Saturday, March 28, 2009

33. அடியாள்

--------------------------------------------
புத்தகம் : அடியாள்
ஆசிரியர் : ஜோதி நரசிம்மன்
வெளியிட்டோர் : கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ 75
--------------------------------------------


















நண்பன் ஞானசேகர் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டிய புத்தகம் இது.

புத்தகங்களை அவசரகதியில் படித்து, வேகமாக முடிப்பது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பது என் கருத்து. படிக்கும்போதே ஆழமாக சிந்திக்கும் வாய்ப்பைப் புத்தகங்கள் வழங்குகின்றன என்றே எண்ணுகிறேன். ஆனால், இந்தப் புத்தகத்தை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன், இடையிடையே தீர்க்கமான சிந்தனைகளுடனே.

'இருமுறை சிறை சென்று மீண்டவரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. அடியாள் கூட்டம், சிறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகள், இவர்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாகச் சிதறப் போகிறது. எச்சரிக்கை!' என்ற வாசகங்களோடு நம்மை வரவேற்கிறது புத்தகம்.

ஆம். இப்புத்தகத்தின் ஆசிரியர் இரண்டு முறை சிறை சென்று மீண்டுள்ளார். ஒருமுறை அடியாளாக ஓர் அரசியல் அடிதடிக்காகவும், மறுமுறை ஒரு போராளியாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவும் சிறை கண்டுள்ளார். இரு முறை சிறை சென்ற அனுபவங்களையும், அங்கே தான் கற்றுக்கொண்ட விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், தன் பின்புலம் இவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் இவர். வன்முறை மீதான காதல், சமுதாயத்தின் நிழல் மனிதர்களுக்குள் இருக்கும் சில நல்ல குணங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டு அரசியல் அடியாளாகிறார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தேர்தல் முடிவு இவர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தோடு துவங்குகிறது புத்தகம்.

சட்டப்பேரவை தேர்தலில், இவர்கள் தொகுதியில் இவர்களின் கட்சியும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. இரண்டு கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றியும் தோல்வியும் கண்டிருக்க, இரு தரப்புக்கும் ஏற்பட்ட சண்டையில், எதிர்ககட்சியாட்களின் வீடுகளை அடித்துச் சேதப்படுத்துகிறார்கள் இவர்கள். மேலிடத்தின் உத்தரவுப்படி இவர்களைத் தேடத்தொடங்குகிறது காவல்துறை. சில நாட்கள் ஓடி ஒளிந்து, பின் சரணடைந்து விசாரணைக்காவலில், கடலூர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் இவர்கள்.

இறுதிவரை இவர் எந்தக் கட்சி என்பதைச் சொல்லா விட்டாலும் வருட விவரங்களை வைத்து அனுமானிக்க முடிகிறது. அது இவர் சொல்ல வருகிற விஷயங்களுக்குத் தேவையில்லாதது என்பது படிக்கின்ற போது புரிகிறது.

முதன்முறையாக சிறைக்குச் செல்பவனின் உணர்வுகள், பயம், ஆச்சர்யம், சிறை அறிமுகப்படுத்தி வைத்த வித்தியாசமான மனிதர்கள், சிறை வழக்கங்கள், சிறையில் நடக்கும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், சிறையின் சூழ்நிலை என்று பல விஷயங்களைச் சொல்லிப் போகிறார்.

பின் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து, சில காலங்கள் அந்த அரசியல் வட்டாரத்தோடு வாழ்ந்துவிட்டு, பின் தனக்கான களம் இதுவல்ல என்று புரிந்துகொண்டு, தன் ஆதர்ஷ புருஷனிடம் (அந்தக் குழுவின் தலைவர்; இவர்களுக்கான எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்ட பெரும்புள்ளி) சொல்லிக்கொண்டு அங்கிருந்து விலகுகிறார். இந்த மாற்றத்துக்குக் காரணமானவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் எழுத்துகள்.

விலகியபின் தமிழர் தேசிய இயக்கமே அவருக்கான புகலிடமானது. பழ நெடுமாறனைத் தன் தலைவனாகக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்கிறார் ஆசிரியர். சிறுவயதில் இருந்தே தான் ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் ஆசிரியர். சிறையில் பெற்ற அனுபவங்கள் அவரின் இந்த எண்ணத்தை வலுப்பெறச்செய்தன. பின் திருமணம், சிற்றிதழ், குழந்தை, என்று உருண்டோடுகிற வாழ்க்கை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தின் மூலம் 2008ல் இவரை மீண்டும் சிறையில் வைத்து அழகு பார்க்கிறது. இம்முறை புழல் சிறை!

அங்கு ஏற்படுகின்ற அனுபவங்கள் கடலூரில் பெற்றவற்றை விட மாறுபட்டவையாக இருக்கின்றன. சகல விதமான வசதிகளோடு இருக்கின்றது புழல் சிறை. (வெளியில் இருந்து பார்த்த எனக்கே அந்த உணர்வு ஏற்பட்டது உண்மை!)

புத்தகத்தை வாங்கியவுடன் எனக்குப் புதுமையாகத் தோன்றிய விஷயங்கள் பின்னிணைப்பில் இருந்த 'கைதிகளின் உரிமைகள்', 'கைதிகளைப் பார்க்க விரும்புபவர்கள் அளிக்க வேண்டிய விண்ணப்பம்', 'முதல் தகவல் அறிக்கைப் படிவம்' இவைதான்.

புத்தகம் முழுவதும் சிறைகள் பற்றிய பல புதிய விஷயங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். 'பரோலில்' வருவதற்கான விதிமுறைகள், கைதிகளைச் சிறை விட்டு சிறை மாற்றும் 'கமான்' வழக்கம், சிறைக்கைதிகளைப் பார்ப்பதற்கான சம்பிரதாயங்கள் போன்ற அறிமுகமில்லாத செய்திகளை நம் முன் வைக்கிறார்.

செய்த குற்றங்களுக்காக வருந்தும் குற்றவாளிகள், செய்யாத குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள், காவல் துறையால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்கள் என்று பலவிதமான கைதிகளைக் கொண்டிருக்கிறது சிறை வளாகம்; கைதிகளின் மேல் தங்கள் கோபங்களுக்கான வடிகால் தேடும் காவலர்கள், சிறைக்குள் தங்கள் வியாபாரத்தை நடத்தும் சில காவலர்கள், கைதிகள் மீது இரக்கம் காட்டும் சிலர் என்று வித்தியாசமான காவலர்களையும் கொண்டிருக்கிறது.

தமிழகக் குற்றவியல் பதிவேடுகளில் இடம்பிடித்த முக்கியமான குற்றவாளிகள் சிலரையும் இவர் சந்தித்திருக்கிறார். 1998ல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவர், அந்த நிகழ்வு பற்றிச் சொல்லும்போது பெரும் அலைகளைக் கிளப்புகிறது நம் மனதில்.

போராட்டத்தில் ஈடுபட்டபோது தொடரப்பட்ட வழக்கில் வெளிவந்த இவர், தன் முதல் அடிதடி வழக்கிலிருந்து இன்னும் விடுதலையாகவில்லை. 'வாய்தா'க்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம் நீதித்துறையின் மந்தமான் செயல்பாட்டிற்கு இதை ஒரு உதாரணம் என்றும் கூடச் சொல்லலாம்.

புத்தகத்தில் என்னை மிகவும் வியக்க வைத்த அம்சங்கள், ஆசிரியரின் உற்று நோக்கும் தன்மை, உணர்ந்து கொள்ளும் பக்குவம், தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் பகுத்தறிவு! இப்படிப்பட்டவர் அரசியல் அடியாளாக இருந்திருக்கிறார் என்பது கொஞ்சம் நெருடினாலும், அவருக்கு அது ஒரு பெரிய அனுபவமாக அமைந்ததென்பதே உண்மை.

இந்தப் புத்தகத்தை இவர் எழுதியதற்கான நோக்கத்தைப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் தெளிவாகத் தருகிறார்.

விடுதலையான பின் தன் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் இவர் வேண்டிக்கொள்வதெல்லாம் சிறையில் இருந்து வந்தவர்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதாரண வாழ்க்கை வாழும் உரிமையை வழங்க வேண்டும் என்பதே. அந்த மாற்றம் நம் மனத்தில் விரைவில் தோன்றட்டும்.

பின்குறிப்பு:

ஆசிரியர் ஜோதி நரசிம்மன் தற்போது பத்திரிகையாளராகவும், மனித உரிமை ஆர்வலராகவும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான போராளியாகவும் இருந்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ படித்தவர்.

- சேரல்

Saturday, March 21, 2009

32. மிதமான காற்றும் இசைவான கடலலையும்

--------------------------------------------------
புத்தகம் : மிதமான காற்றும் இசைவான கடலலையும்
ஆசிரியர் : தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : தமிழினி
வெளியான ஆண்டு : 2006
விலை : ரூ 150

--------------------------------------------------

'பூ' திரைப்படம் பார்த்த பின் அதன் மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பித் தேடத் தொடங்கினேன். 'உப பாண்டவம்' போன்ற தீவிர தேடல் இல்லை என்றாலும், இவர் எழுத்துகள் மீதான பார்க்காத காதலும் அடங்காமலே இருந்தது. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தாரிடம் இவரது இந்தச் சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது.

'நேருக்கு நேரான வார்த்தைகளில் நிகழ்வுகளை ஊடறுத்து மனங்களின் அடுக்குகளுள் தத்தளிக்கும் வாழ்வை இழுத்து வந்து கேள்விக்குள் நிறுத்தும் கதைகள்'

'கேலியும், சிரிப்பும், விளையாட்டுமாய், வறுமையைக் கடந்து செல்லப் பழகிவிட்ட ஒரு வாழ்வைப் பூச்சின்றிப் பேசும் கதைகள்'

இந்த வரிகள்தான் புத்தகத்தின் பின் அட்டையில் இடம்பிடித்திருந்தன.

உண்மைதான்! சமூக அளவீடுகளில் பின் தட்டில் வாழ்கிற மக்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.

கற்பனையைக் கொஞ்சம் வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, யதார்த்தத்தின் கைப்பிடித்து அழைத்து வருகிறார். 32 சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில், முதல் 13 சிறுகதைகள் என்னுள் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. சிறு நிகழ்வுகளை ஊடறுத்துக் காட்டும் விளக்கக் கதைகளாகவே அவை எனக்குத் தோன்றின. ஆனால், அதன் பின் வந்த கதைகள், வாழ்வியல் அடிப்படைத் தத்துவங்களை எளிய மனிதர்கள் மூலம் பேசத்தொடங்கிவிட்டன.

இந்தக் கதைகள் பொதுவாக, தென் மாவட்டங்களையே கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி செய்யும் மனிதர்களின் வாழ்க்கை, கணவன் மனைவி இடையேயான மனப்போராட்டங்கள், ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் இவற்றைச் சுற்றியே நகர்கின்றன கதைகள்.

சாயம் பூசாத நிஜ வாழ்க்கை, பல இடங்களில் நம்மைத் திகைக்க வைக்கிறது. எண்ணெய்ப்பசை மின்னும் முகங்களில் கொஞ்சம் புன்னகையையும் ஓட்ட வைத்துப் போகும், தீக்குச்சி அடுக்கும் பெண்களைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஒரு போராளியாக, கவிஞனாக இருந்தவனை, தான் படித்த புத்தகத்தின் 26ஆம் பக்கத்திலயே வருடக்கணக்கில் நிறுத்தி வைத்துவிட்ட குடும்ப வாழ்க்கையைச் சாடுகிறது '26 ஆம் பக்கத்து மடிப்பு' என்ற சிறுகதை.

தனக்கென்ற கனவுகளையும், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் கொண்டலையும் ஒருத்தியின் வாழ்வில் வருகிறான் 'குதிரை வண்டியில் வந்தவன்'; அவள் மீது மிகப் பிரியமாக இருக்கிற கணவன். ஆனாலும் எதிர்பார்ப்புகள், சின்னஞ்சிறு ஆசைகள் உடைக்கப்படுகிற போது அவள் சிதைந்து போகிறாள். இருவருக்கும் இடையேயான உணர்வுகளைச் சொல்லிப்போகிறது இச்சிறுகதை.

தன் பரம்பரை வாளோடு சிறு வயதிலிருந்தே பேசிக்கொண்டு வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்கிறது 'வாளின் தனிமை'. தென் மாவட்டங்களில் ஊடுருவி இருக்கும் சாதீய நோயின் பின்புலத்தையும் விளைவுகளையும் ஆராய்கின்றன, 'சொல்ல வருவது' மற்றும் 'ஒரு பிரம்பு ஒரு மீசை' சிறுகதைகள்.


வாழ்க்கையைப் படைப்பாக்கும் போது மட்டுமே அதில் உயிரோட்டம் இருப்பதாகப் படுகிறது.

'கதைகளைவிட வாழ்க்கை மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக அச்சமும் வியப்பும் ஊட்டுவதாக - கதைகளைப் பார்க்கினும் சுவாரஸ்யமானதாக முக்கியமானதாக இருப்பதாக நினைத்த ஒரு நாளில் கதைகள் என்னிடமிருந்து சொல்லாமலே விடைபெற்றுச்சென்றன' என்ற முன்னுரையில் இடம்பெற்ற தமிழ்ச்செல்வனின் இந்த வரிகள் சத்தியமானவை என்றே தோன்றுகிறது.

பின் குறிப்பு 1:

'பூ' திரைப்படத்தின் மூலக்கதை 'வெயிலோடு போய்' ஆறு பக்கங்களுக்கே நீள்கின்ற ஒரு சிறுகதை. ஒரு சிறுகதையையோ, புதினத்தையோ திரைப்படமாக்கும் வித்தை இயக்குனர் சசிக்கு இலாவகமாக வருகிறது. புதுமைப்பித்தனின் 'சித்தி' எனும் புதினத்தை 'உதிரிப்பூக்கள்' என்ற பெயரில் படமாக்கினார் இயக்குனர் மகேந்திரன். புதினத்தின் பாத்திரங்களையும், கதையின் களத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தன் போக்கில் கதையை மாற்றிக்கொண்டார். இயக்குனரின் 'முள்ளும் மலரும்' திரைப்படமும் இப்படி அமைந்ததே! அதே போன்று தான் சசியும் இந்தக் கதையை இலாவகமாக கையாண்டு ஒரு தரமான திரைப்படத்தை வழங்கியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான கதாப்பாத்திரங்களே சிறுகதையில் கிடையாது. குறிப்பாக கதாநாயகனின் தந்தை பாத்திரத்தைச் சொல்லலாம்.

பின் குறிப்பு 2:

32 சிறுகதைகளே கொண்ட இந்தத்தொகுப்பே இவர் தன் வாழ்க்கையில் இதுவரை எழுதியிருக்கிற எல்லா கதைகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

பின் குறிப்பு 3:

இந்த வலைப்பூவின் நோக்கம் நாங்கள் படித்த நல்ல நூல்களையும், நல்ல படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துவதே! இந்தப்புத்தகத்தை அறிமுகப்படுத்துவதில் அந்த சந்தோஷம் எனக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

- சேரல்

Monday, February 16, 2009

31. FROM THE THIRD WORLD TO FIRST

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

I preferred to climb on the shoulders of others who had gone before us - Lee Kuan Yew

------------------------------------------------
புத்தகம்: From Third World To First (The Singapore Story : 1965 - 2000)
ஆசிரியர்: லீ குவான் யூ (சிங்கப்பூரின் முதல் பிரதமர்)
விலை: 35 USD
பக்கங்கள்: 700

------------------------------------------------

ஐந்து வருடங்களுக்கு முன், குமுதத்திலோ அல்லது ஆனந்த விகடனிலோ நடிகர் விவேக் அவர்களின் பேட்டி ஒன்றில், உழைப்பின் உன்னதம் உணர மேற்கோள் காட்டப்பட்டபோதுதான் எனக்கு இப்படி ஒரு புத்தகம் அறிமுகமானது. பல இடங்களில் விசாரித்தும் இப்புத்தகம் கிடைக்கவில்லை. ஒருமுறை Landmarkல் பார்த்தபோது விலை 1500 ரூபாய்க்கு மேல் இருந்ததால் வாங்கவில்லை. வெளியூரொன்றின் நூலகத்தில் பார்த்தபோது, அவசர அவசரமாக ஐந்து நாட்களில் படித்து முடித்த புத்தகமாகிவிட்டது. பதிப்பகத்தாரைக்கூட குறித்துக் கொள்ளவில்லை, அப்படி ஓர் அவசரம். விவிலியத்திற்குப் பிறகு நான் படித்த தடிமனான புத்தகம் இது!

எப்படி வீடு கட்டுவது, எப்படி எந்திரம் பழுது பார்ப்பது, எப்படி புத்தகம் எழுதுவது என்று உங்களுக்குச் சொல்ல பல புத்தகங்கள் உள்ளன. ஆனால், எப்படி ஒரு நாட்டை உருவாக்குவது என்றும், எப்படி நாட்டு மக்கள் வாழ வழி செய்வது என்றும் சொல்லித்தரும் புத்தகத்தை நான் பார்த்ததில்லை. இது எனது இப்பதிவின் ஆரம்பம் அல்ல. புத்தகத்தின் முதல் பத்தி! ஆம், 1965ல் மலேசியாவில் இருந்து எந்தவொரு இயற்கைவளமும் இல்லாமல் பிரிந்துவந்த 640 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு, ஆசியாவின் பணக்கார நாடான கதைதான் இப்புத்தகம்.

1966ல் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும்போது, ஓர் உயர் அதிகாரியின் தெளிவில்லாத பேச்சால், இனக்கலவரம் ஆரம்பிக்க ஆசிரியர் சமாதனப்படுத்தும்போது, "புறாவுக்கெல்லாம் போரா?" என்றுதான் தோன்றியது. இந்தியா மற்றும் எகிப்து நாடுகளிடம் இராணுவ உதவி கேட்கும்போது, நேரு மற்றும் நாசர் மறுத்து அனுப்பும் பதில்களை எதிர்பார்த்ததே என்று கூறும்போது, ஆசிரியரின் மனபலத்திற்குச் சபாஷ்.

சூரிச், பிராங்க்ஃபர்ட், நியூ யார்க், லண்டன், சான் ஃபிரான்ஸிஸ்கோ, சுவிஸ் நகரங்களுக்கு இடையே சிங்கப்பூரைத் திணித்து பணவர்த்தகத்தை 24 மணிநேர சேவையாக மாற்றும் யுக்தியை முக்கால் பக்கத்தில் வர்ணிக்கும்போது பிரமித்துப்போய் மீண்டும் மீண்டும் படித்தேன். சிங்கப்பூரைப் ஃபைனான்ஸியல் சென்டராக மாற்ற மேற்கொண்ட இதுபோன்ற நடவடிக்கைகள் அருமையான திட்டமிடுதலாக இருக்கும். தனக்கு மிக அருகில் இருக்கும் மிகப்பெரிய போட்டியான ஹாங்காங்கைப் பற்றி இப்படி கூறுகிறார் ஆசிரியர்: "In Hong Kong, what is not expressly forbidden is permitted. In Singapore, what is not expressly permitted is forbidden".

மலாய், மான்டரின், தமிழ் என பலமொழி பேசும் மக்களின் மொழிப்பிரச்சனையை, சிங்கப்பூர் எப்படி தீர்த்துக்கொண்டது என்று படித்தபோது, சிங்கப்பூர் ஆட்சியாளர்களின் தெளிவான அணுகுமுறை அருமை. 'தேசியமொழி' என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இப்புத்தகத்தின் 'Many Tongues, One Language' என்ற பகுதியை ஒருமுறை படிப்பது நல்லது.

ஆசிரியர் பிரதமரானவுடனும் கூட, வீதிகளில் வந்து சுத்தம் செய்த விசயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். யூனியன் தலைவரான சுப்பையா என்ற தமிழரைப் பற்றி சொல்லும்போது, அவரின் கண்ணைக் கிண்டல் செய்யாமல் ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். ஓர் ஆட்சியாளரை ஆர்க்கெஸ்ட்ரா குழுத்தலைவருடன் ஒப்பிடும்முறையை நான் பல புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்; இப்புத்தகத்திலும்.

புத்தகத்தின் இரண்டாம் பாதி, சிங்கப்பூர் உலக அங்கீகாரம் பெற பிற நாடுகளுடன் கொண்ட நட்புறவைப் பற்றியது. இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது, நேரு முதல் நரசிம்மராவ் வரை பெரும்பாலும் எல்லா பிரதமர்களைப் பற்றியும் கூறுகிறார். புத்தகம் எழுதப்பட்ட அந்தக் காலத்தில்கூட (1990) மன்மோகன்சிங், சிதம்பரம் அவர்களை ஆசிரியர் தனியே புகழ்ந்துள்ளார். ஆசிரியருக்கு நேரு கொடுத்த முதல் விருந்தும், இந்திராகாந்தி பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இப்புத்தகம் படிக்கும்போது, 'A view from the outside' புத்தகத்தில் சிதம்பரம் அவர்கள் சொன்னது ஞாபகம் வந்தது: "சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய மாதிரியை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது".

-ஞானசேகர்