Friday, April 16, 2010

60. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
- வள்ளுவம்

God save us from a world where the Chinese Pavilion at Disney land is our only remembrance of what China once was, and where the Animal Kingdom of Disney Land is our only remembrance of what the jungle once was, and where the Rain forest Cafe is the only rain forest me or my kids ever see .
- Thomas Loren Friedman (The Lexus and the Olive Tree)


-------------------------------------------------
புத்தகம் : இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2006
விலை : 120 ரூபாய்
பக்கங்கள் : 192 (தோராயமாக 42 வரிகள் / பக்கம்)

--------------------------------------------------



ஆசிரியர் தாராபுரத்துக்காரர். தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களில் ஆசிரியர் எழுதியிருந்த 32 சுற்றுச்சூழியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள், காட்டுயிர்கள் அழிவின் மீதான எச்சரிக்கைகள், இயற்கையின் பேரன்பிலிருக்கும் அறம் குறித்தன மனிதனின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

ஆசிரியரை இரண்டு விசயங்களில் பாராட்டியே ஆக வேண்டும்.

1. பெரும்பாலும் நேரடி அனுபவங்களைத் தொகுத்திருப்பதாலும், ஒத்த சிந்தனை உடையவர்களை மொழி வேறுபாடு பாராமல் அடையாளம் காட்டியிருப்பதாலும், அதிகம் மெனக்கெட்டிருப்பதாலும், புத்தகத்தின் தரம் கொஞ்சம் அதிகம்!

2. புத்தகம் முழுவதும் பரவியிருக்கும் தகவல்களும், வார்த்தை உபயோகங்களும், இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்களில் ஆசிரியர் காட்டியிருக்கும் நிதானமான - ஒழுங்குபடுத்தப்பட்ட கோபமும், நாம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்களும்.

விவேக் மாதிரியே காமெடி பண்றார்னு எம்.ஆர்.ராதா அவர்களைக் காட்டுகிறான் ஒரு தமிழ்ப்பையன். இளவேனில் - முதுவேனில் - கார் - கூதிர் - முன்பனி - பின்பனி என்று பருவங்களைப் பி+படித்திருந்த வம்சத்தில் பிறந்த நாம், மழை வருமா என செய்திவாசிப்பாளரைக் கேட்கிறோம். முடங்களை - கோனரி - கேசரி - சீயம் - வயமா - அரி - மடங்கல் - கண்டீவரம் - ஏறு என பல சொற்களால் வலம்வந்த 'சிங்கம்' என்ற ஒன்றை, தமிழ் - சாமி - கோவில் - அருள் என்ற ஹரியின் வரிசைகளில் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைவிட்டு நீண்ட தூரம் ஓடிப்போய்விட்ட இப்போதைய மனிதனுக்கு இப்படியொரு புத்தகம் கண்டிப்பாகத் தேவைதான்.

புலி (வேங்கை), காட்டெருது, யானை (வேழம்), சிங்கம், காண்டாமிருகம், குறிஞ்சிமலர் எனக் காட்டுயிர்கள் பற்றித் தனித்தனி கட்டுரைகளில் விவாதிக்கிறது புத்தகம். வண்டலூர், பெரியாறு, காசிரங்கா, கிர், பந்திப்பூர், முண்டந்துறை, அடையாறு கழிமுகம் என்று சில இடங்களும் தேவைப்படும் இடங்களில் வந்து போகின்றன. இவற்றிற்கெல்லாம் எப்படி கேடுகாலம் ஆரம்பித்தது எனவும், அவற்றின் அழிவைக் கொண்டாடியவர்கள் பற்றியும், அவற்றைக் காப்பாற்றப் போராடிய + போராடுபவர்களைப் பற்றியும் பேசுகிறது புத்தகம்.

மெட்ராஸ் சமஸ்தானத்தில் இருந்து கொண்டுபோன மரங்களால்தான் வாட்டர்லூ போரில் நெப்போலியனைப் பிரிட்டிஷ் படைகள் வெல்ல முடிந்ததென ராமச்சந்திர குஹா (Ramachandra Guha) சொல்லியிருக்கும் கருத்தும், வேட்டை இலக்கியம் முதல் இரயில்பாதை வரை பிரிட்டிஷ்காரர்கள் தனது காலனியின் காட்டுயிர்களைக் காவு வாங்கிய கதைகளும் அருமையான தொகுப்புகள். புலியையும் யானையையும் கொன்று பாடம் செய்வது பிரிட்டிசையும், பிகரையும் குஷிப்படுத்தும் வீரதீர செயல்களாகக் கருதிய நம்மவர்களும் அதையே கொஞ்சம் மறைமுகமாக இன்னும் தொடர்வதையும் நாம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். மதம், அரசியல், பணம் என்று எல்லாவறையும் போட்டுக் குழப்பிக் கொண்டு நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரம் என எல்லாத் திட்டங்களிலும் சட்டுபுட்டென்று முடிவுகள் எடுக்கப்படுவதால்தான், ஒரு கத்திரிக்காயைக் (Bacillus thuringiensis Brinjal) கூட நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கத்திரிக்காயில் அரசியல் செய்யவிடுகிறோம்.

இதுபோன்ற 'அறியாமை'களைத்தான், இப்போதைக்குச் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் மிகப்பெரிய தடை என்கிறார் ஆசிரியர். பல்லி விழுந்த உணவு நஞ்சு என்பதும், பாம்பின் விசத்திற்கு மருந்தே பாம்புதான் என்று தெரியாமல் பாம்புகளைக் கொல்வதும், மறைந்திருக்கும் மருத்துவக்குணங்கள் தெரியாமலேயே கண்மூடித்தனமாகக் காட்டுயிர்களை மனிதக்கருபோல அழிப்பதும், சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட எந்தவொரு அரசுத்திட்டத்தையும் எதுவும் ஆராயாமல் ஆதரிப்பதும் / எதிர்ப்பதும் போன்ற பல அறியாமைகள். இந்த அறியாமை எல்லா நிலைகளிலும் இருக்கிறது. Listening to Grasshoppers புத்தக முன்னுரையில் நதிநீர் இணைப்பு பற்றி அருந்ததி ராய் அவர்கள் வருத்தப்பட்டு சொல்லும் மேற்கோளும் ஓர் உதாரணம். செய்தித்தாள்கள் அடிக்கடி காட்டும் எறும்புத்தின்னி எனும் விலங்கின் பெயர் அலங்கு என்கிறார் ஆசிரியர். அலங்கு என்ற வார்த்தை தமிழில் எரும்பையுண்ணும் ஓர் ஊர்வனயினத்தைம், ஒரு நாயினத்தையும் குறிக்கிறதாம்.



தி.ஜானகிராமன் அவர்கள் மோகமுள்ளில் சொன்னதுபோல், கேவலம் சோற்றுக்காக நாயை வாலைக் குழைத்து நிற்க வைக்கிறோம். நம்மைவிட அளவிலும் பலத்திலும் ஞாபகசக்தியிலும் பெரிய யானையைவைத்து யாசகம் செய்கிறோம். கள்ளக்காதல் முதல் குழாயடி சண்டைவரை நடக்கும் கொலைகள் சிலவற்றில் நஞ்சு இல்லாத பல்லியின்மேல் பழி சுமத்துகிறோம். ஒன்றைப் பற்றி புரியாத அல்லது தெரியாத பொழுதுதான் பயமே உருவாகிறது; அல்லது நமது குற்றங்களை மறைத்துக் கொள்ள இன்னொன்றைக் குற்றப்படுத்துகிறோம். கமலஹாசன் தெளிவாய்ச் சொல்வார்:
'நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவோர் தூற்றினும்
நச்சதற்குக் கேடயம் போல்
தற்காப்பு ஆயுதமே.
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்'.

இயற்கைக்கு மனிதன் உட்பட ஒவ்வோர் உயிரும் ஓர் அங்கமே எனும் அறிவு வந்தால்தான் பயம் போய் பாதுகாக்க + மதிக்க வேண்டும் என்ற அக்கறை வரும். அவ்வக்கறை பாம்பை அடிப்பதாக நினைக்கும்போது கூட நம்மைத் துரத்திவர வேண்டும்!

புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் மாறுபடும் நியதிக்குட்பட்டு, புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். காட்டுத் தர்பார், நரிபுத்தி, ஆமை புகுந்த வீடு, கொடிய விலங்குகள், வினோத மிருகம் போன்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டு காட்டுயிர்கள் பற்றிய ஆரோக்கியமான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார். ஏற்காடருகே இரு யானைகள் காப்பித் தோட்டத்தருகே வந்ததை, 'யானையின் அட்டகாசம்' என்று ஓர் இதழும் 'வாழிடம் தேடும் யானைகள்' என்று இன்னோர் இதழும் செய்திகள் வெளியிட்டதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். டால்பினுக்கான தமிழ்ச்சொல்லையும், உள்ளினப்பெருக்கம் என்ற தமிழ்ச்சொல்லையும் ஆசிரியர் குறிப்பிட்டபோது புதிய சொற்கள் மேலும் மொழியை மெருகூட்டுவதை உணரமுடிந்தது.

ஒரு குறும்படத்தைப் பார்த்தவர்கள் சிலர், 'யானைகள் பங்கேற்கும் எந்த விழாவிற்கும் செல்லமாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம். அதுபோன்ற ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையும், சுற்றுச்சூழல் பற்றிய பதங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் அமைப்பதும், இயற்கைக்கு எல்லாரும் ஒருநாள் பதில்சொல்ல வேண்டும் என்ற பொறுப்பும் போதும்!

'மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருக்கக் கூடாது; அப்படியொன்று இருக்குமானால் மனிதர்கள் கற்களால் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். தண்ணீர் என்ற பொருளுக்காக அணுவாயுதங்களுடன் கோலாகலமாகக் கொலைக்களங்களை அப்போர் உருவாக்கப் போவதின் தாக்கத்தை, இக்கோடையின் தாகத்தில் நாமெல்லாம் உணரமுடிகிறது. ஒரு சாமானியனுக்கு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போனாலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' புத்தகத்தில் இடம்பெறும் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' என்ற சிறுகதைபோல், தனது வயிற்று வாரிசுகளைத் தூக்கிக்கொண்டு இயற்கையைத் தேடி வீதிவீதியாகத் திரியப்போகும் ஒரு தலைமுறை உருவாகாமல் தடுக்க என்னால் - உங்களால் - எல்லாராலும் முடியும்.

அரசுத் திட்டங்கள், சுற்றுலா, தேனிலவு என்ற பெயரில் இயற்கையை மிகநெருங்கும் திட்டங்களுக்குத் தீர ஆராய்வோம்! கவிதைகள்,புதினங்கள் தவிர இதுபோன்ற சமூக நோக்குள்ள புத்தகங்களையும் நண்பர்களுக்குப் பரிசளிப்போம்! வாங்கும் பொருளின் மூலம் தெரிந்து பல்லுயிர்ப் பாதுகாப்போம்!

பூமி இழந்திடேல்!

அனுபந்தம்:

1. பிராணிநலம் பேணும் பேர்வழி என்று ஒரு கூட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இறைச்சி சாப்பிடும் சமூகத்தினரைப் புறக்கணிக்கும் ஒரு மேல்தட்டு கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. Corporate vegetarians! அப்படியொரு கூட்டம் ஆழிப்பேரலை புனர் சீரமைப்பில், மீனவர்களுக்கு வலைகளைத் தவிர என்ன வேண்டுமாலும் தருவதாகச் சொன்னதாம். வலையில்லாத மீனவன் வாழ வழி? Structural genocide செய்யும் இப்படியொரு கூட்டத்தை நம்பி நம்மில் எத்தனை பேர் பொருள் கொடுத்திருந்தோமோ? கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ?

2. ஏப்ரல் முதல் வாரம் தனுஷ்கோடி சென்றிருந்தேன். சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் நீதிமன்ற உத்தரவுப்படி,சேது சமுத்திரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னார்கள்.

3. கொங்கு நாடுகளில் நானும் சேரலாதனும் சுற்றித்திரிந்த இரண்டு நாட்களில், டாப்ஸ்லிப் என்ற இடத்தின் பெயரைக் கேட்டு, சுகபோக விரும்பிகள் கூடுமிடமென நினைத்து, அவ்விடத்திற்குச் செல்லவில்லை. இப்புத்தகம் படித்த பிறகுதான் அவ்விடத்தின் பெயர்க்காரணமும் பிரிட்டிஷ் வரலாற்றில் பெற்றிருந்த அதிமுக்கிய பங்கும் தெரிந்தது. அழாத குறையாக, போச்சே போச்சே போச்சே என்று சேரலாதனுக்குப் போன் போட்டுக் கதை சொன்னேன். தம்பி அசந்து போனார்! அவ்விடத்திற்குச் சென்ற ஆசிரியர், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அப்பகுதியை அழிக்கப்படாமல் காத்த ஓர் ஆங்கில அதிகாரியின் கல்லறை வாசகத்துடன் இப்புத்தகத்தை முடிக்கிறார்; நானும் அதையே வழிமொழிந்து விடைபெறுகிறேன்.

"நினைவுச் சின்னத்தைக் காண வேண்டுமென்றால் உங்களைச் சுற்றிப் பாருங்கள்".

- ஞானசேகர்
http://jssekar.blogspot.com/

No comments: