தினமணி அலுவலகத்தில் 1934 ஜூன் எட்டாம் தேதி செய்தித்தாளை கேட்பான் இளைஞனின் நண்பன். அதில் அவர்கள் தேடி வந்த செய்தி இருக்கும். அது பற்றிய தகவல்கள் முன்பகுதிகளில் ஏதும் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. வாசித்தவர்கள் எவருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!

6. 'மதராசப்பட்டினம் திரைப்படம் தவறவிட்ட ஒரு வேலையை இப்புத்தகம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது. உருவ அமைப்பில் அறுபதாண்டுகளுக்கு முந்தைய சென்னையைக் கொண்டுவந்தவர்கள், அக்கால மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கைப் பதிவுசெய்யவில்லை. அது இப்புதினத்தில் நிறைவேறியிருக்கிறது.' என்று நண்பர் ஞானசேகர் சொன்னார். நானும் அதையே உணர்ந்தேன்.

7. வரலாற்று நிகழ்வுகள் எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு பிணைந்திருப்பது இப்புதினத்தின் பலம்.

8. ஆசிரியர் தமிழ்மகனின் வலைத்தளம் : http://www.tamilmagan.in/

-சேரல்
(http://seralathan.blogspot.com/)