Wednesday, January 28, 2009

30. உப பாண்டவம்

எந்த ஜீவ ராசியாலும் தீண்டப்படாமல் இருக்கும் தண்ணீரில் துரியன் எப்பவும் ஒளிஞ்சிருப்பான். யுத்தத்தில் செத்தது ஒரு துரியோதனன். இன்னும் எத்தனையோ துரியன் உள்ளே இருப்பான். துரியோதனனை ஜெயிக்க முடியாதுல்ல.  

- வழிப்போக்கன்

--------------------------------------------- 
புத்தகம் : உப பாண்டவம் 
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் 
வெளியிட்டோர் : விஜயா பதிப்பகம் 
வெளியான ஆண்டு : 2000
விலை : 150 ரூ
---------------------------------------------
















பாரதம் என்னும் பெருங்கடல்

'மரம் தெரிகிறதா?'

'இல்லை'

'கிளை தெரிகிறதா?'

'இல்லை'

'இலை தெரிகிறதா?'

'இல்லை'

'பறவை தெரிகிறதா?'

'ஆம்'

'செலுத்துன் அம்பை'


சீறிப்பாய்ந்த அம்பு பறவையை வீழ்த்துகிறது. வில்லுக்கு விஜயனாகிறான் அர்ச்சுனன். என் தாய்வழிப்பாட்டி சொன்ன இந்தக் கதைதான் நான் பருகிய மகாபாரதத்தின் முதல் துளி. அதன் பின் சிறுவர் கதைகளிலும், அண்ணனுக்குப் பரிசாகக் கிடைத்த உரைநடை மகாபாரதம் வழியாகவும், தமிழ் வகுப்பு எடுத்த ஆசிரியர்களாலும், மனப்பாடச் செய்யுள் பகுதிகளாலும், மகாபாரதத்தின் சாறு என்னுள் இறங்கிக் கொண்டே இருந்திருக்கிறது.


என் அண்ணனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட ஒரு மகாபாரதக் கதைப்புத்தகத்தை நான் தொடர்ந்து 14 முறை படித்தபோது என் வயது பத்து என்பதற்கு அப்புத்தகத்தின் கிழிந்து போன பக்கங்களே சாட்சி. ஒரு தருணத்தில் அம்மா என்னிடமிருந்து அப்புத்தகத்தைப் பிடுங்கி வைத்துக்கொண்ட நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் அர்ச்சுனன் மனத்திற்குள் கதாநாயகனாக வட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஆனால் வயது கூட கூட, எது குறித்தான பார்வையும் மாறிப்போகிறது. பாரதமும் கூட அப்படித்தான்.

பத்து வயதில் மாயவித்தைகளின் கூடாரமாயும், பதின் பருவத்தில் காமம் பீறிட்ட மனிதர்களின் விசித்திரலோகமாயும், பின் சக நிகழ்வுகளின் தொடர் சங்கிலியால் பின்னப்பட்ட கதையமைப்பாயும், இப்போது வாழ்வின் மிகச் சாதாரண யதார்த்தமாயும் புலனாகிறது பாரதம். இன்னும் என்னவெல்லாமாக மாறும் என்ற தெளிவு எனக்கேற்படவில்லை.

கதாபுருஷர்களாக விளங்கியவர்கள் என்று மிகச் சாதாரணமானவர்களாகி விட்டிருக்கிறார்கள். நான் மன முதிர்ச்சி அடைகிறதும், கதையின் உண்மையான போக்கு தெரியத்தொடங்கி இருப்பதும் இதற்கான காரணங்களாக இருக்கின்றன.

சந்தனு கங்கா ஸ்த்ரீயை மணப்பது தொடங்கி அபிமன்யுவின் மகன் பரீக்ஷித்து அரியணையில் அமர்த்தப்படுவது வரையிலான அடிப்படைக்கதை முழுவதும் நினைவிலிருக்கிறது. இதற்காக கர்வப்பட்டு திரிந்த நாட்களும் உண்டு. நண்பர்களுக்குக் கதை சொல்லிய நாட்களும் இருக்கின்றன. ஒரு முறை நான் கதை சொல்லியதை எனக்கே தெரியாமல் பதிவு செய்து என்னைக் கேட்க வைத்த நண்பனின் செய்கை, எனக்குள்ளான கதை சொல்லியை என்னையும் ரசிக்கச் செய்தது.

உப பாண்டவமும் நானும்

பாரதத்துடன் என் அனுபவத்தை நீட்டிக்கும் ஒரு வாய்ப்பு இந்த 'உப பாண்டவம்'; வெகு நாட்களாகத் தேடித்தேடிச் சலித்துப்போய், எல்லா புத்தகக் கடைகளிலும் முன்பதிவு செய்தும் கிடைக்காமல், நான் படிக்க ஏங்கிக் கிடந்த ஒரு நூல். யதேச்சையாக சென்னையில் City Centreல் Landmarkபுத்தக நிலையத்தில் பார்த்தேன். அதன் முன் இப்புத்தகத்தை நேரில் பார்த்ததேயில்லை. இதையும் ஏற்கனவே யாரோ ஒருவர் வாங்கி இருந்தார். நம்பிக்கை இல்லாமல் இங்கேயும் முன்பதிவு செய்து திரும்பினேன். ஒரே வாரத்தில் புத்தகம் வந்துவிட்டதாக அழைத்தார்கள். 

படிக்கத் தொடங்கினேன். சமீபத்தில் கோயம்புத்தூர் சென்றிருந்த போது, காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே விஜயா பதிப்பகத்தாரின் புத்தக விற்பனை நிலையத்தைப் பார்த்தேன். அங்கே முன் வரிசையில் அழகாக அடுக்கப்பட்டிருந்தது இப்புத்தகம். சிரித்துக்கொண்டே வேறு சில புத்தகங்கள் வாங்கி வந்தேன்.

நூலைப் பற்றி

384 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தைப் படித்து முடிக்க எனக்கு 35 நாட்கள் ஆகியிருக்கின்றன. இந்த 35 நாட்களிலும் என் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது இந்நூல். ஒவ்வொரு பக்கத்தையும் படித்து முழுவதுமாகக் கிரகித்துக்கொள்ள சிறிது நேரம் பிடிக்கிறது. இப்புத்தகத்தைப் படிக்குமுன் மகாபாரதத்தின் அடிப்படைக்கதையும், கதை மாந்தர்களின் தன்மையும் தெரிந்திருத்தல் நலம். மொழிநடை அவ்வளவு இலகுவாக எல்லோருக்கும் புரிந்து விடாது; பிடித்தும் விடாது. எனக்கு மிகப் பிடித்திருந்ததால் நன்றாகவே புரிந்தது.  

காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் நடத்தப்படும் 'துரியோதனன் படுகளம்' கூத்து பார்த்த அனுபவத்துடன் இந்நூலைத் தொடங்குகிறார் எஸ்ரா. துரியோதனின் சுதை உருவம் அருகில் வந்து பார்க்க விரும்பும் பெண்களிடம், உருவம் செய்கிறவர் சொல்கிற வார்த்தைகள் என்னுள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

'சும்மா கிட்ட வந்து பாருங்க. துரியன் உங்க சகோதரனைப் போலத்தான். அர்ச்சுனன் போல பொம்பள கிட்ட கள்ளத்தனம் பண்றவன் கிடையாது'  

என் அடிப்படை நம்பிக்கையையும், எண்ணங்களையும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கிறார் எஸ்ரா.  

கங்கா தீரத்தில் படகில் தன் பயணத்தைத் துவங்குகிறார் ஆசிரியர் அஸ்தினாபுரத்தை நோக்கி. அங்கே அவர் பார்க்கிற காட்சிகளும், கேட்கிற கதைகளும் மகாபாரதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றன. உடனிருந்த பார்த்த ஒரு மனிதனுடையதாக ஒலிக்கிறது அவர் குரல்.

கால வரிசையைப் பின்பற்றாமல் இக்கதைகளை ஒரு அனுபவமாக வழங்கியிருக்கிறார். தவிர்க்கப்பட்ட கதைகளும், மறக்கடிக்கப்பட்ட மனிதர்களும் இப்புத்தகம் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள்.  

இந்திரப்பிரஸ்தத்தில் மாளிகையமைத்த மயனும், கட்டை விரலை வெட்டித்தந்த ஏகலைவனும், அம்பாவினால் ஆட்கொள்ளப்பட்டு பீஷ்மரை வீழ்த்திய சிகண்டியும், போர்க்காட்சிகளை ஞான சித்தியால் பார்த்துச் சொன்ன சஞ்சயனும், கௌரவர்களின் ஒரே சகோதரியான துச்சலையும், சகோதரியின் புத்திரர்களுக்காக வாழ்ந்த சகுனியும் பெயரளவில் மட்டுமே முன்பு எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள். இவர்களின் மனவோட்டங்களும், வாழ்க்கை நிகழ்வுகளும் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  

திருதராஷ்டிரனின் காமத்துக்குப் பலியான சூத ஸ்திரீ ஒருத்திக்குப் பிறந்த யுயுத்சு, துரியோதனின் மனைவி பானுமதி, கிருஷ்ணனின் மகன் சாம்பன், கௌரவர்களில் தனித்தே இயங்கிய விகர்ணன், கிருஷ்ணனைக் கொன்ற ஜரா என்று அறிமுகமில்லாத கதை மாந்தர் சிலரும் அறிமுகமாகிறார்கள்.  

தீயவர்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களின் தரப்பு நியாயங்களும் முன்வைக்கப்படுகின்றன. தீட்டுடையில் இருந்த திரௌபதியை சபைக்கழைத்து துகிலுரித்து அவமானப்படுத்தியதைத் தவிர துரியோதனன் வேறேதும் தவறு செய்திடவில்லை என்றே தோன்றுகிறது.

இதுவும் கூட தான் பட்ட அவமானத்திற்கான பழிவாங்கலாகவே தெரிகிறது. 

பாஞ்சாலியின் உணர்வுகளை மிகத்துல்லியமாகப் பதிந்திருக்கிறார். அவளின் கோபத்துக்கு அஞ்சித்தான் பாண்டவர்கள் போர் புரிந்தார்களோ என்று கூடத் தோன்றுகிறது.  

நூலில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி, குருட்சேத்திரப் போர்க்களத்தை விளக்கும் பகுதி. யுத்தத்துக்கான இடம் தெரிவு செய்யப்பட விதம் முற்றிலுமாக விவரிக்கப்படுகிறது. யுத்தக்களத்தில் பூமாலை தொடுப்பவர்கள், உணவு சமைப்பவர்கள், ஆயுதம் எடுத்துச் செல்பவர்கள், ஒப்பனைக்காரர்கள், மிருகங்களை வேட்டையாடும் வேடுவர்கள், பண் பாடும் பாணர்கள் என்று சம்மந்தமில்லாத மனிதர்களின் இருப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
குடம் குடமாய்ப் பால் கறந்த பசுக்கள், இருந்த சுவடு கூடத் தெரியாமல் வேட்டையாடப்பட்ட மான்கள், மீன்கள், ஊரை விட்டோடிய அண்டை கிராம மக்கள், என்று மறைமுகமாய்ப் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டம் தனியாய் உண்டு.

போரின் அழிவுக்குப் பிந்தைய நிகழ்வுகளையும், மக்களின் நிலையையும், எண்ணங்களையும் நன்றாக உணர்ந்து கொள்ள வழியிருக்கிறது.  

தர்க்க வாதங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், பாரதம் கொண்ட அற்புதமான கதையமைப்பும், அது சொல்லும் வாழ்வின் நியதியும் புரியும் என்று மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவதாய் இருக்கிறது இந்நூல்

- சேரல்

Saturday, January 10, 2009

29. நடந்து செல்லும் நீரூற்று

ஒரு சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன்பு தொடங்குகிறது
- எழுத்தாளர் சுஜாதா

------------------------------------------------
புத்தகம் : நடந்து செல்லும் நீரூற்று
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2006
விலை : ரூ70

------------------------------------------------

சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிமுகம் எதுவும் தேவை இல்லை. தீவிர வாசிப்பில் இருக்கிற யாருக்கும் நெருக்கமானவர் இவர்.

எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற புத்தகங்களைப் படித்தவர்கள் இவரை ஒரு மென்மையான ரசிகராகப் புரிந்திருக்கலாம். அந்த புரிதலின் அடித்தளத்தை அசைத்துப்பார்க்கும் படைப்புகள் அடங்கியது இத்தொகுப்பு.

மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கின்றன. குறைந்தது பத்து கதைகளாவது உங்களை உருக்குலைத்துப்போடும் என்பது என் நம்பிக்கை.

மூன்று குடும்பக்கதைகள் என்ற தலைப்பில் மூன்று குறுங்கதைகளைத் தந்திருக்கிறார். கடந்த காலத்தில் செய்யாத தவறுக்காக தண்டனை பெற்ற ஒரு மனைவியின் வைராக்கியம், கணவன் இறந்ததும் முற்றுப்பெறுகிறது. இந்தப் பீங்கான் நாரைகள் சொல்லும் அம்மா உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.

இல்லறம் என்றொரு கதை. தேன் நிலவு கொண்டாடும் புது மண மக்களைப் பற்றியதொரு கதை. இரண்டு பக்கங்களுக்குள் என்னை அவமானப்படவைத்த இக்கதையின் கடைசி வரிகளை மட்டும் இங்கு தருகிறேன்.

அதன் பிறகு எல்லாப் பெண்களைப் போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக்கொண்டவளைப் போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளத் துவங்கினாள். அவர்களது இனிமையான இல்லற வாழ்க்கை இப்படித்தான் துவங்கியது.

ஆண்மையின் வக்கிரத்தை அழுத்தமாகச் சொல்லும் வரிகள்!

இம்மூன்று சிறுகதைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளன. படிக்க விரும்புவோர் இங்கே செல்லவும்

இது போன்றதொரு உணர்ச்சியைத் தரக்கூடிய இன்னொரு சிறுகதை 'பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்'. கணவன் வீட்டாரின் பலாத்காரத்தால் மன நிலை பாதிக்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, பின் தன் தந்தையோடு தப்பி ஓடிப்போகும் ஒருத்தியின் கதை. இக்கதையை அவர் அமைத்திருக்கும் விதம் மிகப் புதுமை. ஆனால் அதை எல்லாம் வியக்க அனுமதிப்பதில்லை கதையின் உட்பொருள். படித்தபின் கண்டிப்பாகத் தூக்கம் தொலைந்த இரவு ஒன்று நமக்குக் கிடைப்பது உறுதி.

இன்னுமொரு புதுமை முயற்சி 'ஒரு நகரம், சில பகல் கனவுகள்' சிறுகதை. ஒரே சமயத்தில் ஒரு நகரத்தின் வெவ்வேறு சில இடங்களின் நடப்புகளை வைத்து புனையப்பட்ட கதை.

மிக இயல்பான, எந்தச் சலனத்துக்கும் ஆட்படாத, சீரான ஓட்டத்தைக் கொண்ட வாழ்க்கையை வாழும் மனிதர் ஒருவரின் வாழ்க்கையில் வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையைப் பேசுகிறது 'அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை' சிறுகதை.

நம் செயல்களும், பேசுகின்ற சிறு வார்த்தைகளும் மற்றவர் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு போய்ச் சேர்க்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறது இக்கதை.

பல் விழுந்த சிறுமி ஒருத்தியின் மன ஓட்டங்களைச் சொல்லும் சிறுகதை 'உடலறிதல்'. விழுந்த பல்லை யாருமற்ற இடத்தில் புதைக்க வேண்டி அலையும் சிறுமியின் பகல் பொழுது வெம்மையாகவே இருக்கிறது. இதில் வரும் எண்ணங்களும், நிகழ்வுகளும் நம் எல்லோருக்குமே நடந்திருக்கக்கூடிய சாத்தியம் உண்டு.

என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய சில கதைகளை மட்டுமே இங்கு சொல்லி இருக்கிறேன். நல்ல வாசகத்தன்மையை வளர்த்துக்கொள்ள படிக்க வேண்டிய புத்தகம் இது.

- சேரல்

Sunday, July 06, 2008

28. SURVIVAL OF THE SICKEST

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------------------------
புத்தகம் : Survival of the sickest (The surprising connections between disease and longevity)ஆசிரியர் : Dr. Sharon Moalem with Jonathan Prince
மொழி : ஆங்கிலம்

விலை: 13.95 USD
பக்கங்கள்: 210
பதிப்பகம்: Harper Perennial
-----------------------------------------------------------------------------

மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதேன்? மனிதர்களின் மூக்கு கீழ்நோக்கி இருப்பதேன்? மனிதர்களின் தோலோடு கொழுப்பு ஒட்டியிருப்பதேன்? இந்த கேள்விகளைப் பற்றி விவாதித்த இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயம் கொடுத்த ஆச்சரியத்தில் இருந்து இன்னும் மீளாமல், இப்புத்தகத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன்.

Alzhimer நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து இரத்ததானம் செய்துகொண்டிருக்கும் தனது தாத்தாவின் கஷ்டங்களைக் கண்டு கலங்குகிறான் 15 வயதில். அதே நோய் தனக்கும் 18 வயதில் வரும்போது, அவனுக்குள் பல கேள்விகள். சூழ்நிலைக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்வது பரிணாமம் என்றால், கேடுதரும் ஜீன்களை அப்பரிணாமம் தலைமுறைகளுக்குக் கடத்துவதேன்? அக்கேள்விகளுக்கு விடைதேடப் புறப்பட்டதன் விளைவு, அவர் இன்று ஒரு மருத்துவ விஞ்ஞானி; மற்றும் இப்புத்தகம்.

"Welcome to the our magical medical mystery tour" என்று வரவேற்கிறது இப்புத்தகத்தின் முன்னுரை. நாம் அன்றாடம் பார்க்கும், பசுவம்மை தழும்பு உள்ள நமது முந்தைய தலைமுறை ஓர் உதாரணம். பசுவம்மைக்கும், பெரியம்மைக்கும் இடையே இருப்பது வேறொன்றுமில்லை; magical medical mystery தான். எப்போதுமே ஒரு மனிதன் தனியாக இருப்பதில்லை; பாக்டீரியா முதல் கொசு வரை ஆயிரக்கணக்கான பேர் அவனைச் சார்ந்துள்ளன. பரிணாமம் என்னும் கயிற்றினால் கட்டப்படிருக்கும் இம்முடிச்சுகளைக் கொஞ்சம் அவிழ்க்க முயல்வதே இப்புத்தகம். "பரிணாமம் என்பது முடிந்துவிடவில்லை; பரிணாமம் என்பது ஒருமையில்லை; எல்லா உயிகளும் சேர்ந்தே பரிணமிக்கின்றன" என்ற ஒரு வரி கருத்தைப் பல உதாரணங்களுடன் விளக்குவதே இப்புத்தகம்.

'புரியாத புதிர்' படம் முடிந்தவுடன் கே.எஸ்.ரவிக்குமார் சொல்வார்: "தயவுசெய்து இப்படத்தின் முடிவை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்". இதைவிட பலமடங்கு அதிகமான பொறுப்பு, இப்போது எனக்கு உள்ளது! இப்புத்தகத்தின் ஏதேனும் ஓர் உட்கருத்தை எடுத்து, இப்பதிவைப் படிப்பவர்களுக்காக எடுத்துச் சொல்வது, ஆசிரியர் சொல்லும் magical medical mystery யைப் பாதிக்கும் என நான் நினைக்கிறேன்.

இப்புத்தகம் மூலம், கீழ்க்கண்டதுபோல் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும். 14ம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தைக் கொன்று குவித்த பிளேக் நோய், ஏன் சிலபேரை மட்டும் தாக்கவில்லை? பெரும்பாலான உயிரினங்களை அடியோடு அழித்த, பனியுகத்தில் இருந்து நமது முன்னோர்கள் சிலர் மட்டும் எப்படித் தப்பித்தார்கள்? ............................................ மனிதன் என்ற பாலூட்டிக்கு உடலை ரோமங்கள் ஏன் மூடியிருக்கவில்லை? மனிதர்கள் இரண்டு கால்களில் நடப்பதேன்? மனிதர்களின் மூக்கு கீழ்நோக்கி இருப்பதேன்? மனிதர்களின் தோலோடு கொழுப்பு ஒட்டியிருப்பதேன்?

Sun glass போடுவதால் ஏற்படும் குறை - சிலபேர் (பெரும்பாலான ஆசியர்கள்) சரக்கு (alcohol) அடிக்கும்போது ஒரே சிப்பில் முகமெல்லாம் வியர்த்துவிடுவதன் நன்மை - இதுபோன்ற பல விஷயங்கள். எனக்கு பிடித்த - பசுமரத்தாணிபோல மனதில் வைத்துக்கொண்ட - பகுதி, மத்திய கிழக்கு நாடுகளின் மக்களிடையே காணப்படும் Favism என்ற குறைபாடு. அசந்துபோனேன். பொதுவாக நண்பர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்க சில விஷயங்கள் கைவசம் வைத்திருப்பேன்: காலண்டர், நாஸ்டர்டாமஸ், வைரமுத்து, மதம், சூரிய மண்டலம், Time zones. இப்போது இப்புத்தகம்; குறிப்பாக Favism, Asian Flush, Water birthing!

எல்லா கொடூர விஷயங்களுக்குப் பின்னே ஏதோ ஓர் மெல்லிய நன்மை இருக்கலாம் என்பதைச் சில உதாரணங்கள் மூலம் உணரவும், பூர்வீகமும் உணவுமுறைகளும் நம்மை எப்படி தகவமைக்கின்றன என்பதை இன்னும் நிரூபித்துக் கொள்ளவும் தவறாமல் இப்புத்தகத்தைப் படிக்கலாம். இப்புத்தகத்தை ஏற்கனெவே படித்த என்னைப் போன்றவர்கள், அன்பளிப்பு கொடுத்து ஆச்சரியப்படுத்துவது உறுதி.

- ஞானசேகர்