Tuesday, April 06, 2010

59. கோபல்ல கிராமம்

பதிவிடுகிறவர் நண்பர் Bee'morgan. நன்றி!

---------------------------------------------
புத்தகம் : கோபல்ல கிராமம்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூ100
பக்கங்கள் : 200
முதற்பதிப்பு : 1976
கிடைத்த இடம் : பெங்களுரு புத்தகக்கண்காட்சி

---------------------------------------------

சிறு வயதில் ஆள் அரவமற்றுப் போன மதிய வேளைகளிலோ, விளக்கு வைத்த பின்பான இரவு வேளைகளிலோ திண்ணையில் அமர்ந்து கொண்டு தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்ட அனுபவம் இருப்பவர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டெடுத்துக்கொள்ளுங்கள்.

”ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்...”

எத்தனை முறை நாம் கேட்டுப் பழகிய முதல் வரி இது. எல்லாக் கதையுமே அந்த “ஒரு ஊரில்” தான் தொடங்குகிறது. எந்த ஊரின் கதை? அதுதான் கோபல்ல கிராமம். தான் வளர்ந்த கிராமத்தின் கதையை, தானே கதைசொல்லியாகவும், பாட்டியிடம் கதைகேட்கும் சிறுவனாகவும் இரு வேறு நிலைகளில் நம்மிடம் படைக்கிறார் கி.ரா.



காலம் பற்றிய வெளிப்டையான குறிப்புகள் இல்லையாதலால், ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. செழிப்புடன் வாழ்ந்த பல குடும்பங்கள் ஒரு துலுக்க ராஜாவுக்கு பயந்து தெலுங்குதேசத்திலிருந்து தப்பி தெற்கு நோக்கி வந்து கோபல்ல கிராமத்தை அமைக்கின்றனர். தற்போது கிராமத்தில் ஒரு கொலை நிகழ்கிறது. கொலையாளி பஞ்சாயத்துக்கு வந்து கழுவேற்றும்படி தீர்ப்பைப் பெறும் இடைப்பட்ட இடைவெளியில் பாட்டியிடம் கதைகேட்கும் சூட்சுமத்தில் கோபல்ல கிராமத்தின்
பூர்வீகத்தையும் வாசகனுக்குக் காட்டியபடி கும்பெனிக் காரர்களின் வரவோடு கதை முடிவடைகிறது.

ஒரு கிராமத்தின் கதை என்பது அங்கு வாழ்ந்த, வாழும் மனிதர்களின் கதையே. அந்த வகையில் புத்தகம் முழுக்க ஏராளமாய் மனிதர்கள். விதவிதமாய் மனிதர்கள். விசித்திரமான மனிதர்கள். அதிலும் குறிப்பாக, எனக்குப் பிடித்த, பஞ்சாயத்துக் காட்சியின் தொடக்கத்தில் பஞ்சாயத்தில் கூடியிருக்கும் ஒவ்வொரு நபரும் அவருக்குரிய அடைமொழியுடனும் அந்த அடைமொழிக்கான காரணக் கதையுடனும் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இந்தக் காட்சி மட்டுமே ஐந்து அத்தியாயங்களுக்கு மேல் நீள்கிறது. கடைசியில பஞ்சாயத்து தொடங்கும் போது கூடியிருக்கும் அனைவருமே நம் பக்கத்து வீட்டுக்காரர்களாக உருக்கொள்கின்றனர். மண்ணுதிண்ணி ரெங்கநாயக்கர், நல்லமனசு திரவத்தி நாயக்கர், பெத்த கொந்து கோட்டையா, பொடிக்கார கெங்கா நாயக்கர், காரவீட்டு லெச்சுமண நாயக்கர், படுபாவி செங்கன்னா என்று அனைவருமே கடைசிப்பக்கத்துக்கு அப்பாலும் நம்மை தொடர்நது வருகின்றனர். இதுவே ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.

ஒரு பிடி மண்ணெடுத்து பக்கங்கள் தோறும் வாரியிறைத்த மாதிரி மண்மணம் கமழ்கிறது கோபல்ல கிராமத்தில். எழுத்துக்காக தனியொரு வழக்கெல்லாம் கொள்ளாமல், தோள்மேல் கை போட்டு நண்பனிடம் பேசும் தொனியிலேயே கதை அவிழ்கிறது. கதையின் போக்கோடேயே செல்லும் போது, சுவாரஸ்யமான வேறொரு கிளையைப் பற்றியபடி கதை அந்த கிளைக்கதைக்குள் நுழைந்து விடுகிறது. அதன் போக்கிலேயே கொஞ்சம் போனபின்தான் மீண்டு வந்து முதல்கதையைச் சேர்கிறது. இதனாலோ என்னவோ, பாட்டியிடம் கதைகேட்பது போன்ற உணர்வு அடிக்கடி எழுவதைத் தவிர்ககமுடியவில்லை.

அங்கங்கே பல சுவாரஸ்யமான விவரணைகள் படிக்கப் படிக்க ஆச்சரியமூட்டுகின்றன. இடையில் தீவட்டிக்கொள்ளைக்காரர்கள் வருகிறார்கள். அக்கையாவின் போர்த்தந்திரத்தில் அகப்பட்டுத் தப்பியோடுகிறார்கள். ஆங்.. அக்கையா.. கிராமத்தின் விகடகவி கதாபாத்திரம். குறும்பு மிளிரும் கண்களுடன், அனைவரையும் சிரிக்கவும் வைக்கிறார், கொள்ளைக்காரர்களின் தாக்குதலின் போது சாமர்த்தியமாக பதிலடியும் கொடுக்கிறார். கிட்டத்தட்ட பீர்பாலை நினைவு படுத்தும் கதாபாத்திரம். நிச்சயம் அனைவரையும் கவர்பவர் இவர். அப்புறம், கன்றை இழந்த பசுவையும், தாய்ப்பசுவை இழந்த கன்றையும் இணைத்து வைக்கிறார் வாகடம் புல்லையா. இதன் பெயர் “தழையிறது“ என்கிறார். ஆச்சரியப்பட வைக்கும் சுவாரஸ்யாமான வர்ணனை இது.

தெற்கு நோக்கிப் பயணப்படும் அந்த மக்கள் கூட்டம், ஓரிடத்தில் காட்டைத் திருத்தி கிராமம் அமைத்துக் கொள்ள முடிவெடுக்கிறது. சரி செய்ய கடினமான காடு என்பதான அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிய காட்டிலிருந்து பிரித்து, தீவுக் காட்டை அமைத்து அதனை தீயிட்டு எரிக்கின்றனர். இதே போன்றதொரு வன எரிப்பு நிகழ்வு “உப பாண்டவத்“திலும் இடம் பெறும். ஆனால் உபபாண்டவத்தின் வீரியமும் வீச்சும் வேறொரு தளத்தில் நம்மை திகைக்கச் செய்தால், கோபல்ல கிராமத்தின் வன எரிப்பு, கிராம மக்களின் பார்வையில், அதன் தேவையின் முக்கியத்தோடு நம் முன் புகைகிறது. இடையிடையே தேவதைக்கதைக்கான கூறுகளும் கடந்து செல்கின்றன.

ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வருணனை, புறத்தோற்றங்களின் வழி தொடங்காமல், அவர்களின் குணநலன்களோடேயே தொடங்குகிறது. அந்த வருணனை முடிவதற்குள்ளாகவே, ஒவ்வொருவரும் அவர்களின் குணநலன்களுக்கேற்ப நம் மனக்கண்ணில் உருக்கொண்டுவிடுகின்றனர். அதைவிட முக்கியமாக, தொடர்ந்து வரும் கதைச்சரடும் நம் மனக்கண்ணில் கொண்ட உருவிற்கு வலுசேர்த்தவாறே செல்கிறது. அந்த வகையில் வாசகனை ஒவ்வொரு நிலையிலும், அவரவர்க்கேற்ற கற்பனை கிராமத்தை உருவாக்கிக்கொள்ள உற்சாகமளித்தவாறே பயணப்படுகிறது கதை. ஒரு சில இடங்களில், பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வழக்குச்சொற்களுக்கும், வழக்கொழிந்த சொற்களுக்கும் அவற்றின் சரியான பொருள் தெரியாவிட்டாலும் கூட நம் மனதுக்கு பொருத்தமான ஒரு பொருளை வரித்துக்கொள்வதில் கஷ்டமிருக்கவில்லை.

உண்மையில், அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது இந்நூல். உதாரணத்துக்கு குறிப்புகள் கொடுக்கப்பட்ட சில சொற்கள் உங்களின் பார்வைக்கு

ருசிக்கல்
குத்துத்தரம்
தைப்பாறுதல்
செல்லீ
ஏணி நாற்காலி
அகப்பத்தியம்

ஒரு கதைசொல்லியின் நெருக்கத்துடன் கதை கேட்க விரும்புபவர்கள் கண்டிப்பாய் கோபல்ல கிராமத்திற்கு வரலாம்.

கிராமத்தின் முகவரி, இணையத்தில்:

-Bee'morgan
http://beemorgan.blogspot.com/

Monday, March 08, 2010

58. வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

The past was a light that if properly directed could illumine the present more brightly than any contemporary lamp. Greatness was like the sacred flame of Olympus, handed down from the great to the great.
- Salman Rushdie (The Enchantress of Florence)


------------------------------------------------
புத்தகம் : வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
ஆசிரியர் : எஸ்.வி.ராமகிருஷ்ணன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : 2006
விலை : 65 ரூபாய்
பக்கங்கள் : 111 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)

------------------------------------------------

பிரதமரான புதிதில் போகிற வழியில் காரை நிறுத்தி விவசாயி ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தாராம் ஜவஹர்லால் நேரு. "சுதந்திரம் வாங்கிவிட்டோம். நாம் இனிமேல் அடிமையில்லை" என்று பேசிக்கொண்டிருந்த நேருவிடம் விவசாயி கேட்டாராம், "ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? சுதந்திரம் எனக்கு என்ன செய்தது?". அதற்கு நேரு சொன்னாராம், "ஒரு பிரிட்டிஷ் வைசிராயிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க முடியாது. இந்தியப் பிரதமரிடம் கேட்க முடியும். அதுதான் சுதந்திரம் நமக்கெல்லாம் கொடுத்தது".

சுதந்திரம். ஏகாதிபத்தியம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் சுதந்திரத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி பெரும்பாலான மக்களுக்கு அர்த்தம் புரிந்தததாக எனக்குத் தெரியவில்லை. வைசிராய் என்றால் என்னவென்று சகபயணி ஒருவர் ரயிலில் கேட்டார்! இனிப்பும், விடுமுறையும், சிறப்பு நிகழ்ச்சிகளும் இருக்கும்போது ஆகஸ்ட் 15க்கும், ஜனவரி 26க்கும் என்ன வித்தியாசமாய் இருந்தால் என்ன என்பது இன்றைய மனநிலை. என் பாட்டன் எனக்காவது சுதந்திரம் வாங்கித்தர என்னவெல்லாம் செய்தான் என்று எனக்குத் தெரியாமல் இருந்தால், காலடியில் சகமனிதன் இவ்விரண்டு தினங்களுக்காகப் போராடிக் குண்டடிபட்டும் அதற்குமேல் பட்டும் சாகும்போதும், வெளிப்பிரச்சனை என்ற ஒற்றை வார்த்தையில் ஓரங்கட்டிவிட்டு இனிப்புடன் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஆங்கிலேயர்கள் சட்டென்று வெளியேறியவுடன், நாட்டின் எதிர்காலம் மட்டுமே யோசித்து மொத்த சொத்தையும் நாட்டிற்கே எழுதிவைத்துப் போன முதல் பிரதமர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்! யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என்ற சுதந்திரத்தைத் துர்பிரயோகம் செய்து ரியல் எஸ்டேட் முறையில் சுதந்திர நாட்டை கூறுபோட்டு விலைக்கு விற்ற+கிறவர்களும் உண்டு! மொத்தத்தில் அடிமையின் பல கனவுகள், சுதந்திர தேசத்தில் நிராகரிக்கப்பட்டது உண்மை! சுதந்திர போதையில் மக்கள் சிலரின் மனநிலை தலைகீழானதும் உண்மை! உணர்ச்சிவசப்பட வைக்கும் பல உதாரணங்கள் என்னிடம் இருந்தாலும், அடிமை நிலையில் இருந்து சுதந்திரநிலைக்கு மாறிய இந்தியாவின் விவாதிக்கப்படாத - உணச்சிவசப்பட வைக்காத - மழலைப் பருவத்தைப் பற்றி இப்புத்தகம்!



ஆசிரியரின் சொந்த ஊர் தாராபுரம். ஆசிரியரின் குழந்தைப் பருவத்தில் இந்தியநாடு பிறந்திருக்கிறது. 1940களில் நடந்த / இருந்த விசயங்களை - அப்பத்தாண்டுகளில் ஒரு சிறுவனின் மனதில் பதிந்த காலச்சுசுருதியைப் பதிவுசெய்யும் முயற்சியே இப்புத்தகம்.

சித்தார்த்தனுக்கு நேர்ந்தது போல், ஆசிரியரின் பால்யப் பருவத்தில் நான்கு வித்தியாசமான அனுபவங்களால் பாதிக்கப்பட, 29 கட்டுரைகளுடன் ஞானம்தரும் புத்தகம்! அரசியல், மக்களின் மனநிலை என்று எதையும் தாக்கவோ புகழவோ செய்யாமல், காலவோட்டத்தில் பெரும்பாலும் நமக்குப் பரிட்சயமற்றுப் போன விசயங்களைப் பற்றி எழுதியிருப்பது அருமை. புத்தகத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட ஒரு கட்டுரையும் உண்டு.

நயாபைசான்னா என்னா? 'செப்புக்காசு புரயோசனமில்லை' என்று யாராவது சொன்னால், என்ன சொல்லவர்றாங்க? அணா உபயோகம் நடைமுறையில் இல்லாதபோது, 25 பைசாவுக்கும் நாலணாவுக்கும் என்ன சம்மந்தம்? 50 பைசாவுக்கும் எட்டணாவுக்கும் என்ன சம்மந்தம்? அருமையான விளக்கம் இப்புத்தகத்தில் உண்டு.

மகாகவி பணிபுரிந்த - தமிழின் முதல் செய்தித்தாள் 'சுதேசமித்திரன்' என்னவானது? மிகவும் எளிதில் செல்லமுடியாத சபரிமலை ஐயப்பன் கோவில் எப்படிப் பிரபலமடைந்தது? சுதந்திர காலத்தில் மக்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடியிருப்பார்கள்? இதுதான் களம் என்று எதையும் சுருக்கிக் கொள்ளாமல் மொட்டைக்கடுதாசி முதல் ஓலைப்பட்டாசு வரை எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். தெலுங்கு, மராட்டியம், மியன்மார் என்று சில விசயங்களில் சொல்லப்படும் உதாரணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

எந்த வட்டமேசை மாநாட்டிற்கு இந்திய யூனியன் போகவில்லை என்று அதன் சந்ததிகள் மறந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், வட்டமேசை மாநாடு வரை கங்கை நீர் சென்றிருக்கிறது என்றால் ஆச்சரியம்தான். நம்மக்கள் சிலபேர் ஐஸ்கூடவே பிறந்ததுபோல் ஆடம்பரம் செய்து கொண்டிருக்கும் இவ்வெப்பதேசத்தில், ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல் முலம் இந்தியாவிற்கு ஐஸ் எடுத்து வந்திருக்கிறார்கள்! ஆங்கிலம் பேசும் மேல்தரமக்களின் சங்கமாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தைச் சாமானியனின் வீட்டு அடுப்படிவரை கொண்டுவந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட,சுதந்திரத்திற்குப்பின் அவ்வியக்கம் கலைக்கப்பட வேண்டுமெனச் சொல்லியிருக்கிறார்!

அறுபது ஆண்டுகளுக்குள் சுழலும் தமிழ் வருடங்களைத் தனது எழுத்து யுத்திக்குப் பயன்படுத்தியிருப்பது, எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகள்! இந்திய நாடு சந்தித்த கடைசி இரண்டு விய (1946 - 47, 2006 - 7) மற்றும் பார்த்திப (1945-46, 2005-6) வருடங்களை மூன்று கட்டுரைகளில் அலசுகிறார் ஆசிரியர். அடிமை நாட்டின் கடைசி இரண்டு வருடங்கள், சுதந்திர நாட்டில் அறுபது ஆண்டுகளுக்கு பின்!

பம்பாய் கடற்படைக் கலகமும் (Royal Indian Navy mutiny), செங்கோட்டை வழக்கும் (Redfort trial) வரலாற்றுப் பாடப்புத்தங்களில் நமக்குக் கற்பிக்கப்படவில்லை! ஏனென்றுதான் தெரியவில்லை.

கவிதைநயமான அழகியல், கிண்டல், ஏக்கம் என்று எல்லாம் கலந்துவரும் வார்த்தை உபயோகங்களும், நச்சென்று முடிக்கும் உத்தியும் பலவிடங்களில் ஆசிரியர் கையாண்டிருந்தாலும், எனக்குப் பிடித்த ஒரு பத்தி:
"1949 ஆம் வருடம். காந்தியடிகளும் போய்விட்டார். சுதந்திரப் போராட்டம் என்ற கவிதை மட்டத்தில் செயல்பட்ட காங்கிரஸ் இயக்கம், ஆளுங்கட்சி என்கிற வசன மட்டத்துக்கு இறங்கிவிட்டது. பல்லாண்டு போராடிப் பெற்ற சுதந்திரம் என்ற கள்ளைக் குடித்து, ஆடியும் பள்ளுப் பாட்டியும் களித்த மக்களின் கவனம் வேறு திசைகளில் திரும்ப ஆரம்பித்தது. 1939ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்படும்வரை கொடிகட்டிப் பறந்த காந்தீயப்படம் 'தியாக பூமி' மறுபடி பிரிண்ட் போட்டு திரையிடப்பட்டும் ஓடவில்லை. சி.என்.அண்ணாதுரையின் 'வேலைக்காரி' பிரமாதமாக ஓடியது".

ஜீவநதி என்று சொன்ன மனிதர்களாலேயே, கண்முன்னால் கொல்லப்பட்டு, தண்ணீரில்லாமல் நின்றுகொண்டிருக்கும் அமராவதி ஆற்றின் சோகம் தாங்கிய இன்னொரு தாராபுரத்துக்காரருடன் விரைவில் சந்திக்கிறேன்.

அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1. 'அனுபந்தம்' என்ற வார்த்தை 'பின்னுரை' என்ற அர்த்தத்தில் அக்காலத்தில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தில் படித்தேன்.

2. 21 குண்டுகளின் இராணுவ மரியாதை வழக்கத்தின் காரணம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிராவிடில், 21 gun salute பற்றி படித்துப் பாருங்கள். எனது கல்லூரிப் பருவத்தில் ஒரு வினாடி - வினா நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட மிகப்பிரபலமான கேள்வி இது.

3. 'தெரியாது ராமசாமி' பள்ளிக்கூடத்தில் பாஸானது போல்தான் இந்தியாவும் சுதந்திரம் என்ற தேர்ச்சி பெற்றிருக்கிறது. கவிஞர் நந்தலாலா சொல்லி சிறுவயதில் கேட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது. 'தெரியாது ராமசாமி' கதையை எழுத்தில் சொன்னால் சற்றுத் தொங்கல் போல் இருக்கும். உங்களின் தேடுதலுக்கு விட்டுவிடுகிறேன்.

4. ஐஸ் என்ற ஒரு பொருள் அக்காலத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த வேளையில், யாருக்குமே அப்போது ஐஸ் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஜில்லுன்னு இருக்கும் என்றுமட்டும்தான் தெரியுமாம். வீரமாமுனிவர் கட்டிய நாநூறாண்டுகள் பழமையான ஒரு தேவாலயம் திருச்சி அருகே ஆவூரில் உள்ளது. தமிழ்க் கிறிஸ்தவர்களின் பெரிய தேர் இவ்வூரில்தான் இருக்கிறது; திருவாரூருக்கு அடுத்த மிகப்பெரிய தேர். அவ்வூர் திருவிழாவில்(ஈஸ்டருக்கு மறுவாரம்)ஐஸ் விற்கப்படுவதாகச் சுற்றுவட்டாரம் எல்லாம் செய்திபரவ, திருவிழாவிற்குச் சென்ற ஒரு தாத்தாவிடம் பேரக்குழந்தைகள் ஐஸ் வாங்கிவரச் சொல்லியிருக்கிறார்கள். தாத்தாவும் ஐஸ் வாங்கி சுருக்குப்பையில் வைத்துவிட்டு, திருவிழா முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்......ஆவூர் விரும்பிகள் எல்லாராலும் ஒருகாலத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காமெடி இது. அந்த தாத்தா இன்று இல்லை; ஏதோ ஒரு காது இக்கதையை இவ்வருடமும் கேட்கும் என்பது நிச்சயம்! சிரிப்பதற்கு முன்னமே SMS / email காமெடிகளை அனிச்சையாய்ப் பார்வர்ட் செய்யும் காலத்தில், பேச்சுக்கலை மெல்லவினிசாகும்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Friday, February 12, 2010

57. மோகமுள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

அவனவனுக்குச் சந்தோசமெல்லாம் அவனோட பழைய காதலியப் பாக்காத வரைக்குந்தான்.
- அழகி

All countries and cultures have struggled to define the line where freedom ends and licence begins. Standards of decency, respect for others and self-restraint vary from one country to another, and from one period to another.
- Javier Perez de Cuellar (Fifth Secretary General of the United Nations)


-----------------------------------------------------
புத்தகம் : மோகமுள் (புதினம்)
ஆசிரியர் : தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன்
வெளியீடு : ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி
விலை : 300 ரூபாய்
பக்கங்கள் : 686 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------------

வயிற்றில் இருக்கும் கருவின் பாலினம் சொல்வதும், சில உன்னத படைப்புகளின் கருவைச் சொல்வதும் சமகுற்றங்கள் என நினைப்பவன் நான். கருவழிப்பு இல்லாத எனது கருத்துகள் இப்பதிவு! 45 மாதங்களில் என் வயதுக்கும் அதிகமான புத்தகங்களை இங்கே பதிவிட்டிருந்தாலும், ஒரு தமிழ்ப்புதினம் பற்றிய எனது முதல் பதிவு.

மோகமுள். இரண்டாண்டுகளுக்கு முன் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'கதாவிலாசம்' தான், எனக்கு இப்புத்தகத்தின் விலாசம் சொன்னதென்று நினைக்கிறேன். வானுக்கும் பூமிக்கும் இடையே நிற்கும் புழுதியுடன் ஆரம்பித்து, வானுக்கும் பூமிக்கும் இடையே நகரும் மரங்களுடன் கதை முடிகிறது. கும்பகோணம், தஞ்சாவூர், பாபநாசம், காஞ்சிபுரம், சென்னை என்ற ஊர்களினுடே கதை பயணிக்கிறது. போர்கள், காந்தி, விலைவாசி, சர்க்கார் என கதையின் கால கட்டம் எல்லா இடங்களிலும் மறைமுகமாகச் சொல்லப்பட்டது அருமை. காவிரியில் தண்ணீர் ஓடிய காலம்; அத்தண்ணீரில் ஓடம் ஓடிய காலம்!

வில், நூல், ரோஜா, சங்கு, வாழைத்தண்டு, தம்பூரா என்று பெண்ணின் அங்கங்களைக் கூறுபோட்டு, மார்புக்கு நடுவில் மனதைத் தேடச்சொல்லித்தரும் மகாகாவியங்களுக்கு நடுவே, எங்குமே விரசம் விதைக்கப்படாத ஒரு புத்தகம். புத்தகத்தின் பெயரை வைத்து, இதையெல்லாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். பெண்ணைத் தெய்வநிலையில் பார்க்கும் மூன்று கதாபாத்திரங்களும், கடைசிவரை அந்நிலையைத் தொடர்ந்திருக்கும் இப்புதினமும் அருமை. கத்திபோன்ற கதையை யாரையும் குத்தாமல் அதன் மேல் நடந்துகொண்டே சொல்லியிருக்கும் கதையாடல்.

'எல்லாம் இதற்குத்தானா?' இப்புத்தகத்தின் கதையோட்டத்தில் சுருக்கென்று குத்தும் ஒரு வசனம் இது. தமிழ்ப்படங்கள் சிலவற்றில் இதே வசனத்தைச் சில சோகக்காட்சிகளில் கேட்டதாக ஞாபகம். இதே வசனத்தை, இப்புத்தகத்தில் வருவதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் உபயோகித்திருந்த ஒரு பிரபலமான சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் படித்தேன். திரும்பவும் அச்சிறுகதையைப் படிக்க வேண்டும். சொற்பமான கதைமாந்தர்களைத் தவிர வேறு எவருக்கும் ழகரம் உச்சரிக்கத் தெரியாதபோல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதே நடையையும் சமீபத்திய சில புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்.

வித்தியாசமான பின்புலமுடைய சில கதைமாந்தர்களும் உண்டு. சிவாஜியின் தம்பி ஏகோஜி தஞ்சையை ஆண்டபோது, அவருடன் குடியேறி தமிழ்மண்ணில் வாழ்ந்துவரும் மராட்டியக் குடும்பம் ஒன்றுதான் இப்புத்தகத்தின் ஆணிவேர்.அக்காலத்தில் வழக்கில் இருந்த வார்த்தை உபயோகங்களும் எனக்குப் புதிதுதான். உதாரணமாக, உலுப்பை என்ற வார்த்தை. 'யாருக்கும் தெரியாமல் திடீரென்று பெண்ணின் அழகை எடைபோட ஒரு கூட்டம்' ‍- பெண் பார்க்கப் போகிறவர்களைக் கிண்டல் செய்யும் இது போன்ற வாக்கியங்கள் ஏராளம்.

ஆசிரியர் உபயோகப்படுத்தியிருக்கும் உவமைகள் குறிப்பிட்டுச் சொல்லுபடி நிறையவே இருக்கின்றன. கிட்டத்தட்ட பத்து உவமைகளைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நீங்களும் பதம் பார்க்க இதோ மூன்று சோறுகள்! 'யாரும் கீழ்ப்படியாத சர்க்கார் உத்தரவு' - இது ஒருதலைக்காதலுக்கான உவமை. புத்தகம் படிக்கும்போது இவ்வுவமை சொல்லப்பட்ட கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்; இலைமறை காய்! 'ஜீவனாம்சம் கேட்கிற வாழாவெட்டி' - பரம்பரை சொத்தைக் குத்தகைக்குவிட்டு உழைக்காமல் திரியும் ஒரு சோம்பேறிக்கான உவமையிது. நீரின் பீச்சல்களுக்கும் நடுவில் எண்ணெய்க் கம்பத்தில் ஏறுகிறவன், கட்டுப்படுத்த முடியாத மனத்திற்கான உவமை.

கமலஹாசன் சொல்வதுபோல், கலிலியோவின் உலகைச் சதுரமாக்கிப் போகும் ஒரு பெண்ணின் ஜன்னல் வழிப்பார்வை! சேரன் சொல்வதுபோல், உணர்வுகளை ஒத்திப்போட்டு பகுத்தறிந்து வீரியம் குறைக்கும் கடிதங்கள்! சமூகம் அங்கீகரிக்காத மனைவி-அவளின் வாரிசை, அங்கீகரிக்கப்பட்ட மனைவியை-அவளின் வாரிசுகள் நிராகரிக்கும் எதார்த்தம்! சமூகம் எதிர்க்கும் ஓர் உறவை நாடும் புதுமை! எல்லாம் உண்டு.

சுடுகாட்டுக் கொட்டகையின் தூணில் போட்டிருக்கும் கோடுகளை, பாபு என்ற கதாபாத்திரத்தின் மனநிலையில் ஆச்சரியமாகப் பார்க்கச் செய்வதும், எரியும் உடல் முழுதும் சாம்பலாகும் வரை பாபுவோடு நம்மையும் உட்கார்ந்திருக்க வைப்பதும் ஆசிரியரின் திறமை. ஒரே பக்கத்தில் வரும் இந்நிகழ்ச்சியில், ஒரே ஒரு வரியில் மட்டும் பாபுவுக்கும் வெட்டியானுக்கும் இடையே வந்து போகும் சிவபெருமான், அட்டகாசமான எழுத்துநடை.

தன்மையும் படர்க்கையும் கதைசொல்லும் இப்புத்தகத்தில் நான் ரசித்த ஒருபகுதி உங்கள் பார்வைக்கும்:

"இவளும் மனித அனுபவங்களைப் பெற வேண்டியவள் தானே? சாப்பிடுகிறாள். சோற்றையும் பண்டங்களையும் பல்லால் கடித்து மென்றுதானே தின்கிறாள். இவளுக்கும் குளியல், சோப்பு, அங்கங்களை மறைத்துக் கொள்ள ஒரு புடவை, ரவிக்கை எல்லாம் வேண்டித்தானிருக்கின்றன.
இவளும் ஒரு கணத்தில், ஒளி மங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும்? தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள் - ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத் தானே வேண்டும்!".


தூணில் சாய்ந்த‌படியே கண்ணைமூடிக்கொண்டிருக்கும் யமுனா மறக்கப்பட முடியாதவள், வைரமுத்துவின் தமிழ்ரோஜாவிற்கு அடுத்ததாக என்னைக் கவர்ந்தவள் தி.ஜானகிராமனின் யமுனா!
ஆசிரியர் பாணியிலேயே சொல்வதென்றால், இருக்கும் இடத்திலேயே ஓடும் அனுபவத்தைத் தரும் ஓர் அருவி இந்த மோகமுள். குறைந்தபட்சம் எட்டி நின்றாவது திவாலைகளில் சுகப்பட்டுப் பாருங்கள்.

கொசுறு:‍‍‍‍‍‍

புத்த‌க‌த்திற்கு அப்பால்,

இப்புதின‌ம் ஞான‌ராஜ‌சேக‌ரன் அவ‌ர்க‌ளால் திரைப்ப‌ட‌மாக்க‌ப் ப‌ட்டிருக்கும் த‌க‌வ‌ல், என‌க்குப் பாதி புத்த‌க‌ம் க‌ட‌ந்த‌ பிற‌குதான் தெரிந்த‌து.


- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/