Monday, March 08, 2010

58. வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

The past was a light that if properly directed could illumine the present more brightly than any contemporary lamp. Greatness was like the sacred flame of Olympus, handed down from the great to the great.
- Salman Rushdie (The Enchantress of Florence)


------------------------------------------------
புத்தகம் : வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
ஆசிரியர் : எஸ்.வி.ராமகிருஷ்ணன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : 2006
விலை : 65 ரூபாய்
பக்கங்கள் : 111 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)

------------------------------------------------

பிரதமரான புதிதில் போகிற வழியில் காரை நிறுத்தி விவசாயி ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தாராம் ஜவஹர்லால் நேரு. "சுதந்திரம் வாங்கிவிட்டோம். நாம் இனிமேல் அடிமையில்லை" என்று பேசிக்கொண்டிருந்த நேருவிடம் விவசாயி கேட்டாராம், "ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? சுதந்திரம் எனக்கு என்ன செய்தது?". அதற்கு நேரு சொன்னாராம், "ஒரு பிரிட்டிஷ் வைசிராயிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க முடியாது. இந்தியப் பிரதமரிடம் கேட்க முடியும். அதுதான் சுதந்திரம் நமக்கெல்லாம் கொடுத்தது".

சுதந்திரம். ஏகாதிபத்தியம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் சுதந்திரத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி பெரும்பாலான மக்களுக்கு அர்த்தம் புரிந்தததாக எனக்குத் தெரியவில்லை. வைசிராய் என்றால் என்னவென்று சகபயணி ஒருவர் ரயிலில் கேட்டார்! இனிப்பும், விடுமுறையும், சிறப்பு நிகழ்ச்சிகளும் இருக்கும்போது ஆகஸ்ட் 15க்கும், ஜனவரி 26க்கும் என்ன வித்தியாசமாய் இருந்தால் என்ன என்பது இன்றைய மனநிலை. என் பாட்டன் எனக்காவது சுதந்திரம் வாங்கித்தர என்னவெல்லாம் செய்தான் என்று எனக்குத் தெரியாமல் இருந்தால், காலடியில் சகமனிதன் இவ்விரண்டு தினங்களுக்காகப் போராடிக் குண்டடிபட்டும் அதற்குமேல் பட்டும் சாகும்போதும், வெளிப்பிரச்சனை என்ற ஒற்றை வார்த்தையில் ஓரங்கட்டிவிட்டு இனிப்புடன் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஆங்கிலேயர்கள் சட்டென்று வெளியேறியவுடன், நாட்டின் எதிர்காலம் மட்டுமே யோசித்து மொத்த சொத்தையும் நாட்டிற்கே எழுதிவைத்துப் போன முதல் பிரதமர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்! யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என்ற சுதந்திரத்தைத் துர்பிரயோகம் செய்து ரியல் எஸ்டேட் முறையில் சுதந்திர நாட்டை கூறுபோட்டு விலைக்கு விற்ற+கிறவர்களும் உண்டு! மொத்தத்தில் அடிமையின் பல கனவுகள், சுதந்திர தேசத்தில் நிராகரிக்கப்பட்டது உண்மை! சுதந்திர போதையில் மக்கள் சிலரின் மனநிலை தலைகீழானதும் உண்மை! உணர்ச்சிவசப்பட வைக்கும் பல உதாரணங்கள் என்னிடம் இருந்தாலும், அடிமை நிலையில் இருந்து சுதந்திரநிலைக்கு மாறிய இந்தியாவின் விவாதிக்கப்படாத - உணச்சிவசப்பட வைக்காத - மழலைப் பருவத்தைப் பற்றி இப்புத்தகம்!



ஆசிரியரின் சொந்த ஊர் தாராபுரம். ஆசிரியரின் குழந்தைப் பருவத்தில் இந்தியநாடு பிறந்திருக்கிறது. 1940களில் நடந்த / இருந்த விசயங்களை - அப்பத்தாண்டுகளில் ஒரு சிறுவனின் மனதில் பதிந்த காலச்சுசுருதியைப் பதிவுசெய்யும் முயற்சியே இப்புத்தகம்.

சித்தார்த்தனுக்கு நேர்ந்தது போல், ஆசிரியரின் பால்யப் பருவத்தில் நான்கு வித்தியாசமான அனுபவங்களால் பாதிக்கப்பட, 29 கட்டுரைகளுடன் ஞானம்தரும் புத்தகம்! அரசியல், மக்களின் மனநிலை என்று எதையும் தாக்கவோ புகழவோ செய்யாமல், காலவோட்டத்தில் பெரும்பாலும் நமக்குப் பரிட்சயமற்றுப் போன விசயங்களைப் பற்றி எழுதியிருப்பது அருமை. புத்தகத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட ஒரு கட்டுரையும் உண்டு.

நயாபைசான்னா என்னா? 'செப்புக்காசு புரயோசனமில்லை' என்று யாராவது சொன்னால், என்ன சொல்லவர்றாங்க? அணா உபயோகம் நடைமுறையில் இல்லாதபோது, 25 பைசாவுக்கும் நாலணாவுக்கும் என்ன சம்மந்தம்? 50 பைசாவுக்கும் எட்டணாவுக்கும் என்ன சம்மந்தம்? அருமையான விளக்கம் இப்புத்தகத்தில் உண்டு.

மகாகவி பணிபுரிந்த - தமிழின் முதல் செய்தித்தாள் 'சுதேசமித்திரன்' என்னவானது? மிகவும் எளிதில் செல்லமுடியாத சபரிமலை ஐயப்பன் கோவில் எப்படிப் பிரபலமடைந்தது? சுதந்திர காலத்தில் மக்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடியிருப்பார்கள்? இதுதான் களம் என்று எதையும் சுருக்கிக் கொள்ளாமல் மொட்டைக்கடுதாசி முதல் ஓலைப்பட்டாசு வரை எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். தெலுங்கு, மராட்டியம், மியன்மார் என்று சில விசயங்களில் சொல்லப்படும் உதாரணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

எந்த வட்டமேசை மாநாட்டிற்கு இந்திய யூனியன் போகவில்லை என்று அதன் சந்ததிகள் மறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், வட்டமேசை மாநாடு வரை கங்கை நீர் சென்றிருக்கிறது என்றால் ஆச்சரியம்தான். நம்மக்கள் சிலபேர் ஐஸ்கூடவே பிறந்ததுபோல் ஆடம்பரம் செய்து கொண்டிருக்கும் இவ்வெப்பதேசத்தில், ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல் முலம் இந்தியாவிற்கு ஐஸ் எடுத்து வந்திருக்கிறார்கள்! ஆங்கிலம் பேசும் மேல்தரமக்களின் சங்கமாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தைச் சாமானியனின் வீட்டு அடுப்படிவரை கொண்டுவந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட,சுதந்திரத்திற்குப்பின் அவ்வியக்கம் கலைக்கப்பட வேண்டுமெனச் சொல்லியிருக்கிறார்!

அறுபது ஆண்டுகளுக்குள் சுழலும் தமிழ் வருடங்களைத் தனது எழுத்து யுத்திக்குப் பயன்படுத்தியிருப்பது, எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகள்! இந்திய நாடு சந்தித்த கடைசி இரண்டு விய (1946 - 47, 2006 - 7) மற்றும் பார்த்திப (1945-46, 2005-6) வருடங்களை மூன்று கட்டுரைகளில் அலசுகிறார் ஆசிரியர். அடிமை நாட்டின் கடைசி இரண்டு வருடங்கள், சுதந்திர நாட்டில் அறுபது ஆண்டுகளுக்கு பின்!

பம்பாய் கடற்படைக் கலகமும் (Royal Indian Navy mutiny), செங்கோட்டை வழக்கும் (Redfort trial) வரலாற்றுப் பாடப்புத்தங்களில் நமக்குக் கற்பிக்கப்படவில்லை! ஏனென்றுதான் தெரியவில்லை.

கவிதைநயமான அழகியல், கிண்டல், ஏக்கம் என்று எல்லாம் கலந்துவரும் வார்த்தை உபயோகங்களும், நச்சென்று முடிக்கும் உத்தியும் பலவிடங்களில் ஆசிரியர் கையாண்டிருந்தாலும், எனக்குப் பிடித்த ஒரு பத்தி:
"1949 ஆம் வருடம். காந்தியடிகளும் போய்விட்டார். சுதந்திரப் போராட்டம் என்ற கவிதை மட்டத்தில் செயல்பட்ட காங்கிரஸ் இயக்கம், ஆளுங்கட்சி என்கிற வசன மட்டத்துக்கு இறங்கிவிட்டது. பல்லாண்டு போராடிப் பெற்ற சுதந்திரம் என்ற கள்ளைக் குடித்து, ஆடியும் பள்ளுப் பாட்டியும் களித்த மக்களின் கவனம் வேறு திசைகளில் திரும்ப ஆரம்பித்தது. 1939ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்படும்வரை கொடிகட்டிப் பறந்த காந்தீயப்படம் 'தியாக பூமி' மறுபடி பிரிண்ட் போட்டு திரையிடப்பட்டும் ஓடவில்லை. சி.என்.அண்ணாதுரையின் 'வேலைக்காரி' பிரமாதமாக ஓடியது".

ஜீவநதி என்று சொன்ன மனிதர்களாலேயே, கண்முன்னால் கொல்லப்பட்டு, தண்ணீரில்லாமல் நின்றுகொண்டிருக்கும் அமராவதி ஆற்றின் சோகம் தாங்கிய இன்னொரு தாராபுரத்துக்காரருடன் விரைவில் சந்திக்கிறேன்.

அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1. 'அனுபந்தம்' என்ற வார்த்தை 'பின்னுரை' என்ற அர்த்தத்தில் அக்காலத்தில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தில் படித்தேன்.

2. 21 குண்டுகளின் இராணுவ மரியாதை வழக்கத்தின் காரணம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிராவிடில், 21 gun salute பற்றி படித்துப் பாருங்கள். எனது கல்லூரிப் பருவத்தில் ஒரு வினாடி - வினா நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட மிகப்பிரபலமான கேள்வி இது.

3. 'தெரியாது ராமசாமி' பள்ளிக்கூடத்தில் பாஸானது போல்தான் இந்தியாவும் சுதந்திரம் என்ற தேர்ச்சி பெற்றிருக்கிறது. கவிஞர் நந்தலாலா சொல்லி சிறுவயதில் கேட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது. 'தெரியாது ராமசாமி' கதையை எழுத்தில் சொன்னால் சற்றுத் தொங்கல் போல் இருக்கும். உங்களின் தேடுதலுக்கு விட்டுவிடுகிறேன்.

4. ஐஸ் என்ற ஒரு பொருள் அக்காலத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த வேளையில், யாருக்குமே அப்போது ஐஸ் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஜில்லுன்னு இருக்கும் என்றுமட்டும்தான் தெரியுமாம். வீரமாமுனிவர் கட்டிய நாநூறாண்டுகள் பழமையான ஒரு தேவாலயம் திருச்சி அருகே ஆவூரில் உள்ளது. தமிழ்க் கிறிஸ்தவர்களின் பெரிய தேர் இவ்வூரில்தான் இருக்கிறது; திருவாரூருக்கு அடுத்த மிகப்பெரிய தேர். அவ்வூர் திருவிழாவில்(ஈஸ்டருக்கு மறுவாரம்)ஐஸ் விற்கப்படுவதாகச் சுற்றுவட்டாரம் எல்லாம் செய்திபரவ, திருவிழாவிற்குச் சென்ற ஒரு தாத்தாவிடம் பேரக்குழந்தைகள் ஐஸ் வாங்கிவரச் சொல்லியிருக்கிறார்கள். தாத்தாவும் ஐஸ் வாங்கி சுருக்குப்பையில் வைத்துவிட்டு, திருவிழா முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்......ஆவூர் விரும்பிகள் எல்லாராலும் ஒருகாலத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காமெடி இது. அந்த தாத்தா இன்று இல்லை; ஏதோ ஒரு காது இக்கதையை இவ்வருடமும் கேட்கும் என்பது நிச்சயம்! சிரிப்பதற்கு முன்னமே SMS / email காமெடிகளை அனிச்சையாய்ப் பார்வர்ட் செய்யும் காலத்தில், பேச்சுக்கலை மெல்லவினிசாகும்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: