Thursday, February 03, 2011

74. ஆழத்தை அறியும் பயணம்

-----------------------------------------------------------------------
புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியிட்டோர் : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2004
விலை : 140ரூ
பக்கங்கள் : 254

----------------------------------------------------------------------

ஒரு கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது ஒரு சிறுகதை, புதினம், குறுங்கதை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாசிப்பினூடே அதில் வரும் பாத்திரங்களுடன் பயணிக்கத் தொடங்குகிறீர்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உங்கள் மனதில் ஓர் உருவம் உண்டாகிறது. நீங்கள் பார்த்துப் பழகிய, கேள்வி ஞானத்தில் அறிந்த, வேறெங்கோ வாசித்த யாரோ ஒருவர் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமானவராக உங்களுக்குப் படுகிறார். ஏன்? உங்களையே கூட பாத்திரங்களில் ஒன்றாக பாவித்துக் கொள்கிறீர்கள். அப்பாத்திரத்தின் சூழ்நிலையோ, உடலமைப்போ, மனோநிலையோ ஏதோவொன்று உங்களுடன் அதிகமாக ஒத்துப்போகிறது. அது போலவே மற்றப் பாத்திரங்களுக்கும் நீங்கள் அறிந்திருந்த மனிதர்களின் உருவத்தையே பொருத்திப் பார்க்கிறீர்கள். இது கதையுடனான உங்கள் நெருக்கத்தைக் கூட்டி உங்களை மேலானதொரு அனுபவத்துக்கு ஆட்படுத்துகிறது.

வாழ்வின் ஒரு நாளில் நடக்கும் பலப்பல நிகழ்வுகள் உங்கள் நினைவுச் சங்கிலியை எப்போதோ நீங்கள் வாசித்திருக்கக்கூடிய ஒரு கதையுடன் பிணைக்க வல்லனவாகவிருக்கின்றன. வியாபார நிமித்தமாக நீங்கள் சந்திக்கும் நபர் தெனாலி ராமனை நினைவுறுத்துகிறார். முகவரி கேட்கும் யாரோ ஒரு பெண், குந்தி தேவிக்கு நீங்கள் கற்பனை செய்திருந்த உருவத்துக்குள் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறாள். பெரும்பாலான வாழ்வியல் சிக்கல்களுக்கு வாசித்த ஏதோ கதையின் யாரோ ஒரு பாத்திரம் உங்களுக்குத் தீர்வளிக்கிறது. விதவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள புனைவுச் சூழ்நிலைகள் உங்களைப் பயிற்றுவிக்கின்றன.

வாசிப்பின் பெரும்பாலான தருணங்களில் நிஜ வாழ்வில் எங்கோ சந்தித்த, பார்த்த, கேட்ட, உணர்ந்த, அனுபவித்த எதுவோ ஒன்று பற்றிய நினைவு எழுவது தடுக்க இயலாததாகி விடுகிறது. அது போலவே வாழ்வின் பல கட்டங்களில், எங்கோ எப்போதோ வாசித்த ஏதோவொன்று நினைவுக்கு வருவதும் இயல்பானதே! வாசிப்பும் வாழ்க்கையும் இணையும் இந்த இரு புள்ளிகள் வாழ்க்கை, வாசிப்பு இரண்டையுமே அர்த்தமுள்ளதாக்குகின்றன. இரண்டு விதமான அனுபவங்களில் நாம் முன்னேறிச் செல்கிறோம் என்பதும் உண்மைதான்.



இது மாதிரியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நூல்தான் இந்த ஆழத்தை அறியும் பயணம். ஆற்றுப்படை என்றொரு சிற்றிலக்கிய வகை தமிழில் உண்டு. புரவலனிடம் பரிசில் பெற்று வரும் புலவன், பாணன், கூத்தன் போன்றோர் தன் போன்ற மற்றவருக்கு புரவலனின் பெருமைகளைக் கூறி, செல்லும் வழி சொல்லி அனுப்புவதே ஆற்றுப்படை. இந்த நூலும் ஒரு வகையில் ஆற்றுப்படைதான். எழுத்தாளர் பாவண்ணன் தான் வாசித்த சிறுகதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்து மற்ற வாசகர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார். இப்புத்தகத்தில் 25 தமிழகச் சிறுகதைகளும், 8 அயல் தமிழ்ச் சிறுகதைகளும், 10 பிற மொழிச் சிறுகதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இப்புத்தகத்தைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' புத்தகத்துடனான இதன் ஒப்பீட்டையும் பதியும் கட்டாயம் நேர்கிறது. கதாவிலாசமும் இதேபோன்றதொரு முயற்சிதான் என்றாலும், இரு முக்கியமான அம்சங்களில் இது கதாவிலாசத்தினிடமிருந்து மாறுபடுகிறது. ஒன்று. கதாவிலாசம் சொல்லும் அனுபவங்கள் ஒரு முழுமையான புனைவாகி விடக்கூடிய நிறைய வாய்ப்புகளுடன் இருக்கின்றன. ஆனால் ஆழத்தை அறியும் பயணம் வெறும் அனுபவமாக மட்டுமே அனுபவத்தை முன்வைக்கிறது. எந்தக் கணத்தில், குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியரின் நினைவடுக்கில் வந்து போனதோ அந்தக் கணத்தில் அனுபவக் குறிப்பு நின்று விடுகிறது. இதை பலம், பலவீனம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கதையுடன் வாழ்க்கை சந்திக்கும் புள்ளியில் அனுபவம் நின்றுபோய், கதை மீதான இடம்பெயர்தல் நிகழ்கிறது. இரண்டு. கதாவிலாசத்தில் தொகுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளும், எழுத்தாளர்களும் முந்திய மூன்று தலைமுறைகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இப்புத்தகம் 1930களில் எழுதப்பட்ட கதைகளைக் குறித்தும் கூடப் பேசுகிறது. இன்றைய பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகமற்ற எழுத்தாளர்களைப் பரிட்சயப்படுத்துகிறது. இரு நூல்களுமே தீவிர வாசகத் தன்மையுடன் அமைந்திருப்பது பொதுவான அம்சம்!

ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் எழுத்தாளர் குறித்த குறிப்பும், இச்சிறுகதை எந்தத் தொகுப்பிலிருக்கிறது என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களை அடுத்து, எல்லாக் கட்டுரைகளும் ஓர் அனுபவத்தை விளக்கி, ஒரு புள்ளியில் நிறுத்தி, 'இந்தப் புள்ளியில் இன்ன கதை நினைவுக்கு வருகிறது' என்றபடி கதையைச் சொல்லி, பின் கதையின் மீதான மதிப்பீட்டைச் சொல்லி நிறைவு பெறுகின்றன. பின்பற்றப்பட்டிருக்கிற இந்த ஒரே மாதிரியான கட்டமைப்பு கொஞ்சம் சலிப்பேற்படுத்தத்தான் செய்கிறது.

என்றாலும் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களிடம், நல்ல இலக்கியத்தைத் தேடும் இன்றைய வாசகர்களை ஆற்றுப்படுத்தும் பாவண்ணனின் இந்நூல் கவனிக்கத்தக்க, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!

இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களும், சிறுகதைகளும்:

தமிழகச் சிறுகதைகள்

அ.மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்'
பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'
த.நா.குமாரசாமியின் 'சீமைப்பூ'
கல்கியின் 'கேதாரியின் தாயார்'
ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'சசாங்கனின் ஆவி'
து.ராமமூர்த்தியின் 'அஞ்ஞானம்'
கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு'
நா.பார்த்தசாரதியின் 'வேப்பம்பழம்'
ஆர்.சூடாமணியின் 'ரயில்'
விந்தனின் 'மாடும் மனிதனும்'
தி.சா.ராஜுவின் 'பட்டாளக்காரன்'
ந.முத்துசாமியின் 'இழப்பு'
கரிச்சான் குஞ்சுவின் 'நூறுகள்'
பிரபஞ்சனின் 'பிரும்மம்'
இந்திரா பார்த்தசாரதியின் 'நாசகாரக் கும்பல்'
ஜே.வி.நாதனின் 'விருந்து'
ஆர்.ராஜேந்திரசோழனின் 'கோணல் வடிவங்கள்'
நாஞ்சில் நாடனின் 'ஒரு இந்நாட்டு மன்னர்'
திலீப்குமாரின் 'மூங்கில் குருத்து'
மா.அரங்கநாதனின் 'சித்தி'
சிவசங்கரியின் 'வைராக்கியம்'
சி.ஆர்.ரவீந்திரனின் 'சராசரிகள்'
மலர்மன்னனின் 'அற்பஜீவிகள்'
ஜெயந்தனின் 'அவள்'
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்'

அயல் தமிழ்ச் சிறுகதைகள்

என்.எஸ்.எம்.ராமையாவின் 'ஒரு கூடைக் கொழுந்து'
என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்'
வ.அ.இராசரத்தினத்தின் 'தோணி'
அ.முத்துலிங்கத்தின் 'அக்கா'
எஸ்.பொன்னுத்துரையின் 'அணி'
சாந்தனின் 'முளைகள்'
மாத்தளை சோமுவின் 'தேனீக்கள்'
தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள்'

பிறமொழிச் சிறுகதைகள்

தாகூரின் 'காபூல்காரன்'
ஜயதேவனின் 'தில்லி'
கே.ஏ.அப்பாஸின் 'அதிசயம்'
சரத்சந்திரரின் 'ஞானதா'
காளிந்திசரண் பாணிக்கிரஹியின் 'நாய்தான் என்றாலும்'
தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'
எட்கர் ஆலன் போவின் 'இதயக்குரல்'
துர்கனேவின் 'முமூ'
வில்லியம் பாக்னரின் 'இரு சிப்பாய்கள்'
ஐல்ஸ் ஐக்கிங்கரின் 'ரகசியக் கடிதம்'

பின்குறிப்பு:

இப்புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்த நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கு நன்றி!

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Monday, January 31, 2011

73. IN THE COUNTRY OF GOLD DIGGING ANTS

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

----------------------------------------------------------------
புத்தகம் : In the Country of Gold-digging Ants (2000 years travel in India)
ஆசிரியர் : அனு குமார்
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Puffin Books
முதற்பதிப்பு : 2009
விலை : 225 ரூபாய்
பக்கங்கள் : 191 (தோராயமாக 24 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------

இந்தியாவிற்கு வருகை புரிந்த அயல்நாட்டுப் பயணிகள் யார்? இதுபோன்றதொரு கேள்வி ஆறாம்வகுப்பு முதலிடைத் தேர்வில் சமூகவியலில் ஐந்து மதிப்பெண்ணுக்குக் கேட்கப்பட்டபோது மார்கோ போலோ, யுவான் சுவாங், பாஹியான் என்றுமட்டும் எழுதிவிட்டு அரை மதிப்பெண் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. வினாத்தாளில் பகுதிமாற்றி கேட்கப்பட்டுவிட்ட கேள்வி என்றும் குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு ஏதாவது எழுதியிருந்தால் மட்டுமே அரைக்கும் அதிகம் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். மிஞ்சிமிஞ்சிப் போனால் அவர்களின் சொந்த நாடு எதுவென்பதும் எவரின் ஆட்சிக்காலத்தில் வந்தார்கள் என்பதும் தவிர அவர்களைப் பற்றிய குறிப்புகளேதும் எங்கள் பாடப்புத்தகங்கள் சொல்லியிருக்கவில்லை. அடுத்தடுத்த வகுப்புகளிலும் இந்நிலைகளில் மாற்றமில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவர்கள் எல்லாரும் வெறும் பெயர்களாக மட்டுமே நினைவில் தங்கிவிட்டது, நமது கல்விமுறையின் தோல்வியன்றி வேறில்லை.

யாத்ரீகர் பயணி தூதர் என்ற பதங்களால் பெரும்பாலும் அறியப்படும் இவர்களைப் பற்றி நிதானமாக மறுபரிசீலனை செய்ய சென்ற ஆண்டு நான் படித்த மூன்று புத்தகங்கள் உதவின. முதலாவது புத்தகம் - கோடுகள் இல்லாத வரைபடம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை பதிப்பகம். யாத்ரீகனுக்கும் அவன் சொந்த நாட்டில் அவனை எதிர்பார்த்து அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் என்றும், உலக எல்லைகளே வரையறுக்கப்படாத அக்காலத்தில் மதம் - வியாபாரம் - தூது - தேடல் - அறிவியல் என்று ஏதோவொன்று அவர்களின் பயணத்திற்குப் பின்புலமாக இருந்திருக்கிறது என்றும், மொழி - கலாச்சாரம் - பூகோளம் என்று அவர்கள் எதிர்கொள்ள தடைகள் பல இருந்தன என்றும் யோசிக்க வைத்த புத்தகம் அது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் இன்றைய ஊர்சுற்றிகளுக்கெல்லாம் முன்னோடிகளை ஆவணப்படுத்தியிருக்கும் நல்ல புத்தகம்.

இரண்டாவது புத்தகம் - The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி. யாத்ரீகர்களைப் பற்றிய எனது அறிவை அடுத்த நிலைக்குக் கொண்டுபோன அற்புதமான புதினம். அமெரிக்கா போன்ற அறியப்படாத பிரதேசங்களைக் கண்டுபிடித்ததும் இந்தியா போன்ற தேசங்களுக்கு மாற்றுவழி கண்டுபிடித்ததும் அவர்கள்தான் என்றாலும், சிபிலிஸ் ஸ்கர்வி பிளேக் போன்ற நோய்களைக் கண்டம்விட்டுக் கண்டம் கடத்தியதும் அவர்களே. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் இருந்த மனிதகுல நம்பிக்கைகளைப் பொய்யாக்கியதும் அவர்களே.

இந்த இரண்டு புத்தகங்களின் துண்டுதலினால்தான் சென்ற வருடம் வாஸ்கோடா காமா (கோவாவில் ஒரு நகரம்) முதல் கப்பாடு (வாஸ்கோடா காமா முதலில் கால்பதித்த இந்திய மண்)வரை, வாஸ்கோடா காமாவின் எதிர்த்திசையில் பயணித்துப் பார்த்தேன்.

23ம் புலிகேசி திரைப்படம் பார்த்தவன் என்பதாலும், தற்போதைய இந்திய அரசியலை உற்றுக் கவனித்துவரும் ஒரு சாமானியத் தமிழன் என்ற வகையிலும் இவ்விரு புத்தகங்கள் முலம் நாம் தெரிந்து கொண்டது - சமகாலத்தில் வாழ்ந்த உள்நாட்டுக்காரனால் சொல்லப்படும் கல்வெட்டுகளைவிட யாத்ரீகன் என்ற அந்நியனால் சொல்லப்பட்டவை நம்பத்தகுந்தவை. வரலாற்றுப் பாடங்கள் பெரும்பாலும் அப்படிப்பட்ட யாத்ரீகர்களின் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதைச் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கிறித்தவ பாதிரியாருக்கான படிப்பில் Theologyல் இப்படியொரு பாடம் உண்டென்றும், சீடர்கள் எழுதிய விவிலியத்தையும் அதே காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் சொன்ன இயேசுகிறித்து பற்றிய குறிப்புகளையும் அது ஒப்பிடுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மூன்றாவது புத்தகம் - In the Country of Gold-digging Ants - அனுகுமார் என்ற வரலாறு படித்த ஆசிரியர் எழுதியது. 11 யாத்ரீகர்களைக் காலவரிசையில் அவர்களைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் தருகிறது இப்புத்தகம். பிறந்த இடம் - வருடம், எழுதிய குறிப்புகளின் தொகுப்பின் பெயர், பயணத்திற்கான காரணம், நிதியுதவியவர்கள், உடன்வந்தவர்கள், சென்ற இடங்கள், கவனித்த விசயங்கள், இறந்த இடம் - வருடம் எல்லாம்.

வெறும் குறிப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டு மற்றொரு வரலாற்றுப் புத்தகம் என்று ஒதுக்கப்படாமல் இருக்க, தனக்கென்று ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பின்னட்டையில் 'இந்திய வரலாறு சலிப்புட்டுவதாக நினைக்கிறீர்களா?' என சவால் விடுகிறார். பாடப்புத்தகங்களில் சொல்லித்தர முடியாத யாத்ரீகர்களால் குறிப்பிடப்பட்ட அன்றைய இந்தியாவைப் பற்றி அதிகம் பேசுகிறது புத்தகம். பின்னட்டையில் சில உதாரணங்களும் உண்டு.

இந்தியாவில் மாமிசம் உண்ணும் சில எறும்புகள் தங்கமிருக்கும் இடங்களில் குழிதோண்டுவதாக ஒரு யாத்ரீகர் குறிப்பு. காஷ்மீரத்து மக்கள் மந்திரங்கள் மூலம் காலநிலைகளையும் இரவுபகலையும் மாற்றும் சக்தி படைத்தவர்களாகவும் ஒரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஒரு குறிப்பு - நினைத்தாலே சிரிக்கவைக்கும் குறிப்பது. பீதரின் (Bidar - இன்றைய கர்நாடகாவின் ஒரு வடகிழக்கு மாவட்டம்) அரசன் ஒருவன் 10000 குதிரைப்படை வீரர்களுடன் 50000 காலாட்படை வீரர்களுடன் 200 யானைகளுடன் 300 குதிரைகளுடன் 100 குரங்குகளுடன் 100 அந்தப்புரத்து மகளிருடன் வேட்டைக்குப் போயிருக்கிறான். இன்றும் இதேபோல நடக்கத்தான் செய்கிறது! ஆனால் சிரிக்கத்தான் முடியவில்லை!

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல்கள்தான். மதுரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டதென்கிறார் மெகஸ்தனிஸ். வழக்கம்போல் வரலாற்றாசிரியர்கள் இதை மறுக்கிறார்கள். இன்றைய இந்தியாவில் பாரம்பரியக் கலைப்படைப்புகளாக அடையாளப்படுத்தப்படும் அஜந்தா குகைகளும், காளிதாசனின் சகுந்தலை போன்ற படைப்புகளும் உயர்குடிமக்களின் பெருமைக்காகப் படைக்கப்பட்டவை எனவும் மற்றவர்கள் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் பாஹியான். ஆதாமின் கல்லறை சிலோனில் இருக்கிறதென்கிறார் அதானாசியஸ் நிகிதின். காஷ்மீரத்து மக்கள் எந்த விலங்கினத்தையும் துன்புறுத்துவதில்லை என்றும், இரத்தம் சிந்தாத வாழ்க்கைமுறையை மேற்கண்டார்கள் என்றும் மார்கோ போலோவே சொல்லியிருக்கிறார்!

ஓர் அரசனை எவனோ கொல்ல முயல, இந்தக் காலத்தைப் போலவே அப்போதும், சந்தேகத்தின் பெயரில் 5000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒற்றைக் கொம்புக் குதிரைகளும், கருப்புநிறச் சிங்கங்களும் இருந்திருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த இடம் கடலாக இருந்திருக்க வேண்டும். மலரிதழ்கள் 3 -4 -5 -6 -18 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கின்றன; 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இல்லவே இல்லை. இவையெல்லாம் இந்தியாவைப் பற்றித் தாம் கண்ட காட்சிகளாக யாத்ரீகர்கள் குறித்துக் கொண்டவை. இந்தியாவில் போர்முடித்து நாடுதிரும்பிய அலெக்சாண்டரின் படைவீரர்கள், இந்தியர்களின் விந்து கருப்புநிறமானதென்று செய்தி பரப்பியதாக சல்மான் ருஷ்டி தனது Salimar the clown புத்தகத்தில் சொல்கிறார்.

யாத்ரீகர்கள் நாடுகளின் எல்லைகளைக் கடக்கும்போது விசா மாதிரி அனுமதி வாங்க, மாதக்கணக்கில் காத்திருந்திருக்கிறார்கள். அவர்களும் வழிதவறி பாலைவனங்களிலும் கடல் நடுவிலும் உயிருக்காகப் போராடி இருக்கிறார்கள். நம்மூர் சத்திமுத்திப் புலவர் பாணியில் வாழும் காலம்கூடத் தெரியாமல் புலம்பிய குறிப்புகளும் உண்டு. யாத்ரீகர்கள் சிலரை நாடு திரும்பியவுடன் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். நிலவில் ஓரிடம், பீர், புகைவண்டி என்று அவர்களின் பெயர்சூட்டி கவுரவித்திருக்கிறார்கள். இவர்களின் சில குறிப்புகளைச் சொந்த நாட்டவர்கள் கதைக்கட்டும் பேர்வழி என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். தேங்காய், முதலை போன்ற ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத விசயங்களை இந்தியாவில் பார்த்ததாக மார்கோ போலோ சொன்னபோது, நம்பமுடியாத கதைகட்டிவிடுபவர்களைக் குறிக்கும் 'Its a Marco Polo' என்ற சொல்லாடலையே உருவாக்கிவிட்டார்கள்!

ஒரு யாத்ரீகரின் இந்தியா பற்றிய குறிப்பிது: 'பூமியின் சுற்றளவை 100% துல்லியமாக கணித்த அதே மக்கள்தான், அதே பூமி ஒரு மீனின்மீது நிற்கும் பசுவின் கொம்புகளில் தாங்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்'.

கிமு 321 முதல் கிபி 1997 வரை பயணிக்கிறது புத்தகம். இரண்டு பெண் யாத்ரீகர்களும் உண்டு. கால்நடை, கப்பல், புகைவண்டி என்று காலம் மாறமாற பயண முறைகளும் மாறியிருக்கின்றன. நமெக்கெல்லாம் மிகவும் பரிட்சயப்பட்ட வாஸ்கோடா காமா இப்புத்தகத்தில் இல்லை.

30 நாட்களில் மொழி சொல்லித்தரும் புத்தகங்கள், நோய்த்தடுப்பு மருந்துகள், அட்வான்ஸ் புக்கிங், கூகிள் மேப், GPS, திட்டமிட்ட பாதை எதுவும் தெரியாத சிலர் நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்துவிட்டு உலகை எப்படிச் சுருக்கிப்போனார்கள் என்று படித்துப் பாருங்கள். கூச்சப்படாமல் எவருக்கும் பரிசளிக்கத்தகுந்த தரமான புத்தகம்.


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Wednesday, January 05, 2011

72. தாமரை பூத்த தடாகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

-----------------------------------------------------
புத்தகம் : தாமரை பூத்த தடாகம்
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ.100

-----------------------------------------------------

'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' நூலிற்கு அடுத்தபடியாகச் சுற்றுச்சூழல் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.



காட்டுயிர்கள், வளர்ப்புப் பிராணிகள், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுதி. இக்கட்டுரைகள் யாவும் உயிர்மை, இந்தியா டுடே, காலச்சுவடுகளில் 2006 முதல் 2008 வரையில் எழுதப்பட்டவை.

இக்கட்டுரைகளும் இயற்கையியல் சார்ந்த சொல்லாடல்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றன. அவசரகதியில் புதிய சொற்களை உண்டாக்கத் தெரியாமலும், சரியாக மொழிபெயர்க்கத் தெரியாமலும் தகவல் ஊடகங்கள் திணறுவதையும் சுட்டிக்காட்டுகிறார். நமக்கெல்லாம் மிகவும் பரிட்சயமான 'குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்', Depression என்ற நிலைக்குப் பயன்படுத்தப்படுவது ஓர் உதாரணம்.

ஒரு விஷமீன் தாக்கி இறந்ததாக ஸ்டீவ் இர்வின் (Steve Irwin) பற்றித் தமிழ்த் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி, ம்மீனிற்குத் தமிழ்ப்பெயர் திருக்கைமீன் என்கிறார் (இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ).

ஆசிரியரின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த சில விசயங்கள்:

1) அவர் பயன்படுத்தும் அழகான தமிழ்வார்த்தைகள் - கூழைக்கடா(Pelican), இரலை (Antelope), அரையாப்புக் கட்டி (Plague).

2) நமக்கு நன்கு பரிட்சயப்பட்ட ஒன்றை வெளியுலகம் எப்படிப் புரிந்திருக்கிறது எனச் சொல்வது - கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிதான், கெட்ட வார்த்தை போலிருக்கிறது என்று தேசியப்பறவையாக்கப்படாத The Great Indian Bustard

3) உணர்வுப்பூர்வமான மேற்கோள்கள் - புண்கழுத்து இன்ஸ்பெக்டர், ICUNன் Red Data Book, Kyoto Protocol. இவையெல்லாம் இப்புத்தகத்தில் இருந்து சில உதாரணங்கள்.

அமைதி, நன்னீர், மாசற்ற காற்று என்றிருக்கும் ஒருபகுதியைச் டூரிசம் என்ற பெயரில் மாசுபடுத்துவதைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா பற்றியக் கட்டுரைகள் கவனிக்கப்படவேண்டியவை. குட்டி ரயில், கோடை விழா, ஏரிப்படகு இதெல்லாம் தேவைதானா? மரபணுவகை முரண்பாட்டினால் தோன்றிய வெள்ளைப்புலிகளை உயிரியலாளர்கள் தடுத்தும் அரசே இனவிருத்தி செய்யலாமா? யோசிக்க வேண்டிய விசயங்கள்!

வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட ஓர் உயிரினம் உரியவர் இன்றி தன்னிச்சையாக தானே உணவுதேடி வாழ்ந்து மறுபடியும் ஏறக்குறைய காட்டுநிலைக்கே திரும்பும் Feral விலங்குகளைப் பற்றியுள்ள மூன்று கட்டுரைகளும் அருமை. இதிலடங்கும் குதிரை, ஒட்டகம், நாய், கழுதை, மாடு, பன்றி போன்ற விலங்குகளும், அவை மூலம் பரவும் தொற்றுநோய்களும், சாலை விபத்துகளும் என்று இவ்விலங்குகள் பற்றிய முக்கியத்துவத்தைப் பேசுகின்றன அக்கட்டுரைகள்.

ஒத்தகமந்து என்ற தொதுவ இனமக்களின் பாரம்பரிய நகருக்கு உதகமண்டலம் என்ற சம்மந்தமே இல்லாத பெயரைச் சூட்டியபோது எதிர்ப்பு தெரிவித்த இவாம் பில்ஜின் (Evam Pilgin), இயற்கை விவசாயி மசனொபு ஃபுகோக்கா (Masanobu Fukuoka), கிண்டிப் பாம்புப் பண்ணை நிறுவிய ராமுலஸ் விட்டக்கேர் போன்றவர்களின் அறிமுகம் இப்புத்தகம் மூலம்தான் எனக்குக் கிடைத்தது.

சென்ற புத்தகத்தில் அசைவ உணவுக்காரர்களுக்கு வாடகை வீடு தராதவர்களைச் சுட்டிக்காட்டியதைப் போல, இப்புத்தகத்திலும் ஒரே மாதிரி T-சர்ட் போட்டுக்கொண்டு மரத்தைக் காப்பாற்றுகிறேன் - புலியைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்போல் காட்டிக்கொள்பவர்களையும், ஜல்லிக்கட்டு முதல் அசைவ உணவுவரை கலாச்சாரக் காவலர்கள்போல் காட்டிக்கொள்பவர்களையும் சுட்டிக்காட்டுகிறார். எதையுமே வணிக நோக்கத்திலேயே அணுகும் இன்றைய சூழலில், சுற்றுச்சூழலும் விதிவிலக்கில்லாமல் வணிகமயமாக்கபடுவதை எச்சரிக்கிறார்.



The Great Rift Valley என்ற பூகோள அற்புதம் இப்புத்தகம் மூலம்தான் எனக்கு அறிமுகம். 'தாமரை பூத்த தடாகம்' என்று ஆசிரியர் சொல்லும் காட்சி எப்படி இருக்கும் என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். உங்களின் பார்வைக்கும்:



அக்டோபர் 2008ல் உயிர்மை கட்டுரை ஒன்றில், இயற்கை விவசாயத்திற்கு இந்தியாவில் இன்னும் தரநிர்ணயம் செய்யும் முறை உருவாக்கப்படவில்லை என்ற கருத்து இருக்கிறது. ஆனால் 17-05-2007 முதல் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (Tamil Nadu Organic Certification Department - TNOCD)செயல்பட்டு வருவதாக இணையத்தில் படித்தேன்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் இருக்கும் பொருளடக்கம் பகுதியில், கட்டுரைத் தலைப்புகளும் அதற்கான பக்க எண்களும் முரண்படுகின்றன.

சமீபத்தில் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த மூன்று கல்லறைகள் பார்த்தேன். முதல் கல்லறையில் நான் மறந்துபோன பெயருடைய ஒரு விலங்கின் படமிருந்தது; அதில் அவ்விலங்கு கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஆண்டு, இறந்த ஆண்டாகக் குறிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் அடுத்த கல்லறையில் டோடோ (Dodo) பறவையின் படம், அதன் இறந்த ஆண்டும் இருந்தது. மூன்றாவது கல்லறையின்
குழி மூடப்படாமல் இருந்தது. அதன் மேல் இந்திய தேசிய விலங்கான வங்காளப் புலியின் படமிருந்தது. அதன் கீழ் "நாளை இது இங்கு வருவதும், வராததும் நம் கையில்" என்று எழுதப்பட்டிருந்தது. கணத்த இதயத்துடன் புரிந்தவர்கள் மயான அமைதியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

புரியாதவர்கள் வெள்ளைப் புலியைப் பார்க்க விரைந்தார்கள்!

மனிதன் என்ற இனமும் நாளை Feral பட்டியலில் வந்துவிடக் கூடாதெனில், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)