Thursday, March 23, 2006

2. களவு போகும் புரவிகள்

தாமதத்திற்கு வருந்துகிறேன்.

புத்தகத்தை வெளியிட்டோர் - "தமிழினி பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 60 ரூபாய்
வெளியான ஆண்டு - 2001

-----------------------------------------------
புத்தகத்தை எழுதிய சு.வேணுகோபாலைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
-----------------------------------------------
தற்போது இவர் போடி நாயக்கனூரில் ஒரு விவசாயியாக இருக்கிறார். சில பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று, இலக்கிய உலகத்தில் நுழைந்திருக்கிறார். இவர் எழுதிய வேறு சில புத்தகங்கள்...நுண்வெளி கிரகங்கள்(நாவல்),பூமிக்குள் ஓடுகிறது நதி(சிறுகதைகள்), கூந்தப்பனை(குறு நாவல்).
(புத்தகத்தோட பின் அட்டைல இருந்ததை அப்படியே காப்பி அடிச்சிட்டேன்...!!??)

இனி, புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்.
--------------------------------------------------------
சமுதாயம், மனித மனம், அன்றாட வாழ்க்கை இவற்றிலிருக்கும் இருண்ட பக்கங்களையும், வக்கிரங்களையும் தேடி இழுத்து வந்து நம்மிடம் அடையாளம் காட்டுகிறது வேணுகோபாலின் எழுத்து. எந்த இடத்திலும் எதையும் மூடி மறைக்காமல் எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் "தாமரை" உள்ளிட்ட பல சிற்றிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவற்றுள் சில கதைகளை நான் என் சிறு பிராயத்திலேயே தாமரை இதழில் படித்திருக்கிறேன். இப்போது மீண்டும் படிக்கும்போது பால்ய நண்பனைப் பார்த்தாற்போன்ற ஒரு மகிழ்ச்சி.
(பரிசளித்த நண்பன் சுரேஷுக்கு நன்றி!)

ஒவ்வொரு சிறுகதையும் மனதில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, நம்மை உருக்குலைத்துப் போட்டுவிடுகிறது. சுஜாதாவிடம் நான் கண்ட அதே Climax Punch, இவரிடமும் இருக்கிறது. ஆனால் இருவரின் நடை மற்றும் கதைக்கரு ஆகியவை முற்றிலுமாக வேறுபட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, "மீதமிருக்கும் கோதும் காற்று" எனும் ஒரு சிறுகதை. 6 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதை, "சுகிர்தா" எனும் "சுப்பம்மாள்" என்ற ஒரு விலைமாதுவின் ஓர் இரவை விளக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இது போன்ற கருக்களை சுஜாதாவிடம் படித்ததாக ஞாபகம் இல்லை.

"சப்பைக்கட்டு" என்றொரு சிறுகதை. ஒவ்வொரு ஆண் மிருகத்தின் முகத்திரையையும் கிழித்துப்போட்டுவிடுகிறது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் விவாகரத்தான ஒரு பேரிளம்பெண் காந்தாலட்சுமி அம்மாள். இவளுடன் வங்கியில் பணி புரியும் Narrator .( Narratorகு தமிழ்ல என்னப்பா?). இவரும் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாகவே பேசி வருகிறார்.

ஆணாதிக்கத்தைப் பற்றிய பல பேரின் கருத்துக்களோடு சரளமாக ஒடிச்செல்லும் கதை இப்படியாக முடிகிறது. Narratorகு தெரிந்த ஓர் இளைஞன் காந்தாலட்சுமி அம்மாளின் மகளை திருமணம் செய்து கொள்ள இவரின் உதவியை நாடும்போது இவரது பதில்,

"கிருஷ்ணா! பொம்பளை ராஜ்யம் பிடிச்ச குடும்பம்டா அது...! ஆணாதிக்கம் அது இதும்பாளுக..! வேற நல்ல இடமா பாக்கலாம்"

என்பதாக வருகிறது. கதையைப் படிக்கும்போது கண்டிப்பாக ஒரு குற்ற உணர்ச்சி தலை தூக்கும்.

"மண்ணைத் தின்றவன்" என்ற கதையின் நாயகன், பட்டப்படிப்பு படித்து, மற்றவரின் கீழ் வேலை செய்ய விரும்பாமல், தன் கிராமத்திலேயே விவசாயம் பார்க்கிறான். ஒரு நேரத்தில் விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு, ஏதாவது பணியில் சேரலாம் என்று நகரத்தில் இருக்கும் நண்பன் ஒருவனின் உதவியை நாடி வருகிறான். இப்படியே போய்க் கொண்டிருக்கும் கதை எப்படி முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழும் நேரத்தில் இப்படி முடிக்கிறார் ஆசிரியர்.

நண்பன் வீட்டில் இல்லாததால், இவனை அழைத்து உட்காரவைத்து பேசிக்கொண்டிருக்கும் நண்பனின் தாயார், இவனின் பின்புலங்களை விசாரிக்கிறாள். இவனது தந்தயின் பெயரைக் கேட்டுவிட்டு,

"ஐயோ! உன்னைப் போய் நீங்கன்னு சொல்லிட்டேனே" என்றாள். அசிங்கத்தை மிதித்தது போல் இருந்தது.

"சரிம்மா! நான் லைப்ரரியிலேயே பாத்துக்கிடுறேன்" என்றபடி வெளியேறினேன்.

இதுதான் கதையின் முடிவு.
இப்படிப்பட்ட முடிவை உண்மையாகவே நான் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று மனதைப் பிசைந்து விடுகிறது. எல்லோருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

மனைவியின் பிரசவத்தின் பொழுதில் ஒரு கணவனின் மனதில் தோன்றும் எண்ணங்கள், 35 வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆண்மகனின் உணர்ச்சிகள், கணவனின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்து கொண்ட ஒரு பெண்ணின் எண்ணங்கள் என்று யாரும் புரட்டாத பக்கங்களில் தன் பேனாவை ஓட விட்டிருக்கிறார் வேணுகோபால்.

வக்கிரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் இவர், வார்த்தைப் பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம். ஒருவேளை, இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த இந்த வார்த்தைகளே தகுதியானவை என்று நினைத்திருக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் எனக்குத் தெரியாத பல பேரோடு இவரை ஒப்பிட்டிருந்தார்கள்.(நிறைய படிக்க வேண்டியிருக்கு...!!!!).

இவருடைய மற்ற படைப்புகளையும் படிக்க ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருக்கிறேன்.

-சேரல்

Tuesday, February 28, 2006

2. வரப்போவது........

அடுத்த பதிவு...
"களவு போகும் புரவிகள்"
சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர் : சு.வேணுகோபால்

Monday, February 27, 2006

1. ஸ்ரீரங்கத்துக் கதைகள்

புத்தகத்தை வெளியிட்டோர் - "உயிர்மை பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 200 ரூபாய்
வெளியான ஆண்டு - 2003
---------------------------------------------
என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் உடன் இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன். எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாக சொல்வதால் சிலருக்கு இவரைப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில், நல்ல எழுத்துக்களை படிக்க விரும்புபவர்கள் இவரைப் படிக்க வேண்டும் என்றே நான் சொல்வேன்.
----------------------------------------------
முதலில் சுஜாதாவைப் பற்றிச் சில வரிகள்....












தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், தமிழ்த்திரைப்படங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கும், இவரைப் பற்றிய அதிகமான அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
ரங்கராஜன் என்பது இவரின் பெயர். தன் மனைவி சுஜாதாவின் பெயரையே புனைப்பெயராகக் கொண்டு பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர். கல்வித்தகுதி M.Tech. கடைசியாக பெங்களூரில் BEL நிறுவனத்தில் பணி புரிந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இவரது நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த நடை எனக்கு மிகவும் பிடித்ததொரு அம்சம்

திரைத்துறையில் புகழ்பெற்ற வசனகர்த்தாவாகத் திகழ்கிறார். இவர் வசனம் எழுதிய சில திரைப்படங்கள்.....ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளம் கேட்குமே, அந்நியன், ஆயுத எழுத்து..இன்னும் சில திரைப்படங்கள்.
(சே! Public Exam ல ஆசிரியர் பற்றிச் சிறு குறிப்பு வரைஞ்ச மாதிரி ஆயிடுச்சு!)
------------------------------------------------
இனி புத்தகத்தைப் பற்றி...



















கொஞ்சமும் யதார்த்தத்தை மீறாத தன்மை சுஜாதாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் அதையே தொடர்கிறார். சிறு வயதில் அவர் வாழ்ந்த ஸ்ரீரங்கமே கதைகளுக்கான களம். அவர் பார்த்துப் பழகிய மனிதர்களே கதாப்பாத்திரங்கள். அவரும் கூட....

கதைகளின் உண்மைத்தன்மையைப் பற்றிக் கூறுகிறார்.."இந்தக் கதைகள் முழுக்க உண்மை இல்லை. உண்மையோடு கொஞ்சம் கற்பனை சேர்க்கப்பட்டு உருவானவை இவை.." என்று.

1971 லிருந்து, 2003 வரை பல்வேறு வருடங்களில், சிலவேறு பத்திரிகைகளில் வெளியான சிறு கதைகளின் தொகுப்பு இந்த "ஸ்ரீரங்கத்துக் கதைகள்". இதிலிருந்து சில சிறுகதைகள் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" என்ற பெயரில் தூர்தர்ஷனில் நாடகங்களாகவும் வெளிவந்தன.

இந்த 32 வருட கால இடைவெளியில் எழுத்தாளரின் பரிணாமம் வெகுவாகவே நிகழ்ந்திருக்கிறது. அவருடைய எழுத்துக்களிலேயே அந்த வித்தியாசத்தை உணர முடிகிறது. அவரே முன்னுரையில் "எழுத்து மீதான காலத்தின் ஆதிக்கத்தை உணர்த்தவே கதைகள் வெளியான வருடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன" என்று சொல்கிறார்.

சின்ன வயது குறும்புகள், வயதுக்கு மீறிய ஆசைகள், தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள், வாழ்ந்து கெட்ட மனிதர்கள், காலத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழுந்தவர்கள் என்று பலதரப்பட்ட உணர்வுகளும், மனிதர்களும் எல்லா இடங்களிலும் தெரிகிறார்கள்.

பல கதைகளில் வரும் "ரங்கு" என்ற கதாப்பாத்திரம்.... கடலை மிட்டாயும், பொறி உருண்டையும் விற்கும் தன் கடையைத் தவிர வேறேதும் தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல், வருவோர் போவோரைக் கிண்டல் செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் ஒரு மனிதன்........நாம் எல்லோருமே பார்த்திருக்கக்கூடிய ஒரு பாத்திரம். இது போன்ற பல பாத்திரங்கள்...

Ten Annas ஐயங்கார் எனப்படும் பத்மநாப ஐயங்கார், நாடகம் நடத்தும் வரதராஜன், கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, உபன்யாசம் செய்து பின் cinema production manager ஆன திண்ணா, full suit மாப்பிள்ளை துரைசாமி, கோபமே வராத வைத்தி மாமா, என்று பல பாத்திரங்கள்...நம் பார்த்திருக்கக் கூடிய மனிதர்கள்....!

சுஜாதாவின் அந்த Climax Punch எல்லா சிறுகதைகளிலேயுமே மிளிர்கிறது. "மறு" என்றொரு சிறுகதையில் வேலைக்காரியின் "மூன்று" ரூபாய் மாதச் சம்பளத்தை எதேச்சயாய் எடுக்க நேரிடும் ஆசிரியர், அதை செலவு செய்வதோடு தனக்கு அந்தப் பணத்தைப் பற்றி தெரியாது என்றும் சொல்கிறார். தன் பாட்டியிடம் அந்த உண்மையைச் சொல்ல விரும்பியும் தைரியம் வராமல் விட்டு விடுகிறார். இந்தக் கதையின் முடிவு இப்படி வருகிறது....

அதைச் சொல்லும் தைரியம் என் பாட்டி சாகும் நேரத்தில் தான் வந்தது. "பாட்டி நம்ம வீட்டில செவளானு ஒரு வேலைக்காரி இருந்தாளே!நினைவிருக்கா?
"ஏன் இல்லாம? அவ கூட உன் புஸ்தகத்துல பணத்தை வச்சு தொலைச்சுட்டாளே?"
"அது தொலயலை பாட்டி. நாந்தான் எடுத்து செலவு பண்ணிட்டேன்."
"எனக்குத் தெரியும்" என்றாள் பாட்டி.

என்பதாக முடிகிறது கதை.

தன் கதாப் பாத்திரங்களின் மூலம் மெல்லிய உணர்வுகளையும் வெளியிடத் தவரவில்லை சுஜாதா.
"குடுமி" என்னும் சிறுகதையின் நாயகன் ராகவன், நன்றாகப் படித்தும், அமெரிக்கா சென்று படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், "குடுமி" வைத்திருந்த ஒரே காரணத்தால் VISA மறுக்கப்பட்டு இங்கேயே ஏதோவொரு அலுவலகத்தில் வேலைக்குச் சேருகிறான்.
அவன் பேசுவதாய் வரும் வசனம் ஒன்று...

"ஒரு மனுஷனுக்கு அவன் புறத்தோற்றத்தை முடிவு செய்யக்கூட உரிமை கிடையாதா? மத்தவா கிண்டல் பண்றாங்கிறதுக்காக எல்லாத்தையும் மாத்திக்கணுமா?"

என்ன ஒரு சத்தியமான வசனம்.

"ரெண்டணா" என்றொரு சிறுகதை இப்படிப் போகிறது.சின்ன வயதில் பாட்டி எண்ணெய் வாங்கி வரச்சொன்ன ரெண்டணாவை மோடி மஸ்தானுக்கு பயந்து அவன் தட்டில் போட்டு விட்டு, பின் "பாட்டி அடிப்பாளே" என்று அவனிடம் காசைக் கேட்க, அவன் தன்னோடு வந்து விடுமாறு ஆசை காட்டுகிறான்.
பயந்து ஓடிப்போய் தன் உண்டியலை உடைத்து எண்ணெய் வாங்கி வருகிறார்.இந்தக் கதை இப்படி முடிகிறது...
"நான் மட்டும் பாட்டிக்குப் பயந்து அவன் பின்னால் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தெருத் தெருவாகச் சுற்றிக் கொண்டு...எது எப்படியோ? இந்தக் கதையைக் கண்டிப்பாக எழுதியிருக்க மாட்டேன்".

இவர் பயன்படுத்தியிருக்கும் களம் திருச்சி என்பதால், நானும் திருச்சியில் சில வருடங்களைக் கழித்தவன் என்பதால், இந்தக் கதைகளைப் படிக்கும்போது கொஞ்சம் Nostalgic Feeling.

முக்கியமாக அவர் திருவெள்ளறையைப் பற்றிக் குறிப்பிடும்போது என்னைப் பழைய நினைவுகள் மிகவுமே தொல்லை செய்தன. திருவெள்ளறை திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயில் ஒன்று இருக்கிறது என்பது பல திருச்சி வாசிகளுக்கே தெரிந்திருக்காது. இன்றைய இந்துக் கோயில்களின் கட்டிட அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இக்கோயில் கண்டிப்பாய்ப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்!நண்பர்களோடு ஒருமுறை சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம்.

சரி..புத்தகத்துக்கு வரலாம்.நடிகையை அட்டைப்படத்தில் கொண்ட ஒரு புத்தகத்தில் சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்...
"ஒரு சிறுகதை எப்போது தொடங்குகிறது?"

"முடிவதற்குச் சற்று முன்னால்..."

இந்த இலக்கணத்திலேயே பெரும்பாலும் இவரது சிறுகதைகள் அமைந்திருந்தன. சிறுகதைகள் எழுத விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

கொஞ்ச நாட்கள், ஸ்ரீரங்கத்திலும் அந்த மக்களோடும் வாழ்ந்துவிட்ட வந்ததைப் போன்ற அனுபவம்!

இதோ காதுகளில் ஒலிக்கிறது

"ஸ்ரீரங்கத்து தேவதைகள்! நான் சந்தித்த ஜீவிதங்கள்!"

-சேரல்