Monday, January 09, 2012

85. ATLANTIC - A VAST OCEAN OF A MILLION STORIES

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!

Men might as well project a voyage to the Moon, as attempt to employ steam navigation against the stormy North Atlantic Ocean.
- Dionysius Lardner (1838 AD)
------------------------------------------------------------------------------
புத்தகம் : Atlantic - A vast ocean of a Million stories
ஆசிரியர் : Simon Winchester
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Harper Press
முதற்பதிப்பு : 2010
விலை : 399 ரூபாய்
பக்கங்கள் : 498 (தோராயமாக  33 வரிகள் / பக்கம்)

------------------------------------------------------------------------------

நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் விடுமுறை தினங்களில் மாமா வீட்டிற்குச் செல்லும்போது அவர் வைத்திருக்கும் பாக்யா இதழைப் படிக்கும் பழக்கம் இருந்தது. 'மயிர்க் கூச்செரியும் விசயங்கள்' என்று அப்போது வெளிவந்து கொண்டிருந்த தொடர் ஒன்றில்தான் கடல் என்ற பிரம்மாண்டத்தின் அபாயம் புரிந்தது. நினைவில் கொஞ்சம் தங்கியிருக்கிறது அக்கதை. ஏதோவொரு கடலில் காணாமல் போன உல்லாசப் பயணிகள் கப்பல் ஒன்றைத் தேடுவதைப் பற்றியதுதான் அத்தொடர். தன்னந்தனியாக நடுக்கடலில் தத்தளிக்கும் அக்கப்பலைக் கண்டெடுக்கிறார்கள். பயணிகளுடன் சென்ற செல்லப் பிராணிகள் உட்பட யாருமே அதனுள் இல்லை. ஆராய்ச்சிக் குழுக்கள் களத்தில் குதிக்கின்றன.

இராட்சசக் கடல் பாம்புகள் எல்லாரையும் கொன்றிருக்கலாம் - வெறிநாய்க்கடி நோய் (Rabies) தாக்கப்பட்ட செல்லப் பிராணிகள் மூலம் எல்லாருக்கும் நோய் பரவி, கொலைகளும் தற்கொலைகளும் நடந்திருக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். சாப்பாட்டு மேசையில் சிந்தப்படாமல் பாதி உண்ணப்பட்ட நிலையில் இருந்த தட்டுகள், இவ்விரண்டு சந்தேகங்களையும் நிராகரித்தன. 'அப்படியென்றால் இருந்தவர்களைக் கொன்றுவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவி வைக்காமல் போயிருப்பார்கள் கடற்கொள்ளையர்கள்' என்றார் இன்னொருவர். எரிபொருள் ஒருசொட்டுகூட பீப்பாய்களில் மிச்சமில்லை என்பது சாதகமாய் இருந்தாலும், மற்ற பொருளேதும் களவாடப்படவில்லை என்று அதையும் நிராகரிக்கிறார்கள். இப்படியே மர்மாய் நகர்ந்தது அத்தொடர்.

அத்தொடர் அத்தோடு இருக்கட்டும்; நான் தொடரும் என் சொந்தக்கதை சொல்கிறேன். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவில் முதன்முதலில் கடல் பார்த்தபோது, ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் செருப்புக் காலுடன் எம்ஜிஆர் சமாதியில் அடியெடுத்து வைத்து அப்பாவிடம் அடிவாங்கியது. அம்மாவைக் காப்பாற்றியது மாதா இல்லை, இராம‌நாதன் டாக்டர் என்று வேளாங்கன்னி கோயிலுக்குள் போகாமல் கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டது. எனக்குப் பிரியமான வங்கக்கடலை இந்தியப் பெருங்கடலின் சிறுகுழந்தை என்று சொன்னதற்காக, 'தண்ணீர் தேசம்' புத்தகத்தில் வரிக்கு வரி காதலையும் கடலையும் ரசிக்க வைத்த வைரமுத்துவை மனதுக்குள் குழந்தைத்தனமாகத் திட்டியது. அதே வைரமுத்துவின் 'வங்காள விரிகுடா' கவிதையைத் திரும்பத் திரும்ப படிப்பது. மண்வாசனை போல கடல்வாசனை அறிய நடுக்கடல் பயணம் போனது. இந்த நவம்பரில் கோனார்க் - பூரி சாலையில் எல்லாரும் கடல் பார்க்க இடையில் இறங்கியபோது, மடியில் படுத்திருந்த யாரோவொரு கர்ப்பிணிக்காக நான் கடல் தொடாமல் போனது.

கடல் பற்றிய‌ பேச்சு வந்தாலே இப்படித்தான் சம்மந்தமே இல்லாமல், 'மந்திரப் புன்னகை' கதாநாயகன் போல மனதில் தோன்றுவதை எல்லாம் பேசத் தோன்றும். இதுவரை நான்கு கடல்களை மட்டுமே தரிசித்திருக்கும் எனக்குச் சம்மந்தமே இல்லாத இன்னொரு பிரம்மாண்டம் - அட்லாண்டிக். புத்தகத்தைப் பார்த்த உடனேயே நான் வாங்கிவிடவில்லை. விலையும் தடிமனும் உறுத்தின‌. சொத்தைப் பல்லுக்காக சொத்தையா இழப்பது சொத்தைப் பயலேயென்று வாங்கிவிட்டேன். புதினங்களில் கதையே சொல்லாத நான், உங்களுக்கு எளிதில் புரிவதற்காக இப்புத்தகத்தைக் கதையாகச் சொல்கிறேன்.

சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தரைப்பகுதிகள் எல்லாம் சேர்ந்து ஒரே நிலப்பரப்பாகவும் (Pangaea), அதைச் சுற்றி ஒரேயொரு கடற்பரப்பும் (Panthalassa) இருந்திருக்கின்றன\. நிலவோடுகள் நகர்ந்து கண்டங்கள் உருவாக ஆரம்பித்தபின், சுமார் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்ததுதான் அட்லாண்டிக் பெருங்கடல். பாதி ஆயுளைக் கடந்துவிட்டு இன்னும் சுமார் 180 மில்லியன் ஆண்டுகளில் இல்லாமல் போகப்போகும் இப்பெருங்கடல் தின்று செரித்து நின்று சிரித்து சொல்லும் மில்லியன் கதைகள்தான் இப்புத்தகம்.

15ம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டினோபிளை (இஸ்தான்புல்) ஒட்டாமன் பேரரசு கைப்பற்றி, பாதையை அடைத்தவுடன், ஆசியாவுடனான தனது வர்த்தகத்தைத் தொடர புதிய வழிகளைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் அதுவரை நம்பிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் தங்களது மேற்குப்பக்க நீர்ப்பரப்பில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

தனது ஐந்து பயணங்களிலும் தரையிறங்கும் இடங்கள் எல்லாம் இந்தியா என்று பூர்வீக மக்களைக் கொன்று குவித்த‌ கிறிஸ்டோபர் கொலம்பஸ், கரிபியன் பகுதியில் உள்ள ஹிஸ்பேனியோலா (Hispaniola) தீவில் முட்டிக் கொண்டதை நாடு திரும்பியவுடன் பரிதாபமாகச் சொல்கிறார்: "My intention in this navigation was to reach Cathay and the extreme east of Asia, not expecting to find such an obstacle of new land as I found". Cathay என்பது சீனாவிற்கான ஆங்கிலச் சொல். Cathay Pacific விமானம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா போல கொலம்பஸ் கண்டுபிடித்ததும் இன்னொரு பெரிய கண்டம் என்று 16ம் நூற்றாண்டைத் தொடக்கத்திலேயே திகைக்க வைக்கிறார் அமெரிக்கொ வெஸ்புகி. அதற்கு முன் அட்லாண்டிக் என்பது ஒரு தனிக்கடல் என்ற அறிவோ அல்லது அப்படிப்பட்ட‌ சந்தேகமோ இருந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். அந்த நான்காம் கண்டத்திற்குத் தனது பெயரின் பெண்பால் நிகரான‌ அமெரிக்கா என்ற பெயர் தந்த‌ அவர், வாழ்க்கையின் பிற்பகுதியை விபச்சாரத் தரகராகக் கழித்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வழக்கம்போல கண்டுபிடித்த கண்டத்தை வட-தென் என இரு துண்டாக்கி காலனிகளில் போட்டிப்போட்டு காலணி பதித்தன‌ ஐரோப்பிய நாடுகள். ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளாகக் கண்டம் கடத்துவது, புதிய கண்டத்தின் நிறக் கொடுமைகளையும் காலனி ஆதிக்கத்தையும் எதிர்த்து புரட்சிகள் உண்டானதெல்லாம் பெருங்கதைகள். அமெரிக்கா என்ற தனிநாடு வடக்கே தோன்றியவுடன் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்து, இடிதாங்கி மற்றும் இரட்டையாடி மூக்குக்கண்ணாடி (Bifocals) கண்டுபிடித்துப் பிரபலமான பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகிறது. குறிப்பிட்ட ஓர் இங்கிலாந்து நகரத்தில் இருந்து ஓர் அமெரிக்க நகரத்திற்குச் செல்லும் தபால்கள், அதே தொலைவில் இருக்கும் இருவேறு நகரங்களுக்குச் செல்லும் தபால்களைவிட ஒருநாள் தாமதமாகச் செல்வதைக் கவனிக்கிறார். அரசியல் அறிவியல் என்று சகலகலா வல்லவனாக இருந்த அவர், தானே காரணத்தையும் கண்டுபிடிக்கிறார். கடல் நீரோட்டம் (stream) என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது அட்லாண்டிக்.

அட்லாண்டிக் கடலில், மிகச்சரியாக பாதிவழியில், ஒரு பள்ளத்தை நிரப்புவது போல் இருபக்கங்களில் இருந்தும் குறுக்குவாக்கில் நீர்த்திரள் கூடுவதை (Dolphin Rise) மாலுமிகள் கவனிக்கின்றனர். அமெரிக்க நிலவோடுகளை ஆசிய-ஐரோப்பிய-ஆப்பிரிக்க தகடுகளில் இருந்து பிரிக்கும் அந்த இடத்தில், கடலுக்கடியில் உலகின் மிக நீண்ட மலைத்தொடர் (Mid-Atlantic ridge) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டின் பிற்பாதியில். எவெரெஸ்ட்டைப் பசிபிக் கடலுக்குள் மறைத்து வைத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும், வாலிப மனித உடம்பொன்றின் நரம்புகளைக் கயிறாய்த் திரித்து பூமியை ஆறு சுற்றுகளுக்கு மேல் சுற்றலாம் என்றும் சின்ன வயதில் படித்த ஆச்சரியமே இன்னும் குறையவில்லை!

இன்னொரு புறம் பரிணாமம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தனது மாணவர்களை மனிதக் காலடிபடாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார் சார்லஸ் டார்வின். அப்படி அவர்கள் கொண்டுவந்த ஓர் ஆதிவாசி நிர்வாண மனிதனை, இரண்டு வருடங்கள் இலண்டன் நகரில் பழக்கி, நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, கோட்டு சூட்டெல்லாம் போட்டு, திரும்பவும் அவனை அவனது பூர்வீகத் தீவிலேயே இறக்கி விடுகிறார். அவன் காட்டிய எதிர்வினைதான், ஆதாம் ஏவாள் என்று மனிதயினம் படைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவரை நாத்திகம் சொல்ல வைத்தது.

இதுவரை 150 பக்கக் கதை சொல்லி இருக்கிறேன். அட்லாண்டிக் கடலை ஓவியம், இலக்கியம் என்று கலைகள் எவ்வாறு அழகுபடுத்திக் காட்டின எனபதுதான் அடுத்த 50 பக்கங்கள். பெருங்காற்று (Tempest) எழுதின வில்லியம் ஷேக்ஸ்பியர் முதல், 2012ல் மிகப்பரவலாகப் பேசப்படப் போகும் மாயா இனமக்கள் வரை பல உதாரணங்கள். அடிமைமுறை, கடல் வணிகம், கள்ளக்கடத்தல், கடற்போர்கள், கடற்கொள்ளை, பிடிபட்டவர்கள் மேல் செய்யப்படும் வதைகள், கடல் விபத்துகள், கடல் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் தோற்றம் மற்றும் ஒப்பந்தங்கள் என்று படங்களுடன் பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள்.

இப்போதுதான் புத்தகத்திலேயே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய பகுதிக்கு வந்திருக்கிறேன். 1760ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ் இறந்த செய்தி, அவரின் அமெரிக்கக் காலனியை அடைய 6 வாரங்கள் ஆனது. ஆபிரகாம் லிங்கன் 1865ல் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைய, இலண்டன் மக்களுக்குப் 12 நாட்கள் தேவைப்பட்டன. அப்போது பிரபலமாகி வந்த சாமுவேல் மோர்ஸின் (Samuel Morse) தந்திமுறை மூலம், இந்த இருபெரும் நிலப்பரப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மனிதன் என்ன செய்தான் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் தேடுதலுக்கு விட்டுவிடுகிறேன். அதை ஒருமுறை டிஸ்கவரி சேனலில் விளக்கியதாக என் நண்பன் ஒருவன் சொன்னான்.

முதல் தந்திவழித் தொடர்பு வெற்றி பெற்றவுடன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி: "...the Atlantic is dried up and we become in reality as well as in wish... one country...". 15 நாட்களே நீடித்த அச்சந்தோசத்தின் முடிவில், தந்தி செயலிழக்கிறது; கடல் வெல்கிறது; மீண்டும் இருவேறு கண்டங்கள். இயற்கையை வெல்ல முடியாதென மனிதன் உணர்கிறான். (நதிநீர் இணைப்பு ஆதரவாளர்கள் கவனிக்க) தேவையும் ஆசையும் மனிதனை விடவில்லை. அடுத்த தந்திக் கம்பியை 4 வாரங்களுக்குப் பின் புதைத்தான். 1900ல் 15 தந்திக் கம்பிகள் அட்லாண்டிக் கடலினூடே ஓடின. இக்காலத்தில் கம்பியில்லாத் தொடர்பு மூலம் வானொலி கண்டுபிடித்த குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) அறிமுகமாவதும், இரு கண்டங்களுக்கு இடையே ஆன்டெனாக்களை வைத்து அவர் நடத்தும் சோதனைகளும், வெற்றி பெற்றபின் அவருக்கு வரும் மிரட்டல்களும், ஆல்வா தாமஸ் எடிசன் தோள் கொடுப்பதும்... இரண்டே தாள்கள் தான். அருமை. அதன்பிறகு விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களும் வருகிறார்கள். எல்லா அறிவியல் சோதனைகளுக்குப் பின்னும் அட்லாண்டிக் எளிதில் தாண்ட முடியா பெரும் சோதனையாகவே இருந்திருக்கிறது.

ஒரு காலத்தில் எவெரெஸ்ட்டை அண்ணாந்து பார்த்து பிரமித்த மனிதன், ஏறி முடித்த பின் கெட்ட வார்த்தையில் திட்டியது மட்டுமில்லாமல், அடியைக் குப்பைக் கூடமாகவும், வழியைப் பிணக் கூடமாகவும், உச்சியைப் பல‌ தேசக் கொடிக‌ள் கட்டும் கொட்டகையாகவும் தான் மாற்றியிருக்கிறான். அதே நிலைமைதான், உலகின் தட்பவெப்பத்தில் பெரும்பங்கு வகிக்கும் அட்லாண்டிக் பெருங்கட‌லுக்கும் என பேசுகின்றன மிச்சமுள்ள கட்டுரைகள். டைட்டானிக், லூசிடானியா (Lusitania), பெர்முடா முக்கோணம் (Bermuda triangle) போன்றவை அதிகம் விவாதிக்கப்பட்டு பரிச்சயமான‌ விசய‌ங்கள் என்பதால் இப்பதிவின் நீளம் கருதி விட்டுவிடுகிறேன். பனாமா கால்வாய் வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். இப்படியே கடல் பற்றி மனதில் தோன்றுவதை எல்லாம், முதிர‌னுபவமுள்ள ஒரு கடல் மாலுமிக்குக் கடல் தரும் பிரமிப்பு போல சலித்துப் போகும்வரை, பேசிக்கொண்டே இருக்க ஆசைதான்!

அட்லாண்டிக் பற்றி சில தகவல்கள்:
1. அமேசான் என்ற ஓர் ஆறு மட்டும் அட்லாண்டிக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரும் மண‌லும் சகதியும், உலகின் அடுத்த எட்டு பெரும் ஆறுகள் தத்தம் கடல்களில் சேர்ப்பதைவிட அதிகம்.
2. அட்லாண்டிக் கடலடியில் கிடக்கும் தெரிந்த‌ பிணங்களின் தோராய எண்ணிக்கை 60,000.
3. வருடத்திற்கு 4,00,000 வர்த்தக விமானங்கள் அட்லாண்டிக் தாண்டுகின்றன.
4. பெருங்கடல்களிலேயே அதிக பனிக்கட்டி கொண்டிருப்பது அட்லாண்டிக். எனவே உலக வெப்பமயமாதலில் முதலில் கவனிக்கப்பட வேண்டியதும் பாதிக்கப்படப் போவதும் அதுதான்.
5. பெரும்பாலும் அட்லாண்டிக்கின் நிறம் சாம்பல்; பசிபிக்கும் இந்தியப் பெருங்கடலும் நீலம்.
6. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடி எது? நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்றால் தவறு. அகுல்ஹஸ் முனை (Cape Agulhas). உலக வரைபடத்தில் அவ்விடத்தில் அகலவாக்கில் ஒரு கோடுபோட்டு, அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் போகக் கூடாது இவனும் வரமாட்டான் என்று அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிடம் சொல்கிறது IHO (International Hydrographic Organization). இந்தியாவின் தென்முனை எதுன்னா, டக்குன்னு குமரி என்று சொல்லிவிடாதீர்கள்; அது தீபகற்ப இந்தியாவின் தென்முனை மட்டுமே. இந்திரா முனை என்று ஒன்று தீவாக இருக்கிறது!
7. அமலாவைக் கண்டுபிடித்தது டி.ராஜேந்தர். அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்? கிறிஸ்டோபர் கொலம்பஸின் கைக்கெட்டியது ஆனால் கால் படவில்லை; அமெரிக்கொ வெஸ்புகியின் வாய்க்கெட்டியது. அவர்களுக்கெல்லாம் 500 வருடங்களுக்கு முன், சரியாக 1001ம் ஆண்டு, கால்பதித்தவர் Leif Ericson. வரலாற்றில் மறைக்கப்படும் பல‌ மனிதர்களில் இவரும் ஒருவர்.
8. இப்பதிவின் ஆரம்பத்தில் பாக்யாவில் படித்ததாக நான் சொன்ன கப்பல் Mary celesteஆக இருக்கலாம்.

நீங்களே படித்துக் கொள்ள அட்லாண்டிக் சுற்றி சில விசயங்கள்:
1. பசிபிக் கடக்கும் சிரமம் இல்லாமல் மனிதயினத்தை ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் பரவ வைத்த பேரிங் நீரிணை (Bering strait).
2. Cape Bojador - நெருங்கும் கப்பல்களைக் கடலுக்குள் இழுத்துப்போய் 600 மைலுக்கு அப்பால்விடும் கடல்நீரோட்டம் உள்ள இடம். சகாரா பாலைவனத்து மணலை அட்லாண்டிக் தாண்டி பிரேசிலில் தூவி சோயாபீன்ஸ் மகசூலை ஓகோவெனவாக்கும் காற்று வீசுமிடம்.
3. Tristan da Cunha - தென்னாப்பிரிக்காவில் இருந்து 1800 மைல்கள் தொலைவில் உள்ள தீவு; மக்கள் வசிக்கும், உலகின் மிகத் தனிமையான தீவு.

கடல் சம்மந்தப்பட்ட சில கேள்விகள் உங்களின் வீட்டுப்பாடத்திற்கு:
1. வளைகுடா - Gulf, விரிகுடா - Bay, கடல் - Sea, பெருங்கடல் - Ocean. என்ன வித்தியாசம்? (நீங்கள் யோசிக்கும் போது மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா, அரபிக்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் போன்றவற்றை நினைத்துக் கொள்ளுங்கள்)
2. புயல் என்ற வார்த்தையை ஆங்கில ஊடக‌ங்களில் Hurricane, Cyclone, Typhoon என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். என்ன வித்தியாசம்? (கற்றதும் பெற்றதும் அல்லது ஏன் எதற்கு எப்படி, புத்தகத்தில் சுஜாதா சார் பதில் சொன்னதாக ஞாபகம்)
3. ஸ்ரீ ஹரிகோட்டா மாதிரி ராக்கெட் ஏவுதளங்கள் இந்தியாவில் வங்கக் கடற்கரையில் மட்டுமே அமைந்துள்ளன. அரபிக்கடலுக்கு ஏன் ஓர வஞ்சனை? (The Hinduவில் 7 ஆண்டுகளுக்கு முன் படித்தது)

அட்லாண்டிக் பற்றிய அறிவு, உலகைப் பற்றிய அறிவு என்கிறது புத்தகத்தின் ஒருவரி. 33% பூமியையும் 46% நீரையும் வைத்துக் கொண்டு நிலவுக்கே நிலம் கொடுத்த பசிபிக் பெருங்கடல் இருக்கும்போது, 20% பூமியையும் 26% நீரையும் வைத்திருக்கும் அட்லாண்டிக் பற்றி அவ்வரி மிகவுரை போலத் தோன்றியது. புத்தகத்தின் பாதியைக் கடக்கும் முன்னே, அவ்வரிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டேன். புத்தகம் நான் கடந்துவிட்டாலும், அட்லாண்டிக் என்ற S வடிவ பிரம்மாண்டத்தில் நான் இன்னும் தத்தளிப்பது நின்றபாடில்லை.

நாம் உள்ளிழுக்கும் 5 மூச்சுகளில் ஒன்றிற்கான ஆக்ஸிஜன் கடலில் இருந்துதான் கிடைக்கிறது. கடல் கற்போம்; கசடறக் காப்போம்!

அனுபந்தம்:

1. நீங்கள் தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தால், வெறிநாய்க் கடி'நாய்' என்று எழுதி மாட்டி இருக்கிறீர்களா? இல்லை, சும்மா துணைக்கு யாராவது இருக்கீங்களா என்று தெரிந்து கொள்ள கேட்டேன்.

2. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புதினத்தில், 19ம் நூற்றாண்டின் கடைசியில், நல்ல எதிர்காலம் இருப்பதாக கதாநாயகனைத் தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேரச் சொல்கிறார்கள். அவனோடு படுக்கை பகிரும் ஒருத்தி, நல்ல எதிர்காலம் இருப்பதாகத் தட்டச்சு கற்கிறாள். நீராவி இயந்திரத்தில் ஆரம்பித்த நல்ல எதிர்காலம், தந்தி தட்டச்சு என்று தாவிக் கொண்டே இருக்கிறது. அப்புத்தகத்தைப் பற்றியும் இதே தளத்தில் எதிர் காலத்தில் பார்க்கலாம்.

- ஞானசேகர்

(http://jssekar.blogspot.com/)

Thursday, December 29, 2011

84. கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

 பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------------------------------
புத்தகம் : கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
எழுத்து வடிவம் : ஜோதி நரசிம்மன்
விலை : ரூ.115
பக்கங்கள் : 168 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
-----------------------------------------------------------------------------------


சிங்கம் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலைவாணி அவர்களின் கதையை, அடியாள் புத்தகத்தின் ஆசிரியர் ஜோதி நரசிம்மன் எழுத்து வடிவமாக்கி இருப்பதுதான் இப்புத்தகம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும். புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் இருந்து சில வரிகள் உங்களின் வாசிப்பிற்கு:


"இன்றைய சமூகத்தில் பெண் ஒரு நுகர்வு பொருள். ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபடக் காரணம், 'இவளை எந்த விலை கொடுத்தாவது அடைய வேண்டும்' என்கிற ஆணாதிக்க ம‌னோபாவம். பெரும்பாலும் பெண்கள் விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பாலியல் தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒன்றில் ஏமாந்து அல்லது ஏமாற்றப்பட்டுதான் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

விபச்சாரத்தில் வயிற்றுப்பசி உடல்பசி என்று இரண்டு வகைகள் உள்ளன. வயிற்றுப்பசிக்காக இந்தத் தொழிலில் தள்ளப்படுகிறவர்கள்தான் வெளியில் தெரிகிறார்கள். உடல்பசிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் கௌரவமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்."

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Wednesday, December 28, 2011

83. ONE HUNDRED YEARS OF SOLITUDE

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!

The first in line is tied to a tree and the last is being eaten by ants.

-------------------------------------------------------------------------------------------
புத்தகம் : One Hundred Years of Solitude (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1967
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 422 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
-------------------------------------------------------------------------------------------

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆவலில் நான் தேர்ந்தெடுத்த சில புத்தகங்களில் ஒன்று - நூறாண்டுத் தனிமை. 1982ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்கள்தான் ஆசிரியர். கொலம்பியா என்ற ஒரு நாடே விவிலியத்திற்கு அடுத்தபடியாக இப்புதினத்தைத்தான் அதிகமாகப் படிக்கிறது. 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கள்ளப் பிரதிகளாக ஒரு கோடிக்கும் மேல் விற்றிருக்கும் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன், தனது 'விழித்திருப்ப‌வனின் இரவு' புத்தகத்தில்! கொலம்பியா நாட்டில் ப்யூன்டியா (Buendia) குடும்பத்தின் ஏழு த‌லைமுறைகளின் கதையை 20 அத்தியாயங்களில் சொல்கிறது இப்புதினம். இரண்டாம் அத்தியாயத்தின் கதை கொஞ்சம் சொல்கிறேன். இல்லையேல் நான் சொல்லப் போவது எதுவுமே புரியாது.


அந்த இரண்டு மனித இனங்களுக்குள் மண‌ம் முடித்தால் பன்றி வாலுடன் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையையும் மீறி தன் காதலியைக் கைப்பிடிக்கிறான் கதாநாயகன். அதே நம்பிக்கையைப் பல கடந்தகால உதாரணங்களுடன் உறுதிப்படுத்தி, கதாநாயகியைப் பயமுறுத்தி, கசாமுசா எதுவும் நடந்துவிடாமல் இருக்க, பாய்மரத்துணியில் தோல்நாருடன் ஒரு பெட்டி செய்து, இரும்பால் பூட்டி, தினமும் படுக்கைக்கு அனுப்புகிறாள் கதாநாயகியின் தாய். பகல்வேளைகளில் சேவற்சண்டையில் கதாநாயகனும் கூடைபின்னி கதாநாயகியும், இரவு வேளைகளில் வாய்ச்சண்டையிலும் ஒரு வருடத்தை ஓட்டிவிடுகிறார்கள்.

இன்னமும் கதைநாயகி கன்னியாகவே இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், ஊர்வாய் கதாநாயகனின் ஆண்மையைக் கிசுகிசுக்கிறது. கதாநாயகனிடம் சேவற்சண்டையில் தோற்றுப்போன ஒருவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், கதாநாயகனின் சேவலைக் குழந்தைவரம் கொடுக்க கதாநாயகியிடம் அனுப்பச் சொல்கிறான். கடுப்பான கதாநாயகனின் ஈட்டி அவன் தொண்டை கிழிக்கிறது. செத்தும் கெடுத்த கதையாய் அவன் கதாநாயகிக்குப் பிரம்மையாக அடிக்கடி தோன்றி, தொண்டைக் காயத்தைப் புல்லால் அடைப்பது போல் பாசாங்கு செய்கிறான். பிடுங்கல் தாங்கமாட்டாத‌ கதாநாயகன் இன்னும் சிலருடன் சேர்ந்து, கண்காணாத தேசத்திற்குச் செல்லும் நோக்கில் ஆண்டிஸ் மலைகளைத் தாண்டி கடல் தேடித்தேடி 26 மாதங்கள் கழித்து ஒரு சதுப்புநிலத்தில் மகன்டோ (Macondo) என்ற நகரத்தை உருவாக்குகிறான். 300 பேர்களுடன் ஆரம்பமாகும் அச்சிற்றூர் 30 ஆண்டுகளாகியும் இறப்பென்பது இல்லாமல் கல்லறைகூட இல்லாமல் வெளியுலகத் தொடர்பில்லாமல் மர்மமாக‌ வாழ்ந்து வருகிறது. அதன் கதையை, அக்குடும்பத்தின் அடுத்த அறுதலைமுறைக் கதையைக் கொஞ்சம் கொலம்பிய உள்நாட்டுப் புரட்சி சேர்த்து சொல்வதுதான் இப்புதினம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மட்டும் அவ்வூருக்கு வந்துபோகும், ஜிப்ஸி (Gypsy) என்ற வித்தைக்காரர்கள்தான் அவ்வூர் வைத்திருக்கும் ஒரே வெளியுலகத் தொடர்பு. மகன்டோ நகரத்தையும் அதன் மனிதர்களையும் ஜிப்ஸிகளையும் மாயமாகவே சித்தரிக்கிறார் ஆசிரியர். வெளியுலகத் தொடர்பற்று இருக்கும் அந்நகரின் மக்கள் மிகவும் புதிராகவே பின்னப்படுகிறார்கள். தூங்கினால் நினைவுகள் அழிந்துவிடுமென நம்பி நாட்கணக்கில் தூங்காமல் தவிப்பது முதல், உள்நாட்டுப் புரட்சி, பிரளயம், சூறைக்காற்று என்று பல்வேறு இன்னல்களைத் தன்னந்தனியே எதிர்கொள்கிறது அவ்வூர். அஃறிணைப் பொருட்களையும் உயிர்கொண்டு நகரவைக்கும் எட்டாவது உலக அதிசயமென்று காந்தத்தை அறிமுகப்படுத்துவது முதல் பனிக்கட்டி, மின்சாரம், சினிமா, இரயில்வண்டி என்று வெளியுலகக் கண்டுபிடிப்புகளை ஒவ்வொன்றாக ஜிப்ஸிகள்தான் மகன்டோ நகரத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.‌ ஜிப்ஸிகளிடம் ஈர்ப்பு கொண்ட ஒரே ஜீவனாக வலம்வரும் கதாநாயகன் சொந்தமாக ஆய்வுக்கூடமெல்லாம் அமைக்கிறான். ஆரஞ்சு பழத்தைப் போல பூமியும் உருண்டையானதென கதாநாயகன் கண்டுபிடிக்கும் நாளில், ஜிப்ஸிகளுடன் சேர்ந்தால் இப்படித்தான் பைத்தியம் மாதிரி பேசத்தோன்றுமென நகைக்கிறாள் கதாநாயகி.

நீண்ட வரலாறுடைய குடும்பம் என்பதால் முன்னோர்களின் பெயர்களையே வாரிசுகளுக்கும் வைத்துவிடுவதால் பல பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சுமை வாசகனுக்கு இல்லை. ஒத்த பெயர் உடையவர்கள் ஒரே மாதிரியான குணம் கொண்டிருப்பதைப் புத்தகம் முடித்தவுடன்தான் கவனித்தேன். புரட்சிக்காரர்களின் படுக்கைக்குத் தன் கன்னிமகள்களை அனுப்புவதைத் தேசபக்தியாகக் கருதிய காலத்தில், ஒருவன் 17 பெண்கள் மூலம் 17 ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். 17 பெயருக்கும் ஒரே பெயராக அப்பனின் பெயர். வித்தியாசம் காண தாயின் பெயரையும் கடைசியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதுபோல பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டிய முறையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர்; ரசிக்கவும் வைக்கிறார்.

காலம் ஒரே வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி, ஒரு தலைமுறை செய்த தவறுகளை இன்னொரு தலைமுறையையும் செய்ய வைக்கிறது; ஒன்று செய்யாமல் விட்டதை இன்னொன்றையும் செய்யவிடாமல் செய்து விடுகிறது; ஒன்று செய்ய முடிந்ததை இன்னொன்றால் செய்ய முடியாமல் செய்கிறது. ஜிப்ஸிகளின் மூலம் தன்னிறைவு பெற்ற ஊரை ஒருகால கட்டத்தில் அவர்கள் கைவிடுகிறார்கள். போப்பாக, அரசியாக, புதையலைக்கவர என புதினம் முழுவதும் பற்பல ஆசைகளைச் சுமக்கிறார்கள். 65 முறைகள் ஒருவன் உலகைச் சுற்றி வருகிறான். வீட்டுச் சுவர்களைப் பணத்தால் மறைக்கிறான் ஒருவன். கண்ணுக்குத் தெரியாத மருத்துவர்களுடன் பேசி சிகிச்சை பெறுகிறாள் ஒருத்தி. உலகப் புத்தகங்களை எல்லாம், படிப்பதற்கு அல்லாமல், தனது அறிவைச் சரிபார்த்துக் கொள்ள உபயோகிக்கிறான் ஒருவன். சொந்தக் குடும்பத்திற்குள்ளே கூடாக்க‌ல‌வியில் சிலர். ஊருக்கே தெரிந்த 7214 தங்கக்காசுகள் குடும்பப் புதையலின் மறைவிடத்தை வாரிசுகளுக்குச் சொல்ல மறுக்கிறார்கள். மர்மங்கள் நிறைந்த‌ த‌ன‌து சொந்த‌ ஊரின் வர‌லாற்றையே ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள். எந்த‌க் க‌தாப்பாத்திர‌த்திற்கும் உண்மை அன்பே இல்லாம‌ல் போவ‌து அந்ந‌க‌ரின் சாப‌மாகிப் போகிற‌து.

கொலம்பியாவின் உள்நாட்டு அரசியலையும் புரட்சியையும் பற்றிப் புத்தகம் மேலோட்டமாகச் சொல்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தபின் மலை மற்றும் கடல்வாழ் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தனியார் தொழில்மயம் என்ற பெயரில் பறித்துக் கொள்ளும் நாம் கண்ட அரசுகள் போல், ஸ்பெயினிடமிருந்து விடுதலை கிடைத்தபின் வீடுகளுக்கு எல்லாம் நீலநிற வண்ணம் பூசச் சொல்கிறது சுதந்திர அரசு. வெள்ளைநிற வண்ணத்தை நீக்க மறுக்கும் கதாநாயகனின் முதல் எதிர்ப்பு தான் மகன்டோ நகரத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது. நம்நாட்டு ஜாலியன் வாலா பாக் போல, 3408 பேரைத் துச்சமாகச் சுட்டுக் கொன்று 200 தொடர்வண்டிகளில் பிணங்களைக் கடல்பக்கம் கொண்டுபோன கொடூரங்களையும் புதினம் பதிவுசெய்கிறது.

சுதந்திரக் கொலம்பியா பற்றி ஆசிரியர் சொல்லும் பின்வரும் வரிகளை மிகவும் ரசித்தேன்: The only difference today between Liberals and Conservatives is that the Liberals go to mass at five o' clock and the Conservatives at eight.

இப்புதினம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படும் ஒரு விசயம் - மாய எதார்த்தம் (Magical Realism); மாய நிகழ்வுகளை உண்மை நிகழ்வுகளுடன் கைகோர்த்து நடக்கவிடும் கதையாடல். உதாரணமாக, ஜிப்ஸிகளில் ஒருவன் சிங்கப்பூரில் இறந்த பின்னும் கூட மகன்டோ நகரத்தில் சிலருக்கு மட்டும் தோன்றுகிறான்; உயிருடனேயே ஒருத்தி வானத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறாள்; 4 வருடங்கள் 11 மாதங்கள் 2 நாட்கள் தொடர்மழை. இவை முறையே இயேசு, மேரிமாதா, நோவா என்று விவிலியத்தில் சாத்தியம் எனும்போது இப்புதினத்திலும் சாத்தியமே. இப்புதினத்தின் ஒரு கதாப்பாத்திரம் கர்ணன் போல பேழையில்தான் தண்ணீரிலேயே மிதந்து வருகிறான். மாய எதார்த்தம் என்ற ஒரு சித்தாந்தம் இருப்பது தெரியாமலேயே Midnight's Children படித்திருக்கிறேன். One Hundred Years of Solitude விட‌ Midnight's Children இல் மாய எதார்த்தம் அதிகம்.

இப்புதினத்தில் தனித்துக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொன்று தனிமை (Solitude) என்ற நிலை. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் கடைசியில் தனிமையை வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அந்நிலைக்குப் போகாதவர்கள் கொடூரமாகவோ அல்லது மர்மமாகவோ மரணிக்கிறார்கள். தனிமை என்ற இந்நிலையே கதாப்பாத்திரங்களின் உச்சக்கட்ட சுயநலத்தைக் காட்டினாலும், தனிமை என்பதே கொலம்பிய பொருளாதாரத்தைச் சொல்லும் ஒரு குறியீடே என்கிறார்கள் சில படித்தவர்கள். ஜிப்ஸிகள் கூட இந்தியர்களுக்கான குறியீடோ என்று என் சிற்றறிவு சந்தேகிக்கிறது. யாராவது படித்தால் கவனித்துச் சொல்லுங்கள்.

இனிவரும் புதினங்களில் நான் ரசித்த சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடிவு செய்திருக்கிறேன்.

பாத்திரம் : நீண்ட நாட்கள் உயிருடன் இருந்து, தலைமுறைகளின் மாற்றத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு, புதையல் ரகசியத்துடனேயே வலம்வரும் கதாநாயகி Ursula Iguaran.
பகுதி : ஐந்தாம் தலைமுறையில் வரும் இரட்டையர்களின் பிறப்பும், குறுநகைதரும் மழலைப் பருவமும், சோகம்தரும் இறப்பும், இவருக்கும் வைப்பாட்டியாக‌ இருப்பவளின் உறவும்.
குறியீடு : நான்காம் தலைமுறையில் வரும் 17 குழந்தைகளின் நெற்றிகளில் ஒரு பாதிரியார்  இட்டுப்போகும் நிரந்தர சிலுவைக்குறி.
வரி : கருணை காட்ட மறுக்கும் காலத்தின் சார‌மாக வரும் புத்தகத்தின் கடைசி இருவரிகள்.

ஒரு சராசரி வாசகனால் உட்கிரகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இப்புதினம் ஒவ்வொரு பக்கத்திலும் உயிரோட்டமுள்ள கதை கொண்டிருப்பதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் கதையின் மெல்லிழை பின்னப்பட்டிருக்கிறது என்பது உண்மையே! நான் மிகக் குறுகிய காலத்தில் படித்து முடித்த ஆங்கிலப் புதினம் இதுதான். எனது விருப்ப ஆங்கிலப் புதினங்களில் மூன்றாவது இடம் தந்துள்ளேன்.

காலம் ஒரு வித்தியாசமான ஆசான்; பரீட்சைக்குப் பின் பாடங்கள் போதிக்கிறது!

அனுபந்தம்:

ஜிப்ஸிகளில் ஒருவன் மரணப்படுக்கையில் முனகும் ஒருபெயர், புதினத்தில் ஒரேயொரு இடத்தில் வந்துபோகும் ஒருபெயர், நான் படித்துக் கொண்டிருந்த‌ இன்னொரு புத்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை. அவர் அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் (Alexander von Humboldt); உயிர்ப் புவியியலின் தந்தை. அட்லாண்டிக் பெருங்கடல் உருவாவதற்கு முன் தென்னமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்ததாக முதலில் சொன்னவர்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)