Thursday, June 07, 2012

90. THE RED MARKET


பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 

மனிதனுக்காக பொருள்கள் என்ற நிலைபோய் பொருள்களுக்காக மனிதன் என்ற நிலை உருவாகும்.
- கார்ல் மார்க்ஸ்.
---------------------------------------------------------------
புத்தகம் : The Red Market
ஆசிரியர் : Scott Carney (http://www.scottcarney.com/)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Hachette India
முதற்பதிப்பு : 2011
விலை : 550 ரூபாய் (ரூ 385 தள்ளுபடி விலையில் வாங்கினேன்)
பக்கங்கள் : 241 (தோராயமாக 30 வரிகள் / பக்கம்)

---------------------------------------------------------------

எனது எடை 90 கிலோ கிராமிற்குக் கொஞ்சம் குறைவு. அடர்த்தியான முடிகள். ஆரோக்கியமான கண்கள். எல்லாப் பற்களும் பத்திரமாக‌ உள்ளன. எனக்குத் தெரிந்தவரை எனது தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்கிறது. ஆறு அடி இரண்டு அங்குல உயரம். தொடை மற்றும் பின்னங்கால் எலும்புகளும் இணைப்புத் தசைகளும் நன்கு வலுவாக உள்ளன. இரண்டு சிறுநீரகங்களும் நலமே. இதயம் நிமிடத்திற்கு 87 முறைகள் துடிக்கிறது. எனது மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். திருமணச் சந்தையில் எனது ஆரம்ப ஏல விலை என நினைக்காதீர்கள். இவை அனைத்தும் ஸ்காட் கார்னி அவர்கள் தனது The Red Market புத்தகத்தில் ஒரு கட்டுரையில் அவரது உடம்பிற்கான சுயமதிப்பீடாக‌ சொல்லும் விசயங்கள்.

எனது இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா சிவப்பணுக்கள் இரத்தத்தட்டுகள் (platelets) என்று தனித்தனியே பிரித்தெடுத்து தேவைப்படுபவருக்கு உபயோகப்படுத்தப் படலாம். முழங்கால் உடைந்து போன விளையாட்டு வீரர்களுக்கு எனது தசைநார்கள் (ligament) பொருத்தப் படலாம். அமெரிக்க அழகிகளுக்கும் பாப் பாடகர்களுக்கும் செயற்கை முடி செய்யவோ கேக்குகள் செய்யவோ எனது முடி பயன்படுத்தப் படலாம். விழிவெண்படலம் இதயம் சிறுநீரகம் கல்லீரல் போன்றவை இன்னொருவருக்கு அப்படியே பொருத்தப் படலாம். எனது மொத்த எலும்புக் கூடும் ஏதோ ஒரு மருத்துவ மாணவனின் படிப்பிற்குப் பயன்படலாம். நான் செத்தே போனாலும் கூட எனது விந்துவைப் பத்திரப்படுத்தி ஒரு பெண்ணைக் கருத்தரிக்க வைக்கலாம். அப்படிப் பிறக்கும் குழந்தையின் மதிப்பில் எனக்கும் பங்குண்டு என்பது வேறு விசயம். இப்படித்தான் ஒரு கோடி ரூபாய்க்கு விளக்கம் சொல்கிறார் ஆசிரியர். 'மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு. அடப் போங்க‌ தம்பி'. நீங்கள் நினைக்கலாம்.

ஓர் இயந்திரத்தின் உதிரி பாகத்தைப் போல மனித உறுப்புகளைச் செயற்கையாகச் செய்ய இன்னமும் ஆய்வுக்கூடங்கள் திணறிக்கொண்டு இருக்கின்றன. இன்றைய‌ சூழலில் இன்னோர் உயிருள்ள ஆரோக்கியமான மனித உடலில் இருந்து எடுத்து, பழுதடைந்து போன மனித உடலில் பொருத்துவதுதான் ஒரேவழி. கொடுக்கல் வாங்கல் என்றாலே தரகு என்ற இடைநிலையுடன் ஒரு சந்தை இருக்கத்தான் செய்யும். எதையும் விலைப்படுத்தும் வளர்ந்த நாட்டவர்கள்தான் இங்கே வாங்குபவர்கள்; மனிதவளம் மிக்க மூன்றாம் உலக நாட்டவர்கள்தான் இங்கே கொடுப்பவர்கள். ஆசிரியரின் சுயமதிப்பீட்டில் சொன்ன ஒரு கோடி ரூபாயில் அவருக்கு ஏதாவது சொற்ப பங்கு கிடைக்குமா இல்லையா என்பது உறுப்பைப் பொறுத்தது. தேவை உள்ள இடங்களில் தட்டுப்பாடு தோற்றத்தை ஏற்படுத்தி பணம்செய்யும் தரகர்களின் கள்ளச் சந்தை பற்றியது இப்புத்தகம். இரத்தமும் சதையும் நுகர்வுப் பொருட்கள் என்பதால், இக்கள்ளச்சந்தையின் பெயர் சிவப்புச் சந்தை!

ஒரு காலத்தில் மனித உடலை வெட்டிப் படிக்க மதங்கள் தடை செய்தன. மருத்துவ வல்லுனர்கள் பிணங்களைத் திருடித்தான் மனித உடலைத் திருட்டுத்தனமாகப் படித்தார்கள். போர்களில் சில வீரர்களின் பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள எதிரிகளின் பிணங்கள் தேவைப்பட்டன. எல்லாக் காலங்களிலும் ப‌ல்வேறு சூழ்நிலைகளில் இன்னொரு மனித உடலின் உறுப்புகள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன‌. இளமை நிலைக்க‌ சிறுவர்கள் நரபலி கொடுக்கப்படுவதும், ஆட்சி நிலைக்க புதிதாய்ப் பருவமடைந்த பெண்ணின் கருவறை திறப்பதும் அத்தேவைகளின் இன்னொரு வடிவங்கள். பெனிசிலின் கண்டுபிடித்து மருத்துவ உலகம் பிரம்மாண்டமாய் வளர்ந்துவிட்ட பின், இரத்தம் கண் உடல் என்று பொதுநலம் கருதி சிலர் தானே முன்வந்து தானமாகவும் தந்தனர்; அவற்றின் தேவை அதிகரித்தபோது அவற்றுக்கென ஒரு சந்தை உருவாகி விலையும் உருவானது. செருப்பு, எலட்ரானிக் பொருட்கள் போல மனித உறுப்புகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாடுகள் கடந்தன. காலப்போக்கில் மனிதநேயம் என்ற அடிப்படையில் மனித உறுப்புகளை விற்பதை நாடுகள் படிப்படியாகத் தடை செய்தன. பேனா வாங்கினால் மூடி இலவசம் என்று சொல்லி, மூடியின் விலையையும் பேனாவோடு வசூலிக்கும் சந்தை தந்திரத்தில், மனித உறுப்புகள் மூடி போல் இலவசமாயின. இடமாற்றும் மருத்துவச் செலவு என்பது பேனா போல் சமூக வழக்கமாயின. தரகு தளைக்கிறது!

மனித பாகங்களை ஏற்றுமதி செய்வதை 1985ம் ஆண்டுதான் இந்தியா தடை செய்தது. ஆனாலும் ஓர் இந்திய மருத்துவ மாணவன், கல்லறைகளில் திருடப்பட்ட எலும்புகளைத் தனது படிப்பிற்குப் பயன்படுத்துவதைச் சட்டம் அனுமதிக்கிறது. பிள்ளைகளைத் தத்தெடுப்பதில் இந்தியாவில் கெடுபிடிகள் அதிகம். மருத்துவப் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வாடகைக்குக் கரு சுமப்பதை இந்தியா 2002ம் ஆண்டு சட்டப்பூர்வ‌மாக்கியது; ஆனால் சட்ட திட்டங்கள் தெளிவாக இன்னும் ஒழுங்குபடுத்தப் படவில்லை. அமெரிக்காவில் ஆகும் சிகிச்சை செலவை விட இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மடங்கு குறைவு. அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனங்களின் கெடுபிடிகள் அதிகம். உறுப்புச் சந்தையைச் சீனாவில் அரசாங்கமே நடத்துகிறது. அரசுக்கு எதிரான சிறைக் கைதிகளின் உறுப்புகளைச் சீன‌ அரசாங்கமே கடத்தியதாக செய்திகள் உண்டு. இஸ்ரேல் போன்ற நாடுகள் தனது எல்லைக்குள் கருமுட்டைகள் விற்பதைத் தடை செய்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்குப் பணவுதவி அளிக்கின்றன. கொடுப்பவர் யாரெனத் தெரியாமலேயே வாங்கச் சொல்லி அவர்களுக்கு இடையே தார்மீக சங்கடங்கள் ஏற்படுவதை உலக நாடுகள் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற விசித்திர ஓட்டைகள் தான் சிவப்புச் சந்தையின் மந்திரச்சாவி.

10 கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம் சொல்லும் சில விசயங்கள்:

1. இறந்த உடல் பாகங்களுக்கு அருகில் இருப்பதன் மூலம் முக்தி அடைய முடியுமென நம்புகிறது பூட்டானிய புத்த மதத்தவர்களின் ஒரு பிரிவு. அவர்களின் புல்லாங்குழல், மனித பின்காலெலும்பு (tibia); அவர்களின் மந்திரம் சொல்லும் கோப்பை, மனித மண்டையோடு. இதற்காகப் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப் படுகின்றன. புத்தனின் பல்லைக் காக்கும் சிங்களவர்கள் புத்தனின் சொல்லைக் காக்காமல் போனது போல!

2. மருத்துவ மாணவர்களுக்கு எலும்புக் கூடுகள் விற்கும் கும்பலில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தனி டீம். பிணங்களைப் பற்றிய துப்பு கொடுக்க ஒரு டீம். தோண்டி எடுக்க ஒரு டீம். சதைகளைப் பிரித்தெடுக்க ஒரு டீம். பாலிஷ் போட ஒரு டீம். மார்கெட்டிங் டீம் தனி. ஷிப்பிங் டீம் தனி. இதேபோல் உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகளுடன் தொடர்புடைய துப்பு கொடுப்பவர்கள், மிகவும் சாதாரணமானவர்கள். அவர், நீங்கள் மதுரையில் தினமும் சாப்பிடும் இட்லிக் கடைக்காரராக‌க் கூட இருக்கலாம். தினமும் உங்கள் வறுமையைச் சொல்லி அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தால், ஒருநாள் அவர் சொல்லலாம்: 'ஒங்க கஷ்டமெல்லாம் தீர நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பீங்களா?'. மதுரை இட்லிக்கு மட்டுமல்ல பேமஸ்; கிட்னிக்கும்தான் என்பது வடிவேலு காமெடியல்ல!

3. சுனாமி மறுவாழ்வுக்கென அமைத்துத் தரப்பட்ட சென்னைக் கிராமம் ஒன்று, பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் தங்களின் சிறுநீரகங்களை விற்றது. கிட்னிவாக்கம் என்று பெயர் பெறும் அளவிற்கு வியாபாரம். தடுத்த உள்ளூர் அரசியல்வாதியின் போஸ்டர் கல்லடி வாங்கும் அள‌விற்கு, வியாபாரம் நியாயமாகிவிட்டது. விசயம் நீதிமன்றம் வரை போய் தமிழ்நாட்டின் 52 பெரும் மருத்துவமனைகள் சிக்கின. காலாவதியான மாத்திரைகள் விசயம் காலாவதியாகிப் போனது போல், கிட்னி விசயமும் ஓர் அமைச்சரின் தலையீட்டால் செயலிழந்து போனது என்று ஆசிரியரான அமெரிக்காக்காரர் சொல்கிறார்.

4. புதிய மருந்துகளைச் சோதிக்கும் இரகசிய ஆய்வுக்கூடம் ஒன்றிற்குப் படிக்கும் காலத்தில் ஆசிரியரும் போய் இருக்கிறார். சோதிக்க உடம்பு தருபவர்களுக்கு ஊதியம் அதிகம். படிப்புச் செலவிற்காகச் சென்றிருக்கிறார். அவர் போன நேரம், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை நீண்ட நேரம் தக்க வைக்கும் புதிய மருந்துக்கான சோதனை. இறந்தால் வெளியே தெரியாத இந்த சோதனையில் ஆசிரியர் தப்பித்துவிடுகிறார். முழுச் சோதனையிலும் தன் ஆணுறுப்பு சோதிக்கப்படாத ஆச்சரியத்தை நர்ஸிடம் கேட்கிறார். 'மிக வினோதமான பக்கவிளைவுகள் இல்லாத வரையில் மருந்தின் செய‌ல்பாடு என்பது சோதனையின் நோக்கமல்ல. அது எவ்வளவு நேரம் உடம்பில் தங்குகிறது என்பதே சோதனை' என்கிறது பதில்.

5. சென்னையில் ஒரு பிரபல மருத்துவர் ஸ்டெம் செல்களை ஒரு நோயாளியின் மேல் சோதித்து எதேச்சையாக‌ வெற்றி. எப்படி என்று அவரால் சொல்ல முடியவில்லை. திரும்பவும் வெற்றி பெற முடியவில்லை. ஜெயிக்கும் வரை இராசியான டாக்டர் என்ற பெயர். தோற்றால் ஈ திரைப்படத்தின் வில்லன்!

திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயுதப் பாதுகாப்புடன் முடி பிரிக்கும் பணி. செங்கிஸ்கானை விட அதிகமாகப் பெண்களைப் பிரசவிக்க வைத்ததாகப் பெருமைப்படும் ஒரு சைப்ரஸ் நாட்டு டாக்டர். அமுல் பால் புகழ் ஆனந்த் நகரில், வாடகைத் தாய்களின் வயிற்றைக் குழந்தை பெற்றுத்தரும் பாத்திரமாக உபயோகிக்கும் கொடூரம். கோரக்பூர் நகரில் இருட்டறையில் வைத்து தொடர்ந்து மாதக்கணக்கில் இரத்ததை உறிஞ்சி உறிஞ்சி சக்கையாக உடம்பைப் பிழிந்து போட்ட கொடூரம். புதிய மருந்து கண்டுபிடிப்புகளைப் பரிசோதிக்கப் போய் விகார‌மான குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள். இங்கே உபரியாக‌ இருக்கும் குழந்தை வளத்தை, வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுக்கும் சமூகத் தொண்டு நிறுவனங்கள். இது போல பல அதிர்ச்சிகளைத் தருகிறார் ஆசிரியர்.

சிவப்புச் சந்தையில் இப்போது கிராக்கி அதிகம். கருமுட்டை / விந்து வாங்குபவர்களும் தத்து எடுப்பவர்களும் தன்னைப் போலவே குழந்தை இருக்க வேண்டுமென எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். கொடுப்பவர்கள் பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதன் எல்லாவற்றின் மூலம் அதிகம் பாதிக்கப்படுபவன் சமூகக் கட்டமைப்பில் அடியில் கிடப்பவனே! உதாரணமாக மதுரையில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்ற மல்லிகா தனது மகனுக்குச் சிறுநீரகம் தேவைப்படும்போது திக்கற்று நிற்கிறாள். இந்தியாவில் சதை என்பது சமூகக் கட்டமைப்புகளின் மேல்தட்டு மக்களால் மட்டுமே பெற முடிகிறது, கீழ்த்தட்டு மக்களால் விற்க மட்டுமே முடிகிறது என்கிறார் ஆசிரியர். இலாப நோக்கில் போய்க் கொண்டிருக்கும் இச்சந்தையில் மனிதனுக்குத் தன் சொந்த சதை மேல் கூட உரிமை இல்லாமல் போகிறது.

எல்லா கட்டுரைகளும் ஆசிரியரின் நேரடி அனுபவ‌ங்கள். அமெரிக்கா இந்தியா சைப்ரஸ் என்று தேடித்தேடிப் போய் தகவல்கள் சேகரித்து இருக்கிறார். அவர் மனைவி பெயரைப் பார்த்தால் நம்மூர் போல் தெரிகிறது. ஏழாம் உலகம் போன்ற புதினங்கள் உலாவும் தமிழ் தெரிந்து, ஆங்கிலத்தில் படித்ததால் பிரச்சனையின் வீரியம் அந்த அளவிற்குப் பாதிக்கவில்லை. புத்தகத்தில் வீரியம் குறைவு என்பதும் உண்மையே. ஆனால் எடுத்துக்கொண்ட விசய‌த்தால் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

காணாமல் போன‌ குழந்தை ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாட்டுப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு திரும்பி வந்ததைச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அது ஏன் கடத்தலாக இருக்கக் கூடாதென‌ இனிமேல் யோசியுங்கள். இரத்தம் பெறும்போது HIV அது இது என்று பல கேள்விகள் கேட்பதுபோல், இரத்ததானம் செய்யும்போதும் எங்கெல்லாம் போகும், கேளுங்கள். பெரியார் சொல்லியே கேட்காத, நீண்ட முடியைக் கடவுள் பெயரில் மொட்டை அடிக்கும் பெண்கள், நான் சொல்லியா கேட்கப் போகிறார்கள்?

ஸ்டெம் செல்கள் மூலம் உறுப்பு பரிமாற்றத்தை நீக்கும் முயற்சியை மருத்துவ உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது. இரத்ததானம் செய்பவர்கள் முதல், எதிர்பாராமல் மரணத்தை நெருக்கும் உறவுகளின் உறுப்புகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரோ ஒருவருக்குத் தானம் செய்யும் நல்லவர்கள் வரை மனிதமும் அடிக்கடி தலை நீட்டத்தான் செய்கிறது. மருத்துவம் என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாகும் வரை, பேனாவிற்கு மூடி இலவசம் என்ற வியாபார யுக்தியுடைய தரகுகளைத் தடுப்பது கடினமே! அதுவரை சந்தை நிலவரம் தெரிவோம்!

அனுபந்தம்:
1. ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான ஐஐடி மாணவரின் விந்தணு தான‌ம் தேவையென சில நாட்களுக்கு முன் விளம்பரம் செய்தனர் ஒரு சென்னை தம்பதியினர். பெர்னாட்ஷாவை ஓர் அழகு யுவதி கேட்டாள்: 'நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால், என்னைப் போல் அழகாகவும் உங்களைப் போல் அறிவாகவும் குழந்தை பிறக்கும்'. பெர்னாட்ஷா சொன்னார்: 'ஒருவேளை என்னைப் போல அழகாகவும் உன்னைப் போல் அறிவாகவும் பிறந்துவிட்டால்?'.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/) 

Tuesday, May 15, 2012

89. கெட்ட வார்த்தை பேசுவோம் - பகுதி 1

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி! 
--------------------------------------------------------------------
புத்தகம் : கெட்ட வார்த்தை பேசுவோம் - பகுதி 1 (இலக்கியக் கட்டுரைகள்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்
வெளியீடு : கலப்பை (http://kalappai.in/)
முதற்பதிப்பு : 2011
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 136 (தோராயமாக 39 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------------------------

கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழையும் போது, அந்நகரில் அவன் கொல்லப்படுவான் என்று அறிந்திருந்த மதுரையின் மாடத்து மலர்கள் எல்லாம் அசைந்து, அவர்களை வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்தன. பத்தாம் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் தற்குறிப்பேற்றணிக்கு உதாரணமாகச் சொன்னவை இவ்வரிகள். இளங்கோவடிகள் என்றாலே ஒரு சாமியார் என்ற பிம்பத்தை நமது பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு விதைப்பதாக மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் தமிழாசிரியர் வகுப்புக்கு வெளியே மிகவும் இயல்பாகப் பேசக் கூடியவர். அவரிடம் இருந்து சிலப்பதிகாரம் பற்றி விசாரித்தோம். கோவலனும் கண்ணகியும் திருமணமாகித் தழுவிக் கொள்ளும்போது, அவர்கள் கழுத்தில் உள்ள மாலைகள் பேசிக் கொள்ளும் பகுதி ஒன்று சொன்னார். அடடடடா. அன்றில் இருந்து இளங்கோவடிகளை இளங்கோ என்றுதான் சொல்கிறேன். அதன் பின், காமத்துப் பாலை முழுதும் படித்து, திருவள்ளுவர் மேல் உள்ள சாமியார் பிம்பத்தை நானே உடைத்துப் போட்டேன். புத்தகத்திலேயே வராமல் பல விசயங்கள் இதுபோல மறைக்கப்படுவது ஒருபுறம். பெண் இனப்பெருக்க மண்டலமும் மாதவிடாய் சுழற்சியும் வகுப்பில் நடத்தப்படப் போகும் ஆர்வத்தில் நாங்கள் எல்லாம் அமர்ந்திருக்க, அப்பக்கங்களை மின்னல் வேகத்தில் ஆசிரியர் கடந்து போனார். புத்தக‌த்தின் பல விசயங்கள் இதுபோல மறைக்கப்படுவது இன்னொருபுறம்.

ஐஸ்கிரீம் போன்ற அன்னியங்களைப் போதிக்கும் ஆங்கிலம். அதற்குக் கடன் வாங்கச் சொல்லும் கணக்கு. தூரத்தில் காட்டும் தமிழ். பார்க்க வைத்து சாப்பிடும் அறிவியல். அதையும் பறித்து ஓடும் சமூகவியல். நமது பாடத்திட்டங்கள் அப்படித்தான். இதை உணர்ந்தவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் பெருமாள்முருகன் அவர்களின் 'கெட்ட வார்த்தை பேசுவோம்'.

மணல்வீடு இதழில் பா. மணி என்ற பெயரில் ஆசிரியர் எழுதிக் கொண்டிருக்கும் தொடர்களின் முதல் தொகுப்பு இப்புத்தகம். ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியத்தைத் தாள்களில் அச்சேற்றிய தமிழ் அறிஞர்கள், அவையல்கிளவி இடக்கரடக்கல் குஃறொடரன்மொழி என்று சில பகுதிகளை நீக்கி இருக்கிறார்கள் அல்லது மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி பதிப்பேறியவைகளைப் படித்து, பெண் பிள்ளைகள் கெட்டுப் போகக் கூடாதென, உரை நூல்களிலும் வகுப்பறைகளிலும் வேறுவிதமாக பொருள் சொல்லப்படுகின்றன. இது போன்ற இலக்கிய‌ ஓரவஞ்சனைகளின் தொகுப்பே இக்கட்டுரைகள்.

புத்தமதத் துறவியான மணிமேகலையைப் பாம்புப் ப‌டம் போன்ற அல்குலை உடையவள் என்கிறார் சீத்தலைச் சாத்தனார். இப்படிப் பெண்குறிக்கு அல்குல் என்ற ஆதிகாலத் தமிழ்ச் சொல்லை இலக்கியங்கள் தயக்கமின்றி தாராளமாகப் ப‌யன்படுத்தி இருக்கும்போது, இன்றைய எழுத்துலகம் யோனி என்ற சமஸ்கிருத சொல்லுடன் சமரசம் செய்து கொண்டிருப்பதையும், அச்சேற்றியவர்களும் உரையாசிரியர்களும் அல்குலுக்கு மூக்கு, முலை, இடை, ஆடை, தோள் என்று சம்மந்தமில்லாத பொருள் சொல்லி இருப்பதையும் குறுந்தொகை, தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி, பழமொழிநானூறு என்று பல உதாரணங்களுடன் சொல்கிறார்.

கம்பருக்கு என்று ஒரு தனிக் கட்டுரை ஒதுக்கி அண்ணாத்துரை அவர்கள் எழுதிய கம்பரசம் பற்றிச் சொல்கிறார். மலப்புழை தவிர பெண்ணுடம்பை வரிவரியாக வருணிக்கும் இலக்கியங்களுக்கு இடையில் ஆணுறுப்புக்கென தனிச் சொல்லாடல்களைப் பயன்படுத்தி, புணர்ச்சிக்கென தனி வழக்குச் சொல்களை உண்டாக்கிய‌ காளமேகப் புலவரைப் பற்றி மட்டுமே பாதிப் புத்தகத்திற்கு மேல் கட்டுரைகள் பேசுகின்றன.

நான் ரசித்த சில செய்யுள்கள்:

சீதையின் அல்குலைப் படாதபாடு படுத்தியிருக்கும் கம்பரசத்தில் ஒரு துளி:
வாம மேகலையிற வளர்ந்தது அல்குலே

கோமளவல்லிகளின் ஆடைக்குள்ளிருக்கும் அங்கங்க‌ளைக் கண்டு ஆராயக் கோதண்டபாணி, பிரம்மச்சாரி அனுமனிடம் கூறுகிறார்:
செப்பென்பன் கலசம் என்பன் செவ்விள நீரும் தேர்வன்

சந்திரனைக் சேவலாகக் காவலுக்கு வைத்துவிட்டு பிறன்மனை விழைந்து அகலிகையை ஏமாற்றிய‌ பின் இந்திரன் ஆயிரம் கண்கள் பெறுவதைச் சொல்லும் பிர‌போத சந்திரோதயம் பாடல்:
அந்தா பதன் சொற்ற சாபத்தி னால்நொந் தகங் குன்றியே
முந்தா யிரம் கோச நெடுமா மரம்தூங்கும் முதுவா வல்போல்
நந்தா துடம்பெங்கும் நாலப் பழிப்பெய்தி நாகா திபன்
மந்தார நிழலூ டிருந்தாலும் வெந்தாப மாரா தரோ

சீரும் த‌ளையும் சிதையாம‌ல் 'மென்முலையார்' என்ப‌து 'பென்ம‌யில்நேர்' என்று ந‌ம‌து பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளில் சொல்லித் த‌ர‌ப்ப‌ட்ட‌ காள‌மேக‌ப் புல‌வ‌ர் பாட‌ல்:
காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வ‌ந்த‌த‌ற்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

பூட்டுவில் பொருள் கொள்ள‌ச் சொல்லும் காள‌மேகப் புல‌வ‌ரின் இன்னொரு பாட‌ல்:
மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி
இரும்படிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடவை தப்பும் பறை

நாத்திகர்கள் பெரும்பான்மையுடன் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில், 'பட்சி சாதி நீங்க, இந்தப் பகுத்தறிவாளரெ பாக்காதீங்க' என்ற வரிகளுக்கு எதிர்ப்பு வந்தபோது பெருந்தன்மையுடன் நீக்காமல் வெளியிட்டார்கள். பகவதி திரைப்படத்தில் 'போடாங்ங்கோ' என்ற பாடலுக்குக் கடும் எதிர்ப்பு வந்தபோது, கதாநாயகன் சொன்னார்: 'கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவரும் இப்படித்தான் பாடல் எழுதியிருப்பார்'. இன்றைய திரைப்பாடல்களின் நிலைமை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. Who the F பாடலுக்குக் குழந்தைகள் ஆடிப் பரிசு பெறுவது சாதாரணமாகி விட்ட காலம். காதல் என்ற பண்டைய கெட்ட வார்த்தை இன்று அன்றாட‌ப் பேச்சுகளில் நல்ல வார்த்தையாகிப் போன‌து. முலை சயனி என்று சமய‌ நூல்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை ஆத்திகர்கள் கூட‌ சொல்வதில்லை. எச்சொல் யார்யார்க்கு எந்தெந்த நேரங்களில் கெட்ட சொல் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

வைரமுத்து அழகாகச் சொல்வார்: 'முத்தம் என்ற வார்த்தைக்குக் கட்டிலில் வேறு பொருள், தொட்டிலில் வேறு பொருள், பாடையில் வேறு பொருள். சொல்லின் பொருளைத் தீர்மானிப்பது சொல்லல்ல, காலமும் இடமுமே'. காலங்காலமாகச் செல்லுமிடமெல்லாம் நீச பாஷை என்று ஒதுக்கப்படும் தமிழ்மொழியின் சொல்வளங்களைக் காக்கச் சொல்லும் இதுபோன்ற புத்தகங்களை வெறும் தலைப்பை மட்டும் பார்த்து வெறுத்து ஒதுக்காமல் ஆதரவு தருவோம்.

தொடர்புடைய சில சுட்டிகள்.
1. நண்பர் மு. ஹரிகிருஷ்ணன் http://manalveedu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
2. தம்பி சேரலாதன் http://seralathan.blogspot.in/2010/10/blog-post_28.html

அனுபந்தம்:
இப்பதிவிடுபவ‌ரும் இத்தளத்திற்குச் சொந்தக்காரரும் முன்பொரு காலத்தில் கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்துவதாக ஒரு விபரீத முடிவெடுத்து தளத்துக்காரர் மட்டும் அதைக் கச்சிதமாகப் பின்பற்றி வந்தார். அவருக்கும் ஒரு கதை சொல்லி, கெட்ட வார்த்தை பேச வைக்கும் சக்தியை மீட்டெடுத்த‌ பெருமை பதிவுக்காரரையே சாரும்.

இரண்டாம் பகுதி புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து,


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/) 

Saturday, March 31, 2012

88. OF LOVE AND OTHER DEMONS

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!  


உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை.
-இயேசு கிறிஸ்து
-----------------------------------------------------------------------
புத்தகம் : Of Love and Other Demons (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1994
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 160 (தோராயமாக 32 வரிகள் / பக்கம்)
-----------------------------------------------------------------------


அப்போது ஒரு மருத்துவமனை இருந்த அவ்விடத்தில் ஒரு காலத்தில் கன்னியாஸ்திரிகளின் மடம் ஒன்று இருந்திருக்கிறது. அதையும் விற்று, அவ்விடத்தில் ஓர் ஐந்து நட்சத்திர விடுதி கட்டுவதற்காக அவ்விடத்தைச் சுத்தப்படுத்துகிறார்கள். மூன்று தலைமுறைகளாக அம்மடத்தில் இறந்தவர்க‌ளை நிலவறையில் தான் அடக்கம் செய்து வைத்திருந்தார்கள். மீதமிருக்கும் எலும்புத் துண்டுகளை எல்லாம் தோண்டி எடுத்து வேறோர் இடத்தில் புதைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எலும்புத் துண்டுகளைச் சேகரிக்கும் முன், அவை புதைக்கப்பட்டு இருக்கும் கல்லறைக் கல்லில் எழுதப்பட்டு இருக்கும் தகவல்களைக் குறிப்பெடுத்து தனித்தனியே அடுக்கி வைக்கிறார்கள். அமெரிக்க அதிகாரிகள் சிலர் தமக்கான கல்லறைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துக் கொண்டு, வேறு கல்லறைகளில் புதைக்கப்பட்டு இருக்கும் வினோதங்களும் தென்படுகின்றன.


இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒரு வித்தியாசமான கல்லறையைக் காண்கிறார். பெட்டியைத் திறந்தால் வெறும் முடி. இரண்டு மூன்று பேர் சேர்ந்து முடிகளை மெதுவாக வெளியே இழுக்கிறார்கள். வந்து கொண்டே இருக்கிறது. கடைசியாக முடியின் அடி இன்னமும் ஒரு யுவதியின் கபாலத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சில எலும்புத்துண்டுளும் வெடியுப்பும் தவிர வேறேதும் இல்லை. முடியை அளவெடுக்கிறார்கள். 22 மீட்டர் 7 சென்டிமீட்டர்.


மனிதமுடி இறப்பிற்குப் பின்னும் மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வீதம் வளர்வது இயல்பு. அப்படி என்றால், அந்த யுவதி கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவள். இந்தக் கணக்குப் போட்டுப் பார்க்கும் போதுதான், ஆசிரியருக்குச் சிறுவயதில் தன் பாட்டி சொன்ன கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்வண்டி போல் கூந்தலை இழுத்துக் கொண்டே திரிந்து, வெறிநாய்க்கடி நோயினால் (Rabies - ரேபீஸ்) இறந்துபோன 12 வயது சிறுமியொருத்தி கரீபியக் கடற்பகுதிகளில் அற்புதங்கள் செய்துவரும் கதையது. இக்கல்லறையில் இருக்கும் யுவதி அச்சிறுமியாய் இருக்கக் கூடும் என்ற சிந்தனைதான் ஆசிரியரை இப்படி ஒரு புத்தகம் எழுத வைத்தது.






12 வயது சிறுமி ஒருத்தியை ஒரு நாய் கடிப்பதுடன் ஆரம்பமாகிறது புதினம். அவள்தான் கதாநாயகி. தன்னைத் தானே நெறித்துக் கொல்வதுபோல் கழுத்து சுற்றி தொப்புள்கொடியுடன் குறைமாதத்தில் அவள் பிறந்தவுடன், பிழைப்பதே சந்தேகமென செவிலி சொல்லி, அவள் மட்டும் பிழைத்துக் கொண்டால் அவளின் திருமண இரவு வரை அவளுக்கு முடியே வெட்டுவதில்லை என, இருக்கும் புனிதர்களை எல்லாம் செவிலியே வேண்டிக் கொள்கிறார்கள். அதனால் அவளுக்கு முடி அதிகம். பெற்ற தாயே அவளைக் கொன்றுவிடுவதாக வெறுத்து ஒதுக்க, கதாநாயகியும் செவிலித்தாயுடன் அடிமைகளின் குடியிருப்பிலேயே வாழ்ந்து வருகிறாள். அந்த‌ அடிமைகளின் குடியிருப்புப் பகுதி, கன்னியாஸ்திரிகளின் மடமொன்று; பெரும்பாலும் மொத்தக் கதையும் இவ்விரு இடங்களிலேயே அடங்கிவிடுகிறது.


பெரும்பாலான நோய்களைப் போல ரேபீஸ் நோயும் கடற்பயணத்தின் மூலம்தான் ஐரோப்பாவில் இருந்து தென்னமெரிக்காவை அடைத்திருக்கிறது. குரங்கொன்றின் மூலம் அதன் எஜமானுக்கும் பரவி, அவன் விசித்திரமான இறப்பைக் குழந்தைகளுக்குப் பயங்காட்ட‌த்தான் மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வெறிநாய்க் கடிக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில், நாலைந்து நாய்கள் ஒரே நாளில் கடித்தால் கூட கவலைப்படாமல் வெறும் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்துவிட்டு தூங்கி இருக்கிறார்கள். நோய்க்கான முதல் அறிகுறி தோன்றும் வரை யாருமே எத்தனை நாய்கள் கடித்தாலும் கவலைப்படாமல் இருந்திருக்கிறார்கள்.


யாருக்காவது ரேபீஸ் இருப்பதாகத் தெரிந்தால் அவ்வளவுதான்; நம்மூரில் இடிவிழுந்த வீடுபோல, குடும்ப மானம் கப்பலேறிவிடும். நாய்க்கடி மூலம் சாத்தான் உடம்பினுள் புகுந்துவிடுவதாகச் சொல்லி, அவர்களை ஒதுக்கி வைத்து பேய் விரட்டுவதற்கென்றே சில பிரத்யேகப் பாதிரியார்களை நியமிக்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. மருந்துமில்லை, கடித்த விலங்கைப் போல் கடிபட்டவர்களும் மாறிவிடுவதில்லை, அதே நேரத்தில் பேயுமில்லை என்று இன்னொருபுறம் கையறுநிலையில் தவிக்கிறது மருத்துவம். இப்படிப்பட்ட காலத்தில் அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையே கடிபட்டவர்கள் த‌த்தளிப்பதுதான் கதைச்சுருக்கம். இதற்குமேல் நான் பேசினால், மிச்சமிருக்கும் சின்ன கதையும் வெளிவந்துவிடும்.

புத்தகத்தில் நான் ரசித்த சில வரிகள்:


அடிமை ஒருத்தியை விலை பேசும்போது: A slave two meters tall weighs at least 120 pounds. And no woman, white or black, is worth 120 pounds of gold unless she shits diamonds.


ஒரு பாதிரியாரின் ஆத்திகம்: More than faith, what Galileo lacked was a heart. (பிகாசோ ஒருமுறை சொன்னார்: The genius of Einstein leads to Hiroshima)


ஒரு மருத்துவரின் நாத்திகம்: Our patients entrust their bodies to us, but not their souls, and like the devil, we try to win them away from God. (தசாவதாரம் கமலஹாசன் மாதிரி)


பெண் மேல் காதல் வயப்பட்ட பாதிரியாரிடம் மருத்துவர் சொல்வது: Love is an emotion contra nature that condemned two strangers to a base and unhealthy dependence, and the more intense it is, the more ephemeral.


இளமையில் காதலில் தோற்ற இருவர், இல்லறமும் தோற்றபின் முதுமையில் பேசிக் கொள்ளும் உரையாடல்:
'This is how we should have been', she said.
'When you are like this you seem to be in your right mind', he said.
'I always have been', she said. 'It was you who never saw me as I really was'.
'I picked you out of the crowd when you were all young and beautiful and it was difficult to choose the best', he said.
'I picked myself out for you', she said. 'Not you. You were always what you are now: a miserable devil'.
.
.
.
'If you bit your tongue you would poison yourself', he shouted.
'Don't try to humiliate me, because I'm the only one you have left to powder your face when you die'.


நான் ரசித்தவை:
பாத்திரம் : ஆறு பேய்களைச் சுமந்து திரியும் கதாநாயகி Sierva Maria de Todos los Angeles
வரி : The enemy makes better use of our intelligent than of our errors.
ப‌குதிக‌ள் : பாமர மக்கள் தங்களது பிரச்சனைகளைத் தன்னோடு தொடர்புபடுத்தச் செய்து, சேவல்களை நண்பகலில் கூவச் செய்யும் சூரியக் கிரகணம் பற்றிய பகுதிகள்.


உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
எப்படியும் ஒரு அவுன்ஸ் மலத்தை எப்போதும் சுமக்கும் மனிதவுடல் சுமக்கும் ஆச்சரியங்கள் கணக்கிலட‌ங்கா. செத்தாலும் (=சாகும்வரை) வளராது, நித்தம் செத்துச் செத்துப் பிறக்கும், (முடிதவிர‌) செத்தாலும் வளரும், செத்தே கிடக்கும், சாகவே சாகாது, முதலில் சாகும்.... இப்படி பல பாகங்களைச் சாவுடன் மட்டுமே சம்மந்தப் படுத்தலாம். அவற்றைக் கண்டுபிடியுங்கள்!


ஆன்மீகத்தையும் அறிவியலையும் வைத்து ஒருகாலத்தில் விளையாடிக் கொண்டிருந்த நாயை முடியுடன் பின்னிப் பார்க்கும் கதை. படித்துப் பாருங்கள்.


அனுபந்தம்:


1. செந்தமிழ்ப்பாட்டு, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் போன்ற திரைப்படங்களில் கூந்தல்தான் முக்கிய கதாப்பாத்திரம்.


2. ரேபீஸ் என்பது பெரும்பாலும் நாய்களுடனேயே சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டாலும், எந்த விலங்கின் மூலமாக வேண்டுமானாலும் பரவலாம். மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் போல குதிரை அல்லது மனிதன்; இப்புத்தகத்தில் வருவது போல் குரங்கு அல்லது நாய். நம்ம சுஜாதா சார், ரேபீஸ் தாக்கப்பட்ட வவ்வால் மட்டும்தான் கடிக்கும் அல்லது எங்காவது மோதிக் கொள்ளும் என்ற ஒரு சின்ன விசயத்தை வைத்து ஒரு சூப்பர் சிறுகதை கூட எழுதி இருக்கிறார்.


3. அப்போதைய‌ மாநில ஆளுநர் சென்னா ரெட்டி இறந்ததற்கு விடுமுறை விட்ட நாளில், திருச்சி மலம்பட்டி திருவிழாவிற்குப் போன இடத்தில், கோவாவில் வைக்கப்பட்டிருக்கும் புனித சவேரியாரின் உடலில் முடி வளருவதில் ஆச்சரியமே இல்லை என்று 12 வயதிலேயே சொல்லப்போய், பெயருக்கேற்றபடி நடந்து கொள்ள அறிவுரை பெற்ற‌ அடியேன் நான்!


4. என்னதான் விசக்கடிக்குத் தடுப்பு மருந்துகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும் அளவிற்கு நாம் முன்னேறி விட்டாலும், இன்னமும் மாந்திரீகவாதியிடம் போய் வெற்றிலைக் காம்பை வைத்துப் பல் பிடிங்கி வருவது, ந‌ம் முன்னோர்களுக்குத் தீய சக்திகளின் மேல் இருந்த‌ அச்சத்தின் எச்சமே!


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)