Friday, November 27, 2009

விகடனில் 'புத்தகம்' வலைப்பூ

ஆனந்த விகடன் இவ்வார இதழில் (02/12/2009) 43ஆம் பக்கத்தில் 'விகடன் வரவேற்பறை' பகுதியில் 'புத்தகம்' வலைப்பூ பற்றிய அறிமுகம் வெளிவந்திருக்கிறது. விகடனுக்கு நன்றிகள். இவ்வறிமுகம், இன்னும் சிலரிடம் புத்தகத்தைக் கொண்டுசேர்க்கும் என்பதில் மகிழ்ச்சி!

வாசிப்பானுபவம் ஒரு தேர்ந்த எழுத்தாளனையும், மேலாக தேர்ந்த மனிதனையும் உருவாக்கும் என்ற என் மாறாத நம்பிக்கை இன்னும் என்னை வாசிக்கச் செய்துகொண்டிருக்கிறது. இதே நம்பிக்கையோடு இயங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேருடன் என் வாசிப்பானுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அந்நோக்கத்துக்காகவே இவ்வலைப்பூ தொடங்கப்பட்டது. இதில் என்னுடன் கைகோர்த்துக்கொண்ட நண்பர்கள் ஞானசேகர், பீ'மோர்கன், மற்றும் ரெஜோவாசனுக்கு என் நன்றிகள்.

விகடனின் அறிமுக வரிகள் :

படித்ததைப் பகிர...

படிக்கும் புத்தகம் குறித்துப் பகிர்ந்து கொள்வதற்காகவே இவ்வலைப்பூ. தமிழ், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி சார்ந்த புத்தகங்கள் குறித்த பகிர்வுகளும் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பிரமிள் படைப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், மு.வரதராசனின் அகல் விளக்கு, ரா.கி.ரங்கராஜனின் கன்னா பின்னா கதைகள், வண்ணதாசனின் பெய்தலும் ஓய்தலும் எனப் பல்வேறு ரசனை சார்ந்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. வாசிப்பை நேசிப்பவர்களுக்கான வலைப்பூ....

-ப்ரியமுடன்
சேரல்

Thursday, November 19, 2009

52. பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

Not to have seen the cinema of Roy would mean existing in the world without seeing the sun or the moon.

- Akira Kurosavoa

------------------------------------------------------------------
புத்தகம்: பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: 90 ரூபாய்
பக்கங்கள்: 151

------------------------------------------------------------------

சத்யசித் ரே இயக்கி முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali). வங்காள மொழி (Bengali). 1955 ம் ஆண்டு. மேற்கு வங்காள மாநில அரசு தயாரித்த திரைப்படம். அதன் பொன்விழா ஆண்டிற்குப்பின், அம்மாபெரும் படைப்பைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகமே இது. இயக்குனர் மகேந்திரன் அவர்களின் 'நடிப்பு என்பது' அடுத்து நான் படித்த சினிமா பற்றிய புத்தகம் இது.

பழைய தெரிந்தவர்களின் தழும்புகள் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ளும் பக்குவம். லோனாவாலா நகரின் குளிரின் நடுவே நீர்வீழ்ச்சியின் காலடியில் கேட்கும் தவளை சத்தம். எறும்புகளோடு வரிசைதவறியோடும் கோடை வெக்கை. நல்லதங்காளின் கேசம்போல் மிதக்கும் கிணற்றுப்பாசி. இப்படி பல தருணங்களில் எஸ்ரா சொன்ன அனுபவங்களைத் தேடிப்போய் ரசித்திருக்கிறேன். உலகின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு வீட்டுச் சன்னலருகில் இருக்கும் தொலைபேசிக்கு அழைத்து இரண்டு நிமிடங்கள் பேசிமுடிக்கும் அவசரமான தட்டை உலகத்தில், வீட்டின் சன்னலில் இருந்து உலகைத் தொடங்கும் அற்புதப் பால்யப்பருவ நினைவுகளை வருடிச் செல்லும் எழுத்து அவருடையது. நான் கவனிக்காத ஏதோ ஒன்றை எஸ்ரா கவனித்திருப்பார்; அல்லது இப்படியும்கூட கவனிக்கலாம் என்றாவது சொல்லியிருப்பார். இந்த நம்பிக்கைதான் இப்புத்தகம்.



எனக்கு இப்படத்தை அறிமுகப்படுத்திய நபர் அல்லது ஊடகம் பற்றி எனக்கு நினைவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வாரங்கள் காத்திருந்து இப்படத்தின் குறுந்தகடு Landmarkல் வாங்கினேன். வெவ்வேறு தருணங்களில் படத்தைப் பார்த்துவிட முயன்றேன். 30 நிமிடங்களுக்கு மேல் முடியவில்லை. மிகமிக மெதுநடை. கிடப்பில் கிடந்த குறுந்தகடை ஆறுமாதங்களுக்கு முன்புதான் மீண்டும் எடுத்து, நண்பன் ஒருவனுடன் முழுவதும் பார்த்து முடித்தேன். படம்முடியும்வரை பேசிக்கொள்ளவில்லை. அதன்பிறகு சில காட்சிகளை மீண்டும் ஓட்டிப்பார்த்து, நீண்டநேரம் அப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்து கைக்கெட்டிய உன்னத படைப்பின் திருப்தியில் தூங்கிப்போனோம்.

கதாநாயகன், கதாநாயகி இல்லாத கதையில் யாரைச்சுற்றி கதை சொல்வது? படம்பார்த்த எல்லோரும் தேர்ந்தெடுக்கும் பாத்திரம், துர்கா. ஓர் ஏழை பெற்றோரின் மூத்தமகள் துர்கா. அவளின் தம்பி அப்பு. அக்குடும்பமே கெதியென அவர்களுடன் வாழ்ந்துவரும் ஒரு பாட்டி. ஒரு மேற்கு வங்க கிராமத்தில் வறுமைப்பிடியில் கசக்கிப் பிழியப்படும் இக்குடும்பம், துர்காவின் இறப்பிற்குப்பின் காசியில் குடியேறுவதே கதைச்சுருக்கம்.



1955லேயே காட்சியமைப்பில் அழகானதொரு வித்தியாசம் காட்டியிருக்கும் படம். ஒரு செடியின் உயரத்தை வைத்து காலவோட்டத்தைச் சொல்லும் உத்தி. சன்னலின் வழியாக ரயில் பார்க்கும்போது துர்காவின் கண்களில் மின்னும் பால்யப்பருவத்தின் ஆனந்தம். மிட்டாய்க்காரனைத் துரத்திக் கொண்டோடும் பிள்ளைப் பருவத்தின் ஏமாற்றங்கள். துர்கா இறந்தபின் மழையில் நனைய மறுக்கும் அப்புவின் குழந்தைப்பருவ மரண அனுபவம். முகத்தை அறுப்பதுபோல் நாணலின் ஊடே ஓடும் காற்றின் இசை (இசையமைப்பாளர் பண்டித் ரவிஷங்கர்). மனிதப்புழக்கம் இல்லாமல்போக பாம்படையும் வீடு. யாரும் அதிகம் பேசுவதில்லை; அழுவதுமில்லை. இந்தியக் கிராமங்கள் நகரம் நோக்கி நகர்வதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ஓர் அற்புதத் திரைப்படம். தவறாமல் பார்க்கலாம்.

எஸ்ராவின் இப்புத்தகத்தைச் சென்ற மாதம்தான் படித்தேன். ஒரு பார்வையாளன் என்ற நிலைக்கு அடுத்தக் கட்டத்திற்குக் கூட்டிப் போனது இப்புத்தகம். இதைப் பால்யத்தின் திரைப்படம் என்கிறார் எஸ்ரா. துர்கா என்ற சிறுமி ஏன் இத்தனை நெருக்கமாகிப் போகிறாள்? ஒவ்வொருவர் வாழ்விலும் சிறுவயதில் பார்த்த யாரோ ஒரு சிறுமியை நினைவுபடுத்துகிறாள் துர்கா. துர்காவைப் போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைப்பட்டு அழுதிருக்கிறார் எஸ்ரா. நானும்தான். (அக்கா Complex பற்றி எனது தளத்தில் ஒரு சிறுகதை எழுத ஒருவருடமாக முயன்றுகொண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் படிக்கலாம்)

துர்கா இறந்த துக்கத்தில் இருக்கும் ஓர் எளிய பார்வையாளனைத்தாண்டி, அவள் உயிரோடிருந்தால் என்னவாயிருக்கும்? அப்புவின் உலகம் எப்படி மாறியிருக்கும்? இவையாவையும்விட ஊரைவிட்டு வெளியேறிச் சென்ற குடும்பங்கள் யாவின் பின்னாலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் எஸ்ரா. கண்ணுக்குத் தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவது மட்டுமல்லாது, ஓர் இரவே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தைத் துர்கா என்பவள் வெளிப்படுத்துவதை எஸ்ரா சொல்லித்தான் கலையின் அழகியல் புரிகிறது.



எஸ்ராவின் தேடுதல் திரையோடு முடிந்துவிடவில்லை. படத்தின் மூலநாவலான விபூதிபூசணின் பதேர் பாஞ்சாலியையும் படித்திருக்கிறார்! நாவலைத் திரைப்படுத்தும்போது செய்யப்பட சமரசங்களையும் சொல்லியிருக்கிறார். எந்த இடங்களில் காகிதம் சிறப்பானதென்றும், எந்த இடங்களில் திரை சிறப்பானதென்றும் இரண்டிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் அழகாக சொல்லியிருக்கிறார். தங்கர் பச்சானின் கல்வெட்டை அழகியோடும், ஒன்பது ரூபாய் நோட்டுகளையும் நான் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ச.தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்', சசியின் 'பூ'வானதை நண்பர் சேரலாதன் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

நாணலை மாடுகள் மேய்ந்துவிட மாதக்கணக்கில் படப்பிடிப்பு ஒத்திப்போடப்பட்ட - ஒரிஜினல் பிரிண்ட் தீவிபத்தில் அழிந்துபோக நகலில் வலம்வந்துகொண்டிருக்கும் - துர்கா பெரிய பெண் ஆவதற்குள்ளும் ஆதரவற்ற பாட்டி இறப்பதற்குள்ளும் படத்தை முடிக்கப் பாடுபட்ட - ஒருபடத்தைத் திரைக்குப்பின் ரசித்துப் பார்க்க எஸ்ராவின் இப்புத்தகம் உதவும்.

'இந்தியாவின் வறுமையைக் காசாக்குகிறார் சத்யசித் ரே' என்ற கருத்து பரவலாக உண்டு. படம்பார்த்துவிட்டு சொல்லுங்கள். இப்படத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் புதியவர்கள் என்பதால், சினிமாவின் நுட்பம் பரிட்சயமாக நாட்கள் ஆனதாகவும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுநடைக்கு அதுதான் காரணம் எனவும் ஒருமுறை இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

படம் பாருங்கள். புத்தகம் படியுங்கள். எஸ்ரா கேட்டதை, நான் கேட்டதை, நீங்களும் கேட்பீர்கள் - "எங்கே இருக்கிறாய் துர்கா?".

-ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, November 12, 2009

51. பிரமிள் படைப்புகள்

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

--------------------------------------------------
புத்தகம் : பிரமிள் படைப்புகள்
தொகுப்பாசிரியர் : கால சுப்ரமணியம்
பதிப்பகம் : அடையாளம்
விலை : ரூ210
பக்கங்கள் : 472
முதற்பதிப்பு : டிசம்பர்-2003

--------------------------------------------------

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது…’

மிக அதிகமான முறைகள் மேற்கோள் காட்டப்பட்ட பிரமிளின் வரிகள் இதுவாகத்தான் இருக்கும். எனக்கும் பிரமிள் அறிமுகமானது இவ்வரிகளில்தான். முதல் முறை வாசித்தபோதே, கடற்கரை மணலென மனதில் அப்பிக்கொண்டது. திரும்ப திரும்ப அசைபோடும் போதும் சொல்லவொனாத குதூகலம் தருவதாய் இருந்தன அவரின் வரிகள். அதற்குப் பின்பு அவரின் எழுத்துகளை அதிகம் வாசிக்கும் வாய்ப்பு அமையாத நிலையில், அவரின் இந்த (கவிதையல்லாத) தொகுப்பு நண்பர் சாணக்கியனிடமிருந்து எதேச்சையாகக் கிடைத்தது.



கவிஞர்களின் உரைநடைக்கென்று தனிப்பட்ட உருவமொன்று உண்டு. என்னதான் மறைக்கப்பார்த்தாலும் ரயில் வண்டியிலிருந்து கையசைக்கும் குழந்தைப் பட்டாளம் போல நம்மைப் பார்த்து புன்னகைத்து கடந்து செல்லும் அந்த கவிதை நடை. அவதானிப்புகளை விட அழகியலே அதிகமாகத் தென்படும். அப்படியே மடித்து மடித்து எழுதினால் உரைநடைக் கவிதையில் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் பிரமிளின் படைப்புகளைப் படிக்கும் வரையில். இவ்வளவு தீவிரமாக சிறுகதை உலகில் இயங்கிய ஒருவர், கவிதையும் கவிதை சார்ந்தும் அறியப்பட்ட அளவுக்கு உரைநடையில் அறியப்படவில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது.

ஒரு கவிஞராக என் மனதினுள் நான் ஏற்படுத்தியிருந்த அத்தனை பிம்பங்களையும் உடைத்து நொறுக்கிவிட்டு, ஒரு சிறுகதையாசிரியராக ஒரு புதியதொரு பிம்பமாக மனதினுள் படிகிறார் பிரமிள். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு ரகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சமே கொஞ்சம் காதல் என்று சில கதைகள் இருந்தாலும், சமுதாயத்தின் மீதான கோபமும், கூர்மையான விமர்சனமும் சாட்டையடியாக பல இடங்களில் வெளிப்படுகின்றன. “கோடரி“ சிறுகதையில் அரசமரம் ஒரு குறியீடாக வருகிறது. பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே பகடையாடப்படும் அரசமரம் ஒரு பிரிவினரால் கோடரி வீச்சுக்கு ஆளாகி ஊர் இரண்டுபடுகிறது. கதையின் மையச்சரடு இதுதான். 1967 ல் எழுதப்பட்ட இக்கதை, பல ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்த பல இனக்கலவரங்களின் குறியீடாக அமைகிறது. சில விஷயங்களில் மக்கள் மாறுவதே இல்லை என்பது கசப்பான உண்மை. இனி பிரமிளின் வரிகளில் எனக்குப் பிடித்த பகுதியொன்று,

அன்று மாலை அச்சந்தி ஜனசந்தடியற்றுப் போயிற்று. மரம் தறி பட்டதில் கொதிப்படைந்த பெரும்பான்மையினரின் குடி நருக்கமான தெருவொன்றில் ஒருவன் சைக்கிள் விபத்தில் சிக்கி காயத்தோடு ஆஸ்பத்திரிக்குப் போனான். அவன் மனிதர்களால் தாக்கப்பட்டதான வதந்தியாயிற்று. இந்நிகழ்ச்சி. ஒவ்வொருவனும் தன் விரோதி இனத்ததை ஒற்றை மனிதனாக உருவகப்படுத்தினான். எவனும் அன்று அவன் இனத்தின் உருவகமாயினான். எவன் பாதிக்கப்பட்டாலும் அவன் இனமே சீறும் - அஞ்சும். இனத்தின் பெயர் மனிதனில் வந்து படிந்தது. அது மட்டுமல்ல, சில கூட்டத்தினர் வெவ்வேறு வகையான உத்தேசங்களுடன் செய்தவை இன அடிப்படையில் காரணம் கொண்டன. இதனால் அவர்களுடன் இன அடையாளத்தால் ஒற்றுமை கொண்டவர்கள் பெருமைப்பட்டனர். தன்னைவிடப் பிரம்மாண்டமானதுடன் ஒரே முத்திரையினால் ஒன்றுபட்டதில்தானே அப்பிரமாண்டமென ஒவ்வொரு துளியும் இறுமாந்தது. ஆனால், அதுவும் இன்னொரு பிரமாண்டத்துக்கு எதிரிடையானதுதான். பாவம், அந்தத் துளி தனித்து, அந்த எதிரிடையான பிரமாண்டத்தின் களத்தில்தான்என இறுமாந்த தனது பிரம்மாண்டத்தின் பெயரில், ஆனால் ஒற்றைத்துளியாகவே சிந்தக்கூடும் எனக் காணவில்லை, சிந்திவிழும் கணம் வரை

- பக்கம் 26 - பிரமிள் படைப்புகள்

எழுத்து வடிவின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். ஒருபக்கக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், ஜனரஞ்சகக் கதைகள், தொடர்கதை, நாடகங்கள், பாவனை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள்,ஆங்கில நாவல்கள் என எதுவும் இவர் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவற்றோடு நின்று விடவில்லை. தேர்ந்த ஓவியராகவும், களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் விளங்கியிருக்கிறார். அவரின் ஓவியங்கள் சிலவும் இத்தொகுப்பில் இடையிடையே இணைக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்த முயற்சி என்று எதையும் ஒதுக்கி விடமுடியாது. அத்தனையிலும் அப்படி ஒரு உழைப்பு பொதிந்து கிடக்கிறது. நட்சத்ரவாசி நாடகத்தின் நுண்மை நம்மை வியக்கவைக்கிறது. அத்தனை கதாபாத்திரங்களுக்கும், ஒவ்வொரு சின்னசின்ன அசைவுகளும் கூட எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிவைத்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியாக ஒரு எழுத்துநடையையே வைத்திருக்கிறார். குறிப்பாக அவரின் அறிவியல் புனைகதைகளைச் சொல்ல வேண்டும். ”உங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பா? இருக்கவே இருக்கிறது HAC3000 சூப்பர் கம்ப்யூட்டர்” என்கிறது ”அசரீரி” சிறுகதை. காதலைச் சேர்த்து வைக்கும் சூப்பர் கம்ப்யுட்டர் கொஞ்சம் ஜனரஞ்சகக் கதைக்கான கருவாகத் தெரிந்தாலும், ஒரு சுவாரஸ்யமான அறிவியல் புனைகதை இது. 90 களின் தொடக்கத்தில் இதுமாதிரி சில அறிவியல் புனைவுகள் எழுதியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் சுஜாதாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக அறிவியல் புனைவுகளைக் கையாண்டதாக நினைவிலில்லை.

ஒரு மாயத்தன்மைக்கான கூறு இவரின் பெரும்பாலான கதைகளில் புதைந்திருக்கிறது. அதுவே கதைக்கு ஒரு விதமான எதிர்பார்ப்பு நிலையைக் கொடுத்து கடைசி வரை நம்மை அதே ஈடுபாட்டுடன் அழைத்துச் செல்கிறது.

குறியீடுகளை அவற்றிற்கே உரிய லாவகத்துடன் பயன்படுத்தும் வித்தை தெரிந்திருக்கிறது இவருக்கு. அதன் உச்சமாக வருகிறது “லங்காபுரி ராஜா” என்ற சிறுகதை. இலங்கைப் பிரச்சனையின் உக்கிரத்தையும் அதன் ஆழத்தையும் ஒரு உடும்பைக் குறியீடாகக் கொண்டு விவரிக்கிறார். இலங்கைப் பிரச்சனை தொடர்பான படைப்புகளை அதிகம் வாசித்திருக்கா விட்டாலும், இப்படைப்புக்கு அப்பட்டியலில் தனித்ததொரு இடமிருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

பல சிறுகதைகளில் தென்படும் அந்த நான்-லீனியர் கதைசொல்லும் உத்தியைப் புரிந்து கொள்ளத்தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. மற்றபடிக்கு ஒரு ஆர்ப்பாட்டமில்லாத ஆழமான வாசிப்பனுபவம் தருபவை பிரமிள் படைப்புகள். சொல்லிக்கொண்டே போனால் எல்லா கதைகளைப்பற்றியும் சொல்லவேண்டும். அதனால் மிச்சத்தை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

இந்நூலின் முன்னுரையிலிருந்து ஒரு வரி.
நோக்கமில்லாமலே ஓர் அக்கறையான வாழ்க்கை வரலாறு [இத்]தொகுப்புக்குள் புதைந்து கிடக்கிறது. கதைகளைப் பிரமிளாகவும் பிரமிளைக் கதைகளாகவும் கண்டுகொள்ள இந்நூல் உதவும்
படித்து முடிக்கையில் உண்மையென்றே பட்டது.

பிரமிள் என்ற பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை அவரை இன்னும் பலரிடம் கொண்டு சேர்ப்பதே. அப்பணியைச் செவ்வனே தொடங்கி வைத்துள்ளனர் அடையாளம் பதிப்பகத்தார். இப்பதிவினால் இன்னும் சிலருக்கு அந்த அறிமுகம் கிட்டுமானால், தேர் வடம் பிடித்த திருப்தி எனக்கும் ஏற்படுகிறது.


விருபா இணையதளத்திலிருந்து ஆசிரியரைப்பற்றி



இலங்கையின் திருக்கோணமலையில் 20.04.1939 இல், தருமராசன்-அன்னலட்சுமி தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். இலங்கையில் பிறந்தாலும், அறுபதுகளின் இறுதியிலேயே இந்தியா வந்து, தமிழ் நாட்டு எழுத்தாளராகவே வாழ்ந்து, 1971 இலிருந்து சென்னையில் தனது பெரும்பாலனா வாழ்நாளைக் கழித்தவர். புற்றுநோய்ப் பாதிப்பால், தமிழ்நாட்டில் வேலூரை அடுத்த கரடிக்குடி என்னும் ஒரு சிறு கிராமத்தில் 06.01.1997 இல் அடக்கம் பெற்றார்.

இவர், தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், விதவிதமாகத் தன் பெயரை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. நவீன தமிழின் முதன்மையான கவிஞராகவும், முதன்மையான விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் பிரமிள் விளங்கினார். படிமக் கவிஞர் என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகிற்கு அதுவரையில்லாத பரிமாணத்தையும் அளித்தன. ஓவியராகவும் சிற்பியாகவும் தொடங்கிய இவரது படைப்பு வாழ்க்கை 1960 இல் சென்னையில் இருந்து வெளிவந்த "எழுத்து" பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய பிறகு, புதுக்கவிஞராகவும், விமர்சகராகவும் மாற்றம் கொண்டு, உயர்ந்தபட்சக் கற்பனைத் திறனும் உள்ளூடுருவும் பகுப்பாய்வுச் சக்தியும் கொண்ட எழுத்தாளராக அவரை நிலை நிறுத்தியது.

- Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)