Wednesday, April 28, 2010

61. கிருஷ்ணன் வைத்த வீடு

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது
-கவிஞர் சுகுமாரன்


---------------------------------------------------
புத்தகம் : கிருஷ்ணன் வைத்த வீடு
ஆசிரியர் : வண்ணதாசன்
வெளியீடு : புதுமைப்பித்தன் பதிப்பகம்
முதற்பதிப்பு : 2000
விலை : ரூ 75
பக்கங்கள் : 136

---------------------------------------------------

சிறுகதைகள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அடிக்கடி என்னிடம் கூறப்படும் பெயர் 'கிருஷ்ணன் வைத்த வீடு'. இந்தத் தொகுப்பும், குறிப்பாக இதில் இப்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் சிறுகதையும் பெரும்பாலான வாசகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற அளவுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

சென்னையில் பணிபுரிந்த போதும், சென்னை வாழ்க்கையிலிருந்து விலகிய மனநிலையில், அவ்வாழ்க்கையின் மீதான நினைவுகளை மையமாகக் கொண்டும் எழுதிய சிறுகதைகளை இதில் தொகுத்திருப்பதாக வண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். பிழைப்பிட வாழ்வின் சாயல் பெரிதும் படியாமல் வழக்கமான வேறுமாதிரியான வண்ணதாசன் நடையில் அமைந்த சிறுகதைகள் இத்தொகுப்பை நிறைத்திருக்கின்றன.

வெகு இயல்பான நிகழ்வுகள், இரு மனிதர்களுக்கிடையேயான சாதாரண உரையாடல், ஒரு தனிமனிதனின் மனவோட்டம் இவை மட்டுமே ஒரு சிறுகதையாகிவிடும் அற்புதத்தை இவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. வண்ணதாசன் எனும் மாயவித்தைக் காரர் நமக்குத் தெரியாமலேயே நம் நினைவுகளை, அசைவுகளை, பைத்தியக்காரத்தனங்களை, கோபங்களை, அங்க சேட்டைகளை, வினோதமான பழக்கங்களை, சொல்லாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவை கதையாகக் கூடும் சாத்தியம் நிறையவே இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றன இக்கதைகள்.



இக்கதைகளினூடே பயணிக்கும்போது ஏற்படும் அனுபவமும், கடந்த கால நினைவுகளும் இவற்றுக்கும் நமக்குமான ஆழ்ந்த சிநேகத்தை உணர்த்தலாம். அதே அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறுமாதிரியானதாக அமையலாம்.

இத்தொகுப்புக் கதைகள் பெரும்பாலும் 'நான்' சொல்லும் கதைகளாகவே இருக்கின்றன. இந்த 'நான்' வண்ணதாசனாகவோ அல்லது அவர் தன்னைப் பொருத்திப் பார்க்க விரும்பும் ஒரு பிம்பமாகவோ இருக்கலாம் என்பதென் எண்ணம்.

தொகுப்பின் முதல் கதை 'கிருஷ்ணன் வைத்த வீடு'. ஏதேனும் ஒரு நாளில் நினைத்துப் பார்ப்பதற்கென்று ஒவ்வொரு மனிதனுக்கும் சில பழைய நினைவுகள் இருப்பது மிகவும் இயல்பானதே! அப்படியான ஒரு தனிமனிதனின் மனப்பெட்டியில் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'கிருஷ்ணன் வைத்த வீட்டின்' நினைவுகளைப் பால்ய நண்பன் ஒருவன் கிளற, அதைத் தொடர்ந்த நினைவு ரேகைகளைப் பின்தொடர்கிறது இக்கதை. இது போன்றதொரு கதையை யாரும் எழுதிவிட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு, கிட்டத்தட்ட இது போன்றதொரு அனுபவம் எல்லோருக்கும் கூட வாய்த்திருப்பதற்கான நிகழ்தகவும் அதிகம். ஆனாலும், இவரின் நடையும், அந்த அனுபவத்தை விவரிக்கும் தன்மையும், ஆழ்ந்த எழுத்து முதிர்வின் அடையாளமாக நிற்கின்றன.

வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரும்பாலான சமயங்களில் நமக்கு நிறைவேறுவதில்லை. சொந்த வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடே நிலையற்றதாக இருக்கும் நாம், சக மனிதனின் வாழ்க்கையின் மீதான நம் எதிர்பார்ப்புகளை என்ன செய்வது? ஏமாற்றம் ஏற்படும் பொழுதுகளில் எந்த வழியே தப்பித்தோடுவது? வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் ஒரு அசாதாரணமான மனநிலைதானே! வாழ்வின் சாதாரணமான நியதிகளையும், சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நாம் அசாதாரணமானவற்றைப் பார்க்கும்போது எப்படி எதிர்வினை புரிகிறோம்? ஐந்து விரல்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத நமக்கு ஆறாவது விரல் புரியாது போவதில் ஆச்சரியமில்லை அல்லவா? 'ஆறாவது விரல்' சிறுகதையும் அசாதாரணமான ஒரு நிலையை சாதாரணமானவர்களின் பார்வையில் அணுகுகிறது.

'உள்புறம் வழியும் துளிகளில்' இருக்கும் பாத்திரங்களின் ரசனையை நம்மால் ரசிக்காமல் இருக்கவியலாது.

இருவேறு மனநிலைகளில், இருவேறு சூழ்நிலைகளில் வாழும் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறது 'ஒரு நிலைக்கண்ணாடி...சில இட வல மாற்றங்கள்' சிறுகதை. பறவைகளின் ஒலியும், மரங்கள் உரசும் ஒலியும் மட்டுமே நிறைந்திருக்கும் வெயில் கால வனத்தின் சிற்றோடையின் சலனத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது இக்கதையின் ஓட்டம்.

'உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே, அது இன்னமுன் இருக்கா அக்கா?'

என்ற கேள்வியில் தொடங்கி,

'இன்னமும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே, எங்கள் வீட்டு மச்சில் இருக்கிற நிலைக்கண்ணாடி பற்றி.....அதில் பார்த்தால் ஒருவேளை தெரியுமோ என்னவோ!'

என்று முடிந்து, தடவிப்பார்த்து உணர்ந்து மகிழுமொரு ரகசிய முடிச்சைப் போட்டுச் செல்கிறது.

தொகுப்பின் கடைசியில் 'சின்னு முதல் சின்னு வரை' எனும் குறுநாவல் இடம்பெற்றிருக்கிறது. நமக்கு இணக்கமானவர்களின் வாழ்வில் ஏற்படும் நிலைமாறுபாடுகள், அதன் மீதான சமூகப்பார்வை, மனிதாபிமானம் என்கிற கோட்டுக்குள் கண்ணுக்குப் புலப்படாமல் வரையப்பட்டிருக்கும் தன்னலம் என்கிற பாதுகாப்புவட்டம், என்று உளவியல் ஆய்வு செய்கிறது இக்குறுநாவல்.

எல்லாக் கதைகளுமே உணர்வுகளை ஆராயும் போக்கிலேயே அமைந்திருப்பதாகப்படுகிறது. வண்ணதாசன் எழுத்தின் வீரியத்தை இத்தொகுப்பிலும் காணமுடிகிறது. நெகிழ்ச்சியடைவது வாழ்வில் எப்பொழுதாவது நிகழ்வதுண்டு. வண்ணதாசனின் எழுத்து வாசிப்பில் இது எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது, இப்புத்தகத்திலும் கூட.

- சேரல்
http://seralathan.blogspot.com/

No comments: